Advertisement

கல்யாண வேலைகள் தூரிதமாக ஆரம்பித்தது. கண்கொத்திப் பாம்பாக கல்யாண செலவுகளை கவனித்து வந்தார்கள் பர்வதம்மாவும் காயத்ரியும். பெண்ணிற்கு கல்யாணப் புடவையும் நகையும் எடுக்கும் நிகழ்வுக்குத்தான் அடுத்து இரு குடும்பமும் பார்த்துக்கொண்டது.

மாலினி அவள் தாய் மற்றும் தோழி ஷீலாவுடன் வந்திருந்தாள். இளங்கோவன் ஆபீசில் அன்று முக்கியமான மீட்டிங், வர இயலாது என்று ராகவனிடம் அன்று மதியம் சொல்ல, அதை ஒதுக்கி,  தங்கையும் அன்னையையும் அழைத்து வந்தான்.  பெரிய கடைகளை விடுத்து, பாரம்பரிய பட்டுக்கள் கிடைக்கும் ஒரு பொட்டீக் கடைக்கு வந்திருந்தார்கள்.

“ஏம்மா, டீ.வில எத்தனையோ பெரிய கடைங்க விளம்பரம் வருது. அதெல்லாம் விட்டுட்டு இங்க வந்திருக்க?”, பர்வதம் மாலினியிடம் தன் சந்தேகத்தை கேட்டே விட்டார்.

“ம்ம்.. எல்லாம் அவ ப்ரெண்டு சொல்றதுதான். நம்ம பேச்சை எங்க கேட்கறா? “, சகுந்தலா அங்கலாய்த்தார். மணப்பெண் பட்டு என்று பெரிய கடைகளின் விளம்பரம் போல எடுத்து செலவு வைக்கவேண்டும் என்ற அவரது ஆசை நிராசையானதே. அந்த கடுப்பு அவருக்கு.

“ஷீலாவோட குடும்பமே துணி வியாபாரம்தான் அத்தை. மிண்ட் ல கடை வெச்சிருக்காங்க. டிசைனர் வேலைப்பாடு எல்லாம் அவங்க ஊரு ராஜஸ்தானுக்கே அனுப்பி செய்வாங்க. என் கல்யாணத்துக்கு அந்த மாதிரி செய்யறதா சொல்லியிருந்தா. இந்த மாதிரி டிசைன் பண்றதுல அவ எக்ஸ்பர்ட்.”, என்ற நீண்ட விளக்கத்தோடு ஷீலாவை அறிமுகம் செய்துவைத்தாள்.

அதற்குப்பின் மாலினியும் ஷீலாவும் மட்டுமே கடை ஆளிடம் பேச, புடவை பார்க்க என்றிருக்க, சகுந்தலாவும், பர்வதம்மாவும் நாற்காலிகளில் அமர்ந்துவிட்டனர். காயத்ரி, குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு மாலினியுடன் வலிய சென்று சேர்ந்துகொண்டாள்.

ஆனால் அவர்கள் பேசிக்கொண்டது எல்லாம் ஜர்தோசி, ஸ்டோன் , பெர்ல் வொர்க், எது எந்த கலருக்கு எடுப்பாக இருக்கும், என்ன மெடீரியல் செட்டாகும் எது மாலை நேரத்துக்கு ரிச்சாக இருக்கும், அதே  நேரம் அவள் நிறத்துக்கும் ஸ்டேஜ் பாக்ரவுண்டிற்கும் எடுத்துக்கொடுக்கும் என்ற ரீதியில் இருக்க, காயத்ரி அவர்கள் வாயைத்தான் பார்க்க வேண்டியதாக இருந்தது.

அவள் அன்னை எவ்வளவு விலை , எவ்வளவு பெரிய சரிகை என்ற அளவிலேயே தேர்வு செய்வார். டார்க் கலர்தான் சரிகை எடுத்துக் காமிக்கும் என்று அடர்ந்த கலரில்தான் பார்டர் இருக்கவேண்டும் என்று தேர்வு செய்வார். அவள் கல்யாணப் புடவையும் இந்த கோட்பாடுகளைக் கொண்டே இருந்தது.

இறுதியாய் மாலினி எடுத்த அடர் கத்தரிக் கலர் புடவையில் நாங்கு விரலளவு சரிகை மட்டுமே, அதுவும் செல்ஃப் பார்டரில். உடம்பில் அங்கங்ககே அன்னப் பறவை சரிகை. முந்தானையில் கூட முழு சரிகையில்லாமல், அடர் ரோஜா நிறப் பட்டில் மங்கல சங்கீத கருவிகளான  வீணை, மிருதங்கம், நாயனம், குழல் என்று கலவையாக நெய்திருந்தது.

அதை முஹூர்த்தப் புடவை என்று இரு தாய்மார்களும் ஒத்துக்கொள்ளவேயில்லை.  காயத்ரியுமே,

“இது என்ன இவ்வளவு சிம்பிளா எடுத்தா எங்களைப்பத்திதான் குறைவா பேசுவாங்க. எங்க மாமியார் வீட்டு ஜனமே பேசும்.  கொஞ்சம் சரிகை அதிகமா பாருங்க அண்ணி.”, என்றாள்.

“இதுக்கு மேல நிறைய வேலைப்பாடு செய்யணும். அது முடிஞ்சதும் செம்ம ரிச் லுக் வரும். நம்புங்க.”, என்று மாலினியும் ஷீலாவும் எடுத்துச் சொல்லியும் யாருக்கும் திருப்தியில்லை.

“அதுக்குன்னு உன் முஹூர்த்தப் புடவை வெறும் இருபதனாயிரம்னு எப்படி சொல்லமுடியும் மத்தவங்ககிட்ட ?”, சகுந்தலா கேட்க,

“ஆன்ட்டி, இதுல இன்னும் பத்தாயிரத்துக்கு மேல செலவு இருக்கு. முடிச்சதும் பாருங்க. நீங்க எழுபதாயிரம் விலைன்னு சொன்னாலும் எல்லாரும் நம்புவாங்க. நான் செய்யப்போற வொர்க், டீ.நகர் கடையில் அந்த விலைக்கும் மேலத்தான் விக்கறான். அதுக்கு நான் கியாரண்ட்டி”, என்று ப்ரீத்தி மிக்சி ரேஞ்சுக்கு சத்தியம் செய்தாள் ஷீலா.

பத்தாயிரத்துக்கு ஊசி மணி பாசி மணி தைக்கப் போறாளா என்று வாயைப் பிளந்தார் பர்வதம்.

ராகவன் அமைதியாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான். பஞ்சாயத்து அவனிடம் வந்த போதும், “ கட்டிக்கப் போறது மாலினி. அவ கல்யாணத்துக்கு அவ இஷ்டத்துக்கு எடுக்கட்டும். வாங்கிக் குடுக்க மட்டும்தான் நான் வந்தேன். மத்தபடி அவ முடிவுதான்.”, என்று கூறி அங்கிருந்த தாய், தங்கை, மாமியார் என்று மூவரின் வயத்தெரிச்சலையும் கொட்டிக்கொண்டான்.

‘ம்க்கும்…இவ அப்பா பத்தாதுன்னு இவனும் இவளுக்குத்தான் எல்லாம் தெரியும்னு தாளம் தட்டறானே. அதுவும் அம்மா, தங்கை முன்னாடியே செய்வானா ? எல்லாம் பின்னாடி என் பொண்ணு தலையில வந்து விடியும்னு கூட வா தெரியாது?’, என்று சகுந்தலா மைண்ட் வாய்ஸ் ஓட, பர்வதம், காயத்ரியின் யோசனை பற்றி தனியே கூறத் தேவையில்லை.

ஒரு வழியாக புடவை கடை முடிந்து, நகைக் கடைக்கு நகர்ந்தார்கள். பர்வதம் அவர்கள் பக்கத்துத் தாலியை அடையாளம் காட்ட தாலி, அதில் கோர்க்க என்று பத்து நிமிடத்தில் வேலை முடிந்தது.

மாலினி அதற்குள் அவள் ஏற்கனவே ராகவனுடன் சென்று தேர்ந்தெடுத்திருந்த தாலி செயினை எடுத்து வைக்க, மறுபடியும் யாருக்கும் வேலையில்லை. வெள்ளைக் கல்லில் அப்போதைய ஃபாஷனாக சின்ன மோப்புடன் இருந்தது.

“கல்லு விழுந்துடப் போகுதுமா, தினப்படி போடறதுல ?”, என்று பர்வதம்மா அதற்கும் ஒரு கருத்து சொல்ல, கடைகாரரே,  “செய்யற எங்களுக்கும் தெரியுமேமா. அப்படில்லாம் விழுகாதபடிதான் செஞ்சிருக்கோம். அப்படியே விழுந்தாலும் இங்க கொண்டுவந்தா நாங்களே ஃப்ரீயா சரி செய்து தருவோம்.”, என்றதும் பேச மேலே எதுவும் இல்லை.

பில் போட மாலினியும் ராகவனும் போக, அங்கிருந்த சகுந்தலா,  “மச்சானுக்கு மோதிரம் போடணுமே. அது எப்ப எடுக்கப்போறீங்க சம்மந்தி ?” , என்று கேட்க, பர்வதம்மா முழித்தார்.

“அண்ணா இன்னும் அது பத்தி ஒண்ணும் சொல்லலங்க.”, என்று காயத்ரி சமாளிக்க.

“எங்க பக்கம் அதுவும் பார்ப்பாங்க. புடவையே எப்படி வருமோ தெரியலை. மோதிரமாவது தெறிப்பா இருக்க மாதிரி ஒரு முக்கால் பவுனாவது வாங்கிடுங்க. எங்க அக்கா பொண்ணுக்கும், தம்பியில்லைன்னு மாப்பிள்ளை தோழனா அஸ்விந்தான்  நின்னான். பொண்ணு வீட்ல அந்த அளவுலதான் செஞ்சாங்க. என் அக்கா கண்டிப்பா கேப்பா. எவ்வளவு லட்சம் போட்டு நாங்க கல்யாணம் செஞ்சாலும், மாப்பிள்ளை வீட்ல செய்யறதுலதான் எங்க கௌரவம் இருக்கு.”, கண்டிஷனாய் சொல்லும் சகுந்தலாவிடம் ஒன்றும் சொல்ல முடியாமல்,

“என் பிள்ளை கிட்ட சொல்றேன் சம்மந்தி.”, என்று அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் பர்வதம்.

சிரித்தபடி இவர்களை அழைத்துச் செல்ல வந்த ராகவனும் மாலினியும் கண்டது முழித்துக்கொண்டிருக்கும்  பர்வதம், காயத்ரியையும், கெத்தாய் நின்று கொண்டிருந்த சகுந்தலாவையும்தான்.

சற்று தொலைவிலேயே பார்த்துவிட, “என்ன, உங்க அம்மா எதோ அரட்டியிருப்பாங்க போல, எங்க வீட்டு டிக்கெட் இரண்டும் பேஸ்த் அடிச்சி நிக்குதுங்க.”, என்று ராகவன் முணுமுணுக்க, மாலினிக்குத்தான் சிரிப்பை அடக்க சிரமமாக இருந்தது.

மாலை காபி சிற்றுண்டி முடித்து மாலினி வீட்டினர் கிளம்ப, ராகவன் வீட்டினரும் ஒரு கால் டாக்சியில் வீடு வந்தனர்.

வந்தவுடன் ஆரம்பித்துவிட்டாள் காயத்ரி.  “அண்ணா, மச்சான் மோதிரம் முக்கால் பவுனுக்குப் போடணுமாம், அந்த அம்மா ஆர்டர் போடுது. வர வர யார் பொண்ணு வீடு, யார் புள்ள வீடுன்னே தெரியலை எனக்கு.”

“முகூர்த்தப் புடவை,  நகை எடுக்கன்னு போய் நாங்க தண்டமாத்தான் நின்னோம். எல்லாம் அவங்களே முடிவு செய்யப் போறாங்கன்னா நாங்க எதுக்கு கூட? அவங்க அப்பா கடைசி  நேரத்துல கழண்டுகிட்ட மாதிரி நாங்களும் நின்னுட்டிருக்கணும்”, காயத்ரி குறை பாடினாள்.

“எங்க, அவங்க அம்மா கூட நம்மாட்டம்தான் வேடிக்கை பார்த்தாங்க. எல்லாம் மாலினி முடிவுதான். அதான் உங்க அண்ணனே சொல்லிட்டானே. எல்லாம் அவ இஷ்டம்னு. இனி எல்லாம் அப்படித்தான். நாமதான் பழகிக்கணும்.”, பர்வதம்மா தன் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு, குழந்தையை தொட்டிலில் போட சென்றதும்தான் ராகவனுக்கு தான் சொன்ன வார்த்தைகளின் வீரியம் தெரிந்தது.

‘ஐயோ…இப்படியாடா வாயை விடுவ, சும்மாவே ஆடறவங்களுக்கு சலங்கையை கட்டிட்டேனே. கூடவே காயத்ரியும் இதான் சாக்குன்னு வேப்பிலை அடிச்சு இன்னும் ஆட வெப்பாளே…’, என்று லேட்டாக மனதுக்குள் புலம்பியபடியே அமர்ந்தான்.

“இதைப் பார், நான் சொல்லியிருந்த பட்ஜெட் நாப்பதாயிரத்துக்குள்ள முடிச்சாளே. அவ்வளவுதான்  என் கணக்கு. கட்டப்போற அவளுக்கு எது வேணுமோ எடுக்கட்டும்னு சொன்னது ஒரு குத்தமா ? நாளைக்கு உனக்கும் அம்மாக்கும் புடவை எடுக்கும் போது உங்க இஷடம்தான ?”, என்று சமாளிக்க,

“பத்தாயிரத்துக்கு ஊசி மணி, பாசிமணி, சமிக்கின்னு கோர்க்கப் போறாளாம் ? காசு அருமையே தெரியலை. இங்க வந்த அப்பறம் இப்படி தாம் தூம்னு செலவு செஞ்சாலும் நீ இப்படியே சொல்லிட்டு இரு. விளங்கிடும். கடனை அடைச்ச மாதிரிதான். இதுல மச்சான் மோதிரத்துக்கு ஆர்டர் போடறா அவ அம்மா.”, பர்வதம் கொதி நிலையில் இருந்தார்.

தலை விண்ணென்று தெறிக்க, “கண்களை அழுத்தித் தேய்த்தவன், எனக்குத் தெரியலைமா. அதுக்கு நான் பட்ஜெட் போடவேயில்லை.”

“ஏன், எங்க மாமியார் வீட்லையும் உங்களுக்கு அரை பவுன்ல போட்டாங்களே அண்ணா ?”, காயத்ரி சொல்ல, “அதைத்தான் தலைப் பொங்கலுக்கே மாத்தி மாப்பிள்ளைக்கு போட்டுட்டோம் இல்லையா மா?”, என்றான் ராகவன், ‘நீ ஒன்றும் எங்களுக்கு செய்துவிடவில்லை’ என்று குறிப்பதுபோல.

“சரி அதை விடு. இப்ப என்ன செய்யப்போற ? அவங்க கேட்டதை செய்யப்போறியா?”, பர்வதம்மா அதில் கருத்தாய் இருக்க, “ வேற என்ன செய்யமுடியும் ?”, என்றான் ராகவன் அவர் முகம் பார்த்து.

“முடியாது, நீங்க போடற இருவது பவுனுக்கு அரைப்பவுன் மோதிரமே அதிகம்னு சொல்லு மாலினிகிட்ட. உன்னால முடியலைன்னா நான் பேசறேன். அங்க அந்தம்மாகிட்டயே சொல்லிருப்பேன். நீதான் என்னை கேக்காம எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கியேன்னு சும்மா இருந்தேன்.”, பர்வதம் ஏற்றி விட்டார்.

ராகவனுக்குமே எரிச்சல். இதை மாலினி தன்னிடம் சொல்லாமல் இரு அம்மாக்களும் ஏன் இதைப் பேசினார்கள் என்பது ஒன்று. அடுத்தது, அதென்ன டிமாண்ட் செய்வது போல இன்ன அளவில் செய்தாக வேண்டும் என்று கூறுவது? பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்று என்ன விதத்திலும் தங்கள் பக்கம் சொல்லாத போது இதென்ன புதிதாக முளைக்கிறது என்று கடுப்பாகினான்.மூன்றாவது கூடுதலாக ஒரு இரண்டு கிராம் தங்கத்திற்கு இவர்கள் இந்த பேச்சு பேச வேண்டுமா!

இந்த எரிச்சலின் வடிகால் மாலினியா ?

Advertisement