Advertisement

வருடம் – 2010

அத்தியாயம் – 2

தேனாம்பேட்டையின் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தான் ராகவன், மாலினியின் தந்தை இளங்கோவனின் வரவை எதிர்னோக்கிக் காத்திருந்தான். கண்டிப்பாக இது ஒரு சுமூகமான சந்திப்பாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி செய்வோம் என்று வந்திருந்தான்.

திங்களன்று  மாலினியிடம் பேசியவன், அவளுக்கு பதில் அவள் தந்தையை தானே பார்த்து பேசுவது பலனைத் தரலாம் என்று யோசித்ததனாலேயே மாலினியைவிட்டு இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தான். மாலினியும் அவள் தந்தையும் வர, எழுந்து நின்றான்.

“அப்பா, இவர்தான் ராகவன்.  ரகு , என் அப்பா இளங்கோவன்.”, என்று எளிதாக அறிமுகப் படலத்தை செய்தாள் மாலினி. புன்னகையுடன், தெளிவாய் கண்களை நோக்கிய பார்வையுடன், ஆளுமையான  ஒரு அழுத்தமான கை குலுக்கலை ராகவனிடமிருந்து பெற்றார் இளங்கோவன். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அளந்தவர்கள், அமர்ந்தார்கள்.

மூவரும் காபியை ஆர்டர் கொடுக்கவும், இளங்கோவன் வருங்கால மருமகன் தோற்றத்தில் திருப்தியுற்றார். வாட்டசாட்டமான இளைஞன,  மா நிறம். அளவாக இருந்த மீசைக்கடியிலிருந்து உதடுகள் புகைப்பழக்கம் இல்லையென்று சான்றளித்தது. உயரம் ஆறடிக்கு சற்று குறைவாக இருக்கலாம். இளவயது வழுக்கையை அனுபவித்தவருக்கு, ராகவனின் அடர்ந்த முடி லேசான ஒரு பொறாமையை தந்தது.

ஒரு  சிறிய மௌனம் நிலவியது. அதை கலைத்தார் இளங்கோவன், “சொல்லுங்க ராகவன். மாலினி, நீங்க என்னை சந்திக்க விருப்பப்பட்டீங்கன்னு சொன்னா. நான் உங்க ஃபேமிலியோடவே வீட்டுக்கு வர சொல்லியிருந்தேன்.”

“ம்..ஆமாம் சர்.  நீங்க என்னை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டீங்கன்னும் மாலினி சொன்னா. உங்களுக்கு வேற எதுவும் தெரியணும்னா கேளுங்க. நானே சொல்றேன்.”, அவர் பந்தை தடுத்தாடினான்.

“பொண்ணு திடீர்னு வந்து எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்குன்னு சொன்னா, விசாரிக்கணும்தானே. “, இளங்கோவன் கேட்கவும், தன்மையாகவே தலையசைத்தான் ராகவன்.

“எங்களுக்கு சமமான சொத்துபத்து இல்லைங்கறதுதான் ஒரு குறை. மத்தபடி உங்களைப்பத்தியோ, உங்க குடும்பத்தைபத்தியோ எந்த குறையும் இல்லை ராகவன்.” அவர் கூறுவதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்ற  நிதர்சனம் தெரிந்தவன், பதில் பேசாமல் மேலே சொல்லுங்கள் என்பதுபோல பார்த்திருந்தான்.

“மகளை சொகுசா வளர்த்துட்டேன். அதனாலதான் கஷ்டமா இருக்கு. உங்க  நிலைமை அவளுக்கும் தெரிஞ்சுதான் இருக்கு. அதெல்லாம் யோசிச்சுதான் சொல்றேன்பாங்கறா.”, அவர் மேலும் தொடரும் முன்,

“மாலினியை சந்தோஷமா பார்த்துக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சர். அதனால்தான் நான் ஒரு வருஷம் டைம் கேட்டதே. என் தங்கைக்கான பிரசவம், தொட்டில் செலவு முடிஞ்சுதுன்னா, என்னால என் கமிட்மெண்ட்ஸ் மேஜரா முடிச்சு, எங்க வாழ்க்கையை பார்க்கமுடியும்.”,  அழகாய் அவன் சொல்ல வந்ததை கோர்த்துவிட்டான் ராகவன்.

“ அலை ஓஞ்சு குளிக்கலாம்னு சொலறதுதான், கமிட்மெண்ட்ஸ் முடிஞ்சு நீங்க வாழ்க்கை தொடங்கறேன்னு சொல்ற து. ஒன்னு முடிஞ்சு அடுத்ததுன்னு  எதாவது வந்துகிட்டுதான் இருக்கும். என் அனுபவத்தில சொல்றேன் ராகவன். அடுத்து உங்களுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் காலேஜ் செலவு இருக்கு. இன்னும் திடீர் செலவு எப்ப வேணா தாக்கும். நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு.”, மறுத்து சொல்ல முடியாதபடி பேசினார் இளங்கோவன்.

“உங்களுக்கு வரதட்சணையா நான் தரேன். அதை வெச்சு உங்க கமிட்மெண்ட்ஸ் முடியும்னா, கல்யாணத்தை தள்ளிப்போட வேண்டாம்தான?”, கொஞ்சம் இளக்காரமான தொனியில் வந்தது இளங்கோவனின் குரல்.

சுர்ரென்று கோபம் ஏறினாலும்,  அவரிடம் நேரிடையாக பதிலளிக்காமல், “ஏன் மாலினி, எனக்கு இந்த வரதட்சணையெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்தானே? என் தங்கைக்கே அப்படிப்பட்ட வரனைத்தான் பார்த்தேன். எனக்கா வாங்கிக்கப்போறேன்?”, என்று மாலினியைப் பார்க்க, அவள் அவஸ்தையாகப் பார்த்தாள்.

“என் கடன், என் உழைப்புல நாந்தான் சர் தீர்க்கணும். உங்க சம்பாத்தியத்தை வாங்கி அதை செய்யக்கூடாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தா, என் மேஜைக்கு நான் கேட்காமலேயே நிறைய வரும். கை சுத்தம், மெய் சுத்தம்னு ஒரு கொள்கையோட இருக்கேன் சர். அதனாலதான் உங்ககிட்ட டைம் கேட்டு நிக்கறேன்.”, கொஞ்சம் கண்டிப்புடன் அவர் கண் பார்த்து கூறினான்.

இந்த காலத்தில் இப்படியான கொள்கைகள்தான் அவன் தோற்றத்தைவிட, மகளை கவர்ந்திருக்க வேண்டும். இளங்கோவனுக்கும் பிடித்தது ஆனால் இந்தக் காலத்தில் கொள்கைகள் சாப்பாடு போடுவதில்லையே. மேலும் அவன் கேட்ட ஒரு வருடம் சாத்தியமில்லை என்று பட்டது. விருப்பம் என்றாகிவிட்டது, ஆட்சேபணை இல்லாவிடில், திருமணத்தை சீக்கிரமே முடித்துவிடுவது உசிதம். இல்லையென்றால் ஊருக்கு அவலாகிவிடுவாள் தன் பெண் என்று நினைத்தார்.

“உங்க வீட்ல சொல்லிட்டீங்களா ராகவன்? அவங்களுக்கு சம்மதமா?”, அடுத்த கணையை தொடுத்தார்.

“இன்னும் இல்லை சர். அம்மா தடை எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்பா போனதுலர்ந்து, காயத்ரி கல்யாணம் பத்தின பயத்துலயே இருந்தாங்க. நான் செய்வேன்னு தெரிஞ்சாலும், எப்படி கரையேத்துவோம்ன்ற கவலை. இப்ப தங்கை கல்யாணம், அடுத்து பிரசவம் முடிஞ்சு அவளையும் குழந்தையையும் நல்லபடியா அவ வீட்டுக்கு அனுப்பிட்டா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிருவாங்க. நானும் என் விஷயத்தைப் பேச முடியும்.”,  ராகவன் சொல்லவும் அதையே அவனுக்கு எதிராக திருப்பினார்.

“பொண்ணை பெத்த எல்லா அப்பா அம்மாக்கும் இருக்குற கவலைதான் ராகவன். வாழ்க்கை எப்ப தடம் மாறும்னு தெரியாது.  இப்பவே இருவத்தி நாலு நடக்குது மாலினிக்கு. நாங்களும் அவ கல்யாணம், குழந்தைன்னு நேரா நேரத்துக்கு முடிக்கணும்னுதான் இருக்கோம்.”

இப்படியாக சுற்றி சுற்றி வந்தாலும், அவர் நிலையிலிருந்து விலகுவதாக இல்லையென்று புரிந்தது ராகவனுக்கு.

“சரி சர். தங்கை டெலிவரி முடியட்டும். வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தப்பறம் நான் எங்கம்மாகிட்ட பேசறேன். முப்பதுக்கு  தொட்டில் விசேஷம் முடியவும் நீங்க சொன்னபடி நான் எங்க குடும்பத்தோட உங்க வீட்டுக்கு வந்து பேசறோம்.”, வேறு வழியில்லை என்பது தெரிந்துதான் வந்திருந்தான். மாலினியை இருவருக்கும் இடையில் பந்தாடுவதில் உடன்பாடில்லை ராகவனுக்கு.

அவனைத் தன் வழிக்கு வர வைத்ததில் இளங்கோவனுக்கு கர்வம். ‘என் மகள் முக்கியமென்றால் நான் சொன்னபடி நடக்கணும்.’, என்று நினைத்துக்கொண்டார். அவர் கண்ணில் தெரிந்த கர்வமும் அதற்கான காரணமும் ராகவனுக்குப் புரிந்தது.  மாலினிக்காக பொறுத்துப்போனான். அவன் சரியென்று சொன்னதில் அகமகிழ்ந்துப் போனவள் முகம் பிரகாசமாக இருந்தது. இன்னும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகளை தாண்ட வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தால அந்தப் பிரகாசம் கொஞ்சம் மங்கியிருக்குமோ?

அடுத்து வந்த சில நாட்களிலேயே காயத்ரி ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தாள்.  அடுத்த பத்து நாட்கள் ராகவனுக்கு இறக்கை கட்டிப் பறந்தது. ஒரு வழியாய் தாயும் சேயும் வீடு வந்து சேர்ந்தார்கள், மதுரையிலிருந்து, அவள் பிரசவ நேரத்தில் வந்திருந்த காயத்ரியின் கணவன், மாமனார், மாமியார் கிளம்பினார்கள். வீடு ஒரு நிதானத்திற்கு திரும்பியது. மாலினியை அவள் ஆபீஸ் அருகில் ஒரு காபி ஷாப்பில் அன்று மாலை சந்தித்தான் ராகவன்.

“என்ன, ரொம்ப அலைச்சலா ரகு ?”, அவன் அயர்வைப் பார்த்து வருந்தியபடியே அமர்ந்தாள் மாலினி.

“ம்ம்… குழந்தை நைட்லதான் முழிக்கறான். அம்மாவும் காயத்ரியும் பெட்ரூம்ல இருந்தாலும், நைட்டும் கிட்சனுக்கு போக, பாத்ரூமுக்கு போகன்னு இருக்காங்க. ஹால்ல படுத்திருக்க எனக்கும் விக்ரமுக்கும் சேர்த்து தூக்கம் போகுது.”, மெலிதான ஒரு புன்னகையுடன் கூறினான்.

“ஒரே பெட் ரூம்தானா ரகு வீட்ல ?”

“ம்ம்… சின்ன வீடுதான் மாலினி. அப்ப கவர்ண்மென்ட் அலாட்மெண்ட்ல அப்பா வாங்கினது.  ஹால், பெட்ரூம், கிட்சன், பின்னாடி பாத்ரூம் டாய்லெட். மிச்சம் ஓப்பன் இடத்தை கவர்  செஞ்சு ஒரு ரூமாக்கினார் அப்பா. ஆனா அது புழங்கறதுக்கு மட்டும்தான். “

கொஞ்சம் முழித்தவள், “அப்ப நமக்கு கல்யாணமானா ?”, என்று கேட்க, புன்னகை விரிந்தது ராகவன் முகத்தில்.

“ம்ம்… நம்ம கல்யாணம் காயத்ரியை அவ மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டுதான். அப்ப, பெட்ரூம் நமக்கு. அம்மாவும் விக்ரமும் ஹால்ல.”

“ஓஹ்..”, அவள் முகம் இன்னும் தெளியாதது கண்டு, “ வீடு இடிச்சிட்டு புதுசா கட்டணும்னு நினைச்சிருக்கேன் மாலினி. ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். வீட்டு மேல இருக்க கடனெல்லாம் முடிச்சிட்டா. ஹௌசிங் லோன் போட்டு  பெருசா கட்டிக்கலாம்.”, என்றான்.

அவன் பேச்சில் நம்பிக்கை பெற்றவளாக சம்மதமாய் தலையசைத்தாள் மாலினி.  அவள் பெற்றோர் பார்க்கும்போது இது ஏற்படுத்தும் விளைவுகள் தெரிந்திருந்தால் … ஹ தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும்? வருவதை தடுத்திருக்கமுடியாது.

பேச்சு மெல்ல ராகவன் வீட்டில் பேசுவது பற்றி திரும்பியது.

“ம்ம்.. இன்னிக்கு பேசலாம்னு இருக்கேன் மாலினி. திடீர்னு எப்படி ஆரம்பிக்கறதுன்னுதான் யோசிக்கறேன்.”

“எங்க வீட்ல கல்யாண பேச்சு ஆரம்பிக்கவும், நான் சொன்னேன். இப்ப உங்க அம்மா ஏன் கல்யாணம் பேசப் போறாங்க?”, சிரித்தாள் மாலினி.

“அதைப் பத்தின யோசனையே இல்லை அவங்களுக்கு. எனக்கும்  இருவத்தியெட்டுதான ஆகுது. சொன்னா கண்டிப்பா ஷாக் ஆவாங்க. புலம்புவாங்க.”, சங்கடமாய் உணர்கிறான் என்பது அப்பட்டமாய் தெரிந்தது முகத்தில்.

“என்னைக்கானாலும் ஃபேஸ் பண்ணனும்தானே ரகு.  எங்க வீட்லயும்தான். அம்மா அத்தனை கேள்வி, குறுக்கு விசாரணை லாயர் கணக்கா செய்தாங்க. “, அந்த ஞாபகத்தில் முகம் சுழித்து தோளைக் குலுக்கினாள். அதுவும் அந்த உருப்படாத அமெரிக்கா வரன் வந்ததும்,  இன்னுமே புலம்பறாங்கதான். என்ன செய்ய ? நம்ம சந்தோஷமா வாழந்தோம்னா, அதைப் பார்த்து சரியாவாங்க.”, நம்பிக்கையாக பேசினாள்.

இவன் அம்மா, தங்கையைப் பற்றித் தெரிந்தவனோ, எவ்வளவு  தூரம் இது சாத்தியம் என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

“ரகு…என்ன, ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கீங்களா?”, சொடக்கிட்டு கேட்கவும், “ம்ம்.. நம்ம காரியம் நடக்க சில பிடிக்காத விஷயம் செய்யப்போறேன். அதுதான் உங்கிட்ட சொல்லிட்டு செஞ்சாலாவது குற்ற உணர்ச்சி கம்மியாகுதான்னு பார்க்கணும்.”, என்றான் பெருமூச்செறிந்தபடி.

“அச்சோ…பீடிகை பலமா இருக்கே? என்ன உங்க அம்மா, தங்கைக்கு லஞ்சம் குடுக்கப்போறீங்களா?”, வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“ம்ம்.. கிட்டதட்ட…”, என்ரு அவன் ஒப்புதலாய் தலையாட்ட, ஆச்சரியமடைந்தாள் மாலினி.

“ரகு… நீங்களா ? நெஜமாவா?”

“உன் வேலை, உன் சம்பளம், உங்க வீட்டு வசதி… இதெல்லாம் சொல்லித்தான் அவங்களை கன்வின்ஸ் செய்யணும் மாலினி. உன் குணம், திறமை, எனக்கு உன்னை பிடிச்சிருக்கறதெல்லாம் அவங்களுக்கு ரெண்டாம் பட்சம்.  தம்பி தங்கைக்கு செய்ய நீ சம்மதிக்கற. உன் சம்பளமும் வந்தால் கடன் சீக்கிரம் அடையும்னு சொல்லித்தான் அவங்களை உடனே கல்யாணம்னு ஒத்துக்க வைக்கணும்.”, எப்போதும் அவள் கண் பார்த்து பேசுபவன் முடிக்கும் தருவாயில் பார்வையை தழைத்தான்.

“ரகு, நமக்குள்ள அன்டர்ஸ்டான்டிங் இருந்துச்சுன்னா போறும். நீங்க எப்படி சொல்லி அவங்க சம்மதம் வாங்கணுமோ வாங்குங்க. என்னைக் கேட்டா நானும் ஆமாம்னு சொல்றேன். இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. அண்ட் இது பொய் இல்லை. உங்க தம்பி, தங்கைக்கான பொறுப்பு என்னையும் சேர்ந்ததுதான். என் சம்பாத்தியமும் குடும்பத்துக்குத்தான்.”, அவன் தோள் தட்டி ஆதரவாய்ப் பேசினாள் மாலினி. பாவம், இவள் சம்பளமெல்லாம் இளசுகள் கையில் சிக்கிய ஃப்ரீ டேட்டா பாக் போலக் கரையும்போதும் இப்படித்தான் இருப்பாளா பார்க்கலாம்.

வீடு வந்த ராகவன், இரவு உணவு முடிந்து, எல்லோரும் ஓய்வாக இருக்கும் நேரம் ஆரம்பித்தான்,

“மா… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”

“ஆமாம் ராகவா. நானுமே சொல்ல நினைச்சேன். தொட்டிலுக்கு அவங்க பக்கம் ஒரு அம்பது பேர் வருவாங்களாம். நம்ம பக்கமும் ஒரு அம்பது பேர் சொல்லலாமில்ல ? ஹோட்டல் பார்த்துட்டயா? நகை வேற எடுக்கணும். இன்னும் மூணு வாரம் கூட இல்லைபா.”

அவர் பிடியிலேயே நிற்பது பர்வதம்மாவிற்கு வழக்கம்தான். ஆனாலும் இப்போது அவர் பேச்சில் எரிச்சல் மூண்டது ராகவனுக்கு.

“மா, விவேக் அவனுக்கு தெரிஞ்ச இடத்துல பேசறேன்னு சொல்லிருக்கான். எவ்ளோ காசாகும்னு தெரிஞ்சதுக்கப்பறமா எவ்வளவு பேரை கூப்பிடறதுன்னு முடிவு செய்யலாம். கல்யாணத்தை செஞ்சவன் தொட்டிலை போடமாட்டேனா?”

“கோச்சிக்காதடா. நாள் இல்லையேன்னு சொன்னேன். காயத்ரிக்கு புடவை எடுக்கணும். ப்ளவுஸ் தைக்க குடுக்கணுமே.”

“மா… திரும்பத் திரும்ப நகை வாங்கணும், புடவை வாங்கணும்னே சொல்லிட்டிருக்காதீங்க. நான் சொல்ல வந்ததை செல்ல விடுங்க.”, கடுப்பாகி ராகவன் சொல்லவும்,

“அண்ணனைத்தான் பேச விடேன்மா.”, என்று காயத்ரி அதட்டினாள். அண்ணன் மூட் தெரியாமல் இந்த நேரம் கேட்டு அவன் இல்லை என்று சொல்லிவிடப் போகிறான் என்ற கவலை அவளுக்கு.

“மா. எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு. பேர் மாலினி. அவளைத்தான் கல்யாணம் செஞ்சிக்க விருப்பபடறேன்.”, பட்டென்று விஷயத்திற்கு வந்தான். விட்டால் மறுபடியும் அவன் அன்னை தொட்டிலைப் பற்றி பேச ஆரம்பித்துவிடப்போகிறார் என்ற அச்சத்தில்.

“ராகவா… என்னடா, என் தலையில கல்லப் போடுற ? இந்தக் குடும்பமே உன்னை நம்பித்தான் இருக்கு….” பர்வதம்மா கலங்கிப்போய் கேட்க,

“அம்மா… நான் கல்யாணம் செய்யத்தானமா கேட்கறேன்.  குடும்பத்தை விட்டு போறேன்னா சொல்றேன்.”

“இல்லடா.. இப்பதான உனக்கு இருவத்தியெட்டாகுது. இன்னும் கடனெல்லாம் அடைக்கணும்….. அதுக்குள்ள….”, பர்வதம்மா இழுத்தார்.

“எனக்கும் தெரியும்மா. கடனை அடைக்க அடைக்க செலவு வருது. மாலினி வீட்ல கல்யாணம் முடிக்க அவசரப்படுத்தறாங்க. அவளுக்கும் இருவத்திமூணு முடிஞ்சுது. குழந்தைக்கு தொட்டில் போட்டதும் அவங்க வீட்ல போய் பேசணும்.”

“என்னபா…எல்லாம் பேசி முடிச்சிட்டு எங்ககிட்ட தகவல் சொல்றியா? என் சம்மதம்னு ஒன்னு வேண்டாமா?”, பர்வதம்மாவிற்கு கோவம் வந்தது.

“நீங்க மாலினி பத்தி கேக்கலையேமா ? கல்யாணாத்தைப் பத்திதான பேசினீங்க ? உங்க சம்மதம்  வேணும்னுதான் கேட்கறேன்.”, ராகவனும் பொறுமையாய் விளக்கினான்.

“நீ சொல்லுண்ணா. “, காயத்ரி தன் தாயை நோக்கி கண்ணைக் காட்டியபடியே கேட்டாள்.

அதைப் பார்த்தும் பார்காததுமாய் ராகவன்,” மாலினி அக்கவுண்ட்ஸ்ல வேலை பார்க்கறா. ஒரு ப்ரைவேட் கம்பனி. மாசம் இருபதாயிரம் சம்பளம். அவங்க அப்பா, பாங்க்ல ரீஜனல் மேனேஜர். ஒரு தம்பி, எஞ்சினியரிங் படிக்கறான்.  நம்மைவிட வசதியானவங்க. பெண்ணுக்காகத்தான் அரை மனசா சம்மதிக்கறாங்க. “, என்று ஒப்பித்தான்.

“அவங்க என்ன சாதிடா?  உங்க அத்தைங்க வாயில விழமுடியாதுடா…”, மாச சம்பளம், வசதியான பெண் என்பது கொஞ்சம் பர்வதம்மாவை சமன்படச் செய்ய, அடுத்த கவலையைப் பார்த்தார்.

ராகவன் அவர்களினது உப பிரிவு ஒன்றைச் சொல்லவும், , “ஓ, ம்ம்…சம்மந்தம் செய்யறதுதான்….”

“எப்படிண்ணா தெரியும் அவங்களை?”, காயத்ரி கதை கேட்க, அவளை உறுத்துப் பார்த்த ராகவன், “ம்ம்… மாலினி கம்பனியோட டாக்ஸ் விஷயமா ஆபிஸ் வருவா. அவ ஃப்ரெண்டு என் கூட வேலை பார்க்கறாங்க.”, அவனது தொனியே, இதற்கு மேல் உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதாக இருந்தது. விக்ரம் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தான்.

அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை பர்வதம்மாவிற்கு. நிலவிய அமைதியில் குழந்தை அழுகுரல் கேட்க,

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.  குழந்தையை பாருங்க.”, என்று கிளம்பிவிட்டான் ராகவன்.

பிள்ளையைப் பார்க்க காயத்ரி உள்ளே செல்ல , பின்னோடே சென்றார் பர்வதம்மா.

“என்னடி…இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறான். ஆனா அந்த பொண்ணு சம்பளம் வந்தா சீக்கிரம் கடனை அடைக்கலாம்.”, பர்வதம் பேசவும்,

“ம்க்கும்… பணக்கார வீட்டுப் பொண்ணு. இங்க வந்து வசதி பத்தலைன்னு அண்ணனை தனியாவோ இல்லை அவங்க வீட்டோடவோ அழைச்சிட்டு போயிட்டா என்ன செய்வ?”, காயத்ரி பீதியைக் கிளப்பினாள்.

“என்னடி… அப்படியெல்லாம் விட மாட்டான் ராகவன்.”, சொன்னாலும் அவர் முகத்தில் பயம் அப்பிக்கொண்டது.

“அண்ணன் செய்யாதுதான். உனக்கு வாய்ச்சமாதிரி ஒரு அண்ணி எனக்கு வந்துச்சுன்னா, உன் கதியும், என் கதியும் அதோ கதிதான்.”, சோகமாய் சொன்னாள்.

“அப்ப, நான் சம்மதிக்க முடியாதுன்னு சொல்லிடவாடி ?”, என்று பர்வதம் கேட்க,

“நீயே அவங்களுக்கு வசதியாக்கிடுவ போலவே… நீ மாட்டேன்னா, அண்ணன் பாட்டு கிளம்பிப்போய் கல்யாணம் செய்துக்கும். அப்பறம் பூவ்வாவுக்கு லாட்டரிதான்.”, குழந்தைக்கு பாலைப் புகட்டியபடி தாய்க்கு பயத்தைப் புகட்டினாள்.

கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது பர்வதம்மாவிற்கு.

“யார் கண்ணு பட்டுதோ..என் புள்ளை உன் கல்யாணத்தை எடுத்து நடத்தும்போதே எல்லாருக்கும் பொறாமை. எதோ அதாவது நல்லபடியே முடிச்சிட்டான். தோ… தொட்டிலைப் போட்டா உன் வேலை ஆச்சு.”, தன்னைத்தானே சற்று ஆறுதல் படுத்திக்கொள்ள,

“ஓ… அப்ப மருமக வந்ததும் என்னை கழட்டி விட்டுடுவியா? அப்பறம் எதுவும் செய்ய மாட்டியா? உன்னாட்டம்தான் நானும் இருக்கணுமா ? மாமியார், புருஷன்னு எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கணுமா?”, காயத்ரி கண்ணில் தண்ணி விட, பர்வதம்மா பதறிவிட்டார்.

“அப்படியெல்லாம் விடமாட்டேன்டி.  குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அழக்கூடாதுமா. தன்மையா எடுத்து சொன்னா ராகவன் கேட்டுக்குவான்.”

“என்ன சொல்லப் போற? கல்யாணம் வேண்டாம்னா ? அதான் தொட்டில் போட்டதும் போய் பேசணும்னு சொல்லிட்டுதான போச்சு. அப்ப அவங்ககிட்ட எல்லாம் பேசி முடிச்சிட்டுதான் சொல்லுது.”, கண்ணைத் துடைத்தபடியே முறைத்தாள் காயத்ரி.

“என்னை என்னதான்டி பண்ண சொல்ற?”, யோசிக்கமுடியாமல் புலம்பினார் பர்வதம்.

“நம்ம ஓன்னும் பண்ண முடியாது. பொண்ணு பார்க்க போகும்போது, அண்ணனை நம்பித்தான் நம்ம குடும்பமேன்னு தெளிவா சொல்லிடு. வீடு மேல எவ்வளவு கடன் இருக்குன்னும் சொல்லிடு. அதுக்கும் மேல அவங்க பொண்ணு குடுப்பாங்கன்னு நினைக்கற ? அவங்களா நிறுத்திட்டா, நம்ம மேல பழி வராது. எதுக்கு சொன்னீங்கன்னு அண்ணன் கேட்டாலும், இதெல்லாம் பின்னாடி தெரிய வந்தா ப்ரச்சனையாகிடும். நாம சொல்லறதுதான் முறைன்னு சொல்லி தப்பிச்சிடலாம். புரியுதா. இப்பத்திக்கு, ஒத்துக்கற மாதிரியே பேசு சரியா? அண்ணனை பகைச்சிக்காத.”, தாய்க்கு பாடமெடுத்தாள் மகள்.

இப்படி ஒரு சொந்தத்தை வைத்துக்கொண்டு இந்த கல்யாணம் நடக்குமா? நடக்க விடுவார்களா ? அப்படியே நடந்துவிட்டாலும், மாலினி இதெல்லாம் சமாளிப்பாளா ?

இது எதுவும் தெரியாமல், வீட்டில் சொல்லிவிட்டதை ராகவன் போன் செய்து சொல்லவும், கலர் கலராய் கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருந்தாள் மாலினி.

Advertisement