Advertisement

அண்ணன் கிளம்பியதும், தாயிடம், “இந்தம்மாவே இப்படி ஆடுதே, இதும் பொண்ணு வந்துச்சுன்னா அது எப்படி ஆடுமோ? மா… நம்ம பாடு திண்டாட்டம்தான்.”, என்று ஏற்கனவே கலங்கியிருந்த பர்வதம்மாவின் வயிற்றில் இன்னமும் தன் பங்குக்கு புளியைக் கரைத்தாள்.

கார் போகும்போதே அஸ்வின் மாலினிக்கு நடந்தவற்றை சுருக்கமாக மெசேஜ்களாகத் தட்டிவிட்டான். அந்த பக்கம் பார்த்த அறிகுறி தெரிந்தாலும் பதில் எதுவும் வரவில்லை.

வீட்டுக்கு வந்தவுடனே சகுந்தலா மகளிடம் புகார் படித்தார். “ இந்தா மாலினி, இதெல்லாம் சரிபட்டு வராது. புறா கூண்டு கணக்கா ஒரு வீடு. அடுத்த புயலுக்கு தாங்குமான்னு தெரியாது. ஒரு பெட்ரூம் தானாம். அந்த பையனும் பிடி குடுத்தே பேச மாட்டேங்கறான். அப்படில்லாம் உன்ன கட்டி குடுத்துட முடியாது.”

பதிலே பேசவில்லை மாலினி. தன் தந்தையைப் பார்த்தாள்.

“அம்மா சொல்றதுல நியாயம் இருக்கு மாலினி.  அவர் கிட்ட நான் செலவு செய்து ரூம் போட்டு தரேன்னு சொன்னாலும் முடியாதுங்கறார். இல்லைனா கல்யாணத்தை ஒரு வருஷம் தள்ளி வெக்க சொல்றார். எதுக்கும் வழி விடலைன்னா அவருக்கு உன்னை கல்யாணம் செய்யற இஷ்டம் இருக்கான்னே எனக்கு சந்தேகமா இருக்குமா. நீ வேணா பேசி பார்.”

“இந்நேரம், அவங்க அம்மாவும் கிட்டதட்ட இதைத்தான் சொல்லிகிட்டு இருப்பாங்கன்னு நினைக்கறேன்ப்பா. பொண்ண பெத்தவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளையா வாங்க, இல்லை தனிக்குடித்தனம் போங்கன்னு பேசறாங்க. இந்த வீட்டு பொண்ண கட்டினா நம்ம புள்ளையை மறந்துடணும் போலன்னுதான் பேசுவாங்க.”

“ஓ…அதுக்குள்ள உனக்கு போன் செய்து ஒப்பிச்சிட்டாரா ராகவன்.”, நக்கலாய் கேட்டார் சகுந்தலா.

“இல்லை, இன்னும் பேசலை. நீங்க செஞ்சு வெச்சிட்டு வந்ததுக்கு இனி பேசுவாரான்னு தெரியலை. அஸ்வின் சொன்னான் எனக்கு.”, வரட்டு புன்னகையோடே பதிலளித்தாள் மாலினி.

“ஓ… இவன் போட்டுக்கொடுத்தானா?”, என்று மகனை முறைத்தார் சகுந்தலை.

“அதை விடுமா. மாடியிலயோ, பின்னாடியோ ஒரு ரூம் போட நானே பணம் தரேன். மூணு மாசத்துல தாராளமா கட்டிடலாம். அதைவிட்டு சும்மா வறட்டு கவுரம் பார்க்க வேணாம்னு சொல்லு.”, இளங்கோ முடிவாய் சொல்லிவிட்டு அவர் அறைக்கு எழுந்து சென்றுவிட்டார்.

ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குத் திரும்பிய மாலினி, ராகவனுக்கு ‘ அம்மா பேசினதுக்கு ஐயம் சாரி’, என்று மெசேஜ் போட்டாள்.

பார்த்த ராகவனிடமிருந்து ஒரு சோக ஸ்மைலி மட்டுமே வந்தது.

“உங்ககிட்ட பேசணுமே”, என்று அடுத்து தட்டிவிட, “ நாளைக்கு பேசலாம் மாலினி. இப்ப வேண்டாம். நானே கூப்பிடறேன்.”, என்ற பதிலில் சற்று தள்ளாடித்தான் போனாள்.

இதற்கு மேல் என்ன செய்ய? அமைதியாய் போனை வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

மதியம் இரண்டு மணி போல் அஸ்வின் வந்து எழுப்பினான்.  “அக்கா… வந்து சாப்பிடுவியாம்.”

“ம்ம்.. வரேன். நீ போடா.”, என்று அனுப்பியவள் நிதானமாய் முகம் திருத்தி உணவு மேசைக்கு வந்தாள்.

யாரும் எதுவும் பேசவில்லை. ஏனோ தானோவென்று சாப்பிட்டு முடித்தவள் தன் அறைக்கு திரும்பும் போது, “ராகவன் பேசினாரா மாலினி ?”, என்ற தந்தையின் குரலில் நின்றாள்.

“இல்லைப்பா… நாளைக்குத்தான் பேசணும்.”

“நீ தெளிவா சொல்லிடும்மா. கல்யாணம் தள்ளியும் போட முடியாது. இன்னொரு பெட் ரூம் கட்டாம, கல்யாணமும் நடக்காது. பணம்தான் ப்ரச்சனைன்னா அதை நான் தரேன்.”, மீண்டும் வலியுறுத்தினார் இளங்கோவன்.

“நமக்காகத்தான் சீக்கிரம் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டார். இப்ப அடுத்த கண்டிஷனை போடறீங்க. அவங்க வீடு, அதோட அமைப்பு எல்லாம் எனக்கு முன்னாடியே சொல்லிருக்கார்ப்பா. எனக்கு அதுல ப்ராப்ளம் இல்லைன்னும்போது, உங்களுக்கு என்ன ?”, பொறுமையை இழுத்து வைத்து பேசினாள்.

“நடைமுறை சிக்கல் நிறைய இருக்குமா. வாழ்க்கையை பார்த்து வந்தவங்க நாங்க. உன் நன்மைக்குத்தான் பார்க்கறோம். அவர்தான் ஈகோ பார்க்கறார்.”, என்ற இளங்கோவனின் பதிலில்,

“புரியுதுபா. ஆனா எனக்கு ராகவனை தெரிஞ்ச வரையில், உங்களுக்கு ரெண்டு சாய்ஸ்தான் இருக்கு. உங்களுக்காக அவர் ஒண்ணு விட்டுக்கொடுத்தார். இப்ப திரும்பவும் அடுத்த விஷயத்துக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார். க்விட் ப்ரோ கோ ப்பா.”, என்றவள் பதில் பேசாமல் அறைக்கு திரும்பிவிட்டாள்.

“என்னதுங்க… என்னமோ கடைசியா சொன்னாளே?”, சகுந்தலா கேட்க,

“ம்ம்ம்…..கான்வென்ட் படிப்பு பேசுது. அவர் ஒரு தரம் விட்டுகுடுத்தா பதிலுக்கு நாம ஒரு விஷயத்துல விட்டுக் குடுக்கணும்னு லத்தீன மொழியில சொல்லிட்டு போறா உன் பொண்ணு.”, எழுந்து அவர்கள் அறைக்கு செல்ல சகுந்தலா பின் சென்றார்.

“ஏன்..தமிழ் ல சொன்னா ஆகாதாம்மா ? இப்பவே அவங்க பக்கம்தான் பேசறா. இன்னும் கட்டி குடுத்தா அவ்வளவுதான் போல?”, சகுந்தலா நொடிக்கவும்.

“இதுல ராகவன் எடுக்கறதுதான் முடிவுன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறா. “, விளக்கினார் மனைவிக்கு.

“அப்ப முடியாதுன்னு சொல்லுவோம். நம்மை மீறியா கல்யாணம் செய்வா?”

“ஒன்னும் செய்யமாட்டா. நீதான் எல்லாருக்கும் பதில் சொல்லணும். வேற யாரையும் கட்டிக்க மாட்டா. ஒரு வருஷம் கழிச்சு, அவன் கடனை அடைச்சி, ரூமை கட்டின அப்பறம் கல்யாணம் செய்யுங்கன்னு வந்து நிப்பா.” , என்றார் மகளை அறிந்த இளங்கோவன்.

“முடியாதுன்னு சொல்லுவோம். நாம் சொல்றதை கேட்காத போது நாம மட்டும் எப்படிங்க சம்மதிப்போம்?”, கண்ணில் லேசாய் கண்ணீர் தட்டியது சகுந்தலாவிற்கு.

“கல்யாணமே செய்யாம இருப்பா. கைய காலை கட்டியா சம்மதிக்க வெக்க முடியும் ?”

“இதென்ன அநியாயம். அந்த துரைசாமி குடும்பத்துல கட்டியிருந்தா கடலாட்டம் வீடு. அதுக்கு குடுத்து வெக்கலியே இவளுக்கு. என்ன சொக்கு பொடி போட்டானோ? “, புலம்ப ஆரம்பித்தார்.

“பையனை பொறுத்த வரை நல்லவந்தான். அவன் இருக்கற பதவிக்கு, தலையசைச்சாலே காசு புரளும். இருந்தும் கை சுத்தம்.”

“ஆமா.. இந்த காலத்துல கை சுத்தம் இருந்தா போறுமா? வாழ்க்கையை ஓட்ட பணம்தானே வேணும்?”, அங்கலாய்க்கும் மனைவியை பார்த்தவர்,

“ஹ்ம்ம்… அப்படி வாங்கிப்போடறவனா இருந்தா, மாலினி திரும்பிகூட அவனை பார்த்திருக்கமாட்டா. அவன் பொறுப்பு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம இருக்கறதுன்னு இதையெல்லாம் பார்த்துதான் உன் பொண்ணு இவனை செலக்ட் செஞ்சிருக்கா.”, மீண்டும் நிரூபித்தார் மாலினியின் குணம் அத்துப்படியாக தெரியும் என்று.

“நீங்களே வக்காலத்து வாங்கறீங்களா உங்க பொண்ணுக்கு? “ என்று கணவனை காய்ந்தவர், அவர் பதில் பேச விடாமல், “அருமை பெருமையா பொண்ணை வளர்த்ததுக்கு, இப்படியா காடிப்பானையில விழறேன்னு நிப்பா?  பண கஷ்டமே தெரியாம இருக்கா. ஆசைபட்டதை நினைச்ச நேரம் வாங்கி அவ இஷ்டத்துக்கு சுத்தி வருவா. இதெல்லாம் அங்க முடியுமா? அந்த குடும்பமே இவங்க சம்பளத்தை நம்பி உட்கார்ந்திருக்கு. எண்ணி எண்ணி செலவு பண்ற கஷ்டம் தெரிஞ்சா தாங்குவாளா? அந்த புறா கூண்டுல அத்தனை பேரோட குடுத்தனம் செய்ய முடியுமாங்க ? என்னவோ காதல் மண்ணாங்கட்டின்னு வசனம் பேசுதுங்க. வாழ்க்கைக்கு உதவுமா இதெல்லாம்? ”, சகுந்தலா ஒரு தாயாய் புலம்புவதில் இளங்கோவனுக்கு மே கஷ்டமாக இருந்தது. மனைவி சொல்வதெல்லாம் நிஜம். ஆனால் மாலினி ஒரு விஷயம் யோசிக்கும் வரைதான் பேசமுடியும். முடிவெடுத்தால் செயல்படுத்தியே தீருவாள். முடிவும் ஆழ்ந்து யோசித்துத்தான் எடுப்பாள். ‘ச்சே… இந்த பையனுக்கு கொஞ்சம் சொத்து பத்து இருந்திருக்கலாம்.’, என்றுதான் அவர் எண்ணம்.

சகுந்தலா புலம்புவதை நிறுத்தினபாடில்லை. “என்ன இல்லை அந்த லோகேஷ் பையனுக்கு? அவ்வளவு சொத்து. ஒரே பையன், பார்க்கவும் லட்சணமா இருக்கான். அமெரிக்கா வாழ்க்கை. வர சீதேவியை விட்டுட்டு இந்த குட்டையில விழணும்னு நிக்கறாளே…..அட்டையா உறியப்போறாங்க. ஆசைக்கு வேலைக்கு போறேன்னது போய் இப்ப காசுக்கு ஓடணும். புள்ள பெத்தாக்கூட அந்தம்மா நான் பார்த்துக்கறேன் நீ வேலைக்குப் போன்னுதான் சொல்லப்போகுது. இப்படி நாயா பேயா அலையறதுக்கா என் பொண்ணை கட்டி குடுக்கணும் இந்த வீட்ல?”

“சக்கு. போறும் நிறுத்து. அவ தலையெழுத்து அப்படின்னா ஒன்னும் செய்ய முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டா நம்மால ஆனது பெத்த பாவத்துக்கு குடுத்து உதவ வேண்டியதுதான். அதுவும் உன் பொண்ணு வந்து கேட்டா. அப்பத்தான் பெத்தவங்க அருமை தெரியும் இந்த காலத்து பிள்ளைங்களுக்கு. கொஞ்ச நேரம் கம்முனு படு.”, எரிச்சலாய் மனைவியின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், தானும் படுத்தார்.

வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னரே தோற்றுப்போவாள் என்பதைப் போல பேசிக்கொண்டிருக்கும் பெற்றோரின் புலம்பல் நல்ல வேளையாக மாலினியின் காதில் விழவில்லை. மொத்தத்தில் மாலினியின் மீதோ அல்லது அவளின் தேர்வின் மீதோ நம்பிக்கையில்லை. நல்ல மாப்பிள்ளை, பெண்ணைப் பார்த்துக்கொள்வான் என்பதெல்லாம் பின் சென்றுவிட்டது. பணமே பிரதானமாகியது அவர்கள் கண்களில்.

ராகவன் வீட்டிலோ, காயத்ரி முன்பே ஓதியது போலவே மாலினியின் அன்னை பேசியிருக்கவும், அடுத்து மாலினியின் குணமும் அவள் தாயினைக் கொண்டே எடை போடப்பட்டது பர்வதம்மாவால். அதற்கு உண்டான அடித்தளத்தை காயத்ரி நன்றாகவே போட்டுக்கொண்டிருந்தாள்.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் தெரியாமலேயே, மாலினி, கல்யாணம் முடிந்தால் போதும் என்ற அளவிலேயே, ராகவனிடம் என்ன சொல்வது என்று  யோசித்துக் கொண்டிருந்தாள்.

Advertisement