Advertisement

அத்தியாயம் – 13

“அத்தான் ஹாஸ்பிடலுக்குப் போகாம, என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க…” கவினுக்குப் பின்னில் அமர்ந்திருந்த காவ்யா செல்லமாய் சலித்துக் கொள்ள முறைத்தான்.

“ஹூம், யாருமில்லாத பாழடைஞ்ச பங்களாவுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போயி கதறக் கதற ரேப் பண்ணப் போறேன்…” என்றதும் முறைப்பது அவள் முறையாயிற்று.

“இப்ப ஒழுங்கா சொல்லப் போறிங்களா இல்லையா, காலேஜ் விட்டதும் அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிடல் வரேன்னு அம்மாட்ட சொல்லிருக்கேன், லேட்டாச்சுன்னா பயந்துக்கப் போறாங்க…” சிணுங்கினாள் அவள்.

“ஏண்டி, நான் தெரியாம தான் கேக்கறேன்… உனக்கு இந்த ஆசாபாசம்லாம் எதுவும் கிடையாதா…? உன்னோட கொஞ்ச நேரம் இருக்கப் போறோம்னு எவ்ளோ ஆசையா வந்தேன், இப்படி கேள்வி கேட்டே மனுஷனை சாவடிக்கிற…”

“ப்ச்… அப்படில்லாம் பேசாதிங்க, எங்க போறோம்னு சொல்லிட்டா நான் எதுக்கு கேக்கப் போறேன்…”

“உனக்கு ராஜேஷ் தெரியுமா…?”

“யாரு, சினிமா நடிகர் ராஜேஷா..? தெரியுமே…”

“அட என் அறிவுக் கொழுந்தே, அவரை கேக்கலை, உன் மடச் சாம்பிராணி அக்கா ஒருத்தனை மாங்கு மாங்குன்னு லவ் பண்ணதுக்காக இப்பவும் வீட்டுல உக்கார்ந்து டார்ச்சர் பண்ணிட்டு இருக்காளே, அந்த சொங்கி வெங்கடேஷோட அண்ணன் ராஜேஷை தான் நாம பார்க்கப் போறோம்…”

“அவரை எதுக்கு நாம பார்க்கணும்…?” என்றாள் புரியாமல்.

“அந்த வீட்டுலயே கொஞ்சமாச்சும் மனிதாபிமானத்தோட இருக்கிறது ராஜேஷ் மட்டும் தான்… அவன் குடும்பத்தைப் பத்தி அவனே ரம்யாகிட்ட பேசினா என்ன ஆகும்…?”

“என்ன ஆகும்…?”

“கடவுள் அவசர அவசரமா உங்க ரெண்டு பேரையும் படைச்சு, மூளைங்கற ஒண்ணை வெக்காமலே பூமிக்கு அனுப்பிட்டான்னு நினைக்கறேன்… இப்படிக் கேள்வி கேட்டு என்னைக் கொல்லறியே காவி…”

“ப்ச்… முதல்ல வண்டிய நிறுத்துங்க, நான் செமப்பசில இருக்கேன்… என்னால எதையும் யோசிக்க முடியல, ஏதாச்சும் ஹோட்டலுக்கு முதல்ல அழைச்சிட்டுப் போங்க…” வண்டியை நிறுத்திய கவின், “அட, அந்த ராஜேஷை நாம ஹோட்டல்ல தான் மீட் பண்ணப் போறோம்…” என்றான்.

“ஏன் அவனுக்கு அங்க மாவாட்டுற வேலையா…?”

“பார்றா… என் செல்லம் காண்டுல காமெடி பண்ணுது…” என்றவன் அவள் முறைப்பைக் கண்டதும், “அவன் ஒரு ஹோட்டல்ல தான் மேனேஜரா வொர்க் பண்ணறான்… காலைல வீட்டுல இருந்து கிளம்பினா நைட்டு தான் வீட்டுக்குப் போவான்… அதான் ஹோட்டல்ல பார்க்கலாம்னு முடிவு பண்ணேன்…”

“ஓ… அவன் விவரம் உங்களுக்கு எப்படித் தெரியும்…”

“ஐயாவை சும்மான்னு நினைச்சியா, உன் அக்கா ரூட்டு கிளியர் ஆனா தான் நம்ம ரூட்டு கிளியர் ஆகும்னு நீ சொன்னபிறகு நான் சும்மா இருப்பேனா… நீ சொன்ன போல அவ மனசை மாத்த என்னெல்லாம் வழி இருக்கோ, எல்லாம் டிரை பண்ணிட்டு இருக்கேன்… ராஜேஷைப் பத்தி எனக்கு சொன்னது சுமதியோட தம்பி சிவா… அதான் அவன்கிட்ட பேசிப் பார்க்க நினைச்சேன்… நான் மட்டும் போறதை விட ரம்யா தங்கச்சியா நீயும் கூட இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு… இப்ப உன் கேள்விக்கு எல்லாம் விடை கிடைச்சிருச்சா, இன்னும் 5 நிமிஷத்துல ஹோட்டலுக்குப் போயிடலாம், அங்கயே சாப்பிட்டுக்கலாமா…?”

“ஹூம்… உங்க அண்ணனோட காதலுக்காக நிறைய ஜேம்ஸ்பாண்டு வேலை எல்லாம் பண்ணறீங்க…”

“இது என் அண்ணன் காதலுக்காக இல்ல, என் காதலுக்காக…”

“ஹூம், எப்படியோ நல்லது நடந்தா சரிதான்…” என்றவள் பைக்கில் அமர, ஸ்டார்ட் செய்தான்.

“இவ்ளோ பண்ணறேன், அப்படியே உன் பஞ்சுக் கையை என் தோள்ல வச்சுகிட்டா என்ன குறைஞ்சா போயிடுவ…” அவன் சிணுங்கவும் நாணத்துடன் அவன் தோளில் கையைப் பதித்தாள் காவ்யா.

ஐந்து நிமிடத்தில் சூர்யா விலாஸ் என்ற பெயர்ப் பலகையுடன் நடுத்தர வசதியோடு இருந்த ஹோட்டல் முன்பு பைக்கை நிறுத்தினான் கவின்.

மாலை நேரமாதலால் ஹோட்டலில் கூட்டமில்லை. அங்கங்கே சிலர் அமர்ந்து காபியுடன் உளுந்து வடை, சாம்பார் வடையை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். சிலர் பிளேட்டில் பேப்பர் ரோஸ்ட் டென்ட் அடித்திருந்தது. சுற்றிலும் பார்த்துக் கொண்டே ஓரமாய் இருந்த மேஜை ஒன்றுக்கு சென்று இருவரும் அமர்ந்தனர்.

“என்ன சாப்பிடறீங்க சார்..?” ஹோட்டல் பணியாளர் கையில் குறிப்பேடும் பேனாவுமாய் விசாரிக்க காவ்யாவைப் பார்த்தான் கவின்.

“என்ன வேணும் காவி…”

“எனக்கு ஒரு ரவா ரோஸ்ட், அதுக்கு முன்னாடி சாம்பார் வடை கொண்டு வாங்க…”

“ஓகே மேடம், சார் உங்களுக்கு…?”

“எனக்கும் அதே கொண்டு வாங்க…” என்றவன், அவன் எழுதிக் கொண்டிருக்கையில், “உங்க மானேஜர் ராஜேஷ் தானே…” கவின் கேட்டதும் மானேஜருக்கு தெரிந்தவன் என்ற முறையில் அவனிடம் ஒரு மரியாதை ஒட்டிக் கொண்டது.

“ஆமா சார், மானேஜரை உங்களுக்குத் தெரியுமா…?”

“ம்ம்… எனக்கு சொந்தம் தான், அவர் இன்னும் வரலியா…? முன்னாடி காணமே…”

“ஸ்டோர் ரூம்ல இருக்கார், இப்ப வந்திருவார் சார்… வேற எதுவும் வேணுமா சார்…”

“இல்ல, இதை முதல்ல கொண்டு வாங்க…”

“சரி சார்…” என்றவன் நகர்ந்தான்.

“ஹூம்… அத்தான், நீங்க பெரிய ஆளுதான்… எப்படிலாம் அவன்கிட்ட பிட்டு போடறீங்க…”

“பின்ன… அக்காளும் தங்கச்சியும் வைக்குற லவ் எக்ஸாம்ல நானும், என் அண்ணனும் பிட் அடிக்காம பாஸ் பண்ண முடியாது போலருக்கே…”

“ஹூக்கும், அவ்ளோ கஷ்டமா இருந்தா எதுக்கு எக்ஸாம் எழுதணும்..? விட்டுட்டுப் போக வேண்டியது தான…” அவள் கழுத்தை வெட்டிக் கொண்டு சொல்ல சிரித்தான்.

“ஹூம், அது முடிஞ்சிருந்தா நாங்க ரெண்டு பேரும் எதுக்கு உங்களைத் தொங்கிட்டு இருக்கப் போறோம்…”

“ஓஹோ, ரொம்பத்தான் பண்ணாதீங்க…” என்றவளை அவன் குறுகுறுவென்று நோக்க அவளுக்கு ஒரு மாதிரி இருக்கவே பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“ஹூக்கும், லுக்லயே மனசைப் பதற வைக்க வேண்டியது…” அவள் மனதுக்குள் அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்க சாம்பார் வடை பிளேட் மேஜைக்கு வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.

கவினின் பார்வை அடிக்கடி காவ்யாவிடமிருந்து மீண்டு ராஜேஷ் வந்துவிட்டானா என கவனித்துக் கொண்டிருந்தது. அவர்கள் ரவா தோசையைப் பாதி உள்ளே தள்ளி இருக்கும்போது யாரிடமோ பேசிக் கொண்டே ராஜேஷ் அவனது சீட்டுக்கு வருவதைக் கண்டவன் மீதமிருந்த ரவா தோசையை அவசரமாய் பிய்த்து வாய்க்குள் போட்டுக் கொண்டு தண்ணீர் ஊற்றி இறக்கினான்.

“எதுக்கு இப்படி அவசரமா சாப்பிடறீங்க அத்தான், விக்கிக்கப் போகுது…” காவ்யா சொல்ல, “காவி நீ மெதுவா சாப்பிடு, அந்த ராஜேஷ் வந்துட்டான்… நான் போயி முதல்ல பேசிப் பார்க்கறேன்…” சொல்லிக் கொண்டே எழுந்து கை கழுவ சென்றான். அவன் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த காவ்யா, “இவன்தான் ராஜேஷா…?” என நினைத்தபடி வேகமாய் சாப்பிடத் தொடங்கினாள்.

தனக்கு முன்னே நின்ற கவினை முன்னமே சில குடும்ப நிகழ்ச்சிகளில் கண்டிருந்ததால் யோசனையுடன் பார்த்தான் ராஜேஷ்.

“நீங்க, கவின் தானே…?”

“எஸ்… ராஜேஷ், உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்…” என்றதும் நெற்றியை சுளித்தான்.

“என்கிட்ட நீங்க என்ன பேசணும்…”

“ஜஸ்ட் டென் மினிட்ஸ், இங்கயே பேசலாம், ப்ளீஸ்…”

“ஓகே…” என்றவன் காஷியரிடம், “பத்து நிமிஷத்தில் வந்திடறேன்,…” என்று விட்டு கவினிடம் வந்தான்.

“வாங்க…” என்றவன் தனியாய் இருந்த ஏசி ஹாலுக்கு செல்ல கவினும் காவ்யாவிடம் கண் சிமிட்டிவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். இருவரும் எதிரெதிரே அமர, “உங்க மனைவி இறந்துட்டதா சொன்னாங்க சாரி…” என்றான் கவின்.

“நேரடியா விஷயத்துக்கு வந்திருங்க…” என்றான் ராஜேஷ்.

“உங்களுக்கு ரம்யாவைத் தெரியும்னு நினைக்கறேன்…”

“ம்ம்… தெரியும், அந்தப் பொண்ணு என் தம்பி வெங்கடேஷை லவ் பண்ணதா அம்மா சொல்லிருக்காங்க…”

“அவளைப்பத்தி தான் பேசணும்…”

“அவங்களைப் பத்தி என்கிட்ட பேச என்ன இருக்கு…” அவன் புரியாமல் கேட்கவும்,

“உங்க தம்பி இறந்த பிறகு ரம்யா நார்மலா இல்லை, தன்னையும் வருத்திகிட்டு, வீட்டுல இருக்கவங்களையும் வருத்தி டார்ச்சர் கொடுத்துட்டு இருக்கா…” என்றவன் வீட்டில் உள்ள சூழ்நிலையை நிதானமாய் சொல்லி முடித்து, “அதான் உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்…” என்றான்.

“அவங்க அப்பாக்கு ஹார்ட் அட்டாக்குன்னு நீங்க சொல்லி தான் தெரியும், நான் எந்த மாதிரி உதவணும்…?”

“இதை சொல்லறதுக்கு கஷ்டமா இருக்கு, உங்க வீட்டுல நீங்க தான் மனிதாபிமானம் உள்ள ஆளுன்னு சொன்னாங்க, உங்க மனைவி மேல பிரியம் இருந்தாலும் பெத்தவங்களை எதிர்க்க முடியாம உங்க மனைவியையே இழந்துட்டிங்க…”

“இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னா…”

“கேள்விப்பட்டேன்… இப்ப நீங்க நினைச்சா ரம்யாவோட வாழ்க்கை நல்லாருக்கும்…”

“புரியலை…”

“உங்க மனைவி சுமதி எதனால தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்தாங்கன்னு உண்மையை சொல்லணும், உங்க தம்பி, அம்மாவைப் பத்தி அவளுக்குப் புரிய வைக்கணும்…”

“என்ன விளையாடறீங்களா, என் அம்மா, தம்பியைப் பத்தி நானே அந்தப் பொண்ணு கிட்ட தப்பா சொல்லணுமா, அதெல்லாம் நடக்காது… நீங்க கிளம்புங்க…”

“ராஜேஷ், ப்ளீஸ்… அவ மனசுல உங்க தம்பியும், அம்மாவும் ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்காங்க, அது தப்புன்னு புரிஞ்சுட்டா என் அண்ணனைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருவா… ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு நினைச்சு இந்த உதவியை செய்யக் கூடாதா…” அவன் கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருக்க கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் காவ்யா.

அவர்களை நோக்கி வந்தவளை, “இது ரம்யாவோட தங்கை காவ்யா, என்னோட பியான்சி…” என அறிமுகப்படுத்தினான்.

“அக்காவோட கல்யாணம் முடியாம, கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு இவளும் வெயிட்டிங்… நீங்க ரம்யாகிட்ட உங்க தம்பி, அம்மாவைப் பத்தி பேசி புரிய வச்சா ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைல வெளிச்சம் வரும்… ப்ளீஸ் மறுக்காதீங்க…”

“ஆமா சார், அக்கா அவளாவே இல்லை… அரைமென்டல் போல ஆகிட்டா, அவளை நினைச்சு கவலைப்பட்டு அப்பாக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு… அவ வாழ்க்கை இப்படியே முடிஞ்சுருமோன்னு எங்க எல்லாருக்கும் பயமாருக்கு… நாங்க எவ்ளோ சொன்னாலும் எங்களை எதிரி போல தான் பார்க்கிறா… வெங்கடேஷோட அண்ணன் நீங்க… ஒருவேளை, நீங்க சொன்னா புரிஞ்சுகிட்டு மனசை மாத்திக்கலாம், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…”

காவ்யாவின் கண்ணில் நிறைந்த கண்ணீரும், குரலில் ஒலித்த வலியும் அவனை யோசிக்க வைத்தது.

“சரி, நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க…” என்றதும் இருவரின் முகமும் மின்சாரமின்றி பிரைட்டானது.

“இது ரம்யாவோட போன் நம்பர், அவகிட்ட பேசி புரிய வைக்கணும்…” என ஒரு நம்பரை போனில் காட்ட, தனது அலைபேசியை எடுத்துப் பதிந்து கொண்டான் ராஜேஷ்.

“எங்க ரிக்வஸ்ட்க்கு சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றி ராஜேஷ்…” சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.

ஹாஸ்பிடலுக்கு சென்று தந்தையைப் பார்த்துவிட்டு அன்னையருக்கு இரவு உணவை ஹோட்டலில் வாங்கிக் கொடுத்துவிட்டு காவ்யாவுடன் கிளம்பினான் கவின்.

“காவி, இந்தா வீட்டு சாவி… ரம்மிக்கு வீட்டுல போயி டிரஸ் எடுக்கனும்னு சொன்னாளாம், அர்ஜூன் மாப்பிள கால் பண்ணி இருந்தார்…” சொன்ன பூங்கொடி சாவியை சின்ன மகளிடம் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

“அப்பா நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர்றார்ல, நாளைக்கு நான் காலேஜ் போகலை மா…” என்ற மகளின் கையில் தட்டிக் கொடுத்த சரவணன் புன்னகைத்தார்.

“சரி, இருட்டாயிருச்சு… என் சின்ன மருமகளை பத்திரமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போடா கவின்…” என்றாள் மல்லிகா.

இருவரும் கிளம்ப அவர்களையே பார்த்திருந்த மல்லிகா, “ஹூம், கவினோட குணத்துக்கு காவ்யா ரொம்பப் பொருத்தம்… இவங்களுக்காகவாவது மூத்தவங்க ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்…” என்று சொல்ல, “ம்ம்… நடந்தா சந்தோஷம் தான்…” எனப் பெருமூச்சு விட்டாள் பூங்கொடி.

அவர்கள் பேசுவதை மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தார் சரவணன்.

கவினும், காவ்யாவும் வீட்டை அடைகையில் அங்கே இருந்த காட்சியைக் கண்டு அவர்கள் கண்ணையே அவர்களால் நம்ப முடியவில்லை.

ரம்யா அடுக்களையில் தோசை ஊற்றிக் கொண்டிருக்க பொன்வண்ணன் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அர்ஜூனை அங்கு காணவில்லை.

“ஆஹா, என்னவொரு அதிசயம்… உலகத்துல எட்டாவது அதிசயமா எதையோ சேர்த்திருக்கிறதா நியூஸ்ல சொல்லிட்டு இருந்தாங்க, அது இதுதானா…?” கவின் கிண்டலாய் கேட்க முறைத்தாள் ரம்யா.

“அவளை எதுக்குடா கிண்டல் பண்ணற… உன் அண்ணன் ஏதோ வேலையா வெளிய கிளம்பினவன் இன்னும் வரக் காணோம், கரண்டும் போயிருச்சு, சட்னி அரைக்க வழியில்லை… எனக்கு வேற செமப்பசி… சரி நாமளே தோசை ஊத்தி சாப்பிடலாம்னு அடுக்களைக்கு வந்தேன், ஆனா அடுப்பை பத்த வைக்காம தோசைக்கல்லை அடுப்புல வச்சு மாவை ஊத்திட்டு காத்திட்டு இருக்கேன், தோசை ஆனா பாடில்லை… அதான் ரம்யாவைக் கூப்பிட்டு பார்க்க சொன்னேன்… அவ பார்த்திட்டு சிரிசிரின்னு சிரிச்சிட்டு விஷயத்தை சொல்லவும் தான் புரிஞ்சது… சும்மா சொல்லக் கூடாது ரம்யாமா… தோசைக்கு நீ செய்த இன்ஸ்டன்ட் மிளகா சட்னி சூப்பரா இருக்கு… இன்னும் ஒரு தோசை குடும்மா…” என திருப்தியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க கவினும், காவ்யாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ரெண்டு பேரும் முழிச்சிட்டு நிக்காம போயி குளிச்சிட்டு வாங்க, உங்களுக்கும் தோசை ஊத்தி வைக்கிறேன்…” சொன்ன ரம்யாவை அதிசயப் பிறவி போல பார்த்துக் கொண்டிருந்தான் கவின். நம்ப முடியாமல் நறுக்கென்று காவ்யாவைக் கிள்ள, அலறியவள் முறைக்கவும் தான் நடப்பது நிஜமென்று நம்ப முடிந்தது.

“எப்படி இந்த மாற்றம்…? அதற்குள் ராஜேஷ் போன் செய்து பேசிவிட்டானா…? இவளும் புரிந்து கொண்டு உடனே மனம் மாறி விட்டாளா…?” மனதை அலட்டிய கேள்விகளுடன் திகைப்புடன் நகர்ந்தான்.

இனம் புரியா

இதமான உணர்வுக்குள்

இனம் பிரிக்கும்

இனிய சந்தோஷமாய்

இமைக்குள் சிக்கிய

கனவே காதல்…

வலியும் அது தீரும்

வழியும் அதில் மட்டுமே…

Advertisement