Advertisement

“அங்கயே இருக்க பிடிக்கலைன்னா, ஒரு குழந்தை குட்டின்னு ஆச்சுன்னா இங்க வந்துடலாம். அவங்க அப்பா அம்மாக்கும் அதான் ஆசை. இங்க வந்துட்டா, ராணி மாதிரி இருக்கலாம்டி”,சகுந்தலா ஆசை காட்டினார்.

“நீ போகாத ஊருக்கு வழி சொல்லாதமா. எனக்கு வேற யாரையும் கல்யாணம் செய்ய இஷடமில்லை”, தெளிவாய் கூறினாள் மாலினி.

“சரி விடு. ஆனா கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சுன்னு சொல்றதெல்லாம் முடியாது மாலினி. இப்பவே நிறைய பேர் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீ வேலைல சேர்ந்தே இரண்டு வருஷம் ஆகப்போகுது“, இளங்கோவன் சமாதானக் கொடியைப் பறக்கவிட்டார்.

“சரி. நான் M.B.A அப்ளை பண்றேன்பா. அது முடிஞ்சதும் கல்யாணம்னு சொல்லிக்கலாம். “, தான் ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததைக் கூறினாள் மாலினி.

“வயசு ஏறிகிட்டே போகுது. இன்னும் படிச்சு முடிச்சு… முடியவே முடியாது போடி. படிக்கணும்னா கல்யாணம் முடிச்சிட்டு படி.”, சகுந்தலா வேகமாய் மறுத்தார்.

“மாலினி, ராகவன் தங்கை உன்னைவிட ஒரு வருஷம் சின்னவ. அவ கல்யாணம் முடிச்சு பிள்ளை பிறக்கப் போகுது. நீ அவர் பிரச்சனை தீர வரைக்கும் காத்திருக்கறதுங்கறது முடியாத காரியம். நீ அவர் கிட்ட பேசி டெலிவரி முடிஞ்சதும் கல்யாணம் செய்யணும்னு சொல்லு. அவர் குடும்பத்தோட எப்ப பொண்ணு கேட்டு நம்ம வீட்டுக்கு வருவாங்கன்னு பேசிட்டு சொல்லு.”

“அப்பா….”, இளங்கோவனின்  முடிவான பேச்சு மாலினிக்கு தயக்கத்தை தந்தது, ராகவனின் கடன் சுமை அவள் அறிந்ததுதானே.

“நீ அவரோட ஆறு மாசதுக்கும் மேல பழக்கம்னு சொல்லி ருக்க மாலினி. நீ உன் முடிவுலர்ந்து மாறலைன்னா, இதை இன்னும் வளர்த்துகிட்டு போக எனக்கு இஷ்டம் இல்லை.  நீ சொன்ன மாதிரி ராகவனைப் பொருத்த வரை நல்ல பையன்தான். நான் விசாரிச்சதுல அவன் டிபார்ட்மெண்ட்லையும் நல்ல பேரு, முக்கியமா பணம் புழங்கற கமெர்ஷியல் டாக்ஸ் ஆபிஸ்ல இருந்தும் கை சுத்தம்னு கேள்விபட்டேன். அதனாலதான், அரை மனசாத்தான் நாங்க சம்மதிக்கறோம். பட், கண்டிப்பா மூணு நாலு மாசதுக்குள்ள கல்யாணம் முடிக்கணும். உனக்கு நகை புடவை எடுக்கறதும், பத்திரிக்கை அடிக்கறதும்தான் அவங்களுக்கு செலவு. மத்தபடி கல்யாணச் செலவு நம்மோடதுதான்.  நீயும்  அவருக்கு முக்கியம்னா, கண்டிப்பா தள்ளிப்போடாம அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்.“, இதுதான் கண்டிஷன் என்பது போல பேசினார் இளங்கோவன்.

தந்தை சம்மதம் சொல்லியும் மாலினியால் சந்தோஷப் பட முடியவில்லை. நாங்கு மாதங்களில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எப்படி ராகவனை வற்புறுத்துவது ?

“நான் பேசறேன் பா…”, என்றவள் மௌனமாக அவள் அறைக்கு எழுந்து சென்றாள்.

“கல்யாணப் பேச்செடுக்கும்போதே இந்தப் பொண்ணு அவங்களுக்காக பார்க்குது. செல்லமா காசைப் பத்தின கவலையே இல்லாம இருந்துட்டா. இனி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்குப் பார்த்து செலவு பண்ற கஷ்டம் புரியும் போது அவஸ்தை படப் போறா. இப்படியா போய் காதல் கண்றாவின்னு விழுவா. “, அனத்தினார் சகுந்தலா. ஒரு தாயாய் அவர் நினைப்பதும் தவறில்லைதான்.

“இதோ பார் .. அந்த குடும்பத்தோட பணத்தேவை பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்கா. அவனுக்கு இருக்க கடனைப் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்கா. இதுக்கு மேலையும் அவனைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு நிக்கறான்னா எல்லாத்தையும் யோச்சிச்சுதான் முடிவெடுத்திருப்பா.  இப்ப நான் சொன்னதுல, நிஜமாவே நம்ம பொண்ணு மேல விருப்பம் இருக்குன்னா சம்மதிப்பான்.அப்படியில்லாம் இழுத்தான்னா, அதையே சாக்கா வெச்சு மாலினியை யோசிக்க சொல்ல முடியும்.  இதுக்கு மேல செய்ய ஒண்ணுமில்லை.”, ,ஒரு பெருமூச்சுடன் எழுந்துகொண்டார் இளங்கோவன் அவரது மாலை வாக்கிங்கிற்காக.

அவள் அறைக்குத் திரும்பிய மாலினி தவிப்பாய் அமர்ந்திருந்தாள். இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டார் அவள் தந்தை.  ஆனால் இதை எப்படி ராகவனிடம் சொல்வது? என்னவானாலும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று புரிந்தவள், ராகவனின் கைபேசிக்கு அழைத்தாள்.

அந்த நேரம் ராகவனின் வீட்டிலும் , காப்பியுடன் விச்ராந்தையாக அமர்ந்திருந்தனர் ராகவனும் அவன் தங்கை காயத்ரி மற்றும் தம்பி விக்ரம்.

“ராகவா, காயத்ரி வயறு நல்லா இறங்கியிருக்கு. ஒரு வாரம் கூட தள்ளுமான்னு தெரியலை.  பிரசவ செலவுக்கான காசெல்லாம் ரெடியாதான இருக்கு ?”, என்று கேட்டபடி தன் காபியுடன் வந்தமர்ந்தார் அவன் தாய் பர்வதம்.

“ரெடியா இருக்குமா. “, என்று மீண்டும் உறுதி செய்தான். போன மாதத்திலிருந்தே கேட்க ஆரம்பித்திருந்தார்.

“ம்ம்… அடுத்து தொட்டிலுக்கும் பார்த்துக்கோப்பா. முப்பதுக்கு தொட்டில் போடுறது நம்ம வழக்கம். “

“ம்ம்… அது பார்த்துக்கலாம் மா.”, என்றான் காபியை சுவைத்தபடியே.

“ராகவா, காயத்ரி தொட்டில் வீட்ல போட்டா இடம் பத்தாதுங்கறா. “, பர்வதம் இழுக்கவும்,

“அதுக்கு? வீட்லதான தொட்டில் போடுவோம் ? பின்னாடி இருக்க கொஞ்ச எடத்துல ஷாமியானா கட்டி, சாப்பாட்டை வெச்சிகலாம்மா.”, ராகவன் தான் யோசித்து வைத்ததை சொல்லவும்,

“டேய், நம்ம வீட்டுக்கு முதல் பேரக் குழந்தை. கொஞ்சம் பெருசா செய்யணும்டா. வீட்ல அம்பது பேரைக்கூட கூப்பிட முடியாது. ஒரு ஹோட்டலா பார்த்து செய்தா நல்லா இருக்குங்கறா காயத்ரி. சம்மந்தி வீட்டு ஜனங்களுக்கும் சிறப்பா இருக்கும்.”, பர்வதம் மகளைப் பார்த்தபடியே பேசினர்.

“மா… ஹோட்டல் ஹால், சாப்பாடுன்னு போனா எக்கச்செக்கமா ஆகும்மா. இன்னும் இவ கல்யாணக் கடனே முடிஞ்சபாடில்லை. அதுக்குள்ள பிரசவம், தொட்டில்ன்னா, நான் எங்க போறது ?”, பொறுமையை இழுத்து வைத்துப் பேசினாலும், அவன் தாய்க்கும் தங்கைக்கும் எங்கே எடுபடுகிறது.

“அண்ணா, என் மாமியார், என் நாத்தனாருக்கு மூணு பவுன் போட்டாங்க தொட்டிலுக்கு. எனக்கும் அதான் செய்வாங்க. நம்மளும் அந்த அளவுக்கு போடணும்ண்ணா.”, அடுத்த விஷயத்திற்கு அடிப்போட விழி விரித்த ராகவன்,

“மா… சவரன் விலை தினமும் ஏறுது. இதுல மூணு பவுன் நகை, ஹோட்டல்ல தொட்டில்னா, நான் காசுக்கு எங்க போக? “, ராகவன் மனம் மின்னல் வேகத்தில் கணக்குப் போட்டுக்கொண்டிருக்க, அந்த  நேரம் வந்தது மாலினியின் அழைப்பு.

மாலன் என்ற பெயர் ஒளிரவும், சட்டென்று எடுத்தவன், “ஹலோ… என்ன இந்நேரத்துல கூப்டிருக்க?” என்றான்.

அந்த பக்கம் அவள் பெயர் சொல்லாமல் ராகவன் பேசியதிலேயே மாலினினிக்குத் தெரிந்தது, அவன் வீட்டிலிருக்கிறான் என்று.

“ம்ம்… முக்கியமா கொஞ்சம் பேசணும்.  நீங்க கொஞ்சம் வெளிய போயிட்டு போன் செய்ய முடியுமா?’, தயக்கமாய்க் கேட்டாள் மாலினி.

“இப்பவேவா?”

“ம்ம்…”

“சரி.  நான் ஒரு பத்து நிமிஷத்தில் போன் செய்யறேன்.”, என்று வைத்துவிட்டான்.

காப்பியை முடித்தவன், “அப்பறம் பேசலாம்மா.”, என்று அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு, ட்ராக், டீ-ஷர்ட் என்று மாறி, தெரு முனைக்கு கிளம்பினான்.

மாலினி எப்படி அவனிடம் சொல்வதென ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள். சொன்னபடியே ராகவன் கூப்பிடவும்,

“சாரி, ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தீங்களா ? “

“இல்ல பரவாயில்லை, சொல்லு மாலினி, வெளிய வந்துட்டேன். என்னாச்சு ? லீவ் நாள்ல கூப்பிட மாட்டியே?”

அவள் தந்தை பேசியதை சுருக்கமாகக் கூறினாள். வீட்டில் அவள் விஷயத்தை சொல்லிவிட்டாள் என்று அவனுக்கும் தெரியும். இந்த அமெரிக்கா வரன் புது செய்தி.  அவள் முதலில் சகுந்தலா கூறியதை பெரிதாக எடுக்கவில்லை என்பதால் அவனிடம் சொல்லவில்லை.

“மாலினி, காயத்ரிக்கு பத்து நாள்ல டெலிவரி டைம். இது வரைக்கும் நான் நம்மள பத்தி எங்க வீட்ல சொல்லலை. இந்த நேரத்துல எப்படி சொல்றது?”, ராகவனின் தயக்கம் புரிந்தாலும், இதில் சொல்ல ஏன் இவ்வளவு யோசனை என்றும் தோன்றியது மாலினிக்கு.

“நான் எங்க வீட்ல சொல்லும்போதே உங்க கிட்ட சொன்னேந்தான ?”

“நீ மேல படிக்கறதுக்கு உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்கன்னும் சொன்னதான ? காயத்ரி வேலை முடிஞ்சு அவளை அனுப்பிட்டு நான் வீட்ல சொல்லலாம்னு இருந்தேன். அம்மா இதுனால இன்னும் டென்ஷன் ஏத்திப்பாங்க.”

“எனக்கும்தான் டென்ஷன் ரகு. நீங்க பழக ஆரம்பிச்சு ஆறு மாசம் மேல ஆகுதுன்னு சொல்ற, இதை இன்னமும் வளர்க்க இஷடமில்லைன்னு சொல்றார் அப்பா. அவர் சொல்றதும் நியாயம்தான?”, வேகமாய்க் கேட்டாள் மாலினி.

“என் நிலைமையும் உனக்கு தெரியும்தான மாலினி. பிரசவம், தொட்டில்னு ஏற்கனவே நிறைய செலவு இருக்கு. இதுல கல்யாணச் செலவும் சேர்ந்தா திரும்ப  கடம் சுமைதான் ஏறும். உங்க அப்பாகிட்ட சொல்லி புரிய வைக்க ட்ரை பண்ணு ப்ளீஸ்.”, ராகவன் சொல்லவும், வெகுண்டவள்,

“நான் சொன்னதுக்கு, காயத்ரிக்கு என்னைவிட வயசு கம்மி, அதுக்குள்ள டெலிவரிக்கு நிக்கறா. நீ இன்னும் ஒரு வருஷம் தள்ளிப்போடணும்ங்கறன்னு திருப்பிக் கேட்கறாங்க. என்ன பதில் நான் சொல்லமுடியும் ?”

“ஓ..அவ்வளவு விசாரிச்கிருக்காரா உங்க அப்பா என்னைப் பத்தி. அதான் சரியான இடத்துல என்னை லாக் செய்யறார் போல…”, ராகவன் சற்று இடக்காக சொல்லவும்,

“ரகு, என்னதிது? அவர் கேட்கறது அவர் கோணத்துல சரிதான?  கல்யாணச் செலவு எல்லாம் எங்களோடது, எனக்கான புடவை , நகைதான் நீங்க செய்யணும். இதுக்கு மேல நான் என்ன கேட்க முடியும் அவர்கிட்ட?”, மாலினி கேட்கவும். ராகவன்,

“இது போன்ல பேசற விஷயமில்லை மாலினி. நாளைக்கு லன்ச்ல ஆபீஸ் கான்டீனுக்கு வா. அங்கிருந்து வெளிய எங்கயாச்சம் பக்கத்துல உட்கார்ந்து பேசலாம்.”

“ரகு, இது ரொம்ப தள்ளி போட முடியாது. உங்களுக்கு புரியுது இல்லயா?”, மாலினி சற்று தயக்கமாக கேட்கவும்,

“ம்… இல்லாட்டி அமெரிக்கா மாப்பிள்ளை ரெடியா இருக்கான்னு சொல்லுவாங்க. அதான? தெரியுது. நாளைக்கு பேசுவோம்.”, நக்கலாய்க் கூறியவன் வைக்கவும், மாலினிக்கு கலக்கமாகவே இருந்தது.

ஆடு, புலி, புல்லுகட்டு போல இருந்தது அவள் நிலைமை. எப்படி யாரை சமாளித்து தன் கல்யாணத்தை முடிப்பது என்பது சவாலாய் இருந்தது.

அங்கே ராகவனோ , இளங்கோவன் மீது கடுப்பில் இருந்தான். மகளை நேரடியாக முடியாது என்று மறுக்காமல், இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டால், தானாய் இது முறியும் என்ற கணக்கில் இருப்பதாய் பட்டது. இல்லாவிட்டால் இன்னும் மூன்று நான்கு மாதத்தில் கல்யாணம் என்று அவசரப்படுத்த வேண்டியதில்லை. அப்படி இருந்தால், மாலினி வேலை பார்த்து ஒரு வருடம் ஆகும்போதே வரன் தேடியிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், மாலினி சொல்லவும் அவசரப் படுத்துவது சரியாகப் படவில்லை. அவன் வீட்டில் இதைப் பற்றி பேசக்கூடிய நிலை கண்டிப்பாக இல்லை.

மாலினியின்  போன் வரும் முன்னர் நடந்தவைதான் ஞாபகத்துக்கு வந்தது. மாலினியின் போன் வரவும், பேச்சு அத்துடன் நின்றது, ஆனாலும் திரும்பவும் தொடரும் என்று தெரியும். இப்போது மாலினி அவள் பங்கிற்கு அடுத்த குண்டை போடுகிறாள்.

இதற்குத்தான் தனக்கு இந்த காதல் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தான்.  மாலினியும் அவன் மனதும் சேர்ந்து அவன் அறிவை மழுங்கடித்து காதலில் இழுத்துவிட்டு, பிரச்சனை என்றதும் அவனை முன்னிறுத்துகிறார்கள்.

‘எனக்கு மட்டும் ஏந்தான் இப்படி டிசைன் டிசைனா வாழ்க்கை சுழன்றடிக்குதோ ?’, என்று நொந்தபடியே வீட்டிற்கு கிளம்பினான் ராகவன்.

Advertisement