Advertisement

அத்தியாயம் – 18

அதிருதா… அதிருதா…

எனது நெஞ்சைப் போலே

உன் நெஞ்சும்….

நுண் பூகம்பமாய்…

ஓ, நுண் பூகம்பமாய்…

மையல் கொண்டேனென்று

சொன்னால் கண் நம்புமா… ஓ…

தனது அறையில் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு அலைபேசியில் வழிந்த பாடலுடன் உற்சாகமாய் உரக்கப் பாடிக் கொண்டிருந்த அர்ஜுன் அறைக் கதவு திறந்ததையும், ரம்யா அவன் பாடலைக் கேட்டு வியப்புடன் நோக்கி நிற்பதையும் அறியாமல் திரும்பியவன் அவளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்து நாணத்துடன் புன்னகைத்தான். ஆண்களின் நாணம் மிகவும் அழகு என்பதை அந்நொடி  உணர்ந்த ரம்யா திகைப்புடன் பார்த்து நின்றாள்.

“ரமி, நீ எப்ப வந்த…? சாரி, கவனிக்கலை…” அவனது குரல் அவளைக் கலைக்க அமைதியாய் பார்த்தாள்.

“என்னமா, என் பாட்டைக் கேட்டு பயந்துட்டியா…? அது எப்பவாச்சும் இப்படிதான்… மனசுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கும்போது கண்ட்ரோல் இல்லாம சத்தமா பாடிருவேன்..”

“நல்லாருக்கு…” அவள் வார்த்தையைக் கேட்டவன் இன்பமாய் திகைத்தான்.

“எ..என்ன சொன்ன ரமி, நான் பாடினது நல்லாருக்கா, உனக்குப் பிடிச்சிருக்கா…?” நம்பாமல் கேட்டான்.

“ம்ம்… நீங்க பாடறதை இப்பதான் பர்ஸ்ட் டைம் கேக்கறேன், நல்ல வாய்ஸ்…” என்றதும் புன்னகைத்தான்.

“நீ எப்பவும் என்னை கவனிச்சதே இல்லையே…?”

“ம்ம்…” என்றவள் மௌனமானாள்.

“என்ன ரமி, என்கிட்ட ஏதாச்சும் சொல்ல வந்தியா… அம்மாவும் அப்பாவும் உன் வீட்டுக்கு தானே வந்தாங்க, நீ இங்க வந்திருக்க…”

“ம்ம்… அவங்க என் அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு ஜோசியரைப் பார்க்கப் போயிருக்காங்க… அவங்களுக்கு அடுத்த முகூர்த்தத்துலயே நமக்கு கல்யாணம் முடிக்கணும்னு அவசரம்…”

“ம்ம்… உனக்கு அதில் விருப்பமில்லையா ரமி…” என்றவனின் குரலில் ஒரு அடக்கப்பட்ட வலி தெரிந்தது.

“அப்படி இல்ல, அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், வெளிய எங்காச்சும் போகலாமா…?” என்றாள் அமைதியான குரலில்.

“ம்ம்… பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு, வந்திடறேன்…”

“ம்ம்…” என்றவள் ஹாலுக்கு நகர அணிந்திருந்த அரைக்கால் டிரவுசரில் இருந்து முழுக்காலுக்கு மாறியவன் அதற்கு பொருத்தமான டீஷர்ட்டுக்குள் நுழைந்தான். மனதில் ஏதேதோ யோசனைகள் ஓடி பயமுறுத்தியது.

“ஒருவேளை, அந்த சிவகாமி அம்மா முன்பு ஒரு பேச்சுக்கு தான் என்னைக் கல்யாணம் பண்ணுவதாய் சொல்லி இருப்பாளோ, இப்போது மீண்டும் விருப்பமில்லை என்று சொல்லப் போகிறாளோ…” யோசிக்கவே வருத்தமாய் இருக்க, தலையை ஒதுக்கியவன் பைக் சாவியுடன் வந்தான்.

ஹால் சோபாவில் அமர்ந்து கண் மூடி சாய்ந்திருந்தாள் ரம்யா. அவளது நெற்றியில் அர்ஜூன் கை வைக்க படக்கென்று விழித்தவள் அவன் கையை சட்டென்று மாற்றி விட அவன் முகம் வாடிப் போனது.

“எங்க போகலாம் ரமி…”

“எங்காச்சும், கொஞ்சம் தனிமை கிடைக்கிற இடத்துக்கு…” அவள் சொல்ல, தலையாட்டி நடந்தவனைத் தொடர்ந்தாள்.

பைக்கில் பின்னில் அமர்ந்தவள் மௌனத்தையே தொடர அவனும் அவளே பேசட்டும் என காத்திருந்தான். பார்க்குக்கு வண்டியை விட்டான் அர்ஜூன்.

நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் பார்க்கில் கூட்டமில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில பெருசுகள் அமர்ந்து புத்தகம் படிக்க, சில இளசுகள் ஒதுக்கமாய் இருந்த, பெரிதாய் வளர்ந்திருந்த செடிகளின் பின்னில் அமர்ந்து ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்.

காலில் மெத்து மெத்தென்று புற்கள் நசுங்க, ஓரமாய் ஒரு மரத்தடி பெஞ்சில் சென்று அமர்ந்தனர்.

மதிய நேரமானாலும் சூரியனின் வெயில் அதிகம் பாதிப்பைத் தராத வகையில் நிறைய செடிகளும், மரங்களும் இருந்ததால் குளுமையை உணர முடிந்தது.

“ரமி… எதாச்சும் சாப்பிடறியா…” என்றான் அர்ஜூன்.

“ம்ம்… சுவீட் கார்ன் வாங்குங்க…” வேண்டாமென்று மறுக்காமல் இயல்பாய் அவள் சொன்னது பிடித்திருந்தது. இருவருக்கும் ஒவ்வொரு கப்பில் சூடான கார்னில் பெப்பர் தூவி வாங்கிக் கொண்டு அவளிடம் வந்தான்.

வாங்கிக் கொண்டவள் அதை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்க, “என்ன ரமி… எதைப் பத்தி மண்டைக்குள்ள போட்டு உருட்டிட்டு இருக்க, என்கிட்ட என்ன பேச நினைச்சியோ சொல்லு…” என்றான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு.

“அது…வந்து… நான் இப்படி சொல்லுறது உங்களுக்கு வருத்தமா இருக்கலாம்… ஆனா, சொல்லாம உங்களை ஏமாத்த எனக்கு மனசு வரலை…” எனப் பீடிகையுடன் அவள் தொடங்க அவனுக்கு சற்று திகிலாய் இருந்தது.

“என்னமா, என்ன சொல்லப் போற… என்னைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு மட்டும் சொல்லிடாத…?”

“ப்ச்… கல்யாணம் பண்ண ஓகேதான்…” என்றவள், “அர்ஜூன், உங்களுக்கு என்னைப் பத்தியும், என் மனநிலையை பத்தியும் நல்லாவே தெரியும்… ஒரு பொய்யானவனை உண்மையா நேசிச்சு அதான் காதல்னு ஆழமா மனசுல பதிய வச்சிட்டேன்… அந்த பிம்பம் என் மனசுல இருந்து சுத்தமா அழியணும், அப்பத்தான் உங்களை முழுமையா என் மனசு ஏத்துக்க முடியும்… அதனால…” அவள் தயங்க அவனுக்கு சற்று நிம்மதியானது.

“அதனால, என்ன… சொல்லு ரமி…”

“எனக்கு கொஞ்சம் டயம் வேணும்…”

“எதுக்கு… கல்யாணத்துக்கா…?” என்றான் அவன்.

“கல்யாணம் நடக்கட்டும், ஆனா நான் உங்களை முழுமையா மனசுல ஏத்துக்கற வரைக்கும் நமக்குள்ள வேற எதுவும் வேண்டாம்…” ஒருவழியாய் சொல்லி முடித்தாள்.

“வேற எதுவும்னா…” என்றவன் அவளைக் குறுகுறுவென நோக்க தவிப்புடன் குனிந்து கொண்டாள்.

“ம்ம்…” என்றவன் புன்னகையுடன், “ரமி, நீ சொல்லறது எனக்குப் புரியுது… உனக்கு முழுமையா என்னோட எப்ப வாழ்க்கையைத் தொடங்கணும்னு தோணுதோ, அது வரைக்கும் காத்திருக்க தயார்… அது எவ்ளோ வருஷம் ஆனாலும் ஓகே… ஏன்னா, என் காதல் உண்மையானது…”

“இல்ல, உங்க மனசுல கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் ஆசை இருக்கும், அதெல்லாம் நடக்காமப் போயிடுமோன்னு…”

“அதெப்படி நடக்காமப் போகும், என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… இவ்ளோ நாள் வலியை மட்டுமே கொடுத்த காதல் இப்பதான் நாம சேர்றதுக்கு ஒரு வழியைக் காட்டி இருக்கு… அதே காதல் நிச்சயம் நம்மை ஒண்ணு சேர்த்து வைக்கும்னு நம்பறேன்…” என்றான் தெளிவாக.

“உங்களுக்கு இதுல சம்மதம்னா, எனக்கு வேற எதுவும் சொல்ல இல்லை…” என்றாள் ரம்யா.

“நீ சொன்னது எனக்கு சம்மதம்… பட் ஒரு ரிக்வஸ்ட்…” யோசனையுடன் பார்த்தவள், “என்ன ரிக்வஸ்ட்…” என்றாள்.

“நமக்கு கல்யாணமாகி புருஷ உத்தியோகம் பார்க்க மட்டும் தான் உன் சம்மதத்துக்கு காத்திருப்பேன்… ஆனா ஒரு காதலனா உன்னை நெருங்க முயற்சி பண்ணிட்டே தான் இருப்பேன், அதுக்கு நீ சம்மதிக்கணும்… அப்பத்தான் என் காதல் உன் மனசுல பதியும்…” என்றான் அர்ஜூன்.

சற்று யோசித்தவளுக்கு அவன் சொல்லுவது சரியென்று தோன்ற, “ம்ம்…” என்றாள் சம்மதமாய்.

“அப்புறம் இன்னொரு விஷயம்… பெரியவங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும், அதனால நம்ம வீட்டுல இந்த விஷயம் தெரிய வேண்டாம்…”

“ம்ம்…” அவள் தலையாட்டிக் கொண்டே அவனை நோக்க, சட்டென்று கண் சிமிட்டியவன், “லவ் யூ ரமி…” எனவும் முகம் சிவந்தவள் தவிப்புடன் தலை குனிந்தாள்.

அவள் மனதை முழுமையாய் சீக்கிரமே வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுந்தான் அர்ஜூன். இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்.

*************************

கல்லூரி முடிந்து வெளியே வந்த காவ்யா பேருந்து நிறுத்தம் நோக்கி தோழியருடன் நடக்கத் தொடங்க அவள் முன்னே சற்றுத் தள்ளி கவின் பைக்குடன் வந்து நின்றான்.

“காவி, உன் அத்தான் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்துட்டார் போல…” காதில் கிசுகிசுத்தாள் தோழி.

“ம்ம்… இந்தப் பக்கம் போயிருப்பார், அதான் வந்திருப்பார்…” சொன்னவளை நோக்கி சிரித்தவள், “ம்ம்… சரி, சரி… நான் கிளம்பறேன்…” சொல்லிக் கொண்டே நடக்க இவள் கவினிடம் வந்தாள்.

“என்ன அத்தான், காலேஜ் முன்னாடி வந்து நிக்காதீங்கன்னு எவ்ளோ டைம் சொல்லிருக்கேன்…” சிணுங்கலாய் யாராவது பார்க்கிறார்களா… எனத் தவிப்புடன் பார்க்க சிரித்தான் கவின்.

“அதெல்லாம் அப்போ, இப்போ நோ பயம்…”

“ஏன், இப்ப மட்டும் நமக்கு கொம்பு முளைச்சிருச்சா…”

“கொம்பு முளைக்கலை, ஆனா லைசன்ஸ் கிடைக்கப் போகுதே…” என்றான் சிரிப்புடன்.

“என்ன சொல்லறீங்க அத்தான்…” என்றாள் புரியாமல்.

“முதல்ல வண்டில உக்காரு… ஏதாச்சும் ரெஸ்டாரன்ட் போயி சாப்பிட்டுகிட்டே பேசலாம்…” என்றான்.

“ஹூம், எனக்கும் செமப்பசி அத்தான்…” என்றவள் வேகமாய் அவன் பின்னில் அமர, “ஹூம்… இப்பமட்டும் எவ்ளோ ஸ்பீடு பாரு…” என்றான் கிண்டலாக.

“பின்ன, படிக்கிற புள்ளைய வீட்டுக்குப் போக விடாம வழி மறிச்சு நின்னு பேசிட்டு இருந்தாப் பசிக்காதா…” என்றாள் அவளும் விடாமல்.

“ஹூம்… அதானே, எவ்ளோ ஹாப்பி நியூஸ் சொல்ல வந்திருக்கேன்… இவளுக்கு என்னடான்னா சாப்பிடறதுக்கு மட்டும் தான் ஸ்பீடு…”

“ப்ச்… அப்படி ஒண்ணும் புலம்பிட்டே யாரும் வாங்கித்தர வேண்டாம்… என்ன விஷயமோ, சொல்லிட்டு பஸ் ஸ்டாப்புல விடுங்க, நான் பஸ்லயே போயி வீட்டுலயே சாப்பிட்டுக்கறேன்…” என்றாள் முகத்தை தூக்கி வைத்து.

“அட என்ன காவி, சும்மா சொன்னதுக்கு கோச்சுகிட்டு… எவ்ளோ ஹாப்பியான நியூஸ் சொல்ல வந்திருக்கேன்… உன்கிட்ட கொஞ்சம் கூட ஆர்வம் இல்லியே…”

“அப்படி என்ன ஹாப்பி நியூஸ், அக்காதான் ஆல்ரெடி கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளே…”

“ஹூக்கும், நீ உன் அக்காவையே சொல்லிட்டு இரு, கொஞ்சமாச்சும் நம்ம விஷயத்தை யோசிக்கறியா…”

“நமக்குள்ள அப்படி என்ன விஷயம் இருக்கு…” என அவள் யோசிப்பது போல் சொல்ல கண்ணாடியில் முறைத்தான்.

“ஆமாண்டி, நமக்குள்ள ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டு எதுக்கு என் பைக்ல பின்னாடி உக்கார்ந்திருக்கே…”

“அது ஜஸ்ட் லிப்ட் கொடுத்தீங்க, ஏறினேன்…”

“ஓஹோ, அப்ப பசிக்குது… சாப்பிடலாம்னு என்ன உரிமைல என்கிட்ட சொன்ன…”

“என்ன அத்தான், சின்னப் புள்ளைங்க மாதிரி கேள்வி கேட்டுட்டு… நீங்க என் அத்தை மகன், என் அத்தான்… அந்த உரிமைல உங்க காசுல சாப்பிடக் கூடாதா…?”

“ஓ… ரொம்பவே கூடிப் போச்சுடி உனக்கு… குறைக்கிறேன்…” முறைப்புடன் அவன் சொல்ல கமுக்கமாய் சிரித்தாள்.

காலேஜுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த ரெஸ்டாரன்ட் முன்பு வண்டியை நிறுத்த இறங்கி உள்ளே சென்றனர். அங்கங்கே சில மாணவர்கள் தலை தெரிய ஓரமாய் ஒரு மேஜைக்கு சென்று அமர்ந்தனர்.

என்ன வேண்டுமென்று சர்வர் வந்து நிற்க, “எனக்கு மசால் தோசை, பில்டர் காபி… உங்களுக்கு..” என்றாள் காவ்யா.

“எனக்கும் அதே கொண்டு வாங்க…” என்றவன் அவர் நகர்ந்ததும் காவ்யாவை முறைப்புடன் நோக்க சிரித்தாள்.

“என்ன, முறை மாப்பிள்ளை… ரொம்ப தான் முறைக்கிறீங்க…”

“ஹூம்… எவ்ளோ ஆசையா ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்ல வந்தா அது என்னன்னு தெரிஞ்சுக்கற ஆர்வமே இல்லியே…” என்றான் சலிப்புடன்.

“என்ன பெருசா சொல்லிடப் போறீங்க… நாம போட்ட பிளான் சக்சஸ்… அக்காவுக்கும், பெரிய அத்தானுக்கும் மேரேஜ்க்கு வீட்டுல நாள் குறிச்சிட்டாங்க, நமக்கு ரூட் கிளியர்னு சொல்லப் போறீங்க, அதானே…”

“அடியே காவ்யா… உனக்கு இதெல்லாம் சாதாரணமா இருக்கா… அதும் இல்லாம மேரேஜ்க்கு உன் லொக்காவுக்கு மட்டும் நாள் குறிக்கல, உனக்கும் சேர்த்து தான் குறிச்சிருக்காங்க…” என்றான் கவின்.

அதற்குள் மசால் தோசை மேஜைக்கு வர அதைப் பிய்த்து வாயில் வைத்துக் கொண்டே, “அப்படியா அத்தான், யாரு மாப்பிள்ள…” என்றாள் காவ்யா. அதைக் கேட்டதும் அவனது கண்ணிலிருந்து அனல் பறக்க அதைக் கண்டவள் சிரித்தாள்.

“மாப்பிள்ள யாருன்னு தான கேட்டேன், அதுக்கு எதுக்கு இப்படி முறைக்கறீங்க…?” வாய் கேட்டுக் கொண்டே தோசையை உள்ளே தள்ள கவின் பேசவில்லை.

“அத்தான், நீங்கதான் உங்க கீதா அத்தை மகளைக் கட்டிக்கப் போறேன்னு சொன்னிங்களே, அப்ப என்னை வேற யாராச்சும் தான கட்டிப்பாங்க, அதான் யாரு மாப்பிள்ளைன்னு கேட்டேன், இது ஒரு குத்தமா…”

“மவளே, இதுக்கு மேல ஏதாச்சும் பேசினா, இங்கயே விட்டுட்டுப் போயிருவேன், சீக்கிரம் சாப்பிட்டு வா… உன் வீட்டுக்குப் போயி எனக்கு இவ வேண்டாம், கீதா அத்தை மகளே போதும்னு சொல்லணும்… அவங்க அவசரப்பட்டு கல்யாண வேலையைத் தொடங்கிட்டா என்ன பண்ணுறது…”

இப்போது முறைப்பது காவ்யாவின் முறையாயிற்று.

“யாரு மாப்பிள்ளயாம், பெருசா கேக்க வந்துட்டா… என்னைத் தவிர உன்னை வேற யாராச்சும் கல்யாணம் பண்ண நான் விட்டிருவேனா…” என்றவனின் குரலில் அத்தனை காதல் நிறைந்து கிடந்தது.

“ஹூக்கும்…” மனதுக்குள் சந்தோஷம் பொங்கினாலும் காட்டிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பினாள் காவ்யா.

இருவரும் கை கழுவி வர, “காவி, அன்னைக்கு சும்மா சொன்னேன்… அதுக்காக, இனி விளையாட்டுக்குக் கூட அப்படி யாரோடவும் என்னை சேர்த்துப் பேசாத…” என்றான் வருத்தத்துடன்.

“அத்தான், அப்ப நான் உங்களைத்தான் கட்டிக்கணுமா…? வேற வழியே இல்லையா…” அவள் சோகமாய் கேட்க, கடுப்புடன் மேஜையில் பில்லுக்குப் பணம் வைத்துவிட்டு வெளியே நடந்தான். அவன் பின்னில் ஓடி வந்த காவ்யா கையைப் பிடிக்க, உருவிவிட்டு நடந்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்தவன் பின்னில் அமர்ந்தவள் வேண்டுமென்றே அவன் மீது சாய்ந்து கொள்ள, மனதுக்குள் காதல் சாரல் வீசினாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான். அவன் காதுக்குள் காற்றோடு கிசுகிசுத்தவளின் குரலில் இறக்கை இல்லாமல் பறப்பது போல் உணர்ந்தான்.

அலையலையாக

அலையலையாக

எனக்குள்ளே பாய்கிறாய்…

ஒவ்வொரு மோதலும்

ஒவ்வொரு காதலாய்…

துளித்துளியாக துளித்துளியாக

இதயத்தில் வீழ்கிறாய்…

ஒவ்வொரு தூறலும்

ஒவ்வொரு காதலாய்…

அ அலையலையாக அலையலையாக எனக்குள்ளே பாய்கிறாய்….

சட்டென்று வீட்டை சுற்றியிருந்த கவலை மேகங்கள் விலகி சந்தோஷ மேகங்கள் பஞ்சென மிதக்கத் தொடங்கியது. சரவணனும், பூங்கொடியும் மகளின் மனமாற்றத்தில் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறைதான். மல்லிகா, பொன்வண்ணனுக்கும் மிகவும் சந்தோஷம்.

மூத்தவர்களோடு இளையவர்களின் கல்யாணத்தையும் சேர்த்தே நடந்த முடிவு செய்து விட்டனர். ஒண்ணரை மாதத்தில் கல்யாணம் வைத்துக் கொள்ள முடிவானது.

காவ்யாவுக்கு செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டிருந்தது. சரவணன் மகள்களுக்கு கல்யாணம் முடிவானதுமே புதிய உற்சாகத்துடன் நடமாடத் தொடங்கி விட்டார். எல்லாம் நல்லபடியாய் செல்ல விதியின் விளயாட்டு தொடங்கியது.

பாறைக்குள் முளைத்திடும்

சிறு செடியாய்

பாலைவனத்திலும் காணும்

சிறு நீரூற்றாய்

மனதுக்குள் முட்டி முளைத்து

சந்தோஷச் சோலையில்

நீந்தச் செய்வது காதல்…

Advertisement