Advertisement

உன் சாயல் கொண்டேனே – 02

தாய்மாமன் பொண்ணுசாமியின் வீட்டிற்கு, மலர்விழி தன் தந்தை, தம்பியோடு வருகை தந்திருந்தாள். ஊரிலிருந்து மாணிக்கம் குடும்பத்தினர் குத்தகை பத்திரம் எழுதித் தருவது தொடர்பாக வந்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கத்தான் இவர்களது விஜயம்.

மாணிக்கம் மாமாவும், அவருடைய மகன் விஜயகுமாரும் மட்டும் வருவார்கள் என்று எண்ணியிருக்க, அவரது மனைவி சாந்தி அத்தையும் வந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அத்தைக்கு மூட்டுவலி இருப்பதால், இப்பொழுதெல்லாம் அடிக்கடி எங்கேயும் செல்வதில்லை. அதனால் தான் மலருக்கு ஆச்சரியமாக இருந்தது.

மூட்டுவலி இருந்தும் இந்த முறை வந்திருக்கிறார்களே என்ன விஷயமாக இருக்கும் என்ற குறுகுறுப்போடு சுற்றிக் கொண்டிருந்தவள், இளையவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டாள். இளம் வயதிற்கே உரிய துருதுருப்பும், கூடவே தான் ஆர்வமாக பார்க்கும் ஒருவன் அருகில் இருக்கிறான் என்ற பூரிப்பும் அவளது முகத்தில் பொலிவைக் கூட்டியிருந்தது.

அந்த பொலிவு வாடப்போவது தெரியாமல் கேலியும், கிண்டலுமாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது மாமன் மகன் ஒருவன், “விஜி முகத்திலே என்ன பிரகாசம் பாரு” என்று கேலியாகச் சொல்ல, அவனது மனைவி, “கொஞ்சம் கம்மி தான். நாம இன்னும் பொண்ணை கண்ணுலயே காட்டலையேன்னு உள்ளுக்குள்ள கோபம் போல” என்றாள்.

மலர்விழி, இளமாறன் தவிர மற்றவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்தவர்கள். ஆக, மற்றவர்கள் கேலியும், கிண்டலுமாகச் சிரிக்க, புரியாமல் குழம்பியது இவர்கள் இருவர் மட்டும் தான்!

“புரியலை மாமா. எதைப்பத்தி பேசறீங்க?” என்று இளமாறன் குழப்பத்துடன் கேட்க, “உங்க அப்பா சொல்லலையா? நம்ம விஜய்க்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்களே… ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு. பேச்சுவார்த்தையும் சுமூகமா போயிட்டிருக்கு” என்று அவன் சொல்ல, மலர்விழிக்கு ஸ்தம்பித்த நிலை!

‘எனக்கு முறை மாமன் தானே? ஏன் என்னை பார்க்கலை?’ அவள் மனம் கேட்ட கேள்விக்குப் பதில் தான் அவளிடம் இல்லை. சோர்வையும், தவிப்பையும் முயன்று மறைக்க வேண்டிய கட்டாயம் வேறு அவளுக்கு அழுத்தத்தைத் தந்தது.

நடப்பது, அமர்வது, சிரிப்பது அனைத்துமே இத்தனை சிரமமாக இருக்கும் என்று அவள் நினைத்ததே இல்லை. அத்தனை சிரமப்பட்டுப் போனாள் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்வதற்கு!

நேரம் நகர்வேனா என்று சண்டித்தனம் செய்ய, ஒருவழியாக வீட்டிற்குக் கிளம்பலாம் என்று முத்துவேலன் சொன்னதும் தான் மலர்விழிக்குக் கொஞ்சம் ஆசுவாசம் ஆனது. வீட்டில் நுழைந்து எதையும் செய்யாமல் அறைக்குள் முடங்கிக்கொண்டால் போதும் என்று அவளுடைய ஒவ்வொரு அணுவும் எதிர்பார்த்தது.

வீட்டிற்கு புறப்படும் முன்பு, அனைவரிடமும் விடைபெற்றுச் செல்லலாம் என்று ஒவ்வொருவராக தேடிச் சென்றவள், கடைசியாகச் சாந்தி அத்தையைத் தேடிச் செல்ல, அங்கு அம்மாவும், மகனும் பேசிக்கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்க நேரிட்டது.

“… சொன்னா புரிஞ்சுக்கங்க மா. கிராமத்து பொண்ணெல்லாம் எனக்கு செட் ஆகாது” என்று அழுத்தமாக தன் மறுப்பைப் பதியவைத்துக் கொண்டிருந்தான் விஜயகுமார்.

“இல்லை விஜய். அந்த பொண்ணு நல்லா படிச்சிருக்கு. சென்னையில தான் வேலை பார்க்கிறா”

“அச்சோ அம்மா படிச்சு, வேலை வாங்கினா மட்டும் போதுமா? அவங்க பட்டிக்காடுன்னு நெத்தியில எழுதி ஒட்டி இருக்கும். அவங்க தோற்றம், நடவடிக்கைகள், யோசிக்கும் முறை எதுவுமே எனக்கு, என் வாழ்க்கை முறைக்குப் பொருந்தாது. புரிஞ்சுக்கங்க பிளீஸ்” என்று அழுத்தமாக மறுக்க, சாந்திக்குச் சமாதானம் செய்ய வேண்டிய நிலை.

“ஒருமுறை நேரில் பாரு, அந்த பொண்ணுக்கிட்டேயும் பேசிப்பாரு அப்பறம் உன் முடிவை சொல்லுவியாம். இப்பவே இப்படி யோசிக்காத விஜய். ரொம்ப அருமையான பொண்ணு. நீ நேரில் பார்த்துட்டு உன்னோட முடிவை சொல்லு” என்றார் அவரும் சற்று அழுத்தமாக!

“ச்சு போங்க மா. என்னை புரிஞ்சுக்கவே புரிஞ்சுக்காதீங்க. எனக்குக் கண்டிப்பா ஒத்து வராது மா. வீணா கட்டாயப்படுத்தாதீங்க. பிளீஸ்” என்று விஜயகுமார் சலிப்பாகக் கூற, சாந்தி இப்படி உறுதியாக இருப்பவனை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று புரியாமல் தவித்தார்.

அதேசமயம் இந்த பேச்சுவார்த்தைகளைக் கேட்ட மலர்விழிக்கும் கலக்கமாக இருந்தது. அவனது எதிர்பார்ப்புகள் அவளுக்குச் சற்றும் பொருந்தாததாக இருந்தது.

இதற்கும் சாந்தி அத்தை குறிப்பிட்ட பெண்ணாவது தொழில் நகரத்தில் வேலை செய்யுமளவு இருப்பவள், இவளோ அவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன பெண்ணைக் காட்டிலும் பட்டிக்காடு! நிதர்சனம் உரைக்க மனதிற்குள் நட்டுவைத்த பூந்தோட்டம் முழுவதையும், யாரோ மலர்கள் அலரும் முன்பே பிடுங்கி எறியப்பட்ட வலியும், வேதனையும் கொண்டாள்.

சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று வந்தவள், அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பி விட்டாள். மனம் ஊமையாக அழுதது.

விஜயகுமார் என்றால் ஏன் பிடிக்கும் என்ற காரண காரியங்கள் எல்லாம் இல்லாமல் மிகவும் பிடிக்கும். அதுவும் இவள் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிலிருந்த இந்த சில மாதங்களில், ‘பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சதா? அடுத்து கல்யாணம் தான்’ என்பது போன்ற பேச்சுக்களால் தோன்றியது தான் இந்த எண்ணம். அவன்மீது அப்படி ஒரு ஈர்ப்பு, பிடிப்பு. இப்பொழுது யோசித்தால், எங்குத் தவறினோம் என்று புரியாமல் தலை வலித்தது.

‘நம்மிடம் நன்றாகப் பேசுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டு இப்பொழுது அவதிப்படக்கூடாதோ?’ என்று சிந்தனையில் இரவுகளைக் கண்ணீருடன் கழித்தாள்.

என்ன யோசித்து என்ன பயன்? காலங்கடந்த ஞானோதயம்! சின்னக்குழந்தைகள் காக்கையையும், குருவியையும் கண்டால், குதூகலித்து, அவற்றைப்பிடிக்க ஆர்வம் காட்டுமே! கையில் கிடைக்காது என்ற விவரம் தெரியாத அந்த சிறுப்பிள்ளைகளுக்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம்?

வாழ்க்கையின் மிக மோசமான அடி என்று தோன்றியது அந்த இளம் பெண்ணுக்கு! பக்குவம் இல்லாத வயது, காதல் தோல்வியைப் பூதாகரமாகக் காட்டும்! அது ஒருதலைக்காதல் என்றபோதும், சிலமாத கால காதல் என்றபோதும்!

அன்னை ராதாவின் இழப்பில் எப்படி துவண்டாளோ அதேபோல மீண்டும் துவண்டு போயிருந்தாள்.

மாமா வீட்டிற்குப் பொலிவோடு கிளம்பிச் சென்றவள், விஜயகுமாரின் திருமண பேச்சுவார்த்தையைப் பற்றித் தெரிந்த பிறகு சோர்ந்து போனதை இளமாறன் கவனித்திருந்தான்.

‘அக்காவுக்கு மாமா என்றால் இஷ்டமா?’ என்பதே அவனுக்குத் திகைப்பாக இருக்க, அக்காவினது ஒருதலை நேசம் என்று புரியவும் மிகவும் வேதனையாக இருந்தது. விஜயகுமாருக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் கண்டிப்பாக வேறு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை! ஆக, அவர்கள் இவளை கணக்கில் கூட எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று புரிய அக்காவின் நிலையை எண்ணி வெகுவாக தளர்ந்து போனான்.

அன்று மாமா வீட்டிற்குப் போய் வந்ததிலிருந்து நிராசையான தோற்றத்தோடு இருப்பவளை எப்படித் தேற்ற என்றே அவனுக்குப் புரியவில்லை. அவளாகச் சரியாகிறாளா என்று சில நாட்கள் விட்டுப் பிடித்தான். பலன் பூஜ்ஜியம் தான். அவளது கலக்கமும், வாட்டமும் இளையவனை வெகுவாக பாதித்தது.

முத்துவேலன் கூட கண்டுகொண்டாரோ என்னவோ, இளமாறனிடம், “மலர் ஏன் தம்பி இப்படி இருக்கா? குத்தகை மாத்தி விட்டதிலிருந்து அவ முகமே சரியில்லையே. எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க, சட்டென்று தோன்றிய யோசனையில், “அப்பா… அக்காவுக்கு விவசாயம் பார்க்கணுமாம். அவங்களோட ஆர்வம் எல்லாம் விவசாயத்து மேல தான். அதான் மாமா நிலத்தை நாம கை மாத்தி விட்டது பிடிக்கலை போலப்பா” என்றான் திரித்து.

அதில் யோசனையானவர், “இப்ப நம்ம இடத்துல என்கூட வந்து விவசாயம் தானே பார்க்கிறா?” என்று கேட்டார்.

“அது அப்பா அக்காவே மேற்பார்வை பார்த்து விவசாயம் பார்க்கணும்ன்னு ஆசைப்படறாங்க பா”

“என்ன தம்பி சின்ன புள்ளைங்க மாதிரி… சரி அதுக்கெதுக்கு மூஞ்சியைத் தூக்கி வெச்சுட்டு சுத்தறா? என்கிட்டயே நேரடியா கேட்க வேண்டியது தான?” என்றார் முத்துவேலன் சலிப்புடன்.

என்ன சொல்லிச் சமாளிக்க என்று புரியாமல் சில நொடிகள் விழித்தவன் பிறகு சுதாரித்து, “அக்கா சங்கடப்படறா போலப்பா. ஒன்னு செய்யுங்க, நீங்களா தர மாதிரி இங்க நீ விவசாயம் பாருன்னு கொஞ்சம் பிரிச்சு கொடுங்களேன். அவளுக்கு அது ரொம்ப சந்தோசமா இருக்கும்” என்று தன்மையாக எடுத்துச் சொல்ல,

“என்னவோ போ. இதுக்காக இப்படி இருக்கான்னு என்னால இன்னமும் ஒத்துக்க முடியலை. ஒருவேளை அக்காவுக்கு உங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சோ என்னவோ? காலகாலத்துல அவளுக்கு ஒரு காரியமும் கைகூடி வர மாட்டீங்குது. ராகு, கேது தோஷம் இருக்குன்னு ஜோசியரை பார்த்தப்ப சொன்னாரே… அதுக்கு பரிகாரமா கொடுமுடி கோயிலுக்கும் போயிட்டு வர சொன்னாரு. நாம அங்க ஒருமுறை போயிட்டு வந்திடுவோம். உங்க அம்மா இருந்திருந்தா கடவுள் காரியத்தைத் தள்ளிப் போடவே விட்டிருக்க மாட்டா. நான்தான் காலம் கடத்திட்டு இருக்கேன். உனக்கு எப்போ லீவிருக்கும்ன்னு பார்த்து சொல்லு, நாம புறப்படலாம்” என்றார்.

அவருக்கு ஒப்புதலாய் இளமாறனும் தலையசைத்தான். ‘இந்த அக்கா கொஞ்சம் தேறி வந்தா பரவாயில்லை’ என்று அவன் மனம் ஏங்கியது.

அதற்கடுத்து வந்த விடுமுறையில் மூவரும் கோயிலுக்குச் சென்று வந்தனர். சென்று வந்த இரண்டொரு நாளில், மலர்விழியிடம் முத்துவேலன், “நம்ம தோட்டத்துல கிழக்கால இருக்கும் ரெண்டு ஏக்கரா நிலமும் கடலை அறுவடை எடுத்தாச்சு மா. அப்பாவுக்கு முன்ன மாதிரி நிறைய பார்க்க முடியலைம்மா. அந்த இடத்துல என்ன போடலாம்? இல்லை நீயே எதுவும் கண்காணிச்சு பார்த்துக்கிறியா?” என்று கேட்டார்.

தன் சுழலோடு ஒன்றி இருந்தவள், இந்த பேச்சில் தான் சற்று கவனம் களைந்தாள். “உங்க இஷ்டம் பா. என்ன போடணும் சொல்லுங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

அவரோ, “அதெல்லாம் வேலைக்காகாது மா. என்ன போடணும், என்ன பண்ணனும்ன்னு எல்லாமே நீயே முடிவு பண்ணிக்க. நான் சொல்லறது, பிறகு ஒவ்வொண்ணா மேற்பார்வை பார்க்கிறதெல்லாம் எனக்கு சரி வராது” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

மலர்விழிக்கு அப்பொழுது தான் என்னவோ உறுத்தியது. தந்தை பொதுவாக இப்படி முழுவதுமாக தன் பொறுப்பில் எல்லாம் விட மாட்டாரே என்பது போல! “என்னப்பா எப்பவும் என் பொறுப்புல விட மாட்டீங்க. இந்த முறை என்னாச்சு?” என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.

“எப்பவும் மாமன் நிலத்தைக் கூடத்தான் நான் பார்த்துப்பேன். இப்ப கதிர் தம்பிக்கு குத்தகை விடலையா? அதுமாதிரி தான் மா. நான் ஆரோக்கியமா இருந்தா பார்க்கலாம் தான்! இனி வயசாயிடுச்சு. அதுக்கு தக்க வேலைகளை குறைச்சுக்கிட்டு ஓய்வெடுக்கணும். எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சு, எனக்கு எதுவும்ன்னா, எனக்கப்பறம் என் பிள்ளைங்களை யாரு பார்த்துப்பா” என்று முத்துவேலன் சொல்ல,

“என்னப்பா பேச்சு இது?” என்று கண்கள் நீர் திரையிட சுணங்கினாள் மகள்.

“என்னம்மா நீ? ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு போயி கண்ணு கலங்கற… வயசாயிடுச்சு வேலை செய்ய முடியலைன்னு சொன்னேன். மத்தபடி எனக்கென்ன குறை நீயே சொல்லு?” என்று சமாதானம் பேசினார்.

“இனி இப்படி பேசாதீங்கப்பா” என்று பேச்சை முடித்து வைத்தாள் மலர்விழி.

அவள் தன் துயரில், கலக்கத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று தான், அவள் ஆர்வமாகப் பேசிய விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று இளமாறன் முடிவெடுத்தான். அவன் எண்ணியது போலவே மீள்வாளோ இல்லை மீண்டும் எதிலும் சறுக்குவாளோ என்று காலம் தான் தீர்மானிக்கும்!

Advertisement