Advertisement

உன் சாயல் கொண்டேனே – 18

வெளியில் கல்யாண பேச்சுவார்த்தை மும்மரமாவதைக் காட்டிலும், அதெப்படி நம் வீட்டுப்பெண்ணை அவர்கள் அப்படிப் பேசலாம்? என்ற பேச்சு தான் இன்னமுமே ஓய ஓய எழுந்தது.

அடிப்பட்டு ஓய்ந்தவர்கள் அவ்வாறெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்று மலர்விழிக்கு நம்பிக்கை இருந்தது. ஆம்! அவளுக்குக் கதிரவனின் மீதும், அவனது குடும்பத்தினர் மீதும் நிறையவே நம்பிக்கை இருந்தது. அவர்கள் நிச்சயம் அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்கள் என்று ஆணித்தரமாக நம்பினாள். ஏதோ எங்கோ பிசகியிருக்க இங்கு இப்படியொரு சூழல்! நினைக்க நினைக்க அழுகையும், ஆத்திரமும் நிறைந்தது.

வெளியில் அனைவருமே நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே! ஆனாலும் அவளுக்கு மூச்சு முட்டியது. தனக்காக யோசிக்க யாருமே இல்லையா என்பது போல!

மீண்டும் மீண்டும் கதிரவனின் குடும்பத்தையே அவர்கள் வசைபாட அவளுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக வந்தது. அவளது பொறுமையெல்லாம் கரையைக் கடக்கும் தருணம்!

உண்மை எதுவெனத் தெரிந்து கொள்வதில்லை; முழுவதும் தெரிந்துகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை; அத்தனை அவசரம் காட்டுபவர்கள் நீதிபதிகளாகும் விந்தை தான் அவளுக்குப் பிடிபட மறுத்தது.

அவளைத் தனியாக விடாமல் மீண்டும் சிலர் அவளது அறையில் கூட, அவள் அழுவதைக் கண்டவர்கள், அதற்கும் கதிரவன் குடும்பத்தையே சாடினார்கள். திரும்பத் திரும்ப இந்த பேச்சு எழுவது அவளுக்கு தாளவே இல்லை.

“எதுக்கு இவ்வளவு சத்தம் போடறீங்க” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடியே கோபமாக.

“அவங்க செஞ்சதுக்கு சத்தம் போடாம எப்படிம்மா?” என அத்தை உறவுப்பெண்மணி நியாயம் கேட்க, அதற்குள் அவள் அழுதிருக்கிறாள் என்று தெரிந்து உறவினர்கள் எல்லாம் கூடி விட்டனர்.

“நீ ஏம்மா அழற? இந்த காலத்திலேயும் இப்படி எல்லாம் பேசிட்டு திரியறாங்க. அவங்க தப்புக்கு நீ பலிகடாவா? அவங்களை நாங்க சும்மா விட மாட்டோம்” என்று அவளின் தாய்மாமன் பொண்ணுசாமி சத்தம் போட, “என்ன குடும்பமோ?” என்று ஆளாளுக்கு பேச்சு நீண்டது.

“மாமா போதும். ஏன் இவ்வளவு சத்தம் போடறீங்க?” என்று மலர்விழி பொறுமை பறக்கக் கேட்டு விட்டிருந்தாள். அவளும் வெகுநேரமாக இத்தனை பேரின் முன்பு எதிர்த்துப் பேசுவது முறையாக இருக்காது என்று அமைதி காத்தாள். ஆனால், அது இனியும் முடியாது போல!

“உன்னை அப்படிப் பேசி இருக்காங்க… என்னத்த படிச்சவங்களோ? இன்னும் ராசி, நேரம்ன்னு பார்க்கிறாங்க. அந்த குடும்பத்தில உன்னைக் கொடுக்க முடியாதுங்கிறது வேற… அதுக்காக அவங்க என்ன பேசினாலும் நாங்கெல்லாம் அப்படியே விட்டுடுவோமோ?” என விஜயகுமார் சத்தம் போட்டான்.

தன் வீட்டுப் பிள்ளை என்ற உரிமையும், ஆதங்கமும் அவனிடம்! அவனுடைய உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், உண்மையிலே அவர்கள் குற்றம் செய்திருந்தால் தானே? இப்பொழுதோ இந்த கோபமும், ஆதங்கமும் வீண் என்று சர்வ நிச்சயமாகத் தோன்றியது மலர்விழிக்கு.

“யாரு பேசினாங்க..  அவரா? அவரோட அம்மாவா? யாரு என்ன பேசினாங்கன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க” என்றாள் மலர்விழி.

“அவங்க சொந்தக்காரங்க தான்மா…” என்று முத்துவேலன் மகளுக்குப் பதிலளித்தார்.

“யாருப்பா? அவங்க பெரியப்பா பெரியம்மா யாராவதா?” யாராக இருக்கும் என்று அவளுக்குப் பயங்கர குழப்பம்.

“யாருன்னு சரியா தெரியலை மா. ஆனா, அங்கே ஹாஸ்பிட்டல்ல ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன்” முத்துவேலன் இந்த பதிலைச் சொல்லும்போது அவரே சற்று யோசனையானார்.

“சரி அவர் பேசினப்ப, வேற யாரும் அவரை தடுக்கலையா?” மலர்விழியின் அடுத்த கேள்வியில் இன்னும் குழப்பம் கூடியது.

“அவர் பேசினது தனியா இருக்கும்போது தானே மா?” என்று தயக்கமாக இழுத்தார் தந்தை. பொண்ணுசாமியின் முகமும் இப்பொழுது யோசனையைத் தத்தெடுத்தது.

“அப்பறம் எப்படி நீங்க அவரை, அவங்க குடும்பத்தைக் குறை சொல்லலாம். யாரோ ஒருத்தங்க, தனியா தேடி வந்து வம்பு பேசினதுக்கு அவங்க என்ன செய்வாங்க? அவங்க எப்படி இதுக்கு பொறுப்பாவாங்க?” மலர்விழி கேட்ட நியாயத்தில் எல்லாருக்குமே இப்பொழுது பயங்கர குழப்பம்.

அவள் கேட்பது நியாயம் தானே? என்று அனைவருக்கும் புரிந்தது. கூடவே, கதிரவனின் மீது அவளுக்கிருக்கும் பிடித்தமும், நம்பிக்கையும் அனைவருக்கும் தெளிவாக விளங்கியது.

மலர்விழியின் மனதைப் பற்றி யாருமே யோசிக்கவில்லையே என அனைவருமே வெகுவாக வருந்தினர். அவளின் அன்னை இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று அனைவருக்கும் குற்றவுணர்வாகப் போய்விட்டது.

மாப்பிள்ளை வீட்டினர் என்ற பொதுவான அடைமொழிக்குள் யாரோ ஒருவர், அதுவும் பிறர் அறியாமல் சாமர்த்தியமாக சொன்னதை… மாப்பிள்ளை வீட்டினர் தான் பேசினார்கள் என்பது போல உருவகப்படுத்தி… தீர விசாரிக்கும் எண்ணமே இல்லாமல் எத்தனை எத்தனை குழப்பங்கள் செய்தாயிற்று! அனைவருக்கும் தங்களின் எண்ணங்கள், பேச்சுக்கள் குறித்து அவமானமாக இருந்தது.

ஒருவர் கூட உண்மைத்தன்மையை ஆராயவில்லையே! ஆத்திரம் அந்தளவுமா கண்ணை மறைக்கும்?

இப்பொழுது இளமாறனுக்குமே அக்காவின் மனம் தெளிவாகப் புரிந்து விட, அருணிடமும், கதிரவனிடமும் பேசியதில் தெளிவும் பிறந்திருக்க, “ஆமாம் பா. அருண் போன் பண்ணினான். ஏன் மூணு நாளா ஹாஸ்பிட்டல் வரலைன்னு கேட்டான். இன்னைக்கு மாமாவுக்கு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்களாம். நம்ம ரெண்டு பேரையும் வரீங்களான்னு கூட கேட்டான் பா. ரொம்ப சாதாரணமா தான் என்கிட்ட பேசினான் பா. அவனுக்கு இப்படி ஒரு பிரச்சினை நடந்ததே தெரியலை” என்று விவரம் கூறினான்.

முத்துவேலன் தன் பொறுப்பற்ற தன்மையை நினைத்து நொந்து கொண்டார். ஆத்திரமும், ஆதங்கமும் கண்ணை மறைத்து விட்டதே என்று கவலை கொண்டார். அனைவருக்கும் தேடித்தேடி உதவி புரியும் கதிரவன், இத்தனை மோசமாக நடந்து கொள்வானா என யோசிக்காமல் போய்விட்டோமே என வெகுவாக வருந்தினார்.

“நாம பிரச்சனை நடந்தப்பவே அவங்க வீட்டுல சொல்லியிருக்கணும் பா. அதைவிட்டு அதைத் தெளிவா விசாரிக்காம நாமளும் குழம்பி, இவ்வளவு குழப்பமும் வரவெச்சு…” தந்தைக்கு இணையான குற்றவுணர்வு இளமாறனிடம்.

பொண்ணுமணிக்கும் சங்கடமே! “ஆமாம். நம்ம வீட்டு பொண்ணை பேசறாங்கன்னதும் அவ்வளவு ஆத்திரம். அதுல எதையுமே யோசிக்காம விட்டுட்டோமே” என வெளிப்படையாகவே வருந்தினார்.

அதோடு மலர்விழியிடம், “மன்னிச்சிடும்மா. புத்தி இல்லாம நடந்திட்டோம். உன்னைப்பத்தியும் யோசிக்க மறந்துட்டோம். உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கவும் தவறிட்டோம்” என்று கூறவும் அவள் நெகிழ்ந்து போனாள்.

“என்ன மாமா என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க. என்மேல இருக்க பாசத்துல தான் இதெல்லாம் செஞ்சீங்கன்னு எனக்குப் புரியாதா?” என்று மலர்விழி கண்ணீரோடு சொல்ல,

“அழாதம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று சமாதானம் கூறினார்.

கண்களைத் துடைத்தவளை ஆதுர்யமாக பார்த்து, “முகம் கழுவிட்டு வாம்மா. முகமெல்லாம் சோர்ந்து போயிருக்கு” என்றார் மலர்விழியின் அத்தை.

இப்பொழுதுமே இந்த பெண்ணுக்கு யாரையும் குறை சொல்ல மனம்  வரவில்லையே என்று எண்ணியவருக்கு அவளின் குணம் அத்தனை ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட நிச்சயம் என்றளவில் வந்த திருமணத்தைப் பெண்ணின் சம்மதமில்லாமலேயே நிறுத்த நினைத்த தங்களின் மடத்தனம் இப்பொழுது பூதாகரமாக தெரிந்தது.

இப்பொழுது இந்த பிரச்சினையை நேர் செய்வதே பிரதானமாக இருக்க, அடுத்த என்ன என்று குழப்பத்துடனும், தடுமாற்றத்துடனும் அனைவரும் இருந்த வேளையில் கதிரவன் தன் குடும்பத்தினரோடு அங்கு வந்து சேர்ந்தான்.

அவனை எதிர்பார்த்தவர் தான் அங்கு யார்? அனைவருக்குமே பயங்கர அதிர்ச்சி!

தடுமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஒருவாறு சமாளித்து, “வாங்க…” என்று முதலில் வரவேற்றது பொண்ணுமணி தான்.

முத்துவேலனுக்கு பலத்த சங்கடம். அவசரகதியில் எல்லாம் செய்துவிட்டு இப்பொழுது அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மட்டும் சற்று பொறுமையாகவும், நிதானமாகவும், புத்திகூர்மையுடனும் இந்த பிரச்சினையைக் கையாண்டிருந்தால் நிச்சயம் இந்தளவு பிரச்சினை வளர்ந்திருக்காது.

கதிரவனின் இறுகிய தோற்றம் அவனுக்கு விஷயம் எட்டியிருக்கிறது என்று பறைசாற்றியது. அவசரமாக இளமாறனை பார்க்க, அவனுக்கும் அதிர்ச்சியும், அச்சமும் தான் போல! அவன் தான் சொல்லியிருப்பான் என முத்துவேலன் அனுமானித்தார்.

நீண்ட நேரம் அங்கே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது. யாருக்கு என்ன பேச என்பதே தெரியவில்லை.

வீட்டிலிருந்த பெண்கள் தான் அவசரமாக சமயலறையில் புகுந்து பழச்சாறு கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர். அதை அருந்தும் எண்ணம் யாருக்கும் இல்லாமல் அனாதரவாக கிடந்தது.

அந்தநேரம் கதிரின் பெரியப்பா பரந்தாமன், இருளப்பனோடு அங்கு வந்து சேர்ந்தார்.

இது மொத்தமும் கதிரவனின் ஏற்பாடு! விஷயம் கேள்விப்பட்டதும் அவனுக்கு அத்தனை ஆத்திரம். உடனே தன் பெரியப்பாவிற்கு அழைத்து விட்டான். அவரிடம் நடந்த விஷயங்களைச் சுருக்கமாகக் கூறியவன், அவரை சென்று இருளப்பனை மலர்விழி வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறினான்.

அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் சென்றவர்கள், இப்பொழுது நேராக அவனின் பெரியம்மா பூமணியையும் அழைத்துக் கொண்டு மலர்விழி வீட்டிற்குத் தான் வந்திருக்கிறார்கள்.

“என்னை எதுக்கு மாப்பிள்ளை இங்க கூட்டிட்டு வர சொன்னீங்க?” சுற்றிலும் பார்வையை ஓட்டியவாறே இருளப்பன் கேட்க,

“மலர்விழியை பத்தி எதுவோ பேசுனீங்களாமே? அது என்னன்னு கேட்கத்தான்…” என்று நிறுத்தி நிதானமாகக் கேள்வி எழுப்பியவனின் முகம் பாறையென இறுகியிருந்தது.

“நா…னா? நான் எ…ன்ன பேசியிருக்கப் போறேன்? முதல்ல இந்த மலர்விழி யாரு? இது யார் வீடு? இங்கே ஏன் என்னை கூட்டிட்டு வந்தீங்க?” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இருளப்பன் அனாயாசமாக ஈடுபட, பொண்ணுமணி கோபத்தில் முகம் சிவக்க வேஷ்டியை மடித்துக் கொண்டு அவருக்கு முன்னே வந்து நின்று கொண்டார்.

இதென்ன வம்பு இந்த கூட்டத்தில் தனியாக மாட்டிக் கொண்டோமே என்று இருளப்பனுக்கு இருந்தது.

“என்ன மச்சான் இது?” என்று இருளப்பன் பரந்தாமனை துணைக்கழைக்கப் பார்க்க,

“அடச்சீ வாயை மூடு. உன் புத்தியை காட்டிட்ட தானே… நீயும் ஒரு பெண்ணை பெத்தவன்! பெரிய மனுஷன்னு சொல்லிட்டு திரியிற… இவ்வளவு அல்ப புத்தி இருக்கவனா நீ? கதிரவனுக்கு விபத்து நடந்ததுக்கு சம்பந்தமே இல்லாம இந்த பொண்ணை இழுத்து விடற… வா உன்னைப் பெரிய பள்ளமா பார்த்து கீழே தள்ளி விடறேன்… அதுக்கு யாரு ராசி காரணம்ன்னு கண்டுபிடிக்கலாம்” என்று பரந்தாமன் சாட,

“என்ன மச்சான் இப்படியெல்லாம் பேசறீங்க?” என்றார் பதறியவராக.

“உன்னையெல்லாம் வேற எப்படிடா பேசுவாங்க. எந்த காலத்துல இருக்கோம். உனக்குப் புத்தி எப்படி போகுது? விபத்துங்கிறதே எதிர்பாராம நடக்கிறது தான்… அதுல கூட சகுனி வேலை பார்ப்பியா நீ?”

“இங்க பாருங்க வயசுல பெரியவர் ஆச்சேன்னு அமைதியா இருக்கேன்” எனக் கதிரவன் இடையிட்டு அவன் பங்கிற்கு மிரட்ட,

சுற்றிலும் அத்தனை பேர் இருக்கும் கூட்டத்தில் இருளப்பனால் சட்டென்று வாயை விட முடியவில்லை.

“எதுக்கு மலர்விழியை அப்படி பேசுனீங்க?” கதிரவன் மீண்டும் அழுத்திக் கேட்க,

“அதில்லை… மாப்பிள்ளை…”

“ஸ்ஸ்ஸ்… இனியொருமுறை மாப்பிள்ளைன்னு சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன். இத்தனை வருஷம் என்னை, என் குடும்பத்தைக் கண்ணு தெரியாத உங்களுக்கு இப்ப மட்டும் எப்படி தெரியுது? நீங்க பண்ணின காரியத்துக்கு உங்க பொண்ணையும் அசிங்கப்படுத்த நான் விரும்பலை. மலர்விழிகிட்டேயும், அவங்க அப்பாகிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு உடனே கிளம்புங்க. இனி உங்க முகத்துல நான் முழிக்கவே கூடாது” என்றான் எரிச்சல் நிறைந்த குரலில்.

என்னது தான் ஒரு சிறு பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதா? என்று அதிர்ந்தார் அவர்.

“மச்சான்… அதெப்படி?” என மீண்டும் பரந்தாமனை துணைக்கழைக்க,

“ஏன் பேசும்போது உனக்குத் தெரியலையா? மன்னிப்பு கேளு அப்ப தான் இன்னொருமுறை இந்தமாதிரி யாரையும் பேச உனக்கு தோணாது” என்று அவரும் கறாராகச் சொல்லி விட்டார்.

“சும்மா வம்பு பண்ணனும்ன்னு யோசிக்காத, அப்பறம் உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. அவளுக்கும் இனிமே தான் கல்யாணம், காட்சின்னு பண்ணி பார்க்கணும். வீணா பகையை வளர்த்துக்காத…” என்றும் எச்சரிக்கை தர, இருளப்பனுக்கு வேறு வழி இருக்கவில்லை.

முதலில் மலர்விழியின் தந்தையிடம், ”நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க” என கேட்டவர், மலர்விழியை அழைத்து வந்ததும் அவளிடமும், “நான் பேசினது ரொம்ப தப்பு தான்மா என்னை மன்னிச்சிடு” என்று கேட்க,

பொண்ணுமணி தான், “மாப்பிள்ளை வீட்டு ஆளுங்கன்னு விடறோம். இனியொருமுறை எங்ககிட்ட வாலாட்ட நினைச்சா நல்லா இருக்காது” என்றார் கடுமையான குரலில்.

எங்கோ, எதற்கோ தொடங்கிய பிரச்சினை தன்னையே அவமானப்படுத்தி விட்டதே என்ற எரிச்சலில் இருளப்பன் அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார். சுவரில் அடித்த பந்துபோல மற்றவர்கள் மீது சுமத்தும் பழியும் அதே வேகத்தில் விரைந்து நம்மை நோக்கி வந்துதானே ஆக வேண்டும்!

Advertisement