Advertisement

அத்தியாயம் – 6

டூர் ஆர்கனைசர் என்பதால் வெங்கடேஷ் அடிக்கடி வெளியூருக்கு சென்று வர, வெளிநாட்டிலிருந்து வந்த ரூரிஸ்ட் யாரிடமிருந்தோ உலகையே ஆட்டி வைக்கும் வைரஸ், பெங்களூரில் அவனை முத்தமிட்டிருந்தது. முதலில் சாதாரண, சளி காய்ச்சல் என அலட்சியமாய் விட்டவனை ஐந்தாவது நாளில் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போதுதான் புதிதாய் இந்த வைரஸ் எல்லாருக்கும் பரவிக் கொண்டிருக்க, உலகமே பதறிக் கொண்டிருந்தது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறுதி நேர சிகிச்சை பலனின்றி அடுத்தநாளே உயிரைத் தொலைத்திருந்தான். தொற்று வேகமாய் பரவத் தொடங்கவே இறந்தவர் சடலத்தைக் கூட யாருக்கும் காண முடியாமல் போக அந்த சமயத்தில் அரசும் முழு ஊரடங்கு உத்தரவை அமலாக்க எல்லாரும் வீட்டுக்குள்ளேயே அடங்கினர்.

அவனது இறப்புச் செய்தி ரம்யாவின் மனதில் இடியாய் விழ, அவனைக் காண சென்றே ஆகவேண்டும் என அடம் பிடித்தாள். அவளது பெற்றோருக்கோ அவனது இறப்புக்காய் மகிழ்வதா, வருந்துவதா எனத் தெரியவில்லை. வாழ வேண்டிய வயதில் இறந்து போனவனுக்காய் மனம் வருத்தப்பட்டாலும் கடவுள் இந்த விதத்தில் மகளின் வாழ்க்கையைக் காப்பாற்றி விட்டதாகவும் நினைத்தனர். ரம்யா அழுது கொண்டே பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

“இப்ப உங்களுக்கு சந்தோஷம் தான… அவன் நல்லாருக்க மாட்டான், நாசமாப் போகணும்னு எவ்ளோ சாபம் விட்டீங்க… உங்க சாபம் தான் அவனைக் கொன்னுருச்சு… அநியாயமா என் வெங்கியைக் கொன்னுட்டீங்களே… ஐயோ வெங்கி, நாம எப்படில்லாம் வாழணும்னு ஆசைப்பட்டேன், இப்படி விட்டுட்டுப் போயிட்டியே…” எனக் கதறியவளின் கண்ணீர் பெற்றோரின் மனதில் வேதனையைக் கூட்டியது.

“எனக்குப் போகணும், வெங்கி முகத்தை கடைசியா ஒரு முறையாச்சும் பார்க்கணும்…” அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தவளை பூங்கொடி தடுத்தார்.

“ரம்யா, சொன்னாப் புரிஞ்சுக்க… ஊரெல்லாம் லாக்டவுன் போட்டு யாரும் வெளிய வரக் கூடாதுன்னு கவர்ன்மெண்டே சொல்லிடுச்சு… நாம போனாலும் அந்தப் பையன் பாடியைக் காட்டமாட்டாங்க… பாடியை கவர்ன்மெண்டே எரிச்சிடுமாம்…”

அன்னையை ஆத்திரத்துடன் நோக்கியவள், “எனக்கு அதெல்லாம் தெரியாது… இப்பவே அவன் வீட்டுக்குப் போகணும், நான் போறேன்…” என்றவளைத் தடுத்த சரவணன், “இரு, நாங்களும் வரோம்…” என்று கிளம்பினார்.

“எப்படிங்க, வெளிய அங்கங்க போலீஸ் இருக்காங்க… ஏதாவது பிரச்சனை ஆயிடப் போகுது…” பூங்கொடி சொல்ல, “பார்த்துக்கலாம்…” என்றவர் போலியான மெடிக்கல் சர்டிபிகேட் மூலம் போலீஸாரிடம் பர்மிஷன் வாங்கி அவர்களை காரில் அழைத்துச் சென்றார்.

மாஸ்க் அணிந்து, வழியில் விசாரித்த போலீசாரிடம் சமாளித்து ஒருவழியாய் வெங்கடேஷ் வீட்டை அடைந்தனர். சிவகாமி புலம்பியபடி அழுது கொண்டிருக்க வெங்கடேஷின் தந்தையும், அண்ணனும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தனர். துக்கம் விசாரிக்கக் கூட அடுத்த வீட்டினரோ, உறவுகளோ வர முடியாத சூழ்நிலையில் அவர்கள் மட்டுமே இருந்தனர்.

வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டு அழுகையை நிறுத்தி எட்டிப் பார்த்த சிவகாமி ரம்யாவைக் கண்டதும் ஓடி வந்தார்.

“ரம்யாக் கண்ணு, நம்மளை ஏமாத்திட்டு எம்புள்ள போயிட்டானே… உன்னைக் கல்யாணம் கட்டி வீட்டுக்கு மருமகளாக் கூட்டி வரணும்னு எவ்ளோ ஆசையா இருந்தான், இப்படிப் போயிட்டானே… யாரோட சாபமோ, என் புள்ள மேல விடிஞ்சிருச்சே…” என்றவரின் பார்வை அவசரமாய் அவள் பெற்றோரைத் தழுவியது.

“மூத்தவன் பொண்டாட்டி தான் அல்பாயுசுல போயிட்டா, நீயாச்சும் சின்னவனோட நல்லபடியா குடித்தனம் பண்ணி பேரப் புள்ளைகளைப் பெத்துத் தருவேன்னு ஆசையாக் காத்திருந்தனே… எல்லாமே இப்படி கனவா முடிஞ்சு போச்சே… என் புள்ள மூஞ்சியைக் கூட பார்க்க முடியாம வெளியூர்லயே எரிச்சு சாம்பலாக்கிட்டாங்களே…” என ரம்யாவைக் கட்டிக் கொண்டு அழ அவளும் கதறினாள்.

அவள் பெற்றோருக்கோ மிகவும் தர்மசங்கடமாயிருந்தது. ஒரு வழியாய் சில மணி நேரத்திற்குப் பிறகு மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்ப, காரில் ஏறியதிலிருந்து யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை ரம்யா. அதிர்ச்சியில் இருக்கிறாள் என இவர்களும் அமைதியாய் இருந்தனர். இரண்டு நாள் கழிந்தும் மௌனமாய் எல்லாரையும் முறைத்துக் கொண்டிருந்தவள் அதற்குப் பிறகு பேசத் தொடங்கிய போதோ இவர்கள் தான் வெங்கடேஷைக் கொன்ற கொலையாளி என்பது போல் தேளாய் கொட்டத் தொடங்க அதிர்ந்து போயினர்.

“ரம்யா, இதுல நாங்க என்ன பண்ணினோம், கோவிட் வந்து நிறையப் பேர் இறந்துட்டு தான் இருக்காங்க, அவங்களை எல்லாம் நாங்களா சபிச்சோம்… அது கோபத்துல ரெண்டு வார்த்தை அவனைத் திட்டிட்டோம், அதுக்காக எங்க சாபம் தான் அவனைக் கொன்னுருச்சுன்னு சொல்லறியே, உனக்கே இது நியாயமா இருக்கா…” கேட்கும்போதே பூங்கொடிக்கு வேதனையில் கண்ணீர் நிறைந்தது.

“நீங்கதான் அவனை கரிச்சுக் கொட்டி, நாசமாப் போகணும்னு சொல்லிட்டே இருந்திங்க… வருத்தம் இருக்கிற போல சும்மா நடிக்காதீங்க, அவன் செத்துட்டான், பிரச்சனை முடிஞ்சதுன்னு மனசுக்குள்ள நீங்க சந்தோஷப்படறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிங்களா, எதுவும் முடியலை… இனி என்னைப் பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் நீங்க வேதனைப்படனும், நம்ம பொண்ணு வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படனும்…”

சொன்னவளை பெற்றோர் அதிர்ச்சியுடன் நோக்கி நிற்க கொண்டையை அள்ளி முடிந்து கொண்டவள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் நரகமாகக் கழிந்தது. ரம்யா தலை முடியைப் பின்னுவதில்லை, எந்நேரமும் கொண்டை தான்… நகை, நல்ல டிரஸ் போடுவதில்லை… எப்போதும் இரண்டு நைட்டி மட்டுமே, அதுவும் இத்துப் போய் கலரிழந்து என்னை விட்டு விடு என்று கதறிக் கொண்டிருந்தது. ஆனாலும் அதையே தான் போடுவாள். வீட்டுக்கு யாரும் சொந்தங்கள் வரக்கூடாது, வந்தால் மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொள்வாள். அவர்கள் சென்றால் தான் நான் வருவேன் என்று.

இதை விடக் கொடுமை வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை… சாப்பிட்ட தட்டைக் கூடக் கழுவுவதில்லை, முன்பெல்லாம் அசைவம் இல்லாமல் சாப்பிடாதவள் இப்போது முட்டை கூடத் தொடுவதில்லை. தின்னுவது, தூங்குவது, டிவி பார்ப்பது, மொட்டை மாடியில் மொபைலில் பேசிக் கொண்டே உலாத்துவது… அதுவும் அந்த சிவகாமியிடம் தான் பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் நடந்து கொள்வதைக் கண்டு மனது பொறுக்காமல், “ஏண்டி இப்படி இருக்கே, நீ யாரையும் கல்யாணம் பண்ணலேன்னாலும் பரவால்ல… நம்ம வீட்டுல சந்தோஷமா நல்லா இரேன்டி…” பூங்கொடி கெஞ்சிப் பார்த்தாள்.

“முடியாது… அவன எல்லாருமா சேர்ந்து கொன்னுட்டிங்க, எனக்கு அவன் தான் வேணும்… ஆனா, திரும்ப வர மாட்டான்… அதனால தான் உங்களைக் கழுத்தறுக்கிறேன்… கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்… நானும் நிம்மதியா இருக்க மாட்டேன், உங்க யாரையும் நிம்மதியா இருக்கவும் விட மாட்டேன்… அதே மாதிரி தங்கச்சி எவனையாவது லவ் பண்ணா, அவனைக் கல்யாணம் பண்ணக் கூடாது… நீங்களாப் பார்த்து எவன கட்டி வச்சாலும் ஓகே… ஆனா லவ்வுக்கு ஒத்துக்கக் கூடாது…” ஆங்காரமாய் சொன்னவளைக் கண்டு பூங்கொடியோடு காவ்யாவுக்கும் அச்சம் தோன்றியது. அவளது பிடிவாதம் அத்துமீறிக் கொண்டிருக்க முதலில் கலங்கி நின்ற பூங்கொடி பிறகு சமாளித்துக் கொள்ளத் தொடங்கினாள்.

காவ்யா எப்போதுமே அக்காவை அனுசரித்து செல்பவள் என்பதால் அவளிடம் பெரிதாய் ரம்யாவுக்கு கோபமில்லை… பெற்றோர் மீதும், பர்வதம் பாட்டி மீதும் தான் அவளது கோபமும் ஆங்காரமும்.

ஒரு மாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அவள் ஒவ்வொன்றையும் செய்ய, இவர்கள் குழம்பிக் கொண்டிருந்தனர். தெரிந்த டாக்டரிடம் சொல்லி கவுன்சலிங் அழைத்துச் சென்றும் எந்த உபயோகமும் இல்லை. ரம்யாவுக்கு சின்ன வயதிலிருந்து கிடைத்த அதிகப்படியான செல்லமும், அவளது பிடிவாதமும் நோயாய் அவளை மனதுக்குள் அமர்ந்து உருக்கிக் கொண்டிருந்தது. அதற்கு சிவகாமியின் தூபமும் ஒரு காரணமாய் இருந்தது…

அவள் சிவகாமியுடன் பேசுவது தெரிந்தாலும் மகன் இறந்ததற்கு ஆறுதல் சொல்லப் பேசுகிறாள் என இவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் மகனது இறப்புக்கு இவளது பெற்றோர் தான் காரணம் என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைத்து அதற்கு தண்ணீர் ஊற்றவே தினமும் பேசிக் கொண்டிருக்கிறாள் எனப் புரியவில்லை.

சில நேரம் ரம்யா அமைதியாய் இருந்தாலும் மனதின் காயத்தை அவளே குத்திக் கிளறிப் பெரிதாக்கிக் கொண்டிருந்தாளே ஒழிய சிறிதேனும் காய்வதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னையும் வருத்தி, மற்றவர்களையும் வருத்தும் சைக்கோவாய் மாறிக் கொண்டிருந்தாள் ரம்யா. ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த சரவணன் பெருமூச்சுடன் திரும்ப பூங்கொடி பால் கிளாஸுடன் உள்ளே வந்தாள்.

“என்னங்க, யோசனையா இருக்கீங்க… சூடா பால் குடிச்சிட்டு படுங்க, டைம் ஆகுது…”

“ம்ம்…” என்றபடி கிளாஸை வாங்கிக் கொண்டவர், “அத்தைகிட்ட பேசிட்டியா…” என்றார்.

“ம்ம்… சொல்ல கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா அத்தை புரிஞ்சுகிட்டாங்க… அவங்களுக்கு ரம்யாவை நினைச்சு ரொம்ப வருத்தம்… இன்னும் எத்தனை நாள் தான் இவ இப்படி இருக்கப் போறாளோன்னு கவலைப்படறாங்க…”

“ம்ம்… எந்தப் பக்கமும் போக முடியாம இந்தப் பொண்ணு இப்படி முரண்டு பிடிக்கிறாளே… இப்பக் கூட மல்லிகா இவளை அர்ஜூனுக்கு கட்டி வைக்க ஓகே சொன்னா, அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் வச்சுக்க ரெடியாகிருவா… இவளைப் பத்தி அவங்க எல்லாருக்கும் தெரியவும் செய்யும், ஆனாலும் நம்ம பொண்ணு இறங்கி வர மாட்டேங்கிறாளே… அவளோட வறட்டுப் பிடிவாதமும், கோபமும் எப்ப தான் மாறப் போகுதோ…” என்றார் வருத்தமாய்.

“ஹூம்… அந்தக் கடவுள் தான் ஒரு வழி காட்டணும், சின்னவளும் படிச்சு முடிக்கப் போறா… இவளுக்கு கல்யாணம் முடிச்சா தான அவளுக்கு பண்ண முடியும்… யோசிச்சா மனசு ரொம்ப கலங்கிப் போகுது…”

“நடக்கறது நடக்கட்டும்… கடவுள் மேல பாரத்தைப் போட்டு, இவ மனசு மாறும்னு நம்பிக் காத்திருப்போம்…” சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார் சரவணன். மகள்களின் எதிர்காலத்தைப் பற்றிய பரிதவிப்புடன் ஒரு தாயாய் வேதனையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே சிறிது நேரத்தில் பூங்கொடியும் உறங்கத் தொடங்கினாள்.

ஆனால் ரம்யாவோ அவளது அறைக்குள் உறக்கம் வராமல் நடை பயின்று கொண்டிருந்தாள். கண்ணை மூடினால் மனதுக்குள் வெங்கி அழகாய் சிரித்து கண்ணடித்தான்.

சில குடும்ப நிகழ்ச்சிகளில் அவனைப் பார்க்கும் போதெல்லாம் கம்பீரமான அவனது தோற்றமும், அழகான பளிச் சிரிப்பும் அவளது இளமனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தது. பருவ வயதுக்கே உரிய எதிர்பார்ப்பும், சலனங்களும் நிறைந்த மனது அவளை நோக்கி அவன் கண் சிமிட்டி யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் சிரிக்கவும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்ந்தாள்.

ரம்யாவுடன் படித்த பள்ளித் தோழி ஒருத்தி குடும்ப சூழல் காரணமாய் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாமல் டிராவல் ஏஜன்சியில் வேலைக்கு சேர, அதே நிறுவனத்தில் தான் வெங்கடேஷ் டூர் ஆர்கனைசராய் வேலையில் இருந்தான். அவள் மூலமாய் ரம்யாவிடம் அலைபேசத் தொடங்கிய வெங்கடேஷின் காதல் வலையில் விரும்பியே மாட்டிக் கொண்டாள் ரம்யா. தோழியைக் காண செல்லும் சாக்கில் அடிக்கடி அவனைக் காணவும் சென்றாள்.

அவர்களின் காதலைத் தெரிந்து கொண்ட சிவகாமி குடும்பமும் எதிர்க்கவில்லை. தங்களை விட வசதியான இடத்தில் சொந்தத்திலேயே மகன் விரும்பவும், மனது ஏதேதோ கணக்கு போடத் தொடங்கியிருந்தது. பெற்றோருக்குத் தெரியாமல் வெங்கியுடன் அவன் வீட்டுக்கு இரண்டு முறை சிவகாமியைக் காண சென்றிருக்கிறாள்.

தனது வீட்டில் எதிர்ப்பு கிளம்பினாலும் தனது பிடிவாதத்தில் விரும்பியதை சாதித்துக் கொள்ளலாம்… என எண்ணி இருந்தவளுக்கு கடவுளின் கணக்கு எல்லாத்தையும் மாற்றிப் போட தவித்துப் போனாள் ரம்யா. முதன்முறையாய் தான் நினைத்தது வாழ்க்கையில் நடக்காமல் போனதன் அதிர்ச்சி அவளை நிலைகுலையச் செய்திருந்தது. யோசனையுடனே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.

அடுத்தநாள் காலையில் காவ்யா கல்லூரிக்குக் கிளம்ப, சரியாய் அந்த நேரத்தில் ஆஜராகி இருந்தான் கவின்.

“அத்த, அம்மா பால் கொழுக்கட்டை செய்தாங்க… காவ்யாக்குப் பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்…” சொன்னவன் காவ்யாவிடம் பாத்திரத்தை நீட்ட வேகமாய் அதைப் பறித்துக் கொண்டாள் ரம்யா.

“ஏன், எங்களுக்கெல்லாம் இங்க வாயில்லையா… நாங்க சாப்பிட்டா பால் கொழுக்கட்டை இறங்காதா…?” சொல்லிக் கொண்டே ஒரு ஸ்பூனுடன் ஹாலுக்கு சென்று அமர்ந்து அவள் பாட்டுக்கு சாப்பிடத் தொடங்கினாள்.

உண்மையில் அவளுக்கு தான் காவ்யாவை விட பால் கொழுக்கட்டை பிடிக்கும்… அதை சொல்லிக் கொடுத்தால் பிகு பண்ணிக் கொண்டு வாங்க மாட்டாள் என்பதால் கவின் அப்படி சொல்லி இருக்க நினைத்தது போலவே நடந்தது. கவின் காவ்யாவிடம் கண்ணால் ரம்யாவைக் காட்டி “எப்படி…” என்று கேட்க உதட்டை சுளித்து, “ம்ம்…” என புருவத்தை தூக்கினாள்.

ரம்யாவிடம், “அவளுக்கும் கொஞ்சம் கொடு ரம்யா…” என்று பூங்கொடி சொல்ல, “முடியாது… இது எல்லாமே நானே சாப்பிடுவேன்…” என்றவளை முறைத்து விட்டு, “கவின், நீ அப்படியே காவ்யாவை காலேஜ்ல விட்டுட்டுப் போறியா… மாமா இன்னைக்கு வேலை இருக்குன்னு நேரமா கிளம்பிட்டார்…” என்றாள்.

“மாமா கிளம்பறதைப் பார்த்துட்டு தானே, அண்ணனைப் போக வேண்டாம்னு சொல்லிட்டு நான் வந்தேன்…” என மனதுக்குள் யோசித்து சிரித்துக் கொண்டே,

“எனக்கு வேற ஆபீஸ்க்கு டைம் ஆச்சே அத்தை…” என பிகு செய்ய காவ்யாவின் முகம் வாடிப் போனது.

“அப்படியா, சரி… காலைல பஸ்செல்லாம் கூட்டமா இருக்குமேன்னு பார்த்தேன்… நீ பஸ்லயே போயிக்கடா…” சொல்லிக் கொண்டே டிபன் பாக்ஸில் உணவை நிறைத்தாள்.

“சரிம்மா…” என்றவள் அவனிடம் ஒன்றும் சொல்லாமல் முறைத்துக் கொண்டே தனது பாகை எடுத்துக் கொண்டு கிளம்ப, “சரி, நானே கொண்டு போய் விடறேன், எதுக்கு கூட்ட நெரிசல்ல கஷ்டப்பட்டு…” என்றதும் முறைத்தாள்.

“ஒண்ணும் தேவையில்லை, எங்களுக்கு சர்வீஸ் பண்ண தான் நிறைய டவுன் பஸ் ஓடுது… அப்படி இல்லேன்னா நடராஜா சர்வீஸ் கூட பண்ணிக்கறேன்… உங்க உதவி தேவை இல்லை…” என கும்பிடு போட்டுக் கொண்டே சொல்ல, “ஏன், அவன் தான் கொண்டு போயி விடறேன்னு சொல்லுறான்ல காவ்யா…” என்றாள் பூங்கொடி.

“வேண்டாம் மா, நான் போயிக்கறேன்…” என்றவள் நடக்க, “பை அத்தை, நானும் கிளம்பறேன்…” என்றவன் அவள் பின்னிலேயே வந்து பைக்கை எடுத்தான்.

அவள் சிறிது தூரம் நடந்திருக்க அருகில் வண்டியை நிறுத்தியவன், “நீ இப்ப வண்டில ஏறப் போறியா இல்லியா…” எனக் கேட்க, “நீங்க நினைச்சா ஏறுறதுக்கும், நினைச்சா இறங்குறதுக்கும் நான் என்ன ஷேர் மார்க்கட் தங்கமா… நீங்க போயி உங்க வேலையையே பாருங்க…” என்றதும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

அதைக் கண்டதும் காவ்யாவுக்கு சப்பென்று போனது.

“ச்சே… கொஞ்சம் பிகு பண்ணினா, கெஞ்சிட்டு கூடவே வருவான்னு பார்த்தா இப்படி விட்டுட்டுப் போயிட்டானே…” என யோசித்தபடி தெருவில் திரும்ப பைக்குடன் காத்திருந்தான் கவின்.

“என்ன மேடம், இன்னைக்கு உன் அக்கா ஸ்டைல் எல்லாம் டிரை பண்ணற போல இருக்கு…”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நீங்கதான் ரொம்பவும் பிகு பண்ணீங்க, எதுக்கு நம்மால சிரமம்னு தான்…” என்றவளிடம் இன்னொரு டிபன் பாக்ஸை நீட்டினான் கவின்.

“உன் அக்கா லூசு பிடிச்சதை யாருக்கும் தர மாட்டான்னு தெரிஞ்சு தான் உனக்குன்னு தனியா அம்மா கொடுத்து விட்டாங்க…” எனவும் அவள் மனம் நெகிழ்ந்தது. ஆவலோடு வாங்கிக் கொண்டவள், “அத்தைக்கு என் மேல ரொம்பப்பாசம்…” எனவும் முறைப்பது அவன் முறையாயிற்று.

“எங்களுக்கு இல்லியாக்கும், சரி… வண்டில ஏறு…” எனவும் சிரித்துக் கொண்டே அதை பாகில் வைத்தவள் அவன் பின்னில் அமர்ந்தாள்.

மனம் தொலைந்து

போகும் பொருளென்று

உனைக் காணும் வரை

அறிந்திருக்கவில்லை…

உன் மனம் தந்து

எனை மீட்பாயா…

Advertisement