ஸ்வாமிநாதனுக்கு புதிதாய் அவனுள்ளே தோன்றும் உணர்வுகளை, ஒரு கட்டுக்குள் வைக்க முடியவில்லை. முத்தம் என்றுதான் ஆரம்பித்தான், ஆனால் அதுவோ அடுத்தடுத்த தேடலை தொடங்கும் வேலையே செய்யச் தூண்டியது. கன்னம் பற்றி இதழணைத்தவனோ, மிதுனாவிடம் மறுப்போ எதிர்ப்போ இல்லை என்றதும் இன்னும் இன்னும் நெருங்கினான்.
மொத்தமாய் ஒரு புதுநிலை…
அவனை அவனே மறக்கும் நிலையாகவும் இருந்தது. அவனை அவனே மீறும் நிலையாகவும் இருந்தது.
மிதுனாவின் கரங்கள், அவன் தோள் பற்றி ஒரு அணைப்பை கொடுத்திக்க, அவனுக்கோ இன்னும் இன்னும் அவள் அண்மைய வேண்டும் என்கிற வேகம் எழுந்தது. இதழுக்கு ஓய்வு கொடுக்கு, கழுத்து வளைவில் முகம் புதைத்து கிறக்கமாய் “மிதுன்னா..” என்று உச்சரித்தவன் முகத்தினை அவளின் தாலி அழுத்தியது.
“ஷ்.. என்ன டி இது..” என்று சிறு எரிச்சலுற்று சொல்லிக்கொண்டே, தாலியை தள்ளிப்போட்டவனுக்கு, தனக்குண்டான இம்மாற்றங்கள் போல் அவளிடமும் ஏதேனும் தெரிகிறதா, தன்மீது காதலும் மோகமும் கொண்டு வெட்கம் பூத்திருக்கும் மனைவியின் முகத்தை காண வேண்டும்போல் ஆசை பிறந்தது.
மென்மூச்சுக்கள் வாங்கி அவள் முகம் பார்க்க, மிதுனாவின் முகமோ நிர்மலமாய் இருந்தது. எவ்வித உணர்வுகளின் வெளிப்பாடுமில்லை அங்கே.
இமைகளை மூடி, கணவனின் கரத்தினுள் தான் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்கிற நினைப்பு மட்டுமே அவளிடம். அவனின் நெருக்கம் எல்லாம் அவனுக்கு எதுவுமில்லை என்கிற உணர்வை மட்டுமே கொடுத்ததே தவிர, மாறாய் அவளிடம் எவ்வித கிளர்வும் இல்லை.
முத்தம் நின்று, ஸ்வாமிநாதன் தன் முகத்தினை காண்கிறான் என்கிற விலகல் கூட புரியாது, மெதுவாய் இமைகள் திறந்தவள் அவனை அப்போதும் மௌனமாய் காண,
“மிதுன்னா…” என்றான் கொஞ்சம் கலவரக் குரலில்.
மிதுனாவின் கரமோ மெல்ல உயர்ந்து, அவன் தலை கோதி “நான் தப்பா எதுவும் பண்ணல தானே..” என்று கேட்டுவிட,
‘ஐயோ..!’ என்ற பெருங்குரலும், பேரிரைச்சலும் அவனுள்ளே.
நொடியில் ‘என்ன செய்துவிட்டேன் நான்?!’ என்ற ஒரு குற்றவுணர்வும்.
அதிர்ந்து நோக்கியவனுக்கு, பேச்சே வரவில்லை அவனுக்கு. அவளின் இந்த நிலையை பயன்படுத்தி தான் அவளை நெருங்கினேனா என்று அவனை எண்ணியே நொடி கசந்து போனான்.
இத்தனை நாட்களின் காத்திருப்பு, இதற்காகவா?!
கணவனின் தீண்டலில் இருந்த மாற்றம் கூட, அவனின் மனைவி உணராமல் இருக்கும்போதா, இருவரின் கூடலும் நடந்தேறவேண்டும்.
‘நோ…’ என்று அவனது மனம் காட்டுக் கூச்சல் போட்டது.
அவளிடம் இருந்து பட்டென்று அந்தநொடி விலகிவிட “என்னாச்சு?!” என்றாள் மிதுனா பதறி.
“ந.. நந்திங்..” என்றவனுக்கு முகமே மாறிவிட, அவளின் முகம் ஏறிட்டுப் பார்க்கக் கூட ஒருமாதிரி இருந்தது.
“பின்ன ஏன் தள்ளி போறீங்க?” என்று அவள் கேட்க, கை முஷ்டிகள் இறுக, அவன் மனம் கனத்துக்கொண்டு இருந்தது. சட்டென்று பேச்சு வரவில்லை அவனுக்கு.
“இல்ல.. அது.. நீ தூங்கு..” என்று பார்வையை எங்கோ வைத்துச் சொல்ல,
“நீங்க?!” என்றாள் திரும்ப.
“வர்றேன்…” என்றவன் அவள் அடுத்து எதுவும் பேசி விடுவாளோ என்று அஞ்சியே, வேகமாய் கழிவறைக்குள் நுழைந்துகொண்டான்.
கணவன் பேச்சினை நிஜமென்று நம்பியவளோ, அவனின் வரவுக்காக காத்திருக்க, ஸ்வாமிநாதனுக்கோ உள்ளே சென்று ‘ஆ..!’ என்று தொண்டை கிழிய கத்த வேண்டும்போல் இருந்தது.
‘நீயா சாமி இப்படி?!’ என்று அவனை அவனே கேட்டு கேட்டு, கைவிரல் மடக்கி சுவரை குத்தி, அவன் உணர்வுகளை அடக்கியவனுக்கு, சுற்றி இருக்கும் அனைத்துப் பொருட்களை தூக்கிப் போட்டு உடைக்கும் எண்ணம் பிறந்தது.
மிதுனாவை ஏறிட்டு காணவே முடியாது போலிருந்தது. ஆறுதலுக்கும், பற்றுதலுக்கும் தன்னை அவள் நாட, நானோ எத்தகைய எண்ணம் கொண்டுவிட்டேன் என்று வருந்தி வருந்தி அவனது மனம் துடிக்க, வெளியில் செல்லாமல் எத்தனை நேரமிருப்பது. நிமிடங்கள் கடக்க, ஷவரை திறந்து அப்படியே நின்றுவிட்டான் சில நொடிகள்.
ஆனால் எதற்கும் ஒரு நேர எல்லை இருக்கிறது தானே. மனம் கொஞ்சம் அமைதிபடுவது போல் தோன்ற, ஆழ மூச்சுக்கள் எடுத்து விட்டவன் மெதுவாய் உடைமாற்றி, உடல் துடைத்து, தலை துவட்டிக்கொண்டே வெளிவர, மிதுனா அப்போதும் அவனுக்காக காத்திருக்க,
“தூங்கு மிதுன்னா..” என்றான் உணர்வுகளற்று.
“நீங்க?!” என்றாள் இப்போதும்.
‘கொல்லாத டி என்னை..’ என்று அவளின் முன்னேயே சத்தம் போடவேண்டும் போல் எழுந்த வேகத்தை அரும்பாடு பட்டு அடக்கியவனுக்கு, அவளால் தனது நெருக்கம் இல்லாமல் உறங்க முடியவில்லை என்று புரிந்துகொண்டான்.
இமைகள் மூடித் திறந்தவனின் நெஞ்சுக்கூட்டில் அமிலம் சுரப்பது போலிருந்தது. இப்படியொரு நிலையில் இருப்பவளையா நீ எடுத்துக்கொள்ள நினைத்தாய் என்று கடுங்கோபம் அவன்மீதே.
“ம்ம்..” தலையை அசைத்தவன், விளக்கணைத்து விடிவிளக்கை போட்டவன், அவனின் இடத்தினில் வந்து படுக்க, மிதுனா மீண்டும் அவன் கரத்தினுள்ளே தானாய் புகுந்துகொண்டாள்.
“நீங்க பக்கமிருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கு…” சொல்லிக்கொண்டே அவன் மார்பில் முகம் வைத்து கண்மூடிக்கொள்ள, ஸ்வாமிநாதனின் இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது.
கட்டுப்பட்டு விட்டது என்று எண்ணியிருந்த உணர்வுகள், மிதுனாவின் நெருக்கத்தில் மீண்டும் உயிர்ப்பது போல் தோன்ற, அவனுக்குள்ளே அவன் தோற்க வேண்டிய நிலை.
“மிதுன்னா…” என்று தாடை இறுகி அவன் அவளது பெயரை உச்சரிக்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுகொண்டு இருந்தாள்.
எவ்வித அசைவும் இல்லை அவளிடம். மெல்ல மெல்ல அவளது சீரான சுவாச சத்தம் கேட்க, மெதுவாய் அவளை தன்னிடம் இருந்து விலகி படுக்க வைக்க, மிதுனாவின் முகத்தில் நொடியில் ஒரு சிணுங்கள் பாவனை. அதைக்கண்டு அவனுக்குள்ளோ பெரும் வேதனை.
“இப்படியொரு நிலையிலா நீ என்னருகாமைக்கு ஏங்கிட வேண்டும்..” என்று தோன்றிய நொடி, அவனி கரம் அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டது.
மிதுனாவோ அசைவு உணர்ந்து “இப்படியே இருங்களேன்..” என்று உறக்கத்தில் உச்சரிக்க, கோடி முறை மாய்ந்து போனான் ஸ்வாமிநாதன்.
தன் சிந்தையில்லாமல் அன்றொரு நாள் அவளின் தேகம் தீண்டினான். இன்று அவள் தெளிவில்லாமல் இருக்கையிலும், தான் அச்செயல் செய்வதா?!
தகுமா இது?!
எத்தனை முறை இவள் என்னை மன்னித்திருந்தால், எனக்காக இப்படியொரு செயல் செய்து, அதைக்கொண்டே பயம்கொண்டு, பதற்றம் கண்டு நெஞ்சு நடுங்கி, என்னிடமே இப்படி ஆறுதல் தேடி, எனை நம்பியே என்னோடு ஒன்றி அவள் உறக்கம் கொள்ள, அவளை களவாடப் பார்க்கலாமா?!
‘என்னை பாக்குறப்போ எல்லாம் உங்களுக்கு ஒரு கில்ட் பீல் வரணும்..’ எத்தனை ஆக்ரோஷத்தில் மொழிந்தாள் இதை.
அப்படிப்பட்டவள் இன்று அவனின் கரத்தினில் பொம்மை போல் கிடக்க, அவன் என்ன செய்தாலும் தடுக்கவும் போவதில்லை, எதிர்க்கவும் போவதில்லை தான்.
ஆனால், இதையா ஸ்வாமிநாதன் எதிர்பார்த்தான்?!
முதல் கூடலின் உள்ளர்த்தமும், உன்மத்தமும் மிதுனாவிடம் தான் காணவேண்டும், உணரவேண்டும் என்றுதானே காத்திருந்தான்.
இன்று அதை அவனே பொய்யாக்குவதா?!
‘நீ பொய்யனா சாமி?!’ என்று அவனின் மனசாட்சியே அவனிடம் கேட்டுவிட்டது.
மனதில் அடித்துக்கொண்டு ஓடும் இப்படியான எண்ணங்களோடு, மனைவியின் முகம் பார்த்தான். ஒரு மெல்லிய சிரிப்பு கூட எட்டிப்பார்த்தது.
‘எப்படியொரு நிலைல என்னை கொண்டுவந்து நிறுத்திட்ட நீ?!’ என்று கேட்காமல் கேட்டது அவனின் கண்கள்.
அடியோடு அவளிடம் இதோ தோற்றுப் போனானே. எல்லாம் தெளிந்து அவள் கேள்வி கேட்டுவிட்டால், என்ன சொல்வது என்கிற பயம் இப்போது மேலெழும்பியது.
ஒரு சிறு துளியளவும் அவனுக்குத் தூக்கமில்லை. ஆனால் மிதுனா நன்கு உறங்கினாள். தள்ளிப் படுக்க வைக்கலாம் என்று அவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் கண்டது என்னவோ பூஜ்ஜியம் தான். பெருமூச்சுக்கள் மட்டும் தான் அவனால் விட முடிந்தது.
பொறுத்துப் பார்த்தான், எலும்புகள் நொறுங்கட்டும் என்று இறுக கட்டிக்கொண்டு கண் மூடிவிட்டான்.
நொடிகள் நிமிடங்களாய் மாறி, நிமிடங்கள் நீள அவனுள்ளும் ஒரு அமைதி மெது மெதுவாய் எட்டிப்பார்க்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் கண்களும் மூடிக்கொண்டது.
காலையில் முதலில் கண்விழித்ததும் அவன் தான். அப்போதும் அவனை ஒட்டிக்கொண்டு தான் மிதுனா படுத்திருக்க, மெதுவாய் அவளின் தலை கோதியவனுக்கோ ‘கொஞ்சம் தெளிவானதும், தான் நெருங்க முயன்றதை கேட்டுவிடுவாளோ?!’ என்று பயமாய் இருந்தது.
என்ன சொல்வான் ஸ்வாமிநாதன்?!
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஆம் என்று கர்வமாய் மொழிவானா?!
ஏற்கனவே மண்டியிட்டுவிட்டான். அடிவாங்கியும் விட்டான்..
கண் விழித்ததும் தேடுவாள் என்று தெரியும். இருந்தும் அறைவிட்டு வெளியில் வர ராஜேஸ்வரியோ இத்தனை நேரம் காத்திருந்தது போல “மிதுனா எப்படியிருக்கா சாமி?!” என்று கேட்க,
“தூங்குறா ம்மா..” என்றிட,
வீட்டினர் அனைவருமே அங்கே தான் இருந்தனர். சுந்தரேசன் எத்தனை மணிக்கு வந்தார் என்று தெரியவில்லை. பெரிய மகனுக்காக காத்திருப்பது புரிந்து “ப்பா..” என்று அவரின் அருகே செல்ல,
“எப்படி இருக்கு மிதுனா?!” என்றார்.
“தூங்கிட்டு இருக்கா. எழுந்தா தான் தெரியும்..” என,
“கலங்காம பார்த்துக்கோ சாமி..” என்றார் மகனிடம்.
அவனுக்கோ ‘நானே கலங்கித்தான் நிக்கிறேன்..’ என்று சொல்லவேண்டும் போலிருக்க,
வெங்கடேசனோ “ரொம்ப நேரம் தூங்கவும் விடக் கூடாது சாமி. எழுப்பி ரொட்டீன் பாலோ பண்ண விடணும். கொஞ்சம் எங்கேஜ்டா வச்சுக்கணும். ரெஸ்ட் எடுக்கட்டும். ஆனா இதையே ரொம்ப யோசிக்கக் கூடாது…” என்று அறிவுரை சொல்ல,
“சரிங்க மாமா..” என்று கேட்டுக்கொண்டான்.
அதற்குள் சாவித்திரியும், ராஜேஸ்வரியும் அங்கே உள்ளேயே சென்று மிதுனாவைப் பார்க்க, அவள் அப்போது தான் உறக்கம் நீங்கி எழுந்தமர்ந்து இருந்தாள். தலை பாரமாய் இருப்பது போலிருக்க, முதல் நடந்தது எல்லாம் முதலில் நினைவில் வரவில்லை.
தலையை பிடித்து அமர்ந்திருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் நினைவில் வர, கண்கள் அகல விரிந்து ‘கடவுளே..’ என்று நெஞ்சடைத்துப் போக, மனது வேகமாய் கணவனைத் தேடியது.
பதறிக்கொண்டு கட்டில் விட்டு இறங்கப் போகும்போது தான் “மிதுனாம்மா..” என்று அவளை நெருங்கிவிட்டார்கள் பெண்மணிகள்.
“அ.. அவர் எங்க?!” என்று அவள் கேட்டுவிட,
“இப்போ தான் சாமியும் எழுந்து வந்தான்..” என்ற சாவித்திரி “பிரெஷ் ஆகிட்டு வா மிதுனா..” என்று சொல்ல,
“ம்ம்..” என்று மெதுவாய் தலையசைத்து, எழுந்துச் சென்றாள்.
ஸ்வாமிநாதன் அவளிடம் கணவனாய் நெருங்கியது எல்லாம் அவளுக்கு நினைவிலேயே இல்லை. இத்தனை நடந்திருக்கிறது தான், கண் விழிக்கையில் என்னருகே இருக்கவேண்டாமா என்று சிறு கோபமும் தலை தூக்க, குளித்து உடைமாற்றி தான் வெளிவந்தாள்.