Advertisement

அத்தியாயம் – 20

ரம்யாவுக்கு அந்த சம்பவம் மனதுக்குள் மறையாமல் நின்று அச்சுறுத்த ரொம்பவே பயந்து போயிருந்தாள்.

“அர்ஜூன் மட்டும் வராம இருந்திருந்தா…?” இந்தக் கேள்வியை மனது கேட்கும் பொழுதெல்லாம் தனது முகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

“ச்ச்சே… வெங்கியோட அம்மாவே இப்படி மோசமா இருந்தா அவன் எத்தனை கேடு கெட்டவனா இருந்திருப்பான்… அதனாலதான் கடவுள் அவன் சின்ன வயசுலயே ஆயுளை முடிச்சுட்டார் போல… இதுகூட ஒருவிதத்தில் என்னைக் காப்பாற்றின மாதிரி தானே, என் அம்மா, அப்பாவோட பிரார்த்தனை தான் அவங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்திருக்கு… இது தெரியாம அவங்களை எவ்ளோ கரிச்சுக் கொட்டினேன், வெறுப்பா பேசினேன்… அர்ஜூன், கவின், மல்லிகா அத்தைன்னு யாரையும் விட்டு வைக்கலயே… அந்தப் பொம்பள ஒரு பொண்ணுன்னு கூடப் பார்க்காம என் மேல ஆஸிட் ஊத்த துணிஞ்சுடுச்சே…” நினைக்கவே வேதனையாய் இருந்தது.

“அக்கா…” காவ்யாவின் குரல் கேட்க திரும்பினாள்.

“அத்தான் நடந்த எல்லாத்தையும் சொன்னார், ரொம்ப பயந்துட்டியா….” பரிவுடன் கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.

“ம்ம்…” என்றவளுக்கு மீண்டும் நினைவு வர நடுங்கியது.

“எப்படியோ, கடவுள்தான் பெரியத்தான் ரூபத்துல சரியான நேரத்துல வந்து உன்னைக் காப்பாத்தி இருக்கார்… அவருக்கு லேசா கைல பட்டதால பரவால்ல, நல்லாப் பட்டிருந்தா…?” என்று நிறுத்த ரம்யாவுக்கு உள்ளுக்குள் பதறியது.

“அத்தான் உன்மேல உசுரையே வச்சிருக்கார், உனக்கு ஒண்ணுன்னா அவரால சும்மா இருக்க முடியாது… அதான் அந்த ரவுடி ஆஸிட் ஊத்தப் போறான்னு கவின் அத்தான் போன்ல சொல்லியும் கூட யோசிக்காம உன் மேல படக் கூடாதுன்னு கையால தட்டி விட்டிருக்கார்…”

“ம்ம்… அவருக்கு மட்டும் ஏதாச்சும் ஆயிருந்தா நான் குற்ற உணர்ச்சிலயே செத்திருப்பேன்…”

“இப்ப உனக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும், யார் உன்னை உண்மையா நேசிக்கிறா, யார் வேஷம் போட்டான்னு…”

“ம்ம்… புரிஞ்சுடுச்சு, நல்லாவே புரிஞ்சிடுச்சு…”

“இனியாச்சும் பெரியத்தான் உன் மேல வச்சிருக்கிற அன்பைப் புரிஞ்சுகிட்டு அவர்கிட்ட அன்பா நடந்துக்கக்கா… நம்மை சுத்தி நல்ல மனுஷங்க கிடைக்கிறது வரம்… அதைப் புரிஞ்சுக்காம அவங்களை நோகடிக்கிறது முட்டாள்தனம்… அத்தையும், மாமாவும் கூட ரொம்ப நல்லவங்க, நம்மளை மருமகளாப் பார்க்காம மகளாப் பாக்குற மனசுக்காரங்க…”

“புரியுது காவி, இனியும் நான் முட்டாளா இருக்க மாட்டேன், பயப்படாத…” என்றாள் வருத்தத்துடன்.

“ம்ம்… அதான் எனக்கும் வேணும்க்கா, இனியாச்சும் உன் லைப் சந்தோஷமா இருக்கணும்… சரி, ரூம்லயே இருந்தா அப்பா அம்மா என்னன்னு கேப்பாங்க, வா… வெளிய போவோம்…” என்றாள் சின்னவள்.

“ம்ம்… உனக்கு இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் தான, நல்லாப் பண்ணிருக்கியா…” அக்காவின் கேள்வி மனதுக்கு சந்தோஷமாய் இருக்க, “சூப்பரா பண்ணிருக்கேன்க்கா…” பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்தனர்.

“பொண்ணுங்களா, உங்க மாமியார் போன் பண்ணினா… மாப்பிள்ளைக்கு இன்னைக்கு ஏதோ வேலை இருக்காம், வர முடியலை, நாளான்னிக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ணப் போகலாம்னு சொன்னா…” என்றாள் பூங்கொடி.

“சரிம்மா…” காவ்யா சொல்ல அன்னையின் அருகில் வந்து அமர்ந்தாள் ரம்யா.

“அம்மா… நான் உன் மடில கொஞ்ச நேரம் படுத்துகிட்டா…?” மகளின் கேள்விக்கு முகத்தில் நவரசத்தில் சில ரசங்கள் வெளிப்பட, “வாடி படுத்துக்க…” காலை நீட்டி கொண்டாள்.

அமைதியாய் அன்னையின் மடியில் தலை வைக்க,  இதமாய் சற்றுநேரம் கோதிக் கொடுத்தாள் பூங்கொடி. காவ்யா புன்னகையுடன் பார்க்க, நிறைந்து நின்ற கண்களை துடைத்துக் கொண்டே நிமிர்ந்த பூங்கொடி கணவன் சந்தோஷமாய் பார்த்து நிற்பதைக் கண்டு புன்னகைத்தாள்.

“காவி…” சின்ன மகளை கை நீட்டி சரவணன் அழைக்க, “அப்பா…” ஓடிச்சென்று நெஞ்சில் சாய்ந்தவளைக் கண்டதும் படுத்திருந்த ரம்யா வேகமாய் எழுந்து, “நான்தான் அப்பாட்ட, நீ அம்மாட்ட போ…” என்றதும் அனைவரும் சிரித்தனர்.

ரம்யா சின்ன வயதிலிருந்தே அப்படிதான், அம்மாவை தங்கைக்கு விட்டுக் கொடுத்தாலும் அப்பாவை மட்டும் விட்டுத் தர மாட்டாள். அந்த நினைவில் இரு மகள்களையும் அணைத்துக் கொண்டவர் கண்களும் பனித்தது.

“கடவுளே, எங்க பொண்ணை பழைய போலவே எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துட்ட… இது போதும்…” என்றார் நெகிழ்ச்சியுடன்.

“சரி, அப்பாக்கு ரொம்பப் பசிக்குது… இன்னைக்கு என்ன டிபன் பூங்கொடி…” என்றார் சரவணன்.

“அதாங்க யோசிச்சுட்டு இருக்கேன்…” பூங்கொடி சொல்லவும்,

“காவி, இன்னைக்கு அம்மாக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு நாம சமைப்போமா…?” ரம்யா தங்கையிடம் கேட்க சந்தோஷமாய் தலையாட்டினாள் காவ்யா.

சப்பாத்தியும், பனீர் பட்டர் மசாலாவும் செய்யத் தீர்மானித்து அதற்கான தயாரெடுப்பில் இருவரும் இறங்கினர். சிறிது நேரத்தில் மல்லிகாவும் கவினுடன் அங்கே வந்துவிட்டாள்.

“என்ன அண்ணி, வீடே கமகமக்குது, என்ன சமைச்சீங்க…” ஹால் சோபாவில் கணவனுடன் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடியிடம் கேட்க, “யாருக்குத் தெரியும்… என்னை இன்னைக்கு கிட்சனுக்கே வரக் கூடாதுன்னு உன் மருமகளுங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் கொடுத்து அனுப்பிட்டாங்க, அதான் டீவி பார்த்திட்டு இருக்கேன்…”

“என்னது, மருமகளுங்க சமைக்கிறாங்களா, அண்ணியுமா சமைக்கறாங்க…” என்றான் கவின் ஆச்சர்யத்துடன்.

“ஆமா, ஆமா… நீயே போயி அங்க என்ன நடக்குதுன்னு பாரு…” எனவும் கவின் அடுக்களைக்கு சென்று எட்டிப் பார்த்தான்.

அங்கே காவ்யா சப்பாத்திக்கு ஒவ்வொரு உருளையாய் எடுத்து பலகையில் வைத்து தேய்த்துக் கொண்டிருக்க, அடுப்பருகே நின்ற ரம்யா, யூ டியூப் சானலில் பனீர் பட்டர் மசாலாவின் செய்முறையை ஒவ்வொரு வரியாய் பார்த்து, கேட்டு அதன்படி சமைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹூம்… பரவால்லியே, ரெண்டு பேரும் எங்களை எப்படியும் பட்டினி போட்ட மாட்டாங்கன்னு தான் தோணுது…” என நினைத்தபடி தொண்டையைக் கனைக்க அவனது குரலில் சட்டென்று நிமிர்ந்தாள் காவ்யா.

“அட கவின் அத்தான், நீங்க எப்ப வந்திங்க…” எனவும் ரம்யாவும் திரும்பினாள்.

“வா கவின், அத்தையும் வந்திருக்காங்களா…” ரம்யா அன்போடு கேட்கவும் கவின் அப்பட்டமாய் வியப்பை விழிகளில் காட்டி பதில் சொல்லாமல் நின்றான்.

“என்ன கவின், திகைச்சுப் போயி நின்னுட்ட… நான் கேட்டது எதுவும் காதுல விழலையா…”

“காதுல விழுந்ததை தான் நம்ப முடியலை… நீ…நீங்களா என்கிட்ட இவ்ளோ நல்லாப் பேசுனிங்க…”

“ஏன், நீ என்ன எனக்குப் பகையா… ஏதோ என் கெட்ட நேரம், நல்லது கெட்டது தெரியாம நடந்துகிட்டேன்… அதுக்குதான் ஒட்டுமொத்தமா அடிச்சு சொல்லிட்டாங்களே…” என்றவளின் குரலில் தெரிந்த வருத்தம் அவனுக்கு கஷ்டமாய் இருந்தது.

“விடுங்க அண்ணி, நடந்த எதையும் இப்பப் பேச வேண்டாம்… மாமா, அம்மா காதுல விழுந்தா பயந்திருவாங்க… அதை விடுங்க, சில கெட்டதுல தான் நல்லதைத் தெரிஞ்சுக்க முடியும் போலருக்கு… எப்படியோ அண்ணனோட அன்பைப் புரிஞ்சுகிட்டு நீங்க சந்தோஷமா வாழ்ந்தாப் போதும்…”

“ம்ம்… அவர் வரலியா…?” என்றதும் சிரித்தான் கவின்.

“உங்க அவருக்கு இன்னைக்கு நைட் டியூட்டி… ஆபீசுக்கு கிளம்பிப் போயிட்டாரு…” என்றதும் புன்னகையுடன் குனிந்து கொண்டாள்.

“சரி, வெயிட் பண்ணு கவின்… இன்னைக்கு நான் செய்யற பனீர் பட்டர் மசாலாவை முதல்ல சாப்பிட்டு பார்க்கப் போற சோதனை எலி நீதான், எஸ்கேப் ஆயிடாத…” என்றதும், சந்தோஷமாய் சிரித்தான்.

“தாராளமா சாப்பிடறேன்… இன்ஸ்டன்ட் மிளகா சட்னிலயே உங்க சமையலுக்கு பான் ஆகிட்டேன்… இந்த வாசனையே பிரமாதமா இருக்கு, சோ இதுவும் நல்லாருக்கும்னு நிச்சயம் நம்பறேன்…” என்றவன், “காவி சப்பாத்தி தேய்க்க சொன்னா, நீ என்ன ஆசியா, ஐரோப்பான்னு மேப்பு தேச்சு வச்சிருக்க, பார்த்துப் பண்ணு மா… அத்தான் சாப்பிடணும்…” எனத் தலையில் தட்டிச் செல்ல முறைத்தாள் சின்னவள்.

மணத்தோடு ருசியாகவும் இருவரும் சமைத்திருக்க, அனைவரும் ரசித்து சாப்பிட்டனர்.

“சும்மா சொல்லக் கூடாது அண்ணி… உங்க கைப்பக்குவம் சூப்பர், மசாலா செம டேஸ்ட்டா இருக்கு… ஆனா இந்த சப்பாத்தி தான் சரியான ரவுண்டுல வரல…” என்றான் கவின்.

“அத்தான், நான் வேணும்னா காம்பஸ் கொண்டு வந்து தரவா, வட்டமா பிச்சு சாப்பிடறீங்களா…” காவ்யா கடுப்புடன் கேட்க பெரியவர்கள் சிரித்தனர்.

“டேய் கவின், சப்பாத்திக்கு சரியான ரவுண்டு வரலேன்னா என்ன, செம சாப்ட்டா சூப்பரா இருக்கே… அதான் முக்கியம்… என் மருமகளுங்க ரெண்டு பேரும் அசத்திட்டாங்க…”

“அப்படி சொல்லுங்கத்தை… உங்க புள்ளையை ஒருநாள் சப்பாத்தி தேக்க விட்டுப் பார்க்கணும்…”

“ஆஹா… மாமியாரும் மருமகளும் சேர்ந்து பெரிய ஆப்பா வச்சிடப் போறாங்க, அடக்கி வாசி கவின்…” மனதுக்குள் எச்சரிக்கைக் குரல் கேட்க அலர்ட்டானான் கவின்.

“ஆமாம் மா, நீங்க சொல்லுறது சரிதான்… சப்பாத்தி செம சாப்டா இருக்கு…” என்றான் காவ்யாவிடம் கண் சிமிட்டி.

அவர்கள் கிளம்பும்போது பொன் வண்ணனுக்கும் ஒரு பாக்ஸில் கொடுத்து விட்டாள் ரம்யா.

“ஹூம்… என் பெரியவனுக்கு தான் இதை சாப்பிட கொடுத்து வைக்கல, பாவம் வேலை வேலைன்னு ஓடி நேத்து கைல எல்லாம் நெருப்பு தெறிச்ச போல கொப்பளத்தோட வீட்டுக்கு வந்தான்… ரெஸ்ட் எடுன்னு சொன்னாலும் கேக்கல…”

“மாப்பிள்ளைக்கு என்னாச்சு மல்லிகா… ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” பதட்டமாய் கேட்டார் சரவணன்.

“பெருசா ஒண்ணும் இல்லண்ணா, இருந்தாலும் கல்யாணம் பேசிட்டு இருக்கற நேரத்துல கைல நெருப்புக் காயம் படறது மனசுக்கு கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு…” மல்லிகா சொல்லவும் ரம்யாவும், காவ்யாவும் பார்த்துக் கொண்டனர்.

“அதை ஏன் அபசகுணமா நினைக்கணும் மா… தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சொல்லுற போல பெருசா எதுவோ நடக்க வேண்டியது இப்படி சின்னதா ஆயிடுச்சுன்னு சந்தோஷப்பட வேண்டியது தான…” கவின்.

“ம்ம்… மாப்பிள சொல்லுறதும் சரிதான் பூங்கொடி… எத்தனயோ கஷ்டத்துக்குப் பிறகு நம்ம பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிவு பண்ணிருக்கோம்… எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பார்னு அவன் மேல பாரத்தைப் போட்டுட்டு நடக்க வேண்டியதைப் பார்ப்போம்… கல்யாணம் முடிஞ்சதும் குடும்பத்தோட குலதெய்வம் கோவிலுக்குப் போயிட்டு வந்திடுவோம்…” என்றார் சரவணன்.

“சரிண்ணா, நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்… அவர் வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாரு…” என்ற மல்லிகா எழுந்து கொள்ள, “ஞாயித்துக் கிழமை ஆசாரி வந்ததும் கூப்பிடுங்க, தங்கக்காசு எடுத்திட்டு வர்றேன்…” என்றவர் கவின் எங்கே எனத் தேட அவனைக் காணவில்லை.

“இந்தப் பையன் எங்க போனான்…” எனக் கேட்க, காவ்யா கூட மாடில பேசிட்டு இருக்கான் அத்தை…” என்றாள் ரம்யா.

“ம்ம்… இங்க எல்லார் முன்னாடியும் அவ சப்பாத்தியைக் கிண்டல் பண்ணிட்டு அங்க தனியா போயி தாஜா பண்ணிட்டு இருக்கானா என் புள்ளை… அப்படியே அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்கான்…” என சந்தோஷமாய் சலித்துக் கொள்ள அனைவரும் சிரித்தனர்.

“பெரிய மருமகளே, அவனைக் கொஞ்சம் கூப்பிட்டு வாயேன்…” என்றார் ரம்யாவிடம்.

“கூப்பிடறேன் அத்தை…” என்றவள் தயக்கத்துடனே மெல்ல மாடிப்படி ஏற காவ்யாவும். கவினும் மெல்லிய குரலில் பேசும் சத்தம் கேட்டது.

“ஹூக்கும், அங்க எல்லார் முன்னாடியும் என் சப்பாத்தியைக் குத்தம் சொல்லிட்டு இங்க வந்து என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கு, கையை விடுங்க அத்தான்…” என்றபடி அவனது கைகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த கையை உருவ முயன்று கொண்டிருந்தாள் காவ்யா.

“என்ன காவி, இதுக்குப் போயி கோச்சுகிட்டு… நான் அப்படி சொல்லக் காரணமே அண்ணிதான்…” என்றதும் திகைத்தாள்.

“அக்காவா… அக்கா எப்படி காரணமாவா…?”

“ஆமா, இன்னைக்கு தான் அண்ணி இயல்பா இருக்காங்க… சமைக்க கூட செய்யறாங்க, அவங்களைப் பெருமையா சொன்னா சந்தோஷப் பாடுவாங்கன்னு தான் அப்படி சொன்னேன்…” என்றான் கவின்.

“அக்காவை பெருமையா சொன்னா எனக்கும் சந்தோஷம் தான், ஆனா என்னை எதுக்கு குறைச்சலா சொன்னிங்க… அதான் என் கேள்வி…” என பிடித்தபிடியாய் நின்றாள் அவள்.

“சரி, சரி தப்புதான்… அதுக்கு வேணும்னா நானே எனக்கு பனிஷ்மென்ட் கொடுத்துக்கட்டுமா…” என்றான் பாவமாக.

“என்ன பனிஷ்மென்ட்…?” என்றாள் காவ்யா.

நன்றாய் இருட்டியிருக்க, சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டியவன், சட்டென்று அவளை அருகே இழுத்து இதழில் முத்திரை பதிக்க அவனது நெஞ்சில் கை வைத்து தள்ள முயன்ற காவ்யாவின் கைகளும், இதழோடு அவனிடம் சரணடைந்து கொண்டிருக்க அந்த முதல் முத்தத்தில் கிறங்கி நின்றவளை மெல்ல விடுவித்து அணைத்துக் கொண்டான்.

அவர்களை அழைக்க வந்த ரம்யா இந்தக் காட்சியைக் கண்டு சட்டென்று அதிர்ந்து திகைத்து, தடுமாறி மறைவில் நின்று கொண்டாள். அவள் மனதில் அர்ஜூன் கொடுத்த முத்தம் இன்பமாய் தித்தித்து காதுக்குள் லவ் யூ சொல்லிக் கொண்டிருக்க ஒருவித படபடப்போடு நின்றிருந்தாள்.

“என்ன காவி, இந்த பனிஷ்மென்ட் ஓகேவா… இனிமே எனக்கு கோபம் வந்தா நீ இப்படி பனிஷ்மென்ட் கொடு… உனக்கு கோபம் வந்தா நான் இப்படி பனிஷ்மென்ட் கொடுக்கிறேன்… டீல் ஓகே வா…” எனவும் முறைத்தாள்.

“சரியான பிராடு… போடா…” அவள் நாணத்துடன் செல்லமாய் சொல்ல சுகமாய் அதிர்ந்தவன், “ஆஹா, இந்த போடா செம கிக்கா இருக்குடி…” என மீண்டும் அவளைத் தன்னிடம் இழுக்க, “ப்ச்… போதும், போதும்… எல்லாரும் கீழ வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, முதல்ல கிளம்புவோம்…” எனவும் ரம்யா வேகமாய் கீழே இறங்கினாள்.

சில நிமிடத்தில் இருவரும் கீழே வர, “என்ன மருமகளே… என் மகன் உன்னைத் தாஜா பண்ணிட்டானா…?” என மல்லிகா சிரிப்புடன் கேட்க காவ்யா நாணினாள்.

“போங்க அத்தை, சும்மா பேசிட்டு இருந்தோம்…” என்றவளின் முகத்தில் தெரிந்த சிவப்பு, சும்மா பேசவில்லை என்பதை உணர்த்தினாலும் பெரியவர்களாய் அதைக் கண்டு கொள்ளாமல் புன்னகைத்தனர். ஆனால் ரம்யாவின் மனது அர்ஜூனின் அருகாமைக்காய் தவித்துக் கொண்டிருந்தது.

நில்லென்றால் நிற்பதில்லை

நேசம் கொண்ட நெஞ்சம்…

சொல்லென்றால் சொல்வதில்லை

காதல் கொண்ட மனது…

தாவென்றால் தருவதில்லை

துணைக்காய் துடிக்கும் இதயம்…

எல்லாமே காதலின் நிமித்தங்கள்…

Advertisement