Advertisement

உன் சாயல் கொண்டேனே – 19

மலர்விழியை அறையிலிருந்து அழைத்து வந்ததிலிருந்து அவளையே தான் பார்வையால் அளந்து கொண்டிருந்தான் கதிரவன்.

அழுகையில் சோர்ந்த கண்கள், வீங்கிய கன்னங்கள் என எதுவும் அவன் பார்வையில் தப்பவில்லை. நலுங்கிய உடை, சோர்ந்த தோற்றம் என்று அவனை வெகுவாக பாதித்தாள்.

இருளப்பன் கிளம்பியதும், அவளையும் உள்ளே அழைத்துச் சென்று விட, “நீங்க எல்லாம் தீர விசாரிக்காம, இத்தனை அவசரப்படுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை சம்பந்தி” என்று பரந்தாமன் தான் தன் அதிருப்தியை முதலில் தொடங்கினார்.

பொண்ணுமணிக்கும், முத்துவேலனுக்கும் பலத்த சங்கடம்! இது போன்று பிரச்சினையைக் கிளப்பும் ஆட்கள் இருப்பார்கள் தானே! அவர்கள் யாரென்று புரிந்து கொள்ளாமல், இனம் கண்டு கொள்ளாமல்… இப்படி ஒரு அவசர முடிவை தீர விசாரிக்காமல் எடுத்தது மிகவும் தவறு தானே!

“நம்ம வீட்டு பொண்ணை பேசினதும், வேற எதுவுமே யோசனைக்கு வரலை சம்பந்தி. எங்களை மன்னிச்சிடுங்க. அந்த நேரத்துல எங்களுக்கு எதுவுமே புரிஞ்சுக்கவோ, யோசிக்கவோ முடியலை” என்றார் முத்துவேலன் உண்மையான வருத்தத்துடன்.

“நான் உங்க கோபத்தையோ, ஆதங்கத்தையோ குறை சொல்லலை. ஆனா, என்ன விஷயம்ன்னு எங்ககிட்ட சொல்லி இருக்கணும் தானே? நீங்க அவசரப்பட்டதும் இல்லாம… இத்தனை தூரம் போவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்லை. ஆயிரம் தான் சமாதானம் சொன்னாலும் எங்களால நீங்க செஞ்சதை ஏத்துக்க முடியலை. எப்படி உங்களால இவ்வளவு தூரத்துக்கு போக முடிஞ்சது?” பரந்தாமன் ஆதங்கத்துடன் கேட்க,

முத்துவேலன் அவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்.

“உங்களுக்கு கதிரவன் பத்தி தெரியாதா என்ன? அவனை நல்லா தெரியும். இருந்தும் இப்படியொரு முடிவெடுக்க எப்படி உங்களால முடிஞ்சது? உங்க பொண்ணு மனசு, நீங்க வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளைன்னு நம்பிக்கை கொடுத்த கதிரவன் மனசெல்லாம் என்ன பாடுபடும்ன்னு யோசிக்கவே மாட்டீங்களா? இப்படியா எடுத்தோம், கவுத்தோம்ன்னு… முடிவு பண்ணின கல்யாணத்தை நிறுத்தும் முடிவை எடுப்பீங்க? அதுவும் எங்ககிட்ட கலந்தாலோசிக்காம…”

பரந்தாமனாவது தனது ஆதங்கத்தை வார்த்தையில் கொட்டுகிறார். ஆனால், கதிரவனோ, மற்றவர்களோ வாயை திறக்காமல் அமைதி காத்தனர். அதுவே இவர்களுக்குப் பலத்த சங்கடத்தைக் கொடுத்தது.

“நாங்க நிறையவே அவசரப் பட்டுட்டோம் சம்பந்தி. ஆத்திரத்துல புத்தி கெட்டு போயி இப்படி செய்துட்டோம். மனசளவுல எதையும் யோசிக்கும் நிலையில நாங்க இல்லை. நாங்க செஞ்சது மகாதப்பு தான். இதை மன்னிச்சு இத்தோட மறந்திடுங்க. இந்த விஷயத்தை பெருசு பண்ண வேண்டாமே! நாங்க செஞ்ச தப்ப நீங்களும் செஞ்சுடாதீங்க…” என்று முத்துவேலன் கெஞ்சல் குரலில், நேரடியாக மன்னிப்பு கேட்டு விட, அதற்கு மேலும் என்ன சொல்ல முடியும் மற்றவர்களால்?

“பின்ன உங்களை மாதிரி புள்ளைங்க மனசை நோகடிப்போமா நாங்க…” என்று பரந்தாமன் சொல்லி விட்டார்.

“விடுங்கண்ணா… ஏதோ திருஷ்டி பட்ட மாதிரி எல்லாம் நடந்திடுச்சு. இனி இதைப்பத்தி பேசி மனசு சங்கடப்பட வேண்டாம்” என்று வளர்மதியும் பெருந்தன்மையாகக் கூறிவிட்டார்.

மன்னிப்பு கேட்பவரிடம் வம்பு செய்யக் கதிரவனின் குடும்பத்தினருக்கும் மனம் வரவில்லை. சதியைச் செய்தது இருளப்பன் ஆயிற்றே! அந்த வலையில் சிக்கியவர்களை என்ன சொல்ல முடியும்? அதுவும் உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகும்.

ஆனால், கதிரவனின் இறுக்கம் மட்டும் தளர்வதாகவே இல்லை. அப்படியென்ன மகளின் மனம் புரிந்து கொள்ள முடியாமல் இத்தனை தூரம் செல்வது என்னும் ஆத்திரம் அவனுக்கு! திருமணத்தை நிறுத்தும் முடிவை எடுத்ததைக் காட்டிலும், வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது அவனை வெகுவாக ஆத்திரப் படுத்தியது.

ஏற்கனவே தன் வீட்டினரிடம் சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான். திருமண தேதியை கையோடு குறித்து விடலாம் என்று. இப்பொழுது பரந்தாமனும், பூமணியும் அந்த பேச்சுவார்த்தையைத் தான் தொடங்கினார்கள்.

மலர்விழி வீட்டினரும் அதற்கு உடன்பட, தெரிந்த ஜோசியரிடம் சென்று இன்றே திருமணத்திற்கான நாளை குறித்து வருவது என்று அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

இளமாறன் தான் சென்று, “வாங்க மாமா கொஞ்சம் பேசிட்டு இருப்போம்” என கதிரவனை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

வேண்டா வெறுப்பாக உடன் சென்றாலும், இங்கிருந்தால் யாரையும் எதுவும் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தினாலேயே வெளியில் நகர்ந்தான். இளவட்டங்களும் ஒருசேர நகர்ந்து வந்துவிட,

அருண், “ஏன்டா இத்தனை தூரம் போகுமளவு விட்ட?” என்றான் இளமாறனிடம் கோபமாக.

“டேய் தெரியாம நடந்திடுச்சு… பிளீஸ் டா பெருசு பண்ணாதேயேன்” கதிரவனைப் பார்த்தபடியே அருணிடம் கெஞ்சினான் இளமாறன்.

“இதைக்கூட பெருசு பண்ணாம விட, நாங்க என்ன கௌதம புத்தர் வம்சமா?” அருண் சுள்ளென்று கேட்க, இளாவின் முகம் சுருங்கியது.

“அண்ணிக்காக உங்களை எல்லாம் பொறுத்து போறோம்…” என்று பட்டும் படாமலும் பேச, அங்கே பலத்த நிசப்தம்.

கதிரவனின் இறுக்கமும் இம்மியும் குறையாதிருக்க, “மாமா ஏதோ ஆத்திரத்துல எடுத்த முடிவு. தப்பா எடுத்துக்காதீங்க. எங்களை மன்னிச்…” என்று இளமாறன் சொல்லி முடிக்கும் முன்பு அவனது கன்னத்தில் அறைந்திருந்தான் கதிரவன்.

அந்நேரம் அங்கு வந்த விஜயகுமார் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகக் கதிரவனைப் பார்க்க, அவனோ இன்னமும் ரௌத்திரம் குறையாது உடல் விறைத்து நின்றிருந்தான்.

அதே கோபத்தோடும், ஆக்ரோஷத்தோடும் இளமாறனை நோக்கி கை நீட்டி எச்சரித்தவன், “மாமான்னு கூப்பிட்டு இப்படியொரு பச்சை துரோகத்தை எப்படிடா செய்ய முடிஞ்சது? அந்தளவு கேவலமாவா என்னை நினைப்ப?” என்று கேட்க, இளமாறனுக்குப் பேச நா எழவில்லை.

உண்மையில் இன்னமும் தன்னை கதிரவன் அடித்தான் என்பதையே நம்ப முடியாமல் இருந்தவன், இதுவரை கண்டிராத அவனது கோபத்தை மிரண்டு போய் பார்த்திருந்தான்.

அருண் தான் கொஞ்சம் தெளிந்து உதவிக்கு வந்தான். “அண்ணா என்ன இது? அவன் பண்ணினது தப்பு தான். அதுக்காக அவனை நீ அடிப்பியா? கோபத்துல நிதானம் இழக்காதண்ணா…” என்று மூத்தவனைச் சாடியவன்,

“அண்ணன் இவ்வளவு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லைடா. ரொம்ப சாரி” என்றான் இளமாறனிடம் இறைஞ்சுதலாக.

“என்ன? எதுக்கு நான் நிதானமா இருக்கணும்? என் கல்யாணத்தை என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நிறுத்துனாங்களே அதுக்காகவா? இல்லை அவளை இந்தளவு கஷ்டப்படுத்தி இருக்காங்களே அதுக்காகவா? ஒரு முடிவை எடுத்தா… சம்பந்தப்பட்டவங்க கிட்ட சொல்லணும், சம்மதம் வங்கணும்ன்னு கூடவா யோசிக்க முடியாது. அவளை இப்படி அழ வைக்கிறதுல தான் உங்க பாழா போன கௌரவம் இருக்கா? அவ இடத்துல இருந்து யோசிக்கணும்ன்னு ஒருத்தருக்குக் கூடவா தோணலை”

கதிரவனின் ஆக்ரோஷமான பேச்சில், அவனது கோபம் எதற்கென்று அனைவருக்கும் விளங்கி விட்டது. மலர்விழியின் கண்ணீர் பொறுக்க மாட்டாமல், இங்கு சீறிக் கொண்டிருக்கிறான். இளமாறனுக்கு அவனின் இந்த செயல் மிகவும் இதமாக இருந்தது.

அருண் கதிரவனைத் தணிக்கும் விதமாக, அவனை அருகிலிருந்த நாற்காலியில் மெல்ல அமர்த்தி, ஓடிச்சென்று காரிலிருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தான்.

“ச்சு விடுடா…” என்றான் தம்பியிடமும் எரிச்சலாக.

“எங்க கல்யாணத்தை, எங்க சம்மதம் இல்லாம நிறுத்த இவங்க யாருடா? நான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதிலிருந்து கூடவே தானே இருக்காங்க… அவளைப்பத்தி ஒருநாள் ஒரு பொழுது தப்பா பேசியிருப்போமா? அப்படி நேரம், காலத்து மேல தான் பழியை போடணும்ன்னா… அவ்வளவு பெரிய விபத்துல, நான் வெறும் அடியோட உயிர் பிழைச்சதே என் மலர்விழியால தான்… அவளால தான் அவ நல்ல குணத்துக்குத் தான் நான் உயிர் பிழைச்சு வந்திருக்கேன்னு சொல்லலாமா?” என்று காரமாக கேட்க, இவன் என்ன இப்படி கோபம் தணியாமலேயே இருக்கிறான் என்று தான் மற்ற மூவருக்கும் ஆனது.

விஜயகுமார் என்ன நினைத்தானோ மலர்விழியின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க, அழுது சோர்ந்தவள், மலங்க விழித்தபடி அழைப்பை ஏற்றாள்.

“என்ன மலர் உன் ஆளு இங்க செம காண்டுல எல்லாரையும் போட்டு படுத்திட்டு இருக்காரு. உன்னைத் தவிர யாரோட சமாதானமும் எடுபடாது போல… நீங்க எப்படி கல்யாணத்தை நிறுத்தலாம்ன்னு எங்களை எல்லாம் காய்ச்சி எடுக்கிறாரு…” என விஜயகுமார் சொல்ல,

“என்ன ஆச்சு?” என்றாள் புரியாமல்.

“அதை நீ தான் கேட்கணும். இரு அவர் கிட்டயே தரேன்…” என்றவன் கதிரவனை நெருங்கி,

“பாஸ் இந்தாங்க மலர்விழி உங்ககிட்ட பேசணுமாம்” என அவனது கைப்பேசியை நீட்ட, அவனை முறைத்தபடி வாங்கி காதில் வைத்தான்.

மலர்விழி, “ஹலோ…” எனத் தொடங்க, இவன் வெறும் ம்ம் மட்டும் சொன்னான்.

அவன் இறுக்கம் புரியவும், “என்ன ஆச்சுங்க?” என்றாள் பதற்றத்துடன். மீண்டும் எதுவும் புது பிரச்சினையோ என்னும் அச்சம் எழுந்தது அவளுள். அவனுக்கு நடந்ததும் அநியாயம் தானே!

“ஒன்னுமில்லை…” என்று சொன்ன கதிரவனின் இறுக்கம் இன்னமும் தளரவில்லை.

“இல்லை உங்க குரலே சரியில்லை…”

“உன் குரல் மட்டும் இனிக்குதாக்கும். அழுமூஞ்சி. எதுவும் பிரச்சினைன்னா வீட்டுல சொல்லணும். இல்லை என்கிட்ட சொல்லணும். எதுக்கு இப்படி அழுது கரைவ?” என அவளிடமும் கத்த, மலர்விழிக்கு மீண்டும் அழுகை வந்தது.

அழுகையோடே, “நானே அழுது, சண்டை போட்டு சோர்ந்து போயிருக்கேன். என்கிட்ட வந்து இப்படித்தான் பேசுவீங்களா? இனி ஒன்னும் பிரச்சினை இல்லை. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ எதுக்கும் கவலைப் படாத அப்படின்னு ஆறுதலா பேசி சமாதானம் செய்ய மாட்டீங்களா?” என்று கேட்க,

“அது… அது…” என திணறினான் கதிரவன். அவள் சொன்னதுபோல பேசி தானே அவளை சமாதானப் படுத்தியிருக்க வேண்டும். அவளுக்குத் தைரியம் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவளிடமே சண்டைக்கு நிற்பதா என்று மனம் எடுத்துரைத்தது.

நீர்க்குமிழியாய் அவனது கோபம் சட்டென்று உடைந்துவிட, “இல்லை மலர்…” எனச் சமாதானமாகத் தொடங்க, இளமாறன் அவன் கோபம் இப்படி நொடியில் காணாமல் போனதை நினைத்துச் சட்டென்று சிரித்து விட்டான்.

அவனது சிரிப்பில், அவனைப் பார்த்து முறைத்தவன், “ம்ப்ச் அழாதம்மா. இவனுங்க வேற வெட்கமே இல்லாம என்னையவே குறுகுறுன்னு பார்க்கிறாங்க. நான் அப்பறமா பேசறேன்” என்று சொல்ல, அவனது அபிப்ராயத்திலும், வர்ணனையிலும் மற்றவர்கள் ங்கே என விழித்தனர்.

“ஆமா… அங்கே ஏதோ சண்டைன்னு சொன்னாங்க… என்ன பிரச்சினை?” என்று மலர்விழி கேட்க,

“ஹ்ம்ம் ஆமா ஆமா சண்டைதான் போட்டுட்டிருந்தேன். இனி போடலை…” என்றவன், “உன் போன் நம்பர் சொல்லு நானே அப்பறமா கூப்பிடறேன்…” என்க,

“ஆங்…” என அதிர்ந்தவள், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க…” என முணுமுணுத்து விட்டு, தன் கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டாள் .

“சரி வைக்கவா…” என்று மனமே இல்லாமல் கதிரவன் கேட்க, “ஐ லவ் யூ…” என்று முணுமுணுத்தவள், அவனது எதிர்வினையை எதிர்பார்க்காமல் பட்டென்று வைத்திருந்தாள்.

ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது என அவளுக்கே தெரியவேயில்லை. ஏதோவொரு உந்துதலில் தன்னையும் அறியாமல் சொல்லியிருந்தாள்.

அதைக்கேட்ட கதிரவன் அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த மூவரும் ஆச்சரியப்படும் விதமாக!

Advertisement