Advertisement

அத்தியாயம் – 3
மாலை மூவரும் கவின் பர்த்டேவுக்கு, அவன் வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்க, ரம்யா மட்டும் வரமாட்டேன் என்று புறப்படாமல் அமர்ந்திருந்தாள்.
“ஏண்டி, இப்படி அநியாயம் பண்ணற, உன்னால இருக்கிற சொந்தங்களை எல்லாம் பகைச்சுக்க முடியுமா, மல்லிகா வீட்டுக்கு வந்து அழைச்சும், நாம போகாம இருந்தா என்ன நினைப்பா… நல்ல பிள்ளையா கிளம்பு ரம்மி…” பூங்கொடி மகளிடம் கெஞ்சுதலாகக் கேட்க அதற்கெல்லாம் அவள் மசியும் நிலையில் இல்லை.
“நீ என்ன சொன்னாலும் நான் வரலேன்னா வரல தான்… ரம்மியாம் ரம்மி…” சொல்லிவிட்டு டீவியை வைத்து அமர்ந்து கொண்டவளை எரிச்சலுடன் பார்த்தாள் பூங்கொடி.
“ரம்யாக்கண்ணு, அத்தை கூப்பிட்டுப் போகலேன்னா பீல் பண்ணுவா டா, அவளுக்கு நம்மளை விட்டா யாரிருக்கா, சொல்லு…” சரவணனும் சொல்லிப் பார்க்க, “உங்களுக்கு உங்க தங்கச்சி முக்கியம்னா நீங்க போங்க, என்னை கம்பெல் பண்ணாதீங்க…” என்றாள் மகள்.
கல்லூரியில் இருந்து வந்ததும் குளித்து உடை மாற்றி கவினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காய் ஆர்வமாய் புறப்பட்டு வெளியே வந்த காவ்யா, அக்காவின் ஒத்துழையாமை போராட்டம் கண்டு அப்படியே நின்று விட்டாள்.
“இப்ப என்னங்க பண்ணுறது, மல்லி வேற கிளம்பிட்டிங்களா, கேக் வெட்டனும்னு கால் பண்ணிட்டா…” என்றார் பூங்கொடி.
“அம்மா, நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க, நான் அக்காவுக்குத் துணைக்கு இருக்கேன்…” சின்ன மகள் சூழ்நிலை புரிந்து சொல்ல, அவளைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டே கிளம்பினர் பெற்றோர்.
“கவினும், அத்தையும் உங்களைக் கேப்பாங்களே…”
“அப்புறம் வருவோம்னு சொல்லிடுங்க மா…” என்று பதிலையும் சொல்லி அனுப்பி வைத்தாள்.
ஆனால் இவர்கள் சென்று பத்து நிமிடத்திலேயே வாசலில் கார் சத்தம் கேட்க எட்டிப் பார்த்த காவ்யா திகைத்தாள்.
பிறந்தநாள் நாயகன் கவின் காரை நிறுத்தி இறங்க அர்ஜூனும் உடன் இருந்தான்.
“என்ன அத்தான், அங்க கேக் வெட்டாம இங்க வந்துட்டிங்க…”
“என்ன விளையாடறீங்களா… முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்குக் கிளம்புங்க…” என்றான் அதிகாரமாக.
“இல்ல அத்தான், அதுவந்து… அக்கா…” காவ்யா தயக்கமாய் சொல்ல அர்ஜூன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் பேசுவதை ஏதோ அன்னியர்கள் பேசுவது போல் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த ரம்யா முன் நின்றான்.
“உங்களுக்காக எல்லாரும் வெயிட்டிங்… ப்ளீஸ் அண்ணி, கிளம்புங்க…” என்றதும் அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
“யாருக்கு யார் அண்ணி, நான் ஒண்ணும் உன் அண்ணியில்ல…” சிடுசிடுத்தாள். அர்ஜூனும் காவ்யாவும் சற்று டென்ஷனுடன் அவர்கள் பேசுவதைக் கேட்டு நின்றனர்.
“ஓஹோ, அப்புறம் ஏன் உங்க அத்தை வீட்டுக்கு வர மாட்டேங்கறிங்க, என் அம்மா உங்களை மருமகளேன்னு கூப்பிடுவாங்க, எல்லாரும் உங்களைப் பிடிச்சு என் அண்ணனுக்கு கட்டி வச்சிருவாங்களோன்னு பயந்து தானே…”
“யாரு, எனக்கு பயமா… அதெல்லாம் ஒண்ணும் கிடையாது…”
“அப்ப ப்ரூவ் பண்ணுங்க…”
“உனக்கு எதுக்கு ப்ரூவ் பண்ணனும்…”
“அப்ப பயம் தான்னு ஒத்துக்கங்க…”
அவனை முறைத்தவள், “பயமும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது… காவ்யா, எனக்கு டிரஸ் எடுத்து வை, நாம கிளம்பறோம்…” என்றவள் பாத்ரூமுக்குள் நுழைந்து கொள்ள காவ்யா நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டாள்.
அர்ஜூனும், கவினும் ஹைபை கொடுத்துக் கொள்ள அவர்களை வியப்புடன் நோக்கியவளிடம், “என்ன முழிக்கிற, இதுவும் உன் அக்காவுக்கு ஒருவித ட்ரீட்மென்ட் தான், போ, போயி அவளை ரெடி பண்ணிக் கூட்டிட்டு வா…” என்றவன், “என் பிறந்தநாளுக்கு நீ வராம இருந்திருவியா… உனக்கு இருக்குடி…” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில்.
சட்டென்று முகம் சிவந்தவள் அதை மறைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
தனது இரு மகன்களும் முறைப் பெண்களுடன் ஜோடியாய் வந்திறங்குவதைக் கண்ட மல்லிகாவும், பூங்கொடியும் அதிசயமாய் நோக்கினர்.
இரு குடும்பமும் கவினின் நண்பர்களும் மட்டுமே இருக்க வீட்டுத் தோட்டத்தில் அனைவரும் கூடி இருந்தனர். கேக் வெட்டி எல்லாரும் சந்தோஷமாய் பேசிக் கொண்டிருக்கும் போதும் ஒதுங்கிப் போய் அமர்ந்து கொண்ட ரம்யாவைக் கண்டு அர்ஜூனுக்கு வருத்தமாய் இருந்தது.
“அண்ணா…” கவின் அர்ஜூனின் காதைக் கடிக்க, “என்ன கவின்…” என்றான் அண்ணன்.
“என் லூசு அண்ணி தனியா போயி உக்கார்ந்திருக்கு, ஒரு கேக் பீஸை தட்டில் வச்சு எடுத்துட்டுப் போயி கொடு…” தம்பி சொல்ல, “அவ என் முகத்துலயே எறிஞ்சுட்டா என்னடா பண்ணுவேன்…” என்றான் அர்ஜூன் பாவமாக.
“பெரியத்தான், அக்கா அதெல்லாம் எறிய மாட்டா… அவளுக்கு இந்த கேக் ரொம்பப் பிடிக்கும், தைரியமா கொடுங்க…” எனத் தூண்டி விட்டாள் காவ்யா.
“ம்ம்… உங்களை நம்பித்தான் போறேன், சேதாரம் அதிகமா இல்லாம காப்பாத்து கடவுளே…” என மனதுக்குள் வேண்டியபடி நின்றவனின் கையில் கேக் பிளேட்டை வைத்த கவின், “ம்ம்… போ…” என்றதும் ரம்யாவை நோக்கி நடந்தான்.
“ரம்யா, இந்தா கேக் சாப்பிடு…” பேப்பர் பிளேட்டில் நீட்ட, அவள் மறுக்காமல் வாங்கிக் கொள்ளவும் திகைத்தான்.
“என்ன முழிக்கறீங்க… எனக்கு ரெட் வெல்வெட் கேக் ரொம்பப் பிடிக்கும்… உங்களைப் பிடிக்காததால கேக்கை மிஸ் பண்ண நான் தயாரா இல்ல…” சொல்லிக் கொண்டே கேக்கை ரசித்து உள்ளே தள்ளியவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“இன்னொரு பீஸ் வேணும்னா தரட்டுமா, ரம்யா…”
“எனக்கு பிடிக்கும் தான், அதுக்காக ரொம்பப் பிடிக்காது…” என்றவள் எழுந்து சென்று கை கழுவி வந்தாள்.
“ஏய் காவ்யா, உன் அக்காவை நீதான் கொஞ்சிக் கெஞ்சி கெடுத்து வைக்கற, எப்படி ஐயா அதட்டுனதும் உன் அக்கா கிளம்பி வந்தா பார்த்தியா…” கவின் கேட்க,
“ஹூக்கும், போன ஜென்மத்துல நீங்க பண்ணின புண்ணியம் ஏதாச்சும் தான் இப்ப உங்களைக் காப்பாத்தி இருக்கும்னு நினைக்கறேன்… ரொம்ப தான் காலரைத் தூக்காதிங்க… அக்கா எப்பவும் இப்படியே இருப்பான்னும் நினைக்காதிங்க…” அவனுக்கு பதிலடி கொடுத்தாள் காவ்யா.
“காவ்யா, ஒரு நிமிஷம் என் ரூமுக்கு வாயேன்… உனக்கு ஒரு விஷயம் காட்டறேன்…”
“இப்ப எப்படி, எல்லாரும் இருக்காங்களே…”
“ப்ச்… இது உன் அத்தை வீடு, எப்ப வேணும்னாலும், எங்க வேணும்னாலும் போகலாம்…” என்றவன் அன்னையிடம், “அம்மா காவ்யா மொபைல்ல சார்ஜ் இல்லியாம், என் ரூம்ல சார்ஜ் போட்டு வந்துடறோம்…” எனவும் திகைத்தாள்.
“என் போன்ல எப்ப சார்ஜ் இல்லேன்னு சொன்னேன், திருட்டு படவா…” என யோசிக்கும்போதே, “வா காவ்யா…” கவின் அழைக்க மறுக்க முடியாமல் அவனுடன் சென்றாள்.
அறைக்கு வெளியே நின்றவள், “நீங்க சார்ஜ் போட்டுட்டு வாங்க அத்தான்…” என்றதும் முறைத்தான்.
“ஏன், மகாராணி எங்க ரூமுக்கு வர மாட்டிங்களோ, இல்ல நாங்க உங்களைக் கடிச்சு தின்னிருவோம்னு பயமா…”
“ப்ச்… அப்படிலாம் இல்ல, ஆனாலும் உங்க மேல கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கம்மி, அதான்…” சொன்னவளை குறுகுறுவென்று பார்த்தவன் சட்டென்று அறைக்குள் இழுக்க நெஞ்சில் விழுந்தவளை கைகளால் முற்றுகையிட்டான்.
“ப்ச்… விடுங்க அத்தான், இதுக்கு தான் நான் உள்ள வரலைன்னு சொன்னேன், சரியான பிராடு…” தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றவளின் முகம் நோக்கியவன், “யாரு நான் பிராடா… நீ தியாகிப் பட்டம் வாங்கணும்னு என் பிறந்தநாளுக்கு வராம இருப்பியா… எவ்ளோ ஆசையா காத்திருந்தேன்… என்னைப் பத்தி எந்தக் கவலையுமில்ல, உனக்கு உன் அக்கா வரலேன்னா நீயும் வரமாட்ட, அப்படி தானே… எங்க என்னோட பிறந்தநாள் கிப்ட்…”
“அ..அதுவந்து… எதும் வாங்கலயே…” வருத்தமாய் தன்னை விடுவிக்க முயன்று சொன்னவளை முறைத்தவன், “ஏண்டி, எனக்காக ஒரு கிப்ட் வாங்கனும்னு கூடவா உனக்குத் தோணல, இட்ஸ் ஓகே… நீ தரலேன்னா என்ன, நானே எடுத்துக்கறேன்…” என்றவன் அவள் இதழ் நோக்கிக் குனிய, கைகளை உதறிக கொண்டு, “ஐயோ, வேணாம் கவின்… ப்ளீஸ்… என்னை விடுங்க…” என்றபடி முகத்தைத் திருப்பி கண்ணை மூடிக் கொள்ள அந்த நிலா முகத்தை ரசனையுடன் பார்த்தவன், “அப்ப நீயே கொடு…” என்றதும் கண்ணைத் திறந்தாள்.
“ஹூம்… சரி, என்னை ரிலீஸ் பண்ணுங்க…” சிணுங்கலாய் சொல்ல மெல்ல கையை விடுவித்தான்.
“பிராடு, பிராடு… கிப்ட் வேணுமாம் கிப்ட்… தர முடியாது போங்க…” என்றவள் அவன் கன்னத்தில் செல்லமாய் தட்டி விட்டு சிரித்துக் கொண்டே ஓடிவிட புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.
“காவ்யா, என்னைப் போல நீயும் என்னை ரொம்ப லவ் பண்ணறேன்னு எனக்கும் தெரியும்… அதை உன் வாயாலயே ஒத்துக்கிற நாள் வரும், அதுவரைக்கும் விட மாட்டேன்…” என்றவன் அனைவரும் உள்ள இடத்துக்கு சென்றான். எல்லாம் நல்லபடியாய் முடிய சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பினர்.
****************
“அம்மா…” வீட்டுக்குள் நுழையும்போதே சின்ன மகளின் குரல் உற்சாகமாய் ஒலிக்க பூ கட்டிக் கொண்டிருந்த பூங்கொடி நிமிர்ந்தார்.
“என்னடி, உள்ள வரும்போதே சந்தோஷமா வர்ற…?”
“அம்மா, எங்க காலேஜ்ல எல்லாரையும் மூணார் டூர் கூட்டிப் போறாங்க, நானும் போகட்டுமா…” ஆவலுடன் கேட்ட மகளிடம், “அப்பாகிட்ட கேட்டுப் பாரு, காவி…” என்றார்.
சோபாவில் குத்தவைத்து மடியில் தலையணையுடன் அமர்ந்திருந்த ரம்யா கோபமாய் அதைத் தங்கை மேல் விட்டெறிந்தாள்.
“ஒண்ணும் கேக்க வேண்டாம், நான் காலேஜ் படிக்கும்போது டூர் கூட்டிப் போறாங்கன்னு சொல்லி எத்தனை கெஞ்சினேன், என்னை மட்டும் அனுப்பினாங்களா… இப்ப உன்னை அனுப்புறதுக்கு, ஒண்ணும் போக வேண்டாம்…” என்றாள் முறைப்புடன்.
“உன்ன அனுப்பலேன்னா, அவள எங்கயும் அனுப்பக் கூடாதா…” அம்மா பூங்கொடி சின்னவளுக்கு சப்போர்ட்டுக்கு வர, தடுத்தாள் காவ்யா.
“இல்லமா, அக்கா சொல்லுறது தான் சரி, அவளுக்குப்  பிடிக்கலேன்னா நான் எங்கயும் போகல…” என்ற காவ்யா, சாதாரணமாய் உள்ளே செல்ல மூத்தவளை முறைப்புடன் நோக்கிக் கொண்டே எழுந்து சென்றார் பூங்கொடி.
“வந்து சேர்ந்திருக்கா பாரு, திமிருக்கு கை கால் முளைச்ச போல…” அவர் முனங்கியது காதில் விழ, கடுப்புடன் அமர்ந்திருந்தவள் கையில் அந்த தலையணை படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது.
“அக்கா, எனக்கு நெயில் பாலிஷ் போடறேன், உனக்கும் போடணுமா…” காவ்யா கேட்டபடி அவள் அருகே அமர,
“அது ஒண்ணுதான் எனக்குக் குறைச்சல்…” என மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
“உனக்கு என்னக்கா குறைச்சல், ரம்யாங்கற பேருக்கு பதிலா ரம்பான்னு வச்சிருந்தா இன்னும் பொருத்தமா இருக்கும்… அவ்ளோ அழகா இருக்க… ஆனா, அது வெளிய தெரிஞ்சிடக் கூடாதுன்னு இப்படி தலமுடியக் கூட கட்டாம கொண்டையப் போட்டு உக்கார்ந்துக்கற…” காவ்யா சொன்னதில் சற்றே மனம் குளிர்ந்தவள் முகம் லேசாய் தெளிந்தது.
“நான் உனக்கு தலைல ஆயில் வச்சு மசாஜ் பண்ணித் தரட்டுமா…” கேட்டவளிடம், “ம்ம்…” என்றதும் ஆயில் பாட்டிலை எடுத்து வந்தவள், நன்றாய் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து, முடியை சிக்கெடுத்து அழகாய் பின்னி விட்டாள்.
பணி முடிந்து வீடு திரும்பிய சரவணன் தலை சீவி அமர்ந்திருந்த ரம்யாவைக் கண்டதும், “அடடே, ரம்யாக் கண்ணு, தலை சீவினதும் எவ்ளோ அழகாருக்க… காவ்யாக்குட்டி, உன் வேலையா இது…” என்றதும் முறைப்புடன் தந்தையைப் பார்த்தவள் பின்னி இருந்த சடையை அவிழ்த்து விட்டு தலையைக் குலுக்கி அலங்கோலமாக்க அதிர்ந்து நோக்கினார் சரவணன்.
காவ்யா தந்தையை சங்கடமாய் பார்க்க வேதனையுடன் அவர் அறைக்கு சென்று விட்டார்.
“என்னக்கா இது, எதுக்கு இப்ப தலையைக் கலைச்ச…” என்ற தங்கையிடம் எதுவும் சொல்லாமல் முடியை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டு டீவியின் முன் அமர்ந்து கொண்டாள்.
சத்தமாய் கார்ட்டூன் சானலை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க பூங்கொடியின் அலைபேசி ஒலிக்கவே அதை எடுத்தவர், “கொஞ்சம் டீவி சவுண்டைக் கம்மி பண்ணு காவி…” சின்ன மகளிடம் சொல்ல, அவள் சென்று சத்தத்தைக் குறைத்தாள்.
“ஹலோ சொல்லுங்கத்த, நல்லாருக்கீங்களா…” பூங்கொடியின் அத்தை பர்வதம் (அப்பாவின் அக்கா) அழைத்திருந்தார்.
“நல்லாருக்கேன் தாயி, நீ எப்படி இருக்க, புள்ளைங்க எல்லாம் நல்லாருக்கா…”
“எல்லாரும் நல்லாருக்கோம் அத்த, ஊருல எல்லாரும் சௌக்கியம் தானே…”
“இருக்கோம் மா… அடுத்தவாரம் செந்திலு வெளியூர் போறான்… பொள்ளாச்சி வழியா தான் போகணும்னு சொன்னான்… அதான், உங்களை எல்லாம் பார்த்து நாளாச்சே, என்னை அங்க விட்டா ஒரு வாரம் உன் வீட்டுல இருக்கலாமேனு கேக்க தான் கூப்பிட்டேன்…”
“என்ன அத்தை, என்கிட்டே அனுமதி கேட்டுட்டு தான் நீங்க நம்ம வீட்டுக்கு வரணுமா… எப்ப வேணும்னாலும் வாங்க…”
“சரிம்மா, நான் செந்திலுகிட்ட சொல்லறேன்… மாப்பிள்ளைய கேட்டதா சொல்லு, வச்சிடவா…” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட காளியாய் அவர்கள் பேசுவதை நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.
“அந்த கிழவிய எதுக்கு இங்க வர சொன்ன, கூப்பிட்டு வர வேணாம்னு சொல்லிடு…”
“என்னடி சொல்லற, அவங்க என் அத்தை… நம்மளைப் பார்க்க வரட்டுமான்னு கேக்கறவங்கள எப்படி வேண்டாம்னு சொல்லுறது… சின்ன வயசுல அவங்க எனக்கு என்னெல்லாம் செய்திருக்காங்க தெரியுமா… அந்த நன்றியை மறக்கக் கூடாதுல்ல…”
“அம்மா, நீ நன்றியை மறப்பியோ, பன்றியை வளர்ப்பியோ… எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்ல… என் காதலுக்கு சூனியம் வச்ச அந்த சூனியக்கார கிழவி இந்த வீட்டுக்கு வரக் கூடாது… வந்துச்சுன்னா நான் வீட்டுக்கு வர மாட்டேன்…” என்றவளை திகிலாய் பார்த்தார் பூங்கொடி.
சொல்லிவிட்டு ரம்யா மொட்டை மாடிக்கு சென்றுவிட இரவு உணவுக்கு காவ்யா அழைத்தும் கீழே வரவில்லை.
“அக்கா, அம்மா சொல்லலேன்னா பாட்டிகிட்ட நான் ஏதாச்சும் சொல்லி வரவேண்டாம்னு சொல்லிடறேன், முதல்ல சாப்பிட வா…” தன்மையாய் அக்காவை அழைத்தாள் காவ்யா.
“முடியாது, முதல்ல அந்தக் கிழவிக்கு போன் பண்ணி வர வேண்டாம்னு அம்மாவை சொல்ல சொல்லு, அப்பதான் நான் வீட்டுக்குள்ள வருவேன், அது வரைக்கும் இங்கயே கிடக்கறேன்… என் மேல யாருக்கென்ன அக்கறை…”
“சரிக்கா, அம்மாகிட்ட இப்பவே சொல்ல சொல்லறேன்…” என்ற காவ்யா கீழே வந்தாள்.
“என்னடா, அக்கா சாப்பிட வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாளா…” தந்தை கேட்க, “ஆமாம்ப்பா…” என்றதும் வருத்தமாய் அமர்ந்திருந்தார் சரவணன்.
“அம்மா, பாட்டிகிட்ட ஏதாச்சும் காரணம் சொல்லி வரவேண்டாம்னு சொல்லிடு… அக்காவைப் பத்தி தான் உனக்குத் தெரியும்ல… அப்புறம் ஏதாச்சும் பண்ணிடப் போறா…” சின்னவள் காவ்யா சொல்ல கடுப்புடன் நோக்கினாள் பூங்கொடி.
“எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம், எடுத்து வளர்த்துன சொந்தங்களைக் கூட வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லச் சொல்லுறாளே இந்தப் பாவி…” புலம்பினார் பூங்கொடி.
“கண்டிச்சு, நல்லது கெட்டது சொல்லி வளர்த்த வேண்டிய சமயத்துல அவ சொல்லுறதுக்கு எல்லாம் சரின்னு தலை ஆட்டிட்டு இப்ப அவளை உடனே திருத்தணும்னு நினைக்கிறது தப்பு மா… அவ இப்படி இருக்கான்னா அதுக்கு நீங்களும் ஒரு விதத்துல காரணம்… டாக்டர் சொன்ன போல பொறுமையா தான் அவளை மாத்திக் கொண்டு வரணும்… இது அவ சுபாவமா இருந்தா மாத்த முடியாது, பழக்கமா இருந்தா நிச்சயம் மாத்த முடியும்… நாம முயற்சி பண்ணிப் பார்ப்போம்மா…” பெரிய மனுஷியாய் சொன்ன சின்ன மகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டார் பூங்கொடி.
“நீ சொல்லுறது சரிதான்மா, கல்யாணமாகி நாலு வருஷம் கழிச்சுப் பிறந்த பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம்… அவளுக்கு உடம்புக்கு முடியாம மூளைக் காய்ச்சல் வந்து பிட்ஸ் வரவும் பொழைப்பாளா, மாட்டாளான்னு கிடந்தா… அதுக்கப்புறம் சரியாகி வரவும், அவ பேச்சுக்கு இந்த வீட்டுல மறுபேச்சே இல்லாம எல்லாம் செய்து கொடுத்து, எதிர் பேச்சுப் பேசாம பார்த்துகிட்டோம்… இப்ப அதுவே நமக்கு வினையாப் போயிருச்சு…” தந்தை சரவணன் வருத்தத்துடன் கூறினார்.
“கவலைப் படாதீங்கப்பா… கொஞ்சம் பொறுமையா இருங்க… அக்காவை சரி பண்ணி அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா எல்லாம் மாறிடும்னு நம்பறேன்… மெதுவா தான் முயற்சி பண்ணனும்…” என்றாள் காவ்யா.
“ம்ம்… நாங்களும் அதுக்கு தான் காத்திருக்கோம்… அவளை இப்படிப் பார்க்கவா தரைல வைக்காம வளர்த்தி, ஆசைப்பட்ட எல்லாத்தையும் செய்து கொடுத்தோம்… அவ காதலிச்ச பையன் சரியில்லேன்னு தான வேண்டாம்னு சொன்னோம்… அவன் பொசுக்குன்னு விஷத்தைக் குடிச்சு செத்துப் போனா அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாவோம்…” பூங்கொடி சின்னவள் என்றும் பாராமல் மகளிடம் மனதில் உள்ளதை சொல்லி புலம்பிக் கொண்டிருக்க சரவணன், ஆறுதலாய் மனைவி தோளில் தட்டிக் கொடுத்தார்.
பிடிவாதம் எனும் வாதம்
பிரியத்தின் முடக்குவாதம்…
அது எப்பேர்ப்பட்ட
அன்பையும் முடமாக்கி
அறிவையும் செல்லரிக்கும்
மூலதனம் என்பதை சில
மூடர்கள் உணர்வதில்லை…

Advertisement