Advertisement

அத்தியாயம் – 17

“அப்பா…” வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த சரவணன் மகளின் குரலில் கண் மலர்ந்தார்.

“அடடே, ரம்மி மா… வாடா…”

அருகில் வந்தவளை உன்னிப்பாய் நோக்கியவர், “என்னடா, முகமெல்லாம் வீங்கின போலருக்கு, உடம்புக்கு ஒண்ணும் இல்லியே…” என்றார் அக்கறையுடன்.

“இல்லப்பா, கொஞ்சம் அதிகம் தூங்கிட்டேன்… அதான்…”

“ம்ம்…” என்றவர் கட்டிலில் எழுந்து அமர முயற்சிக்க, “இருங்கப்பா, நான் ஹெல்ப் பண்ணறேன்…” என்றவள் தலையணையை சரித்து வைத்து அவரை மெல்ல சாய்வாய் அமர வைத்தாள்.

அவர் அதிசயமாய் மகளைப் பார்க்க, அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் குற்றவுணர்வுடன் குனிந்து கொண்ட மகளின் மாற்றம் புரிய சந்தோஷமாய் உணர்ந்தார்.

“சாப்பிட்டியா ரம்மி மா…” அன்போடு வினவிய அந்தக் குரல் அவளது தளர்ந்திருந்த மனதை வேதனைப்படுத்த, முணுக்கென்று கண்ணில் உற்பத்தியான கண்ணீரை, அவர் காணாமல் உள்ளே இழுத்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டி இருந்தது ரம்யாவுக்கு.

“ம்ம்… உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு பா, ஹாலுக்கு வந்து உக்கார்றீங்களா…?”

“இல்ல வேணாம் மா, உன் அம்மா வந்தா திட்டுவா…” அவர் சொல்லவும் ரம்யா வினோதமாய் பார்க்க,

“நான் சீக்கிரம் சரியாகணும்னு தான அம்மா சொல்லறா, அந்த பாசத்துக்கு நான் கட்டுப்படனும்ல…” சிரித்தார்.

உண்மைதானே… பெற்றோர் பிள்ளைகளைத் திட்டுவது கூட அவர்களின் நன்மைக்கு தானே, அதைப் புரிந்து கொள்ளாமல் போகும்போது தான் எதிரிகளாய்த் தெரிகின்றனர்.

“அப்…பா…” அவளது குரல் மென்மையாய் ஒலிக்க மகளைக் கனிவோடு நோக்கியவர், “என்னடா, அப்பாட்ட ஏதாச்சும் சொல்லணுமா…” என்றார்.

மௌனமாய் ஆமாமென்று தலையாட்டியவள், “ச…ஸாரிப்பா… எல்லாத்துக்கும் ஸாரி…” எனக் கண்ணீருடன் அவர் கையைப் பற்றிக் கொள்ளத் தவித்துப் போனார்.

“ஹேய்… என்ன ரம்மிமா, எதுக்கு இப்ப ஸாரி… நீ என்ன சொன்னாலும், செய்தாலும் என் பொண்ணுடா, என் ரத்தம்… பெத்தவங்களுக்கு எப்பவும் தன்னோட பிள்ளைங்க நல்லாருக்கணும்கிறதைத் தவிர வேற என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்…” என்றவர் ஆதரவாய் தட்டிக் கொடுத்தார்.

அவள் மனதுக்குள் ஏதோ அலட்டுவது புரிய, அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.

“ரம்மி… நீ பிறந்ததும் உன்னோட பிஞ்சுக் கையை இப்படிதான் என் கைக்குள்ள எடுத்து வச்சுப்பேன்… மெத்து மெத்துன்னு உன்னோட குட்டி விரலைப் பிடிச்சுப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்… நீ வளரத் தொடங்கும்போதும் உன் கையை என் கைக்குள்ள வச்சுக்க தான் நினைப்பேன்… ஆனா உனக்கு அது பிடிக்காதோன்னு தான் சுதந்திரமா விட்டுட்டேன்… அதுக்காக உன்னைக் கைவிட்டுட்டேன்னு அர்த்தமில்லை… சின்னவளை விட உன்மேலதான் எனக்குப் பிரியம் அதிகம்… அது முதல்ல எனக்கு அப்பாங்கிற அடையாளத்தைக் கொடுத்தது நீதான்னு வந்த பிரியம்… ஆனா, காவி தான் எப்பவுமே எனக்கு அப்பாங்கற அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கா… எங்களை முழுமையா நம்பறா, நாங்க எவ்ளோ ப்ரீயா விட்டாலும் என் கைக்குள்ள பாதுகாப்பா இருக்க தான் விரும்பறா…”

“அதுக்காக நீ என் கைக்குள்ளயே இருந்தா தான் அந்தப் பிரியம் அப்படியே இருக்கும்னு அர்த்தமில்லை… எப்பவும் நீங்க எங்க பிள்ளைங்க தான், உங்க சந்தோசம் தான் எங்களுக்கு நிம்மதி…” மென்மையான குரலில் சரவணன் சொல்ல, அவர் கைகளுக்குள் தன் கையை வைத்தவள்,

“நானும் இனி உங்க கைக்குள்ளயே பாதுகாப்பா இருக்க தான் ஆசைப்படறேன்ப்பா… அதீத சுதந்திரம் கூட ஆபத்துதான்னு புரிஞ்சுகிட்டேன், இனி உங்க மகளா, நீங்க விரும்பற மகளா இருக்கணும்னு நினைக்கிறேன்…” என்றவளின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்தவர், புன்னகைத்தார்.

“எதனால இந்த மாற்றம்னு நான் கேக்கப் போறதில்லை… உன் மனசு எங்களைப் புரிஞ்சுக்காதா, பிடிவாதத்தை மாத்திக்காதான்னு ரொம்பவே ஏங்கிருக்கோம்… அது மாறலேன்னாலும் நீ எங்க பிரியப்பட்ட பொண்ணு தான் ரம்மி மா….” என்றார் நெகிழ்வுடன்.

“இப்படிப்பட்ட தந்தையை, தான் எத்தனை வேதனைப்படுத்தி இருக்கிறோம்…” எனத் தனக்குள்ளேயே நொந்து கொண்டவள் மனதில் சிவகாமி சொன்னது நினைவில் வரவும் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.

“அப்பா, எனக்கு வெளிய ஒரு முக்கியமான வேலை இருக்கு, போயிட்டு வரட்டுமா…?”

“தனியா போகணுமா மா, காவியை வேணும்னா துணைக்கு அழைச்சிட்டுப் போ…”

“இல்லப்பா சீக்கிரம் திரும்ப வந்திடுவேன், பயப்படாதிங்க…”

“ஹும்ம்… ஆட்டோல போயிட்டு வந்துடுடா…” என்றவர் எங்கே என்று கேட்கவில்லை, அவளும் சொல்லவில்லை. அறைக்கு சென்றவள் அர்ஜூனின் எண்ணுக்கு அழைத்தாள்.

திகைப்புடன் அழைப்பை எடுத்தவன், “ர..ரமி… என்னமா, எனக்கு கால் பண்ணிருக்க…” என்றான் உறக்க கலக்கத்துடன்.

“எங்கிருக்கிங்க அர்ஜூன்…”

“நேத்து நைட் ஷிப்ட், காலைல தான் வீட்டுக்கு வந்தேன்… தூங்கிட்டு இருக்கேன்…” என்றான் எழுந்து அமர்ந்து கொண்டு.

“எனக்கு உங்ககிட்ட பேசணும், வர முடியுமா…?”

“என்ன ரமி கேள்வி இது, அதுக்கு தானே காத்திருக்கேன்…”

“சரி, நம்ம மாரியம்மன் கோவில்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன், பத்து நிமிஷத்துல வந்து சேருங்க…”

“இதோ, கிளம்பிட்டேன்மா…” என்றவன் அடுத்த நிமிடம் பாத்ரூமில் இருந்தான். பத்து நிமிடத்தில் கிளம்பியிருந்தான்.

“டேய் அர்ஜூன், தூங்கப் போறேன்… டிஸ்டர்ப் பண்ணாதீங்கனு சொல்லிட்டு எங்கயோ கிளம்பிட்ட…” மல்லிகா கேட்க, “வந்து சொல்லறேன் மா…” என்றவன் பைக்கை எடுத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு கிளம்பினான்.

பிரகாரத்துக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்த ரம்யாவைக் கண்டதும் மலர்ந்தான். குளித்து பளிச்சென்று அழகாய் இருந்தாள்.

“என்ன ரமி, எதுக்கு அவசரமா வர சொன்ன… ஒருவேளை  சம்மதம் சொல்ல கூப்பிட்டியா…” என்றவனை முறைத்தவள்,

“உங்க கற்பனை சிறகை கொஞ்சம் கட் பண்ணி வைங்க, நான் அதுக்கு கூப்பிடலை… நான் ஒரு இடத்துக்குப் போகணும், என்னோட துணைக்கு வரீங்களா…” என்றதும் மலர்ச்சியாய் தலையாட்டினான்.

“அடியேனின் பாக்கியம்… எங்க போகணும்…?”

“வெங்கடேஷ் வீட்டுக்கு…” என்றதும் அந்த மலர்ச்சி அப்படியே காணாமல் போக முகம் சுருங்கினாலும் எதுவும் கேட்காமல், “ம்ம்… போகலாம்…” என்றவன் நடக்க அவளும் அவனைத் தொடர்ந்தாள்.

பைக்கில் அவன் பின்னில் அமர்ந்தவள் எதுவும் பேசாமல் சிவகாமி பேசியதை மனதுக்குள் ரீவைன்ட் செய்து கொண்டிருக்க ஆத்திரம் தலைக்கு ஏறியது. அர்ஜூனும் எதுவும் கேட்காமல் பாதையில் மட்டுமே கவனமாய் இருந்தான். தனது நம்பிக்கை பொய்த்துப் போனதில் எரிமலையாய் பொங்கிக் கொண்டிருந்தவள் இருபது நிமிடப் பயணத்தில் பைக் ஒரு தெருவுக்குள் நுழைய படபடப்பாய் உணர்ந்தாள். வெங்கடேஷ் இறந்தபோது இறுதியாய் அந்த வீட்டுக்கு வந்தது… பிறகு இப்போது தான் வருகிறாள். அர்ஜூன் வெங்கடேஷ் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த இறங்கினாள்.

“இங்கயே வெயிட் பண்ணுங்க, வந்துடறேன்…” சொன்னவள் ஒரு நிமிடம் நிதானித்து உள்ளே சென்றாள். கேட் திறந்திருக்க வாசல் கதவும் திறந்திருந்தது. உள்ளே இருவர் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்க நின்று கவனித்தாள்.

“ஏன் சிவகாமி, இந்தப் பெரியவன் நம்ம பேச்சைக் கேக்க மாட்டான் போலருக்கே, அந்த ரம்யாவைக் கல்யாணம் பண்ணி எப்படி இங்க கொண்டு வர்றது…”

“அதுக்கெல்லாம் கைவசம் ஐடியா இருக்குங்க… என்ன தான் முடியாதுன்னு சொன்னாலும் அவனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி… நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலேன்னா விஷத்தைக் குடிச்சு செத்திருவேன்னு அவன் முன்னாடி கைல தேன் பாட்டிலோட போயி நின்னன்னு வைங்க, பய மிரண்டு போயி சரிம்மா, ஒத்துக்கறேன்… நீங்க விஷத்தைக் குடிச்சிறாதீங்கன்னு கதறிட்டு சம்மதிப்பான்…”

“சீக்கிரமே இதப் பத்திப் பேசிடனும் சிவகாமி, அந்தப் பொண்ணு அப்பன் வேற உடம்புக்கு முடியாம ஆசுபத்திரி போயிட்டு வந்திருக்கான்… அப்பன் மேல பரிதாபப்பட்டு அவங்க சொன்ன கல்யாணத்துக்கு இந்த ரம்யாப் புள்ள ஒத்துகிச்சுன்னு வையி… அப்புறம் நம்ம கஷ்டம் எல்லாம் வீணாப் போயிடும்…” என்றார் வெங்கியின் தந்தை.

“ம்ம்… முதல்ல அந்த ரம்யாவுக்கு ஒரு போன் போட்டு இதப்பத்தி நைசா பேசிப் பார்க்கறேன்…” சொல்லிக் கொண்டே அலைபேசியில் ரம்யாவின் எண்ணுக்கு அழைக்க, வீட்டு போர்ட்டிகோவில் ரிங்டோன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.

“ஏங்க, வெளிய யாரோ வந்திருக்காங்க போல… யாருன்னு பாருங்க…” சிவகாமி சொல்ல வெளியே வந்தவர் அதிர்ந்தார்.

“நீ…நீ எப்படி, எ..எப்ப வந்த…” அவர் திணறலாய் கேட்க தலை குனிந்து நின்றவள் அவரை நோக்கி நிமிரவும் கண்களில் தெரிந்த உஷ்ணம் அவரை சுட்டது.

“சி..சிவா, இங்க வந்து பாரு, அந்தப் பொண்ணு வந்திருக்கு…”

“யாரு, இந்த ரம்யாக் கழுத வேற போனை எடுக்க மாட்டீங்குது…” சொல்லிக் கொண்டே ஆடி அசைந்து தனது பெரிய உடம்புடன் வாசலுக்கு வந்த சிவகாமியின் கண்களும் வாயும் அதிர்ச்சியில் திறந்து கொண்டன.

“ர..ரம்யாக் கண்ணு, நீ…நீ எப்ப வந்த…” வார்த்தைகள் தந்தியடிக்க, சிவந்த கண்களுடன் அவரை ஏறிட்டவள், எதுவும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்க்க கணவனைப் பார்த்த சிவகாமி யோசனையாய் குனிந்து கொண்டாள்.

“இந்தப் பிசாசு எதுக்கு இப்ப இங்க வந்திருக்கு, மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கறதைப் பார்த்தா நாம பேசினது எல்லாம் கேட்டுட்டா போலருக்கே… இப்ப எதை சொல்லி சமாளிக்கிறது…” அப்போதும் அவர் மனம் யோசித்தது.

“த்தூ… நீயெல்லாம் ஒரு பொம்பளையா, பணத்துக்காக என்னெல்லாம் பண்ணிருக்க… என் பெத்தவங்களை விட அதிகமா உன்னையும், உன் புள்ளையையும் நம்பினனே… உங்களுக்காக சொந்தத்தை எல்லாம் பகைச்சுகிட்டனே… அதுக்கு அரை மென்டல்னு அவார்டு கொடுத்து, நல்லாப் பாடம் கத்துக் கொடுத்துட்டீங்க… உண்மையான நேசத்தைப் புரிஞ்சுக்க முடியாம உங்க நடிப்பை உண்மைன்னு நம்பின நான் உண்மைலயே முட்டாள்தான்… அதுக்கு தான் கீ கொடுக்கிற பொம்மையா என்னை நல்லா ஆட்டி வச்சிருக்கீங்க…” நிதானமான குரலில் சொன்னாலும் அதில் ஒரு ஆத்திரம் இருந்தது. அதை அடக்க முயன்றதில் கண்கள் கலங்கி கன்னத்தில் வழிந்தது.

“ர…ரம்யா, நீ என்ன கண்ணு சொல்லற… நாங்க பேசினதை அரைகுறையாக் கேட்டுட்டு தப்பாப் புரிஞ்சுகிட்டியா…”

“இல்ல, இப்பதான் உங்களை சரியாப் புரிஞ்சுகிட்டேன்… வீட்டுக்கு வந்த மருமகளைப் பணம் காய்க்கிற மரமாப் பாக்குற உங்க கனவு இனிப் பலிக்காது… என் பெத்தவங்க விருப்பப்படி தான் இனி நான் வாழப் போறேன்… அவங்க சொன்ன என் அத்தை மகனைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்… அர்ஜூன், இங்க வாங்க…” என்றதும் அதுவரை அங்கே நடந்ததையும் ரம்யாவின் பேச்சையும் வியப்புடன் நோக்கி நின்றவன் உள்ளே வந்தான்.

“இதோ, இவர் தான் நான் கட்டிக்கப் போறவர்… இது வரைக்கும் உங்க பேச்சைக் கேட்டு எல்லாரயும் வேதனைப் படுத்தினதுக்கு பிராயச்சித்தமா அவங்க சொல்லறதை எல்லாம் செய்யத்தான் போறேன்…”

“ரம்யா, என்ன இது… அப்ப நீ வெங்கி, வெங்கின்னு உருகி உருகி என் மகனைக் காதலிச்சது எல்லாம் பொய்யா… இப்ப இவனைக் கட்டிக்கறேன்னு சொல்லற…”

“நான் காதலிச்சது பொய்யில்லை… காதலிச்ச உங்க பிள்ளை தான் பொய்யானவன்… எப்ப அவனே பொய்னு ஆச்சோ அதுக்குப்பிறகு அந்தக் காதலைப் பேசி பிரயோசனமில்லை…”

“ரம்யா, நீ தப்பாப் புரிஞ்சுகிட்டுப் பேசற… இங்க பாரு… முதல்ல நீ உள்ள வா, அத்தை சொல்லறதை நிதானமாக் கேளு, உனக்கு எல்லாம் புரியும்…”

“போதும், இனி உங்களைப் புரிஞ்சுக்க எதுவுமில்லை, நீங்க புரிஞ்சுக்க வேண்டியது என்னைத் தான்… எனக்கு எது சரியோ, அதைத்தான் இது வரைக்கும் பண்ணிருக்கேன், இனியும் பண்ணுவேன்… இப்ப தான் யார் சரியானவங்கன்னு புரிஞ்சுகிட்டேன்… இனி உங்க பசப்பு வார்த்தையோ, வேஷ நடிப்போ என்கிட்ட செல்லுபடி ஆகாது, மீறி என் வழியில வந்திங்க…” ஆவேசமாய் சொன்னவள் விரலை நீட்டியபடி உறுத்து நோக்க சிவகாமியே சற்று ஆடிப் போனார். இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தார்.

“என்ன ரம்யா, அத்தகிட்ட இப்படி மிரட்டிப் பேசற…” மனைவிக்குப் பரிந்து கொண்டு கணவன் வர முறைத்தாள்.

“மிரட்டல, உண்மைய சொல்லறேன்… இனியும் பணம், பணம்னு பித்துப் பிடிச்சு அலையாம மனுஷங்களா வாழப் பாருங்க…” என்றதும் சிவகாமிக்கும் கோபம் வந்தது.

“என்னடி, என்னவோ போதி மரத்தடில உக்கார்ந்து ஞானம் வந்தவ கணக்கா ஒரே நிமிஷத்துல மாறிட்டு இங்க வந்து ஓவரா ஆடிட்டு இருக்க… எப்ப இருந்தாலும் நீ என் வீட்டுக்கு தான் மருமகளா வந்தாகணும், அதெப்படி, என் புள்ளையக் காதலிச்சுட்டு இவனைக் கட்டிக்கிட்டு நீ சந்தோஷமா இருந்திருவியா… இத்தன நாள் நான் ஊதின மகுடிக்கு ஆடின பாம்பு நீ, இன்னைக்கு என் முன்னாடியே படமெடுத்து ஆடுவியா…” சிவகாமியும் சளைக்காமல் வார்த்தையை விட ஆத்திரம் தலைக்கேறிய ரம்யா ஓங்கி அவர் கன்னத்தில் அறைந்துவிட விக்கித்துப் போனார் சிவகாமி.

அர்ஜூன் கூட திகைத்தபடி நின்றுவிட்டான்.

“ஏய்… என்னடி பண்ணின…” கேட்டபடி வந்த வெங்கடேஷின் தந்தையிடம் விரலை நீட்டி எச்சரித்தவள்,

“அவ்ளோதான் மரியாத, சொல்லிட்டேன்…” என்றவள் அர்ஜூனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வாசலுக்கு நடக்க அவர்கள் இருவரும் அதிர்ந்து நோக்கி நின்றனர்.

அக்கம் பக்கம் எல்லாருடனும் சண்டை போட்டிருந்த சிவகாமிக்கு இப்போது கிடைத்த அடியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர்கள் உண்மையிலேயே மனதுள் சந்தோஷித்தனர்.

இத்தனை நாள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை முகத்துக்கு நேராகப் பேசி வெளுத்து வாங்கியதில் ரம்யா மனதில் திருப்தி வந்திருக்க முகம் சந்தோஷமாய் தெரிந்தது.

“அர்ஜூன், எனக்கு எதாச்சும் சுவீட் சாப்பிடனும் போலருக்கு… சாப்பிட்டு, வீட்டுக்குப் போகலாமா…” பைக்கில் இரண்டு பக்கமும் காலிட்டு அமர்ந்தவள் சாதாரணமாய் கேட்க, இன்னும் நடந்த அதிர்ச்சியின் பிரமிப்பில் இருந்து மாறாமல் இருந்தவனின் தோளில் தட்டினாள்.

“என்ன, போகலாம் தானே…” என்றதும் தலையாட்டியவன் வண்டியை எடுத்தான். மகள் எங்கோ தனியே சென்றிருக்கிறாள் எனத் தெரிந்ததும் தவிப்புடன் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடி அவள் கையில் ஸ்வீட் பாக்ஸுடன் அர்ஜூனுடன் பைக்கில் வந்து இறங்கவும் திகைத்தாள்.

“ர..ரம்யா, எங்கடி போன… உன்னத் திரும்பப் பார்க்கிற வரைக்கும் பெத்த வயிறு பக்குன்னு இருக்கு…”

“ஏன்மா, திரும்ப வர மாட்டேன்னு நினைச்சியா…” புன்னகையுடன் கேட்ட மகளை வாயிலேயே அடித்தவர்,  “உனக்கு என் தவிப்பு வேடிக்கையா தான் தெரியும்…” என கோபத்துடன் சொன்னவள்,

“சரி, இதென்ன அர்ஜூன் கூட வர…” என யோசனையாய் கேட்க, “மாப்பிள்ளையை பேர் சொல்லிக் கூப்பிடாத மா…” என சொல்லி அன்னையின் கையில் சுவீட் பாக்சைக் கொடுத்துவிட்டு ரம்யா தனது அறைக்கு செல்ல நடப்பது கனவா, நினைவா எனப் புரியாமல் நின்றாள் பூங்கொடி.

“அத்த… என்ன ஷாக்காகி அப்படியே நின்னுட்டிங்க… இவ்ளோ நேரம் நடந்ததை நினைச்சா எனக்கு இப்பவும் நம்ப முடியல, உங்களுக்கு மட்டும் எப்படி இருக்கும்…” என்றான் அர்ஜூன்.

“அர்ஜுன், இவ என்ன சொல்லிட்டுப் போறா… இவ நடந்துக்கிறதைப் பார்த்தா எனக்கு சந்தோஷப்படறதா, பயப்படறதான்னு தெரியலியே… ஒரே குழப்பமாருக்கு, என்ன நடந்துச்சுன்னு முதல்ல விவரமா சொல்லு…” என்றாள்.

“மாமாகிட்டயும் சேர்த்தே சொல்லிடறேன்…” என்றவன் சரவணனின் அறைக்கு வர அங்கே காவ்யாவும் இருந்தாள்.

“முதல்ல எல்லாரும் சுவீட் எடுத்துக்கங்க, அப்புறம் ஒரு சுவீட்டான நியூஸ் சொல்லறேன்…” எனவும் அனைவரும் லட்டுவை கையில் எடுத்துக் கொள்ள சற்று முன் நடந்தவை… என செய்தி வாசிக்கத் தொடங்கினான் அர்ஜூன்.

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும்

நாடக உலகத்தில்

எத்தனை தான்

புறக்கணித்தாலும்

எனைச் சுற்றியே

சுற்றிடும் கடிகார

முள்ளாய் நீ…

Advertisement