Advertisement

அத்தியாயம் – 19

கல்யாண வேலைகள் மடமடவென நடக்கத் தொடங்க மண்டபம், சமையல், இன்விடேஷன், நகை, ஜவுளி என வீடு சந்தோஷத்தில் நிறையத் தொடங்கியது.

“பூங்கொடி, இன்னைக்கு சாயந்திரம் இன்விடேஷன் மாடல் பார்க்கப் போகணும்… காவ்யா வந்ததும் கிளம்புவோம்…”

“சரிங்க, அப்படியே நம்ம நகை ஆசாரிய ஞாயித்துக் கிழமை வீட்டுக்கு வர சொல்லிட்டிங்கன்னா நாம பொண்ணுகளுக்கு வாங்கி வச்ச தங்கக் காசை உருக்கி நகை செய்யக் கொடுத்துடலாம்… மல்லிகாவும் தாலிக்கொடி செய்யணும்னு சொல்லிட்டு இருந்தா, ஒண்ணாக் கொடுத்துடலாம்…”

“சரிம்மா, வர சொல்லறேன்…” நான் கடைக்குப் போயிட்டு பாங்குல வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்திடறேன்…”

“சரிங்க… இப்பதான் உடம்பு தேறி வரீங்க வெயில்ல போக வேண்டாம், கார்லயே போயிட்டு வாங்க…”

“ம்ம்…” சொன்னவர் கார் சாவியுடன் வாசலுக்கு சென்றார். காவ்யா இன்று இறுதித் தேர்வுக்கு நேரமே கல்லூரிக்கு கிளம்பியிருந்தாள்.

“அப்பா… என்னை அப்படியே கோவில்ல இறக்கி விட்டுடறீங்களா…” தயாராய் வந்த ரம்யா கேட்கவும் புன்னகைத்தார். வீட்டில் கல்யாணம் முடிவானதை அத்தை பர்வதத்திடம் பூங்கொடி போனில் சொல்ல மிகவும் சந்தோஷப்பட்டார்.

ரம்யா அவரிடம் வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்க, “அதெல்லாம் போகட்டும் கண்ணு… ஏதோ… குடும்பத்துக்கு நேரம் சரியில்ல, அதான் எல்லாரையும் வருத்துற போல நடந்துகிட்ட, போகட்டும் விடு… இனியாச்சும் உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கட்டும்… வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்குப் போயி விளக்குப் போடு கண்ணு… எல்லாம் அவ பார்த்துப்பா…” என்றார் பெரிய மனுஷியாக.

“சரி பாட்டி… உங்களை ரொம்ப அவமானப்படுத்தி பேசிருக்கேன், இப்ப யோசிக்கும்போது வருத்தமாருக்கு…”

“அவ்ளோ வருத்தமா இருந்தா நான் கல்யாணத்துக்கு வரும்போது ரெண்டு கப் பாயாசம் சேர்த்து கொடு கண்ணு, உன் அம்மா எனக்கு சுகர்னு கண்ணுல காட்ட மாட்டா…” எனவும் லேசான மனதுடன் சிரித்தாள் ரம்யா. இப்படியான உறவுகளை விட்டு வேஷத்தை பாசமாய் நினைத்த தன் மடத்தனத்தை எண்ணி வேதனையாய் இருந்தது.

“என்ன ரம்மி மா… வெள்ளிக்கிழமை விளக்குப் போடவா…”

“ஆமாப்பா… இது ரெண்டாவது வாரம்… இத்தன நாள் எப்படியோ… இனியாச்சும் பெரியவங்க சொல்லுறதைக் கேட்டு நடக்க முடிவு பண்ணிட்டேன்…”

“கேட்கவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு டா…” சொன்னவர் காரை எடுத்தார். கோவில் முன்னில் மகள் இறங்கிக் கொள்ள, “பூஜை முடிஞ்சு பத்திரமா வீட்டுக்குப் போடா…” என்றவர் கிளம்பினார்.

பூஜைப் பொருட்களை முன்னில் இருந்த கடையில் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ரம்யா. வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் கண்ணை நிறைத்தாள் அம்மன். பூசாரியிடம் கூடையை நீட்ட வாங்கிக் கொண்டார். தேங்காய் உடைத்து அவள் கொண்டு வந்த பூமாலையை அம்மன் காலடியில் சார்த்தி தீபாராதனை காட்டினார். மனம் உருக பார்த்து நின்றவளின் கண்கள் கலங்கியது.

*************************

நைட் ஷிப்ட் முடிந்து காலையில் வீட்டுக்கு வந்த அர்ஜூன் குளித்து, சாப்பிட்டு படுத்தவன் தான்… நல்ல உறக்கத்தில் இருந்தவனை அலைபேசி சிணுங்கி உறக்கம் கலைக்க எடுக்காமல் விடவே மீண்டும் சிணுங்கியது. எரிச்சலுடன் கண்ணைத் திறந்து அதை எடுத்துப் பார்க்க கவின் அழைத்திருந்தான்.

கொட்டாவியுடன், “சொல்லு கவின்…” எனவும் எதிர்ப்புறம் பதட்டமாய் ஒலித்தது அவன் குரல்.

“அண்ணா, நீ வீட்டுல தான இருக்க…?”

“ஆமாடா, என்னாச்சு…?” என்றவனின் தூக்கம் கலைந்தது.

“நீ உடனே கிளம்பி நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்குப் போ… சீக்கிரம்…” என அவசரப்படுத்த, “என்னன்னு சொல்லுடா, எதுக்கு இவ்ளோ பதட்டம்…” கேட்டுக் கொண்டே உடையை மாற்றிக் கொண்டிருந்தான்.

“சொல்லறேன், முதல்ல கிளம்புணா…” அவன் அவசரப்படுத்த, அதற்கு மேலும் கேள்வி கேட்காமல் பைக் சாவியுடன் வெளியே வந்தான். தந்தை அலுவலகம் சென்றிருக்க கீரை அரிந்து கொண்டிருந்த மல்லிகா மகனைக் கண்டதும், “அர்ஜூன், தூங்கலையா….” எனக் கேட்க,

“வந்துடறேன்மா…” என்றவன் அடுத்த நிமிடம் பைக்கை ஸ்டார்ட் செய்து கேட்டுக்கு வெளியே வந்திருந்தான்.

கவின் எதிர்ப்புறம் அழைப்பிலேயே இருக்க, “டேய் கவின்… கிளம்பிட்டேன், இப்பவாச்சும் என்னன்னு சொல்லுடா…” என்றவனின் குரலிலும் பதட்டம் இருந்தது. அண்ணனின் கேள்விக்கு கவின் சொன்ன பதில் நெஞ்சுக்குள் தீயை வைக்க வண்டியை பறக்க விட்டான் அர்ஜூன்.

***************************

கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த ரம்யாவின் மனதில் ஒரு நிறைவு வந்திருந்தது. மனதை அலட்டிக் கொண்டிருந்த குற்ற உணர்வுகள் அம்மனின் முகத்தைக் கண்டதும் சற்று தெளிந்திருக்க அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

மனது அர்ஜூனுடன் பேசியதை அசை போட அவன் பாடிய பாடல் காதுக்குள் சுகமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. இதமான புன்னகை இதழ்களில் ஒட்டிக் கொள்ள சற்று நேரம் அமர்ந்திருந்தவள் எழுந்து வெளியே நடந்தாள்.

செருப்பை காலில் போட்டுக் கொள்கையில் முன்னிலிருந்த கடை ஒன்றில் சற்று கரடுமுரடான தோற்றத்துடன் ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்ற நிமிர்ந்து பார்க்கவும் திரும்பிக் கொண்டான்.

“ச்ச்சே… பொண்ணுங்க என்னவோ வேறு உலகத்து ஜீவிங்க போலவே அதிசயமாப் பார்ப்பாங்க, ஜொள்ளுப் பார்ட்டிங்க… அவனும் அவன் ஜிலேபி முடியும்…” மனதுக்குள் திட்டிக் கொண்டே நடக்கத் தொடங்க அந்தத் தெரு முடியும் வரை  பின்னில் கவனித்துக் கொண்டே நடந்தவளுக்கு அவனும் பின்னிலேயே வருவது புரிந்தது. சில வீடுகளில் சீரியல் சத்தம் கேட்டது. குடியிருப்புப் பகுதி என்பதால் வண்டிகள் எப்போதாவது ஒன்று கடந்து போனது.

“ஆஹா மெல்ல நட, மெல்ல நட…

மேனி என்னாகும்…” அவன் பாடலை உரக்கப் பாடியபடி வர கடுப்பானவள் நின்று முறைக்க அவன் இளித்தான்.

“ஹலோ, எதுக்கு என் பின்னாடியே வர்ற…”

“இல்லியே, நீதான் எனக்கு முன்னாடி போற…”

“என்ன வம்பு பண்ணறியா…”

“நான் எங்க வம்பு பண்ணினேன், என் பாட்டுக்கு பாட்டு பாடிட்டு வரேன், உனக்கென்ன…” என்றான் தெனாவெட்டாக.

“அதை ஏண்டா என் பின்னால பாடிட்டு வர்ற…” என்றவள் கோபத்துடன் அவனை நெருங்க, அவனது கைகள் பான்ட் பாக்கெட்டுக்குள் நுழைந்தது.

“ஏய், இன்னாடி… டா போட்டுப் பேசற, அப்புறம் சீனாகிடும் சொல்லிட்டேன்….”

“என்னடா, என்ன பண்ணுவ… பெரிய ரவுடியா, மிரட்டுறியா…” என்றாள் ரம்யாவும் விடாமல்.

“ஏன்..? நான் மிரட்டுனா நீ பயந்துக்க மாட்டியா… நீ இன்னா அவ்ளோ பெரிய அப்பாடக்கரா…?” சொன்னவன் கையில் இப்போது ஏதோ சின்ன பாட்டில் இருந்தது.

“ஏய், சத்தம் போட்டு ஆளைக் கூட்டினா, என்னாகும் தெரியுமா… தனியாப் போற பொண்ணுகிட்ட வம்பு பண்ணற வேலை வச்சுக்காத…” என்ற ரம்யா அதை கவனிக்கவில்லை.

“என்னடி, ரொம்ப தான் உருட்டுற… இந்த மூஞ்சி நல்லா இருக்கிறதால தான இந்தத் துள்ளுத் துள்ளுற, அதை நாசம் பண்ணிட்டா இன்னா பண்ணுவ…” என்றதும் திடுக்கிட்டாள்.

“ஏ…ஏய்… நீ என்ன சொல்லற…” என்றவள் செல்ல முயல பட்டென்று கையைப் பிடித்துக் கொண்டான்.

ஒரு கை அந்த பாட்டில் மூடியைத் திறந்து கொண்டிருக்க தெரு வளைவில் வேகமாய் பைக் வருவதைக் கண்டவன் சட்டென்று அந்த மூடியைத் திறந்து அவள் முகத்தில் அதை ஊற்ற முயல்வதற்குள் வண்டிக்காரன் அவனை நெருங்கி ஒரு கையால் அவனைத் தட்டிவிட்டு பைக்குடன் கீழே விழ, அந்த பாட்டிலுக்குள் இருந்த வஸ்து கை நழுவி கீழே சிதறி புஸ்சென்று மண்ணில் விழுந்தது. அதில் ஒரு சில துளிகள் மட்டும் வண்டியில் வந்த அர்ஜூனின் கையில் தெறித்திருக்க தோல் பொசுங்கும் வாசனை வந்தது.

சட்டென்று எழுந்து அந்த ரவுடி ஓடத் தொடங்க அர்ஜூன் கையில் உண்டான எரிச்சலில் “ஆ…” என அலறினான். அதற்குள் ஒன்றிரண்டு பேர் அதைப் பார்த்துவிட்டு அங்கே வர ரோட்டில் செல்லும் ஆட்களும் நிறுத்தி அவர்களிடம் வந்து என்னவென்று விசாரித்தனர்.

“ஐயோ அர்ஜூன், உங்க மேல பட்டிருச்சா…” எனக் கேட்டவளிடம், “உனக்கொண்ணும் ஆகலியே ரமி, உன்மேல படலியே…” அவள் மீது பார்வையை ஓட்டியவன், “ஹா…” என கையை உதறிக் கொண்டு எழ முயல பிடித்துக் கொண்டாள்.

அப்போதுதான் அவன் கையில் பார்த்தவள், “அச்சோ… இதென்ன தீ பட்ட போல உங்க கைல தோல் பொசுங்கிப் போயிருச்சு…” பயத்துடன் கை பற்றி பார்த்தாள்.

“ம்ம்… அவன் கைல இருந்தது ஆஸிட்…” அர்ஜூன் சொல்லவும் பயத்தில் “ஆ…ஆசிட்டா…”நடுங்கிப் போனாள்.

“ம்ம்… ஆமாம் மா, நல்லவேளை, உன்மேல ஊத்தறதுக்கு முன்னாடி தம்பி வந்து காப்பாத்துச்சு… கைல விழுந்தது முகத்துல விழுந்திருந்தா என்னாயிருக்கும், சீக்கிரம் ஹாஸ்பிடல் போங்க தம்பி…” என்றார் ஒருவர்.

“யார் அவன், எதுக்கு உங்க மேல ஆசிட் ஊத்த வந்தான், போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிருங்க…” என்றார் ஒருவர்.

“பட்டப்பகல்ல இப்படிப் பண்ணப் பார்த்தானே, ரொம்பதான் தைரியம் அவனுக்கு… ஜஸ்ட் மிஸ், அந்தப் பொண்ணு முகம் என்னாயிருக்கும்…” ஒவ்வொருத்தரும் பேசத் தொடங்கினர்.

அர்ஜூன் கையின் எரிச்சல் தாங்காமல் ஊத, ஒரு பெண்மணி ஓடிச்சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து அதில் ஊற்ற சொல்லி, கொடுத்தார்.

“தம்பி… லேட் பண்ண வேண்டாம், உடனே ஹாஸ்பிடல் போயிருங்க…” என்றார் அந்தப் பெண்மணி.

அடுத்த தெருவிலேயே ஒரு சின்ன கிளினிக் இருக்க அங்கே சென்றனர். அர்ஜூனின் வலது கையில் சின்ன சின்ன நாணயம் அளவில் அங்கங்கே தோல் பொசுங்கி  நிறம் மாறி இருப்பதைப் பரிசோதித்த டாக்டர்,

“இந்த மாதிரி ஆசிட் உடம்புல பட்டா உடனே குளிர்ந்த நீரை ஊற்றணும்… நல்லவேளை, பெரிய பாதிப்பு இல்லை, லேசா கை நரம்பிலும் பாதிச்சிருக்கு…” சொல்லியபடி மருந்தை எழுதியவர், “இந்த டாப்லட், மருந்தை சரியா எடுத்துக்கங்க… ஆயின்ட்மென்ட் போடுங்க, சரியாகிடும்…” என்றார்.

“டாக்டர், கைல தோல் பொசுங்கி சுருங்கின போல இருக்கே, இது போட்டா நார்மல் ஆகிடுமா…” ரம்யா தவிப்புடன் கேட்க,

“அடையாளம் அவ்ளோ சீக்கிரம் போகாது மா… இந்த மாதிரி தோலில் ஆஸிட் படும்போது சருமப்பகுதி சேதமாகி தோலில் இருக்கிற புரதத்தை எல்லாம் உறிஞ்சிடும்… அதனால தான் தோல் சுருங்குது… போகப் போக சுருக்கம் ஓரளவு குறையத் தொடங்கும், பயப்படாதீங்க…” என்றதும் டாக்டருக்கு தேங்க்ஸ் சொல்லி இருவரும் கிளம்பினர். அர்ஜூனின் பைக்கை அங்கேயே ஒரு வீட்டு ஓரமாய் நிறுத்திவிட்டு நடந்தே வீட்டுக்கு சென்றனர். ரம்யாவுக்கு ஏனோ அழுகையாய் வர மௌனமாகவே நடந்தாள்.

“ரமி… ரொம்ப பயந்துட்டியா…?” அவளது மௌனம் அவனைக் கேள்வி கேட்க வைக்க முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது அவளுக்கு.

“ப்ச்… என்னாலதான உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு கஷ்டமா இருக்கு அர்ஜூன்… நான் அவன்கிட்ட வம்பு பண்ணாம பேசாம இருந்திருக்கலாம்…”

“நீ பேசாம இருந்திருந்தா மட்டும் அவன் பண்ணிருக்க மாட்டான்னு நினைச்சியா…” அர்ஜூனின் கேள்வி புரியாமல் அவனை பார்த்து விழித்தாள்.

“ஆமா, அவனுக்கும் எனக்கும் என்ன முன்ஜென்மப் பகையா… நான் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா அவன் பாட்டு பாடிட்டுப் போயிருப்பானோ என்னவோ… ப்ச்…” வருந்தினாள்.

“ரமி, அவனுக்கும் உனக்கும் முன்ஜென்மப் பகை இல்லை தான்… ஆனா, இது நீ பண்ணின பிரச்சனைக்கு செய்தது இல்ல, உன் மேல உள்ள பகைல ஒருத்தங்க பிளான் பண்ணி செய்ய வச்சது…” என்றான் நிதானமாக.

“எ…என்ன சொல்லறீங்க அர்ஜூன்…”

“ஆமாம் மா, அந்த சிவகாமி தான் ஆளை செட் பண்ணி உன் முகத்துல ஆஸிட் ஊத்த ஏற்பாடு பண்ணிருக்கு…” என்றதும் அதிர்ச்சியுடன் பார்த்தாள் ரம்யா.

“நி…நிஜமாவா சொல்லறிங்க, உங்களுக்கு எப்படித் தெரியும்…”

“அந்த சிவகாமி பையன் ராஜேஷ் எதேச்சையா வீட்டுல பெத்தவங்க பேசறதைக் கேட்டு பதறிப் போய் கவினுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கான்… அவன்தான் எனக்கு கால் பண்ணி உடனே உன்னைப் பார்க்க கோவிலுக்கு போக சொன்னான்… நான் மட்டும் கொஞ்சம் லேட்டாகிருந்தா என்னாயிருக்கும்…?” அச்சத்துடன் சொன்னவன் அவள் கையைப் பற்றிக் கொள்ள அவளுக்கும் அந்த ஆறுதல் தேவையாய் இருந்ததோ என்னவோ அவன் கையை விடாமலே யோசனையுடன் நடந்தாள். மனதுக்குள் மிகவும் நொறுங்கிப் போயிருந்தாள்.

“ரமி… பீல் பண்ணாத, உனக்கு நானிருக்கேன்…”

“ம்ம்… ரொம்ப தேங்க்ஸ் அர்ஜூன்…”

“ப்ச்… தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்தாத ரமி…”

“தேங்க்ஸ் சொல்லறதுக்கு வேற வார்த்தை இருக்கா என்ன…?”

“அதை வார்த்தையா தான் சொல்லணும்னு இல்ல ரமி…” என்றவன் கைக்குள் இருந்த அவளது கையின் உள்ளங்கையில் நகத்தால் சுரண்ட, சட்டென்று சிவந்து போனவள் கையை உருவிக் கொள்ள முயல,

“ரமி… ப்ளீஸ்… உன் கையைப் பிடிச்சுகிட்டதும் எனக்கு வலி கூடத் தெரியல…” என்றதும் அவனைப் பார்த்தவள், “அப்ப என் கையைப் பிடிச்சுட்டே உக்கார்ந்துக்கங்க, டாக்டர் எழுதின மருந்து எதுவும் போட வேண்டாம்…” எனக் கிண்டலுடன் சொல்ல காதலுடன் புன்னகைத்தான் அர்ஜூன்.

“நான் ரெடி ரமி… உன் கையைப் பிடிச்சுட்டு மீதி இருக்கிற வாழ்நாள் முழுதும் வாழ்ந்திட மாட்டமான்னு எவ்ளோ ஏங்கிருக்கேன் தெரியுமா…?” அவனது வார்த்தைக்கு பதில் சொல்ல முடியாமல் திகைப்புடன் நடந்தாள். வீட்டுக்கு அருகே வந்ததும், “சரி வீடு வந்திருச்சு, இனியாச்சும் கையை விடுங்க…” என்றதும் விட்டான்.

“ரமி, இப்ப நடந்ததை வீட்டுல எதுவும் சொல்ல வேண்டாம், பயந்துக்கப் போறாங்க…” என்றான்.

“ம்ம்… அப்ப உங்க கைல எப்படி காயம்னு கேட்டா…?

“அதை நான் சமாளிச்சுக்கறேன்…” என்றான் அர்ஜூன்.

“அந்தப் பொம்பளையை அப்படியே விட சொல்லறீங்களா, போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்க வேண்டாமா…?”

“கொடுக்கலாம், அவங்க தான் செய்தாங்கன்னு சொல்ல நம்மகிட்ட என்ன ஆதாரம் இருக்கு…”

“அப்ப, அப்படியே விட்டுடலாம்னு சொல்லறீங்களா…?”

“நீ இதை யோசிச்சு பீல் பண்ணாத, நாங்க பார்த்துக்கறோம்…”

“ம்ம்…” என்றவள் பூங்கொடி எதற்காகவோ வாசலுக்கு வர அமைதியானாள்.

இருவரையும் ஒன்றாய் கண்டதும் மலர்ந்த பூங்கொடி, “அடடே, மாப்பிள்ள, உள்ள வாங்க… ஒரே நிமிஷம், நான் இந்தா இருக்கிற கடைக்கு போயிட்டு வந்துடறேன்… ரம்மி, மாப்பிளைக்கு காபி போட்டுக் கொடு…” என்று அடுத்திருந்த கடைக்கு செல்ல உள்ளே சென்றனர்.

“அர்ஜூன், எப்படி இருந்தாலும் ரெண்டு தெரு தாண்டி நடந்த விஷயம் நம்ம வீட்டுக்கு வராமயா இருக்கும்… நாமளே சொல்லிட்டா நல்லதுன்னு தோணுது…”

“ம்ம்… சரி சொல்லலாம்… தேங்க்ஸ் சொல்ல வேற வார்த்தை இருக்கான்னு கேட்டியே, எப்படின்னு சொல்லித்தரவா…” அவள் என்னவென்று பார்ப்பதற்குள் அவளது மெல்லிய இதழ்களில் மின்சாரத்தை உணர்ந்திருந்தாள் ரம்யா.

“இப்படியும் தேங்க்ஸ் சொல்லலாம்…” எனவும் நாணத்துடன் அவனைத் தள்ளிவிட்டு அவளது அறைக்கு ஓடி விட்டாள்.

அர்ஜூன் கையின் வேதனை மறந்து மனதில் காதல் நிறைய உற்சாகமாய் சோபாவில் அமர்ந்தான். அப்போது கவின் அலைபேசியில் அழைக்க நடந்ததை விவரமாய் கூறினான்.

“என் ரமி முகத்துல ஆஸிட் ஊத்த துநிஞ்சுட்ட அந்தம்மாவை இனியும் சும்மா விடக் கூடாது கவின், ஏதாச்சும் பண்ணனும்…” அர்ஜூன் அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்லிக் கொண்டே ரம்யா வருகிறாளா எனப் பார்த்தான்.

“ம்ம், கிளாஸ் எடுத்திருவோம்…” என்றான் கவின்.

உள்ளத்து முத்தமெல்லாம்

உன்மத்தம் இல்லையடி…

உள்ளுணர்ந்து கொடுத்தாலே

உவகை தான் கொள்ளுமடி….

உன்னுள் இருக்கும் என்

உள்ளச்சிப்பிகளில் கோர்க்கிறேன்

உயிர் உணரும் முத்துகளை…

Advertisement