Advertisement

ஓம் நமச்சிவாய.
உன் நினைவே என் சுவாசமானது.
அத்தியாயம் 12.
வழமையாக அதிகாலையிலயே திருமணத்திற்கு பின் எழுந்துவிடுவாள் அன்பு ஆனால் இன்றோ தற்போது நேரம் காலை ஏழுமணியாகி விட்டது இன்னும் எழுந்து அறையை விட்டு வெளியே வரவில்லை பெண்களும் சத்தமில்லாமல் படுத்திருந்தனர்.
பொறுத்து பார்த்தவன் என்னவென்று போய் பார்ப்போம் என நினைத்து எழுந்தான் அவனும் இன்னும் காலையில் இருந்து எதுவும் உண்ணவோ குடிக்கவோ இல்லை அவளது கையாலே நன்றாக ருசியான காப்பி போட்டுக்கொடுப்பாள் இன்று அது கிடைக்காமல் எதையோ இழந்ததை போன்று உணர்ந்தவன் என்னவென்று பார்ப்பதற்காக அறையின் வாயில் வரை சென்றான்.
என்னதான் தொட்டு தாலி கட்டிய பெண்ணாக இருந்தாலும் உடனே அறையில் நுழைவதற்க்கு ஏதோ போன்று இருந்ததால் அறை வாயிலிற்கு செல்வதும் வந்து இருப்பதுமாக இருந்தவன் மேலும் ஒருமணி நேரம் இருந்தான்.
இதற்கு மேல் முடியாது என அன்பு நடந்து திரியும் சத்தம் பக்திப்பாட்டு சத்தம் என அவளின் இருப்பை அவனிற்க்கு உணர்த்தியபடியே இருப்பாள் அன்பு. ஆனால் இன்று அவள் அதேவீட்டில் இருந்தும் அறையைவிட்டே வெளியே வராமல் இருப்பதையே அவனால் சமாளிக்கமுடியவில்லை,அவனின் மனதின் கேள்வி எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது அப்படி இருக்குமோ?. ஏதேனும் பிரச்சினையாக இருக்குமோ என நினைத்து குழம்பியவன் இறுதியில் போய் என்னவென்று பார்ப்பது என்ற முடிவோடு அறையினுள் சென்றும் விட்டான் மணிமாறன்.
அங்கு சென்று அவன் பார்த்தது அன்று அவன் அவளின் மானத்தை காப்பாற்றுவதற்க்காக அவன் அணிந்திருந்த சட்டையை கழட்டி கொடுத்த அதே சட்டையை அணிந்துகொண்டு உடலை குறுக்கிக்கொண்டு அனத்தியபடி படுத்திருந்தாள்.
அவளின் தோற்றம் மனதை பிசைய அருகில் சென்று தொட்டுப்பார்த்தான் காய்ச்சல் அனலாக கொதித்தது. அவன் கை சுட்ட சூட்டையே அவனால் தாங்கமுடியவில்லை நெருப்பில் நேரடியாக கைவைத்தது போன்று உணர்ந்தான் மாறன்.
உடனே கையை எடுத்துவிட்டு அவளை நேராக படுக்கவைத்து கால் கைகளை நன்கு சூடுபறக்க தேய்த்தான் நீரில்,துணியை நனைத்து முகம் கை கால் என துடைத்துவிட்டு உடனே பயத்துடன் மாமன் செழியனுக்கு கைபேசியில் அழைத்து விசையத்தை சொல்லி உடனே மருத்துவரை அழைத்துவரும் படி கூறிவிட்டு கை வைத்தியம் என்ன பண்ணலாம் என அகிலம் அப்பத்தாவையும் அழைத்துக்கேட்டான்.
 மாறன் பதட்டத்தோடு அழைத்ததும் அனைவரும் வந்துவிட்டனர்.
பெண் வைத்தியர் வந்ததும் மாறன் வெளியேறினான் அகிலம் மற்றும் ராசாத்தியம்மாவும் தான் அன்புவோடு இருந்தனர்.
மேலும் பத்து நாள் கழித்து நாள் பார்த்து பூங்கொடிக்கு தண்ணீர்வார்த்து ஒரு பெரிய குடும்பத்து விஷேசம் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அவ்வளவு சிறப்பாக மச்சினியின் சடங்கை மண்டபம் பிடித்து ஆட்களுக்கு சொல்லி என சிறப்பாக பண்ணி ராசாத்திக்கு மூத்த மகன் இல்லாத குறையை தீர்த்துவைத்தான் மாறன்.
அவன் சொன்னது போன்றே ராசாத்தியின் மறுப்பையும் மீறி இரண்டு பெரிய படுக்கையறை கட்டி வீட்டின் முன் வடிவமைத்து வண்ணம் தீட்டி அலங்கரித்து மனமகிழ்வுடனே அனைவரின் பாராட்டையும் பெற்று நேற்று தான் சடங்கை சிறப்பாக மாமனின் துணையுடன் வெற்றிகரமாக செய்து முடித்தான்.
இருவரும் ஜோடியாக இழுத்துக்கட்டி நடத்தியதால் ஊரார் கண்பட்டுவிட்டதோ தெரியவில்லை.
 
வெகு நேரம் கழித்தே வீடுவந்து பெண்களை உடல் துடைத்து படுக்கவைத்து விட்டு அவளும் படுத்துவிட்டாள்.
சற்று நேரம் கழித்து பெண்களிடம் அசைவு தெரிந்ததுமே எழுந்துவிட்டாள் எழுந்ததும் சென்று சமையலறையில் பாலை அடுப்பில் வைத்துவிட்டு கலக்குவதற்கு ஏனையவற்றை தயார்படுத்திவிட்டு பாலை இறக்கினாள்.
அது கைதவறி அவளது காலில் கொட்டிவிட்டது கொட்டியதும் துடித்துவிட்டாள் அன்பு உடனடியாக பற்பசை எடுத்து அதில் போட்டுவிட்டு மீண்டும் பாலை  காச்சி ஆறவைத்து மகள்களிற்கு கொடுத்து அவர்கள் குடித்ததும் வந்து சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள் வேலை செய்யும் போது எரிவு வலி என மகள்களின் பசியாற்றுவதற்காக பல்லை கடித்து பொறுத்திருந்தவள் வந்து படுத்ததும் அவளால் தாங்க முடியவில்லை மிகவும் சிரமப்பட்டு வலியை தாங்கியபடியே தூங்கிப்போனாள் அன்புக்கொடி.
உடனடியாக மருந்து செய்யாததனால் காயம் அதிகமாகி பொக்கலமாகி காய்ச்சல் வந்துவிட்டது. விடியகாலையில் எழப்போனவளால் காலை அசைக்கவோ எழவோ முடியவில்லை அப்படியே காய்ச்சல் அதிகமாகவும் தாங்கமுடியாமல் படுத்துவிட்டாள்.
மாறன் செல்வதற்கு சற்று முன்னர்தான் மீண்டும் எழ முயன்றால் முடியாமல் ” ம் ம் ம் ம்” என்று அனர்த்தியபடி படுத்திருந்தாள்.
உள்ளே சென்று பார்த்த மாறனால் அவளை அந்த கோலத்தில் பார்க்கமுடியவில்லை காயத்தில் படாமல் புடவையை சற்று தூக்கிவிட்டிருந்தாள் அன்பு மாறனோ காயத்தை பார்க்காமல் புடவையை சரி செய்துவிட்டு வியர்த்தால் காய்ச்சல் குறையும் என நினைத்து போர்வையை போர்த்திவிட்டு முகத்தை துடைத்து விட்டு அவளது தலையை தூக்கி மடியில்வைத்துக்கொண்டுதான் செழியனுக்கும் அகிலம் பாட்டிக்கும் கைபேசியில் அழைத்து சொல்லிவிட்டு காத்திருந்தான்.
அவனின் மனதின் கவலை தாங்கமுடியவில்லை அதை மாமனிடம் சொல்லி புலம்பினான்        ” மாமா சுண்டெலிக்கு என்ன தலைவிதி ஏன்?. என்னைப்போய் பொய் சொல்லி தேடி வந்து கட்டிக்கிட்டு இப்படி கஷ்டப்படனும் பாரு எனக்கு பொறுப்பே இல்ல மாமா இரவு எப்ப அவளுக்கு காய்ச்சல் வந்துதோ ஆனா நான் ஆடி அசைந்து ஆறுதலா ஏழு மணிக்கு போய் பார்த்துருக்கேன் இதுவே அவளை விரும்பி கட்டிருந்தேன்னா இப்புடியா இருந்துருப்பேன் உயிர் துடிக்க காய்ச்சல் வந்தப்பவே மருந்து செய்துருப்பேன் அவளை அப்புடி பார்த்ததும் தாங்க முடியல மாமா என்னால.” என்று மிகவும் மனவருத்தத்தோடு பேசியபடியே செழியனின் தோளில் சாய்ந்துகொண்டான் மாறன்.
” ஏன்டா மாப்புள உனக்கு அன்பு மேல காதல் வந்துடுச்சி டா அதை நீ உணர்ந்து ஏற்றுக்கொண்டா இப்புடி நீ உன் பொண்டாட்டிய கட்டிப்பிடிக்கிற நேரத்துல என்னை ஏன் பிடிக்கப்போற கொஞ்சம் மேல் மாடில இருக்குறதை தூசி தட்டி தண்ணி தெளிச்சி எழுப்பி விடு அது சொல்லும் இப்புடி நீ அன்புக்காக துடிக்கிறதுக்கு என்ன பேர்ன்னு இனியாவது பிழைக்கப்பாரு மாப்புள வா உள்ள போய் என்னன்னு பார்க்கலாம்.” என்று மாறனின் நெற்றியில் தட்டி யோசிக்கும் படி கூறி அழைத்துச்சென்றான் செழியன்.
உள்ளே சென்றால் அங்கு அகிலம் பாட்டி ராசாத்தியிடம் மாறனை திட்டிக்கொண்டிருந்தார். அதற்கு ராசாத்தியோ மாறனிற்க்குதான் ஆதரவாக பேசியபடி இருந்தார் அதை கேட்ட மாறனோ குற்ற உணர்விற்கு ஆளானான்.
” இல்ல அத்த என்னுல தான் தப்பு  என்னை நம்பி வந்தவளை நான் தானே கவனிச்சிருக்கனும் கோவம்ற போர்வையில அசால்ட்டா இருந்தது என் தப்புதானே அத்த இனி காய்ச்சல் குணமாகுற வரை நானே பார்த்துக்கிறேன்.” என்றான் மாறன்.
” உன்னை நான் திட்டினதில்ல ராசா இதுவரை ஆனா இன்னைக்கு நீ பொறுப்பில்லாம நடந்துக்கிட்டதை என்னாலயே ஏற்றுக்கொள்ள முடியல மாறா தீ காயம் பட்டிருக்கிற புள்ளைக்கு புடவை இழுத்து விட்டு போர்வை போர்த்தி வச்சிருக்கியே துணி அந்த காயத்துல ஒட்டி அதை எடுக்க இப்ப அந்த வைத்தியரம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க அப்புடி பக்குவமா எடுத்தும் அன்பு வலியில துடிச்சிட்டா காயம் பட்ட உடனே  கற்றாலையை ரெண்டா பிளந்து அதுல இருக்கிற பசையை எடுத்து தீ காயம் பட்ட இடத்துல தடவினா உடனே பொங்காது கொப்பலம் போடாது மாறா அதுக்கு உதவிக்கு ஒரு ஆள் இருக்கனும் காயம் பட்டவங்க வலில துடிப்பாங்க மருந்தெல்லாம் தேய்க்கவோ தேடவோ மாட்டாங்க ப்பா அப்புடி இருந்தும் அன்பு குளிர்ச்சியாக இருக்கிறதுக்கு பற்பசை வச்சிருக்கு ஆனா அது தப்பு அது உடனே குளிர்ச்சியா இருக்கும் ஆனா காஞ்சதும் காயத்துல ஒட்டி தோலை இருக்கி பிடிச்சிடும் அதுவும் வலியைதான் தரும்  மாறா வைத்தியர் ஏதோ களிம்பு தந்திருக்காங்க தண்ணில கால் படாம தொடைச்சி அதை பூசிவிடனும் அதிகமா நடக்க கூடாதாம் ஏதோ நரம்புல சேர்த்து காயம் வந்திருக்காம் அப்புறம் அது வேற பிரச்சினை வருமாம் அதனால ரொம்ப சூதானமாக பார்த்துக்க சொல்லிருக்காங்க எங்க யாராலயும் பார்த்துக்க முடியாது.”
” ராசாத்திக்கு வேலை நம்ம வீட்டுக்கு அன்பை நீ விடமாட்ட அங்க வராம வீம்பு பிடிக்கிறவன் நீயே உன் பொண்டாட்டியை பார்த்துக்கோ என்ன சரியா?? இனியும் கவனக்குறைவா இருக்காம குடும்பஸ்தனா புருச லட்சனத்தோட பொழைச்சிக்கோ பேரான்டி நான் போய்ட்டு வாறேன் செழியா என்னை வீட்ட விட்டுடுப்பா.” என்றார் அகிலம்.
” சரிங்க அத்த வாங்க “
மாறனின் அருகில் வந்த செழியன் ” டேய் மாறா இதுதான் நல்ல சந்தர்ப்பம் நீ வேணாம்னு போய் செத்துப்போனவளை பற்றி நினைக்காம அன்பும் பொய்யே சொல்லி வந்திருக்கட்டும் ஆனா இனி நீ வேற பொண்ணை கட்டிக்குவியா?? இல்ல தானே அப்போ நீ அன்பு வேலை வச்சிருக்கிறது காதல்னு புரிஞ்சிக்கிட்டு அன்பை ஜாக்கிரதையா பார்த்து குணமாகினதும் சேர்ந்து வாழப்பாரு அதுவரை ஒருத்தரை ஒருத்தர் இந்த தனிமையை பயன்படுத்தி புரிஞ்சிக்கோங்க.”
” புரிஞ்சிக்கிறதுக்காக பட்டணத்துகாரவக கல்யாணம் முடிச்சதும் வெளியூருக்கு தேனிலவு போவாங்க இந்த படத்துல எல்லாம் நீ பார்த்ததில்ல அதுதான். ஆனா காசு பணம் இருந்தாலும் இந்த கிராமத்துல பொசுக்குனு நாம அப்புடியெல்லாம் போகமுடியாது அதனால நாம தனிமை கிடைக்கிற நேரத்தை சரியா நமக்காக அமைச்சிக்கனும் மாறா சரியா??. அங்க பாரு அகிலம் அத்தை நம்மலயே குறுகுறுனு பார்க்குது சரி நான் அத்தையை வீட்டுல விட்டுட்டு நான் வயலுக்கு போறேன் இனி கொஞ்ச நாளைக்கு நான் பார்த்துக்கிறேன் நீ அதை பற்றி எதுவும் யோசிக்காம அன்பை சூதானமாக பார்த்துக்கோ மாறா நானும் போய்ட்டு வாறேன்.” என்று செழியன் அகிலம் பாட்டியை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.
” என்ன இந்த மாமா நம்மலை தெளிவா குழப்பிட்டு போகுதே இந்த முப்பது வயசுலயும் நாம காதலிப்பமா என்ன?. சுண்டெலியை நமக்கு பிடிக்கும் தான் அவளோட அடாவடி அன்பான குணம் யாருக்குதான் பிடிக்காது அதனால எனக்கும் பிடிக்கும் அதை போயா இந்த மாமா காதல்னு சொல்லுது. இதுக்கு ஒரு முடிவு பார்த்தே ஆகனும் ” என்று நாடியில் கை வைத்து தட்டிய படியே தனக்குள் நினைத்துக்கொண்டு நின்றான் மாறன்.
மாறன் நின்ற நிலையை பார்த்த ராசாத்தி ரெண்டு முறை அவனை அழைத்தும் அவன் திரும்ப வில்லை தொண்டையை செருமினார்  ” க்கும் க்கும் மாப்பிள்ளை மாப்பிள்ளை” என்றும் அழைத்தார்.
மீண்டும் அழைத்ததும் தான் அவரின் பக்கம் திரும்பினான் ” ஆன் ப்ச் ஏதோ யோசினை அத்த அதனால நீங்க கூப்பிட்டது கேக்கல மன்னிச்சிடுங்க என்னன்னு சொல்லுங்க அத்த ” என்றான் மாறன்.
” என்ன மாப்பிள்ளை  மன்னிப்பெல்லாம் நீங்க எம்புட்டு வேலை பார்க்குறிங்க உங்களுக்கு ஆயிரம் சிந்தனை இருக்கும் அதெல்லாம் பிரச்சினை இல்ல  நான் ஒண்ணு சொல்லனும் அன்பு பார்க்கத்தான் துடுக்குத்தனமா தெரியுவா ஆனா மனசளவில ரொம்ப  பயந்தவ குழந்தை  மனசு அன்பு காட்டவும் தெரியும் தப்புன்னா அடிக்கவும் தெரியும் அவளுக்கு வைராக்கியகாரி வேணும்னாலும் சரி  வேணாம்ன்னாலும் சரி ஒரே முடிவு ஒத்தப்பிடியா நிப்பா ஆனா அதுலயும் ஒரு நியாயம் இருக்கும் அது மாதிரிதான் ஏதுவோ நடந்திருக்கு அப்புடிதான் என் மனசுக்குப்படுது அதனாலதான் சபை ஏறி பொய் சொல்லி உங்களை கட்டிருக்கா தயவு  செய்து அதை மனசுல வச்சிக்காதிங்க மாப்பிள்ளை பாவம் அன்பு நல்லபடியா நீங்க அவளோட வாழணும்  அதுமட்டும் தான் எனக்கு வேணும் அன்பை பார்த்துக்கோங்க மாப்பிள்ளை இப்ப நான் பொண்ணுங்களை தூக்கிட்டு போறேன் நீங்க தனியா சிரமப்படுவிங்க அன்பையும் காலை அசைக்கவேணாம்னு சொல்லிருக்காங்க அதனால நீங்க ஒத்தையில எப்புடி மூணு பேரையும் பார்த்துப்பிங்க அன்பு குணமாகினதும் நானே கொண்டுவந்துவிடுறேன் இதை வேணாம்னு சொல்லாதிங்க மாப்பிள்ளை ” என்றார் ராசாத்தி.
” ஐயோ என்ன அத்தை நீங்கதான் அவங்க பிறந்த ஒரு மாசத்தில இருந்து வளர்குறிங்க உங்களுக்கு இல்லாத உரிமையா?. இப்போ நீங்க அவங்களுக்கு அம்மாச்சியும் கூட நீங்க போய் கேட்டுக்கிட்டு தூக்கிட்டுபோங்க அத்தை கொடியை நான் பார்த்துக்கிறேன். இனி அவ என் பொறுப்பு நீங்க பிள்ளைகள் நாலுபேரையும் பார்த்துக்கோங்க அத்த.” என்று ராசாத்தியிடம் குழந்தைகளை கொடுத்து அனுப்பிவிட்டு அவன் அன்பு இருந்த அறைகுள் சென்றுவிட்டான்.
ராசாத்தி டாக்டர் அன்பை பார்க்கும் நேரத்திலயே வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு இட்லியும் ஊத்தி சட்னியும் வைத்துவிட்டார் டாக்டர்  காயத்தை சுத்தம் செய்து மருந்து பூசி ஊசியும் போட்டதும் சாப்பாடு குடுக்கச்சொல்லி விட்டு சென்றுவிட்டார் அதன் பின் அகிலம் பாட்டிதான் அன்பிற்க்கு இரண்டு இட்லி வைத்து ஊட்டிவிட்டு மாத்திரை கொடுத்துவிட்டு அவளை சாய்ந்து இருக்கவைத்துவிட்டுதான் வெளியே வந்து தான் ராசாத்தியுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு தான் சென்றுவிட்டார்.
அறையின் உள்ளே சென்றவன் ஒரே இரவில் வாடிய கொடிபோன்று கிடந்தவளை பார்க்க தாங்க முடியவில்லை அவனால் அவன் வந்ததை பார்த்து புடவையை இறக்கி விட்டவளை பார்த்து சற்று இளகி இருந்த மனம் கோபம் கொண்டு           ” அடிங்க என்ன டி சுண்டெலி கொழுப்பா உடனே யாரோ போல புடவையை இறக்கி விடுற வாய் கிழிய மாமன்னு கூப்புடத்தெரியுது ஆனா ஒண்ணையும் காணோம் ரெண்டு போட்டேன்னா பார்த்துக்கோ நேத்து இரவே என்னை எழுப்பிருக்கலாம்ல கொடி ஏன் இப்புடி வலியோட பிடிவாதம் பிடிக்கிற அப்போ சும்மாதான் மாமா மாமானு கூப்புடுறியோ ? அப்புடித்தான் போல இல்லன்னா உனக்கு ஒண்ணுன்னா மொத உரிமையாக என்னைதானே வந்து எழுப்பிருப்ப” என்று அவனது மன வலியை பொறுக்கமுடியாமல் அதை அவளிடம் இறக்கினான் மாறன்.
அவளோ வாய் திறந்து எதுவும் பேசாமல் சோபையாக சிரித்துக்கொண்டாருந்தாள். இன்நிலையிலும் அவளது சிரிப்பை என்னவென்று உணராமலே ரசித்து பார்த்தபடியிருந்தான். 
அவளோ ஊசிப்போட்டு மருந்து உண்டதனால் உறக்கத்திற்க்கு சென்றாள் அப்போதுதான் அதை உணர்ந்தவன் அவளை தூக்கிச்சென்று அவனது அறையில் கட்டிலில் வசதியாக படுக்கவைத்தான் அதையும் அவள் உணரும் நிலையில் இல்லை நன்கு உறங்கிவிட்டாள் அன்பு.
அவளும் படுத்துவிட்டாள் பிள்ளைகளும் வீட்டில் இல்லை சாப்பிடவும் தோணாமல் அவளின் அருகிலேயே அவளை பார்த்தபடி இருந்தவன் அப்படியே அவனும் உறங்கிவிட்டான் மாறன்.
மாறனின் வீட்டிலிருந்து  சென்ற அகிலம் வசந்தியை தான் தேடினார் அப்போது கவி தான் அவரின் கண்ணில் பட்டான்.” எங்க டா பேரான்டி உன் அம்மாகாரி ஆளையே காணோம் “
” இன்னும் எழும்பல போல அப்பத்தா நானும் இன்னும் காப்பி குடிக்கல நேரம் எட்டு மணியாகிட்டு சரி அண்ணே வீட்டுக்கு போய் குடிச்சிக்கிறேன்.” என்று கிளம்பியவனை தடுத்தவர் 
” டேய் கவி இருடா இப்ப அங்க போகாத உனக்கு காபி தானே வேணும் வா நான் போட்டுத்தாறேன் உங்க மதினிக்கு காய்ச்சல் டா ஒத்தையில உன் அண்ணண் தான் அன்பை பார்த்துகிறான் சின்னஞ்சிறுசுக  தனியா இருக்கட்டும் அப்புடியாவது ஒண்ணாசேர்ந்து வாழ்ந்த சரிதான் தாயே மீனாட்சி.”என்று பேசியபடி பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி வீட்டில்  இடித்து தயாரிக்கும் காப்பி தூளை போட்டு கலந்து கொடுத்தார் அகிலம்.
” அப்பத்தா காபி நல்ல ருசியா இருக்கு உங்க கைக்கு அப்புறம் அன்பு மதினி தான் உங்க ரெண்டு பேரோட சமையலை அடிச்சிக்க ஆளே இல்லன்னா பாருங்களேன். நல்ல அன்பான இலகின மனச கொண்ட பெண்களுக்கு  கடவுள் கைபக்குவ ருசியை அள்ளி குடுத்துருக்காரு சாந்தி பெரியம்மாவும் நல்லா சமைப்பாங்களாம் ஆனா சாப்பிட்டது இல்ல    எங்க அம்மாவும் தான் இருக்கே கடையில கிடைக்கிற எல்லாவகையான மசாலாவும் வாங்கிப்போட்டாலும் குழம்பு சாம்பார் எல்லாம் மழை தண்ணி மாதிரிதான் இருக்கும் எந்த ருசியும் இல்லாமல் ம்கூம் என்ன பண்ணுறது அதுக்கு மனசு நல்லமில்ல அதுதான் போல இதுக்காகயாவது அண்ணே குடும்பத்தோட சீக்கிரம் இங்க வந்துடனும் அப்போதான் செத்து அடக்கம் பண்ணின என்  நாக்குக்கு உயிர் கிடைக்கும் மதினியோட சமையலை,சாப்புட்டாதான் அப்பத்தா சரி நான் மில்லுவரைக்கும் போய்ட்டு வாறேன்.” என்று அவனது மனக்குறையை கொட்டிவிட்டு சென்றான் கவிமாறன்.
” வசந்தி வசந்தி.” அவர்களின் அறை கதவை தட்டிவிட்டு நல்லசிவத்திற்கும் குரக்கன் கஞ்சி எடுத்துச்சென்றார் அகிலம்.
அவர் கதவை தட்டியதும் தான் அந்த சத்ததில் எழும்பினார் வசந்தி.
” பஞ்சணை அம்மணியை எழும்ப விடலயோ ஒரு வீட்டு மருமக படுக்கையை விட்டு எழும்பு நேரம் அதிகாலை எட்டு மணிக்கு எழும்பி எதை பற்றியும் கவலை படாம ஆடி அசைந்து வாராங்க அம்மணி எல்லம் என் நேரம் எப்புடி இருந்த என் வீடு நான் வச்சிருந்தமாதிரி இருக்கனும்ன்னா அன்பு இங்க வரணும் போ போய் இட்லி ஊத்து ரெண்டு வகை சட்னி செய் பண்ணி படமெடுக்ககூடாது சீக்கிரம் வரணும் சாப்பாடு நான் ஆரம்பத்துலயே உன்னை கண்டிக்காம அதிகாரம் பண்ணாம இருந்து முட்டாள் வேலை பார்த்துட்டேன். 
அங்க மருமக கால்ல காயத்தோட காய்ச்சல் வந்து படுத்துருக்கா நீ ஒழுங்கான அன்பான அம்மாவா மாமியாரா  இருந்திருந்தா பதறி போய் பார்த்து ஒத்தாசை பண்ணிட்டு வந்திருப்ப ஆனா நீ தான்,கல்நெஞ்சக்காரியாச்சே.”
என்று திட்டியபடியே வெத்திலை இடித்துக்கொண்டிருந்தார் அகிலம்.
” இந்த முறையாவது அடிச்சா மண்டை உடையுறளவுக்கு கல்லா இல்லாம ஒரளவு மெதுவா வரணும் இந்த இட்லி ஏளவு இதெல்லாம் பண்ண தெரியாதுனு தானே நான் காலை எதுவும் பண்ணுறதில்லை நானும்  இன்னைக்குனு ரொம்ப தாமதமாக எழும்பிட்டேன் இதை ஒழுங்கா பண்ணலன்னா இந்த மாமியா கெழவி வேற திட்டியே கொல்லுமே.” என்று தன் நிலையை பற்றி புலம்பியபடியே வேலையை செய்தார் வசந்தி.
மாலை நேரம் வயல் வேலை அனைத்தையும் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தான் செழியன் அவனை புதிதாக பூத்த மலர் போன்று தன்னை அலங்கரித்து கொண்டு சிரித்தபடியே எழில் செழியனிற்கு காப்பி கொடுத்தாள்.
அதை ஒருவிதமாக பார்த்துவிட்டு        ” என்ன டா இது நம்ம சூப்பியா? இது  ஒருவேல காத்துகருப்பு அடிச்சிருக்குமோ பளிச்சின்னு சிரிக்கிறாளே ஏதோ சரியில்ல ரொம்ப உசாரா இருக்கனும் நாமா.” என்று நினைத்துக்கொண்டே காப்பியை வாங்கி வாயருகே கொண்டுசென்றான் செழியன்.
அந்த நேரம் மாறனிடமிருந்து கைபேசியில் அழைப்பு வந்தது அன்புக்குதான் எதுவுமோ என உடனே எடுத்து காதிற்கு கொடுத்தவன் கேட்டது ” மாமா கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வா மாமா.” என்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு வைத்துவிட்டான் மாறன்.
இதை கேட்டதும் தற்போது தான் குளித்து லுங்கியில் இருந்தவன் மேல் சட்டை கூட அணியாமல் பெனியனுடனே மாறனின் வீட்டிற்கு சென்றான் செழியன்.
அங்கு சென்றால் மாறனின் வீட்டார் ராசாத்தி சாந்தி என அனைவரும் கூடியிருந்து அழுதபடி இருந்தனர் கவியும் மாறனின் மற்றுமொரு நண்பன் அழகன் என ஆண்கள் அனைவரும் தேடிச்சென்றனர்.
யாரை? காணவில்லை என்ன நடந்தது. தொடரும்.

Advertisement