Advertisement

Epilogue 2

இரண்டு வருடங்களுக்குப் பிறகு –

எட்டு மாதங்கள் முன் அப்பா என்றழைக்க பெண் மகவு பிறக்க, ராகவன் அலுவலகத்தில் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு முன் இடமாற்றலுடன் சேர்ந்து வந்தது. வேலூருக்கு அவன் மட்டும் குடி பெயர்ந்தான். மாலினி குழந்தை மாமியார், விக்ரமுடன் சென்னையில் இருப்பவள், வெள்ளி இரவு வேலூர் சென்று விடுவாள். மாதம் ஒரு முறை ராகவன் சென்னை வருவான், பர்வதம் கோவிக்காமல் இருக்க.

காயத்ரி இப்போது இரண்டாவது பிரசவத்தின் பாதியில் இருந்தாள். பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்று மங்கை அவளை மதுரையிலேயே நிறுத்திக்கொண்டு ராகவன் மாலினியின் நெஞ்சில் பால் வார்த்தார். நெருக்கத்தில் பர்வதம் மதுரை சென்று தங்குவதாக ஏற்பாடு. காயத்ரியும் இப்போது மாலினியை பெரிதாக எதுவும் சீண்டுவதில்லை. பர்வதமே அதை ஆதரிப்பதில்லை என்பதால் அடக்கி வாசித்தாள். மருமகளை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளாமல் பர்வதம் எதுவும் செய்வதில்லை. அவ்வளவு நம்பிக்கை மாலினியிடம், ஆனால் பிள்ளை பாசம் என்று வந்துவிட்டால், காயத்ரி அடுத்து ராகவனுக்குத்தான் முக்கியத்துவம்.

வெள்ளிக்கிழமை மாலை மாலினி அலுவலகத்திலிருந்து வந்தவள், குழந்தைக்கு வேண்டியதை ஒரு முறை சரி பார்த்துவிட்டு, கஞ்சியைக் காய்ச்சி, குழந்தைக்கு ஊட்ட மாமியாரிடம் கொடுத்தாள். பர்வதம் வார்த்து வைத்திருந்த இட்லியை காலையில் செய்த வெங்காய சட்னியுடன் இவள் வேகமாக சாப்பிட,

“மாலினி, அந்த டிபன் பாக்ஸ்ல ராகவனுக்கு நெத்திலி தொக்கு பண்ணியிருக்கேன். எடுத்து வெச்சிக்க. நீ இருக்கும் போது சூடா சமைச்சி போடு. இதை அவன் திங்கட்கிழமைக்கு வெச்சிகிடட்டும்.”, என்று சொல்லிய படியே சிந்து பாப்பாவிற்கு ஊட்டினார்.

“ஓஹ்… அண்ணி எங்க தொக்குல பங்கு போட்டு சாப்டுற போறாங்கன்னு முன்னாடியே சொல்லிட்ட?”, சிந்துவிற்கு விளையாட்டு காட்டிக்கொண்டே, விக்ரம் நக்கலடித்தான்.

“டேய் …அப்படியில்லடா… நம்ம எப்ப வேணாலும் இங்க செஞ்சி சாப்பிடலாம். ராகவன் அங்க தனியா இருக்கானேன்னு சொன்னேன்.”

“அடுத்து நீ எப்ப பண்ணுவ ? அண்ணன் வந்துட்டு கிளம்பும்போது பண்ணுவ. தெரியாதா?”, கிடுக்கிப் பிடி போடவும் பர்வதம் முழித்தார்.

இதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்த மாலினி, “அத்தை… விக்ரமுக்கு தொக்கு எடுத்து வெச்சீங்களா?”, என்றாள்.

“அந்த கடாயில கொஞ்சம் இருக்குமா. அதுலயே சாதத்தை போட்டு பிரட்டினா அவனுக்கு போறும்.”, என்று சமாளித்தார்.

கடாயை எட்டிப் பார்த்தாள். வழித்து நிக்கினாலும் ஒரு ஸ்பூன் தேறாது. ‘இவங்களை திருத்த முடியாதுடா சாமி…..’, என்று நினைத்துக்கொண்டே, ஒரு கரண்டி தொக்கை கடாயில் போட்டுவிட்டு, மிச்சத்தை எடுத்துக்கொண்டாள். ராகவன் கண்டிப்பாக அவளை சாப்பிட வைப்பான். பர்வதம் அவருக்கு வைத்தாலும் சாப்பிட மாட்டார், பிள்ளைக்கு ஆகும் என்றுதான் பார்ப்பார். அதனால் அவருக்கு வைக்கவில்லை.

ஒரு வழியாக விக்ரம் பஸ் ஏற்றி விட, வேலூரில் இவர்கள் இறங்கும் நேரம், காத்திருந்தான் ராகவன். தந்தையைக் கண்டதும் பொக்கைவாய் தெரிய, ‘ப்பா….ப்பா…’என்று தாவிச் சென்றாள் சிந்து.

அவளை அள்ளி உச்சி முகர்ந்தவன் கண்கள் மனையாளை அடுத்து அளந்தது. “ஓகேவா மயிலு… பாப்பா சமத்தா இருந்தாளா?”, என்றான். எப்போதும் கேட்கும் கேள்விதான்.

அவளிடம் இருந்த பையையும் வாங்கப் பார்த்தவனை தடுத்து, “சிந்துவை பார்த்துக்கோங்க ரகு… “, என்று அவனோடு நடந்தாள்.

மாலினியின் முகமே களைப்பை சொன்னது. ஆனாலும் இருவருமே அவள் வருவதைத்தான் விரும்பினார்கள். இந்த இரண்டு நாளும் ஆசை தீர மனைவி மகளைக் கொஞ்சித் தள்ளுவான், யார் கண்காணிப்பும் இல்லாமல்.

உண்மையில், இவன் சென்னை வந்தால், மாலினிக்கு வேலை அதிகம். அதை செய், இதை செய், அந்த தொகையல், பொடி கட்டிக் கொடு என்று பர்வதம் படுத்தியெடுப்பார். இடையில் ஒரு வேளை மாமியார் வீட்டில் சாப்பாடு. மனைவியை இரவில் மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள முடியும். இதைவிட களைப்பாக இருப்பாள் இரண்டு நாட்களுமே. அதனாலேயே, மாலினி கிளம்பி வேலூர் வந்துவிடுவாள்.

வீட்டிற்கு வந்ததும், ராகவனே சென்று அனைவருக்கும் பாலைக் காய்ச்சி எடுத்து வந்தான். அக்கடா என்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்த மாலினி கையில் ஒரு டம்பளரைக் கொடுத்துவிட்டு, மகளுக்கு ஆற வைத்துக்கொண்டிருந்தான்.

ராகவன் மகளுக்கு சிப்பரில் ஊற்றி பாலைப் புகட்ட, மாலினி தானும் குடித்துக்கொண்டே ராகவனுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்த அன்னியோன்யத்தைத்தான் தேடினார்கள் இருவருமே.

பாலைக் குடித்த மாலினி தூக்கக் களைப்பில் ஆட, பஸ் பயணத்தில் தூங்கி இப்போது கொட்டமடிக்க ரெடியாக இருந்தாள் சிந்து.

“போ மயிலு. உன் நைட்டி எடுத்து வெச்சிருக்கேன். மாத்திட்டு படு. பாப்பா விளையாட வெச்சு, தூங்கினதும் நாங்க வரோம்.”, சிந்து டீவியை பார்க்கும் வேளையில், இதழில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு அனுப்பிவைத்தான்.

“ச்சு… நடுவுல எழுப்பினா நான் எழுந்துக்க மாட்டேன்.”, மாலினி சொல்லவும், “ ஹ ஹ… அப்படித்தான் சொல்லுவ, அப்பறம் நான் போடற தாளத்துக்கு நீ ஆடுவ, எனக்கு தெரியாதா என் மயிலை… போ போ… ஒரு தூக்கம் தூங்கி ரெடியா இரு. “, அவள் கன்னம் கிள்ளி கொஞ்சி அனுப்பினான்.

சனிக்கிழமை அவன் அலுவலகம் சென்று வந்தபின் மனைவி குழந்தையுடனேயே சுற்றிக்கொண்டிருப்பான். ஞாயிறு இருவருமாக சேர்ந்து சமைப்பார்கள். அந்த ஒற்றை படுக்கையறையில் குழந்தை மதியம் தூங்க வைத்துவிட்டு, ஹாலில் இவர்கள் ராஜ்ஜியம். மாலைப் பொழுது, எங்காவது வெளியே சென்று வருவார்கள். பட்ஜெட் போட்டு செலவுதான், ஆனாலும் இந்த இரு நாட்களும் இவர்களது உலகம் தனி. இந்த சுதந்திரம் மிஞ்சிப்போனால் இன்னும் ஒரு வருடம், அதற்குப்பின் ராகவனுக்கு சென்னைக்கு மாற்றல் வந்துவிடும். அதை உணர்ந்து கிடைத்த வரை அனுபவித்தனர்.

இரு பக்கமும் பெற்றோர்களை அனுசரித்துப் போகப் பழகிக்கொண்டார்கள். மாலினிக்கு வர வேண்டிய முக்கியத்துவத்தை ராகவன் பார்த்துக்கொள்ள, மாப்பிள்ளைக்கு தர வேண்டிய மரியாதையை மாலினி கண்காணித்துக்கொண்டாள். வாழ்க்கை ஓட்டம் இன்னும் இருக்கிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையும் இருக்கிறது. அது தரும் நம்பிக்கை இருவர் வாழ்க்கையையும் சீராக எடுத்துச் செல்லும்.

 

Advertisement