Advertisement

அத்தியாயம் – 2
காலையில் கல்லூரிக்கு நேரமாகவே கிளம்பிய காவ்யா வழியில் இருந்த அம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள்.
அம்பாளைக் கண்டு அவசரமாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் அலைய, அவளை நோக்கிப் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தான் கவின். காவ்யாவின் அத்தை மகன்.
நிகுநிகுவென உயரம்… மாநிறம்… முகம் முழுக்க தேங்கி நிற்கும் குறும்பு சிரிப்பு. பார்வையாலேயே பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் வசீகரமான தோற்றத்துக்கு சொந்தக்காரன்.
அவனைக் கண்டதும் சில்லென்று மனதுக்குள் வீசிய பூஞ்சாரலைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கியவள் முகத்தில் அவசரத்தைக் காட்டி அவனை ஏறிட்டாள்.
“அத்தான், எதுக்கு என்னை அவசரமா கோவிலுக்கு வர சொன்னிங்க, என்னோட பேசணும்னா வீட்டுக்கு வந்திருக்கலாமே…”
“வந்திருக்கலாம் தான், ஆனாலும் உன்னை இப்படித் தனியாப் பார்க்க முடியாதுல்ல, அதான் கோவிலுக்கு வர சொன்னேன்…” என்றான் கவின்.
“ஓஹோ, என்னை எதுக்கு நீங்க தனியாப் பார்க்கணும்…?” என்றவளின் விழிகளுக்குள் ஆழமாய் பார்த்தவன், “காவ்யா, நிஜமாலுமே உனக்கு என் மனசு புரியலையா..? இல்ல, புரியாத போல நடிக்கறியா…?”
“ப்ச்… நான் எதுக்கு நடிக்கணும், புரியாம தான் கேக்கறேன்…” என்றவளின் விழிகள் நிலம் நோக்கியது.
“அதை என் முகத்தைப் பார்த்து சொல்லறது, இங்க பாரு காவ்யா, உனக்கு நிஜமாலுமே என்னைப் புடிக்கலியா… ஏன் என் மனசு தெரிஞ்சும் இப்படி விலகிப் போற…?” அவனது கேள்வி மனதை சுட, தவிக்கத் தொடங்கிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.
“அத்தான், நானும் எத்தனையோ முறை சொல்லிட்டேன், அக்காக்குன்னு ஒரு வாழ்க்கை அமையாம என்னைப் பத்தி மட்டும் என்னால யோசிக்க முடியாதுன்னு… அதுவும் இல்லாம, நீங்க என்னைக் காதலிக்கறீங்கனு வீட்டுல போயி நின்னா முதல் எதிர்ப்பு அவகிட்ட தான் வரும்… முதல்ல படிப்பு முடியட்டும்… அதுக்குள்ள அக்காக்கு ஏதாச்சும் நல்லது நடக்கும்னு நம்புவோம்… அதுக்குள்ளே பெரிய அத்தானுக்கும் கல்யாணம் முடிஞ்சுட்டா அப்புறம் வீட்டுல சொல்லி முடிவு எடுப்போம்…” தெளிவாய் சொன்னாள் காவ்யா.
“காவ்யா, நீ சொல்லுறது எல்லாம் சரிதான்… ஆனா உன் அக்கா வீம்புக்கு, வர்ற சம்மந்தம் எல்லாத்தையும் தட்டிக் கழிச்சிட்டு இருக்கா… அப்படி இருக்கும்போது எப்படி அவளுக்கு கல்யாணம் நடக்கும்…?”
அதுக்காக அவளை அப்படியே விட்டுட முடியாதே… அவ இந்த நிலமைல இருக்கும்போது நம்ம கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறது ரொம்பத் தப்பு… என்னால அப்படி சுயநலமா யோசிக்க முடியாது…” சொன்னவளை கனிவோடு பார்த்தான்.
“இதான், உங்கிட்ட இருக்கிற இந்த பக்குவமும், குடும்பத்து மேல நீ வச்சிருக்கிற அன்பும் தான் என்னை உன்னையே சுத்தி வர வைக்குது… நீ சொன்னபோல கல்யாணம் எப்ப வேணும்னா நடக்கட்டும், இப்போதைக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு மட்டுமாச்சும் உன் வாயால சொல்லிட்டா நான் நிம்மதியா இருப்பேன்ல…”
“அத்தான், வாயால சொன்னாதான் எனக்கு உங்களைப் பிடிக்கும்னு அர்த்தமா… பிடிக்கும்னு சொன்ன பின்னாடி உங்க மனசு அமைதியா இருக்குமா, அடிக்கடி என்னைப் பார்க்க சொல்லும், போன்ல பேச சொல்லும்… அப்புறம் அக்கா காதுக்கு விஷயம் போயிட்டா பிரச்சனை ஆயிடும்… அதான் உங்களைக் கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லறேன்…” என்றதும் பெருமூச்சு விட்டான் கவின்.
“ஹூம், இவ்ளோ நாள் தான் சொல்லல, இன்னைக்கு என் பிறந்த நாளுக்காச்சும் அந்த சந்தோஷத்தைக் கொடுப்பேன்னு ஆவலா வந்தேன்… ஓகே, இந்த ஸ்வீட் பாக்ஸ் ஆச்சும் வாங்கிக்க…” சொன்னவன் ஸ்வீட் பாக்ஸை நீட்ட வாங்கிக் கொண்டவள், “பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அத்தான்…” என வாழ்த்தவும் செய்தாள்.
“சரி, காலேஜ்க்கு லேட் ஆகிடும், நான் கிளம்பட்டா…?”
“நானே டிராப் பண்ணறனே, ப்ளீஸ் காவ்யா…” கவின் கெஞ்சலாய் கேட்க, மறுக்க முடியாமல் தலையாட்டினாள்.
“சரி, வண்டில தான போறோம், அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க, சாமி கும்பிட்டு வந்துடறேன்…” சொன்னவள் அம்மன் சன்னதிக்கு சென்றாள்.
அர்ச்சகரிடம், “சாமி… கவின், பூரம் நட்சத்திரம், ஒரு அர்ச்சனை பண்ணிடுங்க…” என்றதும் அவர் பூக்களைத் தூவி மந்திரம் சொல்ல கை கூப்பி கண் மூடி அவனுக்காய் பிரார்த்தித்துக் கொண்டு கண் திறந்தவள் திகைத்தாள்.
அவள் எதிரே கண்ணில் காதல் வழிய, உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கை கட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அவளது அத்தை மகன்.
புருவத்தை மேலேற்றி கேள்வியாய் அவளைப் பார்த்து கேலியாய் சிரிக்க, தன்னை மீறி சிவந்த முகத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க போராடினாள் காவ்யா.
“அது…வந்து, என்ன இருந்தாலும் உங்களுக்கு இன்னைக்குப் பிறந்த நாள்னு சொல்லிட்டீங்க… அதான், ஒரு அர்ச்சனை பண்ணலாமேன்னு…” திணறலாய் சொல்ல, “நான் எதுவும் கேக்கவே இல்லயே…” என்றான் அவன்.
“ஹூம், மனசு நிறைய காதல் இருந்தாலும் உன்னால அதை ஒத்துக்க முடியலைல, பார்ப்போம், இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே சொல்லப் போறேன்னு, சரி, கிளம்புவோமா…” என்றதும் வேகமாய் தலையாட்டினாள்.
அவன் பின்னில் அமர்ந்தவளின் இதயத் துடிப்பு வேகமாவதை அவளால் உணர முடிந்தது. அவனைப் பிடிக்காமல் பைக்கின் சைடில் உள்ள கம்பியை சப்போர்ட்டுக்குப் பற்றி இருந்தாலும் காற்றைக் கிழித்துக் கொண்டு இருவருமாய் புல்லட்டில் செல்கையில் காதுக்குள் ஒலித்த பாடலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“பார்த்த முதல் நாளே… உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சி பிழை போலே… உணர்ந்தேன் காட்சி பிழை போலே…”
அவள் அமைதியாய் யோசித்துக் கொண்டிருக்க இதழில் மிளிர்ந்த புன்னகையை, சைடு மிரரில் கவனித்த கவின், “என்ன காவ்யா, பேக்கிரவுண்டு சாங்கா…” என்றதும் திகைத்தவள், “கள்ளன், நான் மனசுல எதை நினைச்சாலும் கண்டு பிடிச்சுடறானே…” செல்லமாய் சலித்துக் கொண்டாள்.
காவ்யாவுக்கும் சின்ன அத்தானை நிரம்பவே பிடிக்கும்… சின்ன வயதில் இருந்து பழகியதில் அவன் குணமும் தெரியுமாதலால் அவனை ஏற்றுக் கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை. ஆனாலும் இருவருக்கும் கல்யாணம் என்பதை குடும்பத்தினராய் பேசத் தொடங்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள். அக்கா ரம்யாவின் விஷயத்தில் முன்னமே மனமொடிந்து போன பெற்றோருக்கு தானும் எந்த விதத்திலும் வருத்தத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் காவ்யா தீர்மானமாய் இருந்தாள்.
கவின் சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். வேலைக்கு சேர்ந்தது முதல் இப்படி காதல் விண்ணப்பத்தைத் தூக்கிக் கொண்டு அடிக்கடி காவ்யாவிடம் ஓடி வருகிறான். அவளுக்கும் அவனிடம் நேசம் இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களாய் தீர்மானிக்க வேண்டுமென்று விரும்பினாள். அதற்கு முக்கிய காரணமும் இருந்தது.
நிலம் பார்க்கும் உன் கண்கள்
என் முகம் பார்க்க மறுப்பதேனோ
இதழ் உரைக்கும் பொய்யை
இமை மறைக்கத் தானோ…!
வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்க, துவைத்த துணியை மடித்துக் கொண்டிருந்த பூங்கொடி எட்டிப் பார்த்தார். சரவணனின் தங்கை மல்லிகா மகன் அர்ஜூனுடன் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருக்க முகம் மலர்ந்தார்.
தலையைப் பெப்பரப்பே என விரித்துப் போட்டுக் கொண்டு சோபாவில் அமர்ந்து, அடுத்து வீட்டினரை எப்படி வெறுப்பேத்தலாம் என சீரியஸாய் யோசித்துக் கொண்டிருந்த மகளிடம்,
“ரம்யா… மல்லிகா அத்தயும், அர்ஜூன் அத்தானும் வர்றாங்க, போயி தலையை சீவி ஒதுக்கிட்டு அழகா வா மா…” என்றதும் எரிச்சலாய் முறைத்தாள்.
“அவங்க என்ன… பொண்ணு பார்க்கவா வராங்க, வந்துட்டுப் போகட்டும்…” அசால்ட்டாய் சொன்னவள் அப்படியே குத்துக் கல்லாய் அங்கே அமர்ந்திருக்க, பூங்கொடி தலையில் அடித்துக் கொள்ள அதற்குள் மல்லிகா உள்ளே வந்தார்
“என்ன அண்ணி, என் மருமவ என்ன சொல்லுறா…”
“ப்ச்… எத்தன தடவ சொல்லிருக்கேன், என்னை அப்படி கூப்பிட வேண்டாம்னு… மருமவளாம் மருமவ…” பட்டென்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லிவிட்டு எழுந்து அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். விக்கித்துப் போன மல்லிகா, “என்ன அண்ணி, இவ இப்பவும் அப்படியே தான் இருக்காளா…” என்றார் கவலையுடன்.
“ஆமா மல்லிகா, போன ஜென்மத்துல நாங்க பண்ணின பாவம் தான் இவளைப் பொண்ணாப் பெத்து வச்சிருக்கோம்னு நினைக்கறேன்…”
“பீல் பண்ணாதீங்க அண்ணி, ஏதோ அவளோட பொல்லாத காலம், விதி அவளை இப்படி ஆக்கி வச்சிருச்சு, காலம், மாறி வரும்போது அவளும் மாறிடுவா…”
“ம்ம்… அப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டு இருக்கோம்… ஒரு வருஷமாச்சு, மாற்றத்துக்கான எந்த அறிகுறியும் காணோம்… நாளுக்கு நாள் அவளோட திமிரும், அடாவடியும் அதிகமாயிட்டு தான் இருக்கு…” பூங்கொடி சொல்வதைக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மல்லிகாவின் மூத்த மகன் அர்ஜூன்.
“வாப்பா அர்ஜூன், இன்னைக்கு லீவா…”
“இல்ல அத்த, இன்னைக்கு நைட் ஷிப்ட்… அதான் அம்மா இங்க வரணும்னு சொல்லவும் அழைச்சிட்டு வந்தேன்…” சொன்ன அர்ஜூன் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, வின்ட் மில்க்கான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் பிரைவேட் கம்பெனி ஒன்றில் சீனியர் சூப்பர்வைசராக இருக்கிறான். தம்பி கவினை விடக் குறைவான சம்பளம் என்றாலும் மனதுக்குப் பிடித்த, படித்த நிறைவான வேலை என்பதில் சந்தோஷமாய் இருந்தான்.
மல்லிகாவுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் அர்ஜூன் அமைதியும் பொறுப்பும் நிறைந்தவன் என்றால் இளையவன் கவின் படபட பட்டாசு. எந்த ஒரு விஷயத்திலும் உடனே தீர்மானம் தெரிந்து கொள்ளத் துடிக்கும் மனசு. இருவருக்கும் பெரிதாய் வயது வித்தியாசம் இல்லை…! இரண்டு வருட இடைவெளி என்பதால் நண்பர்களைப் போலவே பழகினர். ஆனாலும் பொறுப்பான அர்ஜூனுக்கு கவின் செய்யும் குறும்பும், அட்டகாசமும் பலநேரம் குழந்தை போலவே தோன்றும். சில நேரம் தன்னை விட அவன் தெளிவாய் சிந்திப்பதையும் உணர்ந்திருக்கிறான். அர்ஜூன் ஐந்தரை அடி உயரத்தில் கலர் கம்மியாய் இருந்தாலும் பார்க்க நன்றாகவே இருப்பான். எதிரில் பேசுபவர்களை புண்படுத்தாமல் கண்ணில் எப்போதும் கனிவு ஒட்டிக் கொண்டிருக்கும்.
கவினும் அப்படி தான் என்றாலும் மனதில் தப்பென்று தோன்றினால் பட்டென்று சொல்லி விடுவான்… இவனது கண்ணில் எப்போதும் குறும்பு நிறைந்திருக்கும். அர்ஜூனை விட கவின் பார்க்க அழகாய் இருப்பான். இவர்களின் தந்தை பொன்வண்ணன் ஒரு பிரைவேட் பாங்கில் மேனேஜராய் இருந்தார். அழகான, நல்ல குடும்பம்.
“என்ன விசேஷம் மல்லி, காலைல என் மருமகனைக் கூட்டிட்டு வந்திருக்க, ரெண்டு பேரும் உக்காருங்க, காபி எடுக்கறேன்…” என்றார் பூங்கொடி.
“அதெல்லாம் வேண்டாம் அண்ணி, இன்னைக்கு கவின் பர்த்டே, ஈவனிங் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்திருங்க, நைட் டின்னர் அங்க வச்சுக்கலாம்… அண்ணன்கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன்… பக்கத்துல டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு வந்தேன், அப்படியே நேர்ல கூப்பிட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்ற மல்லிகாவின் வீடு இவர்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. தங்கையின் அருகே இருக்க வேண்டுமென்று அவள் இருக்கும் ஏரியாவிலேயே சரவணனும் இடம் வாங்கி வீடு கட்டி இருந்தார். பாசமலர் சிவாஜி, சாவித்திரி அளவுக்கு இல்லாவிட்டாலும் இருவரும் பாசப் பறவைகள் ரேஞ்சில் அன்பாக இருந்தனர்.
தனது இரு மகன்களுக்கும் அண்ணனின் மகள்களை மணமுடிக்க வேண்டுமென்றே மல்லிகாவின் ஆசையும். சரவணன், பூங்கொடிக்கும் அப்படியே. ஆனால், நடுவே வந்த ரம்யாவின் காதல் அனைவரின் ஆசையையும் புரட்டிப் போட்டதோடு அவள் குணத்தை மேலும் அடமன்டாய் மாற்றியது தான் மிச்சம்.
ரம்யாவின் அடாவடி குணம் தெரிந்தாலும் சின்ன வயதில் இருந்தே பெரியவர்களின் பேச்சும், ரம்யாவின் அசத்தும் அழகும் அர்ஜூனுக்கு அவள் மேல் காதலை வளர்த்து விட்டிருந்தது. எந்த விருப்பத்தையும் வாய் விட்டு வீட்டில் கேட்டுப் பழக்கம் இல்லாத அர்ஜூன் ரம்யாவின் மீதிருந்த காதலை மனதுக்குள் பொக்கிஷமாய் பூட்டி வைத்திருந்தான்.
இப்போதைய ரம்யாவின் நிலையில் வருத்தம் இருந்தாலும் அவள் மீது கொண்ட காதலில் எந்த மாற்றமும் இல்லை.
“அர்ஜூன், அந்தப் பிரசாதத்தை எடுத்து அத்தைக்கு கொடுப்பா…” அன்னை சொல்ல கைப்பைக்குள் இருந்த கோவில் பிரசாதத்தை அத்தையிடம் நீட்டினான் அர்ஜூன்.
எடுத்து நெற்றியில் தொட்டுக் கொண்டாள் பூங்கொடி.
“நம்ம முருகர் கோவில்ல கவின் பேருக்கு பூஜைக்கு கொடுத்திருந்தேன் அண்ணி… அர்ஜூன், ரம்யா ரூம்ல இருக்கா, அவளுக்கும் கொடுத்துட்டு வாப்பா…” அன்னை சொல்ல தயக்கத்துடனே ரம்யாவின் அறைக்கு நடந்தான்.
“ஹூம்… என் பையன் மனசுல நானே ஆசையை விதைச்சுட்டேன், இப்ப மனசுக்குள்ள வேதனைப்பட்டுட்டு இருக்கானோ, என்னவோ…” நினைத்துக் கொண்டார். அறைக்குள் ஜன்னல் அருகே அமர்ந்து வெளியே வெறித்துக் கொண்டிருந்த ரம்யா, கதவின் ஓசையில் திரும்பினாள்.
அர்ஜூனைக் கண்டதும் வெறுப்புடன் முகம் திருப்பிக் கொண்டவளிடம், “ரம்யா, கோவில் பிரசாதம் எடுத்துக்க மா…” கனிவோடு கூறினான்.
“ப்ச்… எனக்கு வேண்டாம்…”
“சாமி பிரசாதம்… அப்படி சொல்லக் கூடாது, நான் வச்சு விடவா…” உரிமையோடு கையில் விபூதியை எடுத்து அவள் நெற்றிக்கு கொண்டு செல்ல கையைத் தட்டி விட்டாள்.
“நான்தான் வேண்டாம்னு சொல்லறேன்ல, சாமியாம், பிரசாதமாம்…” அவன் விக்கித்து நிற்க பொருமலுடன் திரும்பியவள், “நீங்க எதுக்கு என் ரூமுக்குள்ள வந்திங்க…? முதல்ல வெளிய போங்க…” சீறலாய் சொல்லவும் மனம் வருந்தியவன், “சாரிமா…” என்றுவிட்டு வெளியே சென்றான்.
சுவாசம் தடைபடும்
என்றறிந்தேன்… உன் வாசம்
என்னைத் தீண்டுகையில்…
பேச்சற்ற தருணத்தின்
மொழியறிந்தேன்…
உன்னருகில் காத்திருப்பின்
சுகமறிய பூத்திருக்கிறேன்…
உன் பாதை மலராக…!
   

Advertisement