Advertisement

அத்தியாயம் – 1
“அம்மா, இங்க வா…” அறைக்குள் இருந்து மூத்த மகள் ரம்யாவின் கத்தலைக் கேட்டு அடுக்களையில் இருந்து ஓடி வந்தாள் பூங்கொடி.
“என்னடி, எதுக்கு இப்படிக் கத்தற…”
“என்னோட பிங்க் துப்பட்டா எங்கே, காணோம்…” அவள் கேட்டதும் உள்ளுக்குள் சற்று அதிர்ந்தவர், “அ..அது துவைச்சுப் போட்டிருக்கேன், மாடில இருக்கும்…”
“அதை எதுக்குத் துவைச்ச… நான் தான் யூஸ் பண்ணவே இல்லியே…”
“துவைக்கறதுக்கு துணி கம்மியா இருந்துச்சு… அதான் சும்மா டைம் பாஸ்க்கு எடுத்துத் துவைச்சேன், போதுமா… பதில் சொல்லிட்டனே, நான் போகலாமா…” சொல்லிவிட்டு உயிரைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள் பூங்கொடி.
“நல்லவேளை, எதையோ சொல்லி சமாளிச்சேன்… சின்னவ காவ்யா தான் இவ துப்பட்டாவை எடுத்துப் போட்டுட்டுப் போயிருக்கான்னு தெரிஞ்சுது, இவ இந்நேரம் சாமி ஆடிருப்பாளே…” புலம்பிக் கொண்டே ரசத்துக்குப் புளியைக் கரைத்தாலும் வயிற்றிலும் புளியைக் கரைத்தபடி நின்றார்.
மதிய சமையலை முடித்து மேசை மீது எல்லாவற்றையும் எடுத்து வைத்து ஹாலுக்கு செல்ல டீவி முன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு பழைய அழுக்கு நைட்டியுடன் அமர்ந்திருந்தாள் ரம்யா.
“ரம்யா, அம்மா தான் உனக்கு புதுசா நாலஞ்சு நைட்டி வாங்கி வச்சிருக்கேன்ல, அதுல ஒண்ணை எடுத்துப் போட்டுக்கக் கூடாதா, இந்த நைட்டில இனி சாயம்னு ஒண்ணு இல்லவே இல்லேங்கிற போல நஞ்சு, நரைச்சுப் போயிக் கிடக்கு… இப்பவும் அதே தான் போடுவேன்னு ஏம்மா அடம் பிடிக்கற…” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க மகள் அலட்சியமாய் ஒரு வில்லி சிரிப்பு சிரித்தாள்.
“ஹூக்கும், சொல்லுறதெல்லாம் கேட்டுட்டு வில்லத்தனமா சிரிக்கிறதைப் பாரு, படையப்பா நீலாம்பரின்னு நினைப்பு மனசுல… கொஞ்சம் கூட மதிக்கிறது கிடையாது…”
“என்ன கடுப்பா இருக்கா, எவ்ளோ வாங்கிக் கொடுத்தாலும் உன் பொண்ணு புதுத் துணி போடாம பிச்சக்காரி போல இருக்காளேன்னு வயிறு எரியுதா… இன்னும் கபகபன்னு நல்லா எரியட்டும்… அப்பத்தான் என் மனசு கூலாகும்…” சொன்னவளை பூங்கொடி வேதனையுடன் பார்க்க வெடுக்கென்று ரிமோட்டை எடுத்து சானலை மாற்றினாள்.
“சோதனை தீரவில்ல, சொல்லி அழ யாருமில்ல,
முன்னப் பின்ன அழுததில்ல, சொல்லித் தர ஆளுமில்ல…”
சன் லைபில் ஒலித்த பாடலில் உருக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு ரம்யா அதில் ஆழ்ந்து போக, தலையில் அடித்துக் கொண்டு வேதனையுடன் எழுந்து சென்றாள் பூங்கொடி.
“சோதனை உனக்கில்லடி, உன்னைப் பெத்ததுக்கு தினம் தினம் எங்களுக்கு தான் வேதனையைக் கொடுத்துட்டு இருக்க…” மனது ஆற்ற முடியாமல் பொசுங்கி வலித்தது.
சரவணன், பூங்கொடி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மூத்தவள் ரம்யா டிகிரி முடித்திருக்கிறாள். இரண்டாமவள் காவ்யா இரண்டாம் வருடம் முடிக்கும் தருவாயில் இருக்கிறாள்.
சரவணன் சொந்தமாய் எலக்ட்ரிக்கல் ஷாப் வைத்திருக்க, வசதி வாய்ப்புக்கு குறைவில்லாத ஹையர் மிடில் கிளாஸ் வாழ்க்கை.
மூத்தவள் ரம்யாவின் அகராதியில் எழுதியதெல்லாம் பிடிவாதம், திமிர், ஆணவம், அகம்பாவம் மட்டுமே. அவளுக்கு நேர் எதிரானவள் தங்கை காவ்யா. எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளும் மென்மையான சுபாவம் கொண்டவள். அக்காவின் பிடிவாதத்தை பொறுமையாய் சமாளிப்பாள்.
வாசலில் வண்டி சத்தம் கேட்டதைத் தொடர்ந்து சரவணன் வெயிலின் சோர்வுடன் உள்ளே வந்தார்.
“உஸ்ஸ்… அப்பா, ஏன்னா வெயிலு… அடிக்கிற வெயிலுக்கு தண்ணித் தொட்டிக்குள்ள இறங்கி உக்கார்ந்துக்கலாம் போலருக்கு…” புலம்பிக் கொண்டே வந்தவருக்கு கையில் மோருடன் வந்தார் பூங்கொடி.
“இந்தாங்க மோரு… சாப்பாடு எடுத்து வைக்கவா…”
“ம்ம் சரி பூவு, முகம் கழுவிட்டு வரேன்…” என்றவர் மோரைக் குடித்துவிட்டு கொடுத்தார். தான் வந்ததைக் கூட கண்டு கொள்ளாமல் டீவியில் ஆழ்ந்திருந்த மகளிடம் கையிலிருந்த கவரைப் பிரித்தபடி கேட்டார்.
“ரம்யாக் கண்ணு, சாப்பிட்டியா டா…”
“இல்ல…”
“உனக்குப் பிடிக்குமேன்னு இளநீர் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்தேன்… சாப்பாடு சாப்பிட்டு சாப்பிடு…”
“எனக்கு வேண்டாம்…”
“ஏண்டா, உனக்கு பிடிக்கும்னு சொல்லுவியே…”
“இப்பப் பிடிக்காது…” முகத்திலடித்தாற் போல் வந்த பதிலில் முகம் வாடியவர் ஐஸ்க்ரீமை மேசை மீது வைத்துவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.
“ஏன் ரம்யா, இப்படிப் பண்ணற… உனக்குப் பிடிக்கும்னு எப்பவோ சொன்னதை நினைவு வச்சு அப்பா ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்திருக்கார், முகத்துல அடிச்ச போல் வேண்டாம்னு சொல்லற…”
“அப்பப் பிடிச்சுது, இப்பப் பிடிக்கல… அதுக்கென்ன…”
“ஏண்டி இப்படிப் பேசற… நீ சொல்லுற வார்த்தை எங்களை எவ்ளோ வேதனைப்பட வைக்குது தெரியுமா…”
“வேதனப்படனும்னு தான சொல்லறேன்… நல்லாப் படுங்க… என்னவோ எனக்கு பிடிச்சதெல்லாம் கொடுக்கற போல சீன் போடறீங்க…” சொன்னவள் எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்று ஒரு தட்டில் சாதத்தை வைத்து தயிரை மட்டும் ஊற்றிக் கொண்டு டிவி முன்னில் அமர்ந்தாள்.
“ரம்யா, அயிரை மீன் குழம்பு வச்சு, பிரை பண்ணிருக்கேன், அதையாச்சும் எடுத்துக்க…”
“ப்ச்… வேண்டாம், அதெல்லாம் நீங்களே தின்னுட்டு நல்லாருங்க…” என்றவள் வம்படியாய் தயிர் சோறில் உப்பு கூடப் போடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேதனையுடன் உணவு மேசைக்கு வந்தார் சரவணன்.
“அவளுக்கு ஒரு முட்டையாச்சும் ஆம்லட் போட்டுக் கொடுக்கலாம்ல, இப்படி எல்லாத்தையும் சாப்பிடாம ஒதுக்கி வச்சா அவ உடம்பு என்னத்துக்கு ஆகறது…”
“ஹூக்கும்… மகமேல ரொம்ப தான் அக்கறை, பெருசா சொல்ல வந்துட்டார்…”
“அவ வேணும்னே சாப்பிடாம நம்மளைப் பாடாப் படுத்திட்டு இருக்கா… அவளுக்கு கோழி முட்ட மட்டுமில்ல, டைனோசர் முட்டைல ஆம்லட் போட்டாலும் தின்ன மாட்டா, உடம்பெல்லாம் அவ்ளோ திமிரு…” எரிச்சலுடன் மகளை நோக்கி சொல்லிக் கொண்டே கணவனுக்கு பூங்கொடி உணவைப் பரிமாற அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் உப்பில்லா தயிர் சாதத்தை வாய்க்குள் போட்டு முழுங்கி வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தாள் ரம்யா.
மகளைப் பற்றிய கவலை மனதில் இருந்தாலும் வயிற்றுக்கு வஞ்சம் செய்யாமல் மனைவி வைத்திருந்த மீன் குழம்பு, வறுவலை ரசித்து ருசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் சரவணன். பூங்கொடியும் கணவனுக்குப் பரிமாறிவிட்டு உடன் அமர்ந்து சாப்பிட்டார்.
“பெருசா பீல் பண்ணற போல டயலாக் விட்டுட்டு ரெண்டும் நல்லாக் கொட்டிக்கிறதைப் பாரு…” மனதுக்குள் கருவிக் கொண்டே உணவு உண்ட பிளேட்டைக் கூடக் கழுவி வைக்காமல் நங்கென்று சத்தத்துடன் அடுக்களை சிங்கில் போட்டுவிட்டு கை கழுவிவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் ரம்யா.
அவளை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு சாப்பாட்டை கவனிக்கத் தொடங்கினார் பூங்கொடி.
மாலையில் கல்லூரி முடிந்து இளைய மகள் காவ்யா திரும்பி வருகையில் அருகிலுள்ள கடையில் நின்ற பூங்கொடி, “காவி, அந்த ராட்சஸி ஹால்ல தான் உக்கார்ந்திருக்கா, அவளோட ஷாலை நீ போட்டுட்டு போனது தெரிஞ்சா இன்னைக்கு புல்லா ஆடிட்டு இருப்பா… அந்த ஷாலைக் கழற்றிக் கொடு…” என்றவர் வேறு துப்பட்டா ஒன்றை அவளிடம் கொடுத்து போட்டுக் கொள்ள சொல்லிவிட்டு ரம்யாவின் பிங்க் துப்பட்டாவை மடித்து சுருட்டி பைக்குள் வைத்துக் கொண்டார்.
“இதுக்குதான் நான் அது வேண்டாம்னு சொன்னேன், அக்கா கோபப்படுவான்னு தெரிஞ்சும் எதுக்குமா அதைய போட்டு போக சொன்னிங்க…” சலித்துக் கொண்டே அந்த துப்பட்டாவை சுரிதார் மீது போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் காவ்யா.
“டீவி பார்க்கறியா அக்கா…”
“இல்ல, சமையல் பண்ணிட்டு இருக்கேன்…”
“ஏன்க்கா கோச்சுக்கற… வீட்டுல போர் அடிக்குதா, உனக்கு படிக்க லைப்ரரில இருந்து எதுவும் புக் எடுத்திட்டு வரவா…”
“உன் அக்கறை வெங்காயம் எல்லாம் என்கிட்ட வேண்டாம்…”
“அக்கா என்னைக் கோவிக்க நான் என்ன பண்ணினேன்…”
“நீயும் அவங்க கோஷ்டில சேர்ந்தவ தான… ரெண்டு பக்கமும் நல்லவளா நடிச்சா அவார்டு கொடுக்கப் போறதில்ல…”
சாட்டையாய் சுழலும் நாக்கு, முன்னில் எவர் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் வார்த்தைகளைத் துப்பி குதறிக் கொண்டிருந்தாள். அவளது மனநிலையை உணர்ந்தவள் ஆதலால் அமைதியாய் உள்ளே சென்று விட்டாள் காவ்யா.
“வந்துட்டா, பெருசா விசாரிக்கறதுக்கு… எனக்குன்னு தான் இந்த வீட்டுல யாரும் இல்லையே, இப்ப என்னவோ பெருசா அக்கறை உள்ள போல நடிக்க வேண்டியது…”
“ஏன்? எதற்காய் எல்லார் மீதும் ரம்யாவுக்கு இந்த கோபம்…? அவள் இப்போதுதான் இப்படியா, எப்போதுமே இப்படிதானா?
நாளும் ஓர் மனநிலை
மாறிடும் வானிலையென
மங்கையவள் காத்திருந்தாள்…
மனதின் காயங்களுக்கு
வார்த்தைகள் மருந்தாகுமா…
உயிரின் இழப்புக்கு
உறவுகள் துணை போகுமா…
உயிர் உணரும்
வலியோ வழியோ காதல்…

Advertisement