Advertisement

உன் சாயல் கொண்டேனே – 07

குடும்ப சகிதம் புகைப்படம் எடுத்து முடித்ததும், கதிரவன் வழக்கம்போல தன் வயது உறவினர்களோடு இணைந்து நின்று கொண்டவன், நொடிக்கொருமுறை மலர்விழி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவள் வரவுமே, அவள் முகத்தில் இருந்த சோர்வு அவனை மிகவும் தாக்கியது. ‘என்ன ஆச்சு? இத்தனை நேரம் நல்லா தானே இருந்தா?’ என்னும் பரிதவிப்பு அவனுக்கு!

அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க, முன்னிருந்த கலகலப்பு இல்லாமல் சாந்தமான முகத்தோடு நின்றிருந்தாள். புகைப்படம் எடுக்க சென்றபோதும், பெரிதான மாறுதல் எதுவுமில்லை. மில்லிமீட்டர் அளவில் மிகமிக அளந்து புன்னகை செய்பவளையே கதிரவன் அசையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னவோ சரியில்லை என்று மனதிற்குப் பட்டது. என்ன என்ற ஆராய்ச்சி பார்வை தான் அவனிடம்! ஆனாலும் பார்வை பார்வை தானே!

அவனின் பங்காளி தான் அவனைக் கலைத்து, “ஏன்டா இப்படிப் பார்க்கிற?” என்று பரிகசித்தான்.

“கொஞ்ச நேரம் சும்மா இரேன்டா” என்று மற்றவனை அதட்டியவன், மற்றவர்களைப் பற்றி கவலை கொள்ளாது தன் பார்வையை மீண்டும் தொடர்ந்தான்.

“முத்திடுச்சு” என்று மற்ற இருவரும் கலாய்த்துச் சிரித்துக் கொண்டனர்.

ஆனால், கதிரவன் அதைக் கவனிக்கும் நிலையிலோ, கண்டுகொள்ளும் நிலையிலோ இல்லை. மலர்விழிக்கு என்னவாயிற்று என்பதிலேயே அவன் உலகம் இயங்க மறுத்திருந்தது. அவள் உணவுண்ண சென்றபோதும், அங்கேயே சிறிதுநேரம் சுற்றித்திரிந்து ஆராய்ச்சி பார்வை பார்த்தான். அவள் தோழிகளோடு புகைப்படங்கள் எடுப்பதற்காக பூந்தோட்டம் சென்ற போதும் அதே தொடர்ந்தது.

ரேகா கவனித்துவிட, மலர்விழியின் காதில் விஷயத்தைச் சொன்னாள். அவளும் ஏற்கனவே கவனித்து விட்டாள் தான் என்றபோதும், கண்டுகொள்ளாதது போல் காட்டிக் கொண்டாள்.

இப்பொழுது ரேகாவிடமும், “ம்ப்ச் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது” என்று அழுத்தமாகச் சொல்லி பேச்சை முடித்து விட்டாள்.

அதை நம்புமளவு ரேகா முட்டாளில்லையே! இருந்தும் அழுத்தமாக மலர்விழி மறுத்த பிறகு, மேற்கொண்டு அதைப்பற்றிப் பேசி அவள் சினத்தைக் கிளற வேண்டாம் என்று நினைத்தாள். கூடவே, மற்ற தோழிகள் விடைபெறட்டும் என்றும்!

புகைப்படம் எடுத்து முடித்ததும் தோழிகள் ஒவ்வொருவராக விடைபெற, மலர்விழி புறப்படும் முன்பு அவளிடம் பேச வேண்டுமே என்று கதிரவனின் மனம் அலைபாய்ந்தது.

‘இவளோட முகமும் சரியில்லை! அந்த அண்ணாவும் என்னவோ தவிப்பான பாவனையோடு தான் இருக்கிறார். இவளுக்கு அந்த அண்ணா தவறா நினைச்சிருப்பாங்களோன்னு பயம் இருந்த மாதிரி எனக்கு தோணிச்சே! ஒருவேளை அந்த அண்ணாவுக்கும் இவ தப்பா எடுத்துப்பாளோன்னு பயம் இருக்குமோ? அதுதான் இப்படி சுத்தி சுத்தி வந்து ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காரோ? ரெண்டு பேரும் பேசிக்கிட்டா இந்த குழப்பம் ஓடியே போயிட போகுது’ என்று யோசித்த ரேகா, “இல்லை அந்த அண்ணா ஏதோ பேசணும் நினைக்கிறாங்க போல! அங்கே பாரு அவங்களை” என மீண்டும் மலர்விழியிடம் உறுதியாகச் சொல்ல, “அதெல்லாம் இருக்காது” என்று அதைவிட உறுதியாகத் தோழியை அடக்கினாள் அவள்.

ரேகாவின் தந்தை அழைத்துச் செல்ல மண்டபத்திற்கு வருவதாகச் சொல்லி இருக்கவே இவர்கள் இருவர் மட்டுமே அந்த பூந்தோட்டத்தில் காத்திருந்தார்கள்.

மலர்விழி திரும்பவே போவதில்லை என்று தெளிவாக உணர்ந்ததால், கதிரவனே அவர்களை நெருங்க, அதைக் கவனித்துவிட்ட ரேகா, “நான் அந்த வெள்ளை ரோஜா செடிங்க கிட்ட செல்பி எடுத்திட்டு வரேன்டி” என்று சொல்லிவிட்டு விரைந்து அகன்று விட்டாள்.

‘எங்கேயோ போ’ என விட்டேறியாக அமர்ந்திருந்தவளின் அருகே காலடி ஓசை கேட்கவும், யாரென்று நிமிர்ந்து பார்த்தவள், கதிரவன் என உணர்ந்து எழுந்து நின்று கொண்டாள். அவசரமாக சுற்றிலும் பார்வையை ஓட்ட,

“ஏன் உனக்குப் பாதுகாப்புக்கு ஆள் வேணுமா?” என்று சூடாக விழுந்தது வார்த்தைகள்.

‘இதுக்கு இப்படி ஒரு அர்த்தமா?’ என்றவள் திகைத்து நிற்க, “என்னாச்சு? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று விசாரித்தான்.

“தலைவலி…” என்றாள் முனங்கலாக.

“மாத்திரை எதுவும் வாங்கிட்டு வரணுமா? தலைவலியோட எப்படி ட்ராவல் பண்ணுவ? அருணை வீட்டுல விட சொல்லவா?” வார்த்தைகளில் இருந்த அக்கறை குரலில் இல்லை. அருகில் வந்தும் ஆராய்ச்சி தான் தொடர்ந்து கொண்டிருந்தது.

“இல்லை இல்லை ரேகாவோட அப்பா வருவாங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று அவசரமாக மறுத்தாள்.

முகத்தை ஏறிட்டுப் பார்க்க மறுத்தவளை, யோசனையாகப் பார்த்தபடி, “எங்கேயும் தப்பா தொட்டுட்டேனா?” என்று தணிந்த குரலில் விசாரித்தான். அவனுக்கு வெகு நேரமாக இப்படி ஒரு சந்தேகம். இல்லாவிட்டால் விழுந்த பிறகு அவள் மொத்தமாக மாறிப்போவாளேன்?

அதில் மலர்விழி விலுக்கென நிமிர்ந்து அவனை பார்க்க, “அது இங்கே கொஞ்சம் பிடிக்க வேண்டியதா போச்சு” என அவளின் இடையை காண்பிக்க, அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்திருந்தது.

“இல்லை…இல்லை… நான் வேணும்ன்னே எதுவும் செய்யலை. நீ விழுந்த வேகத்துல விழாம இருக்க பிடிச்சேன். பிடிச்ச வேகத்துல உன்னை நிக்கவும் வெச்சுட்டேன்” என்று அவசரமாக விளக்கம் சொல்ல, ‘இப்ப இதையெல்லாம் இவன்கிட்ட யாரு கேட்டாங்களாம்’ என்று அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“நான் வேணும்ன்னு செய்யலை” என்றான் மீண்டும்.

‘ஐயோ! எனக்கு அப்ப நடந்தது சுத்தமா தெரியாது… நீங்க வேற!’ என அவனிடம் கத்த வேண்டும் போல அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.

அவளின் முகபாவனைகளே எதையோ உணர்த்த, “நீ அதைப்பத்தி யோசிக்க கூட இல்லையா?” என்று விசாரித்தான். ‘அவகிட்ட வந்து இப்படி அப்ரூவர் ஆகிட்டியேடா’ என அவனின் மனசாட்சியே அவனைப் பரிகசித்தது.

அவனாகவே ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறான் என்று, தன் கோபத்தை விலக்கி வைத்து, “யாராவது ஏதாவது நினைச்சிருக்க போறாங்கன்னு வேணா யோசிச்சேன்” என்றாள் மனதை மறையாது!

“ஓ… அப்ப என் மேல கோபம் எதுவும் இல்லையே!”

“பைத்தியமா உங்களுக்கு. எனக்கு விழுந்ததைத் தவிர எதுவும் தெரியாது. இப்ப எதுக்கு என்கிட்ட விளக்கம் சொன்னீங்க. நான் இதைப்போட்டு உலப்பிக்கவா?” என்று கடிந்து கொண்டாள்.

“சாரி சாரி… நீ டல்லா இருக்கவும் என்னவோ, ஏதோன்னு… ரொம்ப சாரி” என்றவன் மன்னிப்பு கேட்க, “அதான் தலைவலின்னு சொன்னேனே!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு முனங்கினாள்.

“நீ தலைவலிக்காக இப்படி இருக்க மாதிரி தெரியலை!” என்று உறுதியாகச் சொன்னவன், “பார்த்து போ!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான். அவளிடம் முறையாக விடைபெறக் கூட இல்லை.

செல்லும் அவனையே அதிர்ச்சி விலகாமல் பார்த்திருந்தாள் மலர்விழி.

நாட்கள் கடந்த பிறகும், கதிரவனைச் சுத்தமாகத் தவிர்த்தாள் மலர்விழி. அவளை நினைத்து அவளுக்கே கோபம் கோபமாக வந்தது. ஒரு காதல் தோல்வியால் வதங்கியவளைப் போலவா இருக்கிறது உன் செய்கை? என அவளுக்கு அவளே வசைமாரி பொழிந்து கொண்டாள்.

உண்மையில் சில நேரங்களில் காதல் எது என்பதே தெளிவில் இருக்காது. இவரோடு நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்கும், இவரோடு மட்டுமே நம் வாழ்வு நன்றாக இருக்கும் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதல்லவா?!? அந்த பக்குவமும், முதிர்ச்சியும் அத்தனை எளிதில் பலருக்கும் வாய்ப்பதில்லை. மலர்விழியும் அந்த வகைப் பெண்ணே!

ஆகையால் விஜயகுமார் மீது கொண்ட உணர்விற்கும், இப்பொழுது கதிரவன் மீது தானாக எழும்பியிருக்கும் உணர்வுக்கும் அர்த்தத்தை விளக்கிக் கொள்ளத் தெரியாமல் தனக்கும், தன் எண்ணங்களுக்கும், மனதிற்கும் கடிவாளமிட்டு நடமாடி வருகிறாள். ஏனோ இதில் ஒரு உயிர்ப்பு இல்லை. புத்துணர்வு இல்லை. இருந்தும் அவள் தன் போக்கில் துளியும் மாறவில்லை.

இதுபோன்ற தருணத்தில் தான், பண்ணையில் தக்காளிச் செடிகளில் புழு தாக்குதல் தொடங்கியது. மலர்விழி, தன் தந்தை முத்துவேலனிடம் சொல்லவுமே, அவருடைய கைப்பேசியிலிருந்து உடனடியாக கதிரவனுக்கு அழைப்பு பறந்திருந்தது.

‘இந்த அப்பா வேற… இங்கே வேற யாருமே பண்ணையம் பண்ணறதில்லையா? இத்தனை வருஷம் இவரு விவசாயம் தானே பார்த்தாரு’ என மலர்விழிக்கு கடுப்பாக வந்தது.

உண்மையில் இவர்கள் ரசாயன உரத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால், கதிரவன் தற்போது முழுக்க முழுக்க இயற்கைவழி வேளாண்மையில் நல்ல லாபம் பார்த்து வருகிறான். நிலத்திற்கும் பாதிப்பில்லை. விளைச்சலும் நன்றாக இருக்கிறது. ரசாயனங்கள் இல்லாத காய்கறிகளும் கிடைக்கிறது.

அதைக் கவனித்ததிலிருந்து முத்துவேலனிற்கு கதிரவன் செயல்படுத்தும் முறை மீது அளவற்ற ஆர்வமும், நம்பிக்கையும்! பலரிடமும் கதிரவனைத் தான் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டு சொல்லுவார். ஆக, மகள் எந்த சந்தேகம் கேட்டாலும், விளக்கம் கொடுக்க அவனை நாடுவதே அவரது வாடிக்கை!

கதிரவனிடம் தேவையான விவரங்களை கேட்டுவிட்டு, அலைப்பேசியை வைத்தவர், மகளிடம், “பத்து நாளைக்கு ஒருமுறை வேப்பெண்ணெய் கரைசலும், மிளகாய் கரைசலும் மாத்தி மாத்தி போடணுமாம்” என்று தீர்வை சொன்னவர் வேப்பெண்ணெய் கரைசலுக்கான செய்முறையைக் கூறினார்.

“இதுக்கு மஞ்சள் கரைசல் தேவையில்லையா பா”

“இல்லை மா விசாரிச்சிட்டேன். அவசியமில்லையாமா”

“சரிப்பா நாளைக்கே வேப்பெண்ணெய் கரைசல் போட்டுடலாம்” என்று சொன்னவள், சொன்னபடியே மறுநாளே அதைத் தொடங்கியிருந்தாள்.

மலர்விழிக்கு வரன்கள் வரத் தொடங்கியிருந்தது. ஆனால், வெளியூர் வேலை, நிலையற்ற தொழில், குறைவான வருமானம் என்பது போன்ற காரணங்களால் பெரும்பாலான வரன்கள் முதல்கட்ட பேச்சு வார்த்தையிலேயே தட்டிக் கழிக்கப்பட்டது.

தரகரிடம், மீண்டும் சில ஜாதகங்களை வாங்கி பார்க்கும்போது தான், அதில் கதிரவனின் ஜாதகமும் அடங்கியிருந்ததை முத்துவேலன் கவனித்தார்.

“இந்த ஜாதகம்…”

“இவங்க அம்மா மகனுக்கு வரன் பார்க்கணும் சொன்னாங்க. பையன் முன்னாடி பெங்களூருல பெரிய வேலையில இருந்தாரு. இப்ப இங்கே விவசாயம் பார்க்கிறாரு. நிலம் எல்லாம் அவரே சம்பாரிச்சு வாங்கினது” எனத் தகவல்களை வாரி வழங்க,

“எனக்கு தெரிஞ்ச பையன் தான். என் மச்சாண்டார் நிலத்தை இந்த பையனுக்குத் தான் குத்தகைக்கு விட்டிருக்கோம்” என்றார் முத்துவேலன்.

“இந்த பையனுக்குக் கூட ராகு, கேது ஜாதகம் தான். உங்களுக்கு விவசாயம் பார்க்கிற மாப்பிள்ளை சரின்னா சொல்லுங்க பார்க்கலாம். பையனைப் பத்தி உங்களுக்கே நல்லா தெரியும். நான் எதுவும் தனியா சொல்லத் தேவையில்லை. பையன் சொக்கத் தங்கம்” என்றார் தரகர்.

‘அட இது ஏன் எனக்கு முன்னாடியே தோணலை’ என்று யோசித்தவர், “நானே விவசாயம் தான் பார்க்கிறேன். அப்பறம் விவசாய மாப்பிள்ளையில என்ன இருக்கு? எனக்குப் பூரண சம்மதம் தான். ஜாதகம் கொடுங்க. ஜோசியரை பார்த்திட்டு பொருந்தி வந்தா மேற்கொண்டு பேசலாம்” என்று ஜாதகத்தையும், விவரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

மறுநாள் நாள் நன்றாக இருக்கவே, சாமி படத்தின் முன்பு மலர்விழி, கதிரவன் ஜாதகத்தை வைத்து, ‘எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்’ என்ற பிரார்த்தனை செய்தவர், ஜோசியரைச் சந்திக்கச் சென்றார்.

இருவரின் ஜாதகங்களையும் பார்த்து பொருத்தம் கணித்த ஜோசியர், பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட, முத்துவேலனிற்கு அத்தனை மகிழ்ச்சி! மகளுக்கு ஏற்ற வரன் எனப் பூரித்தவர், வீட்டிற்கு வந்ததும், முதல் வேலையாக ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்த வளர்மதியின் எண்ணிற்கு அழைத்துப் பேசினார்.

முத்துவேலன் விவரங்கள் அனைத்தையும் சொல்லவும், பெண் மலர்விழி தான் எனத் தெரிந்ததும், வளர்மதிக்கு அத்தனை மகிழ்ச்சி! மலர்விழியை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகனுக்கும் பிடிக்கும் என்பதில் உறுதி தான்!

இத்தனை சீக்கிரம் இப்படி ஒரு நல்ல வரன் அமைந்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டார். ‘எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்’ என்ற வேண்டுதலோடு மஞ்சள் துணியில் கடவுளுக்குக் காசு முடிந்து வைத்தார்.

முத்துவேலனிடமும் நல்லபடியாகப் பேசியவர், “தாங்களும் ஜாதக பொருத்தம் பார்த்துவிட்டு, வீட்டில் கலந்தாலோசித்து விட்டுத் தெரிவிக்கிறோம்” என்று சொல்லி வைத்தார்.

தன் கணவனின் அண்ணன் பரந்தாமன் தான் குடும்பத்தில் மூத்தவர், ஆக அவரிடமும், அவர் மனைவி பூமணியிடமும் விவரத்தைச் சொன்னவர், ஜாதகம் பார்க்க எப்பொழுது வசதிபடும் என்றும் விசாரித்தார்.

அருண், வளர்மதி, பரந்தாமன், பூமணியும் சேர்த்து நான்கு பேருமாய் சென்று ஜாதகம் பார்த்து வந்தனர். ஜாதகம் பொருந்தி இருப்பது திருப்தி தான்!

கூடவே, ஜோதிடர், கதிரவனுக்கு இப்பொழுது கிரகநிலை சரியில்லை என்பதால், இரண்டு மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலில், எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வளர்மதி, என்ன, ஏதென்று பதற்றமாக விசாரிக்க, “பயப்படும்படி எதுவுமில்லை” என்று முடித்து விட்டார் அவர்.

“திருமண பேச்சுவார்த்தை தொடங்கலாமா?” என்று பரந்தாமன் விசாரித்ததற்கும், “திருமண தேதியை மட்டும் இரண்டு மாதங்கள் கழித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது பேச்சுவார்த்தை தொடங்கலாம். அதில் எந்த பாதகமும் இல்லை. ஆனால், பரிகாரம் செய்வது முக்கியம்” என்றார் அவர்.

மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், அதையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல், அவர் சொன்ன ‘கிரகநிலை சரியில்லை’ என்ற வார்த்தைகள் செய்தது.

‘மகன் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை அந்த அன்னையின் மனதில் நிறைந்து ஆர்ப்பரித்தது. சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் கவலை ஆட்கொண்டது.

“பரிகாரம் செய்து கொள்ளலாம், மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்” என பூமணி தான் வளர்மதியைத் தேற்றி அனுப்பினார்.

Advertisement