Advertisement

உன் சாயல் கொண்டேனே – 17

இதை எப்படி எடுத்துக் கொள்வது? தலையில் இடி விழுந்த நிலை என்பது இதுதான் போலும்! கதிரவனோடு திருமணம் நின்று விட்டது என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது எனும்பொழுது விஜயகுமாருடன் திருமணம் என்பது மலர்விழிக்கு உயிர் வதையைத் தந்தது.

இல்லை இது நிச்சயம் என்னால் முடியாது மலர்விழியின் மனம் ஊமையாக அழ, சூழ இருந்தோர்கள் அவளிடம் பேசியது எல்லாம் அவள் செவியில் விழவே இல்லை.

புத்திக்குத் தெளிவாக உரைத்த விஷயம் விஜயகுமார் மீது நேசம் என்ற ஒன்று எழவேயில்லை என்பது தான்! எத்தனை முட்டாளத்தனமாக ஈர்ப்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் புரியாமல் இருந்திருக்கிறாள். இப்பொழுது எல்லாம் தெளிவாகப் புரிகிறது தான்! தான் உண்மையாக நேசம் கொண்டிருப்பது கதிரவனின் மீது மட்டும் தான் எனவும் உரைக்கிறது தான்!

இந்த திருமணம் நின்று விட்டது என்ற செய்தியைக் கேட்டதும், இந்த உயிரே பாரம் போல அவளுக்குத் தோன்றியதிலேயே தன் மனதை தெளிவாக உணர்ந்து கொண்டாள். இந்தளவு வதையைத் தான் வாழ்நாளில் அனுபவித்ததில்லை என்று உணர்ந்தவளுக்கு அந்த வதையின் காரணமும் விளங்கியிருந்தது!

ஏதோ பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஏற்பட்ட பந்தம் என்பதையும் தாண்டியும், கதிரவனுக்கும், அவளுக்குமான பந்தம் கடவுள் போட்ட தீர்மானம் என நம்பியவளுக்குக் கண்ணில் நீர் நிறைந்தது. இப்பொழுது அதே கடவுள் தானே இன்று இப்படி ஒரு இக்கட்டான சூழலையும் ஏற்படுத்தி ரசிக்கிறார் என எண்ணமிடுகையிலேயே கண்ணிலிருந்து உடைப்பெடுத்த நீர் கன்னம் தழுவியது.

அவசரமாகத் துடைத்துக் கொண்டவளுக்கு இப்பொழுது என்ன எதிர்வினை ஆற்ற என்றே புரியவில்லை. பேசவே முடியாதவள் போல சோர்ந்து அமர்ந்திருந்தாள். வாயைத் திறந்து தன் மறுப்பைச் சொல்லும் திராணி கூட அவளிடம் இல்லை.

எவ்வளவு பெரிய விஷயம்? என்னிடம் சொல்லாமல், எனக்குத் தெரிவிக்காமல் இவர்களாகவே முடிவெடுத்து… இவர்களாகவே செயல்படுத்தவும் துடிக்கிறார்களே!

‘இந்த அப்பாவும், இளாவும் எங்கே? அவர்களுக்குக் கூடவா என் நிலை புரியாது. என் பரிதவிப்பு விளங்காது’ என மௌனமாக தவித்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா செய்யுது? ஏன் ஒருமாதிரி இருக்க?” நெருங்கிய உறவினர்களின் கரிசன வார்த்தைகள் கூட அவள் இருந்த மனநிலையில் அமிலமாக அவள் செவியினுள் இறங்க மறுப்பாகத் தலையசைத்தாள்.

“உனக்கு விஜயகுமாரைத் தெரியாதா? அவனை கட்டிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும்ன்னு தெரியும் தானே!” இன்னொரு உறவுப் பெண்மணி சொல்ல,

‘அப்படி எனக்கு எந்த கொடுப்பினையும் வேணாம்’ என கத்த வேண்டும் போல இருந்தது மலர்விழிக்கு!

இளமாறன் பயங்கர குழப்பத்தில் இருந்தான். திடீரென அக்காவின் திருமணத்தை நிறுத்தியது, உடனேயே வேறொரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தது என எதுவுமே அவனுக்கு உவப்பாக இல்லை!

விஜயகுமார் மாமன் மகன் தான்! திருமண சந்தையில் மறுக்கவே முடியாத ஆண்மகன் தான்! அழகு, அந்தஸ்து, படிப்பு, வேலை என எதிலுமே துளி குறை காண முடியாது. ஆனாலும், கதிரவனை வைத்த இடத்தில் வேறு யாரையும் அவனால் வைத்துப் பார்க்க முடியவில்லை. அது அனைத்து அம்சங்களும் பொருந்திய விஜயகுமாரே என்ற போதிலும்!

ஆனால், அவனால் உறுதியாக மறுக்கவும் முடியவில்லை. பெரியவர்கள் பேசும்போது இளையவனால் அதைத் தடுக்கவோ, மறுத்துப் பேசவோ முடியாது என்பதோடு, அங்கே மருத்துவமனையில் மாப்பிள்ளை வீட்டு உறவினர் அக்காவைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிய பேச்சு அவனது வாயைக் கட்டிப் போட்டு விட்டது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் அக்காவிற்கு விஜயகுமாரைப் பிடிக்கும் என அவனுக்குத் தெரியும் தானே அதற்காகவும் வேறு வழியின்றி அமைதி காத்தான்.

ஆயிரம் காரணங்கள் அணிவகுத்து நின்றபோதும், என்னவோ இளமாறனுக்கு மனம் உறுத்திக் கொண்டே இருக்க, அக்காவை தேடிச் சென்றான். அப்பொழுதுதான் அவளைச் சூழ இருந்த உறவினர்கள் அனைவரும் அவளிடம் விவரம் சொல்லி முடித்து விட்டதால் வெளியேறி இருக்க, அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாது என்பது போலச் சத்தமில்லாமல் அழுது கரைந்து கொண்டிருந்தாள் மலர்விழி.

அழுகையைத் துடைக்கும் எண்ணமோ… கட்டுப்படுத்தும் எண்ணமோ இல்லாமல் அழுது கொண்டிருந்தவளை அறையில் நுழைந்ததும் கண்ட இளமாறன் அதிர்ந்தான்.

அவள் கண்ணீர் சொல்லியது அவள் மனதை! இன்று மட்டுமா அழுகிறாள்? விபத்து என்று தெரிந்த அன்று எத்தனை அழுகை? அப்பொழுது ஏன் இந்த மரமண்டைக்கு உரைக்க மறுத்தது.

கதிரவன் மீதும், அவன் குடும்பத்தினர் மீதும் எல்லையற்ற கோபம் கிளர்ந்தது இளமாறனுக்கு! எத்தனை அழகாகத் தொடங்கிய உறவு? அதை இப்படி நிறுத்தி விட்டார்களே என்ற ஆதங்கம் அவனுக்கு!

மௌனமாய் மலர்விழியைத் தொந்தரவு செய்யாமல் திரும்பியவனின் மனம் எரிமலையாய் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த உஷ்ணத்தை மேலும் அதிகரிக்க அவனுக்கு அருணிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

கைப்பேசியையே வெறித்து பார்த்தவன், அப்படியே வெளியில் நகர்ந்தான். அனைவரின் முன்பும் பேச முடியாது! அக்காவின் அழுகையைப் பார்த்த பிறகு பேசாமலும் இருக்க முடியாது!

வெளியில் வந்து கைப்பேசியைக் காதில் வைத்ததும், “ஏன் டா ரெண்டு நாளா ஹாஸ்பிட்டலுக்கு வரலை. ஒரு போன் கூட இல்லை. வீட்டுல எல்லாரும் நலலா இருக்காங்களா?” என விசாரித்தான் அருண்.

“ஏன்? நல்லா இல்லாட்டி இன்னும் நாலு சொந்தக்காரங்களை வீட்டுக்கு அனுப்பிடுவீங்களா?” என்றான் இளமாறன் காட்டமாக.

மற்றவனுக்கு எதுவுமே புரியவில்லை. குழப்பமான குரலில், “என்னடா சொல்லற?” என்றான்.

“ஏன் அதை என் வாயால வேற சொல்லணுமா?” என்று பொரிந்து தள்ளினான். இக்கட்டான சூழலும், இயலாமையும் அவனை வெகுவாக ஆத்திரமூட்டியது.

அருணின் முகத்தில் இருந்த குழப்பத்தைத் தான் கதிரவன் கவனித்துக் கொண்டிருந்தான். “மச்சா என்ன கோபம் டா? சொன்னா தானே தெரியும். சரி நம்ம பிரச்சினை நம்மோட… இன்னைக்கு அண்ணாவுக்கு டிஸ்சார்ஜ். நீயும், மாமாவும் வர்றீங்களா?” என்று அருண் பொறுமையாகக் கேட்கவும்,

“ஆனாலும் நல்லா நடிக்கிற டா நீ” என்றான் இளமாறன் இளக்காரமாக எரிச்சல் குரலில்.

தலையும் புரியாமல், வாலும் புரியாமல், “என்னன்னு சொல்லித் தொலையேன் டா” என அருண் கத்தி விட்டிருந்தான். அவனை வினோதமாகப் பார்த்த கதிரவன் கைப்பேசியை வாங்கி ஸ்பீக்கர் மோடில் போட,

“ஏன்டா என் அக்காவைப் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? உங்களுக்கு விருப்பம்ன்னு தானே கல்யாண பேச்சை எடுத்தீங்க. இப்ப உங்க அண்ணன் எங்கேயோ போயி விழுந்தா அதுக்கு எங்க அக்கா பொறுப்பா?” எனக் கத்தினான்.

கதிரவன் இடையிட்டவன், “என்ன பேசற இளமாறா? எனக்கு ஆக்சிடெண்ட் ஆனதுக்கும் மலர்விழிக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் அதட்டலாக.

“அதை ஏன் என்கிட்ட கேட்கறீங்க? வாய்க்கு வந்தபடி பேசின உங்க சொந்தக்காரங்க கிட்ட கேளுங்க” என்றான் அவனும் பதிலுக்குக் காரமாக.

“யாரு? யாரு என்ன சொன்னாங்க? தெளிவா சொல்லு”

“ஏன் உங்களுக்கு தெரியாமல் தான் அந்த பேச்சு பேசினாங்களா?” என்றான் இன்னும் காரம் குறையாமல்.

“யாருன்னு கேட்டேன்?” கதிரவனின் குரலில் அழுத்தம் கூடியது.

“ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கேன். அடிக்கடி உங்களைப் பார்க்க வருவாரே… உங்க மாமா… பேரு சரியா தெரியலை”

“சரி… அவர் என்ன சொன்னாரு?”

“ஹ்ம்ம் அதை என் வாயால வேற உங்களுக்கு ஒருமுறை சொல்லணும். அப்படித்தானே? நல்லா கேட்டுக்கங்க. என் அக்கா ராசி கெட்டவளாம். அதான் உங்களுக்கு ஆக்சிடெண்ட் நடந்ததாம். அவ ராசி உங்க உயிரை எடுத்திடுமாம். இப்படி ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவ உங்க குடும்பத்துக்கு வேணாமாம்” என்று ஆத்திரமாக இளமாறன் அடுக்க,

“சொன்னவன் வாயை உடைக்காம விட்டியாக்கும்” எனச் சீறினான் கதிரவன்.

அதில் இளா வாயடைத்து நிற்க, “சொல்லு மலர்விழியை இப்படி பேசினவன என்ன செஞ்ச?” என மீண்டும் கேட்க, எதுவும் செய்யாமல் கடந்து வந்தவன் தானே ஆகப் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.

“நீ தான் ஒன்னும் செய்யலை. என்கிட்டயாவது சொன்னியா?” என ஆத்திரமாகக் கேட்டான் கதிரவன்.

“அது…” என இளமாறன் தயக்கமாக இழுக்கவும், “மலர்விழிக்கிட்ட இதைப்பத்தி எதுவும் சொல்லலை தானே?” எனக் கேட்டான்.

“இன்னைக்கு தான் சொன்னோம்” என்றான் இளமாறன் தயங்கிய குரலில்.

“ம்ப்ச்… அப்படி என்ன அவசரம்? என்கிட்ட சொல்லணும்ன்னு தோணலை. அவகிட்ட மட்டும் எதுக்கு சொல்லி வெச்சீங்க” சலிப்புடன் கேட்க, இங்கே நடந்து கொண்டிருப்பதை எப்படி அவனிடம் சொல்ல எனப் புரியாமல் குழம்பினான் இளமாறன்.

“என்ன சத்தத்தையே காணோம். அங்கே எதுவும் பிரச்சனையா என்ன? உனக்கு என்னைப்பத்தி தெரியாதா? ஏதோ முன்னபின்ன தெரியாதவன் மாதிரி நடந்திருக்க. நீ என்னை நம்பியிருக்க வேண்டாமா? என்கிட்ட இதுதான் நடந்ததுன்னு சொல்லி இருக்க வேண்டாமா. எதுவுமே சொல்லாம ரெண்டு நாளா காணோம்ன்னா நான் என்னன்னு நினைக்க முடியும்?”ஆற்றாமையும், ஆதங்கமுமாகக் கதிரவன் கேட்க, இளமாறன் தடுமாறினான்.

“என்ன ஆச்சு?” என்று அவனின் அமைதி பார்த்து கதிரவன் மீண்டும் கேட்கவும், “பிரச்சினை ரொம்ப பெருசாகி வேற மாதிரி போயிட்டு இருக்கு மாமா” என்று சொன்னவன், தயங்கித் தயங்கி இங்கு நடந்து கொண்டிருப்பதைச் சொல்லி முடித்தான்.

“உங்களுக்கெல்லாம் அறிவே இருக்காதா?” என சீறி இருந்தான் கதிரவன்.

“அவ சும்மாவே உங்க அம்மாவை ரொம்ப தேடுவா. அவளை போயி இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில நிறுத்தி வெச்சிருக்கீங்களே அவ மனசு என்ன கஷ்டப்படும். இதே உங்க அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி தான் அரைவேக்காட்டுத்தனமா முடிவெடுப்பாங்களா? அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கும்ன்னு யாருமேவா யோசிக்கலை” என்று பொரிந்து தள்ளியவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

மருத்துவமனை அறையிலிருந்து வளர்மதி, அருண் இருவருமே ஸ்பீக்கர் மோடின் உதவியால் அனைத்தையும் கேட்டிருக்க, ‘இதென்ன இப்படி ஆகிவிட்டது. என்ன செய்து இந்த பிரச்சனையை நேர் செய்வது’ என்று கவலையடைந்தனர்.

Advertisement