Advertisement

உன் சாயல் கொண்டேனே – 16

இங்கு நடந்த களேபரங்கள் அனைத்தும், கதிரவனின் குடும்பத்தினருக்கோ, அவனின் பெரியப்பா பரந்தாமனின் குடும்பத்தினருக்கோ தெரியவில்லை. இருளப்பன் வெகு சாமர்த்தியமாக அவர்கள் அறியாமல் இவர்களிடம் வம்பு பேசி வார்த்தையை வளர்த்துக் கொண்டிருந்தார்.

முத்துவேலனுக்கும், இளமாறனுக்கும் இருளப்பன் பேசிய விஷயத்திலேயே மனம் பதிந்திருக்க, அந்த நேரம் மற்றவர்களை அழைக்க வேண்டும் என்றோ, அவர்களுக்கு விவரங்களைத் தரவேண்டும் என்றோ தோன்றவில்லை.

ஏன் அவர்கள் அறியாமல் தான், இந்த இருளப்பன் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்பது கூட உரைக்க மறுத்தது. அவர்களைப் பொறுத்த வரையில் மாப்பிள்ளை வீட்டில் இதுபோல பேசுகிறார்கள் என்றளவில் மட்டுமே அவர்களது எண்ணம் இருந்தது. கோபமும், ஆவேசமும் அவர்களின் சிந்தனாசக்தியை தற்காலிகமாக மூழ்கடித்திருந்தது.

அத்தனை நாட்கள் கதிரவனோடும், அவன் குடும்பத்தினரோடும் பழகிய பழக்கம் எல்லாம் இருளப்பனின் இந்த முறையற்ற பேச்சால் ஒன்றுமில்லை என ஆகும் சூழல்! பெண்ணை பெற்றவருக்கு அத்தனை ஆத்திரம்!

என் மகள் தான் என் வீட்டில் எல்லாமும்! அவளைப்போய் இப்படியெல்லாம் பேசுவார்களா? என்னமோ வாழ்க்கை தருவது போல இந்த ஆள் வார்த்தையை விடுகிறானே என்று சுறுசுறுவென ஏறிய கோபத்தோடு முத்துவேலன் நின்றிருக்க,

இருளப்பன் பேசிய பேச்சிற்கு “வாயை மூடுடா” என்று கத்தியிருந்தார் மலர்விழியின் தாய்மாமன் பொண்ணுமணி. அனைவரும் சத்தம் வந்த திசையைப் பார்க்க, முகம் இறுக நின்றிருந்தார் அவர்.

“யாரு மாப்பிள்ளை இவன்? இத்தனை மட்டமா பேசறான்?” மரியாதை பன்மையின்றி ஏக வசனத்தில் பொழிந்தார் அவர்.

“மாப்பிள்ளையோட சொந்தக்காரங்க மாமா” என்றார் முத்துவேலன்.

பொண்ணுமணியும் நிதானித்திருக்கலாம். இத்தனை நாட்களாக நடந்த பெண் பார்க்கும் வைபவம், விருந்துண்ண வரும் வைபவம் எதிலுமே இவரைப் பார்த்ததில்லையே, அப்படியிருக்கையில் இவர் எந்த வகையில் உறவு? நெருங்கிய உறவினர் தானா? ஏன் யாரும் அருகில் இல்லாத நேரத்தில் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்? என்று சற்று யோசித்திருக்கலாம்.

ஆனால், இருளப்பன் பேசிய பேச்சால் அவரது சிந்தனைத்திறனும் மழுங்கியிருந்தது. கதிரவனின் குடும்பத்தைப்பற்றி நன்கு அறிந்திருந்த முத்துவேலனுக்கும், இளமாறனுக்குமே சிந்தனைத்திறன் மழுங்கியிருக்க, இவர் எம்மாத்திரம்?

“என்னய்யா? எங்க வீட்டு பொண்ணை பத்தி நாக்குல நரம்பில்லாம பேசிட்டு திரியற? மரியாதையா மன்னிப்பை கேட்டுடு. இல்லை இது ஹாஸ்பிட்டல்ன்னு கூட பார்க்க மாட்டேன்” என்று பொண்ணுமணி இருளப்பனைப் பார்த்துக் கத்த,

“என்ன நான் மன்னிப்பு கேட்கணுமா? நான் யாருன்னு தெரியுமா? என் செல்வாக்கு, பணபலம் என்னன்னு தெரியுமா? அதோட நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். மன்னிப்பு கேட்கணுமாம். மன்னிப்பு…” என்று இருளப்பனும் பதிலுக்கு பொரிந்து தள்ளினார்.

“வேணாம் மறுபடி மறுபடி உண்மையை சொல்லறேன். உள்ளதை சொல்லறேன்னு வார்த்தையை விட்ட…” என்று விரல் நீட்டி மிரட்டினார் பொண்ணுமணி.

“என்னய்யா செய்யுவ? என் முன்னாடியே விரல் நீட்டுறியா? ஆமா அப்படித்தான் சொல்லுவேன். உங்க வீட்டு பொண்ணு ராசி இல்லாதவ. அவளை கட்டிக்க பார்த்த நேரம் தான், இத்தனை நாளும் நல்லா நடமாடிட்டு இருந்தவன் இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல படுத்திட்டு இருக்கான். அவ நேரம் தான் இதுக்கெல்லாம் காரணம்” என்றார் இருளப்பனும் சீண்டலாக.

“என்னடா சொன்ன போக்கத்தவனே…” என்று கோபத்தில் பொங்கிய பொண்ணுமணி ஓங்கி ஒரு அறையை விட்டிருந்தார். அதில் அங்கே அருகருகே நின்றிருந்தவர்கள் எல்லாம் இவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

இருளப்பனுக்கு அவமானமாக இருந்தது. என்னை இத்தனை பேர் முன்பு கைநீட்டி அடித்து விட்டானா என ஆங்காரமாக நினைத்தார். இவர் பேசிய பேச்சிற்கு எப்பொழுதோ வாங்கியிருக்க வேண்டியது என்பது இன்னமும் உரைக்கவில்லை. ஏன் இவரே இவர் மகள் பிரியாதேவியைப் பற்றி யாரேனும் ஒரு சொல் தவறாகச் சொல்ல விட்டுவிடுவாரா என்ன?

“உன் வீட்டுலயும் பொண்ணுங்க இருக்கும் தானே. இப்படி தான் நேரம், காலம்ன்னு பேசி அவங்களையும் முடக்கி வெச்சிருக்கியா? எந்த காலத்துலடா இருக்க நீயெல்லாம்?” பொண்ணுமணி அடித்த பின்பும் ஆத்திரம் மட்டுப்படாமல் அவரை கடிந்து கொண்டார்.

முகம் இருண்டது இருளப்பனுக்கு. “அனாவசியமா என் வீட்டை இழுக்காத” என்றார் எச்சரிக்கை செய்யும் குரலில்.

“வாடா வா… உன் வீட்டு பொண்ணுங்க சக்கரைகட்டி. தொட்டா கரைஞ்சிடுவங்க. நீ ஊரான் வீட்டு பசங்களை வாய்க்கு வந்ததை பேசுவியா?” பொண்ணுமணி ஆத்திரமாகக் கேட்க,

பேச்சு திசை மாறுவதை உணர்ந்த இருளப்பன், அவர்களைச் சீண்டும் பொருட்டு, “உங்க வீட்டு பொண்ணு எப்படி எங்க வீட்டுக்கு வரான்னு நாங்களும் பார்த்திடறோம்” என்றார் சவால் குரலில்.

“அடச்சீ நீ பேசின பேச்சுக்கு நாங்க எங்க பெண்ணை உங்க வீட்டுக்கு அனுப்புவோம்ன்னு நினைக்கிறியா? எங்க பொண்ணுக்கு என்ன மாப்பிள்ளையா கிடைக்காது? இல்ல இந்த ஊரு உலகத்துல வேற மாப்பிள்ளையே இல்லையா?” என்று கர்ஜனையாகக் கேட்டவர்,

“ஜாக்கிரதை இதுவே நான் உன்னைப் பார்க்கிறது கடைசி முறையா இருக்கட்டும்” என விரல் நீட்டி எச்சரித்தார்.

“அவன் தான் வாய்க்கு வந்ததை பேசறான்னா ஓங்கி ஒன்னு விடாம பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கீங்க” முத்துவேலன், இளமாறன் இருவரையும் பார்த்து காய்ந்தார் பொண்ணுமணி.

“ஹாஸ்பிட்டல்ல வெச்சு வம்பு வேணாமேன்னு வரேன். இல்லைன்னா நம்ம வீட்டு பொண்ணை பேசினத்துக்கு பல்லைத்தட்டி கையில கொடுத்திருப்பேன்” என்றார் மேலும் ஆத்திரமான குரலில்.

அவனுக்கு வெறும் ஒரு அறை விட்டது அவருக்கு போதவேயில்லை. இன்னும் நன்கு மொத்தியிருக்க வேண்டும் எனும்படியான ஆத்திரம்.

இருளப்பனுக்கு தான் எண்ணியது அச்சரம் பிசறாமல் நிறைவேறியபோதும், தன்னை ஒருவன் அடித்ததை… அதுவும் இத்தனைப்பேர் முன்பு கைநீட்டி அடித்ததை நினைத்து மனம் குமைந்து கொண்டிருந்தார்.

நினைத்ததைச் சாதித்து விட்டோமே என்னும் பூரிப்பு எழுவதற்குப் பதில் அவமான உணர்வே மேலோங்கி இருந்தது.

சரி எப்படியோ நினைத்ததை நினைத்தபடி சாதித்து விட்டோமே… இப்பொழுது போய் எதுவும் வம்பு வளர்த்து இந்த பிரச்சனையைப் பெரிது படுத்த வேண்டாம். இந்த விஷயம் சீக்கிரம் ஆறட்டும். அப்பொழுதுதான் கையோடு கதிரவனுக்கும், பிரியாதேவிக்கும் திருமணம் பேச முடியும் என்று ஒருவழியாக தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, தன் ஆத்திரத்தை கைவிட்டவர், தக்க தருணத்திற்காகக் காத்திருந்தார்.

பிரியாதேவியின் மனநிலை முற்றிலும் வேறாக இருக்க, இவர் இத்தனை மெனக்கெட்டிருந்தார். இவரால் ஏற்பட்ட களேபரம் அங்கே பற்றி எரிய தொடங்கியிருந்தது. அந்த நெருப்பில் இரு காதல் உள்ளங்களின் ஆசைகள் பொசுக்கப்படுமா? காலம் தான் பதில் சொல்லும்.

பொண்ணுமணிக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. “யார் அவன்? நம்ம வீட்டு பொண்ணை பேசறதுக்கு?” என்று எரிச்சலாகச் சொல்லியபடியே வந்தவர், முத்துவேலனையும், இளமாறனையும் அவர் வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

அங்குச் சென்றவர் விஷயத்தை ஆறப்போடாமல் உடனே தன் பங்காளி வீடுகளுக்கெல்லாம் விஷயத்தைக் கடை பரப்ப, முத்துவேலனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விஷயம் பெரிதாகியிருந்தது. ஆளாளுக்கு மாப்பிள்ளை வீட்டையும், அவர்களின் குணத்தையும் விமர்சித்தனர்.

அதன் விளைவாய் அடுத்த இரண்டு தினங்களில் ராஜேந்திரன், மாணிக்கம் குடும்பத்தினர் அனைவரும் இங்கு வந்திருந்தனர்.

“நம்ம வீட்டு பொண்ணை பேசற அளவுக்கு நாம விடறதா? நம்ம பொண்ணை கட்டிக்க நான், நீ ன்னு போட்டி போட்டுட்டு வருவாங்க. இந்த மாப்பிள்ளையே நமக்கு வேணாம்”

“அதானே நம்ம பொண்ணுக்கு என்ன தலையெழுத்து? இன்னும் பேச்சுவார்த்தையோட தானே நிக்குது. இத்தோட இந்த சம்பந்தத்தை நிறுத்திடலாம்”

“அதானே நம்ம பொண்ணை பேச எப்படி நாம விடலாம்?”

“நீங்க ஏன் பேசினவனை விட்டுட்டு வந்தீங்க?”

ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச, இறுதியாக மாணிக்கம், சாந்தியின் மைந்தன் விஜயகுமாருக்கு மலர்விழியை கட்டித்தருவது என்று உறவினர்களிடையே முடிவானது.

அந்த முடிவிற்கு விஜயகுமாரும் ஒத்துப் போனது தான் அங்கே தலைகீழ் மாற்றம்.

நடக்கும் எதையும் தடுக்கவோ, மறுக்கவோ முடியாத நிலையில் முத்துவேலனும், இளமாறனும்! அவர்கள் இன்னும் இப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்று மலர்விழியிடம் கூடச் சொல்லியிருக்கவில்லை. இப்பொழுது அவசரகதியில் மாப்பிள்ளை மாறியிருக்கிறது என்பதை எப்படி அவளிடம் எடுத்துச் சொல்வது எனப் புரியாமல் விழித்தனர்.

உறவினர்கள் பேசசுவார்த்தையோடு நிற்காமல் இன்றே முத்துவேலன் வீட்டிற்குச் செல்வோம் என்றும் சேர்த்துச் சொல்ல,

அப்பொழுது தான் முத்துவேலன், “இன்னும் மலர்விழிக்கு எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு எதுவுமே தெரியாது” என்பதையே தெரிவித்தார்.

அதற்கும் சாந்தி, “நீங்க என்னண்ணா சொல்லுவீங்க? விடுங்க இதெல்லாம் பொம்பளைங்க நாங்க எடுத்து சொல்லிக்கறோம்” என்று சொல்ல, அதற்கு மேலே என்ன சொல்ல முடியும் என்று அவருக்குப் புரியவில்லை.

அவருக்குச் சுணக்கம் என்னவென்றால், ஏதோ பிசகிற்று. அந்த திருமணம் வேண்டாம் என முடிவெடுக்கலாம். அதைவிடுத்து அவசரகதியில் இப்பொழுது இன்னொரு மாப்பிள்ளை பார்த்தே ஆக வேண்டும் என்று என்ன இருக்கிறது.

அதிலும் இதே விஜயகுமாருக்குப் பல இடங்களின் பெண் பார்த்து வருகிறார்கள் தான்… இதுவரை அவர்களுக்கு மலர்விழியைக் கண்ணுக்கே தெரியவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் இப்படிப் பரபரக்கிறார்கள். கடைசியில், இவர்களும் ஏதோ என் மகளுக்கு வாழ்வு தருவது போலத் தானே தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

என் மகள் என்ன மற்றவர்கள் வாழ்க்கை தரும் இடத்திலா இருக்கிறாள்? அவள் மகாலட்சுமி அம்சம் இல்லையா? அவளுக்குப் போய் இப்படியொரு இக்கட்டான சூழல் அமைய வேண்டுமா? ஒரு தந்தைக்குரிய நியாயமான பரிதவிப்பு அவரிடம்!

ஆனால், குடும்ப கௌரவம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு ஒரு தந்தையின் நியாயமான மனக்கவலை எங்கனம் புரியும்?

அனைவரும் முத்துவேலன் வீட்டிற்குச் செல்ல, அங்கு அனைவரையும் ஒன்றாகப் பார்த்த ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மலர்விழி இருந்தாள்.

“வாங்க அத்தை… வாங்க மாமா…” அன்பாய் உபசரித்து அனைவரையும் அமர வைத்தவள், அவர்களுக்குச் சூடாகத் தேநீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“எல்லாரும் எப்ப வந்தீங்க? நீங்க வரது எனக்குத் தெரியவே தெரியாது” என ஆசையாய் பேசிக்கொண்டிருந்தவளின் தலையை ஆதுர்யமாக வருடி,

“எங்க வீட்டு மகாலட்சுமி மா நீ. உன்னை போயி இப்படியெல்லாம் பேச அவனுங்களுக்கு எப்படி தான் மனசு வந்ததோ” என்று ஒரு பெண்மணி சொல்ல,

மலர்விழிக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. யார் என்ன பேசினார்கள் எனக் குழப்பமாகப் பார்க்க,

“அவங்க கிடக்கிறாங்க விடும்மா. கழுதைக்குக் கற்பூர வாசனை எங்கே புரிய போகுது… வாய்க்கு வந்ததை பேசறதுக்கு கசக்குமா என்ன?”

“விடுங்கக்கா அவங்க சொன்னா நிஜமாயிடுமா?”

“இல்லைடி இப்படி ஒரு பேச்சு கிளம்பிடுச்சு. இனி ஊரு வாயை அடைக்க முடியுமா? தங்க விக்கிரகம் மாதிரி நம்ம பொண்ணு இருக்கா… ஒரு குறையும் இல்லாம மகாலட்சுமி அம்சமா இருக்கா… அவளை யாரும் எதுவும் பேச நாம விடக்கூடாது”

மலர்விழிக்கு கடுகளவு கூட எதுவும் புரியவில்லை. உறவினர்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசி, அவளை குழப்பியடிக்க அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு அவசரம், தீவிரம். இவர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறார்கள் என யோசிக்கும் போதே எதுவோ நடக்க போகிறது என அவள் உள்மனம் எச்சரித்தது.

அவள் பயந்ததற்கு ஏதுவாக, அவளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று விஷயங்களை இடியாக இறக்கினார்கள் உறவினர்கள்.

மாப்பிள்ளை வீட்டில் எழுந்த பேச்சு முதல்… அவர்கள் எப்படி அந்த மாதிரி பேசலாம் என ஆதங்கம் வரை பொரிந்தவர்கள், இறுதியாக அவளுக்கும், விஜயகுமாருக்கும் திருமணம் செய்து வைக்கப் பெரியவர்கள் முடிவெடுத்ததையும் சேர்த்துச் சொல்ல, பெரும் பூகம்பம் தாக்கியத்தைப் போல நிலைகுலைந்தவள் சோர்வாகச் சரிந்து கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

Advertisement