Advertisement

அத்தியாயம் – 21

நாட்கள் அழகாய் நகர்ந்து செல்ல அவர்களுக்கான கல்யாண நாளும் நெருங்கி வந்தது. காவ்யா ஆவலாய் அந்த வைபவத்தை எதிர்பார்த்து நாணத்துடன் காத்திருக்க, ரம்யாவின் மனதுக்குள் இப்போதும் ஒரு பதட்டமும், பயமும் இருக்கவே செய்தது. இயல்பாய் காட்டிக்கொள்ள முயன்றாலும் முடியாமல் தவித்தாள்.

அதை அர்ஜூனும் உணர்ந்திருந்தான். தனது அருகாமை மட்டுமே அவளை பலப்படுத்தும் என நினைத்தவன் அவள் முழுமையாய் தனக்கு சொந்தமாகும் நிமிடத்திற்காய் காத்திருந்தான். கவின், காவ்யா காதல் கனவில் இப்போதே டூயட் பாடத் தொடங்கி இருந்தனர்.

முக்கியமான சொந்தங்கள் எல்லாம் வரத் தொடங்கி இருக்க பர்வதம் பாட்டி ஒருவாரம் முன்னமே வந்திருந்து சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

அவர்கள் குடும்ப வழக்கப்படி முதல்நாள் இரவு நிச்சயதார்த்தம், அடுத்தநாள் அதிகாலையில் முகூர்த்தம் என முடிவு செய்திருந்தனர்.

இரு வீட்டு பெற்றோரும் கல்யாண வேலையிலும், வந்தவர்களை கவனிப்பதிலுமாய் உற்சாகமும் பரபரப்புமாய் ஓடிக் கொண்டிருந்தனர். அந்த பெரிய மண்டபம் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருக்க இரண்டு கல்யாண மேடைகள் பூக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு வீட்டிலும் முதலும் கடைசியுமாய் நடக்கும் கல்யாணம் என்பதால் உறவுகளில் வெங்கடேஷின் குடும்பத்தைத் தவிர அனைவரையும் அழைத்திருக்க எல்லாரும் குடும்பத்துடன் மங்களகரமாய் மண்டபத்தை நிறைக்கத் தொடங்கியிருந்தனர். மணமக்களின் நட்புகளும் சேர்ந்து கொள்ள மண்டபம் கலகலத்தது. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் வேகமாய் நடந்து கொண்டிருந்தன.

ரம்யா அரக்கு வண்ணப் பட்டுப்புடவையில் மிதமான அலங்காரத்தில் ரம்யமாய் புறப்பட்டிருந்தாள். காவ்யாவும் மயில்கழுத்து வண்ணப் பட்டில் தங்க சரிகை மின்ன என் அக்காவுக்கு நான் சற்றும் சளைத்தவள் இல்லை என அழகில் மின்னினாள்.

தோழியர் கழுத்தில் நகையை அணிவித்துக் கொண்டிருக்க காவ்யாவின் அலைபேசி சிணுங்கியது. அதில் ஒளிர்ந்த கவினின் பெயரைக் கண்டதும் அவர்கள் கிண்டலடித்தனர்.

“என்ன காவி, உன் அத்தானுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க முடியலை போலருக்கு… அதுக்குள்ள போன் பண்ணுறார்…” எனக் கேட்க நாணத்துடன் சிணுங்கினாள்.

“ப்ச்… சும்மா இருங்கடி, ஏதாச்சும் சொல்ல கூப்பிட்டிருப்பார்… ப்ளீஸ், நீங்க கொஞ்சம் வெளிய இருங்களேன்…” எனக் கெஞ்ச, “ஹூம், ஓகே ஓகே…” என்று வெளியே சென்றனர்.

“ஹலோ… சொல்லுங்க அத்தான்…” என்றவளின் குரல் நாணத்தில் தொண்டையிலேயே பாதி ஒட்டிக் கொள்ள மீதி மட்டுமே வெளியே கேட்டது.

“காவி, ரெடியாகிட்டியா…?”

“ம்ம்… ஆச்சு, நீங்க…?”

“நான் ரெடியாகிட்டே இருக்கேன்… நீ கல்யாண அலங்காரத்துல எப்படி இருக்கேன்னு பார்க்கணும், உடனே செல்பி எடுத்து உன் அத்தானுக்கு அனுப்பு பார்க்கலாம்…”

“ஹூக்கும், இன்னும் கொஞ்ச நேரத்துல தான் நேர்லயே பார்க்கப் போறிங்களே, அப்புறம் என்னவாம்…”

“அது வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியலயே, உன்னைப் பார்க்கணும்னு என் ஹார்ட் எகிறிக் குதிச்க்கிற குதில வெளியவே வந்திடும் போலருக்கு… கொஞ்சம் கருணை காட்டு காவி, எனக்கு இப்பவே உன்னைப் பார்க்கணும்… நீ போட்டோ அனுப்பறியா, இல்ல நேர்லயே உன் ரூமுக்கு வந்து பார்க்கவா…” என்றான் மிரட்டலாய்.

“அய்யே, ரொம்பத்தான்… கல்யாணத்துக்கு முன்னாடியே மிரட்டல் எல்லாம் தூள் பறக்குது…”

“அடியே, பேசிட்டு இருக்கிற நேரத்துல ஒரு செல்பி எடுத்து அனுப்பலாம்ல…”

“அதெல்லாம் முடியாது அத்தான்…”

“அப்ப வேற வழி இல்ல, நேர்லயே உன் ரூமுக்கு வந்து பார்த்துக்கறேன்…”

“அய்யய்யோ, அப்படி எதுவும் பண்ணிடாதிங்க அத்தான், என் பிரண்ட்ஸ் கழுவி ஊத்திருவாங்க… நானே அனுப்பறேன்…”

“ம்ம்… ஒரு செல்பிக்கு என்னை இவ்ளோ கெஞ்ச வைக்கற மத்ததுக்கெல்லாம் என்ன சொல்லுவியோ…”

“மத்ததுன்னா…” என்றாள் புரியாமல்.

“மத்ததுன்னா, மத்ததுதான்… அதெல்லாம் கிடைக்க நான் நேர்ல எவ்ளோ கஷ்டப்படணுமோ தெரியல…” என்றதும் அவளுக்குப் புரிந்துவிட, நாணத்தில் சிவந்தாள்.

“ச்சீ பேட் பாய்… போனை வைங்க…” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு செல்பி எடுத்து அவனுக்கு அனுப்பினாள். உடனே ரிப்ளையில் உதட்டைக் குவித்து முத்தம் கொடுக்கும் அவனது செல்பியை கவின் அனுப்ப நாணத்துடன் அவள் இதயம் இதமாய் துடித்துக் கொண்டது. அவனது குரல் காதுக்குள் ‘காவி..’ எனக் காதலுடன் அழைப்பது போல் தோன்ற பிரவாகமாய் பொங்கிய உணர்வுக் குவியல்களில் பேரவஸ்தையில் தவிப்பான இன்பத்தை உணர்ந்தாள்.

அடுத்த அறையில் ரம்யா தயாராகிக் கொண்டிருக்க தலையில் பூ வைக்கையில் உள்ளே வந்தாள் மல்லிகா. கண்கள் விரிய மூத்த மருமகளின் அழகை ரசித்து கன்னத்தை வழித்து நெட்டி முறித்தவள், “என் கண்ணே பட்டிரும் மூத்த மருமகளே, அவ்ளோ அழகாருக்க… இன்னைக்கு என் பிள்ளை பாடு திண்டாட்டம் தான்…” என்று கிண்டலாய் சொல்ல நாணத்தில் புடவையின் சிவப்பை முகத்தில் பிரதிபலித்தாள் ரம்யா.

“சரி, சீக்கிரம் ரெடியாவுங்க… டைம் ஆச்சு, என் சின்ன மருமகளைப் பார்த்திட்டு வந்துடறேன்…” என நகர்ந்தாள்.

இயல்பாய் முகத்தை வைத்துக் கொள்ள முயன்றாலும் சின்னதாய் அவளுக்குள் ஒரு படபடப்பு இருக்கவே செய்தது. என்னதான் வெங்கடேஷ் உண்மையானவன் அல்ல என்று தெரிந்தாலும் மனதுக்குள் பதிந்திருந்த அவன் உருவம் அடிக்கடி கண்ணாமூச்சி காட்டி வலியைக் கொடுத்தது.

நிச்சயதார்த்தப் பொழுதில் இரு பெண்களையும் மேடைக்கு அழைத்துவர சகோதரர் இருவரின் பார்வையும் தங்கள் மனம் கவர்ந்தவளின் மேல் ரசனையுடன் நிலைத்து நின்றது.

காவ்யா மெல்ல தனக்கு எதிரில் அமர்ந்திருந்த கவினை ஏறிட்டுப் பார்க்க புருவத்தை மேலேற்றி கண்ணை சிமிட்டி, உதட்டைப் பிதுக்கி ‘சூப்பர்’ என்றவனின் பார்வை அவளை விழுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் அந்தப் பார்வை தாளாமல் நாணத்துடன் தலை தாழ்த்திக் கொண்டாள்.

“ரமி, மாப்பிள்ளை உன்னையே பார்க்கிறார், நிமிர்ந்து பாரு…” பூங்கொடி மகளின் காதில் கிசுகிசுக்க அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

பர்வதம், “அட, வெக்கப்படாம கட்டிக்கப் போறவனை நிமிர்ந்து பாரு ரம்யாக் கண்ணு…” என்று கிண்டலாய் சொல்ல அனைவரும் சிரிக்கவும் மேலும் கூச்சமானது.

அர்ஜூன் அவளையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க மெல்ல ஏறிட்டவளை நோக்கி இதமாய் புன்னகைத்தான். அந்தப் புன்னகை ஏனோ அலட்டிக்கொண்டிருந்த அவள் மனதுக்கு ஒருவித ஆறுதலைக் கொடுக்க மனது சற்று அமைதியடைவைதை உணர்ந்தாள் ரம்யா.

நிச்சயதார்த்தம் நல்லபடியாய் முடிந்து அனைவரும் உறங்க செல்ல, காவ்யாவிடம் காதில் கிசுகிசுத்தான் கவின்.

“காவி, எல்லாரும் தூங்கினதும் கால் பண்ணு…” என மறுப்பாய் தலையாட்டினாள் அவள்.

“ம்ஹூம், மாட்டேன்…” சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றவள், “நான் போன்ல பேசறதைப் பார்த்தா கிண்டல் பண்ணியே சாகடிப்பாளுங்க, நான் பண்ண மாட்டேன்ப்பா…” என நினைத்தாலும் அடிக்கடி போனைப் பார்க்கும் விழிகள் எதை எதிர்பார்க்கிறது என வெட்கமாய் உணர்ந்தாள்.

ரம்யாவின் அறையில் பூங்கொடியும் பர்வதமும் இருக்க, காவ்யா தோழியருடன் வேறு அறையில் இருந்தாள்.

சிறிதுநேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்த தோழிகள் மெல்ல உறங்கத் தயாராக மொபைலை வைத்துக் கொண்டு படுத்திருந்த காவ்யாவுக்கு உறக்கம் வருவேனா என்றது. அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் மெசேஜ் ரிசீவ் ஆனதற்கான நோடிபிகேஷன் ஒளிர வேகமாய் பார்த்தாள்.

கவின்தான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

“காவி, நீ கால் பண்ணறயா, நான் பண்ணட்டுமா…?” என அனுப்பி இருக்க புன்னகைத்தவள், “இப்ப பேசத் தொடங்கினா நிறுத்த மாட்டார்… அப்புறம் தூங்க முடியாது…” என யோசித்தவள், “நான் தூங்கப் போறேன்… எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்…” என மெசேஜ் அனுப்பிவிட்டு கண்ணை இறுக்க மூடிப் படுத்துக் கொண்டாள்.

ஆனாலும் மெசேஜ் மீண்டும் ரிசீவ் ஆகிக் கொண்டே இருக்க, பார்த்தால் நிறுத்தாமல் அனுப்புவான் என நினைத்தவள் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு உறங்க முயன்றாள்.

கண்ணுக்குள் வந்து நின்ற கவின் அவளை முறைத்துக் கொண்டும், இதழ் குவித்து முத்தத்தை அனுப்பிக் கொண்டும் இம்சை செய்து கொண்டிருக்க உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தாள். ஒருவழியாய் ஏதோ ஒரு நிமிடத்தில் உறங்கிப் போயிருந்தவளை அதிகாலை முகூர்த்தம் என்பதால் இரண்டு மணிக்கே எழுப்பி விட்டனர்.

ரம்யாவின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

அன்னையும், பாட்டியும் உறங்கிய பின்னரும் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தவளை மெசேஜில் ஒளிர்ந்த அர்ஜூனின் பெயர் எழுந்து அமர வைக்க எடுத்துப் பார்த்தாள்.

“ரமி, கால் பண்ணட்டுமா…?” எனக் கேட்டிருந்தான். ஒருவிதத் தவிப்புடன் இருந்தவளுக்கும் பேசினால் பரவாயில்லை எனத் தோன்ற “ம்ம்…” என பதில் அனுப்ப, உடனே அழைத்தான்.

மெல்ல எழுந்து குளியலறைக்கு சென்றவள் அழைப்பை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹ..ஹலோ, சொ…சொல்லுங்க…”

“என்ன ரமி, புதுசா மியூசிக் கிளாஸ் எதுவும் போறியா…?” என்றவனின் குரலில் கிண்டல் ஒலிக்க முழித்தாள்.

“ஏ..ஏன் அப்படி கேக்கறிங்க…?”

“இல்ல புதுசா ஹ..ஹலோ… சொ…சொல்லுங்க ன்னு இப்பதான் பாடிப் பழகற போல இருந்துச்சா, அதான் கேட்டேன்…” என்றான் சிரிப்புடன்.

“கிண்டலு…”

“இல்ல ரமி, நக்கலு… எதுக்கு இப்ப உனக்கு இந்தப் பதட்டமும், தடுமாற்றமும்… நீ எப்பவும் போல நீயா இரு…”

“ஹூம், அதுக்கு தான் டிரை பண்ணறேன்… ஆ..ஆனா, ஏதோ ஒண்ணு தொண்டைக்குள்ள சிக்கின முள்ளைப் போல அவஸ்தையா இருக்கு அர்ஜூன்…”

“ரமி… என்னமா, உன் மனசுல எந்த விஷயம் அலட்டுது…”

“அந்த வெங்கியோட அம்மாவை நினைச்சு தான் கொஞ்சம் பயமா இருக்கு… கோபத்துல என் மேல ஆஸிட் ஊத்தற வரைக்கும் போனவங்க நாளைக்கு எதுவும் பண்ணிட்டா, எல்லார் முன்னாடியும் நம்ம குடும்பமே அசிங்கப்பட்டு போயிரும்… அதை யோசிக்கும்போது ஒரு மாதிரி பதட்டமா இருக்கு…” என்றாள் கவலையுடன்.

“ரமி, அதைப் பத்தி யோசிச்சு நீ பயப்படாத… அவங்களை எப்படி அடக்கணுமோ, அந்த வழியில பாடம் சொல்லிப் புரிய வச்சாச்சு, இனி அவங்க நம்ம வாழ்க்கைல குறுக்கிட மாட்டாங்க…” என்றதும் திகைத்தாள்.

“என்ன சொல்லறிங்க, அவங்களை என்ன பண்ணிங்க…”

“நாங்க எதுவும் பண்ணலை, அவங்க மூத்த பிள்ளை ராஜேஷ்தான் இனியும் உங்களை வீட்டுல வச்சுகிட்டா என் வாழ்க்கையயும் இல்லாமப் பண்ணிருவீங்கனு முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுட்டான்… இப்ப அவங்க ரெண்டு பேரும் முதியோர் இல்லத்துல இருக்காங்க…” என்றான்.

“நி..நிஜமாவா…”

“ம்ம்… எப்ப உன் மேல ஆஸிட் ஊத்தத் துணிஞ்சாங்களோ, இனியும் அவங்களை விட்டு வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்… போலீஸ்ல சொல்லி கேஸ் பைல் பண்ணலாம்னு தான் நினைச்சோம்… ஆனா அவங்க பிள்ளை ராஜேஷ் எங்ககிட்ட ரிக்வஸ்ட் பண்ணி கேட்டார்… என்ன இருந்தாலும் என்னைப் பெத்தவங்களாப் போயிட்டாங்க, இனி அவங்களால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்னு சொன்னவர் கையோட முதியோர் இல்லத்துலயும் சேர்த்து விட்டுட்டார்…”

“ம்ம்… அந்தக் குடும்பத்துல அவர் மட்டும் தப்பிப் பிறந்திருக்கார் போல…” என்றாள் ரம்யா வருத்தத்துடன்.

“ம்ம்… இனியும் பழசை நினைச்சு வருத்தப்படாம கல்யாணப் பொண்ணா லட்சணமா, கலர் கலராக் கனவு கண்டோமா, வெக்கப்பட்டோமான்னு இரு ரமி… நிச்சயதார்த்தம் நடக்கும் போதும் உன் முகமே சரியில்லை, அதான் இதை உன்கிட்ட சொல்லிடலாம்னு கூப்பிட்டேன்… இனி உன் வாழ்க்கையில் நான்… நான் மட்டும் தான்…” என்றான் அழுத்தமாய்.

அதில் மனது லேசாக, “தேங்க்ஸ்…” என்றாள் ரம்யா.

“நமக்குள்ள தேங்க்ஸ், சாரி எல்லாம் இப்படி சொல்லக் கூடாது ரமி… அதுக்கு வேற மெத்தட் இருக்கு, நாளைக்கு சொல்லித் தரேன்…” என்றவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ மனதுக்குள் இதமாய் ஒரு அவஸ்தை பரவ நாணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சரி, இப்ப நிம்மதியா தூங்கு… சீக்கிரமே எழுந்துக்கனும்ல, அப்போதான் கல்யாணத்துக்கு பிரஷ்ஷா இருக்க முடியும்…”

“ம்ம்… சரி, நீங்களும் தூங்குங்க…”

“ஹூம்… நான் எங்க தூங்கறது, கண்ணைத் திறந்தாலும் மூடினாலும் நீதான் கண்ணுக்குள்ள நின்னு இம்சை பண்ணறியே, ஆனாலும் இந்த இம்சை சுகமாருக்கு ரமி… லவ் யூ… உம்மா….” என்றவன் அழுத்தமாய் ஒரு முத்தத்தைப் பதிக்க அந்தக் குரலில் தெரிந்த உணர்ச்சிகளில் மெல்லத் தொலைந்து கொண்டிருந்தாள் ரம்யா.

அதற்குப் பின் கட்டிலில் படுத்தவளின் மனதுக்குள் அர்ஜூன் மட்டுமே நிறைந்திருக்க மெல்ல உறங்கிப் போனாள். இரண்டு மணிக்கு அலாரம் அடிக்கவும் எழுந்த பூங்கொடி அவளை எழுப்பிவிட்டு சின்னவளை எழுப்ப சென்றாள்.

இருவரும் உறக்கம் தெளியாமலே குளித்து அலங்காரத்திற்கு வந்து அமர்ந்தனர். அமைதியுடன் தயாராகி முடிக்க முகூர்த்த நேரமும் வந்துவிட்டது.

கெட்டிமேள சத்தம் பெரிதாய் ஒலிக்க மணமேடையில் முன்னமே மாப்பிள்ளைகள் அமர்ந்திருக்க மணப்பெண்களை அழைத்து வந்தனர்.

“பெத்தவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கங்க…” புரோகிதர் சொல்லவும் முதலில் ரம்யா, அடுத்து காவ்யா இருவரும் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினர். மகள்களை ஆசையோடு பார்த்து மனமார இருவரையும் ஆசிர்வதித்தனர்.

“ரெண்டு பேரும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும் கண்ணுகளா…” என்ற சரவணனின் கண்கள் கலங்கியது. அடுத்து பூங்கொடியும், பொன்வண்ணனும் ஆசி வழங்க இருவரும் சபையை வணங்கினர்.

இருவருக்கும் ஒரே போல குங்குமப் பட்டில் தங்க சரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவையில் அழகான, அளவான அணிகலன்களுடன் இருவரும் ஜொலிக்க, கவினும், அர்ஜூனும் தங்கள் வாழ்க்கைத் துணையாகப் போகும் தேவதைகளை கண்ணெடுக்காமல் பார்த்தனர்.

காவ்யா, கவினை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அருகில் அமர அவன் புன்னகைத்தான். ரம்யாவின் முகத்தில் இப்போதும் ஒரு பதட்டம் தெரிய, “கூல் மா…” அர்ஜூன் மெல்ல உதடை அசைத்து சொல்லவும் சின்னதாய் புன்னகைத்தவள் அருகே அமர்ந்தாள்.

மந்திரம் சொல்லி முடித்து அனைவரின் ஆசிர்வாதத்துடனும், கைக்கு வந்து சேர்ந்த மாங்கல்யத்தை முப்பத்து முக்கோடி தேவர்களை சாட்சி வைத்து, மங்கலநாணை கழுத்தில் பூட்டி துணைவியாக்கிக் கொண்டனர் இருவரும். சுற்றி நின்ற அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த பெற்றவர்களின் மனமும், கண்களும் நிறைய இனிதாய் நடந்தேறியது இரு ஜோடிகளின் கல்யாண வைபவம்.

மனம் கவர்ந்த நெஞ்சங்கள்

மணம் முடிக்கும் நன்னாள்…

இதயம் தேடும் உணர்வுகளுக்கு

இதம் கிடைக்கும் இந்நாள்…

வளர்பிறையாய் காதல் பெருக

துன்பங்கள் தேய்பிறையாக

பவுர்ணமியாய் பரிமளிக்கட்டும்

காதல் கொண்ட நெஞ்சங்கள்…

அமாவாசை இருளும் சுகமே

அருகில் இணை இருந்தால்…

Advertisement