Advertisement

அத்தியாயம் – 25

காலையில் அடுக்களையில் மல்லிகா பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க இரு மருமகள்களும் அருகில் நின்று உதவி செய்து கொண்டிருந்தனர்.

“காவி… செண்பகம்மா வீட்டத் துடைச்சு முடிஞ்சுட்டா, இந்தப் பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வைக்க சொல்லிடு…” சொல்லிக் கொண்டே கொதிக்கும் எண்ணையில் அப்பளத்தைப் போட்டார் மல்லிகா.

“சரிங்கத்தை…” சொன்ன காவ்யா வீட்டைக் கிளீன் செய்து கொண்டிருந்த செண்பகம்மாவிடம் சென்றாள்.

“ரம்மி, இந்த ஏலக்காயைக் கொஞ்சம் தட்டி வை, பால் கொதிக்கத் தொடங்கிருச்சு…” ஒரு அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த பாலை இளக்கிக் கொண்டே கூறினார்.

ரம்யா ஏலக்காயை சிறிது சக்கரை சேர்த்து நைசாய் பொடித்துக் கொடுக்க புன்னகைத்தார் மல்லிகா.

“உனக்கு என் அம்மாவோட பழக்கம் நிறைய இருக்கு… அவங்கதான் ஏலக்காயை பொடிக்கும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பொடிப்பாங்க…” என சிரித்தாள் ரம்யா.

“எத்தனை மணிக்கு அந்த இல்லத்துக்கு கிளம்பனும் அத்த…”

“உங்க மாமா வந்ததும் கிளம்பிடுவோம் மா… இன்னைக்குப் பிறந்தநாளுக்கு லீவு போடுங்கன்னு சொல்லியும் கேட்காம அந்த மனுஷன் பாங்கைத் தாங்கி நிறுத்த ஓடிட்டார், 12 மணிக்குள்ள வரேன்னு சொல்லிருக்கார்…”

“இது மாமாவோட எத்தனாவது பிறந்தநாள், அத்த…” கேட்டுக் கொண்டே வறுத்து வைத்த சேமியாவை நீட்டினாள்.

“அவருக்கு 55 ஆச்சு மா…”

“ம்ம்… சூப்பர் அத்த…”

“மாமா ரொம்ப அமைதி, உங்களுக்கு கல்யாணமாகி முப்பது வருஷம் ஆச்சே, எதுக்காச்சும் சண்டை போட்டுப்பீங்களா…?” மருமகளின் கேள்வியில் சிரித்தார்.

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள சின்ன சின்ன சண்டை, ஊடல் எல்லாம் வந்தா தான் ரெண்டு பேருக்குள்ளயும் புரிதலும், அந்நியோன்யமும் கூடும்… எங்களுக்குள்ளயும் அப்படில்லாம் வந்திருக்கு, இப்ப தான் உன் மாமாவுக்கு பாங்குல பில்லர் வேலை கொடுத்து தாங்கி நிறுத்தனும்னு சொல்லிட்டாங்க… அதனால மனுஷன் என்னோட பேசக் கூட நேரமில்லாம ஓடிட்டு இருக்கார்…” அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே கவின் அங்கே வந்தான்.

“என்ன மா, அப்பாவை கிண்டல் பண்ணிட்டு இருக்கிங்க…” கேட்டுக் கொண்டே பாயாசத்திற்காய் வறுக்க வைத்திருந்த முந்திரியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள அவன் கையிலேயே அடித்தார் மல்லிகா.

“ஆ…. என்னமா, முந்திரிக்காக புள்ளைய அடிக்கறீங்க…?”

“வறுக்க எடுத்து வச்ச முந்திரியை எடுக்காதேன்னு நானும் நீ சின்னப் புள்ளையா இருக்கும் போதிருந்து சொல்லறேன், கேக்கறியா….” என மகனைத் திட்டிக் கொண்டிருக்க உள்ளே வந்த காவ்யாவிடம் ரிப்போர்ட் செய்தான் கவின்.

“என்னமா, நீங்க என்னை அடிச்சா கேக்க ஆளில்லைன்னு நினைச்சீங்களா, என் பொண்டாட்டி இருக்கா…” என்றவன் “பாரு காவி… உன் அத்தை நாலு முந்திரி எடுத்ததுக்கு உன் புருஷன் கைலயே அடிக்கிறாங்க, என்னன்னு கேளு…” எனவும் காவ்யா கூச்சத்துடன் அவனை முறைத்தாள்.

ரம்யா சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அர்ஜூனும் அவள் அருகே வந்து அமர்ந்தான். மல்லிகா சின்ன மருமகள் என்ன சொல்லப் போகிறாள் என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க அவள் தோசை திருப்பியை எடுத்து அத்தையின் கையில் கொடுத்தாள்.

“அத்தை, இனிமே என் புருஷனை இப்படி பொசுக்குன்னு கைல அடிக்கற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க… இந்தாங்க, இதை வச்சு முதுகுலயே ஒண்ணு போடுங்க…” என்றவளை கோபமாய் பார்த்த கவின்,

“அடிப்பாவி… புருஷன் அடி வாங்கறதைப் பார்த்து பொண்டாட்டியா லட்சணமா உன் மாமியார்கிட்ட சண்டை போடாம தோசை திருப்பியை எடுத்துக் குடுத்து அடிக்க சொல்லுறியா, சரியான ரவுடிகிட்ட வந்து மாட்டிகிட்டனே…” என்றவனைக் காதைப் பிடித்துத் திருகிய மல்லிகா,

“என்னடா, எங்களுக்குள்ள மாமியார், மருமக பிரச்சனையைத் தூண்டி விடலாம்னு பார்க்கறியா…” என்றார் சிரிப்புடன்.

“ஆமா… வீட்டுல பொழுது போகணும்ல, நீங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டா வேடிக்கை பார்க்கலாமேனு நினைச்சேன்…”

“அதுக்கெல்லாம் நாங்க ஆளில்லை… வேணும்னா ரெண்டு பேரும் உன்னை அடிக்கிறோம், நல்லாப் பொழுது போகும்…”

“ஆஹா, ஆளை விடுங்க…” என்றவன் எழுந்து வெளியே செல்ல புன்னகையுடன் திரும்பினார் மல்லிகா.

“ஹாஹா… இவன் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே தான் இருக்கான், நீ ஒண்ணும் நினைச்சுக்காத காவி…”

“போங்கத்தை, நான் என்ன நினைக்கப் போறேன்… எவ்ளோ பெரிசானாலும் முதல்ல அவர் உங்க பிள்ளை, உங்களோட உரிமை முடிஞ்ச பிறகு தான் அவர் எனக்குப் புருஷன், இதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்…” என்றவளை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மல்லிகா.

“எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ அசால்ட்டா சொல்லறா, என் சின்ன மருமக… இதே மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் நினைச்சா வீட்டுல மாமியார், மருமக பிரச்சனையே இருக்காதே…”

“கரெக்டா சொன்னிங்கம்மா…” என்ற அர்ஜூன், “என்ன ரமி, நீ எதும் பேசாம இருக்கே…” மனைவியிடம் கேட்கவும் முகம் வாடினாள் ரம்யா.

“இத்தனை பக்கத்துல இருக்கிற என் அத்தையோட அருமை தெரியாம, புரிஞ்சுக்காம அந்தப் பொம்பளைய அத்தைனு கூப்பிட்டதை நினைச்சா கஷ்டமா இருக்கு…” என்றவளின் அருகே வந்த மல்லிகா அவள் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“மருமகளே, பழசெல்லாம் மறந்திட்டு என் மகனோட சந்தோஷமா வாழற வழியைப் பாரு… இனியும் அதெல்லாம் யோசிச்சு உன்னை நீயே வருத்திக்காத… சரி, அண்ணன், அண்ணி ரெடியாகிருப்பாங்க, எடுத்து வச்சிட்டு கிளம்பலாம்…”

“ம்ம்… சரி அத்தை…” என்ற ரம்யா கணவனுடன் செல்ல காவ்யா மனம் நெகிழ பார்த்து நின்றாள்.

“என்ன சின்ன மருமகளே, உனக்கு தனியா சொல்லனுமா, போயி ரெடியாகு மா…”

“ம்ம்…” என்றவள் சட்டென்று அத்தையைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

“அடியே என்ன இது, உன் புருஷன்காரன் பார்த்தா… என்னம்மா, எனக்குக் கொடுக்க வேண்டியதை உங்களுக்குக் கொடுக்கிறான்னு சண்டைக்கு வந்திடப் போறான்…”

மல்லிகா சிரிப்புடன் சொல்ல, “அவரு கிடக்கறார்… உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அத்தை… அக்கா இந்தளவுக்கு மாறி இருக்கான்னா, உங்களோட அன்பும், அனுசரணையும் கூட ஒரு காரணம்…” என்றாள்.

“இதுல என் சுயநலமும் இருக்கு காவி… எனக்கு என் ரெண்டு பசங்களும் சந்தோஷமா இருக்கணும், அது மருமகளுங்க சந்தோஷமா இருந்தா தானே நடக்கும்… அதான் உங்களை நல்லாப் பார்த்துக்கறேன்…” என கண்ணடித்து சிரிக்க, காவ்யா ஏதோ சொல்வதற்குள் கவினின் குரல் அழைத்தது.

“போ… உன் புருஷன் தொடங்கிட்டான், ரெண்டு பேரும் ரெடியாகுங்க… மாமா வந்திருவார்…” என்ற மல்லிகா அவளை அனுப்பிவிட்டு எல்லாம் சரிபார்த்து எடுத்துவைத்தார்.

காவ்யா அறைக்குள் வர கவின் கட்டிலில் படுத்திருந்தான்.

“என்ன அத்தான், கிளம்பாம படுத்திருக்கீங்க…?”

“இல்ல, எனக்கு ஒரு டவுட்…?”

“என்ன டவுட்…?” கேட்டபடி அருகே அமர்ந்தாள்.

“சொல்லுவேன், ஆனா கேட்டுட்டு நீ திட்டக் கூடாது…” பீடிகையுடன் எழுந்து அமர்ந்தான்.

“ப்ச்… முதல்ல என்ன டவுட்டுன்னு சொல்லுங்க அத்தான்…” என்றாள் காவ்யா சிணுங்கலுடன்.

“அது… வேறொண்ணும் இல்ல, அது ஏன் லிப்ல கொடுக்கிற கிஸ்க்கு பிரஞ்ச் கிஸ்னு பேரு வந்திருக்கு, இங்லீஷ்காரன் எல்லாருமே அப்படி தானே கிஸ் பண்ணறான்…” என்ற தனது உலக மகா சந்தேகத்தைக் கேட்க முறைத்தாள் காவ்யா.

“ச்சீ… கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம உங்களுக்கு இதுல எல்லாமா டவுட் வரும்…?” சொல்லிக் கொண்டே எழுந்தவளை பிடித்து இழுக்க அவன் மீதே விழுந்தவளை கைகளில் சிறை எடுத்தான் கவின்.

“காவி, எனக்கு டவுட்டைத் தீர்த்திட்டுப் போ…”

“ப்ச்… விடுங்க அத்தான், இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது…”

“பதில் தெரியலேன்னா நானே ஆராய்ச்சி பண்ணிப் புரிஞ்சுக்குறேன்…” சொன்னவன் அவள் இதழ் நோக்கிக் குனிய, “அச்சோ, வேண்டாம் அத்தான், டைம் ஆச்சு…” என்று உதடுகள் சொன்னாலும் கண்களை இறுக மூடிக் கொண்ட மனைவியைக் காதலுடன் நோக்கியவன் குனிந்தான்.

அவள் இதழில் சில நிமிடங்கள் தன் இதழை இளைப்பாற விட்டவன் அப்படியே கழுத்தில் இதழ் பதிக்க அவன் கைகளில் கிறங்கியவள் சட்டென்று உதறினாள்.

“ப்ச்… அத்தான், அத்தை கிளம்ப சொன்னாங்க…”

“ஓகே கிளம்பு…” என்றவன் அவளை விடுவிக்க மாற்ற வேண்டிய உடையை எடுத்தவள் திகைத்தாள்.

அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் கவின்.

“ப்ச்… இப்படிப் பார்த்திட்டு இருந்தா நான் எப்படி டிரஸ் மாத்துவேன், கொஞ்ச நேரம் வெளிய இருங்களேன்…”

“என்னது, வெளிய போகவா… அதெல்லாம் முடியாது, இது நம்ம ரூம்… நான் உன் புருஷன், என் முன்னாடி நீ டிரஸ் மாத்தினா உன் கற்பு ஒண்ணும் குறைஞ்சிடாது…” குறும்பாய் சொன்னவன் கண்ணடிக்க கடுப்புடன் பார்த்தாள்.

“தவறு கண்ணு, தவறு… இப்ப எதுக்கு முறைக்கிற, நான் வேணும்னா சேலை கட்டிவிடவா…?” கேட்டதோடு நிற்காமல் அருகில் வர காவ்யாவுக்குத் தவிப்பாய் இருந்தது.

“இப்போதைக்கு கிளம்பி கீழே போனது போலத்தான்…” என யோசிக்கும்போதே அவள் அருகே வந்தவன் அவள் இடையில் கை வைத்து இழுக்க நெளிந்தாள். அவளை ஒட்டிக் கொண்டு நின்றவனின் நாசி அவள் கூந்தலில் வாசம் பிடிக்க அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“ப்ச்… கீழ போகணும்…”

“ம்ம் போகலாம்…” என்றவனின் இதழ்கள் அவள் கழுத்தில் குறுகுறுக்க நெளிந்தவள், “ப்ளீஸ் அத்தான், இதெல்லாம் நைட் வச்சுக்கலாம், இப்ப என்னைக் கிளம்ப விடுங்களேன்…” சிணுங்கினாள்.

“ஓகே… ஆனா நான் தான் சேலை கட்டிவிடுவேன்…”

“அதெல்லாம் வேண்டாம், எனக்கு ரொம்ப நல்லாவே சேலை கட்டத் தெரியும்…” என்றாள் அவள்.

“முடியாது, சேலை கட்ட சம்மதிக்கலேன்னா…” என்றவனின் கைகள் அவள் உடலில் மேலும் முன்னேற தவித்தாள்.

“ச்சே… சரியான இம்சை, ரொம்ப டென்ஷன் பண்ணறீங்க…” சலித்தவளை புன்னகையுடன் ஏறிட்டவன், “காவி நான் உன்னை டென்ஷன் பண்ணறேனா…” என்றவனின் குரலில் ஒரு வருத்தம் தெரிய அவளுக்கும் வருத்தமானது.

“இ..இல்ல அத்தான்… நான் சும்மா…”

“எவ்ளோ நாள்… உனக்காக உன் அருகாமைக்காக ஏங்கி தவிச்சிருப்பேன்… இப்ப இந்த நிமிஷம் கூட நமக்குக் கல்யாணம் ஆகிருச்சு, நீ என் மனைவின்னு யோசிக்க ஆச்சர்யமாருக்கு… அதை ஒவ்வொரு நிமிஷமும் ப்ரூவ் பண்ணி என் மனசுல பதிய வச்சிட்டு இருக்கேன்… உன் அக்காவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறவரை நீ என் காதலை ஏத்துக்கவே இல்லை… எவ்ளோ நாள் பதில் சொல்லாம என்னை பீல் பண்ண விட்டிருப்ப… இப்பவும் உனக்கு என் காதல் டென்ஷனா, இம்சையாத் தெரியுதா…?” அவன் கேள்வியில் பதறிப் போனாள் காவ்யா.

“அ…ஐயோ, நான் அப்படி சொல்லலை அத்தான்… உங்க காதலை நீங்க ஓப்பனா சொல்லிட்டிங்க, நான் அதை ஒத்துக்கலை அவ்ளோதான், எங்கே, அக்காவால நம்ம காதல் கல்யாணத்துல முடியாமப் போயிருமோன்னு மனசுக்குள்ள ரொம்ப தவிச்சிருக்கேன்… அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையாம உங்க காதலை ஒத்துக்கவும் மனசு வரலை… ஆனா, என் மனசு முழுதும் நீங்க தான் இருந்திங்க… இது நிஜம், உங்களோட வாழப்போற வாழ்க்கைக்காக ஒவ்வொரு நிமிஷமும் என் மனசு தவிச்சது எனக்கு தான் தெரியும்…” என்றவளின் குரல் நெகிழ்ந்திருக்க சந்தோஷமாய் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கவின்.

“ஐ லவ் யூ காவி…”

“மீ டூ லவ் யூ கவி…” என கவி, காவியம் பாடிக் கொண்டிருக்க, அவன் விருப்பப்படி அவனே அவளுக்கு சேலை அணிவித்து புறப்பட வைக்க கீழிருந்து அன்னையின் குரல் கேட்டது.

“கவின், காவியா, ரெண்டு பேரும் ரெடியாகிட்டீங்களா…?”

“இதோ, வந்துட்டோம் அத்தை…” குரல் கொடுத்தவளின் கழுத்தில் நெக்லஸை அணிவித்து கண்ணாடி முன் நிறுத்தினான் கவின்.

“எப்படி இருக்கு…” என அவள் கழுத்தில் தலை பதித்துக் கேட்க, உண்மையிலேயே அழகாய் கட்டி விட்டிருந்தான்.

“ம்ம்… சும்மா சொல்லக்கூடாது, என்னை விட அழகாவே கட்டி விட்டிருக்கீங்க…” என்றவள் தானாகவே அவன் கன்னத்தில் சந்தோஷமாய் இதழைப் பதிக்க, அவன் மட்டும் விடுவானா என்ன. அவள் இதழை லிப்ஸ்டிக் இல்லாமலே, சிவக்க வைத்தே விடுவித்தான் அந்தக் கள்ளன்.

கவினும் வேகமாய் உடை மாற்றி கீழே வர எல்லாரும் கிளம்ப தயாராய் இருந்தனர்.

“என்ன காவி, இவ்ளோ லேட்… அட, லிப்ஸ்டிக் போட்டியா என்ன, உதடெல்லாம் சிவந்திருக்கு…” ரம்யா கேட்க காவ்யா முழிக்க கவின் அர்ஜூனை அவஸ்தையாய் ஒரு பார்வை பார்க்க நமட்டு சிரிப்பு சிரித்தான் அவன்.

“அ…அது வந்துக்கா…” என திணறிக் கொண்டிருந்த சின்ன மருமகளை மாமனார் பொன்வண்ணன் காப்பாற்றினார்.

“சரி, இன்னும் பேசிட்டு இருந்தா லேட்டாகும்… மச்சான் கால் பண்ணார், அவங்களை பிக்கப் பண்ணனும், கிளம்புங்க…”

இளையவர்கள் ஒரு காரிலும் பெரியவர்கள் ஒரு காரிலுமாய் அந்த முதியோர் இல்லத்தை அடைகையில் மணி ஒன்றை நெருங்கி இருந்தது. பிள்ளைகளால் பார்க்க முடியாத, கைவிடப்பட்ட பெரியவர்கள் அந்த இல்லத்தில் நிறையப் பேர் தங்கியிருந்தனர். அதே முதியோர் இல்லத்தில் தான் சிவகாமியும் கணவனும் இப்போது இருக்கிறார்கள்.

பெரிய ஹாலில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க சில பெண்கள் எல்லாருக்கும் பரிமாறினர்.

“யாரோ ஒரு தம்பிக்கு பிறந்தநாள்னு நம்ம எல்லாருக்கும் விருந்து சமைச்சு கொண்டு வந்திருக்காங்களாம், நல்லா சாப்பிடு…” அருகே இருந்த சிவகாமியிடம் சொல்லிக் கொண்டே உணவை ரசித்து சாப்பிட்டார் அவள் கணவன்.

இலையைக் காலியாக்கிக் கொண்டிருந்த சிவகாமி, “எவ்ளோ நாளாச்சு நல்ல சாப்பாடு சாப்பிட்டு… இந்த முதியோர் இல்லத்துல கொண்டு வந்து தள்ளிட்டுப் போனதோட சரி… நம்ம மூத்த பிள்ளை திரும்பிக் கூடப் பார்க்கறதில்லை…”

“ஹூம்… ரெண்டு ஆம்பளைப் பிள்ளைங்களைப் பெத்தும் ஒண்ணை விதிக்கும், இன்னொண்ணை சதிக்கும் பலி கொடுத்துட்டு நிக்கறோம்…” புலம்பிக் கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தவர்கள் அதிர்ந்தனர்.

ஹாலில் குடும்பத்துடன் சந்தோஷமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ரம்யா, அர்ஜூனைக் கண்டதும் சிவகாமிக்கும் அவள் கணவனுக்கும் சட்டென்று முகம் கறுத்துப் போனது. அவர்களை கண்ட சரவணன், பூங்கொடியும் திகைத்தனர்.

“மல்லிகா, இவங்க இப்ப இங்கயா இருக்காங்க…”

“தெரியல அண்ணி, நானும் இப்பதான் பார்க்கிறேன்…”

அதற்குள் கணவனிடம் எதோ சொல்லி சிரித்துக் கொண்டே திரும்பிய ரம்யாவின் கண்ணில் அவர்கள் பட்டுவிட அவளும் அதிர்ந்து நோக்கி பின்பு இளக்காரமாய் சிரித்தாள். சிவகாமி பேச்சிழந்து சிலையாய் நிற்க வெங்கடேஷின் தந்தை கோபமாய் ரம்யாவைப் பார்த்தார்.

“நாங்க இங்கே அநாதை போல கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது நீ புருஷன், குடும்பம்னு செட்டில் ஆகிட்டியா… பார்க்கலாம், உன்னைல்லாம் எத்தன வருஷம் இவன் தாக்கு பிடிக்கப் போறான்னு…” அப்போதும் அடங்காத கோபத்துடன் அவளிடம் வந்து சீற அர்ஜூன் கோபமாய் அவரிடம் செல்ல சரவணன் தடுத்தார்.

“வேண்டாம் மாப்பிள்ள… நாம நல்ல மனசோட ஒரு நல்ல காரியத்துக்காக இங்க வந்திருக்கோம், எந்தப் பிரச்சனையும் வேண்டாம்…”

“அவர் சொன்னதுல என்ன தப்பு… இவளோட ராசிதான், என் புள்ளை காதலிச்ச பாவத்துக்கு போயி சேர்ந்துட்டான்… இப்ப இவளைக் கட்டிகிட்ட புருஷன் எத்தன நாளைக்கோ….” வார்த்தையை அனலாய் கொட்ட அமைதியாய் இருந்த ரம்யாவுக்கு கோபம் தலைக்கேறியது.

“ஏய்…!! உனக்கு அவ்ளோதான் மரியாதை, என் புருஷனைப் பத்தி ஏதாச்சும் சொன்ன, வயசுல மூத்தவன்னு கூடப் பார்க்காம ஓங்கி அறைஞ்சிருவேன்… அடங்க மாட்டியா, நீ பண்ணின எல்லா விஷயத்தையும் போலீஸ்ல சொல்லி லாக்கப்புல உக்கார வைக்கட்டுமா… தெரியாம தான் கேக்கறேன், உங்களுக்கெல்லாம் திருந்தற ஐடியாவே இல்லையா, அடுத்தடுத்து தப்புப் பண்ணி இருக்க இடம் இல்லாம தெருவுல நிக்கற நிலைமைக்கு வந்துடாதிங்க… ஜாக்கிரதை….” எச்சரிக்கையாய் விரலை நீட்டி சொன்னவள் கணவனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

கவினும், காவ்யாவும் புன்னகையுடன் நோக்கி நிற்க பெரியவர்கள் அவள் பேச்சில் திகைத்துப் பார்த்து நின்றனர்.

மலரிதழ் திறந்தும்

உன் மனம் திறவா

மௌன கணங்களின்

காதல் வலி தீர்க்க

உன் முத்தங்கள்

மருந்தாக வேண்டுமடி…

Advertisement