Advertisement

அத்தியாயம் – 16

இரவு உணவுக்கு ரம்யாவை அழைக்க அவளது அறைக்கு வந்த காவ்யா திகைத்துப் போனாள். அறை முழுதும் அலங்கோலமாய் கிடக்க தலையணையை பிய்த்துக் குதறியதில் பஞ்சு அங்கங்கே பறந்து கொண்டிருந்தது.

அவிழ்ந்து கிடந்த கூந்தலும் சிவந்து கிடந்த கண்களும் அவள் வெகு நேரமாய் அழுதிருக்கிறாள் என்பதைச் சொல்ல பதட்டமாய் அக்காவின் அருகில் அமர்ந்தாள்.

“அ..அக்கா… என்னாச்சு, ஏன் இப்படி இருக்க…?” விட்டத்தை வெறித்துக் கொண்டு கிடந்தவள் தங்கையின் கேள்வியைக் காதில் வாங்கிய பாவமே காட்டாமல் அமைதியாய் படுத்திருக்க பயந்து போனாள் காவ்யா.

“அக்கா, எழுந்திரு… என்னாச்சு உனக்கு…?” ஆறுதலாய் கையைப் பற்ற உதறியவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

“அச்சோ, அக்கா….” தவிப்புடன் எழுந்தவள் அன்னையிடம் சென்று விஷயத்தை சொல்லி அழைத்து வர பூங்கொடி பதட்டமாய் மகளின் அறைக்குள் நுழைந்தாள்.

அறையின் கோலத்தையும் மகளின் கோலத்தையும் கண்டு பதறிப் போனது தாய் மனம்.

“அம்மாடி ரம்யா… என்னடா, என்னமா ஆச்சு…” கேட்கும் போதே அழுகை வெடிக்க மகளிடம் அமர்ந்தவள் தவிப்புடன் கேட்க, “யாரும் என்னைப் பார்க்க வேண்டாம், எல்லாரும் வெளிய போங்க…” என்றாள் முகத்தை மூடியபடியே.

“அச்சோ, ரம்யா… எனக்கு பயமாருக்குடி, உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லையே, எதுக்கு அழுதிருக்க… வா, டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம்…” அக்கறையும் அன்புமாய் மகளை அழைக்க ரம்யாவுக்கு சற்று தடை பட்டிருந்த அழுகை மீண்டும் விம்மலாய் வெடித்தது.

“ஐயோ அம்மா, நான் எதையும் சொல்லற நிலமைல இல்லை… நீயும் எனக்குப் பைத்தியம்னு முடிவு பண்ணிடாத… இப்ப எதையும் கேக்காம என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க ப்ளீஸ், ரெண்டு பேரும் வெளிய போங்க…” என்றாள் அழுகையுடன்.

“அச்சோ, என்னடி, இப்படில்லாம் பேசற… ஐயோ கடவுளே, என் பொண்ணுக்கு என்னாச்சு…” பூங்கொடி அழத் தொடங்க காவ்யாவின் கண்களும் கலங்கின.

“ரெண்டு பேரும் எதுக்கு இப்ப ஒப்பாரி வைக்குறீங்க… நான் இன்னும் உயிரோட தான இருக்கேன்… தயவு செய்து புலம்பாம ரெண்டு பேரும் வெளிய போங்க…” அவர்களை வெளியே அனுப்புவதிலேயே அவள் குறியாய் இருக்க,

“ரம்மி, ரம்மி… என்னன்னு அம்மாட்ட சொல்லுடி… எனக்கு பயமாருக்கு, அப்பாக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவார்…”

அன்னை தந்தையை சொல்லவும் கரகரவென்று ரம்யாவின் கண்ணில் நீர் வழிய, “அம்மா, ப்ளீஸ்… என்னைக் கொஞ்சம் தனியா விடு… காவி, அம்மாவை அழைச்சிட்டுப் போ…” என எழுந்து நின்று கைகூப்ப அக்காவை அதிசயமும், பயமுமாய் பார்த்துக் கொண்டே அன்னையை அழைத்துக் கொண்டு ரூமிலிருந்து வெளியேறினாள் காவ்யா.

“அக்கா நடந்துக்கிறதைப் பார்த்தா அந்த ராஜேஷ் ஒருவேளை அவங்க குடும்பத்தைப் பத்தி சொல்லிட்டாரோ… அதான் இவ்ளோ கோபமும், வெறுப்புமா எமோஷனா இருக்காளா…” யோசித்துக் கொண்டே அன்னையின் கைபிடித்து வெளியே வர கையை உதற முயன்றாள் பூங்கொடி.

“காவி, எ..என்னை விடுடி… அக்காவைப் பார்த்தா பயமாருக்கு, அவ எதாச்சும் பண்ணிக்கப் போறாடி…” அழுகையுடன் சொன்ன அன்னையிடம், “அக்கா அதெல்லாம் பண்ண மாட்டா, நீங்க அமைதியா இருங்க…” அதட்டினாள்.

“என்ன காவி, இப்படி சொல்லற… அவளையும், ரூமையும் பார்த்தியா, எப்படிப் பண்ணி வச்சிருக்கான்னு… எதையோ யோசிச்சு என் பொண்ணு ரொம்ப வேதனைப்படறா, என்னன்னு நம்மகிட்ட சொன்னாத் தானே… அவ கோபமா இருந்தாக் கூட என்னால தாங்கிக்க முடியும்… இப்படி இருக்கிறதைப் பார்க்கும் போது நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குடி… ஆசையா பெத்து எப்படில்லாம் பார்த்துப் பார்த்து வளர்த்தினோம், இப்படி இவ வேதனைப் படுறதுக்கா… அப்பாக்குத் தெரிஞ்சா துடிச்சுப் போயிருவார்…” பூங்கொடி அறைக்கு வெளியே புலம்புவதைக் கேட்டு உள்ளே இருந்த ரம்யாவுக்கு மேலும் அழுகை வந்தது.

“அம்மா, சத்தம் போடாதீங்க… தூங்கிட்டு இருக்கிற அப்பா காதுல விழப் போகுது, இன்னைக்கு தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்கார், அவரை அதிகம் உணர்ச்சிவசப்பட விடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கார், நினைவு இருக்கு தானே…” என்றதும் பட்டென்று வாயை மூடினாள்.

“அக்கா எதையோ நினைச்சு பீல் பண்ணறா… கொஞ்சம் தனிமை கொடுத்தா சரியாகிடுவா, வாங்க மா…” என்றவள் அன்னையை அழைக்க, “அவ இன்னும் சாப்பிடலயே, எதுவா இருந்தாலும் சாப்பிட்டு கவலைப்பட சொல்லு…” என்றவர், “ரம்மி… சாப்பிட்டுப் போடி…” என்றார் கதவைத் தட்டி. பட்டென்று கதவைத் திறந்தாள் ரம்யா.

“அம்மா, நான் இப்ப சாப்பிடனுமா, உயிரோட இருக்கனுமா…?” அன்னையைப் பார்த்து அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன பூங்கொடி சிலையாய் நிற்க, மீண்டும் கதவை மூடித் தாளிட்டுக் கொண்டாள் ரம்யா.

வெங்கடேஷ், சிவகாமி மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப் போனதில் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்த மனதை எப்படி சமன் படுத்துவது என்று அவளுக்கும் தெரியவில்லை.

இப்போதைக்கு தனிமையும், கண்ணீரும் மட்டுமே தேவையாய் தோன்ற அழுது கொண்டே இருந்தாள்.

“இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்களே… அத்தனை ஏமாளியாவா இருந்திருக்கேன், அவங்க கீ கொடுக்கிற பொம்மையா தான் இதுவரை இருந்திருக்கேன்… முட்டாள் தான், மென்டல் தான்… இவங்களுக்காக என் அப்பாவையும், அம்மாவையும் எதிரியாப் பார்த்தனே… என்னோட நன்மையை மட்டுமே யோசிச்ச, என்னை நேசிக்க மட்டுமே செய்த சொந்தங்களை எவ்ளோ வேதனைப்படுத்தினேன்… அவங்களுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்…” யோசிக்கையில் ஆற்றாமையாய் வந்தது அவளுக்கு.

“நான் பாவி, என்னால தான் அப்பாக்கு இப்படி முடியாமப் போச்சு… அது புரியாம அந்த வெங்கி சாவுக்கு அப்பாவைக் குத்தப்படுத்திட்டு இருந்தனே… இத்தன நாளா பாலுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாம இருந்திருக்கனே…”

மீண்டும் மீண்டும் அவர்கள் பேசியதையே நினைத்து இரவு முழுதும் அழுது கொண்டிருந்தாள் ரம்யா. மதியத்திற்குப் பிறகு ஒன்றுமே சாப்பிடாததும், மனதின் தளர்ச்சியும் அவளை சோர்வடையச் செய்திருந்தது.

காலையில் காவ்யா கதவைத் தட்ட அரைத் தூக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அப்படியே மயங்கி சரிய காவ்யா தாங்கிக் கொண்டாள். உடம்பெல்லாம் அனலாய் சுட கண்கள் இரண்டு சின்ன பல்புகளாய் வீங்கித் தெரிய முகம் முழுதும் கண்ணீரின் அடையாளங்களுடன் வீங்கிக் கிடந்தது.

“அம்மா…” காவ்யாவின் குரலைக் கேட்டு அடுக்களையில் காபி கலந்து கொண்டிருந்த பூங்கொடி ஓடி வந்தாள்.

இரவு ஒன்றும் சாப்பிடாத மகள் பசியோடு இருப்பாள்… காபியாவது குடிக்கட்டும் என்றுதான் சின்னவளை எழுப்ப சொல்லிவிட்டு அடுக்களைக்கு சென்று இருந்தாள்.

“என்ன காவி, ஐயோ ரம்மி… என்னடி ஆச்சு…” என்றவர் ஒரு பக்கமாய் மகளைப் பிடிக்க இருவரும் ரம்யாவைக் கட்டிலில் படுக்க வைத்தனர்.

“கடவுளே… என்னடி, உடம்பு இப்படி அனலா சுடுது… ராத்திரி எல்லாம் தூங்காம அழுதிட்டே இருந்திருப்பா போலருக்கு…”

“ஆமாம் மா, சீக்கிரம் ஒரு டவலை நனைச்சி எடுத்திட்டு வாங்க… பால் காச்சியிருந்தா கொண்டாங்க, கொடுத்துட்டு ஒரு பாரசிட்டமோல் டாப்லட் கொடுத்துப் பார்ப்போம்…”

“ம்ம்…” என்றவர் வேகமாய் அடுக்களைக்கு செல்ல காவ்யா மாத்திரை எடுத்து வந்தாள். அன்னை கொண்டு வந்த ஈரத்துணியை ரம்யாவின் நெற்றி கழுத்தில் துடைத்துக் கொடுக்க மெல்ல அசைந்தவள் கஷ்டப்பட்டு கண்களைத் திறக்க பாரமேறிக் கிடந்த இமைகள் திறப்பேனா என்று அழிச்சாட்டியம் செய்தது.

காவ்யா அவளைத் தன் மீது சாய்வாய் அமர வைத்து “அக்கா, இந்தப் பாலைக் குடி….” என்றது எங்கேயோ குகைக்குள் இருந்து யாரோ சொல்லுவது போல் இருந்தது ரம்யாவுக்கு. கஷ்டப்பட்டு அரைக்கண்ணைத் திறந்தவள் வாயில் காவ்யா பாலைப் புகட்ட குடித்தாள்.

“ரம்யா… ஏதாச்சும் சாப்பிடறியா, ரொட்டி கொண்டு வரட்டுமா…” என்ற அன்னையிடம் தலையாட்டி மறுத்தாள்.

“அக்கா ஒண்ணுமில்ல, இந்த மாத்திரயைப் போட்டுக்க… சரியாகிடும்…” சொன்ன காவ்யா வாயில் மாத்திரையை வைத்து தண்ணி கிளாஸை நீட்ட சற்று உணர்வு மீண்டிருந்த ரம்யா விழுங்கி தண்ணீரைக் குடித்தாள்.

“நல்லாத் தூங்கி எழுந்திருக்கா… காய்ச்சல் சரியாகலேன்னா ஹாஸ்பிடல் போயிடலாம்…” அன்போடு சொல்லி அவளது நெற்றியில் தடவிக் கொடுக்க கண்ணை மூடிக் கொண்டாள்.

காவ்யா, இதமாய் தலை கோதிக் கொடுக்க ஏதேதோ எண்ணங்கள் மனதுக்குள் மாறி மாறி அலைபாய்ந்தாலும், எல்லாம் மறந்து உறங்கத் தொடங்கினாள் ரம்யா.

“பூங்கொடி…” சரவணன் அறையிலிருந்து குரல் கொடுக்க,

“அம்மா… அப்பாட்ட எதுவும் சொல்ல வேண்டாம், நீங்க போயி அவரை கவனிங்க…” சின்னவள் சொல்ல தலையாட்டிய பூங்கொடி கவலையுடன் சென்றாள்.

காவ்யாவுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்காய் கல்லூரி லீவு விட்டிருக்க அவளும் வீட்டிலிருந்தாள். காலை பத்து மணி வரை ரம்யா உறங்கிக் கொண்டிருக்க சரவணன் கூட மூத்த மகளைக் கண்ணில் காணாமல் மனைவியிடம் விசாரித்தார்.

“அவ நைட்டெல்லாம் ஏதோ புக் படிச்சிட்டு நல்லாத் தூங்கறா… எழுந்துக்கும்போது எழுந்து வரட்டும்…”

“ஓ… ரம்மி புக்கெல்லாம் படிக்கிறாளா…? நல்ல விஷயம் தான்…” என்றவரும் அறைக்குள்ளேயே இருந்ததால் தெரியவில்லை. டாக்டரும் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்டிலேயே இருக்க வேண்டும் எனக் கூறி அனுப்பி இருந்ததால் பூங்கொடி அறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கவில்லை.

சுவரிலிருந்த பெரிய கடிகாரம் பத்து முறை ஒலித்து அடங்க, ரம்யாவுக்கு விழிப்பு வந்தது.

இமைகளில் பாறாங்கல்லை வைத்தது போல் கனத்தது. இமைப்பீலிகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கிடக்க திறக்க முடியாமல் கையால் மெல்லத் தேய்த்துக் கொண்டு திறந்தாள். கண்ணில் கஷாயத்தை ஊத்தியது போல் நமநமவென்று எரிந்தது. இதழ்கள் உலர்ந்து வெடித்திருக்க, நாக்கில் கசப்பாய் உணர்ந்தவள் எழுந்து அமர்ந்தாள். ஹாலிலிருந்து திறந்திருந்த கதவு வழியே அவளை கவனித்துக் கொண்டிருந்த காவ்யா உள்ளே வந்தாள்.

“இப்ப எப்படி இருக்குக்கா… பரவால்லியா…?” சொல்லிக் கொண்டே ரம்யாவின் நெற்றியைத் தொட்டு நோக்க லேசான சூடே இருந்தது. அவள் தூங்கும்போதே அறை எல்லாம் சுத்தப்படுத்தி இருந்தாள் காவ்யா.

“நீயே ரூம் கிளீன் பண்ணிட்டியா…?”

“ம்ம்…” என்றவள், “நீ பல்லு தேச்சுட்டு வா, காபி எடுத்திட்டு வரேன்…” சொன்ன காவ்யா வெளியே செல்ல பாத்ரூமுக்குள் நுழைந்தாள் ரம்யா.

அவள் மீண்டும் அறைக்குள் வரும்போது சூடான காபியுடன் நுழைந்த காவ்யா அதை நீட்ட வாங்கிக் குடித்தாள்.

“பசிக்குதாக்கா, இட்லி எடுத்து வைக்கட்டுமா…”

“அ…அம்மா எங்கே…?”

அவள் அம்மாவை விசாரிக்கவும் காவ்யாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.

“அம்மா காய் வாங்க கடைக்குப் போயிருக்காங்க, நான் மேசைல எடுத்து வைக்கவா, இங்கயே கொண்டு வரவா…?”

“இங்கயே கொண்டு வந்திரு காவி…”

“இதோ, கொண்டு வரேன்…” என உற்சாகமாய் ஓடிய தங்கையைக் கண்டு மனம் நெகிழ்ந்தது ரம்யாவுக்கு.

“என்னை விட வயதில் சின்னவளாய் இருந்தாலும் காவி எத்தனை பொறுப்பாய், அன்பாய் எல்லாருக்கும் பிடித்தமானவளாய் நடந்து கொள்கிறாள்… நான் ஏன் இப்படி இருக்கிறேன்…” எனத் தன்னைக் கடிந்து கொண்டவளுக்கு மீண்டும் சிவகாமி பேசியது நினைவுக்கு வர தலைக்குள் சுத்தியை வைத்து அடிப்பது போல் வலித்தது.

எங்கேயோ வெறித்துக் கொண்டு யோசனையுடன் அமர்ந்திருந்த ரம்யாவின் முன்னில் தட்டில் இட்லியோடு வந்த காவ்யா, “இந்தாக்கா, சாப்பிடு…” புன்னகையுடன் நீட்ட, தங்கையைக் கனிவோடு நோக்கியவள், “நீ ஊட்டி விடறியா காவி…” என்றதும் கண் கலங்கிப் போனாள் காவ்யா.

“அ…அக்கா, நானா… ஊட்டி விடவா…” நம்ப முடியாமல் கேட்டவளை அருகே அமர்த்தியவள், “உன் கையால சாப்பிடனும் போல இருக்கு காவி…” என்றதும் நெகிழ்ந்தாள்.

“இதோ ஒ…ஒரு நிமிஷம், நான் ஊட்டி விடறேன்…” சொன்னவள் உற்சாகமாய் கையை அலம்பிக் கொண்டு வந்து தட்டை எடுத்து ஊட்டி விடத் தொடங்கினாள்.

ஒவ்வொரு வாய் வாங்கும்போதும் ரம்யாவின் கண்கள் கலங்க, “அக்கா, மனசுல எதையும் போட்டு அலட்டிக்காம நிம்மதியா சாப்பிடு…” பெரிய மனுஷியாய் ஊட்டினாள்.

நான்கு இட்லி உள்ளே போனதும் பசி மட்டுப்பட, “போதும் காவி…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தாள்.

“சரிக்கா…” என்றவள் தண்ணி கொடுக்க குடித்தாள்.

“பத்து நிமிஷம் கழிச்சு மாத்திரை போட்டுக்கக்கா, இன்னும் லேசா உடம்பு சுடுது…”

“ம்ம்… அப்பா என்னைக் கேட்டாரா…?”

“ஆமா, எழுந்ததுமே உன்னைக் காணம்னு கேட்டார்… அம்மா நீ தூங்கறேன்னு சொல்லிட்டாங்க…”

“எனக்கு அப்பாவைப் பார்க்கணும், தூங்கிட்டு இருக்காரா…?”

“இல்லக்கா, சும்மா தான் படுத்திருக்கார்…” அவள் சொல்லவும் எழுந்தவள் தலையை ஒதுக்கிக் கொண்டாள்.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டைத் தொட்டவள், முகத்தில் வீக்கம் குறைந்திருக்கிறதா எனப் பார்த்தாள். தூங்கிய போல் மட்டுமே தோன்ற வெளியே வந்தாள். அவள் செய்வதைப் புன்னகையுடன் பார்த்த காவ்யா, ரம்யா தந்தையின் அறைக்கு சென்றதும் அலைபேசியில் கவினை அழைத்தாள்.

“என்ன காவி, அதிசயமா நீ கால் பண்ணிருக்க…”

“அத்தான்… நம்ம பிளான் சக்சஸ்னு நினைக்கிறேன்… அந்த ராஜேஷ் அக்காகிட்ட பேசினார் போலருக்கு, அக்காகிட்ட நிறைய மாற்றம் தெரியுது… நம்ம கணக்கு தப்பாகல…” என்றவள் ரம்யா நடந்து கொண்டதைப் பற்றிக் கூறினாள்.

“வாவ்… சூப்பர் நியூஸ் சொன்ன அந்த வாய்க்கு இப்பவே ஒரு உம்மா கொடுக்கணும் போலருக்கே…” அவன் வில்லங்கமாய் சொல்லி சிரிக்க கடுப்பானாள்.

“ச்சீ… மூஞ்சப் பாரு, எப்பவும் இதே நினைப்பு தானா…”

“பின்ன, வேற என்ன நினைக்கறதாம்… நான் யூத்து மா…”

“ஹூக்கும்… நாங்க மட்டும் என்ன, டெலிபோன் பூத்தா…?”

“நீ தான் பேருலயே பாதி சந்நியாசம் வாங்கி வச்சிருக்கியே… கொஞ்சமாச்சும் லவ்வர் கிட்ட பேசற போலவா பேசற…?”

“ஓஹோ, இதுக்காக ட்ரெயினிங்கா எடுக்க முடியும்… சரி, , அப்பாகிட்ட அக்கா என்ன பேசறான்னு பார்த்திட்டு வரேன்…”

“ம்ம்… போ… சீக்கிரமே நமக்கு கிரீன் சிக்னல் கிடைக்கட்டும்… அப்பத்தான் உன் நெத்தில ரெட் சிக்னல் பிரகாசமா எரியும்…”

“நீங்க என்ஜினியரா, இல்ல டிராபிக் போலீஸா… கிரீன் சிக்னல், ரெட் சிக்னல்னு பேசிட்டு இருக்கீங்க… ஆனா, எனக்கு ஒண்ணும் விளங்கல…”

“அதுக்கெல்லாம் லவ்வோமேனியான்னு ஒரு நோயால பாதிக்கப்பட்டிருக்கணும் காவி… உனக்கு தான் அது பக்கத்துல கூடப் போகலியே, கிரீன் சிக்னல்னா நம்ம ரூட்டு கிளியர்னு அர்த்தம்… ரெட் சிக்னல்னா…” என்றவன் நிறுத்த,

“ரெட் சிக்னல்னா… என்னன்னு எனக்குத் தெரியுமே…”

“வாவ்… என்ன அதிசயம், உனக்குத் தெரியுமா…?”

“ம்ம்… ரெட் சிக்னல்னா நான் உங்களுக்கு, அதுக்கு… நோ சொல்லறேன்ல, அதைத்தானே சொல்லறீங்க…”

“ஆஹா, என் அறிவின் சிகரமே, நான் சொன்ன ரெட் சிக்னல் உன் வகிட்டுல நான் வைக்கப் போற குங்குமம்…” அவன் கிண்டலாய் சொல்ல அசடு வழிந்தாள் காவ்யா.

“ஓ… ஹிஹி, அதுவா… அப்பவே நினைச்சேன், இருந்தாலும் வேற சொல்லிட்டேன்…” என சமாளித்தாள்.

“ஹூம், நீ மட்டும் இப்ப என் கைல கிடைச்ச…?”

“கைல கிடைச்சா…?”

“அதை நேர்ல சொல்லறேன், நீ இப்ப ரம்யாவை கவனி…”
என்று அழைப்பைத் துண்டிக்க நாணமாய் புன்னகைத்தாள்.

எட்டாம் அதிசயமாய்

நமை சிலிர்க்க வைக்கும்

அபூர்வ உணர்வு காதல்…

ஐந்தாம் வேதமாய்

மனதை ஜபிக்க செய்யும்

அதிசய மந்திரம் காதல்…

ரத்தமின்றி யுத்தமின்றி

உயிர் உணரும் அருவம்

இந்த மந்திரக் காதல்…

Advertisement