Advertisement

அத்தியாயம் – 10

ரம்யா திகைப்புடன் சுவரிலிருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க காபியுடன் வந்தார் அந்தப் பெண்மணி.

“என்ன கண்ணு, போட்டோவையே பார்த்திட்டு இருக்க… சுமதியை உனக்குத் தெரியுமா…?”

“இது… இவங்க யாரு…?”

“என் தம்பி பொண்ணு, சுமதி… பாவம், அல்பாயுசுல போயிட்டா…” என்றார் வருத்தத்துடன்.

“ஓ… எப்படி இறந்தாங்க…?” மூத்தவளின் கேள்விகளைக் கேட்டு அதிசயமாய் பார்த்தாள் இளையவள்.

“இந்த அக்காவுக்கு என்னாச்சு, வீட்டுக்குள்ளயே வர மாட்டேன்னு சொன்னா, இப்ப இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்கா…” யோசித்த காவ்யா அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ப்ச்… அதை ஏன் கேக்கற கண்ணு, என் தம்பிக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்… எங்களுக்கும் குழந்தைங்க இல்லையா, அவன் புள்ளைங்க தான் எங்களுக்கும் குழந்தைங்க போல… ஆசையா மகளை வளர்த்து நல்லா சீர் செனத்தி செய்து நிறைய பவுன் போட்டு தான் கட்டிக் கொடுத்தோம்… ஆனா அவ வாக்கப்பட்டு போன இடம் சரியில்ல… உன் வீட்டுக்குப் போயி அதை வாங்கிட்டு வா, மறுபடி நகை போட சொல்லுன்னு புள்ளையைப் புகுந்த வீட்டுல வாழ விடாம பொறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டே இருந்தாங்க…”

“யார் இப்படிப் பண்ணாங்க, சுமதி வீட்டுக்காரரா…?”

“அந்தத் தம்பி மட்டும் கொஞ்சம் பரவால்ல கண்ணு, இவ மாமனார், மாமியாரும், கொழுந்தனும் தான் ரொம்ப மோசம்… நாங்களும் அவங்க சொன்னதை எல்லாம் எங்க கைக்கு மீறினதா இருந்தாலும் பொண்ணு வாழ்க்கை நல்லாருக்கணும்னு கடனை வாங்கி செய்தோம்… ஆனா, என்ன பிரயோசனம்…” என்றவர் கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

“ஏன் என்னாச்சு…?”

“ஏதோ நல்லதா ஒரு இடம் பார்த்திருக்கிறதா சொல்லி பத்து லட்சம் வாங்கிட்டு வர சொல்லி எங்க புள்ளைய வீட்டுக்கு அனுப்பினாங்க… முன்னமே வீடு கல்யாணக் கடன்ல இருந்துச்சு… பிறகும் ஒவ்வொண்ணுக்கும் தம்பி ஊருல கடன் வாங்கி இருந்தான், இப்ப பத்து லட்சத்துக்கு எங்க போவான்… இருக்கிற வீட்டு மேல மறுபடி லோன் வாங்கி, அஞ்சு லட்சம் கொடுத்து அவ்ளோ தான் முடிஞ்சதுன்னு சொல்லி புள்ளைய அவ புருஷன் வீட்டுல விட்டுட்டு வந்தான்… ஆனா, அவங்க என்ன சொன்னாங்களோ, திட்டினாங்களோ எங்க பொண்ணு தூக்குல தொங்கிருச்சு…”

கண்ணீருடன் அவர் சொன்னதைக் கேட்டு ரம்யா உள்ளுக்குள் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

“சுமதிக்கு ரொம்ப நாளா வயித்துவலி இருந்துச்சாமே…”

“அதெல்லாம் எங்க பொண்ணு இறந்த பின்னாடி அவ புகுந்த வீட்டுல கட்டி விட்ட பொய்… அவளுக்கு உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, ஒரு காய்ச்சல், தலைவலின்னு கூட அவ படுத்ததில்ல… அப்படிப்பட்ட பொண்ணு மனசு வெறுத்துப் போயி தூக்குல தொங்கினதை மறைக்க இப்படி கதை கட்டி விட்டிருக்காங்க… பொண்ணு செத்ததைக் கேட்டதும் என் தம்பியும், அவன் சம்சாரமும் ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிட்டாங்க… நாம பணம் கொடுக்காததால தான் மக இப்படிப் பண்ணிட்டான்னு மனசு வெறுத்துப் போயி ரெண்டு பேரும் விஷத்தைக் குடிச்சிட்டாங்க… ஒரு இறப்பையே தாங்க முடியாத எங்களுக்கு அவங்க போன அதிர்ச்சியை இப்பவும் தாங்கிக்கவே முடியல…”

அவர் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, வருத்தத்துடன் கேட்டிருந்தனர் சகோதரியர் இருவரும்.

“கடவுளே..! ரொம்ப கொடுமை…” காவ்யா சொல்ல ரம்யாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.

“பெத்தவங்களும் போயி, கூடப் பிறந்தவளும் போயி என் தம்பி மவன் சிவா மட்டும் தனியா கதறுனதை நினைச்சா இப்பவும் மனசு பொறுக்கலை… அவனை எங்களோட இருக்கட்டும்னு இங்க கூட்டிட்டு வந்துட்டோம்…”

“இவங்க கண்ணீரும், வார்த்தையும் உண்மைன்னா அம்மாவும், அப்பாவும் சொன்ன போல சிவகாமி அத்தை குடும்பத்துல எல்லாரும் ரொம்ப மோசமானவங்களா…? சொத்துக்கு ஆசைப்பட்டு தான் வெங்கி என்னைக் காதலிச்சானா…?” யோசித்தவளுக்கு அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“இல்லை, இவங்க எல்லாம் பொய் சொல்லறாங்க… அந்த சிவாவை கவினுக்கு எப்படித் தெரியும்… இப்ப எதுக்கு எங்களை இங்க கூட்டிட்டு வரணும்…? எல்லாருமா சேர்ந்து  ஏதோ நாடகம் போடுறாங்க… இல்ல, இதை நாம நம்பக் கூடாது…” அவள் காதல் மனது வெங்கடேஷின் காதலை பொய்யென்று நம்ப மறுத்தது.

“உங்க பொண்ணு சாவுக்கு காரணமானவங்கன்னு சொல்லறீங்க, அவங்க மேல ஏன் கேஸ் கொடுக்கலை…”

“எங்களுக்கும் வயசாகிடுச்சு, கோர்ட், கேஸுன்னு அலைய முடியாது, சிவாவால இதெல்லாம் பார்த்துக்க முடியாது… அதனால அவங்க செய்த தப்புக்கு கடவுளே தண்டனை கொடுக்கட்டும்னு விட்டுட்டோம்…” என்ற பதில் அவளுக்கு அத்தனை ஏற்புடையதாய் இருக்கவில்லை.

“உனக்கு எப்படி கண்ணு சுமதியைத் தெரியும்…?”

அவர் கேட்கவும் சட்டென்று மீண்ட ரம்யாவின் பதிலுக்காய் காவ்யாவும் அக்காவைப் பார்த்தாள்.

“எ…எனக்கு பெருசாப் பழக்கமில்ல, சுமதியை ஏதோ பங்க்ஷன்ல பார்த்திருக்கேன்…” ரம்யா சொல்ல, “அக்காவுக்கு இந்த சுமதியை எப்படித் தெரியும்… நாம பார்த்ததில்லையே…” என குழப்பமானாள் காவ்யா.

“ம்ம்… என்னத்த பேசி என்னாகப் போகுது, வாழ வேண்டிய பொண்ணு போயி சேர்ந்துட்டா…” அவர் சொல்லும்போதே கவின் அறைக்குள் இருந்து சக்கர நாற்காலியில் அரும்பு மீசையுடன் இளம் வயதுப் பையன் ஒருவனை தள்ளிக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

அப்படியே சுமதியின் ஜாடையில் இருந்த அந்தப் பையன் தான் அவளது தம்பி சிவா என்று சொல்லாமலே புரிந்தது.

சோகமாய் சிரித்தபடி வணக்கம் சொன்னவன், “வாங்கக்கா, நல்லாருக்கீங்களா…” என்றவனின் கால் சுவாதீனமின்றி சூம்பி இருப்பதைக் கண்டதும் மனதுக்குள் வலியை உணர்ந்தனர்.

“சிவாவுக்கு தனியா எதுவும் செய்ய முடியாது, அவனுக்கு எல்லாத்துக்கும் துணைக்கு ஆளு வேணும்… அவனுக்குன்னு மாசமாசம் ட்ரீட்மென்டுக்கு ஒரு தொகை ஆகும்… கவின் தம்பி போல சிலர் ஒரு டிரஸ்ட் மூலமா அவனோட மருத்துவ செலவுக்கு உதவி பண்ணறாங்க…” எனவும் ரம்யா, காவ்யா இருவரும் திகைப்புடன் நோக்கினர்.

அதற்குமேல் அவர்கள் சொல்லுவதை நம்பாமல் இருக்கவும் முடியாமல், நம்பியவர்களை சந்தேகப்படவும் முடியாமல் ஒரு மாதிரி மூச்சு முட்டுவது போல் இருக்கவே ரம்யா சட்டென்று எழுந்து கொண்டாள்.

“நான் கார்ல இருக்கேன், வர்றேன்மா…” என்றவள் பதிலை எதிர்பாராமல் வெளியே சென்றுவிட,

“சிவாக்கு சில புக்ஸ் வேணும்னு சொல்லி இருந்தான், ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிருந்தேன்… அதைக் கொடுத்துட்டு, பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தோம்… ஹாஸ்பிடல்ல எங்களுக்காக அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, நாங்களும் கிளம்பறோம் மா…”

“சரி தம்பி, இதான் காவ்யாவா…” காவ்யாவைக் காட்டி கேட்க, புன்னகையுடன் தலையாட்டினான்.

“ம்ம்ம்… ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நல்லாருக்கு, சீக்கிரமே மனசுக்குப் பிடிச்ச போல வாழ்க்கை அமையட்டும்…” என வாழ்த்தவும் காவ்யா நாணத்துடன் தலை குனிந்து கொள்ள, “உங்க வார்த்தை பலிக்கட்டும்… வர்றோம் மா… வேற எதுவும் வேணும்னாலும் கால் பண்ணு சிவா…” என்றவன் முன்னில் நடக்க, காவ்யாவும் அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்தாள்.

அவர்களும் காரில் அமர கவின் ஸ்டார்ட் செய்தான். ரம்யாவின் முகம் யோசனையில் வாடி இருந்தது.

“நம்மளுக்கு இருக்கிறதெல்லாம் பெரிய பிரச்சனையே கிடையாது, அத்தான்… நம்மை விட எத்தனையோ பிரச்சனைகளோட நம்மை சுத்தி நிறைய பேர் இருக்காங்க இல்லியா… சரி, இவங்களை உங்களுக்கு எப்படிப் பழக்கம்…” என்றாள் காவ்யா.

“நானும் என் பிரண்ட்ஸ் சிலரும் மாசமாசம் ஒரு டிரஸ்டுக்கு பணம் கொடுத்து உதவி பண்ணுவோம்… அப்படிதான் சிவாவை எனக்குப் பழக்கம்… பேச்சு வாக்குல விசாரிச்சப்ப தான் அவங்க நம்மளுக்கு தூரத்து சொந்தம் மட்டுமில்ல, தற்கொலை பண்ணி இறந்து போன சுமதிதான் சிவாவோட அக்கான்னு தெரிய வந்துச்சு…”

“என்னது, அவங்க சொன்னது சிவகாமி அத்தை குடும்பத்தைப் பத்தியா…” என்றாள் காவ்யா அதிர்ச்சியுடன்.

ரம்யா எதுவும் பேசாமல் வெளியே வெறித்திருக்க கவின் பதில் சொன்னான்.

“ஆமா, வெங்கடேஷ் குடும்பத்தைப் பத்தி நாம எவ்ளோ சொன்னாலும் உன் அக்காவுக்குப் புரியவே இல்லை… அதான், சம்மந்தப்பட்டவங்க சொன்னாலாச்சும் ஏதாவது மண்டைல ஏறுமான்னு பார்க்கலாம்னு தான் உங்களை இங்கே அழைச்சிட்டு வந்தேன்…” கவின் சொல்லவும் காவ்யா திகிலுடன் அக்காவைப் பார்க்க அவள் முகம் கோபத்திலும், நடந்த சம்பவத்திலுமாய் சிவந்து கிடந்தது.

“என்ன..? அண்ணி, இப்பவாச்சும் அந்தக் குடும்பத்தைப் பத்தி நாங்க சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பறியா…? பாவம் சிவா, இந்த நிலைமைல இருக்கிறவனை விட்டுட்டு விஷத்தைக் குடிக்கணும்னா அவனைப் பெத்தவங்களுக்கு எந்தளவுக்கு மனசுல வேதனை இருந்திருக்கணும்…?”

“இல்ல, எல்லாருமா சேர்ந்து நாடகம் போடுறீங்க… நான் நம்ப மாட்டேன்… வெங்கி என்னை உண்மையா தான் லவ் பண்ணான், எங்க காதல் உண்மையானது…”

“அது சரி, கண்ணிருந்தும் நான் குருடுதான்னு சொல்லறவங்களுக்கு என்ன பண்ணாலும் புரிய வைக்க முடியாது… அந்தம்மாவோட கண்ணீரும், சிவாவோட வேதனையும் நாடகம்னா உனக்குத் தோணுது…”

“ஆமா, நீ பிளான் பண்ணி எங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்க… இல்லேன்னா இப்ப இங்க வர வேண்டிய அவசியம் என்ன…?”

“நான் பிளான் பண்ணது என்னமோ உண்மைதான்… அது நீ உண்மைன்னு நம்பிட்டு இருக்கிற பொய்த் திரையை விலக்க தானே ஒழிய, அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்…” என்றான் கவின்.

“இல்ல, நம்ப மாட்டேன்… நான் நம்ப மாட்டேன்…” அவளுக்குள் சொல்லிக் கொண்டவளின் விழிகள் கண்ணீரை வழியவிட கண், முகமெல்லாம் சிவந்திருந்தவளைக் காண காவ்யாவுக்கு பயமாய் இருந்தது. கவினுக்கு ஜாடை காட்டி அமைதியாய் இருக்கும்படி கூறினாள்.

ரம்யாவிற்கு தான் தேர்வு செய்தது நிச்சயம் தப்பாகாது என்ற அதீத நம்பிக்கையும், ஒன்றை விரும்பினால் இறுதிவரை வெறுக்க முடியாத அவளது சுபாவமும் காரணமாய் இருக்கலாம்… எனப் புரிந்ததால் கவினும் அமைதியானான்.

“அண்ணி, முகம் கழுவிட்டு உள்ள போ… மாமா பார்த்தா பீல் பண்ணப் போறார்…” கவின் சொல்ல அவளுக்கும் அது தேவையாய் இருக்கவே செய்து கொண்டாள்.

சரவணனை காலையில் பரிசோதித்த டாக்டர் நார்மல் வார்டுக்கு மாற்றி இருந்தாலும் சிகிச்சை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

ரம்யாவைக் கண்டதும் அன்னை முகம் திருப்பிக் கொள்ள சரவணனின் பார்வை வேதனையுடன் அவளைத் தழுவி மீண்டது.

“அப்பா… இப்ப உங்களுக்குப் பரவால்லியா…” ஓடி வந்து அருகிலமர்ந்து கை பற்றி விசாரித்த சின்ன மகளின் தலையில் பரிவோடு தடவிக் கொடுத்தார்.

“அப்பா உங்களை விட்டுப் போயிடுவேன்னு பயந்துட்டியா காவிம்மா…”

“அப்படில்லாம் சொல்லாதீங்கப்பா, எங்களுக்கு நீங்க இல்லாம எப்படிப்பா…” சொன்னவளின் கண்களும் கலங்கின.

ரம்யா தந்தையை நோக்கிவிட்டு அமைதியாய் ஒதுங்கி நிற்க, “ரம்மி மா, அப்பாட்ட வரமாட்டியா டா…” தீனமாய் ஒலித்த தந்தையின் குரல் உள்ளுக்குள் என்னவோ செய்ய கண்களில் அவளை மீறி முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“அ..அப்பா…”

“சாப்பிட்டியா டா…”

“ம்ம்… உங்களுக்கு எப்படி இருக்குப்பா…” மகளின் பேச்சு பூங்கொடிக்கும், மல்லிகாவுக்கும் அதிசயமாய் இருந்தது.

“ஒருவேளை, உடம்புக்கு முடியாதவரை கோபப்படுத்த வேண்டாம், என பக்குவமாய் பேசுகிறாளோ…” என நினைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுத்து சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பினான் கவின்.

“சரி, ரெஸ்ட் எடுங்க மாமா… என்ன தேவை இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்கம்மா… நீங்க ஆட்டோல வீட்டுக்குப் போயிடுவீங்க தானே, நான் ஆபீஸ் கிளம்பட்டுமா…?”

“சரிடா கவின், அர்ஜூன் வந்துடறேன்னு சொல்லிருக்கான்… நீ கிளம்பு, நாங்க பார்த்துக்கறோம்… காவ்யா உனக்கு காலேஜ் போக வேண்டாமா, பிராக்டிகல் இருக்குன்னு அண்ணி சொன்னாங்களே…” என்றார் மல்லிகா.

“இருக்கு அத்தை, ஆனா போகத் தோணலை…”

“காவி… அப்பாக்கு இப்பப் பரவால்லடா, நீ கவின் கூடவே காலேஜ் கிளம்பு…” சரவணன் சொல்ல, “ஆமா காவி… நீ கிளம்பு, நாங்க பார்த்துக்கறோம்…” என்றார் பூங்கொடி. அந்த செமஸ்டருக்கான இறுதி பிராக்டிகல் வகுப்பு என்பதால் மறுக்க மனமின்றி யோசித்தவள் கிளம்பினாள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், “அண்ணி, நான் வீட்டுக்குப் போயி குளிச்சு, சமையல் பண்ணி எடுத்துட்டு வந்துடறேன்… உங்களுக்கு மாத்து சேலை இருக்குதானே, இங்கயே குளிச்சுக்கறீங்களா, என்னோட வரீங்களா…?” எனக் கேட்க, “நான் வந்தா இவருக்கு எதுவும் வேணும்னா யார் பார்த்துப்பா… நான் இருக்கேன், நீ போயிட்டு வா மல்லி…” என்றார் பூங்கொடி.

“அப்பாவை நான் பார்த்துக்கறேன்…” என்ற ரம்யாவின் குரலில் திகைத்தாலும், “இல்ல, அது சரிவராது… இவளை நம்பி அவரை விட முடியாது நான் இருக்கேன்… நீ கிளம்பு…” என்ற அன்னையை முறைத்தவள்,

“நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லறேன்ல…”

“பூவு, அதான் என் பொண்ணு துணைக்கு இருக்கேன்னு சொல்லறாளே, நீ போயிட்டு வா…” என்றார் சரவணன் சந்தோஷத்துடன்.

ரம்யாவின் பேச்சும், செயல்களும் அவருக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது. தனக்கு சட்டென்று உடம்பு முடியாமல் போனதால் மகள் சற்று பயந்திருக்கிறாள், இதை வைத்து அவள் மனதை மெல்ல மாற்ற முயல வேண்டும் என யோசித்தது தந்தை மனது.

பூங்கொடி மல்லிகாவுடன் கிளம்ப தந்தையும் மகளும் மட்டும் தனியே இருந்தனர். எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவளைக் கனிவுடன் நோக்கினார் சரவணன்.

“ரம்மி…” அவரது அழைப்பில் திரும்பியவள், “என்னப்பா, எதுவும் வேணுமா…” என்றாள்.

“இப்படி பக்கத்துல வந்து உக்காருடா…” அவர் சொல்லவும் கட்டில் அருகே நாற்காலியை போட்டு அமர்ந்தாள்.

“அப்பாவுக்கு எதுவும் ஆயிடுமோன்னு பயந்துட்டியா கண்ணம்மா…” சொன்னவர் மகளின் கையைப் பற்ற அமைதியாய் கண்ணீர் விட்டாள் மகள்.

“நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல ப்பா…”

“ச்ச்சே ச்சே… அப்படில்லாம் இல்லடா, சின்ன வயசுல நீ படுத்தாத பாடா… அதெல்லாம் சந்தோஷமா தாங்கிகிட்டோம், இப்ப எங்களுக்கு வயசாகுதில்லியா, அதான் சட்டுன்னு தாங்க முடியாம இப்படி ஆகிடுச்சு…”

அப்போது அவரைப் பரிசோதிக்க உள்ளே வந்த நர்ஸ், “சார், அதிகம் பேசாதிங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க…” என்றார்.

“தூங்க ஊசி போடறேன்… நல்லாத் தூங்கட்டும், சார் எழுந்ததும் சொல்லுங்க…” என்று ஊசியைக் குத்திவைக்க, அடுத்த நிமிடத்திலேயே கண்ணை சொருகிக் கொண்டு வந்தது சரவணனுக்கு.

நர்ஸ் சென்றபின்பு சோர்வுடன் கண் மூடி எல்லாம் மறந்து,  உறங்கும் தந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கு அழுகையாய் வந்தது. காலையில் நடந்த சம்பவங்களை அசை போட மனம் வேதனையில் துடித்தது.

“தரையில் கால் படாமல், அன்பை மட்டுமே கொட்டி வளர்த்த தந்தையின் இந்த நிலைக்கு நானே காரணமாகி விட்டேனே…” என சுயமாய் குற்றப்படுத்திக் கொண்டவள் அவர் கையைப் பிடித்தபடி மௌனமாய் அழுதாள்.

வெகுநேரம் அலைக்கழிந்த மனது தந்தையின் கை பிடித்ததில் மெல்ல அமைதியாக அப்படியே கட்டிலில் சாய்ந்து அவளும் உறங்கி இருந்தாள்.

எண்ணுவதெல்லாம்

எப்பொழுதும்

ஈடேறிடுவதில்லை…

ஏனென்றால்

கணக்குகளுக்கு

அப்பாற்பட்டது

காலங்கள்…

Advertisement