Advertisement

உன் சாயல் கொண்டேனே – 03

நமக்குப் பிடித்த விஷயத்தில் ஈடுபடும் போது நம் மனக்கவலைகள் சற்று எட்டி நிற்கும். இத்தனை நாட்களும் ஏனோ தானோவென்று தோட்டத்திலும், வீட்டிலும் வேலையைக் கவனித்து வந்த மலர்விழியிடம், அவளது தந்தை முழுப்பொறுப்பையும் ஒப்படைக்கவும் அழகான மாறுதல் அவளிடம்.

என்ன விதைக்கலாம் என்பதற்கே அத்தனை யோசித்தாள். மழைக்காலம் முடிந்தது என்பதால், இனி கிணற்று நீர் தான் அவர்களது ஏழு ஏக்கர் நிலத்திற்கும் ஆதாரம். ஆகவே, இந்த சூழலுக்கு ஏற்ப அவளுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாள்.

நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்த, “ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது” என்ற கருத்தில் அவள் உறுதியாக இருந்தாள். பல வகையான பயிர்கள், கால்நடைகள் என்று ஒருங்கிணைந்த பண்ணையம் செய்ய வேண்டும் என்பதே அவளுடைய ஆசை என்றாலும், தற்சமயம் தனது பண்ணையத்தில் கால்நடைகளை வளர்ப்பது சிரமம் என்பதால் பல வகையான பயிர்களை மட்டும் பண்ணையம் செய்யலாம் என்று திட்டமிட்டாள்.

வறட்சியைத்தாங்கி வளரும் முல்லைப்பூக்களை முந்நூறு செடிகளை முதலில் நடவு செய்தாள். பிறகு வெங்காயம், வெண்டை, கத்திரி, தக்காளி, பச்சைமிளகாய் செடிகளை நடவு செய்தவள், வரப்பு ஓரங்களில் செண்டுமல்லி பூச்செடிகளை வேலிபோல நட்டு வைத்தாள்.

மெல்ல மெல்ல அவள் தோட்டம் உயிர்பெற்று வளரவும், அவள் தொலைத்த புன்னகை அவளிடம் மெல்ல மீண்டது. அதை இளமாறனும் கவனிக்க அவனுக்கு அத்தனை சந்தோஷம்.

இது போன்ற சமயத்தில் தான், அவளுடைய தோட்டத்திலிருந்த வெங்காய செடிகளில் புழு தாக்குதலைக் கவனித்தாள். அதன் விளைவாய் வெங்காயத் தாள் எல்லாம் விழத்தொடங்கி வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கத் தொடங்கி விட்டது. வெங்காயம் பயிரிட்டு ஒரு மாதத்திலேயே இந்த பிரச்சனை எழவும், என்ன செய்ய என்று புரியாமல் தந்தையிடம் சென்று ஆலோசனை கேட்டாள். அவள் ஏதாவது சோதித்துப் பார்ப்பதைக் காட்டிலும், அப்பாவின் அனுபவம் நன்கு வழிகாட்டும் என்று தான் அவரை அணுகினாள்.

முன்பே, ‘நீயேதான் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னவர் ஆயிற்றே, இப்பொழுது தொந்தரவாக நினைப்பாரோ என்ற கலக்கம் எட்டிப் பார்த்தது. அவளது அச்சம் பொய்க்க, தக்க ஏற்பாடு செய்வதாக முத்துவேலன் கூறவும் தான் அவளுக்கு ஆசுவாசம் வந்தது.

மறுநாள் வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தோப்பிற்கு வர நினைத்த சமயத்தில், இளமாறனும் உடன் இணைந்து கொண்டான்.

“என்ன மழை எதுவும் வருதா?” என்று மலர்விழி கேட்க, தமக்கையின் கேலி புரிந்தவன் மெலிதாக சிரித்துக் கொண்டான்.

“சும்மா தான்க்கா… என்னமோ நான் தோட்டத்துப் பக்கம் எட்டியே பார்க்காத மாதிரி பேசறியே”

“ஓ… வருவியே… மோட்டார் தண்ணியில குளிக்கிறதுக்கும், அங்கிருக்க தென்னந்தோப்புல ஒய்யாரமா ஓய்வெடுக்கிறதுக்கும்…” என்றாள் மலர்விழி கேலி செய்யும் குரலில். தோட்டம் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை. வீட்டை ஒட்டித்தான் இருந்தது.

அவளது கேலியில், “அக்கா…” என்றான் இளையவன் பரிதாபமாக.

“நிஜம் தானே டா! அப்போ தானே வருவ. இப்படி காலையில நான் கிளம்பும்போது எப்படா வந்திருக்க நீ?” என்று சரியாகக் கேள்வி கேட்கவும்,

“டோட்டல் டேமேஜ்” என்று தலையில் கை வைத்தான் இளமாறன்.

அவனது தோற்றத்தைப் பார்த்து முகம் மலர சிரித்தவளை வாஞ்சையாகவும், நிறைவாகவும் இளமாறன் பார்த்த அதே வேளையில்… ஆவலும், ஆர்வமுமாகப் பார்த்தான் ஒரு இளைஞன். அவள் புன்னகையில் இருந்த உயிர்ப்பு சற்று ஈர்த்தது போலத் தோன்றவும், மறுப்பாகத் தலையை உலுக்கியபடி தனது பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்ந்தான்.

“மிளகாய் கரைசல் தெளிச்சா சரி ஆகிடுங்கய்யா. அப்பறம் மஞ்சள் கரைசலை சொட்டு நீர் பாசனத்தோட சேர்த்து விடணும். இதை ஒரு பதினைந்து நாளைக்கு ஒருமுறை மாத்தி மாத்தி தொடர்ந்து போட்டுடுட்டே வந்தா புழு தாக்குதல் சரி ஆகிடும். சரியான பிறகும் இதை தொடர்ந்தா ரொம்ப நல்லதுங்க. மிளகாய் கரைசல், மஞ்சள் கரைசலுக்கான செய்முறையை நான் சொல்லி தந்திடறேன்” என்று கதிரவன் முத்துவேலனிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரின் பேச்சு கேட்கும் தூரத்தில் நெருங்கியிருந்தனர் அக்காவும், தம்பியும்.

மலர்விழி இதுவரை தம்பியோடு நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாய் மிக நல்ல மனநிலையில் இருந்தபடியால், “யாருடா இந்த மிளகாய்? மிளகாயைப் பத்தி சொல்லிட்டு இருக்கு” என்று அரைகுறையாகக் கேட்டதை வைத்து தம்பியின் காதில் கிசுகிசுக்க,

“அக்கா…” என்றான் இளமாறன் பரிதாபமாக.

“என்னடா உன்னைக் கிண்டல் பண்ணினாலும் அழற. மத்துவங்களைக் கிண்டல் பண்ணினாலும் அழற என்னதான் உன் பிரச்சனை?” என்று கண்ணை உருட்டி மிரட்டவும்,

“அக்கா அவர்தான் கதிரவன் அண்ணா. மாமா நிலத்தைக் குத்தகை பார்க்கிறவங்க” என்று தம்பி விவரம் சொல்ல, “அதுக்கென்ன?” என்றாள் அவள் அசால்ட்டாக.

“ஹ்ம்ம்… ஏதோ செடிங்களுக்குப் புழு வந்திடுச்சுன்னு அப்பாகிட்ட சொன்னியாமே. இவரு பண்ணையம் நல்லா செய்யறாரு க்கா. அதான் அப்பா இவர்கிட்ட ஆலோசனை கேட்க வர சொல்லி இருக்காரு” என்று விளக்கம் சொல்ல,

அதற்கும், “ஓ சரி… சரி… என்ன, ஏதுன்னு விசாரிச்சு வையுங்க. ஏதோ கம்பியூட்டர் வேலை செய்துட்டு வந்தவருன்னு சொன்ன, அரை குறையா எதையும் சொல்லி வெச்சிட போறாரு. என் செடிகளுக்கு எதுவும் ஆச்சு, அப்பறம் நான் பொல்லாதவளாகிடுவேன்” என்று மிரட்டலாகக் கூறியவள், வரவேற்பாகக் கூட கதிரிடம் எதுவும் பேசாமல், தோட்டத்திற்கு நகரப் பார்த்தாள்.

அதைக் கவனித்த, முத்துவேலனோ, “மலர், எங்க போற ம்மா? இங்க வா. கதிர் தம்பி புழு வராம இருக்க இயற்கை மருந்து சொல்லறார் பாரு” என்று அழைக்க,

நின்று திரும்பிப் பார்த்தவள், “அப்படியாப்பா? ரொம்ப நல்லது. நீங்களே என்ன, ஏதுன்னு விசாரிச்சு வையுங்க பா. நான் உங்ககிட்ட கேட்டுக்கிறேன். கொஞ்சம் வேலை இருக்கு வந்துடறேன்” என்றதோடு நகர்ந்து விட்டாள்.

‘அலட்சியப்படுத்துகிறாளோ?’ என்ற எண்ணம் கதிரவனுக்குத் தோன்றவும், மெலிதாக சினம் துளிர்த்தது. இருந்தும் மற்ற இருவர் முகத்திற்காகவும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்.

“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. அம்மா இல்லாத பிள்ளை இல்லையா? ஒரு சொல் வந்திட கூடாதேன்னு கொஞ்சம் ஒதுக்கமா இருப்பா. மத்தபடி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி” என்று முத்துவேலன் மகளின் செய்கைக்காக விளக்கம் சொல்லவும், அவனுக்கு சங்கடமாகிப் போனது.

“நான் தப்பா எடுத்துக்கலைங்க” என்று அவசரமாக மறுப்பு கூறினான்.

பிறகு, மிளகாய் கரைசல், மஞ்சள் கரைசல்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்ற குறிப்பைத் தந்தவன், இளமாறனிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றிருந்தான்.

‘முதல்முறை பார்க்கும் என்கிட்ட பேச்சு வளர்த்தா நல்லாவா இருக்கும்?’ என்று அவளுடைய ஒதுக்கத்திற்கும், விலகலுக்கும் தானாகக் காரணம் யோசித்துக் கொண்டவன், அதன்பிறகு அது குறித்து பெரிதாக யோசிக்கவில்லை.

நாட்கள் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் அன்னை வளர்மதியோடு அருகில் இருந்த ஆலயத்திற்கு வந்திருந்தான் கதிரவன். வழிபாடு முடிந்து பிரகாரத்தில் அன்னையோடு அமர்ந்திருந்த போது தான் மலர்விழியைக் கவனித்தான். அடிப்பாதம் வைத்துக் கொண்டிருந்தவளையே கதிரவன் பார்த்துக் கொண்டிருக்க,

தன் பேச்சில் கலந்து கொள்ளாமல் திடீரென்று மௌனமாகி விட்ட மகனைப் பார்த்த வளர்மதி, அவன் பார்வை சென்ற திசையைக் கவனித்து விட்டு, “யாரு கதிரவா? பொண்ணு அழகா, லட்சணமா இருக்கா?” என்றார் ஆவலாக.

அதில் கலைந்தவன், “அச்சோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைம்மா. நம்ம இளமாறானோட அக்கா. அன்னைக்கு அவங்க தோட்டத்துக்கு போனப்ப பார்த்தேன். அதான் இத்தனை தூரம் தனியா வந்திருக்காளேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான்.

“அப்படி என்ன தூரம்? பஸ் ஏறினா கால் மணி நேரம்” என்று வளர்மதி சொல்ல, “அதுக்காக அவங்க ஊரில் கோயில் இல்லையா? இவ்வளவு தூரம் தனியா வரணுமா?” என்றான் சற்று ஆத்திரமாக.

இதில் கோபப்பட என்ன இருக்கிறது என்று வளர்மதிக்கு சத்தியமாகப் புரியவில்லை. அதோடு மகன் இப்படி வேறு யாரைப்பற்றியும், யார் செயலைப்பற்றியும் இதுவரை விமர்சித்ததும் இல்லை என்பதால், சற்று மகனை ஆராய்ச்சியாகவும், அந்த பெண்ணை ஆவலாகவும் பார்த்தார்.

பார்வை அவளிடத்தில் நிலைக்க, “அந்த பொண்ணு பேர் என்னப்பா?” என்றார் மகனிடம்.

“மலர்ன்னு அவங்க அப்பா கூப்பிட்டாங்க. முழு பேர் தெரியலை” என்றான் முணுமுணுப்பாக.

“உனக்கென்னடா பிரச்சினை இப்போ?” என்று அவனது யோசனையும், தீவிரத்தையும் பார்த்து வளர்மதி கேட்க,

“என்னம்மா நீங்க? மழை வர மாதிரி இருக்கு. அவ எப்படி போவா? முதல்ல இவ்வளவு தூரம் இவ எதுக்கு தனியா வரணும்?” என்று எரிந்து விழுந்தான் அவன்.

‘வந்தவளுக்கு போகத் தெரியாதா? கோயிலுக்கு வந்தவங்க எல்லாம் உள்ளூர்காரங்களேவா இருக்காங்க. அக்கம், பக்கத்து ஊரில் இருந்து இங்க நிறைய பேரு வந்து போயிட்டு தானே இருக்காங்க. அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நாம சொன்னா அதுக்கும் கத்துவான். கத்திரிக்காய் முத்தட்டும். நாம வேடிக்கை பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டவர் பதில் சொல்லவில்லை.

இவன் அச்சப்பட்டது போலவே சிறிது நேரத்தில், மழை பிடித்துக் கொண்டது. பரிகாரம் முடித்திருந்தவள், மழைக்காகக் கோயில் மண்டபத்தில் தஞ்சம் புகுந்தாள். சிறிது நேரத்தில் யாரோ கவனிக்கிறார்களோ என்னும் எண்ணம் தோன்ற, தன் பார்வையை சுழலவிட, சற்று தள்ளி அவளைக் குற்றம்சாட்டும் பார்வையோடு கதிரவனும், அருகில் ஒரு மூத்த பெண்மணி சற்று வாஞ்சையோடு பார்த்தபடியும் அமர்ந்திருந்தனர்.

மலர்விழி அவர்களைப் பார்ப்பது தெரிந்ததும், இங்கே வாம்மா என்று சைகை செய்தார் வளர்மதி. மூத்த பெண்மணியின் அழைப்பை எப்படி நிராகரிப்பது என்ற தயக்கத்தோடு அவர்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்,

“அம்மா உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை?” என்று அடிக்குரலில் கண்டித்தான் கதிரவன்.

“உனக்கென்னடா?” என்று வளர்மதியும் முறைக்கவும், “என்னவோ செய்யுங்க” என்று நகர்ந்து உட்கார்ந்து விட்டு கைப்பேசியில் கவனம் பதித்தான்.

அதற்குள் அருகில் வந்தவள், கதிரவனின் விலகலைப் பார்த்துவிட்டு, ‘ஹையோ இந்த மிளகாய்க்கு ரொம்பத்தான்’ என்று முகம் கடுத்தாள்.

“உட்காரு மா” என்று வளர்மதி சொல்ல, அவனில் இருந்து களைந்தவள் மென்னகையோடு அருகில் அமர்ந்தாள்.

“கதிர் சொன்னான். நீ இளாவோட அக்கான்னு. தனியாவா வந்த மா?” என்றார் அக்கறையாக.

“வழக்கமா வரது தான்மா” என்றாள் புன்னகையை வாட விடாமல்.

“தனியா இவ்வளவு தூரம் வரணுமா மா. மழை வேற! இந்த முறை என்னவோ மழைக்காலம் முடிஞ்சும் அதிசயமா மழை வருது”

விவசாயம் செய்பவர்களுக்கே இருக்கும் பூரிப்பு அவரிடம்! தங்கள் கிணற்றில் நீர் கூடும், நிலத்தடி நீர் சேரும், பயிர்கள் வளம் பெறும் என்னும் மனநிறைவும், மகிழ்ச்சியும்!

அதை உள்வாங்கியபடியே, “ஆமாம்மா. மழை வந்தா நல்லது தானே விடுங்க” என்றாள் இளையவள்.

“நீ எப்படிம்மா இந்த மழையில வீட்டுக்கு போவ?”

“பஸ்சில் தானேம்மா போறேன். அதெல்லாம் போயிக்குவேன்” என்றவளை இன்னும் முகம் தெளியாமல் பார்த்தவரிடம்,

“அது அம்மா இருக்கப்ப ஒவ்வொரு அமாவாசையும் வருவாங்க. அதுக்கப்பறம் அவங்க ஞாபகமா நான் வர தொடங்கிட்டேன் மா” என்று தணிந்த குரலில் விளக்கம் தந்தாள் மலர்விழி. முன்பின் தெரியாத தன்னிடம் இத்தனை அக்கறை காட்டுகிறாரே என்று அவளுக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது.

ஏற்கனவே அவர்களுக்கு பெற்றவள் இல்லை என்பதை இளமாறன் மூலம் தெரிந்திருந்தாலும், மீண்டும் மனம் கனத்தது மூத்தவளுக்கு. ஆதுர்யமாக அவளின் தலையைத் தடவ, அவளுக்கு என்ன எதிர்வினை காட்ட என்று தெரியவில்லை.

“பேசாம எங்களோட வீட்டுக்கு வந்திடேன். மழை விட்டதும் போலாம்”

கைப்பேசியில் கண்கள் பதித்திருந்தாலும் கதிரவனது கவனம் முழுவதும் இவர்களது பேச்சில் தான்! அம்மா சொன்னதைக் கேட்டவன், ‘வந்திட்டு தான் மறுவேலை பார்ப்பா’ என்று கடுப்பாக எண்ணிக் கொண்டான். அன்று அவளது புறக்கணிப்பிற்கு அவனாகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாலும், இன்று ஒரு அறிமுக புன்னகை கூடச் செய்யாமல் இருப்பவளிடம் மீண்டும் காரணமே இல்லாமல் எரிச்சல் படர்ந்தது.

அதற்குள் மலர்விழியோ, “அச்சோ அதெல்லாம் வேண்டாம் மா. நான் மழை நின்றதும் கிளம்பிடுவேன். அது எந்நேரம் ஆகப்போகுது?” என்று அவசரமாக மறுக்க, ‘எனக்கு தான் தெரியுமே’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் கதிரவன்.

இப்படி எல்லாம் அவன் ஏட்டிக்குப் போட்டியாக எண்ணியதே இல்லை. இப்படி யாருடைய கவனமும் தன்புறம் திரும்பாதது குறித்து எரிச்சல் கொண்டதும் இல்லை. அவனுடைய இந்த வித்தியாசங்களையும் இன்னமும் சரியாகக் கவனத்தில் கொள்ளாமல் தான் இருந்தான். தன் மாற்றத்தை அவன் உணர்ந்து கொள்வானா?

Advertisement