“ஜீவா… ஏ ஜீவா…” என்று மனைவியை சத்தம் போட்டு அழைத்துக்கொண்டு இருந்தான் கனியமுதன்.
அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்தான். ஜீவாவும் மாலை பிள்ளைகள் வரவும் கடையினில் இருந்து வீடு வந்திருக்க, சுகந்தி அப்போது தான் வந்திருந்தார். இனி இரவு கடை சாத்தும் நேரம் வரைக்கும் விஜயகுமார் அங்கிருப்பார்.
கனியமுதன் வரும்போது ஜீவா வாசலில் தான் இருந்தாள். வழக்கமாய் அவன் பையை வாங்கி வைத்தவள் தான் அவனுக்கு சூடாய் தேநீர் போடவென வந்திருக்க, சுகந்தியோ “இப்போ என்ன வேணுமாம் இவனுக்கு?” என்றார் மருமகளிடம்.
“தெரியலை அத்தை…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே,
“இரு…” என்றவர், கூடத்திற்கு சென்று பார்க்க, கனியமுதன் அங்கே தான் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான்.
பார்வை எல்லாம் அங்கிருந்தாலும், வாய் மட்டும் “ஏ ஜீவா…” என்று சப்தம் எழுப்ப,
“என்னடா வேணும் உனக்கு?” என்றார் சுகந்தி கொஞ்சம் காட்டமாகவே.
“ஏன் ம்மா?!” என்று அவன் புரியாமல் பார்க்க,
“சும்மா வந்ததுல இருந்து ஜீவா ஜீவான்னு கத்திட்டு இருக்க? என்ன வேணும் உனக்கு…” என்று பேச,
கனியமுதனோ உள்ளே ஒரு பார்வையை வீசியவன் “இல்ல அது.. டீ…” என்று இழுக்க,
“போட்டுட்டு இருக்கா. கொண்டு வருவா தான. அதுக்குள்ள எதுக்கு கத்துற.. உனக்கென்ன ஒரே ஒரு வேலை. போற.. வர்ற. ஆனா நாங்க அப்படியில்லை.. வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு, கடைக்கும் போய் அங்கயும் பார்த்துட்டு, அவ வந்து அடுத்து பிள்ளைங்களையும் பார்த்துட்டு இருக்கா…” என்று திட்டிவிட்டு போக,
இது எல்லாம் செவியில் விழுந்து, ஜீவாவிற்கு ஒரு சிரிப்பை கொடுத்தாலுமே முகத்தினில் ஒன்றும் காட்டாமல் கணவனுக்கு கொண்டு வந்து தேநீர் கொடுக்க, அவளை ஒரு பார்வை முறைத்தவன், ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.
ஜீவா சொன்னதுபோல, இதோ இந்த மளிகை கடை இவர்கள் கைக்கு வந்தும் கூட ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. மனைவி சொல்லும்போது தயக்கமாய் தான் இருந்தது.
அவன் யோசனையை கண்டே “நீங்க யோசிச்சே முடிவு பண்ணுங்க. ஆனா நிஜமா சொல்றேன் கடை நம்ம நல்லாவே நடத்தலாம். எனக்கு மளிகை கடைல எது எது எப்படி செய்யனும்னு தெரியும். சொல்லிக் குடுக்க எங்கப்பாவும் இருக்கார். அதையும் மீறி அது நல்லா வியாபாரம் ஆகுற இடமும் கூட. எங்களுக்கு நேரம் நிறையவே இருக்கு. அத்தை மாமாக்கு ஒரு வருமானமும் ஆச்சு, பொழுது போனது போலவும் ஆச்சு… ” என,
மனைவியின் பேச்சினை கவனித்துக்கொண்டு தான் கனியமுதன். ஆனாலும் முதலீடு செய்ய சில லட்சங்கள் வேண்டும். வீட்டினில் பெரியவர்கள் சரி சொல்லவேண்டும். எல்லாம் இருக்க, இதனால் குடும்பத்தில் எதுவும் சிக்கல் என்று வந்துவிடக் கூடாது.
அதனால் “அதுக்கு முதல் போடணும் ஜீவா… நான் நமக்குன்னு ஒரு வீடோ இல்லை காலியிடமோ வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ நீ இதை சொல்ற…” என,
“எனக்கு தெரிஞ்சு அந்த கடைக்கு மூணு லட்சம் குள்ள தான் வரும்…” என்றாள் ஜீவா மனக் கணக்கிட்டு.
“எப்படி இருந்தாலும் ஒரு இடம் வாங்கணும்னாலும் அட்வான்ஸ் கொடுக்கணும் தானே…” என்று இவனும் சொல்ல,
“அது…” என்று இழுத்தவள், இன்னும் அவனை நெருங்கி நின்று, மெதுவாய் அவன் பணியை விரலால் சுரண்டியபடி “என்கிட்டே பணம் இருக்கே…” என்றாள் மெல்ல.
“உங்கிட்டயா?!” என்று கனியமுதன் லேசாய் அதிர்ந்தே கேட்க,
“ம்ம் அப்பா மாசா மாசம் பணம் அனுப்பிட்டு தானே இருக்கார். அதுல நான் ஒண்ணுமே செய்யலை. நீங்க இங்க எல்லாமே எனக்கு வாங்கி குடுத்துடுறீங்க. சேவிங்க்ஸ் கூட நீங்களே ப்ளான் பண்ணிட்டீங்க. இதுக்குமேல நான் அந்த பணத்துல என்ன செய்யப் போறேன். அதனால அப்படியே தான் அக்கவுண்ட்ல இருக்கு…” என்று பேசி நிறுத்த, கனியமுதனின் முகம் சடுதியில் மாறிவிட்டது.
“அந்த பணம் உனக்காக உங்கப்பா குடுக்கிறது. உன்னோட செலவுக்குன்னு உனக்கு குடுக்கிறது…” என்று சொல்லியவன், அவளிடம் இருந்து நகர்ந்துகொள்ள,
“என் பணமா இருந்தா என்னவாம்? நமக்காக தானே எல்லாம் செய்றோம்..” என்று ஜீவா விடாது பேச, அதற்குள் சுகந்தி மருமகளை அழைக்க
“யோசிங்க…” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
கனியமுதனும் யோசித்தான் தான். கையில் பணமில்லை என்று இல்லை. ஆனால் என்னவோ அவனுக்கு சொந்தமாய் வீடோ இல்லை காலியிடமோ வாங்கவேண்டும் என்று மனதினில் பிடிவாதமாய் ஒரு எண்ணம். ஆனால் ஜீவா சொல்வதும் நல்ல யோசனை தான்.
பெற்றவர்களுக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுத்தது போலவும் ஆனது. மனைவிக்கும் இதில் வருமானம் தான். இன்னுமே கூட பொருளாதாரம் உயரும் தான்.
ஆனாலும் கூட நிதானமாகவே தான் செல்ல நினைத்தான். அன்றைய இரவு உணவு முடிந்து அறைக்கு வர, அதிசயத்திலும் அதிசயமாய் பாயும் தலையணையும் ஜீவா கீழே போட்டிருந்தாள்.
‘ஓஹோ!’ என்று சொல்லிக்கொண்டவன், ஒன்றும் தெரியாதவன் போல கட்டிலில் படுத்துக்கொள்ள, பிள்ளைகளோ ஏற்கனவே பெரியவர்கள் அறையில் உறங்கியிருக்க, ஜீவா அறைக்கு வர கொஞ்சம் தாமதம் ஆனது தான்.
கனியமுதனுக்கு சிரிப்பாக கூட இருந்தது. பிள்ளைகள் அங்கே உறங்கியது தெரிந்தும் கூட, ஜீவா பாய் தலையணையை போட்டிருப்பது அவனுக்கு சிரிப்பை கொடுக்காமல் என்ன கொடுக்கும். அறைக்குள் வந்தவள், கணவன் கட்டிலில் படுத்திருப்பது கண்டு முறைத்து நிற்க,
“என்ன டி?!” என்றான்.
“எதுக்கு இங்க படுத்திருக்கீங்க?” என்று முகத்தை சுறுக்க,
“எப்பவும் படுக்கிற இடம் தானே…” என்றவன் குரலில் கேலி இழையோட,
“மேடம் மேடம்… எத்தனையோ நாள் நான் இப்படி போட்டிருந்தாலும், நீங்க கட்டில்ல தான் வந்து படுத்திருக்கீங்க. நான் வீம்பா கூப்பிட்டா தான் மேடம் இறங்கி வருவீங்க. அதெல்லாம் மறந்துடுச்சா?” என்று பேச,
“அதுக்கு?!” என்றாள்.
“அதுக்கு… போ.. போ.. போய் படு.. நான் கூப்பிடுறது போல கூப்பிடு வர்றேன்…” என,
“எது?!” என்று ஜீவா திகைத்து விழிக்க,
“என்ன டி.. இத்தனை வருசமா நான் கூப்பிடும் போதெல்லாம், மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே அப்படியே ஒண்ணுமே பிடிக்காத மாதிரி தானே எந்திரிச்சு வருவ. இப்போ நீ கூப்பிடு நான் வர்றேன்…” என்று சொல்ல,
ஜீவாவிற்கோ இந்த பேச்சு ஒருமாதிரி வெட்கத்தை கொடுத்துவிட “நான் கூப்பிடவே இல்லை போங்க…” என்று அவனை இடிப்பது போல் சென்றவள், வேகமாய் பாய் தலையணையை எடுத்து ஓரம் வைத்துவிட்டு கட்டிலுக்கு வர,
“அடடா… இன்னிக்கு ஒரு பெர்பார்மன்ஸ் இருக்கும்னு நினைச்சேன்…” என்றான் வேண்டுமென்றே ஏமாற்றம் தரும் குரலில்.
“சும்மாதான் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே படுக்கலாம்னு நினைச்சேன்…” என்றவள் அப்போதும் முகத்தை உர்ரென்று தான் வைத்திருக்க,
“என்ன பேசணும்?!” என்றவன் அவளின் அருகே வந்து படுத்துக்கொள்ள,
“அதான்.. அந்த கடை…” என்று இழுத்தாள்.
“யோசிக்கிறேன்னு சொல்லிட்டேன் தானே ஜீவா…” என்று கனியமுதன் அழுத்தமாய் சொல்ல,
“நீங்க யோசிங்க… உங்கக்கிட்ட இருக்கிற பணத்துல நமக்குன்னு இடமோ, வீடோ வாங்கலாம். இந்த பணத்துல கடைக்கு குடுக்கலாம்…” என்று ஜீவா பேச,
‘இத்தனை பிடிவாதம் ஆகாது.. சரின்னு சொல்லாம விடவே மாட்டாளோ…’ என்று எண்ணியவன்,
“உங்கப்பா குடுத்த பணத்துல தொழில் செய்றோம்னு நாளைக்கு பேச்சு வந்துடாதா?” என்றான் அவனும்.
இதையும் யோசிக்கவேண்டும் தானே. சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறும். மனித மனங்கள் எப்படி வேண்டுமானாலும் மாறும். மாற்றம் நிகழ்கையில் பேச்சுக்கள் எப்படி வேண்டுமானாலும் வரும் தானே. அதெல்லாம் நாம் நினைவில் வைத்து தான் ஒரு முடிவு செய்யவேண்டும் என்று அவன் இருக்க,
ஜீவாவோ “ஏங்க நான் உங்க பொண்டாட்டி தானே..?” என்றாள் வேகமாய்.