Advertisement

உன் சாயல் கொண்டேனே – 14

அன்று இரவு வரையும் அனைவரும் காத்திருக்க, கதிரவன் கண்விழிப்பதாக தெரியவில்லை. அனைவருக்கும் உள்ளுக்குள் கலக்கம், பதற்றம் தான். ஆனாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். இரவில் அருண் மருத்துவமனையில் இருந்து கொள்வதாகச் சொல்ல, மற்றவர்கள் அனைவரும் தத்தம் இல்லம் சென்றனர்.

நல்லவேளையாக அனைவரையும் வெகுவாக சோதிக்காமல் மறுநாள் காலை ஏழு மணியளவில் கதிரவனிடம் அசைவு தெரிந்தது. அவனது புலன்கள் ஒவ்வொன்றாக இயங்க தொடங்கின. கை விரல்கள், கால்கள், கருவிழிகள், புருவங்கள் என்று ஒவ்வொன்றாக அசைந்து கொடுக்க, மருத்துவருக்கு உடனடியாக செவிலியர்களால் தகவல் அளிக்கப்பட்டது.

மருத்துவரும் வந்து கதிரவனைச் சோதனை செய்தவர், சிரமப்பட்டு அரை மயக்க நிலையில் விழி திறந்தவனிடம் நம்பிக்கையான வார்த்தைகளாகப் பேசி அவன் பதற்றம் தனித்தார். ஆனால், அதற்குள் அவன் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்று விட்டான்.

கதிரவனை நன்றாகச் சோதித்துவிட்டு வெளியில் வந்த மருத்துவர் அருணிடம், “இனி பயப்பட எதுவுமே இல்லை. அவர் சீக்கிரமே முழுக்க குணமாகிடுவார். இன்னைக்கு முழுக்க மயக்கமா தான் இருக்கும். மருந்து வீரியம் குறைஞ்சு அவர் இயல்பா இருக்க ஒரு சில நாள் ஆகலாம். இன்னைக்கு சாயந்திரம் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிக்கலாம்” என்று சொல்ல, அருணுக்கு மகிழ்ச்சியில் கண்கள் தழும்பி விட்டது.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றான் நெகிழ்ந்த குரலில்.

மற்றவர்கள் அனைவரும் ஒன்பது மணிவாக்கில் ஒவ்வொருவராக வந்துசேர, அருண் அவர்களிடமும் விஷயத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டான். கைப்பேசியில் சொல்லி அனைவரும் உண்ணாமல், உறங்காமல் இங்கு ஓடி வந்துவிடப்போகிறார்கள் என்பதற்காகவும், அதோடு இந்த மகிழ்ச்சியான விஷயத்தை நேரில் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இவன் இத்தனை நேரமும் கைப்பேசியில் அழைக்காமல் பொறுமை காத்தான்.

வளர்மதியும் அருண் சொன்ன செய்தியில் நெகிழ்ந்த நிலையில் தான் இருந்தார். என்னவோ, ஏதோ என்று இரண்டு நாட்களாக எத்தனை பதற்றம், எத்தனை தவிப்பு? கண்களில் அவருக்கும் நிற்காமல் நீர் சுரந்தது. அத்தனை கடவுளுக்கும் உளமார நன்றி சொல்லிக் கொண்டார்.

கதிரவனின் பெரியம்மா பூமணி தான் ஆறுதலாக தோளணைத்து, அமைதியாகப் பேச்சு தந்தார். வீணாகக் கவலைப்படாதே என்று எடுத்துச் சொன்னார்.

“ரெண்டு நாளா இப்படித் தவிக்க விட்டுட்டானேக்கா… எப்பவும் நிதானமா தான் காரை ஓட்டுவான். யாரு கண்ணு பட்டதோ என் மகன் ஒரு நாளும் சோர்ந்து இருக்க மாட்டான். இன்னைக்கு இப்படி படுத்துட்டு இருக்கான்” என்றார் முந்தானையால் கண்களைத் துடைத்தபடி.

“விடு வளர் அதுதான் சரியாயிடுச்சே! ஏதோ கெட்ட நேரம். தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சுன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான். மகன் குணமான பிறகும் நீ இப்படி அழுதா எப்படி?” என்றார் பூமணி.

“அவனை இப்படிப் படுக்கையில் பார்க்க மனசு கேட்க மாட்டீங்குது கா. கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கப் போகும்போதே ரெண்டு மாசம் கவனமா இருக்க சொன்னாங்க தானே… நானும் படிச்சு படிச்சு சொன்னேன். இப்ப இப்படி ஆயிடுச்சு பாருங்க”

“நடக்கணும்ன்னு இருந்திருக்கு. நடந்திடுச்சு. நமக்கு மகன் திரும்பி கிடைச்சது போதாதா? நீ இப்படி அழுதுட்டே இருந்தா, அருண் சின்னப்பையன் அவன் என்ன செய்வான்?” பூமணி நிதர்சனத்தை சொல்ல, முகத்தை நன்கு துடைத்தபடி வளர்மதி அமர்ந்து கொண்டார்.

இளமாறன் அதற்குள் அனைவருக்கும் தேநீருடன் வந்துவிட வளர்மதி குடிக்க மறுக்கவும், “குடிங்க அத்தை. இல்லை மாமா கண்ணு முழிச்சதும் சொல்லி தந்திடுவேன்” என்றான் செல்ல மிரட்டலாக.

அருணிடமும், “மச்சான், எல்லாம் சரி இப்ப மாமாவுக்கு உடம்பு சுகமாயிடுச்சே… இனி என்னடா?” என கண்ணில் குறும்போடு கேட்க,

அண்ணனின் உடல்நலம் முன்னேறியதில் சற்று தெளிந்திருந்தவன், “என்னடா?” என்றான் புரியாமல்.

“இல்லை இனி காலேஜுக்கு கட்டடிக்க சாக்கு இல்லையே!” என இளமாறன் போலியாக வருத்தம் காட்ட, அவனைக் கொலைவெறியுடன் முறைத்தவன், “ஏன் இல்லைடா. அண்ணனை சாயங்காலம் ரூமுக்கு மாத்திடுவாங்க. மாத்தினதும் ஐ.சி.யூ., வார்ட் சும்மா தான் இருக்கும். உன்னைப் படுக்க வெச்சிடறேன்” என்று அருண் கழுத்தை நெறிக்க, இருவரும் செய்த ரகளையில் அத்தனை நேரமாக இருந்த இறுக்கமான சூழல் சற்று மாறியது.

“விடுடா… விடுடா…” என இளமாறன் சண்டை போட, வேண்டுமென்றே அவனைப் போட்டுக் குலுக்கினான் அருண்.

“அடிப்பாவி நீ இருக்க வீட்டுல உன்னை நம்பி எப்படிடா எங்க அக்காவை விடுவேன்” என கழுத்தை நீவியபடி இளமாறன் கேட்க, பூஜை வேளை கரடியாய் அவர்களின் சம்பாஷனைகளை கேட்டபடி இருளப்பன் வந்து சேர்ந்தார்.

ஆனால், அவர்கள் பேச்சைக் கவனித்தது போல வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. நேற்று முத்துவேலனையும், இளமாறனையும் பார்த்தபோது தெரிந்தவர்களாக இருப்பார்கள் போல என அசட்டையாக நினைத்தவருக்கு, இன்று அவர்கள் யாரென்று விவரம் புரிய உள்ளுக்குள் எரிந்தது. ஏற்கனவே பிரியாதேவி தான் கதிரவன் சொன்ன விஷயங்களை தந்தையிடம் ஓதி வைத்திருந்தாளே! அப்பொழுத்திலிருந்தே கிளர்ந்த கோபம் இப்பொழுது இவர்களை நேரில் பார்த்து, இன்னார் எனத் தெரிந்ததும் பலமடங்கு அதிகரித்தது.

இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “மாப்பிள்ளைக்கு இப்ப பரவாயில்லையா தம்பி?” என அருணிடம் தேன் தடவிய குரலில் விசாரித்தார்.

என்னவோ இந்த ஆளைப் பார்த்தாலே அருணுக்குப் பிடிப்பதில்லை. போலித்தன்மை அப்பட்டமாகத் தெரிகிறது. ஏதோ காரியத்திற்காக வருகிறான் என்று பெரியப்பாவும் நேரடியாகவே எச்சரிக்கை செய்திருப்பதால், “அண்ணா நல்லா இருக்காங்க” என்று சுருக்கமாகச் சொன்னதோடு முடித்துக் கொண்டான்.

“எப்ப ரூமுக்கு மாத்துவாங்களாம் தம்பி?”

“இன்னைக்கு மாத்தறதா சொல்லி இருக்காங்க” என்றான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தரும் தோரணையில். அவனது உடல்மொழி சொன்னது உன்னிடம் பேச இஷ்டப்படவில்லை என்று!

இளையவர்கள் இப்படித்தான் பக்குவம் இருக்காது. முறைப்போ, விலகலோ உடனுக்குடன் காட்டி விடுவார்கள். நாசூக்கு பார்க்கத் தெரியாது.

உள்ளொன்று வைத்து புறமொன்றாய் நடக்காதது நல்லது தான் என்றாலும், இடம், பொருள் இருக்கிறதல்லவா? அதேபோல் ஆட்களும் இருக்கிறார்களே! எதிரில் இருப்பவரின் குணம் போலப் பிரச்சினைகள் ஒவ்வொரு விதமாய் எழும்! அது அருணுக்குப் புரியாமல் இருளப்பனின் கோபத்திற்கு ஆளானான்.

தன் கோபத்தை மனதிற்குள் மறைத்து வைத்தவர், காரியத்தில் கண்ணாக, “பிரியா பொண்ணு தான்… உன் அண்ணனுக்கு அடி பட்டதுன்னு தெரிஞ்சதுல இருந்து பச்சை தண்ணி குடிக்கலை. அழுகை, வேண்டுதல்ன்னு என்னால அவளை அப்படிப் பார்க்கவே முடியலை. இன்னைக்கு கூட என்கூட வரேன்னு சொன்னா. நான் தான் சமாளிச்சு இருக்க வெச்சுட்டு வந்திருக்கேன்” என்று சொல்ல,

இருளப்பனின் நோக்கம் அருணிற்கும், பரந்தாமனிற்கும் ஒருவழியாகப் புரிந்துவிட, இருவரின் பார்வைகளும் ஒன்றை ஒன்று சங்கடமாகச் சந்தித்துக் கொண்டது. இதென்ன புது வம்பு என்பதுபோல!

இருளப்பனோ அனைவரையும் பார்வையால் அளந்தபடி தான் தன் மகள் குறித்துப் பேசத் தொடங்கினார். இருந்தும் யாரும் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை என்பதில் பலத்த அடி! மனத்திற்குள்ளும் கோபம் சுறுசுறுவென ஏறியது.

வளர்மதியேனும் எதிர்வினை ஆற்றுவார் என நினைக்க, அவருக்குக் கதிரவன் கவலை மட்டும் தான் போலும்! வழக்கம்போல இருளப்பனை, இருளப்பன் சொன்னதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

சரி அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுவோம். ஒரேயடியாக வேண்டாம். எப்படியும் கதிரவன் மருத்துவமனையில் இருப்பதால் திருமண பேச்சு கிடப்பில் தான் இருக்கும் என எண்ணிய இருளப்பன் அதன் பிறகு அதுகுறித்து பேச்செடுக்கவில்லை.

அன்று மாலையில் கதிரவனை அறைக்கு மாற்றிவிட, முத்துவேலனும், இளமாறனும் மாலைவரை இருந்துவிட்டே வீட்டிற்குச் சென்றனர்.

“மாப்பிள்ளை நல்லபடியா பிழைச்சு வந்ததே சந்தோசம் இளமாறா. ரெண்டு நாளா அருண் முகமும் அவங்க பெரியப்பா முகமும் சரியே இல்லை. டாக்டர் என்ன சொன்னாரோ பாவம்…”

“ஆமாம்பா. நானும் கவனிச்சேன். எனக்கும் கலக்கம் தான். அவங்க யாருகிட்டேயும் சொல்லி பயப்படுத்த விரும்பலை போல! ஆனாலும், என்னவோ எல்லாருக்கும் அங்க இருந்த இறுக்கமான சூழல் புரிஞ்சு தான் இருந்தது. இன்னைக்கு நம்ம போனதும் மாமாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு அருண் சொன்னதும் தான் எனக்கு ஆசுவாசமே”

“எல்லாம் அந்த லிங்கேஸ்வரர் அருள்” என்றார் மனதார!

இல்லம் சென்று சேர்ந்ததும் மலர்விழி பிடித்துக் கொண்டாள். மூன்று நாட்களாக தெளிவாக எதையும் சொல்லாமல், வேலையைக் கவனிக்காமல் சுற்றிக் கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? எங்கே சென்று வருகிறீர்கள்? யாருக்கு என்ன பிரச்சனை? எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள் என விசாரிக்க, என்ன சொல்லி சமாளிப்பது என்று சட்டென்று இருவருக்கும் தெரியவில்லை.

தயக்கமாக தந்தை ஏதோ சொல்லத் தொடங்க, “அப்பா… ரெண்டு நாளா சொல்லற மாதிரி பொய் சொல்லறதா இருந்தா வேணாம் விடுங்க. நீங்க இன்னைக்கு மறைச்சாலும் எனக்கு உண்மை தெரிய வரத் தான் போகுது” என்றாள் வருத்தமாக.

“அதில்லைமா…”

“ஹாஸ்பிட்டல் தானேப்பா போறீங்க? உங்களை ஹாஸ்பிட்டல்ல பார்த்ததா வந்து சொன்னாங்க. உங்களுக்கு என்னன்னு விசாரிக்கிறாங்க? நான் என்ன சொல்லி சமாளிக்கன்னு சொல்லுங்க. ஏன்பா உங்களுக்கு எதுவும் உடம்பு சரியில்லையா? நான் பயப்படுவேன்னு என்கிட்டே சொல்ல மாட்டேங்கறீங்களா?” என்று தவிப்பாக மலர்விழி கேட்க,

“அதெல்லாம் எதுவும் இல்லைம்மா. நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன். நீ அழாதே” என்றார் தந்தையும் மகளின் அழுகையில் அவசரமாக.

“இல்லை. நீங்க ரெண்டு நாளா காலையில போனா சாயந்திரம் தான் வரீங்க. உடம்புக்கு என்ன செய்யுதுபா? டாக்டர் எதுவும் டெஸ்ட் எடுக்கணும் சொல்லி இருக்காங்களா? இளா கூட ரெண்டு நாளா காலேஜுக்கு போகலை”

“நான் தான் சொல்லறேனே மா. எனக்கு எதுவும் இல்லை. நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன். அது… நமக்கு தெரிஞ்சவங்க ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அதுதான் நானும், தம்பியும் பார்க்க போறோம்” என்றார் உடைத்து.

“ஓ…” என்று மெலிதாக ஆசுவாசம் அடைந்தவள், பிறகே விவரம் தெரிந்து கொள்ள விரும்புபவளாக, “யாருக்கு என்ன ஆச்சு பா? ரொம்ப அடியா? இப்ப எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தாள்.

“இப்ப நல்லா இருக்காங்க மா. நேத்து ஒரு ஆபரேஷன் செஞ்சாங்க. இன்னைக்கு தான் ஐ.சி.யூ ல இருந்து நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க. பயப்பட எதுவுமில்லை” தயங்கி தயங்கிச் சொன்ன தந்தையை வினோதமாகப் பார்த்தவள்,

“யாருக்கு என்ன ஆச்சு பா? ஏன் என்கிட்ட சொல்லாம போனீங்க?” என விசாரித்தாள்.

இனி சொல்லித்தானே ஆக வேண்டும். எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? என நினைத்தவர், சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் வர மறுத்தது.

முயன்று, “அது… அது… வந்தும்மா நம்ம கதிரவன் மாப்பிள்ளைக்குத் தான்” எனச் சொல்லி சத்தமில்லாமல் ஒரு இடியை அவளது தலையில் இறக்கி வைத்தார் முத்துவேலன்.

Advertisement