Advertisement

அத்தியாயம் – 22

நடப்பது எல்லாமே கனவு போலத் தோன்ற ஒருவித பிரம்மையுடன் பொம்மை போல அமர்ந்திருந்தாள் ரம்யா.

தலையிலும் முகத்திலும் வாழ்த்தின் அடையாளமாய் வந்து விழுந்த அட்சதைகள் நடப்பது எல்லாம் அப்பட்டமான நிஜம் என உணர்த்தினாலும் கழுத்தில் இதமாய் உரசும் மஞ்சள் சரடையும், இதயத்துக்கு மிக சமீபமாய் அது தாங்கி நிற்கும் மாங்கல்யத்தையும் ஒருவிதப் பரவசத்துடன் குனிந்து பார்த்துக் கொண்டாள்.

அர்ஜூன் அவள் கழுத்தை சுற்றி நெற்றியில் செந்தூரத்தை அழுத்தமாய் தொட அந்த ஸ்பரிசத்தில் தன்னையுமறியாமல் கண்ணை மூடிக் கொண்டாள்.

“ரமி…” மனதிலுள்ள நேசத்தை வார்த்தையில் தேக்கி அவளை மென்மையாய் அழைக்க கண்ணைத் திறந்து கணவனைப் பார்த்தவளை நோக்கி இதமாய் புன்னகைத்தவன், ‘என்ன’ என்பது போல் புருவத்தை மேலேற்றிக் கேட்க அவனின் அந்த செய்கை பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டது.

யாருக்கும் தெரியாமல் அவள் கையை மெல்ல அழுத்தி, “ரமி, கூலா இருமா… நான் பக்கத்துல இருக்கேன்ல…” எனவும் மெல்லத் தலையாட்டியவளின் மனதில் உள்ள உணர்ச்சியை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தப்பக்கம் கவின் காவ்யாவின் முகத்திலோ மாங்கல்யம் அணிவித்ததும் ஆனந்தம் தாண்டவமாடியது.

அவள் கழுத்தை சுற்றி கையைக் கொண்டு வந்து நெற்றியில் அழுத்தமாய் குங்குமத்தை வைத்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில், “லவ் யூ காவி…” எனக் காதோடு கிசுகிசுக்க அவள் முகமோ குங்குமத்துக்கு போட்டியாக நாணத்தில் சிவந்து போனது.

கையைப் பிடித்து அக்னியை வலம் வருகையில் அவனது கைக்குள் இருந்த அவளது கையின் உள்ளங்கையில் கவின் மெல்ல சுரண்ட கூச்சத்துடன் தவித்துப் போனாள் காவ்யா. அவனது அருகாமையும், சின்னச் சின்ன குறும்புகளும் அவளை குதூகலிக்கச் செய்ய முகத்தில் மறையாத நாணமும், புன்னகையுமாய் இருந்தாள்.

அடுத்து அம்மி மிதித்து மனைவியின் கால் விரலில் அழகான மெட்டியை அணிவித்தனர். அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் முடிந்து பெரியவர்கள் வரிசையாய் வந்து ஆசிர்வதிக்க, இரு ஜோடிகளும் அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். பிறகு விருந்து உண்ணும் நேரம் வரை வீடியோகிராபர் அவர்களைத் தத்தெடுத்துக் கொள்ள இரு ஜோடிகளும் போஸ் கொடுத்து களைத்துப் போயினர்.

“போதும், போட்டோ எடுத்தது, அவங்களைக் கொஞ்சம் ப்ரீயா விடுங்க…” என மல்லிகா தான் காப்பாற்றிக் கூட்டி வந்து சாப்பிட அமர்த்தினார்.

தம்பதியர் ஜோடியாய் சாப்பிட அமர ஒருவருக்கொருவர் இனிப்பை ஊட்டிக் கொள்ளுமாறு சுற்றி நின்ற இளவட்டங்கள் பாடாய்ப் படுத்த கவின், காவ்யா புன்னகையுடன் அதைச் செய்தாலும் ரம்யாவுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.

எல்லாம் நல்லபடியாய் முடிந்து மண்டபத்தில் இருந்து  தம்பதியராய் பெண்ணின் வீட்டுக்கு முதலில் சென்று அங்கே பால், பழம் கொடுக்கும் சடங்கை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்ப சரவணனும், பூங்கொடியும் சந்தோஷமும் நிறைவுமாய் அனுப்பி வைத்தனர்.

இரு மருமகளையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று குத்துவிளக்கை ஏற்ற வைத்தாள் மல்லிகா. சாமி கும்பிட்டு முடித்ததும் மணமக்களை ஹாலில் அமர்த்தினர். உறவுகள் எல்லாரும் முன்னமே அறிமுகம் ஆனவர்கள் என்பதால் யாரையும் அறிமுகப்படுத்த அவசியம் இல்லாமல் போனது.

அர்ஜூன், கவின் இருவரும் வந்த நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, மணப்பெண்கள் இருவரும் சோர்வுடன் இருப்பதைக் கண்ட மல்லிகா, “பாவம் புள்ளைங்க ரெண்டும் காலைல நேரமா எழுந்தது… ரூம்ல போயி நகை எல்லாம் கழற்றி வச்சிட்டு ரெஸ்ட் எடுங்கமா… ரமா, இவங்களை என் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ…” என்று சொல்ல,

“ஆமாமா, அப்பத்தான் நைட் சடங்குக்கு பிரஷ்ஷா இருக்க முடியும், இல்ல பெரியம்மா..” என்றவளை நோக்கி மல்லிகா சிரிக்க, காவ்யாவின் முகம் நாணத்தில் சிவந்தது என்றால் ரம்யாவின் முகமோ அச்சத்தில் சிவந்தது.

“இவ ஒருத்தி, சரி கூட்டிட்டுப் போ…” எனவும் ரம்யாவும், காவ்யாவும் ஓய்வெடுக்க கீழே இருந்த அறைக்கு சென்றனர். மாலை ஆனதும் சொந்தங்கள் ஒவ்வொருத்தராய் கிளம்பி செல்ல முக்கிய சில உறவுகளும் நண்பர்களும் இவர்களும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

அந்தப் பெரிய அறையில் காவ்யா சோர்வுடன் கட்டிலில் படுத்த சிறிது நேரத்தில் உறங்கிப் போக, ரம்யாவுக்கு உறக்கம் வராமல் சோபாவில் சும்மா படுத்துக் கொண்டாள். மனதுக்குள் ஒருவித பயமும் படபடப்பும் மாறாமல் அழற்றிக் கொண்டிருந்தது.

அமைதியாய் ஒருக்களித்துப் படுத்திருந்தவள் காதில் உஸ்… உஸ்… என்று ஏதோ சத்தம் விழ கவனித்தாள்.

ஜன்னல் பக்கத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. அங்கே நிழலாய் ஒரு தலை தெரிய யாரென்று கவனிக்க கவின் தான் நின்று கொண்டு காவ்யாவை ஒரு சின்ன குச்சியை விட்டு தட்டி அழைத்துக் கொண்டிருந்தான். அவளோ எதுவும் தெரியாமல் அசையாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சோபா ஓரமாய் இருந்ததால் ரம்யா அங்கே இருந்தது ஜன்னல் அருகே நின்ற கவினுக்குத் தெரியவில்லை.

“தடிமாடு, எப்படித் தூங்கறா பாரு… கொஞ்சமாச்சும் இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சுன்னு நினைப்பு இருக்கா… புருஷன் எங்க போனானோ, என்ன ஆனானோ எந்த நினைப்பும் இல்லாம சுகமாத் தூங்கறதைப் பாரு…” என வாய்விட்டு முணுமுணுக்க அதைக் கேட்டதும் அவளுக்குத் தன்னை மீறிப் புன்னகை வந்தது. இருந்தாலும் அங்கே இருப்பது போல் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருக்க கவின் சென்றுவிட்டான்.

“இந்த காவிக்கு எப்படி இப்படித் தூங்க முடியுது…” என்றவள் தங்கையின் அருகே சென்று அவள் முகத்தைப் பார்க்க சிறு புன்னகையுடன் நிம்மதியாய் குழந்தை போல் உறங்குபவளைக் கண்டு புன்னகைத்தாள்.

“கல்யாணமானாலும் என் தங்கை குழந்தைதான், கவினுக்கு தான் அவசரம் போல…” என்றவளுக்கு கணவனின் நினைவு வர, “அர்ஜூனுக்கும் இப்படி எல்லாம் பீல் இருக்குமோ…? என்னைத் தனியாப் பார்க்கணும், பேசணும்னு… இருந்திருந்தா வந்திருப்பாரே…” என அவளே பதில் சொல்லிக் கொள்ள, அவன் அருகாமைக்கு ஒரு மனம் ஏங்க அதே மனம் தயங்கவும் செய்தது.

“ரமி…” காதுக்குள் கணவனின் குரல் ரம்மியமாய் ஒலிக்க மெல்ல ஏறிட்டவளின் மிக அருகே நின்றவனின் மூச்சுக் காற்று அவள் முகத்தில் விழுந்து சுகமாய் இம்சித்தது. புன்னகை மிளிரும் இதழ்களும் அதன் மேலே அளவாய் கத்தரித்த கட்டி மீசையும் அவனை அழகனாய் காட்ட, மனம் மயங்கத் தொடங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்புடன் குனிந்து கொண்டாள் ரம்யா.

அவன் இதழ்கள் அவளை மிக நெருங்கி வர கண்ணை இறுக மூடிக் கொண்டவளின் கழுத்தில் அவை ஊர்வலம் செய்ய சிலிர்த்துக் கொண்ட ஒவ்வொரு ரோமத்திலும் அந்த  ஸ்பரிசத்தை உணர்ந்தவள் உடல் நடுங்குவதை உணர்ந்தாள்.

“வே…வேணாம் ப்ளீஸ், விடுங்க…” என்றவள் அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டு வேகமாய் கதவைத் திறந்தாள்.

“அக்கா என்னாச்சு… எதுக்கு என்னைத் தள்ளி விடற, ரமாக்கா கூப்பிடறாங்க பாரு…” அருகில் நின்று காவ்யா சொல்லிக் கொண்டிருக்க டபக்கென்று கண்ணைத் திறந்தவள் மலங்க மலங்க விழித்தாள். சோபாவில் கண்ணை மூடிப் படுத்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்.

“என்ன ரம்யா, ஏதாச்சும் கனவு கண்டியா… விடுங்கன்னு என்னவோ சொல்லி முனங்கிட்டு இருந்த…” ரமா கேட்க வெட்கம் பிடுங்கித் தின்றது ரம்யாவுக்கு.

“இ..இல்ல, அப்படி ஒண்ணுமில்ல…” என்றவள் எழுந்து அமர்ந்து கொள்ள, “ஹூம், நம்பிட்டேன்…” என வில்லங்கமாய் சிரித்த ராமாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள்.

“ரெண்டு பேரையும் பெரிம்மா குளிச்சிட்டு சாப்பிட வர சொன்னாங்க…” என்றாள் ரமா.

நேரம் நகர இருவரும் குளித்து உடை மாற்றியிருக்க, ரமா அழைக்க வந்தாள். ஜோடியாய் இரு மகன்களும் துணையுடன் அமர தானே பரிமாறினார் மல்லிகா.

“நல்லா சாப்பிடுங்க பிள்ளைங்களா, மதியமும் யாரும் சரியா சாப்பிடலை…” சொல்லிக் கொண்டே இட்லியை அவர்கள் தட்டில் வைக்க ரம்யா மெல்ல கொறித்தாள். காவ்யா கவினை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிட மேஜைக்கு அடியில் தனது காலால் அவளது காலைத் தேடி வேண்டுமென்றே மிதித்தான் கவின்.

“ஆ…” என்றவள் கணவனை முறைக்க, காதில் கிசுகிசுத்தான்.

“ஆசையா உன்னைப் பார்க்க ரூமுக்கு வந்தா கும்பகர்ணன் தங்கச்சி போல தூங்கிட்டு இருக்க… இருடி, இன்னைக்கு ராத்திரி உனக்கு சிவராத்திரி தான்…” என்றதும் அவள் எக்கச்சக்கமாய் சிவந்தாள்.

“என்னடா கவின், என் சின்ன மருமக காதைக் கடிக்கிற… சின்னப் புள்ளையை மிரட்டாத, அப்புறம் உனக்கு தான் கஷ்டம்…” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

அதைக் கண்ட ரம்யாவின் பார்வை அர்ஜூனைத் தழுவ அவன் அவளையே பார்ப்பதைக் கண்டு சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“இன்னும் ஒரு இட்லி வச்சுக்க, ரமி…” மெல்லிய குரலில் அர்ஜூன் சொல்ல, “இல்ல பசிக்கலை, போதும்…” என்றாள்.

உணவு முடிந்து அவர்கள் அறைக்கு செல்ல சிம்பிளாய் ஒரு கிரேப் சேலையில் அளவான நகைகளுடன் இருவரையும் புறப்பட வைத்தனர் ரமாவும் மற்றொரு பெண்ணும்.

இரு ஜோடிகளையும் மல்லிகா பூஜை ரூமுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட சொன்னார்.

“இன்னைக்கு நீங்க தொடங்கற வாழ்க்கை எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கங்க… ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுகிட்டு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து எந்தப் பிரச்சனை வந்தாலும் ஒருத்தருக்கு மற்றவர் ஆதரவா, ஆறுதலா இருந்து உங்க மண வாழ்க்கையை சந்தோஷமா கொண்டு போக வேண்டியது உங்க கைல தான் இருக்கு… நல்லாருங்க…” பொன்வண்ணன், மல்லிகா காலில் நான்கு பேரும் விழுந்து வணங்க பெரிய மனிதராய் வாழ்த்திவிட்டு ஹாலுக்கு சென்றார்.

“அர்ஜூன், கவின் ரெண்டு பேரும் உங்க ரூமுக்குப் போங்க… கொஞ்ச நேரத்துல ரம்யாவும், காவ்யாவும் வந்திடுவாங்க…” மல்லிகா சொல்ல கவின், “எதுக்குமா உங்களுக்கு சிரமம்,  நாங்களே எங்க துணையை ரூமுக்கு அழைச்சிட்டுப் போயிடறோம், என்னண்ணா…” என்றான் அண்ணனிடம்.

“அ..ஆமாம்மா, நோ பார்மாலிட்டீஸ்…” என்று அர்ஜூனும் சொல்ல, “எங்களுக்கு அதுல ஒரு சிரமமும் இல்லை, நீங்க முதல்ல ரூமுக்குப் போங்க…” என்று மல்லிகா சிரிக்கவும், காவ்யாவுக்கு வெக்கமாய் இருந்தது.

“அய்யோ… இந்த கவின் அத்தான் என்ன கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம அத்தைகிட்ட இப்படிப் பேசறார்… அவங்க என்ன நினைப்பாங்க, விவஸ்தை கெட்ட அத்தான்…” என மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்க,

“ஹூம்… மாமியார் அதிகாரத்தை இன்னைக்கே கைல எடுத்துக்கப் பார்க்கறீங்க மிசஸ் மல்லிகா பொன்வண்ணன், இதெல்லாம் நல்லா இல்ல, சொல்லிட்டேன்… சரி, சீக்கிரம் உங்க மருமகளுங்களை ரூமுக்கு அனுப்பி வைங்க…” என்ற கவின், “வாண்ணா… நாம போவோம்…” என்று அண்ணனை கை பிடித்து மாடி அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவன் பேச்சில் சிரித்துக் கொண்ட மல்லிகா மருமகள்கள் இருவரும் திகைத்து நிற்பதைக் கண்டு புன்னகைத்தார்.

“அவன் கிடக்கறான் சின்னப் பையன், அவனுக்கு எப்பவும் விளையாட்டு தான்…” என்றவர் “ரமா… கிச்சன்ல பாலை சுண்டக் காய்ச்சி வச்சிருக்கேன், அதை ரெண்டு சின்ன சொம்புல ஊத்தி எடுத்திட்டு வா…” என்றாள்.

“என்ன மருமகளுங்களே, சீக்கிரமே ரெண்டு பேரும் எனக்கு பாட்டியா பதவி உயர்வு கொடுத்திருவிங்க தானே…” என்று கேட்க சகோதரியர் நாணத்துடன் குனிந்து கொண்டனர். இருவரையும் அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

“சந்தோஷமா, நல்லாருக்கணும் கண்ணுங்களா…” என்று இருவரின் கைகளிலும் பால் சொம்பைக் கொடுத்து, “ரமா… ரூம் வரைக்கும் போயி ரெண்டு பேரையும் விட்டுட்டு வாங்க…” என்று அனுப்பி வைத்தார்.

மாடிப்படி ஏறுகையில் காவ்யாவின் மனதுக்குள் ஏதேதோ கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருந்ததென்றால் ரம்யாவின் மனதில் கலக்கமும், பயமும் அதிகமாய் இருந்தது.

“ஏதோ ஒரு வேகத்தில் அர்ஜூனை மணக்க சம்மதித்து விட்டாலும் மனதுக்குள் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்க அவஸ்தையாய் உணர்ந்தாள்.

எதிரெதிர் அறைகள் முன்பு அவர்களை நிறுத்திய ரமா, “ரெண்டு பேரும் பயந்துடாம, பதறாம சந்தோஷமா இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க, பிள்ளைகளா… வாழ்த்துகள்…” என்று சொல்ல இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றனர்.

கட்டிலில் சாய்வாய் அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த அர்ஜூன் ரம்யாவைக் கண்டதும் எழுந்தான். அவள் தயங்கி கதவருகே நிற்க அருகே வந்தவன், “என்ன ரமி, எதுக்கு இந்த தயக்கம்…? பயப்படாம உள்ள வா…” என அருகே வந்து அவளது கையைப் பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தான்.

அறையில் பெரிதாய் அலங்காரம் எதுவுமில்லை. கட்டிலில் பூ அலங்காரம் வேண்டாம் என்று அர்ஜூன் சொல்லி விட்டதால் ஒரு உருளியில் மலர்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்க இதமான நறுமணம் அறை எங்கும் பரவி இருந்தது. கல்யாணம் முடிவானதும் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்ட ஓரளவு பெரிய அறை.

தயக்கத்துடன் குனிந்தபடி அமர்ந்தவளின் அருகே கதவைத் தாளிட்டு வந்து அமர்ந்தான் அர்ஜூன்.

“ரமி…”

“ம்ம்…” என்றவளின் குரல் அவளுக்கே கேட்காமல் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு ஒலிக்க அர்ஜூன் புன்னகைத்தான்.

“உனக்கு என்னாச்சு ரமி, ஏன் இப்படி நெர்வஸா இருக்க…?”

அவள் பதில் சொல்லாமல் மௌனமாய் குனிந்திருக்க, “ம்ஹூம்… உனக்கு இந்த வேஷம் செட் ஆகல, எப்பவும் போல படபடன்னு மனசுல உள்ளதை யாரா இருந்தாலும் யோசிக்காமப் பேசுற என் ரமி என்ன ஆனா…?” அவனது கேள்வி அவளுக்கு இதமாய் இருக்க மெல்ல ஏறிட்டாள்.

“தெ..தெரியல, எனக்கு ஒரு மாதிரி இருக்கு…”

“ரமி, என்னைப் பாரு…” அர்ஜூன் சொல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“என்னைப் பார்த்தா உனக்கு ரேப்பிஸ்ட் மாதிரி தோணுதா…?” எனவும் அவனை முறைத்தவள், “ச்சீ… என்ன கேள்வி இது…?” என்றாள் கோபமாய்.

“பின்ன எதுக்கு இப்படி பயந்துக்கற, உன் சம்மதம் இல்லாம உன்னை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கேனா இல்லையா…?”

“ம்ம்… சொன்னிங்க, இருந்தாலும் கொஞ்சம் பயமா…”

“அப்ப அந்த பயத்தை உண்மையாக்கிட வேண்டியதுதான்…” அவன் சொல்ல திகிலாய் நிமிர்ந்தாள் ரம்யா.

“என்ன சொல்லறீங்க…?”

“உன்னை ரேப் பண்ணப் போறேன்னு சொன்னேன்…” என்றவன் சட்டென்று அவளைக் கட்டிலில் தள்ள மல்லாந்து விழுந்தவளின் அருகே சரிந்தவன் அவள் முகத்தை நோக்கிக் குனிய, இறுக்கமாய் கண் மூடி முகத்தைத் திருப்பிக் கொண்டவள், “யூ பிராட், வேண்டாம் அர்ஜூன், என்னை விடு…” என்று நெஞ்சில் கை வைத்துத் தள்ள முயன்றாள்.

தன் அருகே உரசியபடி அவன் படுத்திருப்பதை உணர்ந்தாலும் சில நிமிடங்களுக்குப் பின்னும் எதுவும் செய்யாமல் இருக்கவே மெல்ல கண்ணைத் திறந்தாள்.

வெகு அருகாமையில் அவனது முகம்… அவளையே புன்னகையுடன் பார்த்து நின்ற கண்களில் அத்தனை காதல்… அந்தக் கண்களில் அப்படியே சிக்குண்டு விழிகளை விலக்கத் தோன்றாமல் அவளும் பார்த்திருந்தாள்.

கண்களில் வழிவது

காதலின் வலியா வழியா…

விழிகளில் விடிவது

வாழ்க்கை விதியா சதியா…

இமை மூடி கண் மூட

இதழ் மட்டும் திண்டாட…

இதயத்தில் கொண்டாடும்

இன்பத்தின் நாள் என்றோ…

Advertisement