Advertisement

அத்தியாயம் – 5

அடுத்து வந்த நாட்களில் ரம்யா வீட்டில் யாருடனும் சரியாகப் பேசா விட்டாலும் சாதாரணமாகவே இருந்தாள். எப்படியும் பெற்றோரை தன் விருப்பத்திற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்பது அவளது நம்பிக்கை.

கல்யாணம் என்பது மற்ற விஷயங்களைப் போல் இல்லையே… மகளின் வாழ்க்கையல்லவா..! ரம்யாவிடம் எத்தனயோ எடுத்து சொல்லியும் அவள் பிடிவாதமாய் இருக்கவே சரவணன் மனைவியை சமாதானப்படுத்தி அந்த வெங்கடேஷைப் பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினார். பர்வதமும் அவரது குடும்பத்தினரிடம்  சிவகாமி குடும்பத்தைப் பற்றி விசாரிக்க யாரிடமும் நல்ல அபிப்ராயம் கிடைக்கவில்லை.

“வெங்கடேஷா..? அவன் சரியான ஊதாரிப் பயலாச்சே… பார், கிளப்னு ஒரு இடத்தை விட மாட்டான்… அவன் அம்மா சிவகாமி கஞ்சப் பிசினாரின்னா இவன் அப்படியே ஆப்போசிட்… வரவுக்கு மீறி செலவு செய்துட்டு ஊரெல்லாம் கடன் வாங்கி வச்சிருக்கான்… பார்க்க தான் ஹீரோ போல இருப்பான், கைல என்னவோ ஜீரோ தான்…” என்பது போன்ற விமர்சனங்களை மட்டுமே கேட்க முடிந்தது. ஒருத்தரும் நல்லது சொல்லவில்லை.

பர்வதத்திற்கு கிடைத்த பதில்களும் அப்படியே…

அந்தக் குடும்பம் காசு, பணத்திற்கு அலைபவர்கள் என்பது தெரிந்தாலும் வெங்கடேஷின் அண்ணியை அவனது பெற்றோர் வரதட்சணை கேட்டு உபத்திரவம் செய்து அவள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டதாய் சிலர் சொல்லவும் அரண்டு போனார். அப்பெண் ஏதோ வயிற்று வலி தாங்காமல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக தான் நினைத்து இருந்தனர். வேண்டாத குடும்பத்தைப் பற்றி நமக்கென்ன என்று இருந்துவிட்டதால் இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

“ஐயோ, ஒவ்வொருத்தரும் அவங்க குடும்பத்தைப் பத்தி சொல்லறதைக் கேட்கும் போதே மனசு பக்குங்குது… எப்படிங்க, இவளுக்கு அந்தப் பையனைப் பிடிச்சுது… இவளைக் கல்யாணம் பண்ணி அதைக் கொண்டா, இதைக் கொண்டான்னு டார்ச்சர் பண்ணா என்ன பண்ணுறது… இந்தப் புள்ள இப்படி விளங்காத குடும்பத்துக்கு வாக்கப்பட்டுப் போறேன்னு அடம் பிடிக்கிறாளே…”

“அவ கிடக்குறா கழுத… சின்னப்புள்ள ஏதோ விவரம் தெரியாம சொல்லுறான்னு நாம அவ ஆட்டத்துக்கு துள்ள முடியுமா… அவ கல்யாணமே பண்ணலேன்னாலும் பரவால்ல, அந்தப் பையனை கட்டி வைக்க மாட்டோம்னு கண்டிஷனா சொல்லிடு…”

பர்வதம் பூங்கொடியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் பேசுவதை அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரம்யா வேகமாய் வெளியே வந்தாள்.

“என்ன, ஆளாளுக்கு வெங்கி குடும்பத்தை கேவலப்படுத்தி குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க, இப்படில்லாம் சொன்னா அவன் வேண்டாம்னு நான் மனசை மாத்திக்குவேன்னு நினைச்சீங்களா… இதெல்லாம் நீங்க கட்டிவிட்ட கதைதான்னு எனக்குத் தெரியும்… உங்களுக்கு அவனைப் பிடிக்கலன்னு இவ்வளவு அசிங்கமாப் பேசறிங்க… வெங்கி ரொம்ப நல்லவன், என் மேல உயிரையே வச்சிருக்கான்… போட்ட டிரஸ்ஸோட போனாலும் என்னை அவங்க வீட்டு மருமகளா ஏத்துக்க சிவகாமி அத்தை தயாரா இருக்காங்க… நானா கல்யாணம் பண்ணிட்டு உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம்னு பார்க்கறேன்… சீக்கிரம் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க…” பெற்றோர் முன் நின்று சற்றும் கூச்சம் இல்லாமல் சொல்லும் மகளை வேதனையுடன் பார்த்தனர்.

“ரம்யா, நாங்க உன் நல்லதுக்கு தானே சொல்லறோம்… நீ நினைக்கிற போல அவங்க நல்லவங்க இல்ல மா… அந்தப் பையனுக்கு நிறைய கெட்ட பழக்கம் இருக்கு… சரியான வேலையும் இல்ல, அவங்க மூத்த மருமகளை வரதட்சணை கொடுமை பண்ணி அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிட்டு செத்திருச்சு… நாளைக்கு உனக்கும் அந்த நிலைமை வந்திடக் கூடாதுன்னு தான் நாங்க இவ்ளோ சொல்லறோம்… தயவு செய்து புரிஞ்சுக்க மா, நமக்கு இந்த சம்மந்தம் வேண்டாம்…” என்றார் சரவணன் கெஞ்சலாக.

“அதெல்லாம் அவங்களுக்கு ஆகாதவங்க ஆயிரம் சொல்லுவாங்கன்னு சிவகாமி அத்தை சொல்லிருக்காங்க, இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்… எனக்கு என்ன ஆனாலும் நான் சமாளிச்சுக்குவேன்…”

“ரம்யா… உன்னைப் பெத்தவங்க இவ்ளோ சொல்லறாங்க, நீ கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காமப் பேசினா எப்படி..? உன் விஷயத்துல அவங்களை விட வேற யாரு நல்லது யோசிக்க முடியும்… எந்தப் பெத்தவங்களும் தெரிஞ்சே பெத்த பொண்ணை பாழுங்கிணத்துல தள்ளுவாங்களா… உன் நல்லதுக்கு தானே சொல்லறாங்க, இப்படி பிடிவாதம் பிடிச்சா அந்தக் கேடு கெட்டவனை கட்டி வச்சிருவாங்களா…?” ரம்யாவின் அகம்பாவப் பேச்சும், பெற்றோரை மதிக்காத திமிரும் பர்வதம்மாவை பொங்க வைக்க அவளை அடக்குவதற்காய் பேசி விட்டார்.

“ஏய் கிழவி…” கோபமாய் அவரிடம் வந்தவள் கண்களை உருட்டி கை விரலை நீட்டி எச்சரிப்பது போல் பேசினாள்.

“உங்களுக்கு அவ்ளோ தான் மரியாத… நான் யாரைக் கட்டிக்கணும்னு முடிவு பண்ண என் பெத்தவங்களுக்கே உரிமை இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன், நடுவுல நீங்க யாரு நாட்டாமை பண்ண…” என்றதும் அதிர்ந்து நின்றார்.

“ரம்யா…” கோபமாய் மகளை நெருங்கிய பூங்கொடியின் கை அவளது கன்னத்தில் இறங்க, அதிர்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொண்டவள் ஆத்திரத்துடன் அனைவரையும் முறைத்துவிட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.

இதுவரை மகளை விளையாட்டுக்குக் கூட அடித்திராத பூங்கொடி அப்படியே மடிந்து அமர்ந்து அழத் தொடங்க, வேதனையுடன் பார்த்து நின்றார் சரவணன்.

“பர்வதம்மா மன்னிச்சிருங்க, அவ பேசினதை நீங்க மனசுல வச்சுக்காதீங்க…” என்றார் பெரியவரிடம் தயவாக.

“என்னை விடுங்க தம்பி, அவ நான் பார்க்க வளர்ந்த புள்ள, அவ அம்மாவயே என்னன்னு கேக்கற உரிமை எனக்கிருக்கு, அப்புறம் என் பேத்தியைக் கேக்க மாட்டேனா… திமிர் பிடிச்ச கழுதை புரியாமப் பேசிட்டுப் போகுது… இவ இப்படி தீர்மானமா இருந்தா என்ன பண்ணறது…?”

“எனக்கும் அதான் பயமா இருக்கு மா…”

“என்னால முடியலங்க, என் அத்தையவே இவ இப்படிப் பேசிட்டாளே… இப்ப என்னதான் பண்ணறது…?”

சற்று யோசித்த சரவணன், “நான் வேணும்னா அந்த பையன் கிட்ட பேசிப் பார்க்கட்டுமா..?” என்றார் குரலைத் தழைத்து.

“ம்ம்… நல்ல ஐடியா தம்பி, கொஞ்சம் பணம் வேணும்னாலும் தர்றோம்னு சொல்லிப் பாருங்க, ஒருவேளை, பணத்துக்காக அவன் இவளை விட்டு விலகிடலாம்…”

“அத்தை, இது அவளுக்குத் தெரிஞ்சா சாமி ஆடுவாளே…”

“அதெல்லாம் யோசிச்சிட்டு இருந்தா வேலைக்காகாது… நமக்கு நம்ம பொண்ணு வாழ்க்கை முக்கியம்… அவனே விலகிட்டா இவ அடங்கிருவா, அப்புறம் நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும்…” என்றார் பர்வதம்.

“நாளைக்கே அந்தப் பையனைப் பார்த்து பேசறேன்…” என்ற சரவணன் அடுத்த நாளே வெங்கடேஷை அவனது அலுவலகம் சென்று பார்க்கவும் செய்தார். அவன் ஒரு டிராவல் ஏஜன்சியில் டூரிஸ்ட் ஆர்கனைசராய் இருந்தான்.

சரவணன் சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் கேட்டிருந்த வெங்கடேஷ் புன்னகையுடன் நிமிர்ந்தான்.

“அப்ப, எங்க காதலுக்கு விலை பேச வந்திருக்கேன்னு சொல்லுங்க…”

“வெங்கடேஷ்… எப்படி இருந்தாலும் இந்தக் கல்யாணத்துக்கு நாங்க நிச்சயம் சம்மதிக்கப் போறதில்லை, நீங்களா கல்யாணம் கட்டிகிட்டா எங்ககிட்ட இருந்து அஞ்சு பைசா கிடைக்காது… அதுக்கு ரெண்டு பேருக்கும் பாதகம் இல்லாம நாம ஒரு நல்ல முடிவுக்கு வரலாமே…”

“ம்ம்…” என்றவன் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே சில நிமிடம் யோசித்தான்.

“நீங்க சொல்லறது எனக்கும் புரியுது… ஆனா எங்களோடது கொஞ்சம் காஸ்ட்லி லவ் ஆச்சே… உங்களுக்கு இருக்கிறது ரெண்டே ரெண்டு பொண்ணுங்க… ரெண்டு, மூணு வீடு, நிலம், ஆஸ்தின்னு வசதியா இருக்கிங்க… இதெல்லாம் எப்படியும் உங்க காலத்துக்குப் பிறகு ரெண்டு பொண்ணுகளுக்கு தான் வரப் போகுது… அப்படி இருக்கும்போது நான் எதுக்கு உங்க ஆபருக்கு சம்மதிக்கணும்…” என்றான் வில்லங்க சிரிப்போடு. அதிலேயே அவனது காதல் எப்படிப்பட்டது என்று புரிந்து போக வெறுப்புடன் அவனை நோக்கினார் சரவணன்.

“எவ்ளோ எதிர்பார்க்கிற…?”

“எவ்ளோன்னு கேட்டா உங்க சொத்துல சரி பாதின்னு சொல்லலாம்…” என்றவனின் பார்வை உள்ளே நுழைந்த நபரைக் கண்டதும் மாறியது.

“அங்கிள், என்னைப் பொறுத்தவரை என் ரம்யாவோட காதலை விட உங்க சொத்து ஒண்ணும் எனக்குப் பெருசில்லை, அநியாயமா எங்க காதலை விலை பேச வந்திருக்கீங்களே… நீங்க ஒரு பெரிய மனுஷன், இப்படிப் பண்ணலாமா… உங்க சம்மதம் இல்லாம நிச்சயம் நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்… ஒருவேளை எங்க கல்யாணத்துக்கு நீங்க சம்மதிக்கலேன்னா என் உயிரைப் போக்கிக்குவேனே தவிர திருட்டுத் தனமா ரம்யாவைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… நீங்க பயப்படாமப் போங்க…” சட்டென்று மாற்றிப் பேசியவனை எதுவும் புரியாமல் பார்த்தார் சரவணன்.

“ஏய், எதுக்கு இப்படிப் பேசறே… உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு, நான் தர்றேன்…”

“யாருக்கு வேணும் அங்கிள், பணம்… அதெல்லாம் உங்க பொண்ணு கால் தூசிக்கு ஈடாகுமா… இதுக்கு மேல உங்ககிட்டப் பேச எதுவும் இல்லை… நீங்க கிளம்புங்க…” சொன்னவன் எழுந்து மேனேஜர் அறைக்கு சென்றுவிட புரியாமலே எழுந்து வெளியே வந்தார் சரவணன். அவர்கள் பேசுவதை கவனித்தபடி வேலை செய்து கொண்டிருந்த பெண்ணொருத்தி அலைபேசியில் ரம்யாவுக்கு அழைத்தாள்.

சரவணன் வீட்டுக்கு வரும்போது அங்கே ருத்ரதாண்டவம் ஆடி முடித்திருந்தாள் ரம்யா. கல்லூரியில் இருந்து திரும்பிய காவ்யா காலையிலிருந்து நடந்தது தெரியாமல் முழித்துக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தையைக் கண்டதும் சோபாவிலிருந்து எழுந்தவள் அவர் உள்ளே நுழையும் முன்னரே தொடங்கினாள்.

“அப்பா, இப்படி பண்ண உங்களுக்கு வெக்கமா இல்ல… ஏன் இவ்ளோ கீழ்த்தரமா நடந்துகிட்டிங்க…?”

“ரம்யா…” பூங்கொடி அதட்ட, அன்னையை சட்டை செய்யாமல் தொடர்ந்தாள்.

“எங்க காதலுக்கு விலை பேசப் போனீங்களா… என் வெங்கிகிட்ட நல்லா பன்னு வாங்கிருப்பீங்களே… அவனை என்ன காசுக்கு விலை போறவன்னு நினைச்சீங்களா… நாங்க உண்மையா ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறோம்… இந்த கோல்மால் வேலை பண்ணி எல்லாம் எங்களைப் பிரிக்க முடியாதுன்னு இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே…”

“ரம்யா, உங்கிட்ட யாரு இதெல்லாம் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியலை, ஆனா அந்த வெங்கடேஷ் உண்மையா உன்னை விரும்பலங்கறது மட்டும் நிச்சயம்… அவன் பணத்துக்காக தான் உன்னை லவ் பண்ணிருக்கான்…”

“ஆமா, நான் ரிலயன்ஸ் அம்பானி வீட்டுப் பொண்ணு பாருங்க, எங்கிட்ட இருக்கிற பணத்துக்காக லவ் பண்ண… நாம சாதாரண மிடில் கிளாஸ், நீங்க சொல்லற போல பணத்துக்கு வேண்டின்னா அவன் அழகுக்கு என்னை விட பணக்கார வீட்டுப் பொண்ணை லவ் பண்ணி இருக்கலாமே… யார் உங்களுக்கு இந்த மட்டமான ஐடியா எல்லாம் கொடுக்கிறது… யோசிக்கவே அசிங்கமா இல்லியாப்பா…” என்றவளின் பார்வை பர்வதத்தை தொட்டு மீண்டது.

“சிலருக்கு வயசாகிட்டா மூளை தப்புத் தப்பா யோசிக்கும் போலருக்கு… அதான் இப்படில்லாம் கேவலமா ஐடியா கொடுக்கிறாங்க… இனியும் எங்க காதலைப் பிரிக்க ஏதாச்சும் தகிடுதத்தம் பண்ணினீங்க, அப்புறம் சும்மாருக்க மாட்டேன்… சீக்கிரமே அவங்க வீட்டுல பேசி கல்யாணத்தை முடிவு பண்ணி, வேலையைத் தொடங்குங்க… சாகறதுக்கு முன்னாடி இந்தக் கிழவி கொள்ளுப் பேரங்களைப் பார்த்திட்டு சாகட்டும்…” வாய்க்குள் ஒளித்து வைத்திருந்த நாக்கை சாட்டையாய் சுழற்றினாள் ரம்யா.

எல்லாரும் பேச்சற்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க டீவியை ஆன் செய்து அமர்ந்து கொண்டாள்.

பூங்கொடி கண்ணீருடன் அத்தையைப் பார்க்க அவளது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அடுக்களைக்கு சென்று விட்டார் பர்வதம். சோர்வுடன் அறைக்குள் நுழைந்த கணவனைத் தொடர்ந்து பூங்கொடியும் பின்னே செல்ல பாவமாய் நின்ற காவ்யா அக்காவின் அருகே அமர்ந்தாள்.

“அக்கா…” மென்மையாய் ஒலித்த காவ்யாவின் குரலைக் கேட்டு வன்மையாய் திரும்பி முறைத்தாள் ரம்யா.

“என்னடி…?”

“அப்பாவும், அம்மாவும் பாவம் க்கா… ஏன் இப்படிலாம் அவங்களைத் திட்டற, பாட்டியும் பாவம்.. நமக்காம எவ்ளோ செய்திருக்காங்க, அவங்களையும் வருத்தப்படுத்தி பேசற…”

“ஓ… நீதான் அவங்களுக்கு வாதாட வந்த வக்கீலா… உனக்கும் தான் சொல்லறேன்… அநாவசியமா என் வழில குறுக்க வராத… நான் ஒரு விஷயத்துல முடிவு பண்ணினா, அப்புறம் மாத்திக்க மாட்டேன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்… அப்புறம் எதுக்கு இவ்ளோ முயற்சி பண்ணனும், எப்படி இருந்தாலும் வாழப் போறவ நாந்தானே… என் இஷ்டம் போல அவனையே கட்டி வச்சு வாழ்த்திட்டுப் போக வேண்டியது தானே, பெருசா சொல்ல வந்துட்டா…”

அவளுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் காவ்யா அமைதியாக, “பேசிப் பேசி ரொம்ப டயர்டா இருக்கு… சூடா எனக்கு காபி போட்டு வாங்கிட்டு வா…” என்றாள் தங்கையிடம். அவளும் பேசாமல் எழுந்து சென்றாள்.

இதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி மனதை மாற்றுவது என்று புரியாமல் பெற்றவர்களும் அமைதியாக, பர்வதமும் ஊருக்கு கிளம்பினார்.

விடை பெறுகையில் ரம்யாவிடம், “இப்படிப் பெத்தவங்க மனசை ரணப்படுத்திட்டு, தான் நினைச்சதை சாதிச்ச யாரும் சந்தோஷமா இருந்ததே இல்லை… என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு… ஆனா, அந்தப் பையன் ஏதோ பிளான் காரணமா தான் உன்னை லவ் பண்ணி இருக்கான்… உன்னை எங்களுக்கு எதிரா திருப்பின சாபம் அவனை சும்மா விடாது… உன் பெத்தவங்க வருத்தமே சாபமா மாறி அவனை நிச்சயம் தண்டிக்கும்…” என அழுத்தமாய் கூறினார்.

அதை எல்லாம் ரம்யா கண்டு கொள்ளவில்லை…

“ஆமா, இவங்க பெரிய துர்வாசர் சம்சாரம், சாபம் விடறாங்களாம் சாபம்…” என முனங்கிக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

பூங்கொடி தான் அவர் செல்வதற்கு வருத்தப்பட்டு நின்றாள்.

“வருத்தப்படாத மா, கொஞ்ச நாள் போகட்டும்… கடவுள் நமக்கு ஏதாவது வழி காட்டாமலா போயிருவார்… விட்டுப் பிடிப்போம்…” என ஆறுதல் சொல்லிக் கிளம்பினார்.

சாபமோ, வருத்தமோ ஆனாலும் அவரது சொல் பலித்தது.

அடுத்த சில நாட்களில் அந்த வெங்கடேஷ் இந்த உலகை விட்டுப் போயிருந்தான்.

விட்டுக் கொடுக்கத்

தெரிந்தவர்களே

வாழ்க்கையை வாழ

கற்றுக் கொண்டவர்கள்…

வீண் பிடிவாதம்

வீழ்வதற்கே…

பட்டு தான்

தெரிந்து கொள்வேன்

என்பவரை விட்டுவிட

துணிவதில்லை பாசம்…

Advertisement