Advertisement

அத்தியாயம் – 4

வானத்தில் நிலவு சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மகளின் பிடிவாதம் கவலையாய் முகத்தில் தெரிய, யோசனையுடன் ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்தார் சரவணன்.

“என்ன பூவு யோசிக்கற, உன் அத்தைக்கு போன் போட்டு வரவேண்டாம்னு சொல்லிட்டியா…?”

கணவனின் கேள்வியில் கலக்கமாய் நிமிர்ந்தார் பூங்கொடி.

“எப்படிங்க சொல்லுவேன்… சின்ன வயசுல அம்மாவை இழந்து நின்ன எங்களுக்கு அப்பாவோட அக்கா பர்வதம் அத்தை தான் ஆதரவா இருந்தாங்க, நாங்க கொஞ்சம் பெருசாகற வரைக்கும் எங்களை அம்மாவா இருந்து, எல்லாம் பார்த்து கிட்டாங்க… நல்லது, கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்த்துனாங்க… செந்தில் பெரியவனாகி வேலை கிடைச்சு வெளியூர் போற வரைக்கும் அப்பாக்கும் எங்களுக்கும் உதவியா பக்கத்துல இருந்து பார்த்துகிட்டாங்க… அப்பா இறந்துட்டாலும் அத்தை செய்த உதவியை மறக்க முடியாதுங்க… அப்படிப்பட்டவங்க நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லும்போது என்னால எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்…” கண்ணில் நிறைந்த கண்ணீருடன் கேட்டார்.

“என்ன பண்ணறது மா, நாம பண்ணின தப்பு… பொண்ணை கண்டிச்சு வளர்க்க வேண்டிய வயசுல அதிகமா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டோம்… இப்ப அதுவே நமக்கு வினையா வந்து நிக்குது… பர்வதம்மாக்கு நம்ம நிலமை தெரியும்… அவங்க கிட்ட சொன்னாப் புரிஞ்சுப்பாங்க, நீ கவலைப்படாம விஷயத்தை சொல்லிடு… அந்தப் பையன் விஷயத்தில் அவங்க வேண்டாம்னு தீர்மானமா சொன்னதை இன்னும் ரம்யா மனசுல வச்சிட்டு இருக்கா, அவங்க வந்தாலும் முகத்துல அடிச்ச போல ஏதாச்சும் பேசிடுவா… வந்து அவமானப் படுறதை விட அவங்க இப்ப கொஞ்சம் விலகி இருக்கிறதே நல்லது தான்…”

கணவன் சொல்வது சரியென்று தோன்ற அமைதியாய் தலையாட்டினாள் பூங்கொடி.

“சரிங்க, நான் அத்தைகிட்ட பேசறேன்…” சொல்லிவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு நகர பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்தார் சரவணன்.

மனது ரம்யாவைப் பற்றி அசை போடத் தொடங்கியது.

கல்யாணமாகி நான்கு வருடம் கழித்துப் பிறந்த அழகு மகளைக் கண்டு தலை கால் புரியாமல் சந்தோஷித்துப் போயினர் பூங்கொடியும், சரவணனும். அவளுக்கு ஒரு வயது முடிந்தபோது அடிக்கடி காது வலி வந்து அழத் தொடங்க துடித்துப் போயினர்… தரையில் வைக்காமல் ரம்யாவைக் கண்களுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டனர். அந்த வயதில் எல்லா விஷயத்துக்கும் குழந்தை அடம் பிடிக்கத் தொடங்க அவளது உடல்நிலையை நினைத்து அழ விடாமல், மறுக்காமல் செய்து கொடுக்கத் தொடங்கினர்.

ஒண்ணரை வயதில் மூளைக் காய்ச்சலில் பிட்ஸ் வந்து குழந்தை பிழைப்பதே அரிது, பிழைத்தாலும் உடல் உறுப்புகளில் ஏதும் ஊனம் வரக் கூடும் என டாக்டர் சொல்லவும் தங்களுக்குத் தெரிந்த தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டுதல் வைத்து மகளைக் காப்பாற்றப் போராடினர். ஏதோ புண்ணியத்தில் ரம்யாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தெய்வம் காப்பாற்ற, செத்துப் பிழைத்த செல்ல மகளை ஒரு வார்த்தையால் கூட நோகாமல் செல்லமாய் பார்த்துக் கொண்டனர். அதன் விளைவு அவள் சொல்லுவதே வேதம், அவள் கட்டளையே சாசனம் என்னும் அளவுக்கு அந்த வீட்டில் எல்லாரையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கினாள்.

ரம்யாவின் சுபாவம் பெற்றோர் கொடுத்த அதீத செல்லத்தில் அடாவடியாய் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் திமிராய், பிடிவாதமாய் அவளோடு வளரத் தொடங்கியது.

தான் உபயோகித்த பொருளைத் தன்னைத் தவிர வேறு யாரும் உபயோகிக்கக் கூடாது, அது தங்கையே ஆனாலும்… தனக்குக் கிடைக்காத சந்தோஷம் மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது… தான் பத்தாவது படிக்கும்போது பெற்றோர் லெக்கிங்ஸ் போட சம்மதிக்காததால் தங்கையும் போடக் கூடாது… சரி, நீயும் இப்பப் போடு அவளும் போடட்டும்…” என்றால் அதற்கும் சம்மதமில்லை.

“வேணாம், நான் போட மாட்டேன், அவளும் போடக் கூடாது…” என்பாள்.

அவளுக்கு ஒரு பங்க்ஷன்க்கு இந்தக் கலரில் இந்த டிசைனில் உடை வேண்டும் என்றால் பத்து நாள் தேடி அலைந்தாவது பிடித்த போல வாங்கிக் கொள்வாள். ஒரு வேளை, வாங்கி வந்தது பிடிக்காமலோ, பற்றாமலோ போனாலும் யாருக்கும் கொடுக்க மாட்டாள். அவளது கப்போர்டில் அது வெறுமனே உறங்கிக் கொண்டிருக்கும்.

சின்ன வயதில் பெற்றோரும் அதைப் பெருமையாய் பேசுவர்.

“ரம்யா அப்படிதான், அவளுக்கு வேணும்னா வேணும், வேண்டாம்னா வேண்டாம் தான்…” என அவள் சொல்லுவதே சரி என்பது போல் மறுத்துப் பேசாமல் நடந்து கொள்வார்கள்.

ரம்யாவுக்கு தங்கை காவ்யாவை பெற்றோர் நேசிப்பதே பிடிக்கவில்லை. தனக்குக் கிடைக்கும் நேசத்தைப் பங்கு போட வந்த எதிரி போல தான் அவளைப் பார்ப்பாள். அதனால் சின்னவளை பெரியவள் முன்னால் கொஞ்சக் கூட முடியாமல் பெற்றோர் அஞ்சியே விலகி நின்றனர்.

காவ்யாவிடம் கூட “அக்கா பாவம்,  உடம்புக்கு முடியாதவ, அவ என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசக் கூடாது, அனுசரிச்சுப் போகணும்…” என்று கூறி தான் வளர்த்தினர்.

சின்ன வயதில் பெற்றோரிடம் கிடைக்க வேண்டிய கண்டிப்பு கிடைக்காததன் விளைவு ரம்யாவை எல்லாம் அவள் விருப்பம் என்பதை மட்டுமே யோசிக்க வைத்தது. அப்படி உள்ளவள் ஒருவனைக் காதலித்தால்… அந்தக் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கா விட்டால் எப்படி ஏற்றுக் கொள்வாள். அந்தப் பையனின் குடும்பம் இவர்களுக்கு தூரத்து சொந்தம் தான், முன்னமே அவர்களோடு ஒரு குடும்பப் பிரச்சனையால் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தனர்.

கசப்பான அந்த நாட்களை சரவணன் மனது அசை போடத் தொடங்கியது.

ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர் வீட்டுக் கல்யாணம் ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். அங்கே ரம்யா காதலிக்கும் பையனின் குடும்பமும் வந்திருந்தது.

ரம்யாவின் கண்கள் ரகசியமாய் அந்தப் பையனுக்கு செய்தி அனுப்புவதையும், யாருக்கும் தெரியாமல் அவர்கள் ஒளிந்து நின்று பேசுவதையும் கவனித்து விட்ட பர்வதம் அதைப் பற்றி அறிந்து கொள்வதற்காய் கல்யாணம் முடிந்து இவர்களுடன் வீட்டுக்கு வந்திருந்தார்.

இரவு உணவு முடிந்து அனைவரும் டீவி முன்பு அமர்ந்திருக்க மெல்ல பேச்சைத் தொடங்கினார் பர்வதம்.

“ஏன் பூங்கொடி, நம்ம ரம்யாவுக்கும் கல்யாண வயசாச்சு, படிச்சும் முடிச்சுட்டா… கல்யாணத்துக்குப் பார்க்க வேண்டாமா…?”

“ஆமா அத்தை, நாங்களே இதைப் பத்தி உங்ககிட்ட பேச நினைச்சோம்… நம்ம ஜோசியர் கிட்ட இவ ஜாதகத்தைக் காட்டி பேசிட்டு வந்திடலாம்…” என்றாள் புன்னகையுடன்.

“ஆமா பூவு… மல்லிகா கூட எப்ப என் மருமகளை என் வீட்டுக்கு அனுப்பப் போறீங்கன்னு ஜாடை மாடையா கேக்கத் தொடங்கிட்டா…” என்றார் சரவணன்.

“சொந்தத்துல லட்டு மாதிரி அருமையா மாப்பிள்ளையை வச்சிட்டு இனியும் எதுக்கு நேரம் காலம் பார்த்திட்டு இருக்கீங்க, சட்டுன்னு கல்யாணத்துக்குப் பார்த்துப் பேசி முடிச்சிட வேண்டியது தான…” சொல்லிக் கொண்டே அடிக்கண்ணால் ரம்யாவின் முகத்தை ஆராய்ந்தார் பர்வதம். அவள் முகம் கோபத்தில் மெல்ல அக்னியாய் சிவந்து கொண்டிருந்தது.

“ஆமா அத்தை, எங்க தேடினாலும் அர்ஜூன் போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டார், ரொம்ப தங்கமான பிள்ளை… மல்லிகா வீட்டுக்கு மருமகளாப் போக என் பொண்ணு புண்ணியம் பண்ணி இருக்கணும்… இல்ல, ரம்மிக் கண்ணு…?” என்ற அன்னையை எரித்து விடுவது போல் நோக்கினாள்.

“இல்ல, எனக்கு நெருங்கின சொந்தத்துல வேண்டாம்…” சட்டென்று அவள் சொல்லவும் அனைவரும் நோக்கினர்.

“என்னடா கண்ணு, இப்படி சொல்லிட்ட… உன் அத்தை மல்லிகாக்கு உங்க ரெண்டு பேரையும் அவ வீட்டு மருமகளாக்கிக்கணும்னு ரொம்ப ஆசை…” என்றார் தந்தை.

“அவங்க ஆசைப்பட்டதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்றாள் மகள் திட்டமாக.

ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாய் கழிய, பர்வதம் கேட்டார்.

“என்ன ரம்யா, சொந்தத்துல வேண்டாம்னா வெளியில வரன் பார்க்கலாம்னு சொல்ல வர்றியா…”

“எனக்காக நீங்க எங்கயும் மாப்பிள்ள பார்த்து கஷ்டப்பட வேண்டாம்… நானே பார்த்துட்டேன்னு சொல்ல வந்தேன்…”

அவள் பதிலைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்து நிற்க நடப்பதை மௌனமாய் கவனித்துக் கொண்டிருந்த காவ்யாவுக்கும் அதிர்ச்சி. சில நாளாகவே ரம்யாவின் நடவடிக்கைகளில் அந்த சந்தேகம் அவளுக்கு வந்திருந்தது.

பர்வதமே பேசத் தொடங்கினார்.

“யாரு, அந்த மணிமாறன் பையன் வெங்கடேஷா…?” பர்வதம் கேட்கவும் ரம்யா உட்பட அனைவரும் திகைப்புடன் நோக்கினர்.

“வெங்கடேஷா, என்ன சொல்லறீங்க அத்தை..? அவங்க குடும்பத்துக்கும் நமக்கும் தான் ஆகாதே…”

“அது உன் பொண்ணுக்குத் தெரியலியே…” என்றவரை அலட்சியமாய் நோக்கிய ரம்யா,

“ஆமா, அந்த வெங்கடேஷே தான்… அவனைத்தான் நான் லவ் பண்ணறேன்… அவனையே எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க..!” என்றாள் கூலாக.

“ரம்யா, என்ன பேசற… அந்தக் குடும்பத்துக்கும் நமக்கும் சொத்து விஷயத்துல பிரச்சனையாகி பேசிக்கிறதில்லயே..?”

அதட்டலாய் கேட்ட அன்னையை அசால்ட்டாய் நோக்கி, “எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டியதில்லை… அவனை எனக்குப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன், பண்ணி வச்சிடுங்க…”

அதுவரை அமைதியாய் நின்ற சரவணன் மகளிடம் வந்தார்.

“வேண்டாம் மா ரம்யா, அது சரியா வராது… அவங்க பணம், காசுதான் மனுஷங்களை விடப் பெருசுன்னு நினைக்கிற குடும்பம், அன்பெல்லாம் அவங்களுக்கு ரெண்டாம் பட்சம் தான்… ஒருவேளை, உன்னை அந்தக் குடும்பத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பினாலும் நீ சந்தோஷமா இருப்பேன்னு சொல்ல முடியாது… இதோட இந்தப் பேச்சை விட்டிரு, உன் ஆசையை மனசுல இருந்து தூக்கிப் போட்டிரு, அதான், நமக்கு நல்லது…” அமைதியாய் மகளிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

பூங்கொடி இப்போதும் அதிர்ச்சியுடன் நின்றிருக்க ரம்யா கோபத்துடன் அன்னையிடம் திரும்பினாள்.

“ம்மா… எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா வெங்கடேஷைப் பண்ணி வைங்க… உங்களோட பணம், காசுப் பிரச்சனைக்கு என் காதலை பலிகடா ஆக்காதீங்க, நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்… சொல்லிட்டேன்…” அழுத்தமாய் சொன்னவள் அவளது அறைக்கு செல்ல பூங்கொடி கண்ணீருடன் அத்தையை ஏறிட்டாள்.

“அத்தை, இவ ஏன் நாம சொல்லறதைப் புரிஞ்சுக்காம இப்படி சொல்லிட்டுப் போறா… அந்தக் குடும்பத்துக்கு இவளை அனுப்ப முடியுமா..? நம்ம மேல உள்ள குடும்பத்துல இவளைத் துன்புறுத்த மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்… இந்தப் பொண்ணு புரியாமப் பேசறாளே..! கடவுளே..! நான் என்ன பண்ணுவேன்…?” புலம்பியபடி கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“பூங்கொடி, கல்யாண மண்டபத்துல இவங்க ரெண்டு பேரும் சைகை காட்டிக்கிறதும், தனியா நின்னு ரகசியம் பேசறதும் நான் கவனிச்சேன்… உறுதி பண்ணிக்க தான் ரம்யா கல்யாணப் பேச்சை தொடங்கினேன்… கவலைப்படாத, பார்த்துக்கலாம்…” ஆறுதலாய் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“எனக்கு ரொம்ப பயமாருக்கு அத்த, இவளோட பிடிவாதம் நமக்குத் தெரியுமே… தனக்குப் பிடிச்சதை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாளே… வெங்கடேஷ் அம்மா சிவகாமி சரியான சண்டக்காரி மட்டுமில்ல, அறுத்த கைக்கு சுண்ணாம்பு கூடத் தர மாட்டாளே… அவங்க நம்மளைப் பழி வாங்க வேணும்னே இப்படிப் பண்ணறாங்களோ என்னவோ, ஐயோ..! யோசிக்கவே பயமா இருக்கு…”

“நீ ரொம்ப யோசிக்காத பூங்கொடி… காலைல நம்ம புள்ளைக்கு நிதானமா எடுத்து சொல்லிப் புரிய வைப்போம்… போயி தூங்கு…” என அனுப்பி வைத்தார்.

“எனக்கு அக்காவை நினைச்சு கவலையாருக்கு பாட்டி…” என்ற காவ்யாவை புன்னகையுடன் அணைத்துக் கொண்டவர், “ஒண்ணும் இல்லடா, இந்த வயசுல சில பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு கிறுக்குத்தனம் தோணறது சாதாரணம் தான்.. நாங்க பார்த்துக்கறோம், நீ கவலைப் படாம தூங்கு கண்ணு…”

“ம்ம்… நீங்களும் என்னோட படுத்துக்கறீங்களா பாட்டி…” அவளது அழைப்பிற்கு புன்னகைத்தவர் அவளுடனே படுக்க சென்றார்.

காலை அழகாய் விடிந்தாலும் விடியாத முகத்துடன், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே காலை உணவுக்கு எழுந்தருளினாள் ரம்யா.

மகள் கோபத்தில் சாப்பிட வர மாட்டாளோ என நினைத்திருந்த பூங்கொடி, அவள் தானாகவே மேசைக்கு வந்து அமரவும் சற்று நிம்மதியானாள்.

“ஒருவேளை, நாம சொன்னதைப் புரிந்து மனதை மாற்றிக் கொண்டாளோ..?” என சந்தோஷத்துடன் மகளுக்கு தட்டில் இட்லியை வைத்தார்.

அமைதியாய் பார்த்திருந்தவள் நிதானமாய் கேட்டாள்.

“என்ன முடிவு பண்ணீங்க..?”

அவள் கேள்வியில் சற்று கோபம் வரவே, “நாங்க என்ன முடிவு பண்ணறது, நீதான் உன் முடிவை மாத்திக்கணும்…” என்றார்.

“முடியாது, நான் முடிவு பண்ணா பண்ணது தான்… ஒரு பங்க்ஷன்க்கு கூட இந்தக் கலர்ல புது டிரஸ் வேணும்னா அது கிடைக்கிற வரைக்கும் தேடி வாங்குவேன்… இல்லன்னா, அந்த பங்க்ஷன்க்கு புது டிரஸ்ஸே போட மாட்டேன்… அப்படிப்பட்ட நான் வெங்கடேஷை விரும்பறன்னு சொல்லறேன்… அவன்தான் என் வாழ்க்கைத் துணையா வரணும்னு நினைக்கறேன்… என்னைப் போயி காம்ப்ரமைஸ் பண்ண சொல்லறீங்க, முடியாது… எனக்கு அவன்தான் வேணும்…” அவளது தீர்மானமான பதிலில் விதிர்விதிர்த்துப் போனார் பூங்கொடி.

“ரம்யா, ப்ளீஸ்டி… அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்லுவேன்… இப்படிப் பிடிவாதம் பிடிக்காத, நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்லை, அந்தப் பையனும் அவன் குடும்பமும் சரியில்லை… அவனைக் கல்யாணம் பண்ணா உன் லைப் நல்லாருக்காது, புரிஞ்சுக்கோடி…. உன் முடிவை மாத்திக்க… உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா, நம்ம அர்ஜூன் வேண்டாம்னாலும் ஓகே… வெளிய கூடப் பார்க்கலாம்… தயவுசெய்து அந்தப் பையனை மறந்திடு, என் செல்லம்ல…” கெஞ்சலாய் மகளிடம் கேட்டுப் பார்த்தார்.

“முடியாது மா, நீங்களா அவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சா சந்தோஷப்படுவேன்… அதுக்காக உங்க சம்மதம் கிடைக்கலேன்னாலும் அவனோட ஓடிப் போகவெல்லாம் மாட்டேன்… என் கல்யாணம் ஊரறிய எல்லார் முன்னுலயும் நடக்கணும்னு தான் என் ஆசையும்… நீங்க உங்க முடிவை மாத்திக்கிற வரைக்கும் காத்திருப்பேன்… கெஞ்சிக் கொஞ்சி என் முடிவை மாத்திடலாம்னு மட்டும் நினைக்காதீங்க…” சொன்னவள் சாப்பிடாமலே எழுந்து கொள்ள அவர்கள் பேசுவதை அடுக்களையிலிருந்து பர்வதமும், அறையில் புறப்பட்டுக் கொண்டிருந்த சரவணனும் அதிர்ச்சியுடன் கேட்டு நின்றனர்.

கண்ணீருடன் கலங்கி நின்ற பூங்கொடி தோளில் அத்தையின் கை படவே கலக்கத்துடன் திரும்பினாள்.

“கேட்டிங்களா அத்தை, அவ எப்படிப் பேசறான்னு பார்த்திங்களா… அவ சொல்லறதுக்கு எல்லாம் தலையாட்டி அவ கேக்கற எல்லாத்தையும் மறுக்காம நடத்திக் கொடுத்த எங்களுக்கு அவ கொடுத்த தண்டனையைப் பார்த்திங்களா…? இப்படி நாம சொல்லறதைப் புரிஞ்சுக்காமப் பேசறாளே… அந்த அளவுக்கு அவன் இவளை மயக்கி வச்சிருக்கான்… நம்ம பொண்ணை நம்ம கிட்ட இருந்து பிரிக்க நினைக்கற அந்தப் பையனும், குடும்பமும் நல்லாருக்கவே மாட்டாங்க… நாசமாத்தான் போவாங்க… எப்படில்லாம் அவளைத் தரைல வைக்காம மடில போட்டு வளர்த்தினேன்… அவங்க வீட்டுக்கு அனுப்பி கஷ்டப் படுத்தவா…? இந்தப் பொண்ணு அவங்களைப் பத்தி புரியாம இருக்காளே…” அழுகையுடன் சொன்னவரை சரவணன் வந்து அதட்டினார்.

“சரி, நீ இப்படி அழுது புலம்பாத… என்ன பண்ணலாம்னு யோசிப்போம்…”

“எப்படிங்க, என்னால புலம்பாம இருக்க முடியலியே… நம்ம ஆசையா வளர்த்த செல்ல மக இப்படிப் புலம்ப வச்சிட்டாளே…” கண்ணீருடன் கூறிய மனைவியை வேதனையுடன் நோக்கினார் அவர்.

“கவலைப் படாத, இதுக்கு ஒரு நல்ல முடிவை நான் கண்டு பிடிக்கறேன்…” என்றவர் உண்ணாமலே கிளம்ப,

“அச்சோ, தம்பி சாப்பிடாம கிளம்பறார், முதல்ல அவரை சாப்பிட வச்சு அனுப்பு…” பர்வதம் சொல்லவும், கண்ணைத் துடைத்துக் கொண்டு கணவனிடம் வந்தார்.

“சாப்பிட்டுப் போங்க… யாருக்கும் இட்லி வேண்டாம்னா அப்புறம் நைட்டுக்கு எல்லாருக்கும் இட்லி உப்புமா தான்…” சொல்லிக் கொண்டே தட்டை வைக்க சரவணன் சிறு புன்னகையுடன் அமர்ந்தார்.

அவர்கள் பேசுவதை எல்லாம் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரம்யா, “நான் இங்க சாப்பிடாம இருக்கேன்… இவங்க எல்லாம் சாப்பிட்டு வயித்தை நிறைச்சிட்டு சந்தோஷமா இருக்கணுமா…” என தனக்குள் சொல்லிக் கொண்டவள் வேகமாய் வெளியே வந்து தனக்கு ஒரு தட்டில் இட்லி, சட்னியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்று அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.

அதைப் பார்த்த பெரியவர்களும் சூழ்நிலை மறந்து மகள் மனதை எப்படியும் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடத் தொடங்கினர்.

பிறர் வலியறியா

பிடிவாதங்கள்…

பிடித்தவர்களின்

பிரியங்களைக்

கொன்று தின்னும்

வரை ஓய்வதில்லை…

Advertisement