Advertisement

அத்தியாயம் – 14

“நீ சாப்பிட்டியாக்கா…” அன்போடு விசாரித்த தங்கையிடம் பிளேட்டில் தோசையை வைத்து நீட்டிய ரம்யா, “ம்ம், நீ சாப்பிடு…” என்றாள்.

அவள் செய்து வைத்திருந்த இன்ஸ்டன்ட் சட்னியைத் திறந்தவள் முழுமையாய் அரைபடாமல் இருந்த சின்ன வெங்காயத்தைக் கண்டு திகைத்தாலும் எதுவும் சொல்லாமல் பிளேட்டில் போட்டுக் கொண்டு தோசையில் தொட்டு சாப்பிட வியப்புடன் பார்த்தாள்.

“சூப்பரா இருக்கு கா, இதான் மாமா சொன்ன இன்ஸ்டன்ட் மிளகாய் சட்னியா…? எப்படிப் பண்ணின…?” மூத்தவளிடம் தெரிந்த மாறுதல் சின்னவளை சகஜமாய் பேச வைத்தது.

“கரண்ட் இல்லாம மிக்சில சட்னி அரைக்க முடியல, பாவம் மாமா பசியோட இருந்தார், அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்… கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சு இடிகல்லுல போட்டு முடிஞ்சவரை இடிச்சு கூட கொஞ்சம் மிளகாப்பொடியும், உப்பும் சேர்த்து தேங்காய் எண்ணையை தாராளமா விட்டு கலக்கினேன்… அதுக்கு மாமா இன்ஸ்டன்ட் சட்னினு பேரு வச்சுட்டு சந்தோஷமா சாப்பிட்டுப் போறார்…” என்றவளை வியப்புடன் நோக்கிய சின்னவள்,

“அக்கா… நீ எப்பவும் இதே போல சந்தோஷமா கலகலன்னு இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்…” சொல்லிக் கொண்டே சாப்பிட ரம்யா பதில் எதுவும் சொல்லவில்லை.

உண்மையில் ரம்யாவின் செயல் அவளுக்கே அதிசயமாய் தான் இருந்தது… இது நான்தானா, என ஆயிரம் முறை கேட்டுக் கொண்டே தான் செய்து கொண்டிருக்கிறாள்… முதன் முறையாய் தனது செயல் திருப்தியைக் கொடுப்பதை ஒரு நிறைவோடு உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனாலும் அவளது சுபாவம் ஒன்றும் மாறிவிடவில்லை. சின்ன ஒரு மாற்றம்… அவ்வளவே. அதற்குக் காரணமும் இருந்தது. கவின் எப்போதும் அவளைக் கிண்டல் செய்வது மனதுக்குள் ஒரு எரிச்சலைக் கொடுத்திருந்தது.

“ஏன், என்னால ஒரு வீட்டுக்கு மருமகளா இருக்க முடியாது, இவன் ரொம்ப தான் கிண்டல் பண்ணறான்…” என இயல்பான கோபம் மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற் போல மாலையில் ஒரு சம்பவமும் நடந்தது.

அர்ஜூன் ஒரு வேலையாய் வெளியே சென்றிருக்க பாங்கிலிருந்து வீடு திரும்பிய பொன்வண்ணன் பசியோடு அடுக்களைக்கு வந்து பாத்திரங்களைத் திறந்து பார்க்க எல்லாம் காலியாய் இருந்தது. சாப்பிட மட்டுமே அடுக்களைக்கு வரும் அவருக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட குறையாய் பசியோடு நின்றார்.

கரண்ட் இல்லாததால் யூபிஎஸ் உபயத்தில் வீட்டில் வெளிச்சம் இருந்தாலும் மிக்ஸி அரைக்க முடியாத நிலை. அவருக்கு அல்சர் பிரச்சனை இருந்ததால் ஹோட்டலில் உணவு சாப்பிடுவதை எப்போதோ நிறுத்தி இருந்தார். சரி, சக்கரை தொட்டாவது சாப்பிடுவோம் என தோசைக்கல்லை வைத்து பிரிட்ஜிலிருந்த மாவை எடுத்து ஊற்றினார்.

சிறிது நேரமாகியும் தோசை எந்த மாற்றமும் இல்லாமல் மாவாகவே கிடக்கவும் இதுவரை அடுக்களையில் எதுவும் செய்து பழக்கம் இல்லாத அவருக்கு கடுப்பாய் வந்தது.

அர்ஜூனுக்கு அலைபேசியில் அழைத்தவர், “அர்ஜூன், எப்ப வீட்டுக்கு வருவ… எனக்கு ரொம்பப் பசிக்குது, மதியமும் வொர்க் இருக்குன்னு சரியா சாப்பிடல… சட்னி அரைக்க கரண்ட்டும் இல்லை… ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டா நாளைக்கு பாங்குக்கு லீவு போட வேண்டி வரும்… சரி, நானே தோசை ஊத்தி சாப்பிடலாம்னு தோசைக்கல்லுல மாவை ஊத்தினா அது அப்படியே மாவாவே இருக்கு… உன் அம்மா வேற ஆசுபத்திரில போயி உக்கார்ந்துகிட்டா, காவ்யா வந்தாலாச்சும் செய்வா, இன்னும் அவளையும் காணோம்…”

அவர் புலம்பலாய் மகனிடம் சொல்லிக் கொண்டிருக்க, “அப்பா… இருங்க, இருங்க… உங்களுக்கு தான் பசி வந்தா கண்ணு முன்னாடி எதுவும் இருந்தாக் கூடத் தெரியாதே, ரமி எங்கே இருக்கான்னு பாருங்க…” என்றதும், எரிச்சலானார்.

“அவ இங்கே தான் சோபாவுல உக்கார்ந்திருக்கா…” அவர்கள் பேசுவது கேட்டாலும் கேட்காததுபோல் அமர்ந்திருந்த ரம்யா அவளை சொல்லவும் திரும்பிப் பார்த்தாள்.

“அவகிட்ட ஒரு நிமிஷம் போனைக் கொடுங்கப்பா…”

“ப்ச்… இப்ப அவளுக்கு எதுக்கு போன் கொடுக்கணும்…” முனங்கிக் கொண்டே அவளிடம் வந்தவர், “ரம்யா மா, அர்ஜூன் லைன்ல இருக்கான், ஏதோ பேசணுமாம்… பேசு…” என்று செல்லை நீட்ட மறுக்கத் தோணாமல் வாங்கிக் கொண்டவள் காதில் வைத்தாள்.

“ஹலோ…”

“ஹாங், ரமி… அப்பாவுக்கு செமப் பசி போலருக்கு, உனக்குத் தெரியும்ல, அவருக்கு அல்சர் பிராப்ளம் இருக்கிறதால ஹோட்டல் புட் சேராது, நான் வர்றதுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்… எனக்காக நீ ஒரு ஹெல்ப் பண்ணறியா ப்ளீஸ்…” விஷயத்தை சொல்லி கெஞ்சலாய் கேட்க யோசித்தாள்.

“என்ன பண்ணனும்…?” அவள் கேட்டதே பெரிய ஆசுவாசமாய் அர்ஜூனுக்குத் தோன்றியது.

“அப்பாக்கு தோசை ஊத்திக் கொடுத்துடறியா ரமி…”

“நானா…?”

“ப்ளீஸ் ரமி, என்ன இருந்தாலும் அவர் உன் மாமா… ஒரு காலத்துல உனக்கு அவரை எவ்ளோ பிடிக்கும்னு எனக்குத் தெரியும்… இப்போ நீ மாறிட்டதால வேற எதுவும் மாறிடலை… மாட்டேன்னு சொல்லாம அவர் பசிக்கு தோசை ஊத்திக் கொடு மா…” கெஞ்சினான்.

“ம்ம்…” என்றவள் பொன்வண்ணனிடம் அலைபேசியை நீட்ட, “அப்பா… ரம்யா தோசை ஊத்தித் தந்திடுவா… நீங்க சாப்பிடுங்க, நான் முடிஞ்ச வரை சீக்கிரம் வந்திடறேன்…” என அழைப்பைத் துண்டித்தான் அர்ஜூன்.

“ரம்யா மா, உன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நானே தோசை ஊத்திக்கலாம்னு தான் போனேன்… ஆனா மாவு அப்படியே இருக்கு…” அவர் சொல்லும்போதே தோசைக்கல்லை பார்த்தவள் கீழே குனிந்து அடுப்பைப் பார்க்க அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

“என்ன மாமா, அடுப்பைப் பத்த வைக்காம தோசை ஊத்தினா எப்படி ஆகும், மாவா தான கிடக்கும்… பேருக்கு தான் பெரிய பாங்கு மானேஜர்… ஹாஹா, அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, ரெடி பண்ணிடறேன்…” என அசடு வழிந்தார்.

“அட, அடுப்பைப் பத்த வைக்கலியா…” என தலையில் அடித்துக் கொண்டவர், “என்னதான் பாங்குல நான் மானேஜர்னாலும், வீட்டுல உன் அத்தை தான் எல்லாமே… எனக்கு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்து அப்படியே பழக்கிட்டா… கவினும் என்னை மாதிரிதான், ஆனா, அர்ஜூன் எங்கள மாதிரி இல்லை… ஓரளவுக்கு வீட்டு வேலை, சமையல் எல்லாத்துலயும் அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவான்… அவனைக் கட்டிக்கற பொண்ணுக்கு லக்கு தான்…” அவளிடம் எதார்த்தமாய் சொல்லுவது போல சொல்லிக் கொண்டு சோபாவுக்கு சென்றார்.

அடுப்பில் தோசையை ஊற்றிக் கொண்டே சிறிது சின்ன வெங்காயத்தை கிளீன் செய்து இடிகல்லில் வைத்து நசுக்கி மிளகாய்த்தூள் உப்பு, எண்ணெய் சேர்த்தவள், “மாமா, சாப்பிட வாங்க…” என அழைக்க வேகமாய் வந்தார். தட்டில் தோசையோடு ஒரு புதுவித சட்னியும் இருப்பதைக் கண்டவர் முகம் மலர்ந்தார்.

“அடடா… என்னமா, இது இன்ஸ்டன்ட் சட்னியா… கரன்ட் இல்லாமலே தயார் பண்ணிட்ட…” சொல்லிக் கொண்டே சாப்பிடத் தொடங்க, “ஆஹா… பிரமாதமா இருக்கே…” பசியில் இருந்தவருக்கு சூடான தோசையும் அந்த சட்னியும் உண்மையில் தேவாமிர்தமாய் தோன்றியதோ என்னவோ… பாராட்டிக் கொண்டே சாப்பிட ரம்யா புன்னகைத்தாள்.

“ரம்யா மா, சூப்பர்டா… இவ்ளோ டேஸ்ட்ல குயிக்கா உன் அத்தை கூட சட்னி செய்து தந்ததில்ல… உன் கைப்பக்குவம் சூப்பர் டா…” சொல்லிக்கொண்டே ரசித்து சாப்பிட்டார். அவரது பேச்சும், ரசனையோடு சாப்பிட்டதும் அவளுக்கு ஒரு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. எனவே தான் காவ்யா, கவினுக்கும் அவளே தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்த காவ்யா, “அக்கா, நான் வேணும்னா அத்தானுக்கு தோசை ஊத்தட்டுமா…” எனக் கேட்க,

“ஏன்… என் அண்ணி கையால செய்த தோசையை நான் சாப்பிட மாட்டேனா… இருந்திருந்து இன்னைக்கு தான் அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு, அதைக் கெடுக்காம ஓரமா உக்காரு காவி…” என்றவன் ரம்யா முறைக்கவும்,

“என்ன அண்ணி, எனக்கு சுட்டுத் தர மாட்டீங்களா…” என்றான் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

“தர்றேன், உக்காரு…” சிடுசிடுப்பாய் சொன்னாலும் ஒரு பிளேட்டில் தோசையை வைத்து சட்னியுடன் நீட்ட, “ஹூம்… பரவால்லியே, தோசை வட்டமா தான் சுட்டுருக்கீங்க… உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சேன்…” அவன் கிண்டலாய் சொல்ல, முறைத்தாள்.

“நீ நினைக்கற வட்டத்துக்குள்ள நான் இல்லை… எனக்கு என்ன தெரியும்னு உனக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை… அமைதியா இருந்தா தட்டுல தோசை வரும் இல்லன்னா, தோசைக்கல்லே வரும்…” என்றாள் மிரட்டலாய்.

“ஆத்தி, இந்த டெரர் பீசுகிட்ட வாயைக் கொடுத்தமே…” என நினைத்த கவின் வாயை தோசைக்கு மட்டுமே திறக்க, அவனைக் கண்ட காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது.

“நல்லா வேணும்…” அவள் தலையை ஆட்டி, நாக்கைத் துருத்தி அவனை நோக்கி நக்கலடிக்க, “இருடி…” என கண்களில் மிரட்டியவன் அமைதியாய் சாப்பிட்டு முடித்த பின்பே வாயைத் திறந்தான்.

“சும்மா சொல்லக் கூடாது அண்ணி, தோசையும், அதுக்கு நீங்க செய்த இன்ஸ்டன்ட் சட்னியும் உண்மைலயே ரொம்ப ருசியா இருந்துச்சு… நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்…” என்றான் கழுவிய கையைத் துடைத்தபடி.

“எதை வாபஸ் வாங்கிக்கற…” ரம்யா கேள்வியாய் நோக்க, “உங்களைப் பத்தி நிறைய தப்பா நினைச்சிருந்தேன், அதுல சிலதை வாபஸ் வாங்கிக்கறேன்…” எனவும் முறைத்தாள்.

“என்னைப் பத்தி யார் என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை, எனக்கு தோணின போல தான் நான் இருப்பேன்…” என்றவள் ஸ்டவ்வை அணைத்துவிட்டு மாடிக்கு செல்ல காவ்யாவிடம் கவின்,

“அதானே, உன் ராட்சசி அக்கா மாறிட்டாளோன்னு தப்பா நினைச்சுட்டேன்… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை…”

“அப்படி சொல்லாதீங்க அத்தான், இந்த சின்ன மாற்றம் கூட அக்கா மனசு மாறுறதுக்கான முன்னோடியா இருக்கும்னு தான் எனக்குத் தோணுது…”

“ம்ம்… மாறினா எல்லாருக்கும் சந்தோஷம்தான்… அந்த ராஜேஷ் எப்ப ரம்யாட்ட பேசுவான்னு தெரியல, பேசினா கொஞ்சமாச்சும் மாற்றம் வரும்னு எதிர்பார்க்கிறேன்…”

“ம்ம்… நிச்சயம் நல்லது நடக்கும், நம்புவோம்…”

மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ரம்யா. என்றுமில்லாமல் மனது சற்று நெகிழ்வாய் உணர்ந்தது.

“அப்பா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருவார், வெங்கி சாவுக்கு இவங்க சாபம் தான் காரணம்னு சொல்லி இத்தனை நாள் ரொம்ப வேதனையைக் கொடுத்துட்டேன்…  இப்ப அப்பாவும் செத்துப் பிழைச்சு வந்திருக்கார்… இனியும் அவர் மனசைப் பாதிக்கற போல நடந்துக்கக் கூடாது… எனக்காக என்னெல்லாம் செய்திருக்காங்க, அவங்களுக்காக நான் மாறலேன்னாலும் யாரையும் வெறுப்பேத்தாம இருந்து பழகணும்…” தனக்குள் முடிவெடுத்துக் கொண்டிருந்தாள்.

“கையிலிருந்த அலைபேசி சிணுங்க புதிய நம்பரைக் கண்டவள், “இந்த நேரத்துல யாராருக்கும்…” என யோசித்து விட்டு, “ப்ச்… யாரோ ஆகட்டும்… எனக்கு பேசற மூடில்லை…” என நினைத்தவள் எடுக்காமல் விட்டாள். வெகுநேரம் நிலவை சாட்சியாக்கி கதை பேசிக் கொண்டிருந்தவள் பின்னில் கேட்ட காலடி சத்தத்தில் திரும்ப அர்ஜூன் தான் வந்து கொண்டிருந்தான்.

“சாரி ரமி, உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக சீக்கிரம் வரலாம்னுதான் இருந்தேன்… பட் வேலை முடிய லேட் ஆகிருச்சு…” வருத்தமாய் சொன்னான்.

“பரவால்ல… நாளைக்கு அப்பா ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததும் வீட்டுக்குப் போயிருவனே…”

“ம்ம்…” என்றவன் அருகே நின்று தூரத்தில் வெறித்தான்.

“சாப்பிட்டியா ரமி…”

“ம்ம்…”

“நான் சாப்பிட்டனான்னு கேக்க மாட்டியா…?”

“சாரி, தோணலை…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தான்.

“தேங்க்ஸ் ரமி…”

“எதுக்கு…?”

“நான் சொன்னதுக்கு மறுக்காம அப்பாவுக்கு சாப்பிட செய்து கொடுத்ததுக்கு…”

“ம்ம்… அவங்களுக்கு மட்டுமில்ல, கவின், காவ்யாவுக்கும் நான்தான் தோசை சுட்டுக் கொடுத்தேன்…”

“வாவ்… அப்ப எனக்கு தான் பாக்கியம் இல்லை போல…” என்றவன் அவள் முகத்தையே ஊடுருவி நோக்குவது அந்த சிறிய வெளிச்சத்திலும் தெரிய ஒருவித அவஸ்தையான உணர்வு மனதுக்குள் நிறைவதை உணர்ந்தாள்.

“நீங்க… வெளிய சாப்பிடலையா…?”

“ப்ச்… உங்களை எல்லாம் விட்டுட்டு நான் எப்படி வெளிய சாப்பிடுவேன்…”

“டைம் ஆச்சே, பசிக்கலையா…”

“தெரியலை… உன் பக்கத்துல இருக்கும்போது தெரியலை…” அவன் சொல்லும்போது பளிச்சென்று தெருவிளக்கு மின்ன, மின்சாரம் வந்திருந்தது.

“ப்ச்… குளிச்சிட்டு வாங்க, நான் தோசை ஊத்தறேன்…” சொன்னவள் அங்கிருந்து நகர, சட்டென்று அவள் கையைப் பிடித்தான் அர்ஜூன்.

கோபமாய் திரும்பியவள் அவன் விழியில் நிறைந்து வழிந்த காதலைக் கண்டதும் மௌனமாய் கையை விடுவிக்க முயல, “ரமி… என்னை விட்டுட்டுப் போகாம இங்கயே இருந்திடேன்…” என்றான் மனதில் உள்ள ஏக்கத்தைக் குரலில் தேக்கி.

“ப்ச்… கையை விடுங்க, யாராச்சும் பார்க்கப் போறாங்க…” என்றதும் கையை விட்டவன், “யாராவது பார்க்கிறது தான் பிரச்சனையா ரமி, உனக்குப் பிரச்சனையில்லையா…” கிசுகிசுப்பாய் அவள் காதில் சொல்லிவிட்டு நகர சில நிமிடம் அப்படியே சிலையென நின்றிருந்தாள் ரம்யா.

“எனக்கு என்னவாயிற்று…? நான் எப்படி இப்படி மாறினேன்…? அவன் என் கையைப் பிடித்ததும் ஓங்கி அறைந்திருக்க வேண்டிய ரம்யா என்னவானாள்…? எதனால் எனக்குள் இந்தத் தயக்கமும், மௌனமும்..?” யோசித்தபடி அவள் நிற்க,

மீண்டும் திரும்பி வந்த அர்ஜூன் பின்னிலிருந்து அவளை சட்டென்று அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ ரமி…” எனக் காதில் கிசுகிசுத்து கீழே சென்றுவிட்டான்.

ஸ்தம்பித்து நின்றவளின் உடம்பெங்கும் சட்டென்று நரம்புகளை சுண்டி விட்டதுபோல் புதிதாய் ரத்தம் பாய்வதை உணர்ந்தாள் ரம்யா.

பலமாய் வீசிய காற்று அவள் தேகத்தை தழுவியதில் மீண்டவள், தயக்கமும், யோசனையுமாய் கீழே இறங்கினாள்.

அர்ஜூன் அவனது அறைக்கு சென்றிருக்க, அவன் முத்தமிட்டதும், அணைத்ததும் கோபத்தை வரவழைக்காமல் உடல் சிலிர்த்து மனதுக்குள் பரவசத்தைக் கொடுத்ததை எண்ணி வெட்கினாள்.

“நா…நான் வெங்கியை மறந்துவிட்டேனா… அப்படியானால் என் காதலுக்கு இவ்வளவு தான் சக்தியா… என் மனம் வெங்கியை மறந்து அர்ஜூனை  ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டதா…?” மூளை பலவிதத்தில் யோசித்தாலும் கால்கள் அவனுக்கு தோசை சுடுவதற்காய் அடுக்களைக்கு நகர்ந்தன.

கை கால் முளைத்த

காற்றாய் கருத்துக்குள்

உருக் கொண்டாய்…

உணர்வுக்குள் உறைந்து

உதிரத்தில் நிறைந்தாய்…

கனவுகள் தந்த கண்ணீரில்

வாழ்ந்தவள் நான்…

எனக்குள் நிஜமாய் நீ

எப்போது கலந்திட்டாய்…

Advertisement