Advertisement

இரவு உணவருந்தும் போது, ராகவன் பர்வதம்மாவிடம் ரகுவரன் குழந்தை பிறந்த நாளுக்கு அழைத்ததைப் பற்றி ஆரம்பித்தான்.
“ மா… வார நடுவுல வருதுமா. மூணு நாள் லீவெடுக்கணும். போன சுருக்குல உடனே திரும்பினாக்கூட ரெண்டு நாள் லீவ் வேணும்.   ரகுவரனே சொன்னார், உங்களுக்கெல்லாம் வர கஷ்டம். பார்ட்டி சனிக்கிழமை நைட் வெச்சிக்கலாம்னு சொன்னா காயத்ரி கேட்கவேயில்லை மச்சான். பிறந்த அன்னிக்குத்தான் வெக்கணும்னு  அடம்னு.”
“அது சரி. பிறந்த நாள்னு அன்னிக்கு செய்யத்தான் இஷ்டம் அவளுக்கு. நமக்குன்னு பார்த்தா முடியுமாப்பா ? இந்த வாட்டி ட்ரெயின் டிக்கெட் கிடைக்குமாப்பா ?”
“ம்ம்… ஆனா மாலினிக்கு லீவ் கிடைக்காதுமா. வருஷ கடைசி ஆடிட் நடக்கும். கூட பார்க்கற இன்னொரு பொண்ணும் இந்த மாசத்தோட டெலிவரிக்கு லீவ் எடுக்கறதுனால, இவ இருந்தே ஆகணும்னு சொல்றா. விக்ரமுக்கும் பரீட்சை இருக்கும். அதனால நீங்களும் நானும் மட்டும் போயிட்டு வந்துடுவோம்.  பாண்டியன்ல போடறேன். “
‘ஓ… இதை சொல்ல கூப்பிட்ட மனுஷனைத்தான் தேவையில்லாம பேசி கடுப்படிச்சிட்டோமோ.’, என்று நினைத்த மாலினிக்கு தன் அவசரபுத்தியை நினைத்து அவமானமாக இருந்தது.
“ம்ம்… சரிடா. ஆனா அந்த வெள்ளித் தட்டு… “, பர்வதம்மா இழுத்தார்.
“பார்க்கலாம்மா… எல்லாத்துக்கும் விஜய்கிட்டயும் ரமேஷ்கிட்டயும் போய் நிக்கறதா இருக்கு. போன மாசம்தான் ரமேஷ்கிட்ட வாங்கினதை அடைச்சேன். திரும்ப கடன் குடுடான்னு கேக்க கஷ்டமாயிருக்கு. விஜய் கிட்ட இன்னும் குடுக்கவேண்டியது பாக்கியிருக்கு “, பிடி குடுக்காமலேயே  உணவை முடித்து எழுந்தான் ராகவன்.
மாலினியோ, விக்ரமோ கேட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, எதுவும் பேசவில்லை.
அதற்கு மேலும் வற்புறுத்த பயமாக இருந்தது பர்வதம்மாவிற்கு. மதியம்தான், இருந்த கடுப்பையெல்லாம் காயத்ரியின் மீது கொட்டி அவளை மாமியார், நாத்தனார் முன் ஏன் வெள்ளித் தட்டு கேட்டாய் என்று காய்ச்சி எடுத்துவிட்டிருந்தார்.
பின்பு மாலினி அக்கு வேறு ஆணி வேறாக ராகவன் எதிரில் கேட்டதும், தன்னால் பதில் பேச முடியாது போனது பற்றியும் சொல்லி, அண்ணன், அண்ணியிடம் எப்படி பாசமாய் நடந்து தனக்கு வேண்டியதை சாதிக்க வேண்டும் என்று பாடமெடுத்திருந்தார்.
இரவு மாலினி அறைக்கு வந்தவள், “ரகு… உங்களை ரொம்ப ஹர்ட் செய்திட்டேன். சாரிப்பா.”, அவன் விரல்களை பிடித்து முத்தம் கொடுத்தாள்.
“ஹர்ட் ஆனது இங்க, நீ விரலுக்கு ஒத்தடம் குடுக்கற ?”, என்று இதயத்தைக் காட்டினான்.
“ம்ம்.. என்று அங்கேயும் ஒரு முத்தம் வைத்தவளை தன் புறம் இழுத்தவன், “ஏன் அப்படி பேசின ? சொல்ல வரதைக்கூட கேக்காம ?”, என்று விசாரித்தான்.
“அது, அத்தை பார்ட்டி வெக்கறாங்கன்னு சொன்னதுலேர்ந்தே, நாம் போகணுமேன்னு டென்ஷன். திரும்ப காயத்ரி வீட்டுக்கு போக எனக்கு இஷ்டமில்லைப்பா. அவ இங்க வந்து பேசினா, நான் திரும்ப அடக்கிடுவேன். ஆனா அதை அவ வீட்ல செய்ய முடியாதில்ல ? அவ மாமியாரும் என்னை புகழ்ந்துட்டே இருக்காங்க. அது அவளை இன்னும் ஏத்தி விடுது. இதெல்லாம் புரியாம நீங்களும் வரணும்னு எதிர்பார்க்கறாங்கன்னு கேட்கவும் என் கசப்பை கொட்டிட்டேன்.” , தன் தரப்பை அவன் மார்பில் புதைந்த படியே சொல்லவும், அவளை நிமிர்த்தி, தன்னைப் பார்க்க வைத்தவன்,
“இந்த நினைப்பெல்லாம் உனக்கு மட்டும்தானா மயிலு? நீ அங்க வர சங்கடப் படுவன்னு எனக்குத் தெரியாதா ? என் தங்கைன்னாலும், என் பொண்டாட்டிய மட்டமா பேசினா எனக்கு மட்டும் அவமானமில்லையா? அவ வீடுன்றதாலதான் என்னாலையும் அன்னிக்கு ஒன்னும் சொல்ல முடியலை. விக்ரமை பேசினதுக்கு அவன் கண்டிப்பா வர பிரியப்படமாட்டான்.  அதான் இப்படி யோசிச்சேன். அம்மாக்காக நான் போய்த்தான் ஆகணும், ஆனா அப்படி ஒரு கஷ்டத்தை உனக்கு தருவேன்னு எப்படி நீ நினைச்சே?“
“ம்ம்…, தப்புதான்…”, மாலினி அவன் கேட்கவும் தலை கவிழ்ந்தாள்.
“நானும் சாரிமா… உங்க அப்பா அம்மா பத்தி பேசி காயப்படுத்திட்டேன். நான் சொல்ல வந்தது, இவங்க எல்லாரையும் தள்ளி வெக்க முடியாது. சில நேரம் சகிச்சிக்கத்தான் வேணும், உனக்காக நானும் எனக்காக நீயும். அதே நேரம், முடிஞ்ச மட்டும் இக்கட்டுல மாட்டாம பார்த்துக்கவும் வேணும். அது …நீ என்னை புஞ்சிக்கலைங்கற கோவத்துல வேற மாதிரி வந்துடுச்சு… “, ராகவன் விளக்க, அவனை அணைத்தவள்,
 “ எனக்கு புரிஞ்சுது ரகு. நீங்க அப்படி என்னை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போகமாட்டீங்கன்னு நான் நம்பியிருக்கணும். இதோட விடுங்க இதை.”, என்று முடித்தாள்.
தான் தன் அன்னையைப் பற்றி யோசித்ததை அவள் சொல்லவில்லை. செயலில் காட்ட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.
அடுத்த வாரம் முழுதுமே ராகவன் வெள்ளித் தட்டைப்பற்றி பேசவில்லை. பொறுத்துப் பார்த்த பர்வதம்மா ஒரு கட்டத்தில், மாலினியைக் கேட்டார்.
“பணத்துக்கு ட்ரை பண்றேன்னு சொன்னார். தெரியலை அத்தை. கேட்டா கோவப்படறார்.”, ராகவனுடன் பேசி வைத்தபடியே ஸ்க்ரூவைத் திருப்பினாள். சொன்னபடி செய்யமுடியாதோ என்ற பயம் பர்வதம்மாவையும், அலட்டலாய் நாத்தனார் முன் சொன்னது நடக்காமல் போய்விடுமோ என்று காயத்ரியையும் தாக்கியது.  
மதியம் எப்போதும்போல் காயத்ரி போன் செய்தாள்.
“அம்மா… நாந்தான். என்ன செய்யற?”
“சொல்லு காயத்ரி. சீரியல் முடிஞ்சுது. உன் போனுக்குத்தான் பார்த்துகிட்டு இருந்தேன். பேசிட்டு கொஞ்சம் படுக்கலாம்னு.”
“என்னாச்சுமா ? அண்ணன் எதாவது சொன்னாங்களா ?”
“நீயும் தினமும் கேட்கற. இருந்தா நானே சொல்லமாட்டேனா ? அவன் கிட்ட கேட்கவே முடியலைடி. மாலினிகிட்ட கேட்டா, ஏற்பாடு பண்ண பாக்கறேன்னு சொன்னாரு. மேல எதாச்சம் கேட்டா கோவபடறார்னு சொல்லிட்டா. இதுக்கு மேல நானும் என்ன செய்ய ?”
“என்னமா… நீயும் இப்படி சொன்னா எப்படி?”
“என்னை என்னடி செய்ய  சொல்ற? பாண்டியன்ல டிக்கெட் போட்டதோட நிக்குது. குழந்தைக்கு ட்ரெஸ் வாங்கக்கூட மாலினி  நேரமில்லைன்னு சொல்றா. அதுக்கேத்த மாதிரி  அவளும் வேலை  முடிஞ்சு நாழி கழிச்சுதான் வரா. “
“ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டு பிள்ளைக்கு துணி எடுக்க முடியாதாம்மா உன் மருமகளுக்கு ? அவதான் சொல்றான்னு நீயும்  ஒப்பிக்கற? மாமியாரா ஸ்ட்ராங்கா சொல்ல மாட்டியா நீ?”, தன் காரியம் நடவாத எரிச்சலில் காயத்ரி தாயின் மீது பாய்ந்தாள்.
“இன்னிக்கு கேட்டதுக்கு, நீங்களே இங்க பஜார் ரோட்ல எடுத்துடுங்க அத்தை. எனக்கு சுத்தமா டி.நகர் போக டைமேயில்லை. இந்த சனிக்கிழமை கூட வேலைக்கு போகணும்னு சொல்லிட்டா. “
“ம்ச்… இந்த ஞாயிறு போக சொல்லு. சென்னையில புது டிசைன்ல இருக்கும்னு பார்த்தா, இப்படி இழுத்தடிக்கறீங்க. “
“நீயா கெடுத்துகிட்டது காயத்ரி. காது குத்துக்கு அவளே எடுத்துபோட்டு செய்தா. மதுரைல நீ அடிச்ச கூத்துலதான்,  எது எப்படி போனா எனக்கென்னனு இருக்கா. நானும் எவ்வளவுதான் சொல்ல முடியும் ?”
“ஆமா…எல்லாத்துக்கும் என்னையே சொல்லுங்க எல்லாரும். மாமியாக்காரி இன்னமும் மாலினி அப்படி, இப்படின்னு துதி பாடிகிட்டு இருக்காங்க. விக்ரமை ரெண்டு வார்த்தை கேட்டேன்னு என் வீடுக்காரர் ஒரு வாரம் என்னை அர்ச்சனை செய்தார். குட்டி பிறந்த நாளுக்கு  புடவை கூட எடுத்து குடுக்கலை.  காது குத்துக்கு அவங்க எடுத்தது, நீங்க குடுத்த ரெணடு புடவைனு போன மாசம்தானே மூணு புடவையாச்சு,போறும்னு மாமியா தடை போட்டாங்க. உங்க அண்ணி மாதிரி நீ என்ன வேலைக்கா போறன்னு நக்கலு வேற .”, எல்லோரையும் தாளித்துக்கொண்டிருந்தாள்.
“அடியே. நாக்கை அடக்கு. அவங்களுக்கு கேட்டு வெக்கப்போகுது.”, பர்வதம்மா இடை புக,
“எல்லாம் என் ரூம்லர்ந்துதான் பேசறேன். அங்க சீரியல் பார்த்தாகுது. நீ பேச்சை மாத்தாத. வெள்ளித் தட்டு இல்லைனா, நீங்க வரவே தேவையில்லை . தெரியுதா ? வர முடியலை, அதனால குடுக்கலைன்னு இருக்கட்டும். மானமாவது போவாது. அப்பறம் பேசறேன்.” , வைத்துவிட்டாள் காயத்ரி.
பர்வதம்மாவிற்கு  அதிர்ச்சி தெளிய சில நிமிடங்கள் பிடித்தது. ‘அடிப்பாவி,  எவ்ளோ சுயனலமாயிட்டா ? இவளையெல்லாம் நம்பி மருமகளை பகைச்சிகிட்டா, சோத்துக்கே திண்டாடணும் போலவே. ‘, யோசனை சற்று சரியான பாதையில் திரும்பியது.
அலுவலகத்தில் வெள்ளியிரவு வேலை ஒரு வழியாக ஏழு மணியளவில் முடிய, நாளை கோடவுனுக்கு போவதற்கான ஏற்பாடுகள் முடித்து, மாலினி கிளம்பினாள்.
வீடு வந்து சேரும்போது, ராகவன் ஏற்கனவே வந்திருந்தான். விக்ரமும், அவனும் பர்வதம்மாவின் அரிசி உப்புமாவை உண்டு கொண்டிருந்தார்கள்.
“கை கால் கழுவிட்டு நீயும் வந்து கையோட சாப்பிட வா மாலினி.”, என்று அழைத்தார் பர்வதம்.
இப்போது ஒரு இரண்டு நாட்களாக, அவள் லேட்டாக வரவும், இரவு டின்னரை அவர் பார்த்துக்கொண்டார்.
“ராகவா… காயத்ரி கேட்டது பத்தி என்னப்பா முடிவு செய்திருக்க ?”, இன்று காயத்ரி அழுகை, கெஞ்சலில் இறங்கியிருக்க, மெதுவாய்க் கேட்டார்.
“என்ன செய்யனு தெரியலைமா.  அவசியம் வெச்சிக் குடுக்கணும்னா, மாலினி நகை எதாச்சம் அடகு வெக்கணும்.  திரும்ப திரும்ப அவனுங்ககிட்ட காசுக்கு நிக்கப் பிடிக்கலை.”
மாலினி அமைதியாய்  தன் தட்டுடன் வந்து அமர்ந்தாள்.
“என்ன மாலினி ?  நகை வெக்காம உன்னால புரட்ட முடியாதாமா ?”, பர்வதம் கேட்க,
“நான் இது வரைக்கும் யார் கிட்டயும் கடன் வாங்கினதில்லை அத்தை. அப்படி யார்கிட்டயாச்சம் கேட்டது அம்மா காதுக்குப் போச்சுன்னா வேற வினையே வேண்டாம். இருந்த காசை போட்டுதான் டிக்கெட் புக் செஞ்சது. போக வர செலவு, பாப்பா ட்ரெஸ்க்கு இருக்கு.  இந்த மாசம் இன்னும் பத்து நாள் ஓட்டணும். அதனாலதான் நகை வேணா வெச்சி வாங்கிக்கோங்கன்னு சொன்னேன்.”, மாலினி  சொல்லிவிட்டு அமைதியாய் உண்ண ஆரம்பித்தாள்.
“அண்ணா, அண்ணி நகை எல்லாம் வெக்க வேண்டாம்.  டுடோரியல் கட்ட நீங்க தந்த காசை திருப்பி குடுத்துடறேன். என் ஃப்ரெண்ட் கிட்டருந்து அங்க குடுக்கற பேப்பர வாங்கி பழகிக்கறேன். பொங்கல் கழிச்சு வேணா சேர்ந்துக்கலாம்”
பர்வதம் முகம் மலர்ந்துவிட்டது. “அட ராசா, அக்கா மேல உனக்குதான் என்ன பாசம் ?”
“மா… அவ மேல ஒரு புண்ணாக்கும் இல்லை.  இது அண்ணன், அண்ணிக்காக மட்டும்தான்.  அப்படி நகையை கொண்டு போய் வெச்சா , அண்ணன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்னு தெரியும்தானே?”, விக்ரம் கோபமாய்க் கேட்கவும்,
மாலினிக்கும் ராகவனுக்கும் தர்ம சங்கடமாகியது.  இருவரது கையிருப்பை துடைத்து எடுத்தால் இந்த தட்டை வாங்கிட முடியும். ஆனால் மாலினி இதை முதலில் சொல்லிவிடாமல் கடைசி நேரம் வரை இழுத்தடிக்கச் சொல்லியிருந்தாள்.  நகையை வைத்து வாங்குவது போலவே செய்யவேண்டும். அப்போதுதான் சற்று அடங்குவார்கள், என்று சொல்லியிருந்தாள். விக்ரம் இப்படி முன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.
“வேண்டாம் விக்ரம். பரீட்சை கிட்ட வந்தாச்சு. உன் படிப்புக்கு இருக்கட்டும்,”, மாலினி தடுத்தாள்.
“நான் பொங்கல் கழிச்சு திரும்ப அண்ணங்கிட்ட வாங்கிக்கறேன் அண்ணி. “
“அப்பறம் என்ன? ஞாயிற்றுகிழமை போய் தட்டையும், குட்டிக்கு ட்ரெஸ்சும் எடுத்துடலாம்தான மாலினி?”, பர்வதம்மா ஆர்வமாய் கேட்க,
“யார் எப்படி போனா என்ன? உங்க பொண்ணுக்கு வேணுங்கறது நடக்கணும். அதான?”, ராகவன் பல்லைக் கடிக்கவும், பர்வதம் முழித்தார்.
“அத்தை, சனிக்கிழமையும் காலைல போனா ராத்திரி ஆகிடும் நான் வர.  இருக்க ஒரு நாளும் ஷாபிங் போகணும்னா, அடுத்த வாரம்  ரொம்ப டயர்ட் ஆகிடும். நீங்க இவரோட போயிட்டு வந்துடுங்க ப்ளீஸ்.”, மாலினி  சாப்பிட்ட தட்டைக் கழுவ எடுத்துச் சென்றாள்.
“என்னடா, மாலினி இப்படி சொல்லிட்டு போறா?, ராகவனை பர்வதம்மா கேட்க,
“ஆமாம். மாலினியை காயத்ரி ஃபங்க்ஷனுக்கு வர சொல்லி கூப்பிட்டாளா என்ன?  எடுத்துபோட்டு செய்னு நான் எப்படி அதிகாரமா கேட்க முடியும்? நம்ம மேல தப்பை வெச்சிகிட்டு , அவளை ஏன் சொல்றீங்க? “
பர்வதம்மாவிற்கு அப்போதுதான் உரைத்தது.  “காயத்ரி போன் பண்றேன்னு சொன்னாளே ? பண்ணலையா? நான் கேட்கறேண்டா.”
அவரை முறைத்தவன், “கேட்டு வாங்கறதில்லை இதெல்லாம். வெள்ளி தட்டு வேணும்னு கேட்டு வாங்கற வாய்க்கு, எங்க வீட்டு விசேஷத்துக்கு வாங்கன்னு கூப்பிட முடியலைனா, விருப்பமில்லைனுதான அர்த்தம்? நீங்க எதுவும் கேட்க வேண்டாம் அவகிட்ட.”, என்று சொல்லிவிட்டு டீவியின் முன் அமர்ந்துவிட்டான்.
“அறிவே கிடையாதும்மா உன் பொண்ணுக்கு.”, விக்ரம் தன் பங்குக்கு துப்பிவிட்டுச் சென்றான்.

Advertisement