Advertisement

“அம்மாடி மாலினி, காயத்ரி உன்னை விசேஷத்துக்கு கூப்பிடறதா சொன்னாளே?  கூப்பிட்டு இருந்தாளான்னு பார்த்தியா? நீ வேலையா இருந்திருக்கப்போய், எடுக்காம போயிருக்கப்போகுது.”, மாலினியிடம் கேட்க,
“ஏன் எடுக்கலைன்னா இன்னொரு வாட்டி கூப்பிடக்கூடாதா அத்தை ? இல்லை சாயந்திரம் உங்க போன்ல, இல்லை அவர் போன்ல கூட கூப்பிட்டிருக்கலாமே? ஆனா எனக்கு அவகிட்டருந்து எந்த மிஸ்ட் காலும் இல்லை.”, என்றவள் பாத்திரங்களை ஒழித்து, மறுனாளைக்கு வேண்டியதை தயார் செய்யத் தொடங்கினாள்.
பர்வதம்மாவிற்கு எங்கு சென்று முட்டிக்கொள்ள என்று தெரியவில்லை. இந்த பொண்ணால மொக்ககுலையறதே வேலையா போச்சு. இத்தோட இவ சகவாசத்தை குறைக்கணும். இவ செஞ்சு வெக்கற கூத்துக்கெல்லாம் நான் வாங்கிக்கட்டிக்க எனக்கென்ன தலையெழுத்து, கொஞ்சம் விட்டுபுடிச்சாத்தான் காயத்ரிக்கும் புத்தி வரும் என்று மகளை மனதுக்குள் வறுத்தெடுத்தார்.
அந்த ஞாயிறு பத்து மணி போல திடுதிப்பென்று மாலினியின் பெற்றோர் வந்து இறங்கினார்கள். டிபன் வேலை முடித்து சோஃபாவில் அமர்ந்திருந்தார்கள் ராகவனும் மாலினியும். பர்வதம் கிளம்பிக்கொண்டிருந்தார் பெண்ணிற்கான ஷாப்பிங் செய்ய.
கதவை திறந்த மாலினி, இருவரைப் பார்த்து திகைத்தாலும், “வாங்கப்பா, வாங்கம்மா.”, வரவேற்று  உள்ளே செல்ல, ராகவன் எழுந்து
 “வாங்க, வாங்க சர். உட்காருங்க.”, என்று சொல்லி அவனும் அமர, வாங்கி வந்த ஸ்வீட் காரம் இருந்த பையை மாலினியிடம் கொடுத்தார்.
“எதுக்குமா ? யாரும் சாப்பிடறதே இல்லை.”, என்று சொல்லியபடியே வாங்கி வைத்தவள், “குடிக்க எடுத்துட்டு வரேன்.”, என்று உள்ளே சென்றாள்.
“அம்மா, விக்ரம் இல்லையா ராகவன்? “, இளங்கோவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பர்வதம் ரெடியாகி வர, சம்மந்தியை பார்த்து, “வாங்க வாங்க… மாலினி சொல்லவேயில்லை நீங்க வரப்போறதைப் பத்தி.”, தலை தீபாவளி பிரச்சனை அவருக்கு தெரியாததால், புன்னகை முகமாகவே வரவேற்றார்.
மரியாதை நிமித்தப் விசாரிப்புகள் முடிய,டாங் ஆரஞ்சு ஜூஸ் கலந்து எடுத்து வந்திருந்தாள். பெற்றோருக்கும் ராகவனுக்கும் தந்துவிட்டு அமர்ந்தாள். ஒரு சங்கடமான மவுனம் நிலவ, ராகவன்,
“சர், நீங்க மாலினி கிட்ட பேசிகிட்டு இருங்க.  நானும் அம்மாவும் கடைக்கு போகணும்.  ஒரு ஒன் அவர்ல வந்துடுவோம்.  மதியம் இருந்து சாப்பிட்டு போகலாம்.”, ராகவன் சொல்லவும் மாலினியைப் பார்த்தனர்.
“வேறு எதுவும் வேலை இருக்காப்பா? போற வழியில பார்க்க வந்தீங்களா?”, மாலினி சாப்பிட இருக்கச் சொல்கிறாளா, போக சொல்கிறாளா என்று தெரியாத வகையில் கேட்க, பதில் சொல்ல முடியாது திணறினார்கள்.
“மாலினி… பேசிட்டு சமையல் ஆரம்பி. அம்மா வந்து ஜாயின் பண்ணிக்குவாங்க.”, ராகவன் அழுத்தமாகக் கூறவும், ஒப்புதலாய் தலையசைத்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் மகனும் தாயும் கிளம்பவும், வீட்டில் மாலினியும் அவள் பெற்றோர் மட்டுமே. விக்ரம் வெளியில் சென்றிருந்தான்.
“என்னம்மா நாங்க வந்தது பிடிக்கலையா?”, இளங்கோவன் கேட்க,
“அப்படில்லாம் இல்லையே.”, என்றாள் மாலினி.
“நீ பேசவேயில்லை மாலினி. வீட்டுக்கும் வரலை.”, சகுந்தலா புகார் வாசிக்க,
“வந்தா நீங்க பேசினதையேத்தான் பேசறீங்க. எனக்கு கேட்டு சலிச்சுபோச்சு.”, தோளை குலுக்கினாள்.
“ஏண்டி …ஆதங்கத்துல பேசினா கேட்டுக்கமாட்டியா ?”
“வீட்டுக்கு கூப்பிட்டு வெச்சு அவமானப்படுத்துவீங்க. அப்ப எனக்கு ஆதங்கம் இருக்காதா? நான் பேசவா ? என்ன அப்படி உங்களுக்கு அவமானம் வந்துடுச்சு என்னாலயோ இல்லை அவராலயோ ? கல்யாணமாகி இன்னிக்கு வரைக்கும் அவரை மாப்பிள்ளைன்னு கூப்பிட்டதும் இல்லை. மாப்பிள்ளை மாதிரி நடத்தினதும் இல்லை. எல்லாத்தையும் எனக்காக பொறுத்துகிறார். எதுக்கு அப்படி? எங்களுக்கான மரியாதை இல்லைன்னா ஏன் நான் மட்டும் விட்டுகுடுத்து போகணும்?”, மாலினி சூடாகக் கேட்டாலும் கண்ணீர் கோடுகள் வருவதை தடுக்க முடியவில்லை.
“தப்புதான் மாலினி. அன்னிக்கு கல்யாணத்தைப் பார்த்துட்டு உங்க அம்மா புலம்பினது என்னை ரொம்ப பாதிச்சிது… அது….”
“நீங்க பேசறது உங்களாலயாவது ஒத்துக்க முடியுதாப்பா?”, தந்தையைப் பார்த்து கேட்க, அவர் தலை கவிழ்ந்தார்.
அன்னயைப் பார்த்தவள், “உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் நான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து குடுத்தீங்க. அதுக்கு அப்பறம் எதுக்குமா இப்படி அவமானப் படுத்தறீங்க? அதனால என்ன மாறிடுச்சு? அவர் என் புருஷன் இல்லைன்னு ஆகிடுமா? இல்லை கூரையை பிச்சிகிட்டு காசு கொட்டுமா? நான் என்ன உங்ககிட்ட வந்து அழுதனா? என் புருஷன் சரியில்லை, வரதட்சணை கேக்கறாங்க, அடிக்கறாங்கன்னு ? ஏன் இப்படி அவரை அலட்சியமா பேசணும் ?  இத்தனை மாசமும் அவரோட , அவர் குடும்பத்தோட நல்லாத்தான வாழறேன்? ஏன் அது உங்க கண்ணுக்குத் தெரியலை?
உங்க அமெரிக்கா வரன் அங்க நாலு பொண்ணுங்க கூட கையில சரக்கோட போட்டோ போட்டிருக்கான். அஸ்வின் காமிச்சான். கேட்டா அங்க அதெல்லாம் சாதாரண்ம்மான்னு சொல்லுவீங்க. அவன் ஃப்ரெண்டு என்னை வந்து கட்டி பிடிச்சு ஹலோ சொல்லுவான். அதுக்கும் பழகிக்கோன்னுவீங்க. அதை சாதாரணமா எடுத்துகறவங்க இருக்கலாம் ஆனா அது நான் இல்லை. உங்களுக்கு அவங்க காசு மட்டும்தான் தெரியுது. அதைத் தாண்டி பார்க்கலை. என்னால வருஷத்துக்கு நாலு பட்டு புடவை இல்லாம இருக்க பழகிக்க முடியும், ஆனா அந்த மாதிரி எல்லாம் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. நான் ராகவனை பார்க்கவேயில்லைன்னாலும் அந்த வரன் ரிஜெக்ட்தான். நல்லா மனசுல ஏத்திக்கோங்க.”, பட்டாசாய் படபடத்தாள்.
“தீபாவளியன்னிக்கு நீங்க அப்படி அவமானப் படுத்தி அனுப்பினபோதும், இன்னிக்கு உங்களை இருந்து சாப்பிட்டு போக சொல்றார். அவர் குணம் அப்படி. அந்த வகையில நான் குடுத்துதான் வெச்சிருக்கேன். “, மாலினி  மனதில் இருந்த வருத்ததையெல்லாம் பேசவும் அமைதியானார்கள் இருவரும்.
“ஒன்னு தெளிவா புரிஞ்சிக்கோங்கமா. உங்களுக்கு தோணும்போதெல்லாம் அவரை மட்டம் தட்றதும், என்னை குத்திக் கிழிக்கறதுமா இருந்தா, நாம தள்ளியே நின்னுக்குவோம். உங்க பொண்ணுன்னு நான் வேணா நீங்க பண்றதையெல்லாம் தாங்கிக்கலாம். ஆனா அவர் இதையெல்லாம் உங்ககிட்ட வாங்கிக் கட்டணும்னு அவசியமேயில்லை. அப்படித்தான்னு நினைச்சீங்கன்னா, நாங்க எந்த இடத்துலையும் உறவைக் கொண்டாடிக்கிட்டு வரவேயில்லை. “, இனி இப்படித்தான் என்று வரையறுத்தாள்.
“மாலு… என்னடாம்மா …இப்படி கத்தரிச்சி பேசற ? எங்க மேல பாசமேயில்லையாடி ? “, சகுந்தலா அழுகையோடே வினவ,
“அது நிறைய இருக்கும்மா. ஆனா இப்படி நாம ஒருத்தரை ஒருத்தர் குதறிகிட்டா, இன்னிக்கு இல்லைன்னாலும் கொஞ்ச நாள்ல போயிரும். அதுக்குள்ள உங்களால நானும் என் புருஷனும்கூட சண்டை போட்டுக்க வேண்டியிருக்கும். அவரும் எத்தனை நாள்தான் எனக்காக பொறுத்துப்பார்? ஒரு நாள் வெடிச்சா அதை நாந்தான் தாங்கணும். வேண்டாம். அதெல்லாம் விட இப்ப கொஞ்சம் தள்ளியிருப்போம். உங்க மனசுக்கு எப்ப ஏத்துக்க முடியுதோ, அப்ப பார்த்துக்கலாம்.”, மாலினியின் கண்கள் கண்ணீர் உகுத்தாலும், குரல் பிசிறிதட்டினாலும், வார்த்தைகள் அழுத்தமாகவே வந்தது.
“எங்க வலி நீ ஒரு அம்மாவா இருக்கும்போது புரியும் மாலினி. இப்ப புரியாது.”, இளங்கோவன் சொல்லவும்,
“இருக்கலாம்ப்பா. ஆனா இதுதான் நான் தேந்தெடுத்த வாழ்க்கை. அப்ப அதை நான் வாழ எனக்கு துணையா இருக்கலாம். இல்லை எப்படி வாழறா பார்க்கலாம்னு தள்ளி நிக்கலாம். நீங்க, என்னை தடுக்கி விழ வெக்கப் பார்க்கறீங்க.”
“ஏய்… நாங்க என்னை அப்படி விழ வெச்சிட்டோம்?”, சகுந்தலா பாய,
“நீங்க பேசின பேச்சை கேட்டு, அவர் என்னை அறைஞ்சி,  “உங்க வீட்டாளுங்களுக்கு எப்ப எனக்கான மரியாதை குடுக்கத் தெரியுதோ, அப்ப மன்னிப்பு கேட்டு உன்னை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போகட்டும்னு”, சொல்லிட்டு போயிருக்கணும். ஒரு வகையில அப்பா அவர் கோவத்தை  எதிர்பார்த்தார். ராகவன் நிதானத்தை பார்த்தபிறகாவது புரிஞ்சிக்கோங்க.”, சற்று கர்வத்தோடே பார்த்தாள் மாலினி.
ஆம் அன்று அவன் நிதானமாகப் பேசியது கண்டு சற்று மிரண்டுத்தான் போனார் இளங்கோவன்.
“சரிம்மா. நீ சொன்னபடி, இது நீயா அமைச்சிகிட்ட வாழ்க்கை. ராகவன் வரட்டும். நாங்களே அவரை வீட்டுக்கு அழைக்கிறோம். இனி இந்த மாதிரி ஆகாம பார்த்துக்கறோம்.”, இளங்கோவன் தணிந்து வந்தார். மாலினி சொன்னதுபோலவே தள்ளி நின்றுவிடுவாள்  என்பது தெளிவாகத் தெரிந்தபின் மகளுக்காக வளைந்து கொடுத்தார்.
அவருக்கு டீ.வியைப் போட்டவள், சமையலை ஆரம்பிக்க சகுந்தலா உதவினார். கடைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதற்குள் சமையலை அனேகமாக முடித்திருந்தாள்.
ராகவன் முகம் கழுவி உடை மாற்றி வர, விக்ரம் அறையில் இருந்த டேபிளை போட்டு இருவருக்கும் வாழையிலையில் பறிமாறினாள். நேரடியாக இரு பொரியல், அப்பளம் என்று வைத்தவளிடம்,
“ஸ்வீட் செய்யலையா மாலினி”,  என்று ராகவன் கேட்க,
“ஹா…மறந்துட்டேன்.”, என்று அவர்கள் வாங்கி வந்த மில்க் ஸ்வீட் எடுத்து இலையில் வைத்தாள்.
‘உஷாராகிக்கடா. இதுக்கு மேல கேட்காத. உன் பொண்டாட்டி ஒரு முடிவோடத்தான் இருக்கா’, என்று உள்ளுக்குள் கூறிக்கொண்டவன், அஷ்வின், அவன் படிப்பு என்று பொதுவாக பேச்சை கொண்டு சென்றான்.
கூட்டு, சாம்பார், ரசம், பச்சடி, இரண்டு பொரியல், அப்பளம் என்று நிறைவாகவே இருந்தது. வடை பாயாசம் செய்யாது அவள் எதிர்ப்பைக் காட்டியிருந்தாள். அதை நேரமின்மை என்று கூட எடுத்துக்கொள்ளலாம், ஆனால் பெற்றவருக்கும், கட்டினவனுக்குமா தெரியாது,அது ஏன் இலையில் இல்லை என்பது.
பெண்கள் மூவருமாக அமர்ந்து சாப்பிட்டு முடித்து வரவும், இளங்கோவன், ராகவனிடம், “அன்னிக்குத்தான் சகுந்தலாவுக்கு முடியாமப்போச்சு, என்னன்னவோ நடந்துடுச்சு. மனசுல வெச்சிக்காம மாலினியை அழைச்சிகிட்டு வரணும் ராகவன். “, தன்மையாகக் கேட்டார்.
நேரடி பதிலாக எதுவும் கூறாமல் ,“மாலினி இஷ்டம்தான் சர்.”, மையமாக புன்னகைத்தான் ராகவன்.
அவர்கள் மாலினியைப் பார்க்க, “வரேன்ப்பா. அதான் சொன்னேனே. நீங்க வந்ததுல சந்தோஷம்ப்பா.”, என்று முடித்துவிட்டாள்.
கடையிலேயே பர்வதம் ராகவனிடம் சொல்லி, சகுந்தலாவிற்கு வைத்துக்கொடுக்க ஒரு ரவிக்கைதுணி எடுக்கச் சொல்ல, சில்க் காட்டனில் எடுத்து வந்தார்கள். கூடவே ஒரு கிலோ ஆப்பிளும் வாங்கி வர, மாலினி வெற்றிலைப் பாக்குடன் தன் அம்மாவிற்கு வைத்துக் கொடுத்தாள். பர்வதம் பார்த்திருக்க, “இதெல்லாம் எதுக்கு மாலு ?”, என்றாலும் வாங்கிக்கொண்டார்.
மகள் முற்றிலும் சமாதானம் ஆகவில்லை என்று பெற்றவர்களுக்குப் புரிந்தது. ஓய்வெடுக்க அறையில் வந்தவளை கை வளைவிற்குக் கொண்டு வந்தவன், “என்ன மயிலு, நீ இன்னும் மலையிறங்கலையா ?”, என்றான்.
“நான் இறங்கறேன். நீங்க இறங்கத் தேவையில்லை. இதை அப்படியே கொஞ்சம் மெயின்டெயின் பண்ணுங்க.”, அவள் பெற்றோரிடம் பேசியதை சுருக்கமாகச் சொல்லியவள், “ நான் போக வர இருக்கேன். போறும். என்ன இல்லைன்னு நீங்க இறங்கிப்போகணும்? “,
அவளை அணைத்தவன், “தாங்க்ஸ் மயிலு. இப்பக்கூட அவர் என்னை போனாபோகுதேன்னு கூப்பிட்ட மாதிரிதான் இருந்துச்சு. நீ ஆசைப்பட்டா என்ன செய்யன்னுதான் யோசிச்சேன். “
“எனக்கும் அப்படித்தான் பட்டுது. வேண்டாம். கொஞ்ச நாளைக்கு தள்ளியே நின்னுக்குவோம். “
ஹாலில் பர்வதம் படுத்திருக்க, இவர்கள் காதோடுதான் நான் பேசுவேன் என்ற கதையாகப் பேசிக்கொண்டார்கள். பர்வதம்தான் ரவிக்கை, ஆப்பிள் எல்லாம் வாங்கச் சொன்னார் என்ற செய்தி மாலினிக்கு இனிய அதிர்ச்சி. ராகவனிடம் சொல்லிக்கொள்ளவில்லையென்றாலும், ‘காயத்ரியை கிட்ட சேர்க்காட்டா, அத்தை குணமாத்தான் இருக்காங்க.’, என்ற நினைப்போடே தூங்கிப்போனாள் கணவனின் கை வளைவில்.

Advertisement