Advertisement

உன் சாயல் கொண்டேனே – 09

பெண்பார்த்துச் சென்றதிலிருந்து, இந்த திருமணம் உறுதி என்று புரிந்ததிலிருந்து மலர்விழிக்கு இனம்புரியா கலக்கம், சஞ்சலம்! இந்த புது வாழ்க்கை எப்படி அமையுமென்று! அதில் தன்னால் பொருந்திப் போக முடியுமா என்று!

அன்றும் அமைதியாகச் சென்று கோயில் தெப்பக்குளத்தில் அமர்ந்து கொண்டாள். தான் கொண்டு வந்திருந்த பொறியைக் குளத்து நீரில் இறைக்க, மீன்கள் ஆவலாக வந்து அதை உண்டு சென்றது.

கண்கள் குளத்தில் நிலைத்தாலும், மனம் எதிலும் நிலைக்கவில்லை. அருகில் ஏதோ சலசலவென்ற பேச்சு சத்தம்! மெல்ல அவள் கவனம் அந்த பேச்சில் நிலைத்தது.

“நல்லவேளை அந்த தம்பி வந்து நமக்கு உதவி செய்யவும், கொள்முதல் பணம் வந்து சேர்ந்தது. எத்தனை மாசமா அலையறோம்?”

“அந்த தம்பி விவரமா பேசி முடிச்சிடுச்சல்ல”

“இல்லையா பின்ன, அந்த ராஜரத்தினம் பதினோரு பேருக்கிட்ட மொத்த கொள்முதலையும் வாங்கிட்டு ஒரு வாரத்துல பணம் தரேன்னு போனவன், எத்தனை மாசமா நம்மளை சுத்தல்ல விட்டான். நம்மள மாதிரி ஆளுங்க வயித்துல அடிச்சு என்ன பண்ண போறானோ? நம்ம கஷ்டப்பட்டு விவசாயம் பண்ணிட்டு ஏமாந்து நின்னோமே…”

“ஆமாம். நாம அலையாத அலைச்சலா? நல்லவேளை முத்துவேலன் கிட்ட சொன்னதும், தெரிஞ்ச பையன்னு அந்த கதிரவன் தம்பிக்கிட்ட விவரத்தைச் சொல்லி உதவி கேட்டாரு. கடைசியில அந்த தம்பி வந்து பேசி தானே எல்லாம் சரியாச்சு”

தந்தையின் பெயரும், கதிரவனின் பெயரும் செவியில் விழ, அவளது புலன்கள் மேலும் கூர்மையானது.

“ஆமாம். சாதுர்யமா பேசி எல்லாரோட பணத்தையும் வாங்கி தந்திட்டாரே”

“ஆமாம்பா அந்த ராஜரத்தினம் என்னவோ செஞ்சதை இந்த தம்பி போன்ல படம் பிடிச்சிட்டானாம். அதை இன்கம் டேக்ஸ் ஆபிஸ்ல தந்திடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கு. அப்படி தந்தா அவனோடது நிறைய பணம் போகும் போலவே! எல்லாம் கணக்குல வராத பணமா வெச்சிருக்கான். எத்தனை பேரு வயித்துல அடிச்சதோ? அதோட கதிரவன் தம்பி விவசாய சங்கத்திலேயும் முறையிட்டு, ராஜரத்தினம் விவசாயிங்களுக்குத் தரவேண்டிய பணத்தை செட்டில் பண்ணாட்டி சுத்து வட்டாரத்துல எங்கேயும் இனி கொள்முதல் வாங்க முடியாதபடி செஞ்சிட்டானாம்”

“அந்த ராஜரத்தினம் கதிரவன் தம்பியை எதுவும் செஞ்சிட மாட்டானே! அது மட்டும் தான் இப்ப கவலையா இருக்கு. நமக்கு நல்லது செய்ய போயி அந்த தம்பிக்கு எதுவும் கஷ்டம் வந்திட்டா… அதுதான் மனசு கிடந்து அடிச்சுக்குது”

“விடுங்க விடுங்க. நம்ம லிங்கேஸ்வரர் இருக்காரு. எதுவும் நடக்காது. அந்த தம்பி முடிஞ்சவரை போலீஸ், கேசுன்னு போகாம சுமூகமா தான முடிச்சு வெச்சுச்சு. அதுனால அவர் மேல வஞ்சம் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்கணும்”

கடைசியாக வந்த பேச்சுக்கள் எல்லாம் மலர்விழிக்குப் பதற்றத்தைத் தந்தது. யார் அந்த ராஜரத்தினம்? மிகவும் செல்வாக்கான மனிதரா? அரசியல் பின்புலம், அடியாட்கள் பின்புலம் என்று எதுவும் இருக்கிறதா? என தன் நினைவடுக்குகளில் எதுவும் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தாள்.

பதற்றமான மனநிலை அவளது தேடுதலுக்கு ஒத்துழைக்கவில்லை. உண்மையில் அவளுக்கு அந்த ராஜரத்தினம் குறித்தும் எந்த விவரங்களும் தெரிந்திருக்கவில்லை. ஒருவித கவலை மனதை ஆட்கொள்ள, லிங்கேஸ்வரரை நாடி ஓடியவள், மனமுருக வேண்டிவிட்டு அடிப்பாதம் வைத்து கோயிலைச் சுற்றி வந்தவள், பிரகாரத்திலேயே மீண்டும் சிறிது நேரம் அமர்ந்து விட்டே வீடு திரும்பினாள்.

சோர்ந்த முகத்தோடு வீட்டில் வளைய வந்தவளை, முத்துவேலன் கவனித்துவிட்டு தன்னருகே அழைத்து அமர வைத்தார்.

“கல்யாணம் பேசியிருக்கோம். நீ இப்படி இருந்தா எப்படி மலர்?” என்று தந்தை கேட்டதும் தான், தன் கலக்கம் வேறு மாதிரி அர்த்தம் கொள்ளப்படும் எனப் புரிந்து, சங்கடத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளது வருத்தத்தை கண்டவர், “கல்யாணம் ஆனதும் நாங்க என்ன செய்வோம்ன்னு கவலை வந்திடுச்சா?” என்று தந்தை கேட்டதும் தான், அதைப்பற்றி யோசிக்கக் கூட இல்லையே என குற்றவுணர்வு வந்தது மகளுக்கு.

ஆனால், அவளின் அத்தை மீனாட்சி, கணவரை இழந்தவர்… அவர் வந்து இருந்து கொள்வதாக ஏற்பாடு. இவளின் அன்னை ராதா இறந்தபோதே, தம்பி பிள்ளைகளின் துணை என்று வந்து இருந்து கொண்டவர் தான், தற்பொழுது மகளின் பிரசவத்திற்காகச் சென்றிருந்தார். மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பியதும் வந்துவிடுவார்.

ஒருவேளை அந்த எண்ணம் ஊறியிருந்ததால் தானோ என்னவோ, அவளுக்குத் தந்தை, தம்பி குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் இருந்தது.

ஆனால், அவளது தற்போதைய கவலையும், சஞ்சலமும் முற்றிலும் வேறாயிற்றே! அது புரியாத முத்துவேலன், சிறு பிள்ளைக்கு விளக்குவது போல மீனாட்சி அக்கா வந்துவிடுவார் என விளக்க, அவளுக்கு அது தெரியாதா என்ன? இருந்தும் பொறுமையாக கேட்டுக் கொள்ள வேண்டிய சூழல்!

அந்த பேச்சு முடிந்ததும் மருமகனின் பெருமை பேச்சிற்குத் தாவி விட்டார் முத்துவேலன். கோயிலில் கேட்ட அதே விஷயங்களை மீண்டுமொரு முறை விலாவரியாக சொல்லத் தொடங்கினார்.

இதுவும் மலர்விழிக்கு ஏற்கனவே தெரிந்தது தான்! ஆனால், இம்முறையும் வெகு கவனமாக கேட்டுக் கொண்டாள். முத்துவேலன் முழுவதும் சொல்லி முடித்ததும்,

“அந்த ராஜரத்தினம் எப்படிப்பட்டவர் பா?” என்றாள் கலக்கமாக.

“ஏன் மா?” எனப் புரியாமல் முத்துவேலன் கேட்க, “ரொம்ப பணபலம், அரசியல் பலம், ஆள் பலம் இந்தமாதிரி எதுவும்?” என்றாள் மெல்லிய நடுக்கத்தோடு, விழிகளும் தன்போல கலங்கி விட்டிருந்தது.

“என்னம்மா நீ சின்ன குழந்தை மாதிரி? மாப்பிள்ளை பகைச்சுக்கிற மாதிரி எல்லாம் பெருசா எதுவும் பண்ணலை. அவரால முடிஞ்சவரை என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சாரு. நீ இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத” என்று ஆதரவாகச் சொல்லி மகளைத் தேற்றினார்.

பேச்சு அத்தோடு முடிந்தது என்று விடாமல் கதிரவனிடம் பேசும்போதும் சொல்லிவிட, எதேச்சையாகக் கேட்ட அவளுக்குத்தான் சங்கடமாகப் போயிற்று! ஆனால், அந்த பேச்சை தொடர்ந்து, மேற்கொண்டு முத்துவேலன் கதிரவனிடம் பேசிய சொற்கள் அவளுக்கு மீண்டும் அச்சத்தையே பரிசளித்தது.

“மலர் கவலைப்பட்டதும் தான் எனக்கும் அந்த எண்ணமே வந்துச்சுப்பா. எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு. நம்ம பகைச்சுக்கிறோம்ன்னு தெரிஞ்சாலே அவனுங்களுக்கு பொறுக்காது. எல்லாம் பணமும், செல்வாக்கும், அதிகாரமும் இருக்கத் திமிர் தான்! தப்பை செஞ்சிட்டே போவானுங்க. யாரும் கேட்டிட கூடாதுன்னு நினைக்கிற புத்தி அவங்களது” என்று முத்துவேலன் எச்சரிக்கை விடுத்தார்.

கதிரவனுக்கு எங்கே அதுவெல்லாம் மனதில் பதிய? அவனுக்கு மலர்விழியின் அக்கறை தான் பனிசாரலாய் மனம் நனைத்தது. என்னவோ அவளிடம் பேச வேண்டும் என்னும் ஆவலில் மனம் பரபரக்க, எப்படி எந்த உரிமையில் முத்துவேலனிடம் கேட்பானாம்? இப்பொழுது தான் திருமண பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. நிச்சயதார்த்தம் முடியும் முன்பு இப்படி பேசுவதற்கெல்லாம் அவர்கள் ஊரில், அவர்கள் இனத்தில் அனுமதிக்க மாட்டார்கள். தன் எண்ணம் போன போக்கில் தலையில் தட்டிக் கொண்டான்.

முத்துவேலன் திரும்பத் திரும்ப வாய் ஓயாமல் பத்திரம் சொல்ல, “கவலைப்படாதீங்க மாமா. பார்த்துக்கலாம்” என்று சமாதானம் கூறினான் கதிரவன்.

ஆனால், மலர்விழிக்குத் தான் கதிரவனுக்கு எதுவும் ஆகிடுமோ என்று கலக்கமாக இருந்தது. எதுவும் ஆகக்கூடாது என்ற வேண்டுதலும்!

ஒருநாள் மலர்விழி தோட்டத்தில் இருந்தபோது, முத்துவேலன் மகளுக்கு அழைத்து, வீட்டிலிருந்து சில பொருட்களை எடுத்துக்கொண்டு, அருகில் இருக்கும் வேறொரு தோட்டத்திற்கு வரும்படி பணித்தார்.

இவளும் அவர் கேட்ட பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த தோட்டத்திற்கு விரைய, அங்கு அந்த தோட்டத்துக்காரர் மற்றும் தந்தையுடன் கதிரவனும் இருந்தான்.

இவள் தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் தந்தையிடம் கொடுக்க, அது வேப்பெண்ணெய் கரைசல், மிளகாய் கரைசல், மஞ்சள் கரைசல் செய்யத் தேவையான பொருட்கள்.

அவை வந்ததும், ஒவ்வொரு கரைசலும் எப்படித் தயாரிக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தைக் கதிரவன் விளக்கிக் கொண்டிருந்தான்.

‘அதுசரி இவருக்கு எல்லாருக்கும் சொல்லித் தர டீச்சர் வேலை போலவே!’ என நினைத்துக் கொண்டு ஓரமாகச் சென்று நின்று கொண்டாள். மூத்தவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த இடைவெளியில், அவள் எதிர்பாரா தருணத்தில் கதிரவன் திரும்பி இவளை ஒரு பார்வை பார்க்க, உள்ளம் படபடக்க தன் பார்வையை அவசரமாக மாற்றிக் கொண்டாள்.

இருந்தும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை, அவன் கண்டு கொண்டிருப்பான் என நினைக்கையிலேயே குப்பென்று வியர்த்தது.

‘அச்சோ! இப்படியா வெச்ச கண்ணு மாத்தாமா பார்ப்ப?’ என மெலிதாக தன் தலையில் தட்டிக் கொண்டவளுக்கு, அழையா விருந்தாளியாக வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

தோட்டத்தின் உரிமையாளர், “வேலைக்குத் தான் ஆளுங்களே கிடைக்கிறதில்லை தம்பி” என்றார் புலம்பலாக.

“மல்சிங் (mulching) ஷீட் இல்லாட்டி வீட் (wheat) ஷீட் மெதேட் போட்டா, களை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காதுங்க. அதை வேணா முயற்சி செய்யறீங்களா? கொஞ்சம் களை வரும். அதையும் மேற்பார்வை பார்க்கிற ஒரு ஆளே எடுத்திடலாம். களக்கொல்லி மருந்துங்க கூட அதிகம் தேவை இருக்காது. அந்த சீட் போடற செலவு மட்டும் தான். அதுவும் கூலிக்கு விடறதுல பாதி கூட இருக்காது” என்று கதிரவன் விளக்கினான்.

“அதுனால வேற என்னவெல்லாம் பயன் இருக்கும், கொஞ்சம் விவரம் சொல்லுங்க தம்பி. முயற்சி செஞ்சு பார்க்கலாம்”

“நாம தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சும் போது, அது ஆவியா போகாதுங்க. அதுனால நமக்கு தண்ணி செலவு கம்மி. ஈரப்பதம் அப்படியே இருக்கும் . அப்பறம் இதோட வேர்ல களை வர வாய்ப்புகள் ரொம்ப கம்மி”

“ஒரு ஏக்கர் நிலத்துக்கு எவ்வளவு ரூபாய்க்கு ஷீட் போடற மாதிரி இருக்கும் தம்பி”

“ஒரு ஏக்கருக்குத் தோராயமா 2000மீட்டர் ஷீட் தேவைப்படுங்க. அதோட விலை 7500 ல இருந்து 12000 ரூபாய் வரைக்கும் ஆகுங்க. நம்ம போடற ஷீட்டோட குவாலிட்டி பொறுத்து…”

சிலருக்கு இப்படி நிறைய விளக்கங்கள் தேவைப்படும். கதிரவன் எப்பொழுதுமே விளக்கங்கள் தருவதற்கும், தகவல்கள் தருவதற்கும் சலிப்படைந்ததில்லை. விவசாயிகள் அவனால் பயனடைந்தால் அவனுக்கு அதில் மனநிறைவே! அதனால் இப்பொழுதும் பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மலர்விழிக்குத் தான் பொறுமை பறந்தது.

‘இவ்வளவு விளக்கம் சொல்லணுமா இவரு?’ என்று சலிப்பாகக் கூட இருந்தது. பின்னே, எப்படி மல்சிங் ஷீட் போட வேண்டும் என்பதில் தொடங்கி, அவர் என்ன விளைச்சல் போடப்போகிறார் என்பதற்குத்தக்க என்ன குவாலிட்டியில் போட வேண்டும் என அனைத்தும் கதிரவன் விளக்கிக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் நின்றுகொண்டே இருந்ததால், கால் வலியே எடுத்திருக்கக் கால் மாற்றி, கால் மாற்றி நின்று கொண்டிருந்தாள்.

தோட்டத்துக்காரர் அந்தப்பக்கம் எதற்கோ நகர்ந்த இடைவெளியில், “உங்க பொண்ணை வேணா வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்று முத்துவேலனிடம் சொன்னான் கதிரவன்.

“சீக்கிரம் பேசி முடிச்சிடுவோம். பேசி முடிச்சதும் நானே கூட்டிட்டு போயிடலாம்ன்னு பார்த்தேன் மாப்பிள்ளை. இப்ப உச்சி நேரம் ஆயிடுச்சு. இனி எப்படி தனியா அனுப்பறதுன்னு தான் யோசனையா இருக்கு”

அவள் கால் மாற்றி கால் மாற்றி நின்றதையும், அவள் முகத்தில் தெரிந்த சோர்வையும் கவனித்துத் தான் இவ்வாறு கேட்டான். ஆனால், முத்துவேலன் இப்படி ஒரு காரணம் சொல்லவும், “சரி நாம வர வரைக்கும் கார்ல வேணா உட்கார சொல்லுங்க. உள்ளே குடிக்க தண்ணியும் இருக்கும்” என்று சொன்னவன், கார் லாக்கை திறந்து விட,

அப்பொழுது தான் முத்துவேலன் மகளைக் கவனித்தார். கதிரவனை நினைத்து கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.

மகளிடம் சென்று, “போய் கார்ல உட்கார்ந்துக்கமா. போர் அடிச்சா இந்தா என்னோட போன் நோண்டிட்டு இரு. காருக்குள்ளேயே மாப்பிள்ளை குடிக்க தண்ணியும் வெச்சிருக்காராமா… குடிச்சுக்க மா. பாரு ரொம்ப சோர்ந்து தெரியற” என வாஞ்சையாகச் சொல்ல, “பரவாயில்லை பா” என மறுத்தாள் மகள்.

“இல்லை மலரு முகம் சோர்ந்திடுச்சு. நான் உடனே கிளம்பிடலாம்ன்னு நினைச்சேன். நேரம் எடுத்துக்குது” என்று சொல்லி அனுப்பி வைக்க, இதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி காரில் அமர்ந்து கொண்டாள். கால் வலியோடு அவளும் எத்தனை நேரம் ஒரே இடத்தில் நிற்க!

நல்லவேளையாக தோட்டத்துக்காரர் அனைவருக்கும் இளநீர் கொண்டு வரச் சொல்லியிருக்க, மலர்விழி வருவதற்கு முன்பு ஏற்கனவே குடித்திருந்தனர் தான், இப்பொழுது வெகுநேரம் கழிந்திருக்க இரண்டாம் முறை.

அனைவரும் குடித்தபடியே, பேச்சையும் சீக்கிரம் முடித்தனர். பிறகு கதிரவன் தன் காரிலும், முத்துவேலனும், மலர்விழியும் அவரது ஏக்டிவா வண்டியிலும் தத்தம் இல்லத்திற்குக் கிளம்பினர்.

என்னவோ மலர்விழிக்கு அவனை நேரில் பார்த்தும் பத்திரம் சொல்ல முடியவில்லையே எனச் சங்கடமாக இருந்தது. அந்த ராஜரத்தினம் முள்ளாய் அவளுள் உறுத்திக் கொண்டே இருந்தான்.

Advertisement