Advertisement

அத்தியாயம் – 3
மறு நாள் காலை அலுவலகம் புறப்படும் முன், தாயைப் பார்த்தான் ராகவன். எதாவது சொல்லுவார், குறைந்தது மாலினி போட்டோவாவது கேட்பார் என்று பார்த்தான். ஒன்றும் வராததால், அவனே கேட்டான்.
“நேத்து நான் சொன்னதைப் பத்தி எதுவும் கேட்கணுமாம்மா ?”
“ம்ம்.. நீதான் சொல்லிட்டியேப்பா. உன்னை நம்பி இருக்கோம் நாங்க. நீ எப்ப சொல்றியோ, அப்ப ஒரு பட்டு புடவையை சுத்திகிட்டு வந்து நிக்கறோம்.”, தன் ஆற்றாமையைக் காட்டினார் பர்வதம்.
“மா..  உங்க பயம் எனக்கு புரியுது. அது தேவையில்லாத பயம். மாலினியோட நல்ல குணம் உங்களுக்குத் தெரிய வரும்போது நீங்களே சமாதானமாகிடுவீங்க. இப்ப நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கவலை போகப் போறதில்லை.”
இன்னமும் தெளியாத அவரது முகத்தைப் பார்த்த ராகவன், “ நம்ம குடும்பம், என் பொறுப்பு, இருக்கற கடன் பத்தியெல்லாம் மாலினிக்குத் தெரியும்மா. கடனை சீக்கரமே அடைக்க அவளும் உதவி செய்வா.”, உள்ளுக்குள் கசப்பாய் இருந்தாலும், அவன் தாய் எதைக்கொண்டு அச்சப்படுகிறார் என்று தெரிந்து அதைக் களைய முற்பட்டான்.
“ஓ… எல்லாம் தெரிஞ்சும்  அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு சரின்னிருக்காப்பா ?”, ஆச்சரியமாய்க் கேட்டார்.
“ம்ம்.. மாலினியைப் பிடிச்சிருந்தாலும், என் நிலைமையை யோசிச்சிதான் எதுவும் சொல்லாம இருந்தேன். அவ கிட்டயும்  என் கடன், தங்கையை கரை சேர்த்துட்டாலும், தம்பி இருக்கான்னும் சொன்னேன். அவ என் கூட சேர்ந்து என் சுமையைத் தாங்கறதாத்தான் சொன்னா.  ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பத்தி யோசிக்கலாம்னு இருந்தோம். ஆனா அவ வீட்ல கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கவும், இப்பவே சொல்ல வேண்டியதா போச்சு.”, பொறுமையாக ராகவன் சொல்லவும் கொஞ்சம் தெளிந்தார்.
“நல்ல பொண்ணாத்தான் தெரியுது….”, பர்வதம்மா இழுக்கவும்,
“வீணா குழப்பிக்காதீங்கம்மா. மாலினி தங்கமான பொண்ணு. ஒரு அலட்டல் கிடையாது. இல்லைன்னா எனக்கு பிடிக்குமா யோசிங்க ? விவேக் தொட்டிலுக்கான ஹோட்டலுக்கு இன்னிக்கு சாயந்திரம் போய் பேசி அட்வான்ஸ் குடுத்துடலாம்னு சொல்லிருக்கான். நான் வர லேட்டாகும்.”, அவருக்குத் தேவையானதை சொல்லவும், கொஞ்சம் முகம் மலர்ந்தார் பர்வதம்.
“ஆமாம்ப்பா… இதுல, தொட்டில் வேலையை மறந்துடாத.”
“என் கடமை நான் சரியா செய்வேன்மா. என்ன… வீட்லயே செய்தா ஒரு முப்பதாயிரம் மிச்சமாகியிருக்கும். நீங்களும் காயத்ரியும் முடியாதுன்னு சொல்லிட்டீங்க. இப்ப நகைக்கு இடிக்குது.”, ராகவன்  கடைசி முயற்சியாக மீண்டும் ஒரு முறை கேட்க,
“என் வளையல் வேணா குடுத்துடுலாம்டா, ஒன்னரை பவுன் தேரும் . குழந்தைக்கு  மூணு பவுன் போடணும் ராகவா. முதல் பேரன், சிறப்பா செய்யணும். நீ எப்படியாவது மிச்சத்தை ஏற்பாடு செய்.”, பர்வதம்மா முடிவாய் கூறிவிட்டார்.
“உங்க கிட்ட பொன்னுன்னு இருக்கறது அது மட்டும்தானமா.”
“அதுக்கு என்ன செய்ய? அப்பறமா நீ வாங்கி குடு. நான் போட்டுக்கறேன். காயத்ரி செய்முறையில ஒரு குறையும் இருக்கக் கூடாது.
தொட்டில் முடியும் வரை வேறு எதுவும் அவர் மனதில் பதியாது என்ற உண்மை கசந்தாலும் புரிந்ததால் மேலும் பேசாமல் கிளம்பிச் சென்றான் ராகவன்.  அடுத்த இரு வாரமும் தொட்டில் அழைப்பு விடுக்கவும், இவர்கள் இழுத்து வைக்கும் செலவினங்களை சமாளிக்கவுமே சரியாக இருந்தது.  மதிய இடைவேளையின் பொழுது மாலினியுடன் சில நிமிடங்கள் பேசினான்.
இரு பக்கமும் பெற்றோர்களுக்கு விஷயம் தெரிந்து ஒரு மாதிரி சம்மதமும் பெற்றதைக் கூட அவளுடன் கொண்டாட முடியவில்லை என்ற நிலை ராகவனைக் கஷ்டப்படுத்தியது.  மாலினிதான் அதற்கும் சமாதானம் சொன்னாள். விழா முடிந்ததும்  போகலாம் என்று பேசிக்கொண்டார்கள்.
ஒரு வழியாக தொட்டில் விழா முடிந்தது.  அவர்கள் கேட்டதையெல்லாம் ராகவன் செய்ததில் அம்மாவிற்கும் தங்கைக்கும் பரம திருப்தி.  விழா அன்று காலையில் ராகவன் மாலினி பற்றி காயத்ரியின் கணவன் ரகுவரனுக்கும் அவன் பெற்றோருக்கும் தெரிவித்தான். ரகுவரனுக்கு ராகவன் காதலிப்பதே ஆச்சரியம். அவர்களும் பெண் பார்க்க வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். ரகுவரனின் பெற்றோர் அஷ்டமி, நவமி கழித்து இவர்கள் தேர்ந்தெடுத்த நாள் வரை சென்னையில் இருக்க முடியாதென்பதால், ரகுவரன் மட்டும் இருந்து வருவதாய் முடிவு செய்யப்பட்டது.
இரு அத்தை வீட்டையும் அழைக்க பர்வதம்மா சொல்லவும், ராகவனுக்கு முதலிலேயே அவர்களை அழைத்துச் செல்ல விருப்பமில்லை.
“வேணாம்மா. அங்க வெச்சு எதுவும் சொன்னாங்கன்னா நல்லாயிருக்காது. முதல் தடவை நம்ம மட்டும் போவோம். அப்பறம் சொல்லிக்கலாம்.”, என்று கூறிவிட்டான்.
அவன் அன்னை, தங்கை பற்றி நன்கு அறிந்தவன்,
“அங்க வெச்சு பொண்ணுக்கு என்ன செய்வீங்க, இது போடுங்க, அது செய்யுங்கனு எதுவும் நீங்க ரெண்டு பேரும் சொல்லக்கூடாது. அவங்க பொண்ணுக்கு என்னவோ செய்யட்டும். நாம  அஞ்சு பவுன்ல தாலிக்கொடி போடுவோம்னு சொல்லுங்க. “
“அஞ்சு பவுனாடா ? காசுக்கு என்ன செய்வ?  காயத்ரிக்கு மூணு பவுன் செய்யவே இல்லைனு என் வளையலை மாத்துனோம்.”, பர்வதம்மா வளையல் போன சோகத்தை இடிக்க,
“வீடு மேல இன்னும் கொஞ்சம் கடன் வாங்கணும். தொட்டிலுக்கு விவேக்குக்கு அம்பாதாயிரம் திரும்ப குடுக்கணும். கூட கல்யாண செலவுக்கும் சேர்த்து வாங்கலாம்னு இருக்கேன்.பொண்ணுக்கு நகையும், புடவையும் நம்ம செலவு. மத்தபடி கல்யாண செலவு எல்லாம் மாலினி அப்பாவே செய்யறார். பத்திரிக்கை, நமக்கு துணி மணி, பொண்ணுக்கு சீர் தட்டு, போக்குவரத்து செலவு மட்டும்தான் நம்மது.”, விலாவாரியாகவே விளக்கினான்.
“ஓ…அவ்வளவு தூரம் பேசியாச்சா? சரிப்பா. நீ சொலறது போலவே இருக்கோம்.”, காயத்ரியைப் பார்த்தபடி ராகவனுக்கு சாதகமாய் பேசினார்.
வெள்ளிக்கிழமை விடுப்பெடுத்திருந்தாள் மாலினி.  மாலை ஐந்து மணி போல் குடும்பத்துடன் ராகவன் வருவதாக இருந்தது. ராகவன் வீட்டினர் மட்டும் வருவதால், இவர்களும் வேறு யாரையும் அழைக்கவில்லை.
சகுந்தலா, ஸ்வீட் காரம் எல்லாம் கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்றுவிட்டார்.  மாலினிக்கு மனது கேட்க்கவில்லை. ‘மினி இட்லியும் , சாம்பார் சட்னியும் வீட்டில் செய்யலாம்மா’, என்று முக்கால்வாசி வேலை அவளே அதற்கு செய்தாள்.
மெல்லிய கரையிட்ட அடர் நீல பட்டுப்புடவை, எளிமையான நகைகளுடன் மாலினி அழகாய் இருந்தாள்.  மனதின் மகிழ்ச்சியோடு, நேற்று செய்து வந்திருந்த ஃபேஷியல் சேர்ந்து மேலும் பொலிவேற்ற, மிதமான மேக்கப்பிலேயே ஜொலித்தாள்.
ஐந்து மணி போல ராகவன் தன் குடும்பத்துடன் நண்பன் விவேக்கின் காரில் வந்து இறங்கினான். கேட் வரை வந்து வரவேற்றான் மாலினியின் தம்பி அஷ்வின். இதுவும் மாலினியின் ஏற்பாடு. அவள் பெற்றோர் மாடியிலிருந்து இறங்க மாட்டார்கள் என்று கணித்து முன்பே அஷ்வினிடம் சொல்லியிருந்தாள்.
அவர்களை வரவேற்று மாடிக்கு அழைத்துச் செல்ல, மாலினியின் தந்தை இளங்கோவன் வரவேற்று தன்னையும் தன் மனைவியையும் அறிமுகம் செய்து, அவர்களைஅமரச் சொன்னார். ராகவன் தன் குடும்பத்தை அறிமுகம் செய்ய சம்பரதாய விசாரிப்புகள் நடந்தது. அஷ்வின் கண்ணாடி டம்பளர்களில் தண்ணீரைக் கொடுத்தான் அனைவருக்கும்.
இளங்கோவன், “மாலினி, வாம்மா. வந்து நீயும் உட்கார். இதுல என்ன ஃபார்மாலிட்டி.”, என்று அழைக்க, அவள் கிச்சனிலிருந்து வந்து புன்னகையுடன் ஒரு வணக்கம் வைத்தாள் அவள் மாமியாருக்கு. ஐந்து பேர் சோஃபா மூன்று இருக்கை, இரு தனி இருக்கைகள் என்று இருந்தவற்றில், ராகவனும், இளங்கோவனும் தனி இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
அஷ்வின் டைனிங் நாற்காலிகளை அன்னைக்கும் தங்கைக்கும் போட, அதில் அமர்ந்தார்கள். விக்ரமை அழைத்துக்கொண்டு அவனும் ஹாலின் மற்றொரு புறத்திலிருந்த டைனிங் டேபிள் அருகே இருந்த இரு நாற்காலிகளில் அமர்ந்தான்.
மாலினியின் அமைதியான அழகில் காயத்ரியும் பர்வதம்மாவுக்கும் ராகவன் ஏன் விழுந்தான் என்று அவர்கள் அளவில் புரிந்து கொண்டார்கள். மகனுக்கு ஏற்ற ஜோடிதான் என்று மனதில் நினைத்துக்கொண்டார் பர்வதம்.  பொண்ணு பார்க்க வந்திருக்கும் காயத்ரி பெரிய கரையிட்ட பட்டும், கழுத்தில் ஒரு அட்டிகையும் ஆரமும் அணிந்து ஆடம்பரமாக வர, கல்யாணப் பெண் சாதாரணமாக இருந்தது ஏனோ கடுப்பாகியது. சகுந்தலாவுமே சாதாரண ஒரு சில்க் காட்டன் புடவைதான் கட்டியிருந்தார்.
அவள் கிளம்பும் போது கணவன் ‘உன்னை பொண்ணு பார்க்க போறாங்களா ? எதுக்கு இப்படி அள்ளி சாத்திகிட்டு அம்மஞ்சிலையாட்டம் வர?’, என்று நக்கலடித்தான்.  அவள் ரகுவரனைப் பார்க்க, அவன் அதே நக்கல் பார்வையோடே, “நாந்தான் முன்னாடியே சொன்னேனே…”, என்று முணு முணுத்தான்.
‘ம்க்கும், என்னவோ பணக்கார இடம்னு சொல்லவே நாமும் பதவிசா போகலாம்னு நினைச்சா, இதுங்க பஞ்ச வேஷம் போடும்னு நான் கனவா கண்டேன்.’, என்று மனதுக்குள் நொடித்தாள்.
சகுந்தலா, குழந்தையைப் பற்றி விசாரிக்க, கணேஷ் என்று பேர் சூட்டி, பேரனின் சேட்டையை பெருமையாக கூறிக்கொண்டிருந்தார் பர்வதம்.
ராகவனை நோக்கிய இளங்கோவன், “ சாப்பிட்டு பேசலாமா ?”, எனவும், “இல்லை சர், பேசின அப்பறமே சாப்பிடலாம்.”, என்றான்.
“சரி. கல்யாணம் எப்ப வேணும்னாலும் செய்ய நான் ரெடி. நீங்கதான் உங்க வசதியைச் சொல்லணும்.”, என்று பர்வதம்மாவை நோக்கினார் இளங்கோவன்.
“காயத்ரியை சீர் கூட்டி அனுப்பவும் அந்த நேரம் வெக்கலாம்னு இருக்கோங்க. தமிழ் மாசக் கணக்குபடி அஞ்சாம் மாசம் சித்திரையில வருது…”, என்று இழுத்து பர்வதம் ராகவனைப் பார்க்க,
ரகுவரன், “ உங்களுக்குமே மூணு மாசம் வேணும் இல்லீங்களா ? மண்டபம் பார்த்து, எல்லா ஏற்பாடும் செய்ய ?”, என்று ராகவன் சார்பாகப் பேசினான்.
காயத்ரி பர்வதம்மாவை லேசாய் இடித்தாள், ‘பேசு’, என்பதாய்ப் பார்க்க,
ஒரு சங்கடப் பார்வையுடன், “ம்ம்…  வந்துங்க, எங்க குடும்பமே ராகவனை நம்பித்தான் இருக்கு. காயத்ரி கல்யாணத்துக்கு செஞ்சதுல கொஞ்சம் கடனும் இருக்கு. அடுத்து விக்ரமுக்கும் ஒரு வகை செய்யணும்.”
மாலினி ராகவனைப் பார்க்க, அவனும் அவன் தாயை, ‘இப்ப ஏன் இது?’ என்பதுபோலப் பார்த்தான்.
“ம்ம்… தெரியும். இதுகூட தெரியாமலா பெண்ணைக் குடுப்போம். நான் கூட கடனை அடைக்க வரதட்சணையா தரவானதுக்கு உங்க பிள்ளை கோபப் பட்டார்.”, இளங்கோவன் சொல்லவும், இவர் அதை பெருமையாக சொல்கிறாரா இல்லை பிழைக்கத் தெரியவில்லை என்று நினைத்து சொல்கிறாரா என்று புரிந்து கொள்ள முடியவில்லை வந்தவர்களால்.
அவரே தொடர்ந்தார். “ கல்யாண செலவெல்லாம் எங்களுதுமா. சிறப்பா செய்வோம். ராகவன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான்.”.
கல்யாணம் முடிவு செய்தும் ராகவனை மாப்பிள்ளை என்று அழைக்காமல் பேர் சொல்லியே கூப்பிடுவது ரகுவரனுக்கு எரிச்சலூட்டியது.’ஹ்ம்ம்,  அரை மனசா சம்மதிக்கவும் இன்னும் தோணலை போல, மாப்பிள்ளைன்னு முறையா கூப்பிட. பார்க்கலாம்.’, என்று அமைதி காத்தான்.
ராகவன், அவன் தாயைப் பார்க்கவும், “ம்ம்… நாங்க பொண்ணுக்குத் தாலி கொடி போடறது வழக்கங்க. அஞ்சு பவுன்ல  போட்டுடறோம். கூரை புடவையும், மாங்கல்யமும் நாங்க எடுத்துடுவோம்.”, என்று பர்வதம்மா சகுந்தலாவைப் பார்த்துக் கூறினார்.
“ஹம்ம்.. உங்க பொண்ணுக்கு நீங்க செஞ்ச மாதிரி நாங்களும் மாலினிக்கு செஞ்சிடறோம். பவுன் என்ன ஒரு இருவது போட்டீங்களா ?”, லேசான ஒரு இளப்பம் இருந்ததோ குரலில்? மாலினி தன் தாயைப் பார்க்க, அவரோ காயத்ரியைப் பார்த்திருந்தார்.
“ம்ம்.. ஆமாம். மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன்ல செயின் போட்டாங்க அண்ணா.”, காயத்ரி சொல்லவும் ரகுவரனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம்போல இருந்தது.’ அந்தம்மாவே இதெல்லாம் எங்களுக்கு ஒரு விஷயமா என்ற மிதப்பில் பேசிக்கொண்டிருக்க, இந்த பக்கி இரண்டு பவுனுக்கு பேசுது.’

Advertisement