Advertisement

அத்தியாயம் – 9

வானத்தை வெறித்துக் கொண்டு மொட்டை மாடியில் நட்சத்திரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்த ரம்யா கீழே அன்னையின் குரல் பதட்டமாய் ஒலிக்கவும் கவனித்தாள்.

“அய்யோ, காவி… ஓடி வாடி…” என்ற அன்னையின் குரலுக்கு,

“என்னமா, என்னாச்சு…” என்று பதட்டமாய் கேட்டது காவ்யாவின் குரல். ஏதோ விபரீதம் என்று புரிய எழுந்த ரம்யா படியில் இறங்கினாள்.

“அப்பா திடீர்னு நெஞ்சைப் பிடிச்சுட்டு மயங்கி விழுந்துட்டார்… ஐயோ கடவுளே, நான் என்ன பண்ணுவேன்… என் புருஷனுக்கு எதுவும் ஆகாம நீ தான் காப்பாத்தணும்…” கதறிக் கொண்டே கட்டிலில் குறுக்காய் விழுந்து கிடந்த கணவனை எழுப்ப முயல பதறியபடி வந்த காவ்யாவிடம் “சீக்கிரம் தண்ணி எடுத்திட்டு வா…” என அனுப்பினார்.

காவ்யா கலக்கமாய் தண்ணியோடு வந்தவள், “அப்பாக்கு திடீர்னு என்னாச்சு மா…” என விசாரிக்க, கண்ணீரோடு நிமிர்ந்தார் பூங்கொடி.

“அதெல்லாம் பேச நேரமில்லை… சீக்கிரம் மல்லிகா அத்தைக்கு போன் பண்ணி யாரையாச்சும் கார் எடுத்திட்டு வர சொல்லு, ஹாஸ்பிடல் போவோம்…” என, வேகமாய் அலைபேசியை எடுத்து அழைத்தாள் அவள்.

முகத்தில் தண்ணீர் தெளிக்கவும் மெல்ல அசைந்த சரவணன் முகத்தை சுளித்தபடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

“என்னங்க, என்னாச்சு… உங்களுக்கு என்ன பண்ணுது…”

“அப்பா எழுந்திருங்கப்பா, உங்களுக்கு ஒண்ணும் இல்லியே…” என்று காவ்யாவும் அழத் தொடங்க அதைக் கண்டபடி இறங்கி வந்த ரம்யா, சட்டென்று அதிர்ந்து போனாள்.

“நெ… நெஞ்சு வலிக்கிற போல இருக்கு…” என கஷ்டப்பட்டு சரவணன் சொல்ல அதிர்ந்து நின்றனர் பெண்கள் மூவரும்.

கலக்கத்துடன் தந்தையின் அருகில் அமர்ந்த ரம்யா, “அ..அப்பா… உங்களுக்கு ஒண்ணும் ஆகாது, தண்ணி குடிங்க…” என மெல்ல தண்ணீரைக் குடிக்க வைத்தவள்,  “பயப்படாதீங்கப்பா… அம்மா, சீக்கிரம் அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம்… வேண்டியதை எடுத்துக்கங்க… காவி, அப்பாவை ஒரு பக்கம் பிடி, சரியா படுக்க வைப்போம்…” என பழைய ரம்யாவாய் தைரியத்துடன் செயல்படத் தொடங்கினாள்.

அடுத்த சில நிமிடத்தில் அர்ஜூன் காருடன் வீட்டுக்கு முன்னில் ஹாரன் அடித்துவிட்டு உள்ளே வந்தான். இவர்கள் கிளம்ப சரவணனை ஒரு பக்கம் தாங்கிப் பிடித்தவாறு காருக்கு அழைத்து வந்தான்.

“மாமா, சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம்… பயப்படாதீங்க, எல்லாரும் இருக்கோம்ல…” தைரியம் சொல்லிக் கொண்டே அவரை அமர வைத்து அருகிலிருந்த ஹாஸ்பிடலுக்கு வண்டியை விட மீண்டும் அவர் மயங்கி இருந்தார்.

எமர்ஜென்ஸி பிரிவில் அனுமதித்து ஏதேதோ பரிசோதனைகள் செய்ய எல்லாவற்றையும் முன்னில் நின்று ஓடியோடி கவனித்துக் கொண்டான் அர்ஜூன். பெண்கள் கவலையுடன் நிற்க அவர்களுக்கும் தைரியம் கூறினான்.

சிறிது நேரத்தில் மல்லிகாவும் பொன்வண்ணனும் கவினுடன் மற்றொரு காரில் அங்கே வர, அதுவரை அமைதியாய் இருந்த பூங்கொடி மல்லிகாவைக் கண்டதும் அழத் தொடங்கினார்.

“என்னாச்சு அண்ணி, சாயந்திரம் அண்ணன் நல்லாதானே இருந்தார்… திடீர்னு எப்படி…?”

“என்னன்னு சொல்லுவேன் மல்லி, நீங்க போனதும் ரூமுக்குப் போனவர் தான்… மகளைப் பத்தி யோசிச்சுட்டே இருந்திருப்பார் போல, நைட் டிபன் சாப்பிட கூப்பிடப் போனப்போ முகமெல்லாம் வேர்த்து ஒரு மாதிரி இருந்தார்… என்னங்கன்னு கேட்டா, ஒண்ணும் சொல்லலை… எனக்கு எதுவும் ஆகிட்டா நம்ம பொண்ணுங்களை தனியா நீ பார்த்துப்பியான்னு கேட்டுட்டே சட்டுன்னு மயங்கி விழுந்துட்டார்…” கண்ணீருடன் சொன்னவரின் கையில் தட்டிக் கொடுத்த மல்லிகா,

“அண்ணனுக்கு ரம்யாவை நினைச்சு ரொம்ப கவலை… ஆனா அவதான் அதைப் புரிஞ்சுக்க மாட்டீங்கறா…” என ரம்யாவைப் பார்த்துக் கொண்டே சொல்ல காதில் விழாத போல் நின்ற ரம்யா அவரை ஏறிட்டும் பார்க்கவில்லை. காவ்யா தான் அழுது கொண்டே இருந்தாள்.

“அப்பாக்கு எதுவும் ஆயிடாதுல்ல அத்த… எனக்கு ரொம்ப பயமாருக்கு…”

“அதான் உடனே ஹாஸ்பிடல் கொண்டு வந்துட்டமே, கவலைப்படாத டா… ஒண்ணும் ஆகாது…” என சமாதானம் சொன்னவர்,

“நீங்க யாருமே இன்னும் சாப்பிடலை தானே… கவின், இவங்களுக்கு காபி எதுவும் வாங்கிட்டு வா…” என்று சின்ன மகனிடம் சொல்ல,

“எதுவும் வேண்டாம் மல்லி, அவர் கண்ணைத் திறந்து பார்க்கிறவரை எனக்கு தண்ணி கூட இறங்காது…” என்று பூங்கொடி மறுத்து விட்டார்.

காவ்யா அழுது கொண்டே இருப்பதைக் கண்ட கவின், “காவி, அழுதுட்டே இருக்காத, மாமாக்கு சரியாகிடும்…” என சமாதானம் கூறினான். ரம்யா அழாமல் இருந்தாலும் உள்ளுக்குள் தந்தையின் நிலை கண்டு பயந்து போயிருந்தது அவள் முகத்திலிருந்த பதட்டத்திலேயே தெரிந்தது.

சிறிது நேரத்தில் அங்கே வந்த டாக்டர், சரவணனுக்கு அட்டாக் வந்ததை உறுதிப்படுத்தி, அதற்கான சிகிச்சையைத் தொடங்கி ICU வுக்கு மாற்றினர். சற்று நேரத்துக்குப் பிறகு சரவணன் டாக்டர்களின் முயற்சியில் கண்ணைத் திறக்கவும் தான் எல்லாருக்கும் நிம்மதியானது.

அவருக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க யாராவது இருவர் மட்டும் ஹாஸ்பிடலில் இருந்தால் போதுமென்று டாக்டர் சொல்லி விட்டார்.

பூங்கொடியுடன் அங்கே தங்குவதாய் சொன்ன மல்லிகா, “நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க… ரம்யாவும், காவ்யாவும் தனியா இருக்க வேண்டாம்… நம்ம வீட்டுலயே தங்கட்டும்…” என, “சரிம்மா, நாங்க பார்த்துக்கறோம்… காலைல வரோம்…” என்ற பொன்வண்ணன் அனைவரையும் அழைத்துக் கொண்டு மச்சானிடம் தைரியம் கூறி விடை பெற்றார்.

இரவு உணவை அன்னைகளுக்கு ஹோட்டலில் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களுக்கான பார்சலுடன் வீட்டுக்கு சென்றனர். பெற்றோர் இல்லாததால் ரம்யா அமைதியாகவே இருந்தாள். காவ்யா அனைவருக்கும் சாப்பிட எடுத்து வைத்து சாப்பிட்டதும் எல்லாவற்றையும் கிளீன் செய்து வந்தாள்.

மாடியில் தங்களுக்காய் கொடுக்கப்பட்ட அறையில் உறக்கம் வராமல் படுத்திருந்த ரம்யா எழுந்து வெளியே வர மொட்டை மாடியில் கிசுகிசுப்பாய் குரல் கேட்டது. காவ்யாவும், கவினும், அர்ஜூனுடன் பேசிக் கொண்டிருப்பது மெல்லக் கேட்க சத்தமில்லாமல் படியேறினாள்.

“சும்மா ரம்யாவுக்கு சப்பக்கட்டு கட்டாத அர்ஜூன்… அவளால தான் மாமாக்கு இப்படி ஆச்சு… கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடறா, பெத்தவங்களைப் போட்டு படாதபாடு படுத்தினா எவ்ளோதான் அவங்களும் தாங்கிப்பாங்க…” கவின் கோபமாய் சொல்ல அர்ஜூனும் காவ்யாவும் சமாதானப் படுத்தினர்.

“அப்படி சொல்லாதடா, ரம்யா மனசுல இன்னும் பழைய காதலோட மிச்சம் இருக்கு, அது கொடுக்கிற வலி தான் அவளை இப்படில்லாம் நடந்துக்க வைக்குது, மத்தபடி ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு டா…”

“ஆமா இப்படியே சொல்லிட்டு இரு, உனக்கு ஊரு உலகத்துல வேற பொண்ணா கிடைக்கல, அவளைப் போயி உருகி உருகி லவ் பண்ணற… ஒரு குடும்பப் பொண்ணுக்கு இத்தனை திமிரும், பிடிவாதமும் நல்லதுக்கு இல்ல… அவ எல்லாம் எந்தக் குடும்பத்துக்கும் மருமகளா செட் ஆக மாட்டா… உன் நல்ல சுபாவத்துக்கு அவளைக் கல்யாணம் பண்ணினா நரகமா தான் இருக்கும், அது புரியாம நீயும் அவளைக் கண்மூடித்தனமா லவ் பண்ணிட்டு இருக்க… இப்ப நீ  பிரஷர் கொடுக்கவும் தான் மாமாக்கு இப்படி ஆகிருச்சு… அதும் அந்த வெங்கடேஷும் சரி, அவன் குடும்பமும் சரி… காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க, அது தெரியாம அவங்களை நம்பிட்டு இருக்கா…”

“அத்தான்… அக்காவை இப்படில்லாம் சொல்லாதீங்க, அவ லவ் பண்ணவன் குடும்பம் வேணும்னா தப்பா இருக்கலாம்… ஆனா அவ உண்மையா தான் லவ் பண்ணிருக்கா… அவங்களை எல்லாம் நேசிச்சிருக்கா, அதனால தான் மறக்க முடியாம இப்படில்லாம் பண்ணறா…”

“ஹூம்… ரெண்டு பேரும் இப்படியே அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருங்க… அவளும் வாழ மாட்டா, உங்களையும் வாழ விட மாட்டா… பேசாம இந்த மென்டலை எல்லாம் வீட்டுல வச்சுக்காம ஏதாவது மனநல ஆசுபத்திரில கொண்டு போயி விட வேண்டியது தான…”

“கவின்…” கோபத்துடன் வந்தது அர்ஜூனின் வார்த்தை.

“என் முன்னாடியே என் ரம்யாவை இப்படிப் பேச உனக்கு எப்படி தைரியம் வந்தது… எப்பவா இருந்தாலும் அவதான் உன் அண்ணி… அவ வெங்கடேஷ் குடும்பத்தைப் புரிஞ்சுக்காம பிடிவாதம் பிடிக்கிறா… அவங்க உண்மையா இவளை நேசிக்கலைன்னு தெரியும்போது நிச்சயம் என்னை ஏத்துக்குவா… இன்னொரு தடவை அவளை மென்டல்னு சொல்லாத, அப்புறம் என்ன பண்ணுவேன்னு தெரியாது…” கோபத்துடன் சொல்லிவிட்டு நகர, ரம்யா இருட்டில் வேகமாய் படிக்கு கீழே ஒதுங்கிக் கொண்டாள்.

அர்ஜூன் வேகமாய் அவனது அறைக்கு சென்று விட, கவினும் காவ்யாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அத்தான், என்ன இருந்தாலும் என் அக்காவை நீங்க இப்படில்லாம் பேசறது சரியில்லை… அதுவும் பெரியத்தானுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்…”

“பின்ன எப்படிப் பேசறது காவி… இவன் அவளைத் தான் கட்டுவேன்னு நிக்கறான்… அவ கட்ட மாட்டேன்னு நிக்கறா… இவங்களுக்கு நடுவுல பாவம் பெரியவங்க தான் ஒரு முடிவுக்கு வர முடியாம கஷ்டப்படறாங்க…”

“கொஞ்சம் பொறுமையா இருங்க… அத்தை கொடுத்த ஒரு மாசம் டைம்ல அக்கா நிச்சயம் சம்மதிப்பா…”

“ஒருவேளை அப்பவும் உன் அக்கா சம்மதிக்கலேன்னா அம்மா சொன்ன போல நீயே என் அண்ணனைக் கட்டிப்பியா…” எரிச்சலுடன் சொன்னவன் கீழே செல்ல அவனே சொல்லவும் காவ்யாவுக்கு அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தாள். கவின் செல்லவும் ரம்யா சத்தமில்லாமல் தனது அறைக்கு சென்றாள்.

“இந்த கவினுக்கு ரொம்ப தான் திமிர்… எவ்ளோ கொழுப்பிருந்தா என்னை மென்டல்னு சொல்லுவான்… அதும் மென்டல் ஹாஸ்பிடல்ல கொண்டு போயி விடறதாம்… நான் எந்தக் குடும்பத்துலயும் மருமகளா செட் ஆக மாட்டேனாம்… அப்பாக்கு இப்படியாக நான்தான் காரணமாம், என்னெல்லாம் சொல்லிட்டான் லூசுப் பய… ஆனா அர்ஜூன் அப்படியில்லை, எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினார்…”

“அவரும் வெங்கி குடும்பம் சரியில்லைன்னு சொன்னாரே… ஒருவேளை உண்மையா இருக்குமோ…? ச்சேச்சே, சிவகாமி அத்தை அப்படிப்பட்டவங்க இல்லை… மூத்த மருமக உடம்புக்கு முடியாம தற்கொலை பண்ணதை தான் ஊர்க்காரங்க திரிச்சு இவங்க கொடுமை தாங்காம தற்கொலை பண்ணதா சொல்லறாங்கன்னு அத்தையே சொல்லி இருக்காங்களே… அதை வச்சு சொல்லுவாங்களா இருக்கும்…” கேள்வியும் கேட்டு பதிலையும் அவளே கண்டு பிடித்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

“இந்த காவ்யா இன்னும் மாடில என்ன பண்ணறா…” யோசித்தவள் தங்கையைத் தேடி செல்ல அங்கே அவள் மூக்கை உறிஞ்சியபடி நிற்க பின்னிலிருந்து கவனித்தாள்.

“இவ எதுக்கு அழறா…? ஒருவேளை அப்பாவை நினைச்சு பீல் பண்ணறாளோ… ச்சே, அவரை ரொம்ப வேதனைப்படுத்தி விட்டேனோ…” முதன்முறையாய் குற்றவுணர்வு தோன்றியது.

நைட் ஷிப்ட் செல்லாமல் லீவு போட்டதால் காலையில் சீக்கிரமே அர்ஜூன் பணிக்கு கிளம்பிவிட, பொன் வண்ணனும் போனில் சரவணன் உடல்நிலையை விசாரித்துவிட்டு பாங்குக்கு கிளம்பி விட்டார். காவ்யா பிரிட்ஜில் இருந்த மாவில் அனைவருக்கும் இட்லி ஊற்றி ஒரு சட்னியையும் செய்து விட்டாள்.

கவினை ஹாஸ்பிடலுக்கு வரும்படி மல்லிகா அழைக்கவே,  கிளம்பியவனிடம் ஹாலில் அமர்ந்திருந்த ரம்யா, “நாங்களும் வர்றோம்…” என்றதும் முறைத்தவன்,

“எதுக்கு..? ஒருவழியா ஆபத்தைத் தாண்டி கண்ணு விழிச்ச மனுஷன் முன்னாடி போயி நின்னு, அவரை ஒரேயடியா போட்டுத் தள்ளறதுக்கா…?” என்று சீறவும் ரம்யாவுக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது.

“கவின்… ரொம்பப் பேசாத, அவர் என்னோட அப்பா…”

“அது நினைவிருக்கிற மாதிரித் தெரியலியே…”

அவர்கள் பேசுவதை அறைக்குள் குளித்து முடித்து அத்தை வீட்டில் எப்போதும் ஸ்பேர் வைத்திருக்கும் மாற்று உடையை அணிந்து கொண்டிருந்த காவ்யாவின் காதில் விழ, வேகமாய் வெளியே வந்தாள்.

“கவின், நீ கூட்டிட்டுப் போனா போ… இல்லேன்னா நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கறேன்…”

“என்ன, எதுக்கு ரெண்டு பேரும் சண்ட போட்டுக்கறிங்க…” காவ்யா கேட்க இருவரும் சண்டைக் கோழிகளாய் முறைத்துக் கொண்டு நின்றனர்.

“காவ்யா, நீ ஹாஸ்பிடலுக்கு என்னோட ஆட்டோல வர்றதுன்னா வா… நான் கிளம்பறேன்…” சொன்னவள் கோபமாய் எழுந்திருக்க,

“அக்கா உன்கிட்ட பணமிருக்கா… என்கிட்ட இல்லையே, அம்மாட்ட தான் பர்ஸ் இருக்கு…” என்றாள் காவ்யா. கிண்டலாய் சிரித்த கவின், “போனாப் போகுது, ரெண்டு பேரையும் டிராப் பண்ணறேன் வாங்க…” என்றான்.

“ச்சே… இந்த திமிர் பிடிச்சவன் கூட போக வேண்டியதா இருக்கே… இன்னைக்கு நம்ம வீட்டுக்கே போயிடனும்…” என நினைத்துக் கொண்டே முகத்தைத் தூக்கிக் கொண்டு முன்னில் நடந்தாள்.

காவ்யா கவினைப் பார்த்து, “ஏன்…” என்று கையை விரிக்க, கண்ணடித்து, “சும்மா…” என்றவன், “சீக்கிரம் வா… வெளிய வெயிட் பண்ணறேன்…” என்றவனும் நடந்தான்.

“அண்ணி…” என்றதும் சட்டென்று திரும்பிய ரம்யா, “இப்ப மட்டும் என்ன அண்ணி… இவ்ளோ நேரம் அப்படி நினைச்சதா தெரியலியே…” என்றதும் புன்னகைத்தான்.

“அப்போ நான் உன்னை அண்ணின்னு நினைக்கணும்னு நினைக்கற, அப்படிதானே…” என்றதும் திகைத்தாள். கவின் வயதில் ரம்யாவை விட மூத்தவன் என்பதால் அவளை அண்ணி என அழைத்தாலும் வேறு வார்த்தைகளில் மரியாதையைக் கூட்ட மாட்டான்.

“அப்படி எல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது… எப்பவும் அதை சொல்லி தான கூப்பிடுவ, இப்ப சொல்லாததால கேட்டேன்…” என்று சிலுப்பிக் கொண்டாள் ரம்யா.

“ம்ம்… நாம ஹாஸ்பிடல் போற வழியில ஒருத்தரை மீட் பண்ண வேண்டிருக்கு, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணறதுல ஒண்ணும் பிராப்ளம் இல்லையே…”

“வேற வழி…” மனதுக்குள் நினைத்தவள், “பண்ணித் தொலைக்கறேன்…” என்றாள் முணுமுணுப்பாய். காவ்யா தலை சீவி ரெடியாகி வரவும் காரை எடுத்தான்.

கார் நகர கண்ணாடி வழியே கவின் காவ்யாவைப் பார்த்து புன்னகைத்து புருவத்தைத் தூக்க, அருகில் அமர்ந்திருந்த அக்கா பார்த்து விடுவாளோ என்ற பயத்தில் அவள் முகம் திருப்பி வெளியே பார்வையைப் பதித்தாள்.

“நேத்து நைட்டு அண்ணனைக் கட்டிப்பியான்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கேட்டுட்டு இன்னைக்கு என்னைப் பார்த்து கண்ணுல ஜாடை காட்டுறதைப் பாரு… அப்படியே வாயிலயே ஒண்ணு போடணும்…” மனதுக்குள் நினைத்துக் கொள்ளவும் இதழில் மென்னகை எட்டிப் பார்க்க்க அவளை கவனித்துக் கொண்டிருந்த கவினும் அதைக் கண்டான்.

வழியில் ஒரு வீட்டின் முன்பு கவின் காரை நிறுத்தவும் இரு பெண்களும் புரியாமல் சுற்றிலும் பார்த்தனர்.

“வாங்க, நம்ம சொந்தக்காரங்க வீடுதான்… அஞ்சே நிமிஷம், கிளம்பிடலாம்…” கவின் சொல்ல ரம்யா முறைத்தாள்.

“நீ மட்டும் போனாப் போதும்… நாங்க காருலயே இருக்கோம்…” என்பதற்குள் ஒரு வயதான பெண்மணி கவினைக் கண்டு விட,

“வாங்க தம்பி… இது யாரு, ஓ… நம்ம சரவணன் தம்பி பொண்ணுங்களா… வாங்க கண்ணுங்களா, அப்பாக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கிறதா கேள்விப் பட்டேன், பரவால்லியா…” என விசாரிக்க வேறு வழி இல்லாமல் இவர்களும் இறங்கி பதில் சொல்ல வேண்டியதாயிற்று.

“எங்களைத் தெரியலியா கண்ணு… தூரத்து சொந்தத்துல அத்தை முறை வரும், உள்ள வாங்க…” என அழைத்தார்.

ரம்யா தயங்க, “வாக்கா…” என காவ்யா கை பிடித்து உள்ளே சென்றாள். சோபாவில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்க, “இது மாமா…” என்றவர், அவர்களை அறிமுகப்படுத்தினார்.

“கவின் தம்பி, சிவா உள்ளதான் இருக்கு… போயிப் பாருங்க…” என்றதும் அவன் ஒரு அறைக்கு செல்ல சோபாவில் இவர்கள் மட்டும் அமர்ந்தனர்.

“இருங்க, காபி கொண்டு வரேன்…” என அவர் உள்ளே செல்ல, சுற்றிலும் பார்வையை ஓட்டிய ரம்யா சுவரில் மாலையுடன் தொங்கிய இளம்பெண்ணின் புகைப்படத்தைக் கண்டதும் அதிர்ந்தாள்.

கண்கள் கூட

அறிவதில்லை

காதல் வந்த வழி…

எவ்வலியும் தாங்கும்

வல்லமை கொண்ட

காதல் கூடத்

தாங்குவதில்லை

பிரிவென்னும் துயர்

தரும் வலியை…

Advertisement