Advertisement

உன் சாயல் கொண்டேனே – 15

தலையணை நனையுமளவு அழுது கொண்டிருந்தாள் மலர்விழி. யாருக்கு விபத்தென்று தெரிந்திருந்தாலும் மனம் கலங்கி இருக்கும் தான். ஆனால், அது கதிரவனுக்கு என்கையில் மனதில் குடியேறிய துக்கமும், பாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக இருந்தது.

பெரும்பாலும் நாம் பார்வையாளர்கள் தானே! அச்சோ பாவம் எனக் கடக்கக்கூடிய அதே நிகழ்வுகள், நம் உயிரானவர்களுக்கு என்கையில் எத்தனை வலியும், வேதனையும்!

தந்தை விஷயத்தைச் சொன்னபோது… மொழியற்றவள் போல அமைதியாகி, மௌனமாகக் கண்ணீரை பொழிந்தபடி நின்றிருந்தாள். இளமாறன் பதறி, மூத்தவளின் அருகில் சென்று, “அக்கா, மாமாவுக்கு இப்ப எந்த ஆபத்தும் இல்லை. ரொம்ப நல்லா இருக்காங்க” என்றான் ஆறுதலாக.

என்னிடம் தாமதமாகச் சொல்கிறார்களே! முன்பே சொல்லி இருக்கக் கூடாதா? அவர் அங்கே மருத்துவமனையில் இருக்கும்போது, நான் இங்கே சுகமாய் உண்டு, உறங்கி சாதாரணமாக இருக்கிறேன் என்று நொந்தவளுக்கு தான் ஏதோ பெரிய பிழை செய்தது போல குற்றவுணர்வு!

“அக்கா அழாதக்கா…” என்றான் இளமாறன் சமாதானம் செய்யும் வகையறியாது. முத்துவேலனுக்கும் அதே நிலை தான். மகளின் அழுகையில், இந்தளவு அழுகிறாளே, உள்ளுக்குள் என்ன நினைத்து மறுகுகிறாளோ இப்பொழுது என்ன சொல்லித் தேற்றுவது என்ற கையறு நிலை!

“வந்து படும்மா. காலையில பேசிக்கலாம். மாப்பிள்ளைக்கு எதுவும் இல்லை. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று அவளை அழைத்துச் சென்று படுக்க வைத்தவர், அவரும் சென்று அமைதியாக படுத்துக் கொண்டார். அதிர்ச்சி தாங்காமல் அழுகிறாள். அடி பலமாக இல்லை என புரிந்தால், சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்று எண்ணினார் போலும்.

இளமாறன் தந்தை சென்றதும் அக்காவிடம், “மாமாக்கு வேணா போன் பண்ணி தரட்டுமாக்கா?” எனக் குரலைத் தணித்து ரகசியமாகக் கேட்டான்.

அவள் அமைதியாகக் கண்கலங்கியபடியே இருக்கவும், “முழிச்சிட்டு இருக்காரா கேட்கிறேன் கா. நீ பேசு. மாமாவுக்கு எதுவும் இல்லை” என்றான் மீண்டும்.

சொன்னதோடு நில்லாமல் கதிரவனுக்கு அழைப்பு விடுக்க இளமாறன் தன் கைப்பேசியை எடுத்ததும் அதை அவசரமாகத் தடுத்தவள், “இல்லைடா போனெல்லாம் வேணாம்” என்றாள்.

“ஏன் கா?”

“இல்லை வேணாம் இளா. பெரியவங்களுக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. அவருக்கு இப்ப நிஜமாவே நல்லா இருக்கு தானே? அடி பலமா? இப்ப எப்படி இருக்காங்க?” என்றாள் முகத்தைத் துடைத்தபடி. தம்பி முன் அழுதால் பாவம் அவனுக்கும் தர்ம சங்கடம் தானே… ஆக, முயன்று தன்னை நிலைப்படுத்தினாள்.

சூழலை மாற்றும் பொருட்டு, “நம்புக்கா உன் தம்பி கொஞ்சம் உண்மையையும் பேசுவேன்” என வேடிக்கையாகச் சொல்லிச் சிரித்தவன், “மாமாவுக்கு தலையில கொஞ்சம் அடி. அப்பறம் கை, கால் எல்லாம் லேசான அடி தான். தலையிலே பட்ட அடிக்காகத்தான் நேத்து ஆபரேஷன் செஞ்சாங்க. இன்னைக்கு அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லி நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க” என்று கதிரவனின் நிலையை முழுவதும் விளக்கியவன், இலவச தகவலாக எப்படி அடிபட்டது, ஏன் விபத்து ஏற்பட்டது என்பதையும் விவரித்தான்.

முழுவதும் கேட்டு முடித்த மலர்விழி, “இதுல எந்த கொஞ்சம் டா உண்மை?” என அப்பாவியாகக் கேட்கவும், முதலில் புரியாமல் விழித்தவன், பிறகு புரியவும், “அக்கா…” என்றான் பல்லைக்கடித்தபடி.

“ஹ்ம்ம் சரி சரி… அவரை எப்ப வீட்டுக்கு அனுப்புவாங்களாம்?” என விசாரிக்க, “இன்னும் அதெல்லாம் சொல்லலை கா” என்றான்.

“அவர் கூட யாரு இருக்காங்க?”

“அருண் நைட்டுக்கு இருக்கான் கா. பகல்ல அருண், அத்தை, அவங்க பெரியப்பா வீட்டுல, நாங்க ரெண்டு பேரும் இருக்கோம் கா”

இன்னமும் மலர்விழிக்கு முகம் தெளியவில்லை தான். ஆனால், தம்பிக்காக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தாள். அது இளையவனுக்கும் புரிகிறது தான். ஆனாலும் மேற்கொண்டு என்ன சொல்லி சமாதானம் செய்வது என இளமாறனுக்கும் தெரியவில்லை.

மலர்விழியே, “சரி நீ போய் தூங்கு” எனத் தம்பியை அனுப்பி வைத்தவள், கதவைச் சாற்றிப் படுக்கையில் சரிந்ததும் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் அழத் தொடங்கியிருந்தாள்.

தம்பி சமாதானமாகச் சொல்வது புரிகிறது தான். கதிரவன் இப்பொழுது நலமாகி விட்டான் என்றும் தெரிகிறது தான். இருந்தும் மனம் கொண்ட அச்சமும், கலக்கமும் அவளை வெகுவாக கலங்கச் செய்தது. விபத்து நடந்த தினம் முழுவதும் கண்முன்னே நலமாக நடமாடியவன், திரும்பிச் செல்கையில் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறான் என்றால், அந்த செய்தி எப்படி இருக்கும்?

நல்லவேளையாக அவனுக்கு எதுவும் ஆகவில்லை. அவனுக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தால், அந்த நினைவே நெஞ்சுக்கூட்டை நடுங்கச் செய்தது.

கதிரவனை பார்க்க வேண்டும், அவனிடம் பேச வேண்டும் என்று மனம் தவித்தாலும், நிதர்சனம் புரியுமே! தன்னிலை புரிந்து ஏற்றுக் கொண்டாலும், இந்த சூழலில் அவனைப் பார்க்க, பேச முடியாமல் இருப்பது ஒருவித இயலாமையை, வேதனையை கொடுத்தது. அழுதபடியே அன்றிரவு வெகு தாமதமாகத்தான் உறங்கியிருந்தாள்.

இளமாறனுக்கு அக்காவின் கலக்கம் வெகு குழப்பமாக இருந்தது. திருமணம் பேசிய சமயத்தில் விபத்து என நினைத்துக் கலங்குகிறாளா? இல்லை உண்மையிலேயே கதிரவனுக்காக கலங்குகிறாளா எனப் புரியாமல் குழம்பினான். மலர்விழி விஜயகுமார் மீது வைத்த எண்ணம் அவனை இப்படிக் குழப்பி அடித்தது.

முத்துவேலனுக்கும் அதே கலக்கம் தான். திருமணம் பேசிய சமயத்தில் விபத்தென நினைத்து மகள் கலங்குகிறாள் போல என அவராகவே நினைத்துக் கொண்டார்.

ஆனால் உண்மையிலேயே மலர்விழி கதிரவன் மீது கொண்ட நேசத்தினால் தான் அழுதால் என்பதை இவர்கள் சற்று உணர்ந்திருந்தால் வீண் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், இருவருமே மலர்விழியின் மனதைப் புரிந்து கொள்ளவில்லை, ஏன் இதுபோல இருக்கும் என ஊகிக்கக் கூட இல்லை.

இங்கு நிலவரம் இவாறிருக்க, பிரியாதேவியின் வீட்டிலோ, அவளின் தந்தை இருளப்பனுக்கு இரவெல்லாம் கதிரவனுக்கு வேறு வரன் பார்த்திருக்கிறார்களே என்பது குறித்தே யோசனையாக இருந்தது. கண்முன்னே நன்கு வளர்ந்து வரும் இளைஞன் இருக்கும்போது அவனை விட்டுவிடுவதா என்னும் எண்ணம் அவருக்கு. ஏற்கனவே அவனுக்குத் திருமணம் பேசியிருக்கிறார்கள் என மகள் பிரியாதேவி மூலம் தெரிந்தபோதே அத்தனை ஆத்திரம்.

இன்று அவரே நேரில் பார்த்ததும் அந்த ஆத்திரம் பலமடங்கு கூடியிருந்தது. பிரியாவிடம் இதுகுறித்து பேசியிருந்தால், ‘ஏன்பா உங்களுக்கு வேற மாப்பிள்ளையே தேட முடியாதா?’ எனச் சோக முகத்தை வைத்தேனும் கேட்டிருப்பாள். ஏனென்றால், கதிரவன் அவளைப் பேசியது அவளை வெகுவாக அவமானப் படுத்தியிருந்தது.

அவன் சொன்னது என்னமோ உண்மைகளைத் தான்… ஆனால், அது இவளின் பிழைகள் அல்லவா! அதையும் நாசூக்காக சொல்லாமல், முகத்தில் அடித்தாற்போல சொல்லுகிறான். என்னைப்போன்ற பெண்ணுக்காக எதையும் செய்யத் துணிய வேண்டாமா? அதைவிட்டு என்னை ஓட விடுவதிலேயே குறியாக இருக்கிறான். இப்பொழுதே இப்படி இருப்பவன், இவனோடு திருமணம் எல்லாம் முடிந்தால் மதிக்கக்கூட மாட்டான். அந்த மாடு மேய்ப்பவனுக்கு இத்தனை அகங்காரமா? ச்சே… ச்சே… என் அழகை ஆராதிக்க, ரசிக்க தெரியாதவனோடெல்லாம் நான் ஜோடி போட வேண்டும் என எனக்கென்ன அவசியம்?

பிரியாதேவியின் நிலைப்பாடு இவ்வாறிருக்க, அவளின் தந்தை இருளப்பனோ இவள் நினைப்பதற்கு எதிராக நினைத்தார்.

பேசி வைத்திருக்கும் திருமணத்தைக் கலைக்க, மனதில் உறுதி கொண்டவர், அதற்கான திட்டங்களை வகுத்த பிறகே நிம்மதியாக உறங்கினார்.

மறுநாளிலிருந்து இருளப்பன் மருத்துவமனைக்குச் செல்லும்போதெல்லாம் முத்துவேலன், இளமாறன் இருவரையும் வெகுவாக நோட்டம் விடுவதையே வேலையாக வைத்திருந்தார்.

இடைப்பட்ட நாட்களில் கதிரவனின் காயங்கள் ஆறத் தொடங்கியிருந்தது. அவன் மெல்ல மெல்ல குணமடையத் தொடங்கினான்.

மலர்விழிக்கு புதிய அச்சமாக இந்த விபத்தை ஏற்படுத்தியது ராஜரத்தினமாக இருக்குமோ என்று தோன்றியது. இது அவனின் சூழ்ச்சி என்றால், அவன் இத்தோடு விடமாட்டானே என்று வெகுவாக கலங்கினாள். உறுதியாக எதுவும் தெரியாமல் இதைப்பற்றி யாரிடம் பேசுவதற்கும் அவளால் முடியவில்லை. அந்த கலக்கம் அவளை வெகுவாக வாட்டி எடுத்தது.

கதிரவன் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்று விடலாம் என்ற நிலையில், அன்றையதினம் இருளப்பன் மாலையில் அவனைச் சந்திக்க வந்திருந்தார். அவனுக்கு முழுக்க குணமானது தெரிந்ததும் தத்தம் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் வந்து கதிரவனைச் சந்திப்பதை முத்துவேலனும், இளமாறனும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இருளப்பனும் அதற்கேற்ப மாலை நேரத்திலேயே மருத்துவமனைக்கு வரத் தொடங்கினார். அவரது வரவு கதிரவனின் குடும்பத்தினர் யாருக்குமே உவப்பாக இல்லை. அதை முத்துவேலன் அருகில் இருப்பதால் முகத்தில் கூட காண்பிக்க முடியாத சூழல் வேறு!

இந்நிலையில் தான் அன்று இருளப்பன் மருத்துவமனையில் அனைவரிடமும் வளவளத்து விட்டு, முத்துவேலனும், இளமாறனும் கிளம்பப் போகிறார்கள் என்று தெரிந்ததும், அவர்கள் பின்னேயே போவது நன்றாக இருக்காது என யோசித்து, சாமர்த்தியமாக அவர்களுக்கு முன்னால் சென்று வெளியில் அவர்களுக்காகக் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் முத்துவேலனும், இளமாறனும் ஏதோ பேசியபடி இவரைக் கடக்க, “என்ன கிளம்பிட்டீங்களா?” என்று தடுத்தது இருளப்பனின் குரல்.

அப்பொழுதே அவரை கவனித்தவர்கள், “ஆமாங்க. கிளம்பிட்டோம். வரோம்” என்று சிறு புன்னகையைச் சிந்திவிட்டு அவரை கடக்க முத்துவேலன் நினைக்க, “உங்க பொண்ணு எப்படி இருக்கா?” என்றார் அவர்.

நகராமல் நின்றவர், “நல்லா இருக்காங்க” என சிநேக புன்னகையைச் சிந்த, “கதிரவனுக்கு விபத்து நடந்தது உங்க பொண்ணுக்கு தெரியுமா?” என்று இருளப்பன் அடுத்த விசாரணையைத் தொடங்கினார்.

எதற்கு இதெல்லாம் விசாரிக்கிறார் எனச் சிந்தித்தபடியே, “ஆமாங்க. சொல்லிட்டோம்” என்றார் முத்துவேலன்.

“ஓ… அப்படியா? ரொம்ப வருத்தப்பட்டிருக்கணுமே?” போலி வியப்போடு இருளப்பன் கேட்க, இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வெறுமனே தலையை மட்டும் ஆம் என்று அசைத்தனர்.

“ஆமா உங்க பொண்ணு ஜாதகம் பார்த்திருக்கீங்களா இல்லையா?” சம்பந்தமே இல்லாத அடுத்த கேள்வியில் முத்துவேலன் புரியாமல் விழித்தார்.

“என்னென்ன தோஷம் எல்லாம் உங்க பொண்ணுக்கு இருக்கு? இப்பதான் கல்யாண பேச்சுவார்த்தையே தொடங்கியிருக்கோம். அதுக்குள்ள பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. இன்னும் நிச்சயம், கல்யாணம்ன்னு போகப்போக என்னவெல்லாம் நடக்குமோ?” என்று இருளப்பன் மட்டமாகப் பேச, கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் கோபம் எழுந்தது.

“என்ன பேசறீங்க நீங்க?” என்றார் முத்துவேலன் அதட்டலாக.

என்ன மனுஷங்க இவங்க எல்லாம்? என அவர் அசூயையோடு யோசித்த அதேநேரம், என் பொண்ணு இப்படி எல்லாம் பேச்சு எழும்ன்னு தெரிஞ்சு தானே நான் விஷயத்தை சொன்னப்ப அப்படி அழுதா? கடைசியில அதே மாதிரி நடந்திடுச்சே… இது அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப கவலைப்படுவாளே என மனம் கலங்கினார்.

“உண்மையைத்தானே சொன்னேன். எங்க பையன் இப்படிப் படுத்திருக்கக் காரணமே உங்க பொண்ணோட ராசி தானே” என்றார் இருளப்பன் மனிதாபமானமின்றி.

இருளப்பனுக்கு பேச்சுவார்த்தையோடு இருக்கும் திருமணத்தை நிறுத்தி விடவேண்டும் என்னும் தீய எண்ணம் எழுந்ததன் விளைவாய், அதைச் செயல்படுத்த இவ்வாறு மட்டமாக பேசிக்கொண்டிருந்தார். அதை உணரும், யூகிக்கும் நிலையில் மற்ற இருவரும் இல்லை.

“இந்த காலத்திலேயும் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்களே? விபத்துங்கிறது உலகம் முழுக்க தினம் தினம் நடக்கிறது. சின்ன கவனக்குறைவு, வண்டியில இருக்கும் பிரச்சனை, எதிரில் வரவன் சரியா வராம இருக்கிறது இப்படி எதனால வேணா விபத்து நடக்கலாம். இதுக்கு போயி ராசி, நேரம், காலம்ன்னு பேசிட்டு இருக்கீங்க. எங்க பொண்ணு எங்க வீட்டு குலசாமி இன்னொரு முறை அவளைப் பத்தி எதுவும் சொன்னீங்கன்னா பார்த்துக்கங்க” என்றார் முத்துவேலன் ஆத்திரமாக.

இருளப்பன் அப்படி விட்டு விடுவாரா என்ன?

“உண்மையை தானே சொன்னேன். ராசியே சரியில்லாத பொண்ணை எங்க பையன் தலையில கட்டி அவனை காவு வாங்க பாக்கறீங்களா? உங்க நினைப்பெல்லாம் இங்கே செல்லுபடி ஆகாது. எங்க பையனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது. இப்படி ராசி இல்லாத பொண்ணை கட்டிக்கிறதுக்கு” என்று வார்த்தையை விட, “வாயை மூடுடா” என்று கர்ஜனையாக ஒரு சத்தம் அவர்களின் பக்கவாட்டிலிருந்து வர, அனைவரும் அதிர்ந்து திரும்பினர்.

Advertisement