Advertisement

அத்தியாயம் – 12

“அர்ஜூன், என்னை எங்க வீட்டுல இறக்கி விட்டிருங்க…” முதுகுக்குப் பின்னால் ரம்யாவின் குரல் கேட்க பைக் கண்ணாடியில் அவளைப் பார்த்தான் அர்ஜூன்.

“அம்மா எங்க வீட்டுல தானே சமைச்சு வச்சிருக்காங்க, உன் வீட்டுக்குப் போயி என்ன பண்ணப் போற…”

“ப்ச்… எனக்கு வீட்டுக்குப் போகணும்…” அவள் எரிச்சலாய் சொல்ல, “சரி, முதல்ல இங்க சாப்பிடுவோம், அப்புறம் உன் வீட்டுக்குப் போவோம்…” என்றான்.

“சரி…” முனங்கலாய் சம்மதித்தாள். சிறிது நேரத்தில் வீட்டை அடைய வாசலில் பைக்கை நிறுத்தி கதவைத் திறந்தான்.

“ரமி பிரஷ் ஆகிட்டு வா, நான் வந்துடறேன்…” சொன்னவன் தனது அறைக்குள் நுழைய அவளுக்கான அறைக்குள் அவளும் சென்றாள். திரும்பி வருவதற்குள் உணவு மேசையில் இருவருக்கும் பிளேட் எடுத்து வைத்து கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

அடுப்பில் ஆம்லெட் தயாராகிக் கொண்டிருந்தது.

“ரமி, உனக்கு ஆம்லெட் ஓகே தானே…”

“ம்ம்…” சொன்னவள் அமர்ந்து தனக்கு ஒரு பிளேட்டில் சாதம் குழம்பை எடுத்துக் கொண்டாள். அவசரத்தில் மல்லிகா பொரியல் எதுவும் செய்திருக்கவில்லை. அவளுக்கு ஒரு பிளேட்டில் ஆம்லட் வைத்தவன் தனக்கும் எடுத்துக் கொண்டான். ரம்யா அமைதியாய் சாப்பிட அவளைப் பார்த்துக் கொண்டே அர்ஜூனும் சாப்பிட்டு முடித்தான்.

“ரமி, உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலை…?” கை கழுவ எழுந்தவளிடம் அவன் கேட்க, நின்றவளுக்கு ஏனோ பழைய போல் முகத்திலடித்தாற்போல பேச வரவில்லை.

“எவ்ளோ டைம் சொல்லுறது, எனக்கு உங்களைப் பிடிக்காம இல்லை… ஆனா கல்யாணம் பண்ணதான் பிடிக்கலைன்னு…”

சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவன் முகம் வாடியது. அமைதியாய் எழுந்தவன் பிறகு எதுவும் பேசவில்லை.

“சரி, கிளம்பலாமா…?” அவள் கேட்கவும் எழுந்து வாசலுக்கு நடந்தான்.

பைக்கை ஸ்டார்ட் பண்ண பின்னில் அமர்ந்தாள் ரம்யா.

மௌனமாகவே அவள் வீட்டுக்கு வண்டியை செலுத்தினான் அர்ஜூன். வாசலில் வண்டியை நிறுத்தி கேட்டைத் திறந்து உள்ளே சென்றதும் தான் வீட்டு சாவியை அன்னையிடம் வாங்காதது நினைவு வர, “அச்சோ… எனத் தலையிலடித்துக் கொண்டாள்.

“என்ன…?” என்பது போல் அர்ஜூன் கேள்வியாய் நோக்க, “ச..சாவி இல்லை…” என்றாள் தயக்கத்துடன்.

“ஓ… இப்ப என்ன பண்ணறது…?”

“உங்க வீட்டுக்கே போகலாம்…” என்றவளுக்கு யோசிக்காமல் அவனையும் அலைக்கழித்தது கஷ்டமாய் இருந்தது. வண்டியை எடுத்தவன் இரண்டு தெரு தாண்டி உள்ள தன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவனது அமைதி ஏனோ அவளுக்கு அவஸ்தையைக் கொடுக்க, “அர்ஜூன்…” அழைத்தாள்.

நின்று திரும்பியவன், “எதுவும் வேணுமா…” என்றான்.

மறுப்பாய் தலையாட்டியவள், “சாரி…” என்றாள். பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்தவனின் விழிகளில் வழிந்த வேதனை அவளுக்கு வலியைக் கொடுக்க அமைதியாய் தலை தாழ்த்திக் கொண்டாள்.

அவன் தனது அறைக்கு சென்றுவிட ரம்யா ஹால் சோபாவில் அமர்ந்தாள்.

மனதுக்குள் அர்ஜூனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வரிசை கட்டி வர, “உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலை…?” என்ற வார்த்தை காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தக் குரலில் ஒரு அடக்கப்பட்ட வலி இருந்தது.

சட்டென்று அருகிலிருந்த அலைபேசி ஒலிக்க, டிஸ்பிளேயில் தெரிந்த சிவகாமி ஆன்ட்டி என்ற பெயர் ஏனோ எரிச்சலைக் கொடுத்தது. முழுதும் அடித்து ஓயும்வரை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் அழைக்கவே எடுத்தாள்.

“ஹலோ, சொல்லுங்கத்தை…”

“அம்மாடி, ரம்யாக்கண்ணு… எப்படிடா இருக்க, உன்னோட பேசி எவ்ளோ நாளாச்சு, இந்த அத்தையை மறந்துட்டியா…?”

“அப்படில்லாம் ஒண்ணும் இல்லத்த, நான் நல்லாருக்கேன்…”

“ம்ம்… உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா…? உன் அப்பா உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காராமே… இப்பதான் கேள்விப்பட்டேன், கேட்டதும் ஆடிப் போயிட்டேன்… ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”

“ஆமா அத்தை, அப்பாக்கு நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடல்ல இருக்கார், இப்ப பரவால்ல…”

“ஹூம்… ரம்யாக்கண்ணு, உனக்கு தான் என்னைப் பத்தி தெரியுமே… மனசுல என்ன தோணினாலும் பட்டுன்னு கேட்டிருவேன்… அத்தைய தப்பா எடுத்துக்காத, எனக்கு ஒரு சின்ன டவுட்டு…” என இழுத்தார் சிவகாமி.

யோசனையாய் புருவத்தை சுளித்த ரம்யா, “என்ன டவுட்டு அத்தை…” என்றாள்.

“இல்ல, அது வந்து… உன் அப்பா…” என இழுத்தவரிடம், “எதுவா இருந்தாலும் கேளுங்கத்தை…” என்றாள்.

“ஒருவேளை, உன்னை அந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுக்காக உன் அப்பாவும், மத்தவங்களுக்கும் அவருக்கு நெஞ்சுவலின்னு நாடகம் போடுறாங்களோ…”

“அத்தை, என்ன பேசறீங்க… அவர் நெஞ்சைப் பிடிச்சிட்டு வலியில துடிச்சதை கண்ணால பார்த்தவ நான்… இப்படில்லாம் சொல்லாதீங்க…” என்றாள் கோபத்துடன்.

“கோபப்படாத கண்ணு, நான் சொல்லுறதைப் பொறுமையா யோசிச்சுப் பாரு… இந்த சினிமால எல்லாம் இப்படிதான் நெஞ்சு வலின்னு நடிச்சு பொண்ணை தன்னோட விருப்பத்துக்கு சம்மதிக்க வைப்பாங்க… அது மாதிரி உன் அப்பாவும் பிளான் பண்ணறாரோன்னு கேட்டேன்…”

“தப்பா யோசிக்கறீங்க அத்தை, என் அப்பாவுக்கும் சரி, என் குடும்பத்துக்கும் சரி, நடிக்கத் தெரியாது… அவங்க நடிச்சு தான் சாதிக்கனும்னா முன்னமே பண்ணிருக்கலாம்…”

“அச்சச்சோ, கோச்சுகிட்டியா ரம்யாக்கண்ணு… நான் மனசுல பட்டதைக் கேட்டுட்டேன், நீ எதுவும் தப்பா நினைக்காத… ஒருவேளை இதைக் காரணமா வச்சு அவங்க உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் முடியாதுன்னு ஸ்ட்ராங்கா சொல்லிடு… நீ என்னைக்கு இருந்தாலும் என் வீட்டு மருமக, உன்னை மத்தவங்க வீட்டுக்கு அனுப்பினா உன் வெங்கி ஆத்மா சாந்தியடையாது…” நயமாய் அவள் மனதுக்குள் நஞ்சைக் கலக்க முயன்றாள் சிவகாமி.

“மூத்தவன் ராஜேஷ் கிட்ட கூட புலம்பினேன்… இந்தப் பொண்ணு வெங்கி நினைப்பாவே இருக்கே… அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமான்னு, நான் வேணும்னா பேசிப் பார்க்கறேன்னு அவனும் சொன்னான்… நான்தான் அப்புறம் பேசலாம்னு சொல்லிட்டேன்…”

“ஓ… அவர் என்கிட்ட பேசறதால எதுவும் மாறப் போறதில்ல அத்தை… என்னோட சரிதான் எனக்கு சரி… அவரே அவர் சம்சாரம் சுமதி இறந்ததுல வருத்தமா இருப்பார், அவரை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணறீங்க…?”

சட்டென்று எதிர்ப்புறம் அமைதியாக, “ஹலோ, நான் பேசுறது கேக்குதா அத்தை…” என்றாள் ரம்யா.

“ஹா… ம்…ம் கேக்குது, என்ன திடீர்னு அந்தப் புள்ள நினைப்பு வந்திருச்சு உனக்கு, யாராச்சும் எதுவும் சொன்னாங்களா…?”

“இல்லையே… யாரு, என்ன சொல்லிடப் போறாங்க அத்த…?”

“ம்ம் சரி ரம்யா… நீ டயர்டா இருப்ப, ரெஸ்ட் எடு… நான் அப்புறம் கூப்புடறேன்…” சொன்னவர் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் மொபைலையே பார்த்தாள் ரம்யா.

வாசலில் நிழலாட கவின் நின்று கொண்டிருந்தான்.

“இவன் எப்ப உள்ள வந்தான், அது கூட கவனிக்காம போன்ல பேசிட்டு இருந்திருக்கனே…” எனப் பார்க்க, சிரித்தான்.

“என்ன அண்ணி, போன்ல எங்க அம்மா கூட ரொமான்ஸா, அத்த, அத்தன்னு நூறு அத்த சொல்லி கொஞ்சிட்டு இருந்திங்க…” அவன் வேண்டுமென்றே வம்பிழுக்க பதில் சொல்லாமல் எழுந்து அறைக்கு சென்று விட்டாள் ரம்யா.

“ஒரு மனுஷன் பசியோட ஆபீஸ்ல இருந்து வந்திருக்கான்… அவனுக்கு பரிமாறுவோம், சாப்பிட வைப்போம்னு ஏதாச்சும் தோணுதா… ஹூம், இந்த அண்ணனை எல்லாம் அதிசய மனிதன்னு டைட்டில் வச்சு மியூசியத்துல தான் கொண்டு போயி வைக்கணும்…” வாய் விட்டு உரக்கவே அவன் சொல்ல அர்ஜூன் வெளியே வந்தான்.

“என்னடா, வந்ததும் எனக்கு ஏதோ பாராட்டுக் கவிதை சொல்லற போல இருக்கு…”

“பின்ன, உன்னைப் போல ஒரு அதிசய ஜீவியை இந்த உலகத்துல பார்க்க முடியுமா… எரியவே எரியலைனாலும் எனக்கு அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம் பிடிக்கிற அபூர்வ ஜீவியாச்சே நீ… சரி, பசிக்குது… சாப்பாடு போட்டுத் தர்றியா அண்ணா…”

தம்பியின் பேச்சில் சிரித்து, “ம்ம்… டிரஸ் மாத்திட்டு வா…” என்றவன் ஐஸ் அலமாரியில் இருந்து இரு முட்டையை எடுத்து சின்ன பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, அதில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை பொடியாய் அரிந்து உப்பு போட்டுக் கலக்கி தோசைக்கல்லை சுட வைத்து, அந்த கலவையை அதில் ஊற்ற, சொர்ர்ர்… என்ற சத்தத்துடன் தளதளத்த ஆம்லட் மீது பெப்பர் பொடியை தூவி பிளேட்டில் சாதத்தைப் பரிமாறும்போது கவின் திரும்ப வந்துவிட்டான்.

“சூப்பர்ணா, உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ…” கவின் உரக்க சொல்ல அறைக்குள் இருந்த ரம்யாவின் காதிலும் விழவே செய்தது.

“அதுக்கு எதுக்குடா இப்படி கத்தற…?”

“எல்லாம் கேக்க வேண்டியவங்களுக்கு கேக்கனும்னு தான்…”

“ஆணியே புடுங்க வேண்டாம், நீ பேசாம சாப்பிடு…” தம்பியை அடக்கிவிட்டு தண்ணீரை கிளாசில் ஊற்றி வைத்தான்.

“ப்ச்… நீ இப்படி அம்மாஞ்சி மாதிரியே இருந்தா உன் ஆளுக்கு இதெல்லாம் செட் ஆகாது… அதிரடியா ரெமோ போல இறங்கினா தான் சரியா வரும்…”

“அவ என்னை நானாவே ஏத்துக்கிறது தானடா எனக்குப் பெருமை… ஒருத்தருக்காக இன்னொருத்தரா மாறி வாழறது எல்லாம் ரொம்ப கொடுமை டா…”

“ம்ம்… இப்படிப்பட்ட உன் அன்பை வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்க எப்படிதான் அண்ணிக்கு மனசு வருதோ…?”

“வேண்டாம்னு இல்லடா, உண்மைல அன்புன்னா என்னன்னு அவளுக்குப் புரியவே இல்லை… என்னோட அன்பு மட்டும் தான் இந்த உலகத்துல சிறந்ததுன்னு நினைக்கக் கூடாது, யாரோட அன்பும் குறைஞ்சது இல்லை, அதை அளவீடு செய்ய முடியாது… இழந்த காதலை பெருசா நினைச்சு, உயிரோட உள்ள என் காதலை உதாசீனப்படுத்தறா… ஆனா நிச்சயம் புரிஞ்சுப்பா, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…”

“ஹையோ தெய்வமே… உன்னைப் போல யாராலயும் பொறுமையா இருக்க முடியாதுப்பா… நீ எல்லாம் காதலை புரமோட் பண்ண கடவுளா பூமிக்கு அனுப்பி வச்ச ஆளு…”

“சரி விடு, காவ்யா காலேஜ்ல இருந்து ஹாஸ்பிடலுக்கு போவேன்னு சொன்னா, வரும்போது அழைச்சிட்டு வந்திரு…”

“சரிண்ணா…” சொல்லிக் கொண்டே எழுந்தவன் பிளேட்டைக் கழுவி வைக்க இருவரும் ஹாலுக்கு வந்தனர். ரம்யா சோபாவில் அமர்ந்து கையில் நாளிதழை வைத்திருந்தாள்.

“அழகிய அண்ணி,

அனுபவம் எண்ணி,

அடிக்கடி சிரித்தாளே…”

என பாடலை முணுமுணுத்துக் கொண்டே அவள் எதிரே அமர்ந்தான் கவின்.

“இவன் அடங்க மாட்டான்…” என அர்ஜூன் சிரிப்புடன் நோக்க, ரம்யாவோ கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

“ஹூம்… மாமா ரொம்பப் பாவம், மனசுக்குள்ள நிறைய வேதனை வச்சிருக்கார், எப்பதான் எல்லாம் சரியாகுமோ… எப்ப டிஸ்சார்ஜ்னு ஏதாச்சும் சொன்னாங்களா…?”

“அனேகமா நாளைக்குப் பண்ணுவாங்கன்னு நினைக்கறேன்…”

“சரிண்ணா, நான் கிளம்பறேன்…” என்றவன் எழுந்து கொள்ள ரம்யாவும் நிமிர்ந்தாள்.

“அண்ணி… படிக்கறதை கன்டின்யூ பண்ணு எக்ஸாம் வைப்பாங்க…” என்றவன் வெளியே செல்ல, முறைத்தாள்.

கவின் சென்றதும் கதவை சாத்திவிட்டு வந்த அர்ஜூன் அவனது அறைக்கு செல்ல, ரம்யா தந்தையைப் பற்றி சிவகாமி சொன்னதை யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள். ஒரு மணி நேர நல்ல உறக்கத்திற்குப் பிறகு அலைபேசியின் குரல் எழுப்பிவிட கண்ணைத் திறந்தவள் திகைத்தாள்.

அணிந்திருந்த துப்பட்டா விலகிக் கிடக்க அவளது செழுமையான இளமைகள் உடைக்குள் பிதுங்கி நின்றன.

சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு அது அர்ஜூனின் அறை என்பது புரிய வேகமாய் எழுந்து அமர்ந்தாள். அவள் அர்ஜூனின் கட்டிலில் தான் உறங்கிக் கொண்டிருந்தாள்.

“நா.. நான் எப்படி இங்கே, சோபால தானே இருந்தேன்… இங்க எப்படி படுத்தேன்…” குழப்பத்துடன் எழுந்தவள்  சாத்தியிருந்த கதவைத் திறந்து வெளியே வந்தாள். அப்போது வாசல்கதவு திறக்கும் ஓசை கேட்க, பயத்துடன் பார்த்தவள் உள்ளே வந்த அர்ஜூனைக் கண்டதும் திகைத்தாள்.

“நீ…நீங்க எப்ப வெளிய போனிங்க…?”

“ரமி, எழுந்துட்டியா… பால் வாங்கப போலாம்னு வந்தா நீ நல்லா சோபால தூங்கிட்டு இருந்த… அதான், கழுத்துப் பிடிச்சுக்குமோனு தூக்கிட்டு வந்து கட்டில்ல படுக்க வச்சேன்… நீ கொஞ்சம் வெயிட்டா இருக்கியா, அந்த ரூம் வரை தூக்க முடியலன்னு என் ரூம்ல படுக்க வச்சேன்…”

எதார்த்தமாய் சொன்னவனைத் திட்டுவதா, இல்லை திகைப்பதா எனப் புரியாமல் நின்றாள் அவள்.

“நீ உக்கார், காபி போட்டுத் தர்றேன்…” என்றவன் அடுக்களைக்கு செல்ல அவள் முகம் கழுவ சென்றாள்.

“ச்ச்சே… இப்படியா தூங்குவேன், அதுவும் இன்னொரு வீட்டுல… அர்ஜூன், நான் அலங்கோலமா படுத்திருந்ததைப் பார்த்திருப்பானோ, அதான் என்னை ரூம்ல கொண்டு வந்து படுக்க வச்சானா…” யோசித்துக் கொண்டே முகத்தைக் கழுவியவளின் மனம் அதிலேயே சிக்கிக் கொண்டது.

ஹாலில் அமர்ந்தவளுக்கு மணக்க மணக்க காபியை நீட்டினான் அர்ஜூன்.

வாங்கிக் கொண்டவள், “எனக்கு ஹாஸ்பிடல் போகணும்… கூட்டிட்டுப் போறிங்களா…” என்றாள்.

“நான் அம்மாக்கு கால் பண்ணேன் ரமி, இன்னைக்கு மாமாக்குப் பரவால்லியாம், டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுல ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க… காவ்யாவை கவின் ஹாஸ்பிடல் போயி அழைச்சிட்டு வந்திருவான், நம்மளை ஹாஸ்பிடல் வர வேண்டாம்னு சொன்னாங்க…”

“ப்ச்… எவ்ளோ நேரம் தான் இப்படி உக்கார்ந்திருக்கிறது… காவ்யா வரும்போது சாவி வாங்கிட்டு வர சொல்லுங்க, எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும்…” என்றாள் ரம்யா.

“இது உன் வீடு இல்லியா ரமி… ஒருவேளை, என்னோட தனியா இருக்க பயமாருக்கா….” என்றவனிடம், “நான் அப்படி எல்லாம் சொல்லலை, நீங்க என்ன பேயா, பூதமா… அப்படியே இருந்தாலும் எனக்கு பயமில்லை…”

“அப்புறம் எதுக்கு வீட்டுக்குப் போறேன்னு நிக்கற…”

“மாத்துத் துணி வேணும்டா மடையா…” ஒரு வேகத்தில் அவள் சொல்லிவிட்டாலும் அவன் இதழ்கள் கோபிக்காமல் சந்தோஷமாய் மலர, அவளும் நாக்கைக் கடித்துக் கொண்டு  மெல்லப் புன்னகைத்தாள்.

“ச..சாரி… அது, ஒரு புளோல வந்திருச்சு…”

“ஹாஹா… ஆனாலும் எனக்குப் பிடிச்சிருக்கு ரமி…” என்றவன் செல்லமாய் கன்னத்தில் தட்டிவிட்டு காலிக் கோப்பையுடன் செல்ல அவள் மனதில் இனம் புரியா ஒரு உணர்வு.

எட்டாத ஒன்றுக்கே

எப்பொழுதும் ஏக்கங்கள்

என்பதாலா – நீ

எனக்கு கிட்டாமலே

எட்டி நிற்கிறாய்….

Advertisement