Advertisement

உன் சாயல் கொண்டேனே – 10

என்னவோ சிறுபிள்ளைத் தனமாய் கதிரவனுக்குப் பத்திரங்கள் சொல்ல வேண்டும், அவனை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும் என்று மலர்விழியின் மனம் மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டே இருந்தது.

‘இதெல்லாம் உனக்கே சரியா தெரியுதா?’ எனக் கண்ணாடியைப் பார்த்துத் திட்டிக் கொள்வாள்.

தோட்ட வேலையிலும், வீட்டு வேலையிலும் மனம் ஒன்ற மறுத்து, கொஞ்சம் விரக்தியும், கவனக்குறைவுமாக வளைய வந்தாள்.

இந்த நிலை நீடிப்பது சரியில்லை என நினைத்தவள், எங்காவது வெளியில் சென்று வரலாம், மனம் புத்துணர்வு பெறும் என்று எண்ணினாள். அப்படிச் செல்வது அவளது கவலையை மேலும் அதிகப்படுத்தும் என்றென்ன அவள் கனவா கண்டாள்?

எங்கு செல்லலாம் என்ற நீண்ட யோசனையின் விளைவாய் ஒருவழியாக, மீனாட்சி அத்தையின் வீட்டிற்கு அவரின் மகளையும், பேரனையும் பார்க்கச் சென்று வரலாம் என முடிவெடுத்து, தன் அப்பாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அத்தையின் வீட்டில் மலர்விழிக்கு நல்ல உபசரிப்பு! இவள் திருமண விஷயம் தெரியும் என்பதால், அத்தை மகள் சந்தியா வெகுநேரம் கேலி பேசி இவளைச் சிரிக்க, சிவக்க வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் பெற்ற அருமை புதல்வனோ, இவளது மொத்த விரக்தியையும் விரட்டி விட்டு, இவளின் மனநிலையையே தலைகீழாக மாற்றி விட்டான்.

அந்த பொக்கை வாய் சிரிப்பும், இடது காலை சிரமப்பட்டு இரண்டு கைகளால் பற்றி தன் வாயில் திணிக்கும் அழகும், அவள் அவனை தன் மடியில் வைத்துக் கொஞ்சும் பொழுது அவளது தாமரை பதக்கத்தைப் பற்றி வாயில் வைத்து ஜொள்ளு வடிப்பதும், ஓயாமல் ஆட்டிக்கொண்டிருக்கும் கை, கால்களும், புரியாத பாஷையில் பிதற்றிக் கொண்டிருக்கும் கனி மொழிகளும் அவனை விட்டுவரவே மலர்விழிக்கு மனமில்லை.

அவள் குழந்தையோடு ஐக்கியமாகி விட்ட அழகை ரசித்த சந்தியா, “நீ இவ்வளவு ஆசையா இருக்கிறதைப் பார்த்தா, கட்டிக்கிட்டு போன வேகத்துல பிள்ளையை பெத்துடுவ போலவே!” என்று காதில் கிசுகிசுக்க,

‘என்னவெல்லாம் பேசுகிறாள் இவள்?’ என முறைத்துப் பார்த்தாள் மற்றவள்.

“முறைப்பெல்லாம் நல்லா இருக்கு. ஆனா, இந்த கன்னம்… அதோட நிறம்… இதெல்லாம் வேற கதை சொல்லுதே! உன் ஆளோட ஞாபகம் வந்திடுச்சாக்கும்” என்று இளையவளின் கன்னம் வருடினாள் சந்தியா.

“அச்சோ! விடுங்க…” என்ற சிணுங்களோடு மலர்விழி சந்தியாவின் கையை தட்டி விட்டு அவசரமாக தன் கன்னங்களைத் தேய்க்க,

“அதுதானே… இனி நான் எல்லாம் தடவ முடியுமா?” என்று சொல்லிக் கண்ணடித்து மேலும் கன்னம் சிவக்க வைத்தாள் சந்தியா.

மீனாட்சி அத்தை வீட்டிலிருந்த மொத்த நேரமும் இப்படி கேலியும், தவிப்புமாக கழிந்தாலும், அது மலர்விழியின் மனதிற்குள் தித்திக்கவும் செய்தது மறுக்க முடியாத உண்மை!

அதே இதமான மனநிலையோடு வந்தவள், தன் வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், கதிரவனையும், பிரியாதேவியையும் ஒருசேரப் பார்த்து அதிர்ந்தாள்.

பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழியில், அதன் அருகே தான் அவர்களைக் கவனித்தாள். ‘இவர்கள் எங்கே இங்கே?’ என எண்ணிய மனம் துவண்டு போனது. அது நடையின் வேகத்தையும் பாதித்ததன் விளைவாய், சற்றே தடுமாறி மெதுவாக நடந்தாள்.

போதாததிற்கு அவர்கள் பேச்சு வேறு காதில் விழுந்து அவளை வதைத்தது.

பிரியாதேவி கதிரவனிடம் கெஞ்சி, கொஞ்சிக் கொண்டிருந்தாள். அவன் பெங்களூர் போகாவிட்டாலும் பரவாயில்லையாம்! இங்கு விவசாயமே பார்த்தாலும் அவளுக்கு சம்மதம் தானாம்! இடையிடையே நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது அது இதென்று காதல் வசனத்தை வேறு வாரி இரைத்து, மலர்விழியின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தாள்.

பேருந்து நிலையத்தின் அருகில் தான் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்க, இம்சையிலும் இம்சையாய் பிரியாவின் கெஞ்சலும், வழிதலுமான குரல் தொடர்ந்து மலர்விழியின் செவிகளில் விழுந்து இம்சித்துக் கொண்டே இருந்தது.

‘ச்சே! இவளுக்கெல்லாம் விவஸ்தையே இருக்காதா? இத்தனை பேர் பார்க்க, இப்படி பொதுவெளியில் நடந்து கொள்வாளா?’ அவள் செய்கைகளிலும், பேச்சிலும் முகம் சுளிக்க மட்டுமே அவளால் முடிந்தது.

‘இவன் மறுத்து ஒருவார்த்தை பேச மாட்டானா? என்னை கவனித்திருப்பானா இல்லையா?’ கலக்கமும், தவிப்புமாக மலர்விழி நின்றிருக்க, சரியாக அந்த நேரம் கதிரவனின் குரல் கேட்டது.

“பிரியா உனக்குன்னு சில லிமிட்ஸ் இருக்கு. நீ ரொம்பவுமே தாண்டற?” என்றான் வெறுப்பான குரலில்!

‘ஏன் அதை இத்தனை நேரம் சொல்ல முடியாதா? அவ இத்தனை தூரம் பேசினதுக்கும் அமைதியா தானே இருந்தான்? ஒருவேளை இப்ப என்னை கவனிச்சிட்டு இப்படி பேசறானோ?’ மலர்விழி வெறுப்பாய் நினைத்தபடி, அவர்களைக் கவனிக்க…

“உன்கிட்ட எனக்கென்ன லிமிட்ஸ்?” என்று தலை சரித்து ஒயிலாக அவள் கேட்ட விதமும், அவன் கரம் கோர்க்க நெருங்கிச் சென்ற விதமும் மலர்விழியினுள் தீப்பிழம்புகளையே உருவாக்கின.

தன்னையும் மீறி அவர்கள் செய்கையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரியாதேவி நெருங்கும் போதே பட்டென்று விலகியவன், “ஏய் உனக்கெல்லாம் அறிவே இருக்காதா?” என்று அடிக்குரலில் சீறினான்.

என்னதான் கதிரவன் கோபமாகப் பேசினாலும், மலர்விழிக்கு அவனை முழுதாக நம்ப முடியவில்லை. ஒருவேளை தன்னை பார்த்ததும், இப்படி வேண்டுமென்றே கோபம் போல நடந்து கொள்கிறானோ என்று அவள் மனம் சந்தேகம் கொண்டது. அந்த சந்தேகத்திற்கு மூல காரணங்கள் பிரியாவின் அழகும்! அவர்கள் பிரிந்த விவசாய வேலை என்னும் தடை இப்பொழுது பிரியாவிற்குச் சுத்தமாக இல்லாமல் இருப்பதும்! மலர்விழியின் மனம் வெகுவாக கலங்கியது.

“காதலனை கல்யாணம் செய்ய ஆசைப்பட அறிவு வேணுமா? ஆசை இருந்தா போதாது? எனக்கு அந்த ஆசை என் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கு” என நெஞ்சைச் சுட்டிக்காட்டி பெருமூச்சு விட்டாள் பிரியாதேவி.

“முட்டாள்! முட்டாள்! எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. இப்படி பைத்தியம் மாதிரி பேசிட்டு திரியாதே! முதல்ல கிளம்பு…” சிங்கத்தின் உருமலோடு சீறினான் கதிரவன்.

அவனது கோபத்தைப் பொய்யென்று யாரும் சொல்ல முடியாது. அவனது சிவந்த முகமும், இறுகிய தாடையும், இடுங்கிய விழிகளும், விரைத்த தேகமும் அவன் கோபத்தைக் கட்டியம் கூறியது. ஆனால், முன்பே அத்தனை தூரம் ஏன் இவளைப் பேச விட்டான் என்னும் குழப்பம் மலர்விழியின் மண்டையைப் பிய்த்தது! இப்பொழுதும் வார்த்தைகள் தான் அதட்டலாக வெளிவந்ததே தவிர, குரல் உயரவே இல்லை. உற்றுக் கவனிப்பதால் தான் அவளுக்குமே அவன் பேசுவது காதில் விழுகிறது. இல்லையேல் அது விழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்று புரிய, சுற்றிலும் பார்வையைப் படர விட்டாள்.

அவள் எண்ணியது சரிதான் போல என்பது போலப் பேருந்து நிலையத்தில் இருந்த மற்றவர்கள் இவர்கள் இருவரையும் பெரிதாகக் கவனிக்கவில்லை. இவர்களிடையே இருந்த வாக்குவாதத்தையும்! யாரோ இருவர் பேசிக்கொண்டிருக்கின்றனர் போல என்பது போல இயல்பான பாவனை மற்றவர்களிடம்.

கதிரவனின் கோபத்தில் அதிர்ந்த பிரியாதேவி, “இல்லை இல்லை நீங்க பொய் சொல்லறீங்க. உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனா எனக்கெப்படி தெரியாம இருக்கும்? எங்களுக்கு எதுவும் அழைப்பு வரலையே!” என்று சீறினாள்.

இவர்களின் வாக்குவாதத்திலும், தன் கவலையிலும் மூழ்கியிருந்த மலர்விழி, அப்பொழுது வந்த பேருந்தை கவனிக்கவில்லை. அந்த பேருந்து இவளை விடுத்து, மற்ற பயணியர்களை நிரப்பியபடி ஒரு விசில் சத்தத்துடன் சிட்டாக பறந்ததையும் கவனிக்கவில்லை!

“நிச்சயதார்த்தம் நடக்க போகுது போதுமா? இப்போதைக்கு எல்லாம் பேசி உறுதியாயிடுச்சு” என்றான் கதிரவன் முகம் சுளித்து.

“ச்சு! பேசி தானே வெச்சிருக்கீங்க. வேண்டாம்ன்னு சொல்லிடுங்க” என்று அலட்சியமாக பிரியாதேவி சொல்ல, கண்கள் சிவக்கக் கையை ஓங்கிக் கொண்டு வேக எட்டுகளில் நெருங்கியிருந்தான்.

மிரண்டு பின்னடைந்தவளிடம், “நீ என்னை ரொம்ப சீண்டற? ஏற்கனவே சொல்லியிருக்கேன் என் வழியில குறுக்க வராதேன்னு. மறுபடி மறுபடி நீ வந்தா பிறகு என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று விரல் நீட்டி கதிரவன் எச்சரிக்க, அவன் அடிக்கும் அளவு இறங்கி விட்டான் என்றதும், முகம் அவமானத்தில் சிவக்க வேகமாகச் சென்று தன் காரை எடுத்துக் கொண்டு பிரியாதேவி கிளம்பிவிட்டாள்.

‘ச்சே! ச்சே! இவன்கிட்ட எல்லாம் இவ்வளவு இறங்கி போகணுமா?” என்று ஆத்திரத்திலும், அவமானத்திலும் அவள் முகம் நன்றாகச் சிவந்திருந்தது.

‘இந்த அப்பா ஒருத்தரு… வேற ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்காம, இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன்கிட்ட பேச சொல்லி இம்சை செய்யறாரு! அப்படி என்ன பெருசா சம்பாரிக்க போறான் இந்த மாட்டை மேச்சு! இவனை விட்டா வேற மாப்பிள்ளையே கிடைக்காதா… மாட்டுக்காரன்… தோட்டத்துக் காரன்… இவனுக்கெல்லாம் நான் இறங்கி போகணுமா?’ அவள் உடலும், மனமும் கோபத்தில் தகித்துக் கொண்டிருந்தது.

“காரில் ஏறு!” மலரிடம் நான்காவது முறையாகச் சொன்னவன், இந்தமுறை அவளை நினைவிற்குக் கொண்டு வர அவளது மணிக்கட்டைப் பிடித்து உலுக்கினான்.

முகம் வெளிறி, கண்ணோரம் சிவந்து நீர்த் துளிகள் துருத்தி நிற்க, எதையோ இழந்தவள் போலப் பரிதாபமாக நின்றிருந்தாள் மலர்விழி. கதிரவனின் உலுக்களில் சட்டென்று தெளிந்தவள், அவன் பிடித்த கரத்தை உதறிவிட்டு, அவன் இதற்கு முன்பு நின்றிருந்த இடத்தில் தேடினாள்.

“அவ கிளம்பிட்டா…” என்று கதிரவன் சொன்னதும் தேடலை நிறுத்தி விட்டு, பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.

“காரில் ஏறு” என்றான் மீண்டும்.

மறுப்பாகத் தலையசைத்தவள், “நான் பஸ்ஸில் போயிக்கிறேன்” என்றாள்.

“எந்த பஸ்ஸில்?” கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு வெகு நிதானமாக அவன் கேட்ட கேள்வியில் கிலோ கணக்கில் நக்கல்.

‘உனக்கென்ன?’ எனச் சூடாக எழுந்த கேள்வியைத் தொண்டையிலேயே விழுங்கி விட்டு, எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்று கொண்டாள்.

“பைத்தியமா உனக்கு? பஸ் போனது கூட தெரியாம நின்னுட்டு… இனி எந்த பஸ்ஸில் போறதா உத்தேசம்?” அவன் கேட்டபிறகே பின்னால் திரும்பிப் பார்க்க, பேருந்து நிலையத்தில் ஒருவரும் இல்லை.

‘ச்ச ஒட்டு கேட்டுட்டு நின்னது மட்டும் இல்லாம, பஸ்ஸையும் விட்டிருக்கேன். இவன் என்னைப்பத்தி என்ன நினைப்பான்’அவளுக்குப் பேருந்து போனதை விடவும், இந்த விஷயம் தான் கவலையாக, அவமானமாக இருந்தது.

“ம்ப்ச்…” என்றவன் இவளிடம் பேசி பயனில்லை என நினைத்தானோ என்னவோ அவள் எதிர்பாரா நேரம் கார் கதவை திறந்து அவளை உள்ளே ஏற்றிவிட்டுச் சுற்றி வந்து தானும் காரில் ஏறிக்கொண்டான்.

“என்ன செய்யறீங்க?” அவள் கோபமாகக் கேட்டபடியே கார் கதவைத் திறக்க நினைக்க, “ஸ்ஸ்ஸ்…” என்றான் அதட்டலாக.

“அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்? அதுவரை இங்கே தனியா நிற்க போறியா?” என்று கத்த, ‘அது என் இஷ்டம்? உனக்கென்ன?’ என்று மூக்குடைக்கும் வேகம் அவளிடம்!

“என் இஷ்டம் கூட நிறைய இருக்கு. நான் செய்யவா?” அவள் மனதைப் படித்தவன் போல கதிரவன் கேட்க, ‘என்னவாம் இவன் இஷ்டம்?’ என உதட்டை அலட்சியமாகச் சுளித்து, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“அப்படியென்ன என் மேல நம்பிக்கை இல்லை உனக்கு? அப்படி கண்ணெல்லாம் கலங்கி… முகமெல்லாம் பயத்தில வெளிறி… ம்ப்ச்… எனக்கு அவளை பிடிக்கலை… அவ வேண்டாம்… இதை அவ புரிஞ்சுக்கணும்ன்னு எனக்கு அவசியமே இல்லை. ஆனா, நீ புரிஞ்சுக்க வேணாமா?” தணிந்த அவன் குரல் ஆதங்கமாக ஒலித்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க, “பிரியாதேவி எங்க சொந்தக்கார பொண்ணு தான். கொஞ்சம் வசதி. நான் பெங்களூருல வேலையில இருக்கும்போது காதல், கீதல்ன்னு பின்னாடி சுத்தினா… சரி உண்மை தான் போலன்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு யோசிச்சேன்… நல்லா உன் மரமண்டையை வெச்சு கவனிச்சுக்க அவளை நான் காதலிக்கலை! கல்யாணம் செய்யலாம்ன்னு நினைச்சேன் அவ்வளவுதான்”

‘நான் மரமண்டையா?’ அவனை முறைத்தாள்.

“ஆமாம் மரமண்டையே தான்!” என்று சிரிப்போடு சொன்னவன், மேலும் தொடர்ந்தான். “என்னோட ஏம்பிஷன்… நான் சொந்த ஊரில் செட்டில் ஆக நினைக்கிறது… விவசாயம் செய்ய நினைச்சது எல்லாம் அவகிட்ட சொல்லிட்டேன். அப்ப எல்லாம் சரி சரின்னு கேட்டுக்கிட்டா…அதுக்கப்பறம் அவ நிறைய சினிமாட்டிக்கா எதிர்பார்த்தா… நான் கல்யாணம் பேசும்போது நம்ம வீட்டுல பேசலாம். இப்ப சும்மா காதல், கீதல்ன்னு சும்மா என்னைத் தொல்லை பண்ணாதேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அப்பவும் அப்பப்ப பெங்களூரு வேலையை விட்டுடாதீங்கன்னு என்கிட்ட சொல்லுவா… அங்கே பிளாட் வாங்குங்கன்னு சொல்லுவா.. அப்ப எல்லாம் என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்குவா.

அப்பறம் நான் நம்ம ஊருக்கே வர இருந்த சமயம், இன்னும் நச்சரிப்பு! சண்டை! சரியான டார்ச்சர் அவ… ஒரு நிலைமைக்கு மேல என்னால சமாளிக்கவே முடியலை…

அவ, நீங்க பெங்களூரு வேலையை விட்டுட்டு வந்தா என்னை மறந்திடுங்கன்னு சொல்லி எமோஷனால் பிளாக் மெயில் பண்ணினா, என்னமோ நான் அவளை நினைச்சிட்டே இருக்க மாதிரி… நான் சரிதான் போடின்னு சொல்லிட்டேன்.

அதுக்கப்பறம் என்னவோ கண்டுக்காம தான் இருந்தா… இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்டா”

அத்தனை கதையையும் சொல்லி முடித்தவனிடம், “நானும் அவளை மாதிரியே சொன்னா என்ன பண்ணுவீங்க” என்றாள் அசராமல்!

அவள் கேட்ட கேள்வியில் அந்த கார் சாலையின் ஓரம் நின்றிருந்தது. கோபம் வந்து விட்டதோ என அவள் நிமிர்ந்து பார்க்க, அவன் விழிகளில் குறும்பு.

“எ… என்ன?” என்றாள் திணறலாக!

“சொல்லிப்பாரேன்! முழுசா சொல்ல முடியுதான்னு பார்க்கிறேன்” என்று சவாலாகச் சொன்னவனின் பார்வை அவள் உதட்டில் ஆசையும், ஆவலுமாக நிலைபெற்றது.

அந்த பார்வை எதுவோ செய்ய, படபடத்த மனதோடு சற்றே தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ஆனால், அவன் ஒரு முடிவோடுதான் இருந்தான் போலும்! “அப்படி என்ன உனக்கு என்மேல சந்தேகம்?” என முதலிலிருந்து தொடங்கினான் விடாக்கண்டனாக.

‘நாம என்ன கல்யாணம் பண்ணி வருஷக்கணக்காவா வாழ்ந்திட்டோம்! எனக்கு நம்பிக்கை இல்லையேன்னு கோபப்படறதுக்கு’ மலர்விழியால் மனதிற்குள் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.

“ஹ்ம்ம்… உனக்கு நம்பிக்கை வரமாதிரி நான் எதுவும் செய்யலை தான்” எனத் தீவிரமாக யோசித்தவன், “இப்ப உனக்கொரு வாக்கு தர போறேன்” என்று அவளை நெருங்கியவன், நெருங்கிய வேகத்தில் அவளது இதழில் இதழ் பதித்திருக்க, அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயன்று தோற்றுப் போனாள்.

சிறிது நேரத்தில் இதழை விடுத்து, முகமெங்கும் முத்தமழை பொழிந்தவன், “நான் முத்தம் கொடுத்த முதல் பொண்ணு நீ தான்” என்று வாக்கு போல அவள் தலையில் கை வைத்தான்.

அவளோ ஆத்திரத்தோடு அவனைத் தள்ள, அவளால் முடிந்தால் தானே? அவனுடைய திடமும், ஆகிருதியும் அப்படி ஆயிற்றே!

அவளது தள்ளலைத் துளியும் பொருட்படுத்தாது, “இனியும் உன்னைத் தவிர வேற எந்த பொண்ணுக்கும் கொடுக்க மாட்டேன். ஹ்ம்ம்… அப்படி தடாலடியா சொல்ல முடியாது… நம்ம மகளுக்குத் தருவேன்… குட்டி குழந்தைங்களுக்கு தரது எல்லாம் கணக்கில் எடுத்த்துக்காத… அவங்களை தவிர உனக்கு மட்டும் தான் தருவேன். இது சத்தியம்” என்று மெல்லிய குறும்பு புன்னகையோடு சொன்னவன், தன் தலையிலும், அவள் தலையிலும் அழுத்திவிட்டு, அவள் வயிற்றிலும் தன் உள்ளங்கை கொண்டு ஒரு அழுத்து அழுத்தினான். பிறக்கப்போகும் மகள் மீது வாக்கு கொடுக்கிறானாம்!

“ஐயோ!” என அவன் கரங்களைத் தள்ளி விட்டவள், தனக்கிருந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் அவனை அடித்துத் தீர்த்தாள்.

இந்த அடாவடித்தனம் அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன் இப்படிச் செய்தான்? கால் குறுக்கி முகம் புதைத்து மலர்விழி தேம்ப, கதிரவன் செய்வதறியாது தவித்தான்.

Advertisement