Advertisement

அத்தியாயம் – 7

“பூங்கொடி…” கடையிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி வந்தார் சரவணன்.

ஹாலில் ரம்யா, டீவி சீரியலில் கொடுமைக்கார மாமியார் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருக்க, ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த பூங்கொடியின் விரல்கள் அதன் பாட்டில் மல்லிகையை தொடுத்துக் கொண்டிருந்தன. தந்தையின் குரலில் திரும்பிய ரம்யா மீண்டும் டீவியை முறைக்கத் தொடங்க மனைவியின் அருகே வந்தார்.

“பூவு, என்னமா நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்… ஏதோ யோசனையாவே இருக்க…” அருகே ஒலித்த கணவனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பிய பூங்கொடி,

“வாங்க, இன்னைக்கு நேரமாவே வீட்டுக்கு வந்துட்டிங்க… காபி தரட்டுமா…” என்றாள் அதை அப்படியே வைத்துவிட்டு.

“ம்ம்… நம்ம பக்கத்து கடை ரமேஷ்க்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து மயங்கி விழுந்துட்டார்…”

“அச்சச்சோ… என்ன சொல்லறீங்க, ரமேஷ் அண்ணாவுக்கா…”

“ம்ம்… நாங்க ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போயி அட்மிட் பண்ணினோம், அவங்க வீட்டாளுங்க வந்ததும் கிளம்பி வந்துட்டோம்… மறுபடி கடைக்குப் போகவும் தோணல, அதான் வீட்டுக்கே வந்துட்டேன்…”

“அச்சோ, நல்ல மனுஷன்… கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க வேற இருக்காங்க… இப்ப எப்படி இருக்கார், பரவால்லியா…?”

“ம்ம்… உடனே ஹாஸ்பிடல் கொண்டு போனதால பிரச்சனை இல்லை… டாக்டர் கொஞ்சநாள் அவரை ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்கார்…”

“ம்ம் சீக்கிரம் சரியாகட்டும், நான் காபி கொண்டு வரேன்…” சொன்னவள் அடுக்களைக்குள் நுழைந்து திரும்புகையில் கையிலிருந்த காபியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.

வாங்கி குடித்துக் கொண்டே நிமிர்ந்தவர், “என்னமா, நான் வரும்போது நீ ஏதோ யோசிச்சிட்டு இருந்தியே…”

“ம்ம்… மல்லிகா போன் பண்ணியிருந்தா…” என்ற பூங்கொடியின் குரலில் சுரத்தில்லாமல் இருந்தது.

“ஆமா, எனக்கு கூட கால் பண்ணா… நான்தான் ஹாஸ்பிடல்ல இருந்ததால போன் எடுக்கலை… எதுக்கு கூப்பிட்டா…?”

“நம்ம பொன்வண்ணன் அண்ணன் தங்கச்சி கீதா இருக்காங்கல்ல… அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்…”

“ஹோ…” என்ற சரவணனுக்கு லைட்டாய் புரிந்தது. டீவியில் கண்ணைப் பதித்திருந்த ரம்யா வெடுக்கென்று தலையைத் திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

“மல்லிகா, அண்ணன் ரெண்டு பேருக்குமே நம்ம வீட்டுப் பொண்ணுங்களை அவங்க வீட்டு மருமகளாக்கனும்னு தான் ஆசை… ஆனா நாம பெத்து வச்சது தான் எதுக்கும் ஒத்து வர மாட்டீங்குதே… அர்ஜூனுக்கு, அவர் அண்ணன் தங்கச்சி பொண்ணைப் பார்க்கலாம்ன்னு யோசிப்பாங்க போலருக்கு… நம்மகிட்ட என்ன பண்ணலாம்னு கேக்க தான் கூப்பிட்டாங்க…” என்றாள் வருத்தத்துடன்.

“ம்ம்… என்ன பண்ண முடியும், அர்ஜூனுக்கும் 28 முடியப் போகுது… அவனுக்கு முடிச்சா தான் கவினுக்குப் பண்ண முடியும், நமக்காக அவங்களைக் காக்க வைக்கிறதும் தப்பு… கவினுக்கு நம்ம காவ்யாவை கல்யாணம் பண்ணலாம்னா அக்காக்கு முடிக்காம அவளும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவா… ஆக மொத்தம் பொண்ணுங்க எதிர்காலம் எப்படி இருக்குமோன்னு யோசிச்சே எனக்கு ஏதாவது வரப் போகுது… பேசாம அந்த ரமேஷ்க்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்குப் பதிலா எனக்கு வந்திருந்து பொட்டுன்னு போயிட்டாக் கூடத் தேவலாம்னு இருக்கு…” வெறுப்புடன் அவர் சொல்ல கோபப்பட்டார் பூங்கொடி.

“என்னங்க நீங்க, முதல்ல வாயக் கழுவுங்க… மூத்தவ திமிர் எடுத்து கல்யாணம் வேண்டாம்னு வீம்பு பிடிக்கறான்னு சின்னவ வாழ்க்கையை பாழாக்க முடியுமா…” சொன்னபடி மகளை முறைப்பாய் ஒரு பார்வை பார்க்க அவள் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

“உங்க சின்னப் பொண்ணு வாழ்க்கையைப் பாழாக்க சொல்லி யாரு சொன்னா… சிறப்பா அவ கல்யாணத்தைப் பண்ணி வைங்க, நானா வேண்டாம்னு சொன்னேன்… இந்த ஜாடை மாடையா என்னைக் குத்தற வேலையெல்லாம் வேண்டாம்… எனக்காக யாரும் தியாகம் பண்ணவும் வேண்டாம்…” சொன்னவள் கோபமாய் எழுந்து அவளது அறைக்கு சென்று விட பெருமூச்சுடன் பார்த்து நின்றனர் பெற்றோர்.

“இவ இப்படியே சொல்லிட்டு இருந்தா என்ன தான் பண்ண முடியும்… பேசாம காவ்யாவுக்கு எடுத்து சொல்லி அவளை கல்யாணத்துக்கு ரெடி பண்ண வேண்டியது தான்… ரெண்டு மாசத்துல அவளுக்கும் படிப்பு முடிஞ்சிரும்… அவ வந்ததும் பேசிப் பாப்போம்…”

“ம்ம்… என்னமோ, இவ எதிர்காலத்தை யோசிக்கும்போதே எனக்கு நெஞ்சை அடைக்கிற போல இருக்கு…” சொன்ன சரவணன் சோர்வுடன் எழுந்து செல்ல கவலையுடன் பார்த்தாள் பூங்கொடி.

சிறிது நேரத்தில் காவ்யா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்துவிட அவளுக்கு காபி கொடுத்துக் கொண்டே மெல்ல பேச்சைத் தொடங்கினாள் அன்னை.

“என்னமா, மல்லி அத்தையா இப்படி சொன்னாங்க…?”

“ம்ம்… அவங்களுக்கும் அவங்க பசங்களுக்கு நேரம் காலத்துல கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசை இருக்க தானே செய்யும்… நமக்காக எவ்ளோ நாள் காத்திருப்பாங்க சொல்லு…”

அன்னையின் கேள்விக்கு யோசனையுடன் அமைதியானவள், “அர்ஜூன் அத்தானுக்கு இதுல சம்மதமா…?” காவ்யாவின் கேள்விக்கான பதிலை அறைக்குள் இருந்த ரம்யாவின் காதுகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

“அது தெரியலடி, பெரியவங்க ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் அர்ஜூன் கிட்ட சொல்லுவாங்கன்னு நினைக்கறேன்… நல்ல பிள்ளை, எங்கே தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்… ஹூம், உன் அக்காவுக்கு கொடுத்து வைக்கலியே… சரி அதை விடு, கவினை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா…?”

அன்னையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் காவ்யா யோசனையாக, “உனக்கும் ரெண்டு மாசத்துல காலேஜ் முடிஞ்சிடும், மல்லிகா மூத்த பையனுக்கு தான் பொண்ணைக் கொடுக்க முடியலை, சின்னவனுக்காச்சும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு ஆசையா இருக்கு…”

“அம்மா, என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம், நான் பி.ஜி பண்ணலாம்னு இருக்கேன்… முதல்ல அக்காவுக்கு முடியட்டும், அப்புறம் எனக்கு யோசிக்கலாம்…”

“அப்படி சொல்லாத காவி, அப்பா உங்க ரெண்டு பேரையும் நினைச்சு ரொம்ப வருத்தப்படுறார்… இதெல்லாம் நேரம் காலத்துல, நடக்கணும்…”

“அதுக்காக அக்கா இருக்கும்போது எனக்கு கல்யாணம் பண்ணறதெல்லாம் சரியில்லமா… அவ வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா தான் எனக்கு நிம்மதியாருக்கும்…”

சட்டென்று அறையிலிருந்து பிரசன்னமாகிய ரம்யா தங்கையின் முன் நின்று, “ஏய் காவி, எனக்காக நீ ஒண்ணும் தியாகிப் பட்டம் வாங்க வேண்டாம, பேசாம அவங்க சொல்லற போல கல்யாணத்தைப் பண்ணிக்க…” என்றாள்.

அக்காவை நிமிர்ந்து பார்த்த காவ்யா, “இல்லக்கா… இதுவரை நீ சொல்லி நான் எதையும் மறுத்ததில்லை… ஆனா இந்த விஷயத்துல என் முடிவு இதுதான்… உனக்கு ஒரு நல்லது நடக்காம நான் என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கப் போறதில்லை…” என்றாள் தீர்மானமாக.

“அப்படின்னா நீயும் என்னோட சேர்ந்து அவ்வையாரா தான் சுத்த வேண்டி இருக்கும்…”

“பரவால்லக்கா… உனக்காக எத்தனையோ விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்திருக்கேன்… இந்த ஒரு விஷயத்துல நீ விட்டுக் கொடுத்தா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்லாருக்கும்… அதுக்காக, நான் உன்னை நிர்பந்திக்கப் போறதில்லை, உன் முடிவை மாத்திக்க சொல்லவும் இல்லை… உனக்குப் பிடிச்ச போலவே நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்காமலே இரு… நானும் உனக்குத் துணையா இப்படியே இருந்துடறேன்…” சொன்னவள் மூத்தவளின் பதிலை எதிர்பாராமல் எழுந்து அறைக்கு செல்ல ரம்யாவின் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

சின்ன மகளின் வார்த்தைகள் மனதில் வருத்தத்தைக் கூட்ட, “அந்த மனுஷன் என்னடான்னா புள்ளைங்களை யோசிச்சு புலம்பியே உடம்புக்கு எதாச்சும் வருத்தி வச்சுப்பாரு போலருக்கு… இதுங்க என்னடான்னா, ஒண்ணுக்கொண்ணு நான் சளைச்சவ இல்லன்னு கல்யாணம் வேண்டாம்னு ஒரே கால்ல நிக்குதுங்க… இதுங்க கிட்ட மாட்டிட்டு நான்தான் முழிக்க வேண்டிருக்கு, ரெண்டு பேரும் எப்படியோ போங்க… சம்பாதிச்சு, எல்லாம் செய்து கொடுக்க நாங்க உள்ள தைரியத்துல தான ரெண்டு பேரும் எங்களைப் பத்தி யோசிக்காம இப்படி பேசிட்டு திரியுறிங்க, ஒருநாள் இல்ல ஒருநாள் நானும், உங்கப்பாவும் விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு ஒரேயடியா மேலோகம் போயி சேரப் போறோம் பாரு… அப்புறம் நீ எப்படி, யாரை டார்ச்சர் பண்ணறேன்னு பார்க்கறோம்… உங்களைப் பெத்து, படிக்க வச்சு, பார்த்துப் பார்த்து வளர்த்துனதுக்கு நல்லா வச்சு செய்யறீங்க…”

கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டே பூங்கொடி அங்கிருந்து சென்று விட எப்போதும் கோபமாய் பதிலுக்கு பதில் பேசும் அன்னை கண்ணீர் விட்டு கலங்கியபடி செல்லவும் ரம்யாவுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அமைதியாய் மொட்டை மாடிக்கு சென்றவள் அலைபேசியில் சிவகாமிக்கு அழைத்தாள்.

“ரம்யாக் கண்ணு, நல்லாருக்கியா…?” எடுத்ததுமே கொஞ்சலாய் ஒலித்தது சிவகாமியின் குரல்.

“ம்ம்… இருக்கேன் அத்த, நீங்க எப்படி இருக்கீங்க…?”

“ஏதோ இருக்கேண்டா, மனசுதான் எப்பவும் என் புள்ளயவே நினைச்சுட்டு இருக்கு…”

“ம்ம், எனக்கும் தான் அத்த… வெங்கி நினைப்பாவே இருக்கு…”

“இருக்கும்ல கண்ணு, நீ அவனை அவ்ளோ விரும்புனியே, அவ்ளோ சீக்கிரம் மறந்துட முடியுமா…?”

“ஆமா அத்த, அதைப் புரிஞ்சுக்காம இங்க எங்க வீட்டுல கல்யாணப் பேச்செடுத்து என்னை டார்ச்சர் பண்ணறாங்க…?”

“யாருக்கு கல்யாணம்…?” என்ற சிவகாமி ஆர்வமானார்.

“என் அத்தை மகனுக்கு எப்படியாச்சும் என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு என்னைப் பெத்தவங்க ஏதேதோ நாடகம் போட்டுப் பார்க்கறாங்க…”

“ஓ… உனக்கு அந்தப் பையனைப் பிடிக்குமா கண்ணு…?”

“எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணனும்னு தோணினதே இல்ல அத்த, உங்க வீட்டு மருமகளா, உங்க பிள்ளைக்கு மனைவியா வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன், அது நடக்காமப் போயிருச்சு… இனி எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன் அத்த…”

“அப்படி சொல்லாதடா, உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்ல, நீ எனக்கு மருமகளா வரணும்னு நானும் தான் ரொம்ப ஆசைப்பட்டேன், அதுக்காக இனி என்ன பண்ண முடியும்… என் சின்ன மகன் தான் அல்பாயுசுல போயிட்டான், அதனால என் மூத்த மகனைக் கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேக்கவா முடியும்…” நிதானமாய் சொல்லிவிட்டு அவளது பதிலுக்காய் நிறுத்தினார்.

அவர் சொன்னது சட்டென்று புரியாமல் நிதானித்தவளுக்கு, புரிந்ததும் குழப்பமாய் கேட்டாள்.

“அத்த, நீங்க என்ன சொல்லறீங்க…?” சற்று சீறலாய் அவளது குரல் வெளிப்படவும் சிவகாமி பம்மினார்.

“கோவிச்சுக்காத கண்ணு, எனக்கு நீ மருமகளா வரணும்கிற ஆசைலயும், உன் வாழ்க்கை வீணாப் போயிடக் கூடாதுங்கற ஆதங்கத்துலயும் அப்படி சொன்னேன்டா…”

“அத்தை, நான் விரும்பினது உங்க சின்ன மகன் வெங்கியை தான்… அவர் இறந்துட்டதால உங்க மூத்த மகனை எல்லாம் என்னால கட்டிக்க முடியாது… நான் அப்புறம் பேசறேன்…” என்றவள் பட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டாள். பிறகும் அவளுக்கு ஒருமாதிரி படபடப்பாய் இருந்தது.

“அத்தை என்ன இப்படி சொல்லி விட்டார்…? சின்னவன் போனா பெரியவன் என்று மனதை மாற்றி மாலையை வாங்கிக் கொள்ளக் கூடியவளா நான்… எனக்குப் பிடித்த விஷயத்தையே யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத நான் எப்படி விரும்பியவனை மறந்துவிட்டு மற்றவனை மணக்க முடியும், அதை யோசிக்காமல் இந்த அத்தை சட்டென்று இப்படி வார்த்தையை விட்டு விட்டாரே… ச்ச்சே, இத்தனை தானா, அவர் என்னைப் புரிந்து கொண்டது…” என ஆதங்கமாய் இருந்தது ரம்யாவுக்கு.

புத்தகத்தை விரித்தபடி தனது அறைக்குள் அமர்ந்திருந்த காவ்யாவின் மனதும் அன்னை சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது. மனதுக்குள் நிறைந்திருந்த அவளது கவின் அத்தானை மணக்கும் சந்தர்பம் கிடைத்தும் வேண்டாமென்று ஒதுக்கியது சற்று வருத்தமாய் இருந்தது.

“சாரி அத்தான்… உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனா என் வாழ்க்கையை மட்டும் என்னால யோசிக்க முடியல… என் அக்காவும் நல்லாருக்கணும்… என் மேல கொஞ்சமாச்சும் அன்பிருந்தா எனக்காக அவ முடிவை மாத்திகிட்டு இறங்கி வருவான்னு நம்பறேன்… அது நான் இந்த விஷயத்துல பிடிவாதமா இருந்தாதான் நடக்கும்…”

நினைத்து நினைத்துப் பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்…

உன்னால் தானே நானே வாழ்கிறேன்…

சட்டென்று அலைபேசி இசைத்து அழைப்பைக் காட்ட அதில் ஒளிர்ந்த கவினின் எண்ணைக் கண்டவள் மனம் நெகிழ்ந்தது. சிறு குற்றவுணர்ச்சியோடு அலைபேசியை எடுத்தவள் அழைப்பை ஏற்காமல் பார்த்துக் கொண்டிருக்க அது நின்று மீண்டும் இசைக்கத் தொடங்கியது. எடுத்து காதுக்குக் கொடுத்து ஹலோவினாள்.

“ஹலோ…”

“என்ன மேடம், ரொம்ப பிஸியோ…”

“இல்ல, சொல்லுங்க அத்தான்…”

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…”

“ம்ம்… நானும் சொல்லணும்…” என்றதும் திகைத்தான்.

“நீயும் சொல்லனுமா…? என்ன விஷயம் காவி…”

“நீங்க என்ன சொல்ல வந்தீங்க அத்தான்…?”

“அது… எனக்கு இன்னும் ஆறு மாசத்துல ஒரு பிரமோஷன் வருது, அதுக்குப் பிறகு ஒரு புரோஜக்ட் விஷயமா அமெரிக்கா போக வேண்டி வரலாம்… அதுக்குள்ள நம்ம மேரேஜ் முடிச்சிட்டா ஜோடியா அமெரிக்கா போயிடலாம்னு யோசிக்கறேன்… அதான், உனக்கு பாஸ்போர்ட் ரெடி பண்ணற விஷயமா பேசலாம்னு நினைச்சேன், நீ என்ன நினைக்கற…?”

“உங்க ஆசை நடக்காதுன்னு நினைக்கறேன்…”

“காவி… ஏன் இப்படி சொல்லற…” என்றான் சிறு கோபத்துடன்.

“உங்களுக்கு வீட்டுல நடக்கற ஏதாச்சும் தெரியுமா…?”

“ஏன்..? என்ன நடந்துச்சு…?”

“அர்ஜூன் அத்தானுக்கு உங்க அத்தை மகளை கல்யாணம் பண்ணலாமான்னு உங்க வீட்டுல யோசிக்கறாங்க…”

“ஓ… ரொம்ப நல்ல விஷயம், உன் லூசு அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல இருந்து என் அண்ணன் தப்பிச்சான்… எவ்ளோ நாள் தான் அவனும் காத்திருப்பான், நம்ம ரூட் கிளியர்…” என்றான் உற்சாகத்துடன்.

“அத்தான், என்ன பேசறீங்க… உங்க ரூட் கிளியர் ஆனாப் போதுமா, என் ரூட் கிளியர் ஆகாம கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னதை மறந்துட்டிங்களா…”

“இங்க பாரு காவி, உன் அக்காவை என் அண்ணன் வேண்டாம்னு சொல்லல, அவ மேல அவன் உயிரையே வச்சிருக்கான்… அதுல எனக்கு எப்பவும் ஆச்சர்யம், எப்படி இப்படி ஒரு திமிர் பிடிச்ச பொண்ணை அவனுக்குப் பிடிக்குதுன்னு… ஆனா உன் அக்கா கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நாங்க என்ன பண்ண முடியும்…”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது… என் அக்காவுக்கு கல்யாணம் ஆகாம நானும் பண்ணிக்க மாட்டேன்…”

“ஓ… அப்ப நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்ட…”

“ப்ச்… ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க அத்தான்… எனக்கு உங்களைப் பிடிக்காம நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை…”

“நீ உன் அக்காவுக்காக கல்யாணம் பண்ணாம தியாகச் செம்மல் அவார்டு வாங்கிட்டு உக்கார்ந்துக்குவ… இவ்ளோ நாள் உன்னை நினைச்சு கல்யாணக் கனவு கண்டுட்டு இருந்த நான் கேனையன், அப்படித்தானே…”

“அத்தான், நான் அப்படி சொல்ல வரலை… கோபப்படாம நான் சொல்லறதைக் கேளுங்க…”

“நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு, நான் கேக்கறேன்…”

“சரி… என் அக்காவுக்கு கல்யாணம் முடியட்டும், பண்ணிக்கறேன்…”

“எனக்கு டைரக்டா அறுபதாம் கல்யாணம் பண்ணற எண்ணம்லாம் இல்லை…”

“ப்ச்… லூசு அத்தான், கொஞ்சம் யோசிங்க… அக்கா தானே எல்லாத்துக்கும் காரணம், அவளே அர்ஜூன் அத்தானைக் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டா…”

“அவதான் சொல்ல மாட்டாளே…”

“சொல்ல வைக்க உங்களால முடியாதா…?” என்றதும் சற்று யோசித்தான் கவின்.

“நான் என்ன பண்ணனும் காவி…”

“நாளைக்கு ஈவனிங் அர்ஜூன் அத்தானைக் கூட்டிட்டு காலேஜ் பக்கத்துல உள்ள ரெஸ்டாரன்ட் வந்திருங்க… பேசிக்கலாம்… சரி, நான் வச்சிடறேன், நாளைக்கு மெசேஜ் பண்ணறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

நில்லென்றால் நிற்குமோ

காதல் மனம்…

கொள்ளென்றால் கொள்ளுமோ

காதல் மணம்…

நின்றாலும் கொண்டாலும்

நெஞ்சத்தில் நேச மணம்…

உயிர் உணரும் வழியாய்…

உயிர் கரையும் வலியாய்…

Advertisement