5

சற்றே முரண்பாடு 
கொண்டது தான் 
உன் விழிகள்.., 

உன் வாய் வார்த்தை 
ஒன்று சொல்ல.., 

உன் விழி வார்த்தை 
மற்றொன்றை சொல்கிறது 
எதைத்தான் நம்புவது..

நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிக் கொண்டு இருந்த குடும்பத்தினர் முன்னிலையில் அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தான் நந்தன்.,

வீட்டிற்கு வந்த உறவினர்கள் எல்லாம் அங்கே இருக்க பாட்டி முறையில் உள்ள வயதானவர் அவனிடம்.,

“எப்பா இன்னைக்கும்  உனக்கு வேலை உண்டா”., என்று கேட்டார்.

“நான் இன்னைக்கு ஒரு நாளைக்கு கண்டிப்பா போகனும் பாட்டி.., அப்புறம் ஒரு வாரம் லீவு போட்டு இருக்கேன்”., என்று சொன்னான்.

“ஊருல எல்லாம் கல்யாணம் ஆனவுக எங்கேயோ ஹனிமூன் போறாவளே  நீ போகலையா பா”..,  என்று பாட்டி கேட்கவும்., சுற்றி இருந்தவர்கள் வாய்மூடி சிரித்தனர்.

இவனோ பாட்டியிடம் “உங்களுக்கும் தாத்தாக்கும் டிக்கெட் போட்டுதேன்..,  போயிட்டு வாங்க பாட்டி”., என்று சொன்னான்.,

“அந்த ஹனிமூன் ஊரு எம்புட்டு தூரம் இருக்கும்”., என்று பாட்டி கேட்க..,

“போகும் போது தெரியும் பாட்டி”., என்றான்.

அதற்குள் பக்கத்திலிருந்த நந்தனின் அம்மாவும் “படிக்கிற புள்ள இல்ல பெரியம்மா.., அதனால தான் எங்கேயும் போகலை னு சொல்லிட்டான்., அந்த பிள்ளை படிப்பு முடிஞ்சு தான் போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பனும்”..,  என்று சொன்னார்.

“அது தான் தேவகி., அந்த ஊரு எங்க இருக்கு எல்லோரும் ஏன் அங்கேயே போறாங்க”.., என்று கேட்டார் பாட்டி.

பாட்டியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் பேச்சை மாற்றிய படி அனைவரும் கிளம்ப தொடங்கினர்.

“கரெக்டா நாங்க மண்டபத்துக்கு வர்ற நேரத்துக்கு நீயும் மண்டபம் வந்துரு.., வேலை வேலை என்று ஆபீசில் இருக்காதே” என்று சொன்னார்.

“சீக்கிரம் வந்துருவேன் ம்மா.,  நீங்க சீக்கிரம் வாங்க”., என்று சொல்லி கிளம்பினான்.

“டேய் சீக்கிரம் நாங்க வரணுமா.,  பொண்ணு வரணுமா”., என்று ஷ்யாம் கேட்க..,

“தெரியாம சொல்லிட்டேன் விட்டுரு”., என்று கையெடுத்து கும்பிட்டவன் “நீங்க மெதுவாகவே வந்து சேருங்க அவசரமா எல்லாம் வரவேண்டாம்., பத்திரமா போயிட்டு வாங்க”..,  என்று சொல்லிவிட்டு கிளம்பினான்……

திண்டுக்கல்லில் நிவேதாவின் வீட்டில் சொந்த பந்தங்களும்., நந்தனின் குடும்பத்தினரும் இருக்க வீடு கலைக் கட்டியிருந்தது.,

திருமண வீட்டிற்கு உண்டான கலகலப்பும்., மகிழ்ச்சியும் நிறைந்த நல்ல நேரத்தில் நிச்சயதார்த்த வேலைகள் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது..,

நிச்சயப் பத்திரிகை  வாசித்து முறை செய்யும் போது “பெண்ணுக்கு அண்ணன் வரச்சொல்லுங்கள்” என்று ஊர் பெரியவர் அழைத்தார்.

தாய் வழியிலும் சரி., தந்தை வழியிலும் சரி., நிவேதா தான் மூத்த பிள்ளை எனவே அவளுக்கு பிறகான சிறு சிறு நண்டும் சிண்டுமாக தம்பி மார்களும் தங்கைமார்களும் இருக்க.., அண்ணன் என்ற உறவில் ஒன்னு விட்ட., ரெண்டு விட்ட உறவு முறையில் தேடத் தொடங்கினர்.,

அதற்குள் ஷ்யாம் வந்து “நான் செய்யட்டுமா”.,  என்று கேட்டான்…

“நீங்க யாரு தம்பி எப்படி முறையாகுது” என்று அந்த பெரியவர் கேட்டார்.

அவனுடைய உறவுமுறையை சொல்ல “ஆமாம்மா நீங்க அண்ணன் முறை தான் நீங்க செய்யுங்க”.,  என்று சொல்ல ஒரு அண்ணன் செய்ய வேண்டிய அத்தனை முறையும் ஷியாம் செய்தான்.,

ஷியாமின் அம்மாவிற்கும் சரி.,  நிவேதாவின் அம்மாவிற்கும் சரி.,  அத்தனை திருப்தி, நந்தனின் வீட்டினரும் மிகுந்த சந்தோஷமே பட்டனர்…

விசேஷம் சிறப்பாக முடிந்து அனைவரும் உணவு முடித்த பின்பு சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்க சரி இப்ப பெண்ணை  அழைத்துக் கொண்டு அனைவருமே கிளம்பலாம் என பெண் வீட்டாரும்., மாப்பிள்ளை வீட்டாரும் பேசிக்கொண்டிருந்தனர்.,

நிவேதாவோ அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.,  நீ ஏண்டி இந்த நேரத்தில் என் சேலை முந்தானையை பிடிச்சிட்டு சுத்துற.,  உன்ன பெத்ததுக்கு நான் தான் முந்தானையை தூக்கி தலையில் போட்டுட்டு சுத்தணும்”., என்று சொன்னாள்.

“அம்மா.., ப்ளீஸ் அம்மா”.., எனவும்.

” தயவு செய்து இந்த ப்ளீஸ் போடாத..,  நீ ப்ளீஸ் போட்டாலும் ஒரு காரியமும் நடக்கப் போறது கிடையாது.., அப்புறம் எதுக்கு இப்படி போட்டுட்டு சுத்துற”., என்றார்.

“அம்மா இங்க இருந்து அங்க வர்ற வரைக்கும் சுடிதார் போட்டுக்கிறேன் ம்மா.,  சாரியோட  என்னால ப்ரீயா பீல் பண்ண முடியாது.., டிராவல் பண்ணும் போதும் சாரியோட இருந்தா கஷ்டமா இருக்கும்.,  இதுவரைக்கும் சாரி கட்டிட்டு  டிராவல் பண்ணி பழக்கம் இல்ல., அது தான்  ப்ளீஸ்”.,  என்று கேட்டாள்.

“பேசாம இருடி மாப்பிள்ளை வீட்டார்கள் முன்னாடி.., நம்ம சொந்தகாரங்க முன்னாடி மானத்தை வாங்கதே”.,  என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

அதற்குள் அங்கு வந்த நந்தனின் அம்மா.,  “என்ன விஷயம்”., என்று கேட்டார்.

நிவேதாவும் அம்மாவின் சேலையை விட்டுவிட்டு அத்தையின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு “அத்தை நீங்களாவது சொல்லுங்களேன்., எனக்கு சாரி கட்டிட்டு டிராவல் பண்ணி பழக்கம் இல்ல.., இங்க இருந்து அங்க வர்ற வரைக்கும் இப்படி  இருக்க சொன்னா ரொம்ப கஷ்டம்.., சுடிதார் போட்டுக்கிறேனே”.,  என்று சொல்லவும்.

“இதுக்குத்தானா.,  போட்டுக்கோ., நீ சுடிதாரே  போட்டுக்கோ., இதுல என்ன இருக்கு”., என்று சொல்லி மறுத்து பேச தொடங்கிய பெரியவர்களின் வாயையும் அடைத்து விட்டார்.

“அவ சின்ன புள்ள பட்டு சேலைய கட்டிட்டு இந்த வெயிலுக்கு  நமக்கே கசகசன்னு இருக்கு..,  சுடிதார் போட்டுட்டு வரட்டுமே., இங்க வந்து எல்லாரும் சேலையோட பார்த்தாச்சு இல்ல., மண்டபத்துக்கு போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு.., அதுக்கப்புறமா ஆட்கள் எல்லாம் வர ஆரம்பிக்கும் போது.,  சேலைய கட்டிக்கிட்டா போச்சு.., இப்ப எதுக்கு பிள்ளையைப் போட்டு பாடா படுத்தனும்.,  நீ போய் மாத்திக்கோ” என்று சொன்ன உடன். சந்தோஷமாக அறைக்கு சென்றாள்.

அவள் தலையிலிருந்த பூவை எடுத்து தனியே வைத்தாள். “பூவல்லாம் எதுக்குடி எடுக்கிற”.,  என்று அம்மா கேட்கவும்.,

“அம்மா அங்க போய் வச்சிக்கிறேன்., இதெல்லாம் கவர்ல பத்திரப் படுத்துங்க”., என்று சொன்னாள்.

அதற்குள் அங்கு வந்த ஸ்வேதா கவரில் எடுத்து பூவை வைக்க.., டிரஸ் கஃபோர்ட் ஐ திறந்து சுடிதார் எடுக்க செல்லும் போது.,

ஸ்வேதா “நான் செலக்ட் பண்ணுறேன்”  னு சொல்லி அழகான லாவண்டர் நிற சுடிதாரை எடுத்து நிவேதா கையில் கொடுத்து “இதை போட்டுட்டு வாங்க., அழகா இருக்கும்” என்று சொன்னாள்.

நிவேதாவை முதலில் ஸ்வேதா அண்ணி என்று சொல்ல., நிவேதா தான் “அண்ணி ன்னு கூப்பிடக்கூடாது., நான் உங்களை விட சின்ன பொண்ணு பேரு சொல்லி கூப்பிடுங்க”., என்று சொல்லி மிரட்டி வைத்திருந்தாள்…

அதன்பிறகு உடைமாற்றி கிளம்பியதும்,  சாதாரணமாக இருந்தால் எல்லோரும் சிரித்துக் கொண்டனர்.,

பெண் வீட்டினரும் சரி மாப்பிள்ளை வீட்டினரும் சரி.,

“அது சரி., நீ இப்படி போய்  இறங்கினா.,  யாரு பொண்ணு தேட போறாங்க..,  இப்படி சாதாரணமா எங்களில் ஒருத்தி மாதிரி வந்த எப்படி., கல்யாண பொண்ணு தனியா தெரிய வேண்டாமா”..,  என்றனர்.

“இதிலென்ன இருக்கு” என்று சொல்லி கேட்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.,

நந்தனின் நண்பர்களின் மனைவிகள் அனைவரும் வந்திருக்க நண்பர்கள் யாவரும் மாலை வந்து சேர்ந்து கொள்வதாக சொல்லியிருந்தனர்.,

நந்தன் வரவில்லை என்றவுடன் மற்றவர்களும் வர யோசித்து வராமல் இருந்தனர்..

அப்போதும் ஷியாம்  அழைக்க  தான் செய்தான்., “டேய் நான் இருக்கேன் இல்லடா வாங்க”., என்று கூப்பிட்டான்.

“நந்தன் இருந்தா னா., அவனை கலாய்ச்சு நேரம் போகும்., நீயே  மாப்பிள்ளை வீட்டு ஆளா  பிஸியா இருப்ப.,    நடுவுல வேற நாங்க வந்து தொந்தரவு பண்ணனுமா”., என்று சொல்லி நண்பர்கள் வராமலிருக்க நண்பர்களின் மனைவிகள் வந்திருந்தனர்.