Advertisement

அத்தியாயம் – 23

காலை மிகவும் அழகாய் விடிந்தது.

முகத்தில் விழுந்த சூரிய ஒளிக்கற்றைகள் உறக்கத்தை கலைக்க கண்ணைத் திறந்தாள் காவ்யா. மெல்ல அசைய முயல கவினின் அணைப்புக்குள் இருந்தவளை மீண்டும் புன்னகையுடன் இழுத்து அணைத்துக் கொண்டான்.

இரவு முழுதும் நடந்த சீண்டல்களும், சிணுங்கல்களும், அதற்குப் பின் நடந்தேறிய கூடல்களும் அவள் முகத்தை செம்மையடையச் செய்ய நாணத்துடன் அவன் முகம் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் மிளிர்ந்தன. அடிக்கடி அவனது இதழ்கள் அவள் இதழை சிறை எடுத்திருந்ததில் உதடுகளில் லேசான காயமும், எரிச்சலும் இருந்தாலும் அது ஏனோ வேதனையாய் தோன்றாமல் மனதுக்கு ஒருவித  சந்தோஷ உணர்வையே கொடுத்தது.

அவனது இரும்புக் கைகள் அவள் இடையை வளைத்து அருகே இழுக்க சிணுங்கியவள் மெல்ல மாற்றி விட்டாள்.

“போதும் அத்தான்… ராத்திரி தூங்கவே விடலை, ஆல்ரெடி விடிஞ்சு நேரமாயிடுச்சு… விடுங்க, அத்தை இன்னும் காணோம்னு நினைக்க மாட்டாங்களா…” என்றவளின் செவியில் இதழ்களை உரசினான்.

“உன் அத்தை அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க… முதல் ராத்திரி, போல முதல் காலை எப்படி இருக்குன்னு ஒரு டிரையல் போகலாமா…” கண்ணடித்தவனை செல்லமாய் கன்னத்தில் அடித்து அவனை உதறிவிட்டு எழுந்தாள்.

“அச்சோ அத்தான், இருந்தாலும் நீங்க இவ்ளோ மோசமா இருக்கக் கூடாது… நான் குளிச்சிட்டு கீழ போறேன், அத்தை வெயிட் பண்ணுவாங்க…” சொன்னவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் மாற்று உடையை எடுத்து வைத்து டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தாள். அவள் பேச்சில் உல்லாசமாய் புன்னகைத்தவன் மனதில் ராத்திரி நினைவுகள் சுகமாய் வலம் வர மல்லாந்து படுத்தான்.

“ஹூம்… முதல் அட்டம்ப்ட்லயே பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகிட்டடா கவின், நைட்டு கலக்கிட்ட…” தன்னைத் தானே பாராட்டிக் கொண்டவன்,

“அண்ணன் என்ன பண்ணிருப்பான்… அட்லீஸ்ட் எக்ஸாம் ஆச்சும் அட்டன்ட் பண்ணிருப்பானா, இல்ல அரியர்ல பார்த்துக்கலாம்னு தள்ளி வச்சிருப்பானா… டவுட்டை கிளியர் பண்ணிருவோம்…” என்றவன் அலைபேசியை எடுத்தான்.

“என்ன மருமகளே, சீக்கிரம் எழுந்து குளிச்சு வந்துட்டிங்க… ரெண்டு மூணு நாளா சரியாத் தூங்காம அலுப்பா இருக்கும்ல, இன்னும் கொஞ்சநேரம் தூங்கி இருக்கலாமே…” சொன்ன மல்லிகா, மூத்த மகனுக்கும், மருமகளுக்கும் காபியைக் நீட்ட வாங்கிக் கொண்டனர்.

“ஆமாம் ரம்யா, நைட்டும் சரியா தூங்கிருக்க மாட்டிங்க… பெரியம்மா சொல்லற போல மெதுவா வந்திருக்கலாமே…” ரமா அவளைக் கண்ணால் அளவெடுத்துக் கொண்டே கிண்டலாய் சொல்ல ரம்யாவின் கண்கள் அர்ஜூனைத் தழுவ அவன் இயல்பாய் புன்னகைத்தான்.

“ரமா, சும்மா அவளைக் கிண்டல் பண்ணிட்டே இருக்காத…” என்று அடக்கிய மல்லிகா, “அர்ஜூன்… கவின், காவ்யாவும் வந்ததும் நாலு பேரும் வடபழனி முருகன் கோவிலுக்குப் போயிட்டு வந்திடுங்க…” என்றார்.

“சரிம்மா…” என்றவன் காபியைக் குடித்து முடிக்க, ரம்யா அமைதியாய் குடித்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜூனின் அலைபேசி சிணுங்க கவினின் எண்ணைக் கண்டவன், “இவன் என்ன, ரூமுல இருந்துட்டே எனக்கு கால் பண்ணறான்…” என நினைத்துக் கொண்டே போனுடன் வெளியே நடந்தான். அவன் செல்லவும் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ரம்யா பார்த்துக் கொண்டிருக்க அவளது அலைபேசியும் சிணுங்கியது.

அம்மாவின் எண்ணைப் பார்த்தவள் சந்தோஷத்துடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“அம்மா…”

“ரம்மி மா, எழுந்துட்ட தான…”

“ம்ம்… குளிச்சு காபியும் குடிச்சாச்சு மா…”

“அப்புறம், வந்து…” எனத் தயங்க,

“என்னமா, எதையோ கேக்கத் தயங்கற போல இருக்கு…”

“அதுவந்து மா… என்னவோ, மனசு ஒரு மாதிரி நிலையா இல்லாமத் தவிப்பா இருக்கு… ரெண்டு பொண்ணுங்களையும் நல்ல இடத்துல தான் கட்டிக் கொடுத்திருக்கோம்… ரெண்டு மாப்பிள்ளைகளும் தங்கமானவங்க தான், இருந்தாலும் மனசு கிடந்து அடிச்சுட்டே இருக்கு… காவியைப் பத்தி எனக்கு கவலை இல்லை, உன்னை நினைச்சு தான் அப்பாக்கும், எனக்கும் கவலையா இருக்கு மா…”

“ஏன்மா, இன்னும் எதுக்கு என்னை நினைச்சு கவலை…”

“சரியா சொல்லத் தெரியலடி, ஆனாலும் உன் மனசு பழசெல்லாம் மறந்துட்டு, மாப்பிள்ளையை மனசார ஏத்துகிட்டு இந்தப் புது வாழ்க்கைக்கு தயாராகணுமே… அதை யோசிச்சு தான் பயமா இருக்கு…” பூங்கொடி சொல்ல எதிரில் புன்னகையுடன் வந்த அர்ஜூனைக் கண்டவள்,

“மா… என் மனசுல பழைய எந்த நினைவும் இல்லை… உண்மைய சொல்லனும்னா இப்ப இந்த நிமிஷம் உங்க மாப்பிள்ளை மட்டும் தான் என் மனசுல இருக்கார்… பக்கத்துல உள்ள வைரத்தோட மதிப்பைப் புரிஞ்சுக்காம வெளிய கிடைச்ச சாதாரணக் கல்லை பொக்கிஷம்னு கொண்டாடிய முட்டாள் ரம்யா எப்பவோ இல்லாமப் போயிட்டா… இனி அவளை நினைச்சு நீங்க கவலைப் பட வேண்டாம், இனி எதுவா இருந்தாலும் உங்க மாப்பிள்ளை பார்த்துப்பார்…” என்றாள் அழுத்தமாக.

அவள் எதற்காக அதை சொல்லுகிறாள் எனப் புரியா விட்டாலும் கேட்ட அர்ஜூனின் விழிகள் வியப்புடன் அவளை நோக்க அவள் விழிகளும் அவன் மீது தானிருந்தது.

“ம்ம், நீ இப்படி தெளிவா பேசும்போது மனசுக்கு நிம்மதியா இருக்குடி ரம்மி, அப்புறம், நேத்து… எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா…” என்றார் தயங்கிக் கொண்டே.

“அம்மா, இனி எல்லாம் உங்க மாப்பிள்ளை பார்த்துப்பார்னு சொல்லிட்டேன்ல, அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி… என்னைப்பத்தி தேவையில்லாம யோசிச்சு பயப்படாம ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க…”

“சரிடி செல்லம், என் ரெண்டு பொண்ணுங்களும் சந்தோஷமா இருந்தாப் போதும்… சரி, அம்மா அப்புறம் பேசறேன், அத்தை கிட்ட சொல்லிடு…” என்றவர் அழைப்பை துண்டித்தார்.

“என்ன ரமி, அத்தைகிட்ட மாப்பிள்ளை பார்த்துப்பார்னு  என்னவோ சொன்ன…” என்றான் அவள் கணவன்.

“ம்ம்… நான் சொன்னதை கேட்டுட்டு தான இருந்திங்க, நீங்க என்னை நல்லாப் பார்த்துப்பிங்க தானே…” என்றவள் அவனைக் குறுகுறுப்பாய் நோக்கி செல்ல உள்ளுக்குள் சாரலை உணர்ந்தான் அர்ஜூன்.

காவ்யா குளித்து உடை மாற்றி நாணத்துடன் மாடி இறங்கி வர அவளைக் கண்ட மல்லிகாவின் முகம் மலர்ந்தது.

“என்ன சின்ன மருமகளே, நீ மட்டும் தனியா வர்ற… எங்க உன் புருஷன்…”

“அ..அவரு… குளிச்சிட்டு இருக்காரு அத்தை… சாரி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு…” என்றாள் தயக்கத்துடன்.

“இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்… உக்காரு காபி தரேன், குடிச்சிட்டு கவினுக்கும் கொண்டு போயி கொடு…”

“அச்சோ, நான் மாட்டேன்…” சட்டென்று சொன்னவள் எல்லாரும் அவளையே பார்க்கவும், “இ..இல்ல, அது வந்து… அவரே கீழ வந்து குடிக்கறேன்னு…” என்று திணறவும் ரமா கலகலவென்று சிரித்தாள்.

“சரி, சரி மென்னு விழுங்காத காவ்யா… விஷயம் என்னன்னு புரியுது…” என்றவள் அவள் காதருகே வந்து, “பையன் நைட்டு ரொம்ப பாடு படுத்திட்டானோ…” என கிசுகிசுக்கவும், “அச்சோ, போங்கண்ணி, நீங்க வேற…” என்றவள் சிணுங்கினாலும் முகம் குங்குமமாய் சிவக்க ரம்யாவும் பார்த்திருந்தாள். ஏனோ சட்டென்று மனதுக்குள் ஒரு ஏக்கம் நிறைந்தது.

நால்வரும் வடபழனி கோவிலுக்குக் காரில் கிளம்பினர். டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்த கவின் அண்ணனின் காதில் எதையோ கிசுகிசுக்க அவன் தலையாட்டிவிட்டு பின் சீட்டுக்கு வந்தான்.

“காவ்யா, நீ முன்னாடி கவின் பக்கத்துல உக்கார்ந்துக்க மா… நான் பின்னாடி உக்கார்ந்துக்கறேன்…” அர்ஜூன் சொல்ல காவ்யா சின்ன நாணப் புன்னகையுடன் முன்னில் கவின் அருகே சென்று அமர அர்ஜூன் பின்னில் இருந்த ரம்யாவின் அருகே அமர்ந்தான்.

“ஏன் பின்னாடி வந்துட்டிங்க…” அவள் மெல்லிய குரலில் கேட்க, “உன்னோட உக்காரணும்னு தோணுச்சு, அதான்…” என்றவனின் பதிலில் மனதுக்குள் ஒரு சில்லிப்பை உணர்ந்தவள் அமைதியானாள். ரம்யா பயணத்தில் பார்வையை வெளியே பதித்திருந்தாலும் முன்னில் இருந்த கவினின் சேட்டைகளும் காவ்யாவின் வெட்கமும் அவ்வப்போது அவள் கண்ணிலும் படாமல் இல்லை. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கண் மூடி அமைதியாய் அமர்ந்திருக்கும் அர்ஜூனைக் கண்டால் மனம் ஏன் கடுப்பாகிறது…” என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

முன்தினம் இரவு அவள் சொல்லித்தானே அவன் தன்னை விட்டு எட்டி நிற்கிறான் என்று மூளைக்குப் புரிந்தாலும் இயல்பாய் அந்த பருவத்தில் தோன்றும் கல்யாண ஆசைகள், கணவன், மனைவி உறவுக்குள் வசந்தகாலமாய் இருக்கும் புத்தம் புதிய கல்யாண நாட்கள்… என்று மனதுக்குள் ஒரு ஆசை எழுவதை அடக்க முடியவில்லை.

தன்னுடைய சிறு கண்ணசைவு போதும், வாழ்க்கையே அடுத்த நொடி வசந்தகாலமாய் மாறிவிடும் என்பது ரம்யாவுக்கும் தெரியும்… ஆனாலும் ஏதோ ஒரு தடை, மனதில் முன்னமே காதல் என்ற பிம்பத்தில் பொருத்திப் பார்த்த உருவம் இம்சையாய் அழுத்திக் கொண்டிருந்தது.

மனம் எனும் கடலில் சிறு மழைத்துளி விழுந்தால் உண்டாகும் சலனம் ஒருபோதும் அலையாகாது…  அதுபோல் தான் ரம்யாவின் மனதில் பதிந்து போன காதலும்… அது வெறும் சலனமென்று மூளைக்குத் தெரிந்தாலும் சலனத்தில் கலங்கிய நெஞ்சு முன்னுக்கும் பின்னுக்குமாய் ஏற்றுக் கொள்ளா முரணில் குழப்பிக் கொண்டது.

“ரமி…” காதருகே ஒலித்த அர்ஜூனின் குரலில் சட்டென்று விழித்தவள் என்னவென்று நோக்க, “கோவில் வந்திடுச்சு மா, இறங்கு…” என்றான்.

இரு ஜோடிகளும் கோவில் பிரகாரத்துக்குள் நுழைந்தனர்.

பூஜைக்கூடையை நீட்ட அர்ச்சகர் வாங்கிக் கொண்டு நகர்ந்தார். பூஜை முடித்து மல்லிகா சொன்னது போல் நான்கு பேருடைய பெயரிலும் அர்ச்சனை சொல்லி, தீபாராதனை காட்ட முருகனின் முகத்தையே பார்த்து கை கூப்பி நின்ற மனதுக்குள் ஒருவித அமைதி தோன்றியது.

“புதுசா கல்யாணமான ஜோடியா… இந்தாங்கோ, இந்தப் பிரசாதத்தை அவா நெத்தியில தொட்டு விடுங்கோ…” சொன்ன அர்ச்சகர் நீட்டிய குங்குமத்தை எடுத்து மனைவியின் நெற்றியில் வைத்து விட்டனர். பூஜைக் கூடையில் மல்லிகைப்பூவை வைத்து நீட்ட பெண்கள் தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

நால்வரும் பிரகாரத்துக்கு வெளியே ஓரமாய் அமர்ந்தனர். காவியை உரசிக் கொண்டு கவின் அமர அவள் செல்லமாய் கணவனை முறைத்தாள்.

“ஐயோ அத்தான், இது கோவில்… இங்கயாச்சும் கொஞ்சம் அமைதியா இருக்கக் கூடாதா…?” அவள் சன்னக் குரலில் சிணுங்க, “கோவிலா இருந்தா என் பொண்டாட்டியை நான் உரசக்கூடாதா… அந்த முருகப் பெருமானே ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டினவர் தானே…” என்றான்.

“அச்சோ, உங்கள வச்சுக்கிட்டு… அக்காவும், பெரியத்தானும் என்ன நினைப்பாங்க…” சிணுங்கியவள் அவர்களைப் பார்க்க அவர்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

கவின் அவள் கையைக் கோர்த்துக் கொள்ள முயல அவள் தட்டி விட்டாள்.

இதை எல்லாம் கவனிக்காமல் இருந்தாலும் ரம்யாவின் கவனத்தில் வந்து கொண்டு தான் இருந்தது.

கவின் ஒரு தேங்காய் மூடியை எடுத்து நிலத்தில் அடித்து சாப்பிடத் தொடங்க, “அக்கா, தேங்கா சாப்பிடறியா…” தங்கையின் குரலில் திரும்பியவள் வேண்டாமென்று மறுக்க, “உங்களுக்கு வேணுமா அத்தான்…” என்றாள் அர்ஜூனிடம்.

அவன் கை நீட்ட ஒரு தேங்காத் துண்டை கொடுக்க அதைத் நிலத்தில் தட்டி சிரட்டையை நீக்கி தேங்காயை ஊதி ரம்யாவிடம் நீட்டினான் அர்ஜூன்.

“இந்தா ரமி, நீயும் சாப்பிடு…” எனவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் சாப்பிடத் தொடங்கினாள்.

“காவி, தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்…” சொன்ன கவின் எழுந்து ஓரமாய் இருந்த கடைகளை நோக்கிப் போக மூவரும் தேங்காய் சாப்பிட்டனர்.

“அத்தான், இதையும் கொஞ்சம் உடைச்சு கொடுங்க… அடுத்த மூடியை காவ்யா கொடுக்க வாங்கிய அர்ஜூன் அதை உடைப்பதற்காய் நிலத்தில் தட்ட சட்டென்று அதிலிருந்த சிரட்டை கையைக் கிழித்து காயமாக்க ரத்தம் வந்தது.

“அச்சச்சோ கைல காயமாகிடுச்சே அத்தான்…” காவ்யா வருத்தப்பட அவன் கையிலிருந்த தேங்காயை வாங்கிய ரம்யா, “ப்ச்… இப்படிதான் கவனமில்லாம குழந்தை போல கையைக் காயம் பண்ணிப்பிங்களா…” என திட்டிக் கொண்டே கையிலிருந்த டவலால் அதைத் துடைத்து ஊதி விட்டாள்.

அதற்குள் கவின் தண்ணி பாட்டிலுடன் வர அதைக் காயத்தில் ஊற்றிக் கழுவி விட்டு, “சின்னக் காயம் தான், சரியாப் போயிடும்…” என்று சொல்ல அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த மூவரும்,

“சின்னக் காயம்தான்னு எங்களுக்கு அப்பவே தெரியும், உங்களுக்கு தான் இவ்ளோ லேட்டா தெரிஞ்சிருக்கு அண்ணி…” என்று கவின் சொல்லவும் சிறு நாணத்துடன் அவன் கையை விட்டவள்,

“சரி கிளம்பலாம்…” என எழுந்து கொண்டாள். நால்வரும் வீட்டுக்கு வந்தனர். உறவுகள் எல்லாம் கிளம்பிப் போனதால் அவர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

மாமனார் வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்ததால் குடும்பத்துடன் அங்கே கிளம்பினர். காவ்யாவின் முகத்தில் தெரிந்த நாணமும், சந்தோஷமும் பெற்றோருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க ரம்யாவின் முகத்தில் தெரிந்த அமைதி யோசனையைக் கொடுத்தது.

நல்லபடியாய் விருந்து முடிய உறவினர்கள் கூட்டமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“அப்புறம் மல்லிகா… ஒண்ணாவே ரெண்டு கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சாச்சு… இனி ரெண்டு மருமகளும் ஒண்ணா புள்ள பெத்துகிட்டா உனக்கு தான சிரமம்…” ஒரு கிழவி தொடங்கி வைக்க மல்லிகா சிரித்தாள்.

“எனக்கென்ன சிரமம்… நானும் அண்ணியும் பேரப் புள்ளைங்களை சந்தோஷமாப் பார்த்துக்கப் போறோம்…”

“ம்ம்… எனக்கென்னவோ சின்னவளைப் பார்த்தா அவதான் முதல்ல உன்னைப் பாட்டியாக்கப் போறான்னு தோணுது…” அந்தக் குசும்பு பிடித்த பாட்டி காவ்யாவை சிவக்கச் செய்ய ரம்யாவின் முகம் வருத்தத்தில் சுருங்கியது.

“என்ன ஆத்தா, இம்புட்டு வயசாகியும் விவஸ்தை இல்லாமப் பேசிட்டு… எந்த மருமக முதல்ல பெத்தாலும் அது என் வீட்டு வாரிசுங்கதானே…” என்ற மல்லிகா,

“காவி, அக்காவும் நீயும் உங்க ரூமுக்குப் போயி ரெஸ்ட் எடுங்க…” என அனுப்பி வைத்தார். அவர்கள் அறையில் முன்னமே அர்ஜூனும் கவினும் இருந்தனர்.

ரம்யாவின் கட்டிலில் படுத்து மொபைல் நோண்டிக் கொண்டிருந்த அர்ஜூன் அவள் வரவும் எழுந்து அமர்ந்தான். முகத்தைக் கண்டவன், “ரமி… என்னமா, ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு…” என்றான் பரிவுடன்.

“ப்ச்… எனக்கு கோபமா வருது அர்ஜூன்… கல்யாணமானா உடனே குழந்தை பத்தி பேசத் தொடங்கிருதுங்க சில நான்சென்ஸ் பெருசுங்க… காவிக்கு தான் முதல்ல குழந்தை உண்டாகும்னு சொல்லுது அந்தக் கிழவி… நாமளும்தான் நினைச்சா பத்து மாசத்துல குழந்தையைப் பெத்துக்குவோம்…” என்றதும் அவன் பார்வை ஆர்வமாய் மாற பேச்சை நிறுத்தியவள், “என்ன…” என்றாள் புருவம் தூக்கி.

“இல்ல, நீ இப்ப சொன்னதைக் கேட்டதும் ஒருவேளை மனசு மாறிட்டியோன்னு…” என்றவன் அவள் கையில் கோலம் வரைய அவள் தட்டிவிட்டாள்.

“ப்ச்… போங்க அர்ஜூன், நீங்களும் புரியாமப் பேசிட்டு… எனக்கு இருக்கிறதும் எப்பவும் ஒரே மனசு தான், அதை நினைக்கும் போதெல்லாம் சுவிட்ச் போட்ட போல மாத்திக்க முடியாது… உங்களுக்கு எல்லாமே தெரியும் தானே… நான்தான் கொஞ்சம் டைம் கேட்டனே, அப்புறம் என்ன…” வெடுக்கென்று கோபமாய் கேட்கவும் முகம் வாடியவன்,

“சாரி ரமி…” எனத் திரும்பிப் படுத்துக் கொள்ள அதற்கும் அவளுக்கு கோபமே வந்தது.

தன் மனது என்ன எதிர்பார்க்கிறது என அவளுக்கே புரியாமல் விநோதமான குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள். ஆனால் அர்ஜூனின் முக வாட்டம் அவள் மனதை கலங்கடித்ததும் உண்மை.

கதவைத் தாளிட்டு வந்தவள் அவன் அருகே சற்று உரசியபடி படுத்துக் கொள்ள அவன் நீங்கிப் படுக்கவும் கோபமாய் திரும்பிப் படுத்துக் கொண்டாள் ரம்யா.

தள்ளிப் போ என்று

என் உதடுகள்

உச்சரிக்கும் வார்த்தையை

உணர்ந்த உனக்கு

தள்ளிப் போகாதே என்று

கதறும் இதயத்தின் ஓசை

மட்டும் கேட்காமல்

போனதென்ன…

Advertisement