Advertisement

Epilogue
இரண்டு வருடங்களுக்குப் பிறகு –
எட்டு மாதங்கள் முன் அப்பா என்றழைக்க பெண் மகவு பிறக்க, ராகவன் அலுவலகத்தில் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு முன் இடமாற்றலுடன் சேர்ந்து வந்தது. வேலூருக்கு அவன் மட்டும் குடி பெயர்ந்தான். மாலினி குழந்தை மாமியார், விக்ரமுடன் சென்னையில் இருப்பவள், வெள்ளி இரவு வேலூர் சென்று விடுவாள். வார விடுமுறை வேலூரில் ராகவன் மாலினி , குழந்தை சிந்துஜாவுடன் இனிமையாக கழியும். மாதம் ஒரு முறை ராகவன் சென்னை வருவான், பர்வதம் கோவிக்காமல் இருக்க.
காயத்ரி இப்போது இரண்டாவது பிரசவத்தின் பாதியில் இருந்தாள். பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று மங்கை அவளை மதுரையிலேயே நிறுத்திக்கொண்டு ராகவன் மாலினியின் நெஞ்சில் பால் வார்த்தார். நெருக்கத்தில் பர்வதம் மதுரை சென்று தங்குவதாக ஏற்பாடு.
“ விக்ரம்… குழந்தைக்கு  சாப்பாடு குடுத்துட்டேன். அவ பாட்டு விளையாடிட்டு இருக்கா. நீ ஒரு கண்ணு அவ மேல வெச்சிகிட்டே படி. ஒரு அரை மணி நேரம்தான், கோடி வீட்டு பொண்ணுக்கு சீமந்தம். நானும் மாலினியும் ஒரு எட்டு போய் தலையை காட்டிட்டு வந்துடறோம்.”, பர்வதம்மா ஆர்டர் போட்டுவிட்டு கிளம்பி நிற்க, விக்ரம் சிந்துஜாவைப் பார்த்தான்.
பொக்கைவாயில் முளைவிட்டிருக்கும் ஒற்றைப்பல் வைத்து, டீத்தரைக் கடித்துக்கொண்டு சமத்தாய் அவளது பாய் மீது அமர்ந்திருந்தாள். சுற்றிலும் அவளது பொம்மைகள்.
“சரிம்மா. சீக்கிரம் வந்துடுங்க. எக்ஸாமுக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு.”, என்று ஹால் சோஃபாவில் புத்தகங்களுடன் வந்து அமர்ந்தான்.
“கண்டிப்பா வந்துடுவோம் விக்ரம். அத்தை இருந்தாலும் நான் வந்துடுவேன்.  தூங்கிட்டாள்னா, கொஞ்சம் பெட்ல போட்டு, தலைகாணியை  சுத்தி வெச்சுடு. கிச்சன், பெட்ரூம் கதவை சாத்திட்டேன். இங்கயேதான் சுத்துவா. பார்த்துக்கோ.”, மாலினியும் சொல்லவும், “சரி அண்ணி. நான் பார்த்துக்கறேன்.”, என்று தெம்பாய் அனுப்பிவைத்தான்.
“சமத்துக்குட்டியில்ல சிந்துகுட்டி? சித்தப்பா படிக்கணும். நீ விளையாடிக்கோ என்ன?”, என்றவன் புக்கை எடுத்தான். அவ்வப்போது அவளை பார்த்துகொள்ளவும், இவனைக் கண்டு கொள்ளாமல், டீத்தரை தூக்கிப்போட்டுவிட்டு, பொம்மை கிலுகிலுப்பையை ஆட்டிக்கொண்டிருந்தாள்.
படித்துக்கொண்டிருந்த விக்ரமின் மூளையில் முதலில் பதிந்தது, தப் தப்பென்ற சத்தம், கேள்வியில் கவனம் பிசகி, தண்ணி சத்தம் எங்கர்ந்து வருது என்று யோசித்தபடி சிந்துவைக் கண்கள் தேட, அவள் பாயில் இல்லை. திக்கென்றது விக்ரமிற்கு. அவசரமாய் கண்களை சுழற்ற, சோஃபாவின் பக்கவாட்டில் தலை தெரிந்தது. 
“பாயை விட்டு எப்ப வந்த குட்டிமா ?”, எட்டிப் பார்த்தான் அவளை. குழந்தைதான் தண்ணியை தப் தப்பென்று தட்டிக் கொண்டிருந்தாள்.
“எங்கருந்துடி உனக்கு தண்ணி கிடைச்சுது ?”, கேட்டபடியே எழுந்து அவளிடம் வர, அருகில் எந்த பாத்திரமும் இல்லை.” அவளைப் பார்த்து விக்ரம் விழிக்க, அவன் பார்ப்பதைக் கண்ட குழந்தை இன்னும் ஆர்வமாக தட்டினாள். முகமெல்லாம் தண்ணீர், முன் முடியெல்லாம் பட்டு வழிந்தது. “மா….க…”, என்று மழலையில் பிழற்றினாள்.
பாத்திரம் இல்லை, தண்ணீர் எப்படி என்ற யோசனையில் இருந்தவன், சட்டென்று, “அய்யோ… மூச்சா போனியா “, அலறியவன், அவளைத் தூக்க, போட்டிருந்த கவுனிலும் காலிலும் வழிந்தது சிறு நீர்.
“கடவுளே… அதையாடி தட்டி விளையாடுவ  ?”, என்று குழந்தைதைத் தூக்கிக் கேட்க, அவன் முகத்தைப்பார்த்து கிளுக்கிச் சிரித்தவள், கைகள் இரண்டையும் விக்ரமின் கன்னத்தில் தட்ட, இப்போது சிறு நீர் வாசம் அடிக்க, அவன் முகத்திலும் அவள் பூசிவிட..
“யேய்…. நீ பூசினதும் இல்லாம, என் மேல வேற… யாய்…ச்சை..உவ்வ…என்ன பண்றது உன்னை… ?”, அவளை சற்ற எட்டிப் பிடித்து அருக்களித்துக் கேட்கவும், அவன் ஏதோ திட்டுகிறான் என்று நினைத்தவள் உதடு பிதுக்கி அழ ரெடியாகினாள்.
“அய்யோ, அம்மா வர நேரமாச்சே. இப்படி பார்த்தா என்னை வறுத்துடுவாங்க. இதுல நீயும் ஒப்பாரி வெக்காதமா… என் செல்லக்குட்டி… என் உச்சாகுட்டி…”, என்று வாயில் வந்ததை கொஞ்சியபடியே பாத்ரூமிற்கு அழைத்து வந்தான்.
அவள் கவுனையும், ஜட்டியையும் ஒரு வழியாக கழட்டவும் தலை முழுதும் இப்போது ஈரம். விக்ரம் முழித்துக்கொண்டு நின்றான். ‘தனியாக எப்படி தலைக்கு குளிப்பாட்டறது?, இப்படியே எவ்வளவு நேரம் வெச்சிருக்க முடியும்?’,
பாத்ரூம் தரை சில்லென்று இருக்கவும், அவன் காலைப் பிடித்து எழப் பார்த்தாள் சிந்து. “அடியே… ஒரு இடமா இரு.  ஹீட்டரைப் போடறேன். உனக்கு ஒரு டயப்பரை போடாம என்னை இப்படி சிக்க வெச்சிட்டாங்களே…. “, புலம்பிய படியே எட்டி ஸ்விட்ச்சைத்  தட்டினான்.
அவளை திரும்பவும் உட்கார வைக்க, சிந்து சில்லென்ற தரையில் அமர ஆட்சேபம் தெரிவித்து கத்தியபடி எழ முற்பட்டாள்.
“செல்லம்… தனியா இருக்க என்னை இப்படில்லாம் வம்பு செய்யக்கூடாது பாப்பா… சித்தப்பா பாவமில்லையா? என்ன பிரச்சனை உனக்கு ? குளிருதா? பக்கெட்டுக்குள்ள நிக்கறியா?, அருகேயிருந்த ஒரு காலி பக்கெட்டுக்குள் நிறுத்தினான்.
இது புதிதாய் இருக்க, சிந்து பக்கெட் ஓரத்தை பிடித்து நின்று விக்ரமை அண்ணாந்து பார்த்து சிரித்தாள்.
“இரு, முகத்தை மொதல்ல கழுவிடலாம், எனக்கே ஒப்பலை. உன்னல எப்படி பாப்பா இப்படியெல்லாம் குறும்பு பண்ண யோசிக்க முடியுது ?”, கேட்டபடியே, தண்ணீர் தொட்டு தன் முகத்தை கழுவியவன், தண்ணீரி சில்லென்று இருக்க, கையில் நினைத்து கொஞ்சமாய்  குழந்தையின் முகத்தை துடைக்க, அதற்கே அவள் திமிறினாள்.
தண்ணீர் மக் ஒரு கையில், சிந்துவின் முகத்தை அழுத்தி மறு கையில் துடைக்கவும், குழந்தை திமிரவும், பக்கெட் பக்கவாட்டில் குழந்தையுடன் சாய்ந்தது.
“ஏய்…ஏய்…”, சுதாரித்து தண்ணீரி மக்கைப் போட்டு அவன் பக்கெட்டை பிடிக்க முற்படுவதற்குள், குழந்தை பக்கெட்டோடடு விழுந்தாள்.
அப்படியொன்றும் அடியில்லையென்றாலும், விக்ரமின் அலறலும், பக்கெட் விழுந்த அதிர்ச்சியிலும் வீரிட்டு அழ ஆரம்பித்தாள் சிந்து.
“ஐயோ…சாரி குட்டிமா…சாரி சாரி…”, என்று அவளுக்கு அடிபட்டு விட்டதோ என்ற பயத்தில்,  பக்கெட்டை நிமிர்த்தி, அவளை தூக்கவும்,  அழுதுகொண்டே அவனைக் கட்டிக்கொண்டாள்.
முதுகைத்தட்டிக் கொடுத்தவன், “சிந்துகுட்டி, ஒன்னுமில்லைடா. நாந்தான் உன்னை பிடிக்காம, லூசாட்டம் மக்கை பிடிச்சிட்டு இருந்தேன்.”, சொல்லியபடியே அவளை முத்தமிட முகத்தைத் திருப்பியவன், அவள் எதனால் ஈரமாக இருக்கிறாள் என்று தெரிந்து, அவசரமாய் அவன் முகத்தை திருப்பினான்.
“அய்யோ, எல்லா உச்சாவும் என் மேலயே பூசிட்டயேடி… இரு… தண்ணி சூடாயிருக்கும், குளிச்சி சுத்தமாயிடலாம் உங்கம்மாவும் எங்கம்மாவும் வந்து நம்மளை அடிக்கறதுக்குள்ள.”, சமாதனம் செய்யவும், அழுகையை நிறுத்தியவள், “டர்”,என்று விடவும், அது அவள் அமர்ந்திருந்த விக்ரமின் கையில்  சூடாய் வர, சட்டென்று சுதாரித்தவன், சிந்துவை தரையில் விட்டான்,
“இதப்பாரு பாப்பா…இதுக்கு மேல என்னால முடியாது. இதெல்லாம் நீ உங்க பாட்டி, மம்மி வந்தப்பறம்தான் போகணும். புரியுதா?”, அவளோட டீல் பேச, மீண்டும் தரையில் விக்ரம் அமர வைத்ததில் கோவம் வந்து, ஒரு கத்து கத்தியவள், அவன் கால் வாய்க்கருகில் தோதாய் இருக்க அப்படியே இரு கையாலும் பிடித்தவள் கடிக்கப்பார்க்க, அது வாட்டமாக இல்லாமல் அவள் கோவத்தை மேலும் கிளறி இன்னும் அதிகமாக கத்த வைத்தது.
இரண்டு குழாயையும் திறந்து தண்ணீர் சூட்டை சரிபார்ப்பதில் மும்மரமாயிருந்த விக்ரம் இதை கவனிக்கவில்லை. அவள் எதிரே குத்துக்காலிட்டு அமர்ந்தவன், அவள் டும்மியைக் கழட்ட முற்பட்டான், ஒரு கை அவள் தோளை உட்கார வைக்க அழுத்தியபடி இருக்க, இருந்த கோவத்தையெல்லாம் அவன் முழங்கையின் மிருதுவான உட்பக்கம் வாகாய் வாயில் கிடைக்கவும் காட்டிவிட்டாள் சிந்து.“
ஈறும், ஒரு பல் மட்டும்தான் என்றாலும் எதிர்பாராத அழுத்தமான கடியில் வலி சுருக்கென்று தெரிய, ஆவென்று கத்தியவன் அதே வேகத்தில் கையை அவள் வாயிலிருந்து வேகமாக இழுக்கவும், குத்துக்காலிட்டு அமர்திருந்தவன் பாலன்ஸ் தப்பி பின் புறம் தொப்பென்று அமர, பின்னால் இருந்த சுவரில் விக்ரமின் பின்னந்தலை மோதி நின்றது.
கடித்துக்கொண்டிருந்த கை வெடுக்கென்று பிடுங்கப்பட்டதில் மேலும்  கோவமடைந்த சிந்து இன்னும் பெருங்குரலெடுத்து வீறிட,
“குட்டி பிசாசே…எதுக்குடி அழற? என்னை கடிச்சதுக்கு நாந்தான் அழணும்.”, அவளை உருத்து விழிக்கவும், அவன் திட்டுகிறான் என்ற அளவில் புரிந்த குழந்தை ஒரு நொடி அழுகையை நிறுத்த,  “டேய்…விக்ரம், ஏண்டா குழந்தை அழறா ?”,  பர்வதம்மாவின் பதறிய குரல் கேட்டது.
பக்கென்றானது விக்ரமுக்கு. போச்சு, என்னை இன்னிக்கு மொத்தமா தாளிக்க போறாங்க என்று எண்ணி முடிக்கவில்லை. பாட்டியின் குரல் கேட்டதும், தெம்பு பெற்றவளாக இன்னும் வீறிட்டு அழ ஆரம்பித்தாள் சிந்து.
பாத்ரூம் வாசலுக்கு வந்த பர்வதம்மா இவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்து திகைக்க,
“பிசாசே… நிறுத்துடி…”, விக்ரம் சிந்துவின் கத்தல் பொறுக்காமல் கத்த, ஓடி வந்து குழந்தையை தூக்கிய பர்வதம்மா,
“வாடி செல்லம்… தடிமாடே, குழந்தையைப்போய் என்ன வார்த்தை சொல்ற ? எதுக்குடா இங்க இருக்கீங்க ?”, என்று அவளை சமாதானம் செய்ய அணைத்தபடியே விக்ரமைப் பாய்ந்தார்,
ஒரு வழியாய் எழுந்து நின்றவன், “ஏன்மா டயப்பரை போடலை ? உன் பேத்தி உச்சா போய் அதையே தட்டி தட்டி முகம், முடியெல்லாம் ஆக்கி வெச்சிருக்கா. என் மேலையும் பூசிருக்கா. இப்ப உன் மேல.  குளிக்க வெக்கலாம்னு உக்கார வெச்சா, என் கையை கடிக்கறா. நான் கையை புடிங்கினதுக்கு என்னவோ  நாந்தான் அடிச்சிட்டமாதிரி இவ்ளோ சீனு. நியாயமா, இவ பண்ண அட்டகாசத்துக்கு நாந்தான் ஒன்னு கத்தி அழணும்.”, இருவரையும் முறைத்தபடியே நடந்ததை ஒப்பித்தான்.
வீட்ல இருக்கும்போதும் டயப்பரைக் கட்டினா குழந்தைக்கு கஷ்டம்டா. அவ ஈரம் பண்ணும்போதே தூக்காம அதுல தட்டி விளையாடற வரைக்கும் நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த ? குழந்தைக்கு என்ன தெரியும்? ஒரு அரை மணி நேரம் பிள்ளையை பார்த்துக்க துப்பில்லை உனக்கு. என்னத்தை படிக்கறயோ போ… அவளுக்கு ஒரு டவலைக் கொண்டா.”, சம்மந்தமேயில்லாமல் அவன் படிப்பைக் குறை கூறி வேலை ஏவினார், தண்ணீர் சூட்டை சரி பார்த்தபடி.
“மா… இது நியாயமேயில்லை… அவளுக்காத் தெரியாது. உன்னைப் பார்த்ததும்தான் ஒரே அழுகை. அதுவரைக்கும் அவதான் என்னை மிரட்டிகிட்டு இருந்தா.“, தன் பக்க நியாயத்தைக் கூற முற்பட்டான் விக்ரம்.
ஒரு குவளை வென்னீரை தரையில் ஊற்றிவிட்டு,  குழந்தையை அமர வைக்க, சமர்த்தாய் அமர்ந்து தண்ணீரைத் தட்டினாள்.
“பாரு…பாரு… நான் உக்கார வெச்சா… இப்படி உக்காரவேயில்லை… உங்கிட்டமட்டும்  ஒழுங்கா இருக்கா…”, விக்ரம் குறை கூறினான்.
“முட்டாப்பயலே… தரை சில்லுன்னு இருக்கு. முதல்ல ஒரு மக் வென்னீரை ஊத்தி சூடாக்கிட்டு உக்கார வெச்சா அவ பாட்டுக்கு இருப்பா. அந்த அறிவு உனக்கு இல்லை…போடா போய் டவலை எடுத்துகிட்டு வா.”
‘ஓ… இதுல இப்படி ஒரு லாஜிக் இருக்கோ?’, என்று யோசித்தவன், “அதுக்காக கையைக் கடிக்கறதெல்லாம் ஓவர் பாப்பா…”,என்று சிந்துவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
சிந்து குளித்து முடித்ததும், விக்ரம் மீண்டும் ஒரு முறை குளித்து வர, வீடு அமைதியாக இருந்தது. எட்டிப் பார்த்தவன் காண்டாகினான். வாயில் கட்டை விரலை சப்பியபடி ஆனந்தத் தூக்கத்தில் இருந்தாள் சிந்து.
“அடிப்பாவி…என்ன தொக்கா மாட்டிவிட்டுட்டு, தெய்வீகக் குழந்தையாட்டம் இப்படி தூங்கறியேடி…”, சிந்துவைப் பார்த்துப் பொருமத்தான் முடிந்தது விக்ரமால். அவன் பயந்தபடியே, அவனை நினைக்கும்போதெல்லாம் வறுத்தெடுத்தார். பிறகு வந்த மாலினி சொல்லிக்கூட அடங்கவில்லை பர்வதம்மா.  ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு விக்ரம்தான் வெளி நடப்பு செய்தான்.
பி.கு.
ராகவன் மாலினி, விக்ரம் இன்னும் வேண்டுமென்று விரும்புவர்கள், விக்ரம் நாயகனாய் வரும் ‘விண்மீன் களின் சதிராட்டம்’ படிக்கலாம் J

Advertisement