Advertisement

ஓம் நமச்சிவாய.

உன் நினைவே என் சுவாசமானது

அத்தியாயம் 14. 

பல வருடங்களுக்கு முன்.

பூமணிக்கு திருமணம் ஆகும் போது பதினெழுவயது தாய் தந்தை இல்லாமல் பாட்டியுடன் வளர்ந்தவர். பாட்டி இறக்கும் தருவாயில் தான் பூமணியை அவ்வூரில் இருந்த கணேஷன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

அவரும் மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர்களது திருமணவாழ்க்கையும் மிகவும் அன்பாகதான் சென்றது ஆனாலும் மூன்று வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என்ன செய்வதென்று தெரியாமல் பூமணி கவலையுடன் இருக்கவும் கணேஷன்தான் அவ்வூரின் மூதாட்டி ஒருவரிடம் அழைத்துச்சென்றார்

அவரும் பூமணியை பார்த்துவிட்டு உடலில் ஒரு குறைபாடும் இல்லை இனி கடவுளின் சித்தம் அதனால் குழந்தை வரம் அருளும் பிரபலமான கோவிலுக்கு சென்று வரச்சொன்னார்.

அவர்களும் தொடர்ந்து அவர்சொன்ன கோவிலுக்கும் வேறுகோவில்களுக்கும் சென்றனர்.அவ்வாறு சென்ற ஒரு கோவிலில் தான் அவர்கள் சாமியை பார்த்து திரும்பி செல்லும் போது ஒரு சிறு குழந்தை   ஒன்று பூமணியின் சேலையை பிடித்து இழுத்து தூக்குமாறு தவித்தது.

அதை பார்த்த பூமணி கணேசனின் கையை பிடித்து அவரையும் நிறுத்தி குழந்தையை தூக்கி காட்டினார். அப்போது அதை பார்த்து அங்கு வந்த பூசாரி.” அம்மா இந்த குழந்தை தாயில்லாத குழந்தைமா இதை இங்க கோவில்ல பூ கட்டி விற்கின்ற அம்மா தான் பார்த்துக்கும் அதுவே இரவையில வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு காலையிலயே அழைச்சிகிட்டு வரும் இப்போ அந்த அம்மாக்கு உடம்புசரியில்லன்னு அவங்க மகன் அவங்களை அழைச்சிட்டு போயிட்டார். “

” இது பெண் குழந்தை அழைச்சிட்டு போனா அதோட பொறுப்பை அவங்க ஏற்றுக்கொள்ளும்படி ஆகும்னு அவங்க இந்த குழந்தையை இங்கயே விட்டுட்டு போயிட்டாங்க அந்தம்மா மிகவும்  மனவருத்தத்தோடதான் மகனோட கட்டாயத்தினால் தான் போனாங்க போகும் போது யாராவது குழந்தை இல்லாம இங்க குழந்தை வரம் கேட்டு வந்தாங்கன்னா இந்த பாப்பாவை குடுங்கன்னு சொல்லிட்டுப்போனாங்க. அப்புடி வந்தாங்க ஆனா பாப்பா அவங்ககிட்டெல்லாம் போகவேயில்லை ஆனா பாருங்க இப்போ பாப்பாவே உங்களை தேடி வந்து இழுத்து நிறுத்தியிருக்கு அப்போ பாப்பாவுக்கு உங்களை பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடிச்சிருந்தா பாப்பாவை அழைச்சிட்டுபோங்க உங்க முகத்துல குழந்தை இல்லன்ற உண்மையான கவலை தெரியுது நீங்க குழந்தையை நல்லபடியாக பார்த்துப்பிங்கன்னு எனக்கு தோணுது என்னங்க சரியா?” .என்றார் அந்த கோவில் பூசாரி.

அவர் சொன்னதை கேட்ட பூமணி கணேசனின் முகம் பார்க்க அவருக்குதான் தெரியுமே மனைவி படும் கஷ்டத்தை ஒவ்வொரு மாதமும் நாள் தள்ளிப்போனால் உடனே சந்தோசப்படுவார் பூமணி மீண்டும் இரண்டு மூன்று நாளில் வீட்டிற்கு ஒதுங்கிவிடுவார் பூமணி படும் கஷ்டம் மூன்று வருடமாகியும் குழந்தையில்லை என்ற அவ்வூர் பெண்களின்  அவதூர் பேச்சு என பூமணி படும் பாட்டை தினமும் கண்ணால் பார்ப்பவர் தானே கணேசன்.

அதனால் ஒரு முடிவுடனே பூசாரியிடம் கோவிலுக்கு அன்பளிப்பு கொடுத்துவிட்டு கடவுளிற்கு நன்றி சொல்லிவிட்டு அக்குழந்தையை கையில் ஏந்தியபடியே அவரின் ஊருக்கு சென்றார்.

அங்கு சென்றவர்களை  குழந்தை இல்லை என கோவிலுக்கு சென்றவர்கள் மீண்டும் வரும்போது இரண்டு வயதுடைய குழந்தையோடு வரவும் மனம் காயப்படும்படி பேசிவிட்டு சென்றனர் அவ்வூர் மக்கள்.

அந்த நேரம் அந்த மூதாட்டிதான் அவர்களை ஆள் வைத்து அழைத்து குழந்தையையும் பார்த்துவிட்டு.             ”  இதுக்குதான் உங்களை கோவிலுக்கு போகச்சொன்னேன். பெற்றெடுப்பது மட்டும் நம் குழந்தை இல்லை நாம் குழந்தை எடுத்தும் வளர்க்கலாம் அதனால் இனி உங்களுக்கு புத்திரதோசம் நீங்கி குழந்தை பிறக்கவாய்ப்பிருக்கின்றது.”

“அதனால் இந்த குழந்தைக்கு சாந்தி என பெயரிடுகின்றேன் பெயருக்கு ஏற்ற போன்றே அன்பும் சாந்தமும் மட்டுமே இவளோட பூர்விக சொத்தாககொண்டு வளரும் இடம் வாழும் இடம்மெல்லாம் அவளே சிறப்பிப்பாள் அதனால் அவளை பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் இனி நீங்க இந்த ஊரில் இருப்பது சரியில்லை இந்த குழந்தையின் வாழ்வு கெட்டுவிடும்  வக்கிரம் பிடித்த கூட்டத்தினர் கண்டதையும் பேசி கெடுத்துவிடுவார்கள். அதனால் இங்கிருக்கும் உன் கடை வீடு என அனைத்தையும் வரும் விலைக்கு விற்றுவிட்டு ஒரு கிராமப்புறமாக ஒரு ஊரில் போய் வாழுங்க இந்த குழந்தை வந்த பாக்கியம் குழந்தையும் உண்டாகலாம்”.  என்று அவர்களை அந்த ஊரிலிருந்து அனுப்பிவைத்தார் அந்த மூதாட்டி.

அவர்களும் மூதாட்டியின் சொல்லை தட்டாமல் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு வாடிப்பட்டிக்கு வந்து சேர்ந்தனர்.

அதன் பின் அதுவே அவர்களின் இருப்பிடமாகிவிட்டது. அங்கு வந்து சேர்ந்து ஒருவருடத்தில் பூமணி கருத்தரித்தார். அதில் மிகுந்த சந்தோசமும் மகிழ்வும் கொண்டு மிகுந்த கவனத்தோடு பூமணி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார்.

அதில் பூரிப்போடு சந்தோசமாக அந்த ஊரிலேயே அவரின் நிறந்தர தொழிலான மள்ளிகை கடையை நடத்தி சொத்தை விற்றுவந்த பணத்தில் ஒரு இடம் வாங்கி அதில் சிறு வீடு கட்டி  இருந்தனர்.

அதன்பின் பத்துவருடம் கழித்து பதின்மூன்று வயதாகியும் சாந்தி இன்னும் சடங்காகவில்லை என அடுத்த கவலை கொண்டார் பூமணி. வளர வளர வசந்தி சுயநலத்தோடு மூர்க்ககுணத்தோடும் வளர்ந்தாள் சாந்திக்கு எதுவும் கிடைக்கவிடாமல் அதையும் வசந்தியே எடுத்துக்கொள்வாள்.

அதன் பின் சாந்தியின் இயல்பான குணத்தால் அவரே வசந்திக்கு அனைத்தும் விட்டுக்கொடுத்துவிடுவார். இதை பூமணியும் கணேசனும் எவ்வளவு கண்டித்தும் கேட்கவில்லை வசந்தி.

ஆனால் வசந்திக்கு அடக்கமான அமைதியான சாந்தியை மட்டம் தட்டும் விதமாக மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது சாந்தி பதினைந்து வயதாகியும் சடங்காகவில்லை ஆனால் வசந்தியோ பன்னிரண்டு வயதிலேயே சடங்காகி விட்டாள். 

இந்த விசயத்தை ஊரார் பேசாவிட்டாலும் வசந்தியே தான் பெரியவள் போன்றும் சாந்தி ஏதோ பாவம் பண்ணியவள் போன்றும் பேசிப்பேசியே சாந்தி. கணேசன் பூமணி மூவரையும் மனதளவில் காயப்படுத்தினாள். இதை தாங்க முடியாமல் மிகுந்த மனவருத்ததிற்க்கு உள்ளாகி பெற்றவர்கள் இருவரும் நொருங்கிப்போயினர்.

அப்போதுதான் பூமணி மீண்டும் கருவுற்றார் அப்போதுதான் செழியன் பிறந்தான். அவன் பிறந்த நேரமோ என்னவோ சாந்தி சடங்கானார். 

அதில் மகிழ்ச்சியடைந்த மூவரும் அவனை கொண்டாடினார்கள். சாந்திதான் தான் திருமணம் முடிக்கும் வரை செழியனை வளர்த்தது அவனும் வசந்தியிடம் போகமாட்டான் அதேபோன்று வசந்தியும் அவனை தூக்கவோ கொஞ்சவோ ஆசை கொண்டதுமில்லை ஆர்வம் காட்டியதும் இல்லை. ஒரு நாள் இரவில் தூக்கத்திலேயே மாரடைப்பினால் மீளாத்துயரில் மாண்டுபோனார் கணேசன்.

அதனைத்தொடர்ந்து தான் முத்தரசி அகிலம் என இருவரும் போட்டி போட்டு சாந்தியின் திருமணம் நடந்ததும் சாந்தி நீண்ட வருடம் குழந்தையில்லாமல் நேர்த்திகடன் வைத்து மிகுந்த சிக்கலில் ஆப்ரேசன் மூலம் எழில் பிறந்ததும் அதன்பின் இருவரும் உறவு கொண்டு சாந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தால் தாய் சேய் இருவரையும் காப்பாற்ற முடியாது கருத்தடை ஆப்ரேசன் பண்ணுவதற்க்கும் சாந்திக்கு வாய்ப்பில்லை இனி நீங்கதான் உங்க வாழ்க்கையை தீர்மானிக்கவேண்டும் என்று மூர்த்தியிடம் டாக்டர் சொல்லிவிட்டார்.

திருமணம் முடித்த ஆரம்பத்தில் வசந்தியைபிடித்திருந்தமையால் சாந்திதான் ஏதோ செய்து தன்னை திருமணம் முடித்ததாக நினைத்து ஒதுங்கி இருந்ததும் கோபம் வந்தால் அடிப்பதுமாக துன்புறுத்தினார் மூர்த்தி. ஒரு தடவை மூர்த்தியின் பிறந்தநாளன்று முத்தரசியின் கட்டாயத்தினால் சாந்தியையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார் மூர்த்தி.

அங்கு வைத்துதான் வசந்தி சாந்தியிடம் பேசியதை கேட்டார்.           ” நல்லா இருக்கியா வசந்தி.”

” ஏன் எனக்கு என்ன கல்யாணம் முடித்த அடுத்த மாசமே மணி தங்கி பத்துமாசத்துல பையனை  பெத்துட்டேன். அந்த வீட்ல நான் வச்சதுதான் சட்டம் அந்த கெழவியோ என் புருசன் நெடுமாறனோ எதுவும் சொல்லமாட்டாங்க அதனாலதானே அந்த மூர்த்தி முசுடை  நான் வேணாம்ன்னு சொன்னேன் இல்லன்னா அவனும் அவன் முசுட்டுகோபமும் அதனால யாரு நிம்மதியில்லாம சந்தோசம் இல்லாம வாழமுடியும் அதுவும் அவனோட இதெல்லாம் யோசித்துதான் நான் அவனை உன் தலையில கட்டினேன்  நீ இப்புடி பிள்ளை பாக்கியம் இல்லாமல் இருக்கனும்ன்னு உன் தலையெழுத்து நீயும் இப்போ அதை அனுபவிக்கிற.”

” ஆனா நான் நல்லா இருக்கிறேன் எனக்கு எந்த குறையும் இல்ல அந்த ஓட்டு வீட்ல  இருந்து கஷ்டப்பட்டதை விட நான் பெரியவீட்ல ஆசைபட்டதை செய்துக்கிட்டு புடவை நகைனு வாங்கி நல்லா இருக்கேன் நீ தான் அந்தாளை கட்டியும் நூல் புடவையில இருக்கிற காசு இருந்தும் கட்டின பொண்டாட்டிக்கு ஒரு பட்டு புடவை வாங்கி குடுக்க கஞ்சப்படுறானோ இவனெல்லாம் என்ன மனுசனோ தெரியல.” என வசந்தி வாய்க்குவந்த படி பேச.

சாந்தி அதற்கு பதில் சொல்ல வாய் திறக்கும் போது மூர்த்தி அழைத்தார். அதனால் சாந்தி சென்றுவிட்டார். அதன் பின் நன்கு யோசித்துதான் மூர்த்தி வசந்தி என்னும் செயற்கை அழகு பேயை அடியோடு மனதிலிருந்து தூக்கிப்போட்டுவிட்டு அடித்து கஷ்டப்படுத்தியும் சாந்தி பொறுமையாக தான் ஏற்றுக்கொள்ளும் வரை தனக்கு வசந்தியை பிடித்திருந்தது தெரிந்தும் காத்திருந்தபடியால் மனதில் குற்ற உணர்வோடு எவ்வாறு வாழ்வை ஆரம்பிப்பது என்று யோசித்தபடி இருந்தார்.

அப்போதுதான் முத்தரசி சாந்தியிடம் அவர்கள் தனி படுக்கையில் படுப்பதை பார்த்துவிட்டு சாந்தியை விசாரித்து அகிலத்துடன் திட்டம் போட்டு ஆட்களை வைத்து மூர்த்தியை ஆண் இல்லை என கூறி கோவப்படுத்தி அவர் யோசனையை தவிர்த்து சாந்தியுடன் வாழ ஆரம்பித்தார்.

அதன் பின் நீண்ட போராட்டத்தின் பின் எழில் பிறக்கும் போது டாக்டர் அப்படி சொன்னதும் மனதளவில் நொருங்கிவிட்டார். கருத்தடை ஆப்ரேசனும் பண்ணமுடியாது என்று சொன்னதும் எங்கு சாந்தியுடன் அன்பாக பழகினாலும் ஆண் மனம் தப்பிதவறி சபலம் கொண்டு உறவு ஏற்பட்டு விட்டால் அதன் மூலம் குழந்தை உருவாகி இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் என நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக மனதை கல்லாக்கி சாந்தியிடம் நெருங்கி வருவதை விட்டிருந்தார் மூர்த்தி.

 சாந்தி இவ்வளவு கஷ்டம் கொடுத்தும் தன்னுடம் வாழ்வதும் தான் விலகி இருந்தும் ஏன் என்று தொல்லை செய்யாமல் அனைத்திற்கும் ஒத்துப்போனதால் மூர்த்தியின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

பேசிபழகும் போது தவறுதலாக உறவு ஏற்படும் வாய்ப்பு வந்துவிட்டாலும் சாந்தி தடுக்கவோ ஒதுங்கவோ மாட்டார் அந்த பயத்திலேயே சாந்தி உறங்கியதும் அவரை பார்த்து தலையை தடவி நெற்றிமுத்தம் வைத்துவிட்டு போர்வையை சரி செய்து விட்டு அவருக்கென வைத்திருக்கும் பாலில் தூக்கமாத்திரை போட்டு குடித்துவிட்டு படுத்துவிடுவார். அந்த மாத்திரையின் விளைவால் ஆழ்ந்து உறங்கி விட்டு.  நன்கு விடிந்ததும் தான் எழுந்து அவரது கடமைகளை முடித்துக்கொண்டு பகலில் பெரும்பாலும் வெளியே கழித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வருவார் சாந்தி தரும் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் அன்றும் அதுவே தொடரும். அவர்களிடையே.

சாந்தியுடன் பேசுவதில்லை அன்பாக இருப்பதில்லை என வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளா விட்டாலும் மனதில் மிகுந்த உயர்ந்த இடத்தில் சாந்தியை வைத்து அவரின் நடமாட்டத்தை செயலை தாயுடன் பேசுவது எழிலுடன் பழகுவது என அனைத்தையும் தெரிந்தும் உணர்வுபூர்வமாக சாந்தியுடன் மனதளவில் அவர் நினைத்ததுபோன்று வாழ்ந்தார் மூர்த்தி.

சாந்திக்கு கொடுக்காமல் விட்ட அனைத்து அன்பு பாசம் நேசம் அக்கறை கவனிப்பு பேசிப்பழகுவது என அனைத்தையும் இரண்டு மடங்காக மகள் எழிலுக்கு கொடுத்து செல்லமாக உயிராக நினைத்து வளர்த்தார் மூர்த்தி.

அப்படி வளர்த்த மகளின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று தான் பூமணி குடும்பத்துடன் பழகினால் கண்டிப்பாக செழியனிற்கு பெண் கேட்பார்கள் சாந்தியே முன்னின்று நடத்தி வைக்க வாய்ப்பு உண்டு சாந்தியின் உடன் பிறப்பு அதனால் செழியனிற்கு எழிலை திருமணம் செய்துகொடுத்து எழிலுக்கு ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ என பயந்துதான் மூர்த்தி தானும் தன் குடும்பத்தையும் ஒதுக்கியே வைத்தார்       அவர்களிடமிருந்து  ஆனால் விதி அவர் எதற்கு பயந்தாரோ அதுவேதான் நடந்தது.

ஆனால் வசந்தியோ இறைவன் அனைத்தையும் கொடுத்தும் ஒழுங்காக அன்பான மகள் சகோதரி,மனைவி  மருமகள் தாய் மாமியார் பாட்டி என அனைத்திலும் தோற்றுப்போனார்.

அவர் திருமணம் முடித்த அதே மாதத்தில் மாறன் உண்டாகி விட்டான். அலட்சியம் உதாசீனம் பொறுப்பற்ற தனம் பேராசை என அனைத்தும் கொண்டு அவரது செயலால் அவரை தவிற மற்ற இரண்டு குடும்பத்தவரையும் பாடுபடுத்தி நிம்மதி இழக்கவைத்து இதோ இன்று கிடைத்த ஒரு வாழ்விலும் என்ன சுகம் கண்டாரோ தானே தேடி போய் விதியை முடித்துக்கொண்டார்.

டாக்டர்கள் எவ்வளவு போராடியும் பாறையில் தலை  பலமாக மோதியதால் இரத்தம் நிற்க்காமல் வந்து மூளை சிதறி விட்டது அவர்களும் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

“இதுதான் மாப்பிள்ளை நடந்தது. அவங்க ரெண்டு பேரும் ஒரே இரத்தம் இல்லை அதனால் எழிலுக்கு பெரியளவில் பிரத்தினை நடக்காதுனு நம்புவோம் அன்னைக்கு நீங்க செழியனிடம் பேசும்போது நான் கேட்டேன் எனக்கு சாந்தி பிறக்கவில்லை என்பதே நினைவு இல்லை இன்னைக்கு தப்பே செய்யாத என் யையனை நீங்க அதுவும் பொது இடத்துல வைத்து செருப்பால அடிக்க போகும் போது என்னால தாங்க முடியல இனி எழில் என் பொறுப்பு என் மக வயிற்று பேத்தி மகன் பொண்டாட்டி நான் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பேன் நீங்க இனி எழிலை பற்றிய கவலையை விட்டுட்டு என் மக சாந்தியை நல்ல படியா பார்த்துக்கோங்க அது போதும் எனக்கு .” என்று தன் மனம் திறந்து மருமகனிடம்  தன் சம்மந்தி அகிலம் முத்தரசியையும்  வைத்துக்கொண்டு பேசினார் பூமணி.

அவ்வூரில் ஒரு வீட்டில் மக்கள் கூட்டம் திரண்டு போய் இருந்தது. 

நினைவு தொடரும்…

Advertisement