Advertisement

உன் சாயல் கொண்டேனே

சுகமதி

உன் சாயல் கொண்டேனே – 20

கதிரவனின் கோபம் குறைந்ததே அனைவருக்கும் ஆச்சரியம் எனும்போது… அவன் இப்படி அசரடிக்கும் புன்னகையைச் சிந்தியது ஆச்சரியம், அதிசயம் என்ற வரையறைகளையெல்லாம் தாண்டி பேரதிசயமாகவே அவர்களுக்குப் பட்டது.

விஜயகுமார் கதிரவனின் செய்கைகளைப் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மலர்விழி அனைவரையும் கேள்வி கேட்கும்போதே தவறு கதிரவன் மீதும், அவனது குடும்பத்தினரும் மீதும் இருக்க வாய்ப்பேயில்லை என அவனுக்குத் தெள்ளத்தெளிவாக புரிந்திருந்தது.

அதுபோன்ற சூழலில் கதிரவன் குடும்பத்தினரின் வருகை, மற்றவர்களைப் போன்றே இவனுக்கும் மிகுந்த அதிர்ச்சி! ‘போச்சு! நாம் செய்தது தெரிந்தால் பயங்கர பிரச்சினை கிளம்புமே’ என்ற அச்சம் அவனுள் தன்போல எழுந்திருந்தது. மலர்விழியின் பேச்சினால் அவளின் மனம் புரிந்துவிட, கதிரவனோடு அவளது திருமணம் எந்தவித தடங்களுமின்றி நடக்க வேண்டும், இப்பொழுது எந்த பிரச்சினையும் பூதாகரமாகக் கிளம்பாமல் அனைவரும் சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டான்.

ஆனால், அவன் எதிர்பார்த்தளவோ, எண்ணி பயந்தளவோ பிரச்சினைகள் எழவில்லை! கதிரவன் குடும்பத்தினர் தங்கள் மன வருத்தத்தை, ஆதங்கத்தைத் தான் சொல்லிக் கொண்டனரே தவிர, யாரும் சண்டை போட வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை.

கதிரவன் இடத்தில் தான் இருந்திருந்தால், இத்தனை பொறுமையும், சுயக்கட்டுப்பாடும் இருக்கவே இருக்காது என்று சத்தியம் செய்தது அவனின் மனம். அந்த வகையில் கதிரவனின் செய்கைகள் விஜயகுமாருக்குப் பலத்த ஆச்சரியமே!

அதில் கவரப்பட்டதால் தானோ என்னவோ இளமாறன் கதிரவனை அழைத்துக் கொண்டு வெளியில் வரும்போது இவனும் இணைந்து வந்திருந்தான்.

ஆனால், உள்ளே காத்த பொறுமைக்கு எதிர்ப்பதமாக இங்கு இளமாறனின் கன்னம் பழுக்குமளவு தன் கோபத்தைக் கதிரவன் இறக்கவும், ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனது அவனுக்கு.

பிறகு காரணம் புரியவும், மதிப்பு கூடியதே தவிரக் குறையவில்லை. ஏன் இப்பொழுதும் அத்தனை கோபத்தையும் மலர்விழி என்னும் சிறு துரும்பு இறக்கி விட்டதே என்று பலத்த ஆச்சரியம்!

ஆனால், விஜய்குமாருக்கு தானே அவள் சிறு துரும்பு? கதிரவனைப் பொறுத்தவரையில் அவள் பூவேலி அல்லவா! அந்த வேலிக்கு அவன் காலம் முழுக்க கட்டுப்படச் சித்தமாக இருக்கிறானே! அதை விஜயகுமார் அறிந்து கொள்ளச் சாத்தியமில்லை தான்!

விஜயகுமாருக்கு கதிரவனின் மீதிருந்த பிரமிப்பு, “அம்மா கிராமம், நகரம்ன்னு பாகுபாடெல்லாம் வேணாம். எனக்குப் பொருத்தமான ஒரு பொண்ணு பாருங்க மா” என அவன் அன்னை சாந்தியிடம் ஊருக்குச் சென்ற இரண்டே நாளில் சொல்ல வைத்தது.

“இதென்னடா மேற்கே சூரியன் உதிக்குது” அதிசயப்பட்டுக் கேட்டாள் அன்னை.

“எல்லாம் அந்த லவ் பேர்ட்ஸோட தாக்கம் தான்மா” என்றான் வெட்கச்சிரிப்பு வழியத் தலையைக் கோதிக்கொண்டே!

“எந்த லவ் பேர்ட்ஸ்” என்று கேட்ட சாந்திக்குக் குழப்பம்.

“ஹ்ம்ம்… கதிரவன், மலர்விழி” என்று ராகமாக இழுத்து நிறுத்தியவன், “ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையோட, பாசத்தோட எப்படி இருக்காங்க மா. எனக்கும் அப்படி இருக்கணும். என் வாழ்க்கையிலும் அந்த மாதிரி பொண்ணு வேணும். ஒருத்தர் மேல ஒருத்தர் எத்தனை அன்பு வெச்சிருக்காங்க தெரியுமா மா? மலரோட கண்ணீர், பெரியவங்க கிட்ட அவ பேசின பேச்சு… கதிரவனோட நிதானம், அதையும் கட்டுப்படுத்திக்க முடியாத கோபம்… எல்லாம் எல்லாம் அவங்க காதலை மட்டுமே உணர்த்துச்சு.. அது பார்க்கவே அத்தனை அழகா இருக்குமா… அதுமாதிரி காதலிக்கணும்ன்னு எனக்கும் ஆசையா இருக்கு” என்று உணர்ந்து சொல்ல,

சாந்தி பிரமிப்பில் வாயைப் பிளந்தார். இத்தனை நாளும் தன் ஸ்டேட்டஸ், தன் உயரம் என்ற வரையறையில் சிறு சிறு குறைகளையும் பெரிது படுத்தி நல்ல சம்பந்தத்தை எல்லாம் தடுத்து வந்தவன், இப்பொழுது இப்படிப் பேசினால் அவருக்கும் வேறு எப்படித்தான் இருக்கும்.

ஏதோ நல்லது நடந்தால் சரியென்று அவர் மனம் எண்ணிக் கொண்டது. இத்தனை நாட்களாக அவன் அற்ப காரணத்திற்காகக் கழித்துவிட்ட ஜாதகங்களையெல்லாம் மீண்டும் கையிலெடுத்து அலச வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

“என்னம்மா பலத்த யோசனை?”

“கண்டிப்பா விஜய். உனக்குப் பொருத்தமான, உனக்கு பிடிச்ச பெண்ணை தேடி இந்த அம்மா சீக்கிரமே தரேன்” என்று புன்னகை முகமாகச் சொல்ல, “ரொம்ப தேங்க்ஸ் மா” என்று ஆனந்தப்பட்டான் மகன்.

கதிரவன், மலர்விழியின் கைப்பேசி உரையாடல்கள் இனிதே தொடங்கியிருந்தது. மலர்விழி முதலாகப் பேசிய விஷயம் ராஜரத்தினம் குறித்துத் தான்.

இந்த விபத்திற்கு எந்த வகையிலேனும் அவர் காரணமாக இருப்பாரோ? என்று தன் அச்சத்தைக் கேட்க, அவளின் அனுமானத்தில் விழுந்து விழுந்து சிரித்தான் கதிரவன்.

“ம்ப்ச்… என்ன நீங்க? வேற யாருக்கு மோட்டிவ் இருக்க போகுது?” சலிப்பாக மலர்விழி கேட்க,

“ஹே… இது வெறும் விபத்து அவ்வளவுதான்! இதுக்கு போயி அலட்டிக்கிட்டு இருக்க”

“எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்காதீங்க”

“அச்சோ ராஜரத்தினம் அப்படிப் பண்ண வாய்ப்பேயில்லை மலர்… அதுவொரு சின்ன பஞ்சாயத்து. அப்பவே பேசி முடிச்சாச்சு. என்மேல மோதினது ஒரு டீனேஜ் பையன்… வீட்டுல புது பைக் வாங்கி தந்திருப்பாங்க போல! ஆர்வக்கோளாறுல ஸ்பீடா வந்துட்டான். அவன் ஹெல்மெட் கூட போடலை தெரியுமா? அவனுக்கு என்னைவிடப் பலத்த காயம். இன்னும் ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு. ஒரு பைக்கை ஏற்பாடு பண்ணியா என்னைப் பழி வாங்க பார்ப்பான்?” என்று அனைத்தையும் பொறுமையாக எடுத்துச் சொல்ல அவள் கொஞ்சம் சமாதானம் ஆனது போல தோன்றியது.

இளமாறன் ஒருமுறை கதிரவனிடம், மலர்விழி அனைவரையும் கேள்வி கேட்டதையும், கதிரவனுக்கு ஆதரவாக பேசியதையும் சொல்லியிருக்க… கதிரவன் மலர்விழியின் நம்பிக்கையில் மிகவும் மகிழ்ந்தான். பெருமிதமாகவும் உணர்ந்தான். அதுகுறித்து மலர்விழியிடம் நேரில் கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவனுக்கு அதற்கான வாய்ப்பு தான் அமையவே இல்லை.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபயோக சுபதினத்தில் கதிரவன், மலர்விழியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமண நாள் இரவின் தனிமையில், “என் மேல அவ்வளவு நம்பிக்கையா மலர்? உங்க வீட்டில் எல்லார்கிட்டேயும் நீ பேசியதை இளமாறன் சொன்னான். எனக்கு எவ்வளவு பெருமையா, சந்தோஷமா இருந்தது தெரியுமா?” எனக் கதிரவன் சிலாகித்துச் சொல்ல,

“அப்படிப்பார்த்தா நானும் தான் தேங்க்ஸ் சொல்லணும்.. காதல் எது அபக்ஷன் எதுன்னு உங்க மூலம் தான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க பிரியாகிட்ட தள்ளி நின்னது எனக்குள்ள பெரிய மாற்றம்.

இதை நீங்க எப்ப எடுத்துப்பீங்கன்னு தெரியலை. ஆனா உங்ககிட்ட சொல்லணும் தோணுது. நான் படிச்சு முடிச்சதும், எனக்குக் கொஞ்ச நாளிலேயே கல்யாண பேச்சு எடுத்துட்டாங்க. அப்ப சொந்தத்துல இருந்த விஜய் மாமா மேல தான் எனக்கு அபிப்பிராயம் வந்தது.

ஒரு கட்டத்துல அது ஒத்து வராதுன்னு எனக்குப் புரியவும் ரொம்பவே கவலை பட்டேன். என்னால அதிலிருந்து மீள முடியும்ன்னு கூட தோணலை.

அதுக்கப்பறம் நீங்க என் வாழ்க்கையில வந்ததும் தான் நிறைய நிறைய மாறுதல்… காதல்ங்கிறது இவங்களோட நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு அர்த்தம் இல்லை. இவங்களோட மட்டும் தான் நம்ம வாழ்க்கைன்னு நினைக்கிறது தான்னு நீங்க தான் எனக்கு உங்க செயல்கள் மூலமா புரிய வைச்சீங்க… உணர வைச்சீங்க” என்றாள் ஆசையாக.

“இரு இரு உன்னை இருளப்பன் மாமா தப்பா பேசினதும், கோபத்துல பொங்கி உனக்கு திடீர் மாப்பிள்ளையானது விஜயகுமார் தானே…” எனச் சந்தேகம் கேட்டான் கதிரவன்.

அவன் எங்கு வருவான் என்று புரிந்ததாலோ என்னவோ, “ஆமா…” என்றாள் அவனையே உறுத்து பார்த்தபடி.

“பிறகு ஏன் வேண்டாம்ன்னு சொன்ன?” என்று கேள்வி கேட்டவனை, நறுக்கென்று தலையிலேயே கொட்டியவள்,

“இப்ப தானே சொன்னேன் அது லவ்வே இல்லைன்னு… உண்மையான காதல் என்னன்னு நீங்க என் வாழ்க்கையில் வந்ததும் உணர தொடங்கிட்டேன்னு…” என்றாள் கோபமாக.

“ஆமா ஆமா பப்பி லவ்ன்னு சொன்ன…” என்று கதிரவனும் கேலியாகச் சொன்னதும் அவனை மீண்டும் முறைத்தாள்.

“இல்லை இல்லை. உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? நம்பவே முடியலை. முத்தம் கொடுத்ததுக்கே மூச்சு முட்ட அழுத…” என்றான் மெல்லிய பெருமூச்சுடன்.

மீண்டும் கொட்டு வைக்க பரபரத்த கையை கட்டுப்படுத்தியபடி, “ஏன் நீங்க மட்டும் பிரியாவையே கட்டி இருக்க வேண்டியது தானே” என்றாள் முறைப்பாக.

அவன் அசடு வழியச் சிரிக்க, “உங்களோட சேர்ந்து நானும் உங்களை மாதிரியே ஆயிட்டேன். உங்க சிந்தனையோட சாயல் எனக்கும் வந்திடுச்சு. அதான் நானும் என் பப்பி லவ்வை வேணாம்ன்னு சொல்லிட்டு ஆக்சிடெண்ட் ஆகி மீண்டு வந்த உங்களுக்கு வாழ்வு தரலாம்ன்னு யோசிச்சு தாராள மனசோட உங்களை கட்டிக்கிட்டேன்” என்று இழுத்து நிறுத்த, அடிப்பாவி என வாயைப் பிளந்தான் கதிரவன்.

“என்னது வாழ்க்கை தறியா?” என அதிர்ச்சி விலகாமல் கேட்க, “ஆமா ஆமா உங்களுக்கு கை, கால் எல்லாம் நல்லா வேலை செய்யுதா?” எனச் சீண்டினாள் மங்கை.

“ஹ்ம்ம் இரு மொத்த பார்ட்ஸும் எப்படி வேலை செய்யுதுன்னு காட்டறேன்…” என்றவன், அவளை கைகளில் அள்ளியிருந்தான்.

அன்பாலும், நம்பிக்கையாலும் இணைந்த இருவரின் வாழ்வும் மென்மேலும் செழிக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

*** சுபம் ***

Advertisement