Advertisement

வருடம் – 2010

அந்த வரவேற்பரையில் ஒரு சிறு மௌனம். மத்திம வயதைக் கடந்த அந்த அம்மா, கண்ணாடியை மீண்டும் சரி செய்தபடியே,

“இங்க பாரு சகுந்தலா, உங்க இரண்டு குடும்பத்தையும்  நல்லா தெரியும்னவேதான் நான் நேராவே கிளம்பி வந்தேன்.  நல்ல சம்மந்தம். அவங்களுக்கு இஷடம்தான். இப்ப நீங்க சொல்ல வேண்டியதுதான் பாக்கி.”

ஒரு  ஞாயிற்றுக்கிழமையின் பின் மதிய வேளை. அமைதியாய் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்தார் வீட்டின் தலைவர், சகுந்தலாவின் கணவர் இளங்கோவன். அவர் முகத்திலிருந்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியாமல் அவர் மனைவி முகத்தைப் பார்க்க, ஆசை அப்பட்டமாகத் தெரிந்தது. அதை சரியாகப் படித்தார் சம்மந்தத்தை எடுத்து வந்திருந்த பவானியம்மாள்.

“துரைசாமி குடும்பத்தைப் பத்தி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நாலு தலைமுறைக்கு சொத்து இருக்கு. அவர் தாத்தா, அப்பா வாங்கினதைப் பார்க்கவே துரைசாமிக்கு சரியா இருக்கு. கடைங்க, வீடுங்கன்னு வாடகையே நாலு அஞ்சு லட்சம் வருது மாசதுக்கு. தோப்பு துரவுன்னு கிராமத்துல இருக்கறது வருஷத்துல சில லட்சம் குத்தகை பணமாவும் வருது. இத்தனையும் பார்த்துகிட்டு ஒரே பையனைக் கூடவே வெச்சிக்க ஆசைதான் அவங்களுக்கு.  ஆனா லோகேஷுக்கு கம்ப்யூட்டர் படிச்சி அமெரிக்காவுல வேலை பார்க்க ஆசை. இதோ அவன் ஆசைப்படி அமெரிக்கா போய் ஒரு வருஷம் ஆயிடிச்சு.”

“உன் பொண்ணை கட்டின கையோட அமெரிக்கா அனுப்பினா மாமனார் மாமியார் தொந்தரவு கூட இல்லை.  ஒரு குழந்தை வந்துச்சுன்னா, இங்க வந்துகிட்டா போச்சு. என்ன நான் சொல்றது? இத்தனை சொத்தும் பிள்ளைக்குதான். பொண்ணுக்கு பத்து சவரன்ல தாலி கொடி போட்டு, ஒரு வைர செட் போடுவாங்க. நீங்க ஒரு நூறு நூத்தம்பது பவுன் போட மாட்டீங்களா மாலினிக்கு ?”

“ஹ… அவ்வளவா ?”, சகுந்தலா தயங்கி கணவர் முகம் பார்க்க, உடனே பவானி, “நான் ஒரு தோராயமாத்தான் கேட்டேன். மாலினி அழகுக்கும், குணத்துக்கும் அவங்க சீர் நீங்க செய்யறது போறும்னுதா சொன்னாங்க.”, என்று தளர்த்தினார்.

“ம்ம்… ஒரு எழுவத்தியஞ்சு பவுன் கிட்ட சேர்த்து வெச்சிருக்கேன் பவானிக்கா இன்னும் கொஞ்சம் மெறிச்சா நூறு போடலாம். இப்பத்தான் அஸ்வின் எஞ்ஜினீரிங் சேர்க்க  எதிப்பார்த்தைவிட இழுத்திடுச்சு.”

“பார்த்துக்கலாம். அவங்க அந்தஸ்துக்கு நிறைய பெரிய இடமெல்லாம் வருது. அவங்க குணமான பொண்ணுதான் வேணும்னு எதிர்பார்க்கறா0ங்க. அவங்களையும், புள்ளையையும் குடும்பத்தையும் பார்த்துகிட்டு இருக்கற மாதிரி வேணுங்கவும், மாலினி ஞாபகம்தான் வந்துச்சு. நீங்கதான் பிடி குடுக்க மாட்டேங்கறீங்க.”, கொஞ்சம் இடித்தார். போனிலேயே பேசி முடிக்க வேண்டியது, இவ்வளவு தூரம் வர வேண்டியதாகிவிட்டதே என்ற எரிச்சல் பவானிக்கு.

தொண்டையை கனைத்த இளங்கோவன், “ ரொம்ப நன்றிமா. மாலினிக்கு நாங்க இன்னும் வரன் தேட  ஆரம்பிக்காததுனால, திடீர்னு கேட்கவும் கொஞ்சம் யோசனை. நான் பொண்ணுகிட்ட கலந்து பேசிட்டு ஒரு வாரத்துக்குள்ள சொல்றேனே. அதுவரை நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் அவங்களுக்கு.”, என்றார்.

“ம்ம்…சரி, வேற பொண்ணு ஜாதகமும் வந்திருக்கு. நீங்க இல்லைன்னா நான் மத்தவங்களுக்காச்சம் சொல்லுவேன். உங்களுக்கே தெரியும், இது நான் சேவையாத்தான் செய்யறேன். நல்ல வரனை நிறுத்தி வெக்க முடியாதுங்களே. யோசிச்சி நல்ல பதிலா சீக்கிரம் சொல்லங்க.”, ஒரு வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். வாசலில்,

“சகுந்தலா, இந்த காலத்து பொண்ணுங்க, இதுக்குள்ள என்ன அவசரம்னு கேப்பாங்கதான். அதுக்குன்னு நாமளும் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாது. இப்பவே மாலினிக்கு இருவத்தி மூணு முடியப்போகுது. நீதான் பக்குவமா எடுத்து சொல்லி புரிய வெக்கணும். சரியா? சீக்கிரமே நல்ல பதிலா சொல்லு.”, என்று மீண்டும் உருவேற்றிவிட்டு சென்றார்.

உள்ளே வந்த சகுந்தலாவின் முகம் கவலையை தத்தெடுத்தது.

“இது நல்ல எடம்ங்க. இந்த பொண்ணு என்னடான்னா காதல் கத்தரிக்கான்னு பினாத்துது. “, என்று கணவரிடம் புலம்பினார்.

“எங்க மாலினி ?”

“மாசமானா ப்யூட்டி பார்லர்க்கு தண்டம் கட்ட போயிடுவாளே. அதான் போயிருக்கா.”, சலித்தவாறே கூறினார் சகுந்தலா.

“அஸ்வின் ?”

“அவன் ப்ரெண்டப் பார்க்கப்போறேன்னு அக்காவோடவே  தொத்திகிட்டு போயிட்டான். இப்ப விஷயத்துக்கு வாங்க.”, கணவரை ஊக்கினார்.

“இத பாரு சகுந்தலா. பேசி பார்க்கலாம்.  அவளும் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லை. பக்குவமாத்தான் எடுத்து சொல்லமுடியும். அதுக்கும் மேல அந்தப் பையனைத்தான் கட்டுவேன்னா, என்ன செய்ய முடியும்? நம்மை மீறி அவளே போய் கல்யாணம் செய்தா நமக்குத்தான் அசிங்கம்.”. பொறுமையாக விளக்கினார் இளங்கோவன்.

“கவர்மெண்ட்  உத்தியோகம்னாலும்  மாச சம்பளக்காரன் அந்த பையன். இந்த வரன் போல ஆஸ்தி அந்தஸ்து ஒண்ணும் இல்லை. பெரிய குடும்பம்.  எதோ வேற சாதி, வேற இனமுன்னுப்போகம நம்மதுலயே இருக்கான்ற ஒன்னுதான் ஆறுதல். என்ன காதலோ? படிச்ச உடனே கல்யாணத்தை முடிச்சிருக்கலாம்.  நீங்கதான் அவ வேலைக்குப் போகட்டும்னு அவ கூட ஒத்து ஊதுனீங்க. அது இப்படி வந்து விடியிது. வரட்டும் இன்னிக்கு. ரெண்டுல ஒன்னு முடிவு தெரியணும்.”, முனகினார் சகுந்தலா.

ஒரு  மணி நேரம் சென்று பார்லரில் இருந்து வந்த மாலினி, அழகை மேலும் அழகாக மெருகேற்றி வந்திருந்தாள். தாயைப் போல திருத்ததமான வட்ட முகத்தில் கூர் நாசி, கோதுமை நிறம், அடர்த்தியான கூந்தல், எல்லாவற்றையும் தாண்டி, ஆளை அடித்துப்போடும் அகன்ற விழிகள். பள்ளி கல்லூரியில் அந்தக் கண்களுக்காகவே ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் அதெற்கெல்லாம் அசராத தெளிவான சிந்தனை கொண்டவள்.  தன் அழகின் மேல் அக்கறை இருந்தாலும் கர்வம் இல்லை.  அதற்கு அவள் தாய் தந்தையும் ஒரு காரணம்.

சகுந்தலா கொஞ்சம் கறார் பேர்வழி. பெண் என்று செல்லம் ஒரு அளவோடுதான். வீட்டுக்காரியம் எல்லாம் பழக்கி வைத்திருந்தார். அழகை ஓவராய் புகழவதோ, இல்லை நீதான் இளவரசி என்ற ப்ரம்மையை வளர்க்கவோ செய்யவில்லை. நல்ல நடத்தைக்கு மட்டுமே பாராட்டு கிடைக்கும்.

இளங்கோவனும், பெண்ணுக்கும் பையனுக்கும் பேதம் பார்க்கவில்லை. அவள் பள்ளி முடித்ததும், ஸ்கூட்டி பழக்கி, எங்கும் தனியாக சென்று வர அனுமதித்தார். நல்ல புத்தகங்களை அவள் பள்ளிப் பருவத்திலேயே பழக்கியிருந்தார். நாம் குழந்தைகளுக்கு உட்கார்ந்து சொற்பொழிவு ஆற்றத் தேவையில்லை. நல்ல புத்தக வாசிப்பு அதை செய்யும் என்பதில் நம்பிக்கையுடையவர். அதை மாலினியும் காப்பாற்றியிருந்தாள்.

அவள் படிக்க விரும்பிய பி.,காம் படிப்பை முடித்ததும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றதையும் தடையின்றி ஊக்குவித்தார். தனியார் கம்பனியொன்றில், இதோ ஒன்றரை வருடமாக அக்கவுண்ட்ஸ் ஆபிசராக வேலை பார்க்கிறாள்.  சம்பளத்தில் தேவைக்கு எடுத்துக்கொண்டு மிச்சம் சேர்ந்து கொண்டிருந்தது.

இளங்கோவன், சகுந்தலா மேல் மத்திய வர்க்கம் என்று சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இருந்தார்கள். அவர் தேசிய வங்கி ஒன்றில்  ரீஜன் ஹெட்டாக இருந்தார். போரூரில் இரு தளங்களில் வீட்டைக் கட்டியிருந்தார். கீழ் தளம் வாடகை வந்து கொண்டிருந்தது. கடனெதுவுமின்றி, தேவைக்கு மேலான வரவு ,சேமிப்பு என்று திட்டமிட்ட வாழ்க்கை.

“வந்தாச்சா  மாலினி..”, என்றபடியே அவர் அறையிலிருந்து வந்தார் மாலினியின் தந்தை. உயிர்பித்த. தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தைக் குறைத்தவள், தந்தையைப் பார்த்து  புன்னகைத்தபடியே, “மா… அப்பாக்கும் எனக்கும் காபி”, என்று கத்தினாள்.

இருவருக்குமான காபி டம்பளர்களுடன் வந்த சகுந்தலா, அவர் கணவனைப் பார்த்தபடியே, காப்பியைக் கொடுத்தார்.

தொண்டையைக் கனைத்த இளங்கோவன், கையில் வாங்கிய காபியுடன், “ மாலுமா… உன் கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு செய்திருக்க ?”, என்று ஆரம்பித்தார்.

புருவம் சுருக்கிய மாலினி காபியை விடுத்து, “ முடிவுன்னா ? நான் உங்ககிட்ட சொன்னதுதான் ப்பா. ராகவனைத்தான் கல்யாணம் செய்துக்க விருப்பம்.”

“நீ சொல்லி ஒரு மாசமாச்சுடி.”, சகுந்தலா இடை புகுந்தார்.

“ஆமாம் மா. அவரைப் பத்தி அப்பா எதாவது விசாரிக்கணும்னா விசாரிக்கட்டும், இல்லை எங்கிட்டயாவது கேட்கட்டும்னு இருக்கேன்.”, நிதானமாய் பதிலளித்தாள் மாலினி.

“ஆங்…எல்லாம் விசாரிச்சாச்சு. அந்த ஒத்த வீட்டை விட்டா சொத்துன்னு ஒண்ணும் இல்லையாமே ? அது மேலையும் தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின கடனாம். ஸ்கூல் படிக்கற தம்பி . தங்கச்சிகாரி வேற இப்ப பிரசவத்துக்கு வந்திருக்காளாம். அப்பா இல்லாத வீட்ல, எல்லாமே மூத்த மகனா இந்த பிள்ளைதான் பார்க்கணுமாம். தேவையா இப்படிப் பட்ட சம்மந்தம் ?”, அவர் குமுறலைக் கொட்டினார் சகுந்தலை.

“நான் உங்ககிட்ட அவர் பணக்காரர்னு சொல்லவே இல்லையே ? அவர் அப்பா தவறி இப்போ ஒரு அஞ்சு வருஷம் இருக்கும். அவர் வைத்தியத்துக்கு ஆன செலவு போக, மிச்சம் இருந்த செட்டில்மெண்ட் பணம், அவங்க அம்மா நகை, கூட வீட்டு மேல கடன் வாங்கித்தான் அவர் தங்ககைக்கு கல்யாணம் முடிச்சார். தம்பி படிச்சு ஒரு வேலைக்கு போற வரை இவர்தான் சப்போர்ட் செய்யணும்.இப்பதான் ப்ளஸ் ஒன் படிக்கறான்.”

“இவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கவர் வேணுமா மாலினி? காலத்துக்கும் அந்த குடும்பத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஓண்ணு ரெண்டு வருஷத்துல முடியறதில்லைமா இது.”, இளங்கோவன் அவர் கவலையைச் சொன்னார்.

“தெரியும்பா. ராகவனுக்கும் இந்த தயக்கம் இருந்துச்சு, இன்னும் இருக்கு. ஒரு வருஷம் கழிச்சு, நாங்க கல்யாணம் செய்துகிட்டா, அதுக்குள்ள கடனை  மோஸ்ட்லி அடைச்சிடுவார். அவர் ஆஃபிஸ்லயும் ப்ரமோஷனுக்கு எதிர்பார்த்துகிட்டு இருக்கார். அதுக்கான எக்ஸாம் கூட எழுதிட்டார். அவர் கிட்ட பெருசா சொத்து இல்லைங்கறதைத் தவிர வேற எந்த குறையும் பார்க்க முடியாதுப்பா. “

“அதான் நல்ல புளியங்கொம்பா புடிச்சிட்டானே , சொத்து, சம்பாத்யம் எல்லாம் உங்கிட்டருந்து வரும்னு கணக்கு போட்டிருப்பான்.”, சகுந்தலா குத்தலாய் பேசினார்.

“மா… தேவையில்லாம தரக்குறைவா பேசாதீங்க.”, தாயை முறைத்தாள் மாலினி.

“ம்க்கும். இங்க பாருடி. பவானிமா மறுபடி வீடு தேடி வந்து பேசினாங்க. நல்ல சம்பந்தம் விட வேண்டாம்னு. பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். லோகேஷ் ஒரே பிள்ளை. அதுவும் அமெரிக்காவுல வேலை. அப்பா, அம்மா இங்க இருக்கப் போறாங்க. எக்கச்செக்கமான சொத்து. அத்தனைக்கும் அந்த பையன்தான்  வாரிசு. அவனும் அதுக்கு மேல சம்பாதிக்கறான். வைர செட்டும் போட்டு பத்து பவுன் தாலிக் கொடியும் பொண்ணுக்கு போட்டு கல்யாணம் செய்துக்கறாங்களாம்.சும்மா காதல் கத்தரிக்காய்னு வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே.”, சகுந்தலா மகளின் மனதைக் கரைக்க முயன்றார்.

சுறுசுறுவென்று கோபம் பொங்கியது மாலினிக்கு. “ இரண்டு வாரம் முன்னாடி நீங்க சொன்னபோதே நான் வேண்டாம்னு சொன்னேந்தானே? இப்படி காசைப் பார்த்து மனசை மாத்திகிட்டா எனக்கு என்ன பேரு தெரியுமா ? கடுப்படிக்காதீங்க மா. அமெரிக்காவாம் பொல்லாத அமெரிக்கா. அங்க வேலைக்கு ஆள் வெக்கமுடியாது, வீட்டு வேலை, தோட்ட வேலை, பாத்ரூம் கழுவறது வரைக்கும் நாமதான் செஞ்சிக்கணும். அதுவும், நான் பி,காம்தான் முடிச்சிருக்கேன், அங்க நாலு வருஷம் படிச்சாத்தான் டிகிரின்னே ஒத்துக்குவான். இது டிப்ளமாதான். வேலை கூட பார்க்க முடியாதபடிதான் இருக்கும் அவன் தர விசா. கார் ஓட்டத் தெரியாம வீட்டோடத்தான் கிடக்கணும். லைசன்ஸ் வாங்கறதுக்கும் ஆயிரத்தெட்டு ரூல்ஸ். ஒண்ணும் தெரியாம அமெரிக்கான்னு வாயை பிளக்கக்கூடாது.”

Advertisement