Advertisement

அத்தியாயம் – 8

மேகங்கள் வானில் வேகமாய் நகர்ந்து கொண்டிருக்க கதிரவனும் அலுவல் முடிந்து அவசரமாய் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். அறை ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரம்யா, பின்னில் கேட்ட காலடி ஓசையில் திரும்பினாள். அதே தூக்கிப் போட்ட கொண்டை, அழுக்கு நைட்டி.

காவ்யாதான் வந்து கொண்டிருந்தாள். மதியமே கல்லூரியில் பிராக்டிகல் வகுப்பு முடிந்து திரும்பியிருந்தாள்.

“அக்கா…” என்ற அழைப்பில் தங்கையைப் பார்த்தாள் ரம்யா. காவ்யாவின் முகம் வாடியிருந்தது.

“அக்கா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… நான் சொல்லி முடிக்கிறவரை பொறுமையா கேக்கறியா ப்ளீஸ்…” அவளது கெஞ்சலான முகம் ரம்யாவைத் தலையாட்ட வைத்தது.

“என்ன சொல்லணும்…?”

“அர்ஜூன் அத்தான் உனக்கு போன் பண்ணாராம், நீ எடுக்கலன்னு சொன்னார்…”

“ஆமா, எடுக்கல… அதுக்கென்ன…?”

“அத்தான் எனக்கு போன் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டார்…”

“நான் எப்பவுமே உன் பொத்தான் போன் பண்ணினா எடுக்கறதில்லையே… அப்புறம் எதுக்கு வருத்தம்…”

“அக்கா, அவர் ரொம்ப முக்கியமான விஷயம் பேசத்தான் உனக்கு கால் பண்ணார்… இங்க நடக்கிறதெல்லாம் உனக்குத் தெரியும் தானே, அத்தானுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்… சின்ன வயசுல இருந்தே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையை வளர்த்துகிட்டார்…”

“அவர் ஆசையை வளர்க்கட்டும், இல்ல தாடியை வளர்க்கட்டும்… அதுக்கு நான் என்ன பண்ண…”

“அப்படி சொல்லாதக்கா, நாம நேசிச்சவங்களை விட நம்மளை நேசிச்சவங்களை கல்யாணம் பண்ணிகிட்டா வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்னு சொல்லுவாங்க…”

“யாரோ வீணாப் போனவங்க சொல்லி வச்சா உண்மை ஆகிடுமா… சரி, எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்லற…”

“அத்தான் உனக்காக தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ணறார்… நீ எதுவுமே பாசிடிவா சொல்லாததால அவருக்கு அவங்க அத்தை பொண்ணைக் கட்டி வைக்கலாமான்னு மாமா சொல்லுவார் போல…”

“நல்ல விஷயம், சீக்கிரம் பண்ணிக்க சொல்லு…” என்றாள் ரம்யா அலட்சியத்துடன்.

சொல்லிக் கொண்டிருந்தவள் கேட் திறக்கும் ஓசை கேட்டு ஜன்னலில் வெளியே எட்டிப் பார்க்க மல்லிகாவும், அர்ஜூனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.

“அநேகமா இதைப்பத்தி பேசதான் நேர்ல வந்திருப்பாங்கன்னு நினைக்கறேன், வாக்கா…” அழைத்தாள் காவ்யா.

“நீ போ, நான் வரலை…” என்றவள் மீண்டும் வெளியே வெறிக்கத் தொடங்க காவ்யா ஹாலுக்கு வந்தாள்.

“வாங்கத்தை, வாங்க அத்தான்…” வரவேற்றவளை நோக்கிப் புன்னகைத்த மல்லிகா, “எங்க காவி, உன் அக்காவைக் காணோம்…” என்றதும் திகைத்தாள் காவ்யா. உள்ளிருந்த ரம்யாவின் காதிலும் அந்த வார்த்தைகள் விழுந்தது. எப்போதும் வாய் நிறைய என் மூத்த மருமக என்று கூறுபவர் இன்று உன் அக்கா என்று சொல்லவும் அந்த வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அர்ஜூன் முகமும் சரியில்லை. வழக்கமான சிரிப்பும், ரம்யாவைத் தேடும் விழிகளும் மிஸ்ஸிங்.

“ரெண்டு பேரும் உக்காருங்க… காபி கொண்டு வரேன்…” பூங்கொடி சொல்ல,

“அண்ணி, அண்ணனுக்கும் சேர்த்தே எடுத்திருங்க, அவரையும் இப்ப வர சொல்லிருக்கேன்…” மல்லிகா சொல்லும்போதே வாசலில் சரவணனின் வண்டி சத்தம் கேட்க, “ஏதோ முக்கியமான விஷயம் பேசத்தான் மல்லிகா கணவனையும் வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறாள் என பூங்கொடி யோசிக்க, “நீங்க இருங்கம்மா, நான் காபி போடறேன்…” சொன்ன காவ்யா அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“என்னம்மா, உடனே கிளம்பி வர சொல்லி கால் பண்ண, என்ன விஷயம்…” என்றார் சரவணன் உள்ளே நுழைந்ததும்.

“சொல்லறேண்ணா…” என்ற மல்லிகா சற்று நிதானித்து,

“அண்ணா, இன்னும் பிள்ளைங்க விஷயத்துல முடிவு தெரியாம கல்யாணத்தை இழுத்துட்டே போக முடியாது, எதுவா இருந்தாலும் இன்னைக்கு தீர்மானம் எடுக்கனும்னு தான் நேர்லயே இவனைக் கூட்டிட்டு  வந்தேன்…”

மல்லிகா சொல்ல யோசனையும், கவலையுமாய் மனைவியைப் பார்த்தார் சரவணன்.

“ம்ம்… உன் அண்ணி சொன்னா, மாப்பிள்ளையோட தங்கச்சி பொண்ணை அர்ஜூனுக்குப் பார்க்கலாம்னு இருக்கீங்கன்னு…”

“நாங்க பார்த்தாலும் இவன் ஒத்துக்கணுமே… ரம்யாவைதான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கான்… நாங்களா வேண்டாம்னு சொன்னோம், ரம்யா சம்மதிக்காம என்ன பண்ண முடியும்… இவனுக்கும் வயசாகிட்டுப் போகுது… நாம நல்லாருக்கும்போதே நம்ம பிள்ளைகளுக்கு பண்ண வேண்டியதைப் பண்ணறது தானே நல்லது… அவர் எவ்ளோ சொல்லியும் இவன் பிடிவாதமா கடைசியா ஒரு முறை ரம்யாகிட்ட பேசிப் பார்க்கறேன், அப்புறம் முடிவு பண்ணலாம்னு சொல்லறான்…”

அர்ஜூன் குனிந்த தலையுடன் பெரியவர்களை நிமிர்ந்தும் பாராமல் அமர்ந்திருக்க அவன் மனதின் வேதனையையும், தவிப்பையும் அவர்களாலும் உணர முடிந்தது. காபியுடன் காவ்யா வர ஆளுக்கொரு கப்பை எடுத்துக் கொண்டனர்.

“அண்ணே, எனக்கும் வேற பொண்ணுங்க மருமகளா வர்றதை விட உன் பொண்ணுங்களை மருமக ஆக்கிக்கனும்னு தான் ஆசை, நாம ஆசைப்பட்டா ஆச்சா…”

“மல்லி, நீ சொல்லறது புரியுதுமா… நாங்க பெத்தது சரியில்லை, உனக்கு மருமகளா வர பாக்கியமில்லை… அதுக்காக மாப்பிள்ளைகளுக்கு பண்ண வேண்டியதை பண்ணாம நேரம் கடத்துறது தப்பு… உங்க விருப்பப்படியே செய்யுங்க…” என்றார் சரவணன் வேதனையுடன்.

“நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம்ணா, இவன் ரம்யாட்ட பேசறேன்னு நிக்கறான்… அவ இவனைக் கண்டாலே கீரியைக் கண்ட பாம்பு கணக்கா படமெடுத்து நிக்கறா, நல்லா திட்டு வாங்கட்டும், அப்பதான் சரியாவான்…”

அத்தானை பரிதாபமாய் பார்த்து நின்ற காவ்யாவிடம், “காவி, உன் அக்காவைக் கூப்பிடுமா…” என்றார் சரவணன்.

“இல்ல மாமா, நானே ரம்யாட்ட பேசிட்டு வரேன்…” என்றான் அர்ஜூன் மெல்லிய குரலில்.

“ம்ம்…” என்றவர் சின்ன மகளைப் பார்க்க, “அக்கா ரூம்ல தான் இருக்கா, போயிப் பேசுங்க அத்தான்…” என்றாள்.

அர்ஜூன் எழுந்து ரம்யாவின் அறைக்கு சென்றான்.

அவர்கள் பேசுவது அறைக்கதவு திறந்திருந்ததால் ரம்யாவுக்கும் கேட்கவே செய்தது.

“ஹூக்கும், இவங்க வந்து பேசிட்டா மட்டும் நாங்க ஓகே சொல்லிடப் போறமா…” யோசித்தபடி அமர்ந்திருக்க தயங்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் அர்ஜூன்.

“ரம்யா…” அவன் அழைப்பிற்கு வெடுக்கென்று நிமிர்ந்தவள், “என்ன…” என்றாள் சிடுசிடுப்புடன்.

“வ..வந்து, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

“நீங்க நிறையவே பேசினாலும் எதுவும் நடக்கப் போறதில்லை, அப்புறம் என்ன பேசப் போறீங்க…?”

“ப்ளீஸ், ரெண்டு நிமிஷம் அமைதியா என்னைப் பேச விடேன், எனக்காக…”

அவனது கெஞ்சல் ஏனோ அவளை சமாதானப்படுத்த சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவள், “ம்ம்… பேசுங்க…” என்றாள்.

“ரம்யா, நான் உன்னை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா… நீ பிறந்தப்ப குட்டி ரோஜாப்பூவுக்கு கை, கால் வச்ச போல அவ்ளோ அழகாருப்ப… உங்க வீட்டுலயும், என் வீட்டுலயும், இவதான் உன் பொண்டாட்டி, இவளை தான் பெருசாகி நீ கட்டிக்கப் போறன்னு சொல்லுவாங்க… அதைக் கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்… நீதான் என் மனைவிங்கிற எண்ணம் என் உணர்வுல கலந்து உயிருல பதிஞ்சிருச்சு… அந்த ஆசையும் என்னோடவே மனசுல வளர்ந்துச்சு… என்னைப் போல உன்னைப் புரிஞ்சவங்க யாரும் இருக்க முடியாது… என்னை விட இந்த உலகத்துல உன்னை யாரும் நேசிக்கவோ, நல்லாப் பார்த்துக்கவோ முடியாது…” அவன் சொல்லிக் கொண்டிருக்க காதில் வாங்கிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தாள் ரம்யா.

“ரமி… எல்லாருக்கும் பலாப்பழம் போல வெளியே முரட்டுத் தனமா, முள்ளோட இருக்கிற உன்னைத்தான் தெரியும்… உனக்குள்ளயும் பலாச்சுளை போல அன்பான, அருமையான, இனிப்பான மனசு இருக்குன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… தயவு செய்து நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு… கல்யாணம் ஆனாலும் நாம புருஷன், பொண்டாட்டியா வாழணும்னு எல்லாம் இல்ல… உனக்கு எப்ப என்னைப் புருஷனா ஏத்துக்க முடியுமோ அப்போ ஏத்துக்க, அது வரைக்கும் ஒரு நண்பனா உன் மனசுல உள்ள எண்ணங்களை என்கிட்டே ஷேர் பண்ணிக்க…”

“ஓஹோ, ஒருவேளை கடைசி வரைக்கும் ஏத்துக்க முடியலைனா…?” இளக்காரமாய் கேட்டவளை நோக்கி காதலுடன் சிரித்தான் அர்ஜூன்.

“நம்ம காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… எந்தக் காதல் உனக்கு வலியைக் கொடுத்ததோ, அதே காதல் உனக்கான வழியையும் காட்டும்…”

“ஹூம்… ரொம்பவே நல்லாப் பேசறீங்க, ஒகே… நீங்க கேட்ட ரெண்டு நிமிஷம் முடிஞ்சு போச்சு, நீங்க போகலாம்…”

“ரமி ப்ளீஸ்… கொஞ்சமாச்சும் நான் சொன்னதை யோசிச்சுப் பாரு… என்னால உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது…”

“முடியாதுன்னா சாமியாராப் போங்க… இல்லேன்னா என்னைப் போல வீட்டுல உக்கார்ந்து அப்பா, அம்மாவை டார்ச்சர் பண்ணுங்க… செமையா பொழுது போகும், இப்ப கிளம்பறீங்களா…” என்றாள் கதவைக் காட்டி.

வருத்தமாய் அவளையே நோக்கி நின்றவனின் கண்களில் வழிந்த வேதனை, அவளது இதயத்துக்குள் சொல்லமுடியா கனத்தை ஏற்ற சட்டென்று வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள் ரம்யா.

“ரமி, உன் வாழ்க்கையை இப்படியே முடிச்சிடலாம்னு நினைக்காத… நீ இன்னும் வாழவே தொடங்கலை, யார் சொன்னாலும் என் கல்யாணம் உன்னோடுதான்… உன் பதிலுக்காக காத்திருப்பேன்…” சொன்னவன் அறையை விட்டு வெளியே செல்ல அவனது ரமி, என்ற அழைப்பு அந்த அறை முழுதும் நிறைந்து அவளைப் பார்த்து புன்னகைத்தது.

முட்கள் தாண்டி கருத்தில்

பதியும் மலரென நீயும்…

சொற்கள் தாண்டி எனக்குள்

மலர்ந்து நேசிக்க வைக்கிறாய்…

காதலை உனக்காக

உன்னிடமே யாசிக்கிறேனடி…

உனை விட உன்னை நான்

அதிகம் நேசிப்பதனால்…

அர்ஜூனின் முகத்தை ஹாலில் இருந்தவர்கள் ஆர்வமாய் பார்க்க அவன் அமைதியாய் அமர்ந்தான்.

“என்னப்பா, ரம்யா என்ன சொன்னா…?”

“அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம் மா… உடனே பதிலை எதிர்பார்க்கக் கூடாது…”

“என்னமோ போ, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கற… ஆனா, இன்னும் ஒரு மாசம் தான் டைம்… அதுக்குள்ள ரம்யா சம்மதிக்கணும், இல்லேன்னா உன் அத்தை மகளுக்கு பதிலா காவ்யாவை உனக்குக் கட்டி வச்சிருவோம், சொல்லிட்டேன்…” மல்லிகா சொல்லவும் காவ்யாவுக்கும், அர்ஜூனுக்கும் பக்கென்றது. கவினுக்கு காவ்யா மீதுள்ள பிடித்தம் அர்ஜூனுக்கும் தெரியும்.

பூங்கொடியும், சரவணனும் ஆர்வத்துடன் மல்லிகாவை நோக்க, “எனக்கு எப்படியோ என் அண்ணன் பொண்ணு மூத்த மருமகளா வரணும், சரிதானே அண்ணா…” என்றதும் அவர் முகத்தில் சட்டென்று ஒரு தெளிவு.

“ம்ம்… ரம்யாவைத் தான் தப்பா வளர்த்திட்டோம், காவ்யா நம்ம பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டா… நீ சொன்ன போலவே செய்திடுவோம் மா…” என்றார் உற்சாகமாக.

“மா… என்ன விளையாடறீங்களா, கல்யாணம் என்ன காய்கறி வியாபாரமா, ஒண்ணு இல்லேன்னா இன்னொன்னு வாங்கறதுக்கு… என் மனசுல ரம்யாவைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை… அவ மட்டும் தான் இந்த ஜென்மத்துல என் மனைவியா வர முடியும்… காவ்யாவை உங்களுக்கு மருமக ஆக்கணும்னா கவினுக்கு கல்யாணம் பண்ணி வைங்க… என்னை விடுங்க, நான் இப்படியே இருந்துடறேன்…” என்றான் அர்ஜூன்.

“நீ என்கிட்ட சொல்லுவ, உன் அப்பாவுக்கு யாரு பதில் சொல்லறது… உன் அத்தை கீதா வேற அவ பொண்ணுக்கு பார்க்கலாமான்னு கேட்டுட்டே இருக்கா…” சலித்துக் கொண்டாள் மல்லிகா.

“மல்லிகா சொல்லறதும் சரிதான மாப்பிள்ள… பெத்தவங்களுக்கும் ஆசை இருக்கும்ல… உங்க நல்ல மனசைப் புரிஞ்சுக்க நான் பெத்ததுக்குத் தெரியலியே…”

“அப்படி சொல்லாதீங்க அத்தை… ரம்யா நிச்சயம் என்னைப் புரிஞ்சுப்பா, எங்க கல்யாணம் நடக்கும்…”

“ம்ம்… நடந்தா சந்தோசம் தான்… சரி, நான் நைட்டுக்கு டிபன் ரெடி பண்ணறேன், சாப்பிட்டுப் போங்க…” பூங்கொடி சொல்ல,

“இல்ல அண்ணி, கவினும், அவரும் ஆபீஸ் முடிஞ்சு வந்திருவாங்க… இவனுக்கும் இன்னைக்கு நைட் ஷிப்ட், நாங்க கிளம்பறோம்…” சொல்லியபடி எழுந்து கொண்டவள்,

“சின்ன மருமகளே, நீயும் உன் அக்காவைப் போல ஏமாத்திட மாட்டியே…” என காவ்யாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு வாசலுக்கு நடக்க மற்றவர்களும் தொடர்ந்தனர்.

ரம்யா எல்லாம் கேட்டாலும் வெளியே வரவே இல்லை. மனது ஏனோ அர்ஜூன் இன்று புதிதாய் அழைத்த “ரமி…” என்ற அழைப்பில் சுற்றிக் கொண்டிருந்தது.

“எனக்காக தன் வாழ்க்கையையே தொலைக்க நினைக்கிறானே இந்த அடி முட்டாள்…” மனம் கேலியாய் நினைத்தாலும் வெகு நாட்களுக்குப் பிறகு மனதுக்கு ஒரு இதம் தோன்றியதை அவள் உணரவில்லை. ஆனாலும் உற்சாகமாய் இருக்க ஹாலுக்கு வந்தவள் டீவியை வைத்து அமர்ந்தாள். மல்லிகாவை அனுப்பிவிட்டு உள்ளே வந்த பூங்கொடியும், சரவணனும் வேதனையுடன் அவள் அருகே சோபாவில் அமர்ந்தனர்.

சரவணன் மனைவியிடம் கண்ணால் ஜாடை காட்ட, அவள் கண்ணை சிமிட்டி, “நான் பேசுகிறேன்…” என்று கூறினாள். காவ்யாவும் அத்தை சொன்னதை யோசித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“ரம்மி, இன்னும் எவ்ளோ காலம் தான் டீவில சீரியல் பார்த்தே வாழ்க்கையை ஓட்டப் போற… உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீ வாழ வேண்டாமா…?”

வெடுக்கென்று அன்னையை நோக்கித் திரும்பியவள், “வாழாம நான் என்ன பொணமாவா உக்கார்ந்திருக்கேன்… இல்ல, என் ஆவி உக்கார்ந்து டீவி பார்க்குதா…” ஏளனமாய் கேட்டு கிண்டல் சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் சின்னத்திரையில் கண்களை பதித்தாள்.

“இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, பெத்தவங்க எப்பவும் பிள்ளைகளுக்கு நல்லது தான் சொல்லுவாங்க, செய்வாங்கன்னு எப்பவாச்சும் யோசிச்சிருக்கியா…? உனக்கு நாங்க அப்படி என்னடி கெடுதல் பண்ணோம்…? ஏன் இப்படி எங்க உயிரை வாங்கற…” ஆற்றாமையில் கண்கள் நிறைய கேட்டார். சரவணன் முகமும் வேதனையில் சிவந்திருந்தது.

“ஏன்…? நீங்க எதுவும் செய்யலையா…? என் வெங்கி நாசமாப் போகணும், நல்லாவே இருக்கக் கூடாதுன்னு சாபம் கொடுத்து அவனைக் கொன்னிங்களே, அவனைப் பெத்தவங்களுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்…?” ஆங்காரமாய் அவள் கேட்ட கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போனார் பூங்கொடி.

“எதுக்கு எதைப் பேசற… அது ஒரு ஆதங்கத்துல அப்படி சொன்னா உடனே நாங்க சொன்னதால பலிச்சதா ஆயிருமா, நான் என்ன துர்வாசர் பொண்டாட்டியா, சொன்னதும் பலிக்கறதுக்கு… அந்தப் பையனுக்கு விதி முடிஞ்சது, கடவுள் கொண்டு போயிட்டார்… அதுக்காக உன் விதியை ஏன் வாழாமல் முடிக்க நினைக்கற…?”

“போதும், நீங்க என்ன சொன்னாலும் நான் இப்படிதான்… டைம் வேஸ்ட் பண்ணாம நைட்டுக்கு முறுகலா தோசை ஊத்தி, வெங்காய சட்னி செய்யற வேலையைப் பாருங்க…”

“ரம்மி, எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்… நீ சாப்பாட்டைப் பத்தி பேசற…”

“நீங்க ஐசியூ ல இருந்து பேசினாலும் என் பதில் இதுதான், போங்க, போங்க வேலையைப் பாருங்க…” என்றதும் பூங்கொடி முறைக்க சரவணன் கவலையுடன் பார்த்தார்.

“விடு பூங்கொடி, என்னை நடுவீட்டுல பொணமா பார்க்காம இவ அடங்க மாட்டா… போ, அவ சொன்ன போல முறுகலா தோசை சுட்டுக் கொடு…” சொன்னவர் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டே அறைக்குள் எழுந்து செல்ல பூங்கொடி வேதனையுடன் எழுந்து சென்றார்.

அமைதியாய் அமர்ந்திருந்த காவ்யா அக்காவின் கை பிடித்து, “அக்கா… நீ ரெண்டே வருஷம் காதலிச்ச ஒருத்தருக்காக இத்தனை வருஷம் உன்னை உயிராய் நேசிக்கிறவங்களை இழந்துடாத…” என்றுவிட்டு எழுந்து சென்றாள்.

அந்த வார்த்தைகள் ரம்யாவின் காதுக்குள் சுற்றிக் கொண்டே இருக்க ஆத்திரத்துடன் டீவியை அணைத்துவிட்டு எழுந்து மொட்டை மாடிக்கு சென்றாள். மாலை நேரக் குளிர்காற்று உடலைத் தழுவியதில் மனம் சற்று சாந்தமானது.

அலைபேசியை எடுத்து சிவகாமிக்கு அழைக்க நினைத்தவள், அன்று அவர் சொன்ன வார்த்தை நினைவுக்கு வர விருப்பமின்றி அழைக்காமல் இருந்தாள். மாடியில் இட, வலமாய் நடை போட்டவளுக்கு அர்ஜூன் பேசிய வார்த்தைகளும், அன்னை, தந்தை, காவ்யா சொன்னதும் மாறி மாறி நினைவுக்கு வர தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அனுபவங்கள் நமக்கு

தருகின்ற வலிகளே

நாம் தேர்ந்தெடுக்கும்

பாதைக்கு வழியாகிறது…

Advertisement