Advertisement

உன் சாயல் கொண்டேனே – 01

மெல்லிய மழைத்தூறலும், இளம்வெயிலுமான வேளை அது! மழையும், வெயிலும் ஒருசேர வருவது அபூர்வம் தான்! மலர்விழிக்கு இதுபோல இயற்கையின் அழகை ரசித்துப் பார்க்கும் வேளையிலெல்லாம் அழையா விருந்தாளியாய் அவளின் மாமன் மகன் விஜயகுமாரின் நினைவு வந்துவிடும்.

அவனை எண்ணிக் கொண்டாலே உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு! இதழ்கள் வேறு பூரிப்பில் விரிந்து நிற்க, தாமரை பதக்கம் வைத்த நீளக் கழுத்து சங்கிலி அவளிடம் படாத பாடு படும்.

இந்த மாமா ஊர்ப்பக்கம் வந்து இரண்டு மாதங்கள் கிட்ட ஆகப் போகிறது. வந்துவிட்டுப் போனால் தான் என்ன?

சலிப்பினூடே கைவேலைகளில் மும்மரமானவளுக்கு வேலை சற்று அதிகம் தான். வீடு, தோட்டம் என்று! அவளுடைய தாய் ராதா தவறியதிலிருந்து வீட்டின் பொறுப்பு இவள் வசம்! தந்தை முத்துவேலனுக்குச் சாப்பாடு வடித்து வைத்தவள், தனக்கும், தம்பி இளமாறனுக்கும் முட்டை பணியாரமும், பூண்டு சட்டினியும் செய்ய ஆயுத்தமானாள்.

சட்டினியை மிக்ஸியில் அரைத்து முடித்த நேரம், இளமாறன் வந்திருந்தான். “தினமும் இப்படி லேட்டா வருவியா?” என்றாள் மூத்தவள் முறைப்புடனேயே!

இளமாறன் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வருகிறான். சற்று நட்பு வட்டம் அதிகம். அதற்காக வெட்டியாய் ஊரைச் சுற்றுவான் என்றில்லை. சற்று நண்பர்களோடு நேரம் செலவழிக்கப் பிரியப்படுவான்.

“இல்லைக்கா அருண் வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க அண்ணன் பெங்களூருலிருந்து வந்திருக்காரு. அவரோட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலைக்கா. எவ்வளவு உலகறிவு தெரியுமா அவருக்கு!  என்னையெல்லாம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு என்ன செய்வன்னு கேட்டா முழிப்பேன்.அவருகிட்ட அத்தனை தெளிவு!” என்று சிலாகிப்பாக கூறியவன், விட்டத்தில் எதையோ ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மாய உலகில் சஞ்சரித்தவனை ஒரு தினுசாக பார்த்தவள், “கை, கால் கழுவிட்டு வந்து சாப்பிட உட்காரு டா. மதியம் சாப்பிட்டது. கனா கண்டுட்டு இருக்கான்” என விரட்டினாள்.

துண்டோடு கொல்லைக்குப் போனவன், சிறிது நேரத்தில் முகம் துடைத்தவாறு உள்ளே வந்தான். “அப்பா எங்க கா?”

“ஏதோ பூசாரி வீடு வரை போகணும் சொல்லிட்டிருந்தாரு டா”

“சரி சரிக்கா.. முட்டை பணியாரம் போலவே..  சீக்கிரம் கொடு…” என்றவன் உண்டபடியே விட்ட கதையைத் தொடர்ந்தான்.

“ஏன் மலரக்கா உன்கிட்ட கேட்டா நீ என்ன சொல்லுவ? அஞ்சு வருஷம் கழிச்சு நீ என்ன செஞ்சிட்டு இருப்ப?”

என்னவோ சட்டென்று விஜயகுமாருக்கு மனைவியாய், தங்களுக்குப் பிறந்த பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருப்பேன் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை மங்கைக்கு.

மாறாக, கண்களில் கனவுகள் நிறைய, “முல்லைப்பூ, சாமந்திப்பூ, காய்கறிங்க தோட்டம் எல்லாம் போடணும் இளா. அப்பாகிட்ட கேட்டு ஒரு ரெண்டு ஏக்கர் ஆச்சும் தாங்கப்பா நான் தனியா விவசாயம் பார்க்கிறேன்னு சொல்லி வாங்கி ஏதாவது விளைச்சு என் உழைப்பை நிரூபிக்கணும்” என்றாள்.

அவளையே ஆர்வமாகப் பார்த்த இளமாறன், “உனக்குள்ள இப்படி எல்லாம் ஆசை இருக்கா. செமக்கா” என்று விழி விரியச் சொன்னவன், சூப்பர் எனக் கையில் சைகை செய்தான்.

“எங்கே நீயும் விவாசயம் படிடான்னா கேட்டா தானே! நம்ம பூர்வீக நிலம், நம்ம பூர்வீக தொழில்! எவ்வளவு சாதிக்கலாம் தெரியுமா?” என்றாள் ஆற்றாமையோடு.

“ம்ப்ச் என்னக்கா என்னைப்பத்தி யோசிக்கவே மாட்டீங்கிற. இதுவே உன்கிட்ட பாட்டனி படிக்காதன்னு சொன்னா நீ கேட்டிருப்பியா? கண்டிப்பா மாட்ட. ஏன்னா உனக்கு விவசாயம் மேல பிடிப்பு. அதே மாதிரி தான் எனக்கும் இந்த வண்டி, ஸ்பேர் பார்ட்ஸ் இதெல்லாம் மேல பிடிப்பு. மெக் என்னோட கனவுக்கா” என்றான் அவளையும் விடவும் ஆற்றாமையான குரலில்.

அவன் கோணமும் சரிதானே என்று தோன்ற, “ம்ப்ச் ஆமாடா நான் அப்படி யோசிக்கலை பாரேன். சாரி” என உடனடியாக மலர்விழி இறங்கி வந்தாள்.

“அச்சோ விடுக்கா இதுக்கெல்லாம் சாரி கேட்பாங்களா” என்றவன், “ம்ம் அருணோட அண்ணா பத்தி சொன்னேன் இல்லை. அவரு செம மண்டைக்கா. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் தான் முடிச்சாரு. முடிச்சதும் ஜாப் வாங்கிட்டாரு. இப்ப கைநிறைய சம்பளம். ஆனாலும் அவரும் உன்னை மாதிரி தான் விவசாயம் தான் பார்ப்பாராமா” என்று கண்ணை விரித்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“விவசாயம் பார்க்கிறதுக்கு கம்ப்யூட்டர் எதுக்கு படிச்சாராம்?” எள்ளல் வழிந்தது தமக்கையின் கேள்வியில்.

தம்பியோ அவள் எள்ளல் புரிந்தும் கண்டுகொள்ளாமல், விளக்கம் தரும் பாணியில். “அருணோட அப்பாவுக்கு அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் சமயம், திடீர்ன்னு உடம்பு முடியலையாம் கா. அப்ப அவங்களுக்கு இருந்த நிலத்தை எல்லாம் அடமானம் வெச்சு தான் மருத்துவம் பார்த்தாங்க போல. செலவு ரொம்ப இழுத்துடுச்சாம். அப்பறம் வேற வழியில்லாம எல்லாத்தையும் வித்துட்டாங்களாம். ஆனா அவ்வளவு போராடியும் அவங்க அப்பா இறந்துட்டாங்களாம் கா” என்றவனுக்கு தோழன் கடந்து வந்த நிலையை எண்ணி கண்கள் தழும்பிவிட்டது.

கேட்ட மலர்விழிக்குமே மனம் ரணமானது. பாரம்பரிய சொத்தையும், குடும்பத் தலைவனையும் ஒருசேர இழப்பது என்பது எவ்வளவு பெரிய வலி!

இளையவனே தொடர்ந்து, “அவருக்கு முதல்ல அக்ரி படிக்க தான் ஆசையாமாக்கா. ஆனா படிச்சு விவசாயம் பார்க்க நிலம் எங்கே? குடும்பத்துக்கு மூத்த மகனா நாம தான பொறுப்பு அப்படின்னு நினைச்சதால… இந்த படிப்பு படிச்சு… சீக்கிரம் வேலை பார்த்து இப்ப குடும்பத்தை கரையேத்தி, கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து நிலம் வாங்கி போட்டுட்டு இருக்காருக்கா. சீக்கிரமே விவசாயம் செய்ய தொடங்கிடுவாங்களாம்”

தானே சாதிக்கப்போவது போன்ற பூரிப்பில் தம்பி பேச, “எல்லாம் அவங்க எண்ணம் போல வரும் இளா” என்றாள் மலர்விழி நம்பிக்கை நிறைந்த குரலில்.

“அக்கா அவருக்கு விவசாயம் பார்க்க நிறைய நிலம் வேணுமாம். அவரு வாங்கினதோட இன்னும் கொஞ்சம் குத்தகைக்கு இருந்தா நல்லா இருக்குமாம். என்கிட்ட உதவி கேட்டாருக்கா. நான் அப்பாகிட்ட கேட்டு மாணிக்கம் மாமா இடத்தை அவருகிட்ட குத்தகைக்குத் தர சொல்லலாமான்னு யோசிக்கிறேன் கா”

இவர்களின் தாய் ராதாவிற்கு பொண்ணுமணி என்ற தமையனும், ராஜேந்திரன், மாணிக்கம் என்ற பெரியப்பா மக்களும் இருக்கின்றனர். பெரியப்பா வீட்டினர் சென்னையில் குடிபெயர்ந்திருக்க அவர்களது பூர்வீக நிலத்தினை பொண்ணுமணியும், முத்துவேலனும் குத்தகைக்கு எடுத்திருந்தனர். கிளைத் தகவலாக மாணிக்கம், விஜயகுமாரின் தந்தை.

தம்பி சொன்னதைக் கேட்டதும், “என்னது மாமா நிலத்தைக் குத்தகை மாத்தி விடறியா? அதை அப்பா கவனிக்கறாங்க” என்றாள் மலர்விழி மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி சினமாக.

“அப்பாவுக்கு இப்ப மொத்தமா கவனிக்க முடியலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க தானக்கா”

“அதான் நானும் கூட இருக்கேனில்லை. நானும் அப்பாவுக்கு உதவியா இருப்பேன்” என வீராப்பாகச் சொன்ன தமக்கைக்கு எப்படிப் புரிய வைப்பது எனத் தெரியாமல் இளமாறன் விழித்தான்.

பின்னே படிப்பை முடித்த பெண்ணுக்கு அடுத்த கட்டம் திருமணம் தானே! எங்கு மாப்பிள்ளை அமைந்து, எங்கு வசிக்கப் போகிறாளோ? இந்த அழகில் நிலத்தைப் பார்த்துக் கொள்வேன் என்று சொல்பவளை என்னவென்று சொல்வது எனப் புரியாமல் குழம்பினான்.

அதை அவளிடம் நேரடியாகச் சொல்லவும் முடியாமல், “அக்கா, அப்பா பெரியவங்க. அவருகிட்ட சொல்லுவோம். நல்ல யோசனையா தருவாரு” என்று மட்டும் தணிவான குரலில் சொல்லி அந்த வாக்குவாதத்தை ஒத்திப் போட்டான்.

“ம்ம் ம்ம்” என்று மண்டையை உருட்டிய மலர்விழியும் பனியாரத் தட்டோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொண்டாள்.

தம்பி சொல்வது போல அப்பாவால் இரண்டு நிலங்களையும் கவனிக்க முடியவில்லை தான். அதற்காக விஜி மாமாவின் நிலத்தைப் போய் குத்தகைக்கு விடுவதா என்று மனதிற்குள் யோசனையாக இருந்தது.

சிறிது நேரத்தில் முத்துவேலன் வந்துவிட அவர் உணவுண்டு முடிக்கும்வரை மக்கள் இருவரும் பொறுமை காத்தனர். உண்டு முடித்ததும் இளமாறன் மெல்ல பேச்செடுக்க,

“அப்படியா ரொம்ப வசதியா போச்சு. நிலத்தைக் குத்தகைக்கு விடறது தொடர்பா தான் பூசாரியை போயி பார்த்துட்டு வரேன். என்னாலையும் முன்ன போல ரெண்டு நிலத்துக்கும் அலைய முடியலை. பொண்ணுமணி மாமனும் சிரமமா இருக்குங்கறான். சரி நீ சொன்னவங்க யாரு என்னன்னு விவரம் சொல்லு தம்பி. நிலத்தை நல்லா கவனிச்சிக்கணும் இல்லையா? தீர விசாரிச்சிட்டு சொல்லலாம்” என்றார்.

விசாரிக்கிறேன் என்றதும் மலர்விழிக்கு சிரிப்பு பொங்கியது. ‘ஆமாம் எங்க அப்பன் பொண்ணைக் கட்டிக் கொடுக்க போகுது… தீர விசாரிக்கிறதுக்கு’ என்றவாறு எண்ணம் சென்றதால் எழுந்த சிரிப்பு அவளுக்கு.

‘என்னக்கா?’ என்று இளமாறன் ரகசியமாகச் சைகை செய்து விசாரிக்க, ஒன்றுமில்லை என்று சைகையிலேயே பதிலளித்துச் சிரித்தாலும் அவளின் கண்களில் வழிந்தோடிய குறும்பு எதுவோ இருப்பதை இளையவனுக்குக் காட்டியது.

முத்துவேலன் சொன்னதுபோல இளமாறன் சொன்ன குடும்பத்தைப் பற்றியும், குத்தகைக்கு எடுக்க விரும்பும் பையனைப் பற்றியும் விசாரிக்க, விசாரித்த எல்லாரும் நல்ல விதமாகவே சொன்னார்கள்.

அதில் திருப்தி அடைந்தவர், சென்னையில் வசிக்கும் மாணிக்கத்திடம் விவரங்களைப் பகிர அவரும் ஒப்புதல் தந்தார். கூடவே மற்ற விஷயங்களையும் பேசி, முடிவு செய்துவிட்டு அழைத்தால், குத்தகை ஒப்பந்தத்தைப் போடுவதற்காக தானும், மகனும் கிராமத்திற்கு வருவதாகவும் மாணிக்கம் சொன்னார்.

விவரங்கள் தெரிந்து சோர்ந்து போனாள் மலர்விழி.

“என்னக்கா? உனக்குக் குத்தகைக்கு விடறது பிடிக்கலையா?”

“இல்லைடா நீ சொன்னப்ப அப்பா ஒத்துக்க மாட்டாருன்னு நினைச்சேன். ஒத்துக்கிட்டாரு. மாமாவாவது வேணாம்ன்னு சொல்லுவாங்கன்னு பார்த்தா அவரும் ஒத்துகிறாரு” என்றாள் மெலிந்த குரலில்.

“அப்பாவுக்கு முடியலைக்கா. அந்த நிலமும் நம்ம நிலத்து பக்கத்துல இருந்தா கூட பரவாயில்லை. பத்து கிலோமீட்டர் தாண்டி இருக்கு”

“ஹ்ம்ம் புரியுது தான்டா. ஆனாலும், குத்தகைக்கு ஆள் மாத்தி விடறது… ம்ப்ச் விடு நீ சொன்ன மாதிரி அப்பா பெரியவரு. நாலும் யோசிச்சு தான் முடிவெடுத்திருப்பாரு” என்றவளுக்கு விஜயகுமார் வருகிறான் என்று தெரிந்திருந்தும் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் எல்லாம் பறக்கவில்லை. மாறாக நிலத்தைக் குத்தகை மாற்றி விடுகிறோமோ என்கிற சஞ்சலம் மட்டுமே மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

“விடுக்கா நம்ம நிலத்தை நல்லா பார்த்துப்பாங்க. எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு” என்று இளமாறன் கூற,

சஞ்சலங்கள் மறந்து புன்னகைத்தாள் மலர்விழி. அன்று தந்தை மாப்பிள்ளை வீடு போலத் தீர விசாரிக்கிறேன் என்றார், இன்று தம்பியோ பெண்ணை கட்டிக் கொடுப்பது போல, நல்லா பார்த்துப்பாங்க என்று சான்றிதழ் வழங்குகிறான் என்று நினைக்க நினைக்க பொங்கிப் பொங்கிச் சிரித்தாள்.

“அக்கா எதுக்கு இப்படிச் சிரிக்கிற?” சோக முகத்தோடு வளைய வந்தவள் இப்படிச் சிரிக்கிறாளே என்று ஆச்சரியமாக இளமாறன் கேட்க,

மலர்விழியும் மனதில் எழுந்த எண்ணத்தை மறவாமல் தெரிவித்துவிட்டு, மீண்டும் அதை நினைத்து நினைத்துப் பொங்கிச் சிரித்தாள்.

இளமாறன் கூட சேர்ந்து நகைக்காததால் மலர்விழி அவனை ஆராய்ச்சியாய் பார்க்க, அவனோ கடை இதழில் குறும்பு புன்னகையோடு, “இந்த வீட்டுல இருக்க பொண்ணு நீ மட்டும் தான்கா” என்றான் விழிகளும் சிரிக்க.

சிரிப்பு மறந்து இதழை கோணலாகச் சுழித்தவள், தம்பியின் தலையில் கொட்டு வைத்து, “இத்தனை பேச்சு ஆகாது பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டுப் போனாள்.

“ஸ்ஸ்ஸ்…” என்றபடி தலையைத் தேய்த்துக் கொண்டவன், “இவ மனசுல நினைச்சதை நான் முழுசா சொன்னேன். அதுக்கு போயி அடிச்சிட்டு போறா பாரேன்” என்று வாய்விட்டு புலம்பினான் இளையவன்.

Advertisement